தொண்ணூறு டிகிரி – பகுதி 3

தொண்ணூறு டிகிரி (பகுதி 1)

தொண்ணூறு டிகிரி (பகுதி 2)

அன்று கிறிஸ்துமஸ். அந்தக் குழுவினரது முகத்தில் உற்சாகமே இல்லை. 10570 அடி உயரத்தில் அந்தப் பனிமலையில் சுருண்டு கிடந்தார்கள். பனிக்காற்று முகத்தைக் குத்திக் கிழிக்குமாறு மூர்க்கமுடன் வீசிக் கொண்டிருந்தது. அந்தக் குழுவின் தலைவரான இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் பால்கன் ஸ்காட், மெள்ள எழுந்தார். உற்சாகமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அப்போதுதான் குழுவினரை வழிநடத்த முடியும். வாழ்நாள் லட்சியமான ‘தொண்ணூறு டிகிரி’யில் கால் பதிக்க முடியும்.

இங்கிலாந்தின் ராபர்ட் பால்கன் ஸ்காட்டுக்கும், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுண்ட்செனுக்கும் அண்டார்டிகாவில் பயணம் செய்து, உலகின் தென் துருவமான தொண்ணூறு டிகிரியில் முதன்முதலில் காலடியைப் பதித்துவிட வேண்டும் என்பதுதான் வாழ்வின் லட்சியம், ஆசை, குறிக்கோள் எல்லாமே.

அமுண்ட்சென், ஸ்காட்

கி.பி. 1911ல் ஸ்காட், தனது குழுவினருடன் அண்டார்டிகாவில் தென் துருவத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தார். அதே சமயத்தில் ரோல்ட் அமுண்ட்செனும் தன் குழுவினருடன் அண்டார்டிகாவின் இன்னொரு முனையிலிருந்து தென் துருவத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அடுத்த ஒரு வார காலத்தில் ஸ்காட் குழுவினர் தினமும் சுமார் பதினைந்து மைல்கள் வரை பயணம் செய்தனர். அந்தப் பனிப்பிரதேசத்தில் அவ்வளவு தூரம் பயணம் செய்வதே பெரும் சாதனைதான்.

ஜனவரி 3, 1912. கைவசமிருந்த உணவுப் பொருள்கள் பெருமளவு கரைந்து போயிருந்தது. தென் துருவத்தைத் தொட்டுவிட்டு, மீண்டும் திரும்பிவர வேண்டும். கைவசமிருக்கும் உணவு இத்தனைபேருக்கு நிச்சயம் போதுமானதாக இருக்காது. என்ன செய்யலாம் என்று வெகு தீவிரமாக யோசித்த ஸ்காட், தன் குழுவில் இருந்து மூன்று பேரைக் கழட்டிவிட முடிவு செய்தார். ‘டெடி இவான்ஸ், க்ரீன், லாஷ்லி – என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் மூவரும் திரும்பிச் சென்றுவிடுங்கள்.

ஸ்காட்டும் மேலும் நான்கு பேரும் (ஓட்ஸ், வில்சன், டாஃப் இவான்ஸ், பௌவர்ஸ்) தென் துருவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஜனவரி 9, ஊளையிட்டுக் கொண்டே வீசிய பனிப்புயல் ஸ்காட் குழுவினரை கூடாரத்துக்குள்ளேயே முடக்கி விட்டது. ஜனவரி 10, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்னும் சில மைல்கள்தான். சில  நாள்கள் பயணம்தான். தென் துருவம் கிட்டி விடும். கனவுகள் கண் முன் விரிய ஒரு வாரத்துக்கான உணவுப் பொருள்களை சேமித்து வைக்கும்படியான கூடாரம் ஒன்றை அந்த இடத்தில் அமைத்தனர். சுமக்க வேண்டாம். திரும்பி அதேபாதையில் வரும்போது உபயோகப்படுமல்லவா.

அடுத்தடுத்த நாள்களில் பத்து மைல்கள் கடப்பதென்பதே பெரும்பாடாகிப் போனது. இன்னும் நான்கு நாள்கள் இதேபோல் கடும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை. ஜனவரி 13ல் ஸ்காட் குழுவினர் 89டிகிரி தென் அட்ச ரேகைப் பகுதியைக் கடந்தனர். அடுத்த நாள் அவர்கள் தங்களது இறுதி சேமிப்புக் கூடாரத்தை அமைத்தனர். அதில் நான்கு நாள்களுக்கான உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டன. அன்று இரவு ஸ்காட், ‘இப்போதே என் லட்சியத்தை அடைந்துவிட வேண்டும்’ என எழுதினார். அவர் தன் டைரியில் எழுதிய சந்தோஷமான இறுதிவரி அதுதான்.

ஜனவரி 16, வழக்கத்தைவிட அதிக தூரம் பயணம் செய்ய முடிந்தது. நாளை கண்டிப்பாக தென் துருவத்தை தொட்டு விடலாம் என ஒவ்வொருவரின் மனதிலும் உற்சாகம் பீறிட்டது.

தொண்ணூறு டிகிரி

ஜனவரி 17, தங்கள் கனவு நிறைவேறப் போகிறதென்ற சந்தோஷத்தில் பயணத்தைத் தொடங்கினர். மதிய நேரம். பௌவர்ஸின் முகம் சுருங்கியது. காரணம், அந்தப் பகுதியில் ஏற்கெனவே பனிச்சறுக்கு வாகனமான ஸ்லெட்ஜ் கடந்து போன தடங்கள், நாய்களின் பாதச் சுவடுகள் தென்பட்டன. தூரத்தில் ஏதோ அடையாளக் கல் வைத்திருப்பது போல் தெரிந்தது. அவ்வளவுதான்.

ஒவ்வொருவரின் மனத்திலும் வெடிப்பதற்குக் காத்திருந்த உற்சாகம் அப்படியே அமுங்கிப் போனது. பதைபதைப்புடன் தங்களின் லட்சியமான தொண்ணூறு டிகிரியை நோக்கி தள்ளாடித் தள்ளாடிச் சென்றார்கள்.

தூரத்தில் ஒரு கொடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அது நார்வேயினுடையது.

***

மேலே நாம் பார்த்தது சென்ற நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட தென் துருவ சாகசப் பயணத்தின் ஒரு சிறு பகுதி. இதுவரை உலகில் மேற்கொள்ளப்பட்ட அதிமோசமான, மிக பயங்கரமான பயணம் இதுவே. தென் துருவத்தை அடைய ஸ்காட்டாலும் அமுண்ட்செனாலும் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பயணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் எவருக்கும் உடல் நடுங்கி, உயிர் உறைவது உறுதி. உலகில் மக்களின் மனத்தை அதிகமாகப் பாதித்த பயணமும் அதுவே. இந்த ஆண்டு (2010- 2011) அந்த பயணங்களுக்கான நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. ஸ்காட், அமுண்ட்சென் அமைத்துக் கொடுத்த பாதையால், அண்டார்டிகாவில் தற்போது பல்வேறு நாடுகளும் தங்களது ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. இந்தியாவும் மைத்ரி என்ற ஆராய்ச்சி மையத்தை அமைத்து சுமார் இருபது ஆண்டுகளாக அங்கே தீவிரமாக இயங்கிக் கொண்டு வருகிறது.

இதோ இந்த நாள்களில் உலகின் தென் துருவத்தில் பல்வேறு நாட்டு ஆய்வாளர்களும் சென்று ஸ்காட்டுக்கும் அமுண்ட்செனுக்கும் மரியாதை செய்து வருகிறார்கள். எனது அண்டார்டிகா புத்தகத்தைக்கூட நான் ஸ்காட், அமுண்ட்சென் மற்றும் தென் துருவத்தைக் கடக்க முயற்சி செய்த இன்னொரு பயணியான ஷாகெல்டன் ஆகிய மூன்று பனிப்போராளிகளுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

நடந்துமுடிந்த புத்தகக் கண்காட்சியில் அண்டார்டிகா புத்தகம் விற்பனையில் இல்லை. புத்தகத்தை விரும்புபவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

என்னை என்ஆர்ஐ ஆக்கிய துக்ளக்!

லொள்ளு விருதுகள் 2010 – பதிவுக்கு ஏகோபித்த ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி. மிகச் சிறந்த தொகுப்பு. அச்சு இதழில் முக்கியப் பக்கத்தில் இடம் பெற வேண்டியது – என்று நண்பர் பரிசல்காரன் சொல்லியிருந்தார். யாராவது எடுத்து உபயோகிப்பார்கள் என்றும் நினைத்திருந்தேன். (வாட்டர்மார்க் பயன்படுத்தவில்லை.) இந்த முறை உபயோகித்திருப்பது துக்ளக் (19.01.2011 இதழ்).

இண்டர்நெட் செய்திகள் என்று தலைப்பிட்டு ஏழு படங்களை உபயோகித்திருக்கிறார்கள். (தகவல் அளித்த நண்பர் சதிஷுக்கும், உண்மைத் தமிழனுக்கும் நன்றி). இந்தப் பக்கத்தைத் தொகுத்துள்ள எஸ்.ஜே. இதயா, அதற்குக் கொடுத்துள்ள விளக்கம்தான் செம காமெடியாக இருக்கிறது.

இந்த விருதுகள் தற்போது மெயில் வழியே பல குரூப்களில் ஃபார்வேர்ட் ஆகிக் கொண்டே இருக்கிறது. அதன்படி இதயாவுக்கும் கிடைத்திருக்கலாம் என்று நம்புவோமாக! 😉

துக்ளக், என்னை என்ஆர்ஐ ஆக்கிய காரணத்தினால் இந்த வருடமாவது நான் பாஸ்போர்ட் எடுக்க முயற்சி செய்கிறேன்.

முகலாயர்கள் – திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது

2009 டிசம்பரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட எனது முகலாயர்கள் புத்தகத்துக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கம் ‘இலக்கிய விருது 2009’ கிடைத்திருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

2009 திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றுள்ள இன்னொரு புத்தகம், இலந்தை சு. ராமசாமி எழுதியுள்ள மகாகவி பாரதி. அவருடைய எடிசனும் ஹென்றி ஃபோர்டும் என் மனத்துக்குப் பிடித்த புத்தகங்கள். வாழ்த்துகள் இலந்தை சார்.

தமிழக அரசு விருதுகள் பெற்றுள்ள காப்பிரைட் நூல் ஆசிரியர் சொக்கலிங்கத்துக்கும், சந்திராயன் புத்தக ஆசிரியர் சரவண கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். என்.ஹெச்.எம் ரைட்டர் + கணியன் பூங்குன்றனார் விருது புகழ் நண்பர் நாகராஜுக்கு சிறப்பு வாழ்த்துகள்.

ச்சீய்…

* கலைஞர் தன் பரிவாரங்கள் சூழ கார்களில் வந்து, கிழக்கு பதிப்பக ஸ்டால் வாசலில் பார்க் செய்து, ‘திராவிட இயக்க வரலாறு’ வாங்கிவிட்டுப் போகலாம் என்னுமளவுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 10) புத்தகக் கண்காட்சி காலியாகத்தான் இருந்தது.

* ‘பாரா ஏகத்துக்கும் புகழ்ந்துக்கிட்டிருக்காரே, திசை காட்டிப் பறவை இருக்குதா?’ என்று கேட்டபடியே ஆழி ஸ்டாலுக்குள் நுழைந்தார் வலைப்பதிவர் சுரேகா. பேயோனின் புதுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். பாரா இன்று தான் பார்த்தவர்களிடமெல்லாம் பேயோனுக்குத் திசை காட்டிக் கொண்டிருந்தார். ‘முன்னுரையே அவ்வளவு பிரமாதம். அதுக்கே கொடுத்த காசு சரியாப் போச்சு’ என்றார் (விலை ரூ. 100). பேயோன் பாராவைத் தன் கொ.ப.செ.வாக நியமித்துள்ளாரா, அல்லது பாராதான் பேயோனா, இல்லை பாராவுக்கும் பேயோனுக்கும் என்ன உறவு என்றெல்லாம் என்னிடம் வினவினார் ஒரு வலைப்பதிவர்.

* ‘பேயோன்னா யார்னே எனக்குத் தெரியாது. மூஞ்சி தெரியாத ஒரு எழுத்தாளரோட புக்கை நான் எதுக்கு வாங்கிப் படிக்கணும்’ என்பது ஹரன் பிரசன்னாவின் கமெண்ட். எனில் இட்லிவடையின் முகம் பிரசன்னாவுக்குத் தெரியும். அல்லது பிரசன்னாவுக்குத் தினமும் கண்ணாடியில் முகம் பார்க்கும் பழக்கம் உண்டு என்பது இங்கே நிரூபணமாகிறது. 😉

* நக்கீரனில் எழுத்தாளர் ஜெகாதாவை முதன் முதலில் சந்தித்தேன். (ஜெகாதா என்றால் ஜெயகாந்தனின் தாசன் என்று இன்றுதான் அறிந்துகொண்டேன்.) முப்பது நிமிடங்களுக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தோம். புனைவுகளுக்கான மார்க்கெட் குறைந்துவருவது குறித்து வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தார். ‘ஒரு காலத்தில் கதைகள் தவிர வேறெதையும் எழுத மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்த என்னையே வெவ்வேறு விஷயங்களை எழுத வைத்துவிட்டார்கள். இன்றைக்கு அபுனைவுகள் காலத்தின் தேவையாகிவிட்டது’ என்றார்.

* ஸ்பெக்ட்ரம் புத்தகம் குறித்து ஞாநி, பத்ரியுடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போது, அவர்களுடன் நின்று கொண்டிருந்த நண்பர் பாஸ்கர் சக்தியைச் சந்தித்தேன் (சனி அன்று). குதிரை எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். இன்னும் பத்துநாள் ஷூட்டிங் மிச்சம் இருப்பதாகச் சொன்னார். இந்த மார்ச்சில் அழகர்சாமி குதிரையுடன் தியேட்டர்களில் இறங்கலாம்.

* நக்கீரனில் புதிதாக வந்துள்ள சில புத்தகங்கள் கவர்கின்றன. அதில் ஒன்று ஆதனூர் சோழன் எழுதியுள்ள Mr. மனிதன். கற்காலம் முதல் நவ நாகரிகம் வரையிலான மனித இன வரலாறு என்று அட்டை சொல்லியது. ஆதனூர் சோழன் எழுதிய இன்னொரு புத்தகம் ஜோதிபாசு. இயக்குநர் மகேந்திரனின் புதிய நாவல், ‘அந்தி மழை’யை நக்கீரன் வெளியிட்டுள்ளது. சின்னக்குத்தூசி அவர்களில் வெவ்வேறு சுவை கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு ‘பூக்கூடை.’

* கல்கிக்கு முந்தா நேத்து சன் டீவி வழியே ரஜினி மார்கெட்டிங் செய்துள்ளார். இந்த ‘ரஜினி வாய்ஸ்’ மூலம் பொன்னியின் செல்வன் விற்பனை அதிகரிக்கும் என்றெல்லாம்… அடப்போங்க சார். பொன்னியின் செல்வன் – புத்தகக் கண்காட்சியின் நிரந்தர சூப்பர் ஸ்டார்! நக்கீரனில் இந்தமுறை சிறிய தலையணை சைஸுக்கு கெட்டி அட்டை பொன்னியில் செல்வன் – மலிவு விலை பதிப்பாக ரூ 225க்கு கொண்டு வந்திருக்கிறார்கள். புரட்டிப் பார்த்தேன். வேகமாகத் திருப்பினாலோ, நகம் பட்டாலோ காயமடைந்துவிடும் அளவுக்குக் காகிதத் தரம் இருந்தது. நக்கீரன் ஸ்டால் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கடந்த வார இறுதி விற்பனை அமோகம் என்றார். அந்த பொன்னியின் செல்வன் 500 பிரதிகளாவது விற்றிருக்கும் என்றார். காகிதத் தரம் பற்றி வருத்தத்தையும் சொன்னேன். பரிசளிப்பதற்காகவே நிறைய பேர் வாங்கிச் செல்வதாகச் சொன்னார்.

மெகா சைஸ்.. க்ளிக்கிப் பார்க்கவும்

* கிழக்கு நேர் எதிரே Gift Books என்று ஒரு ஸ்டால் இருக்கிறது. பல பிரம்மாண்டமான புத்தகங்கள் சட்டென கவனம் ஈர்க்கின்றன. பெரும்பாலும் காஃபி டேபிள் புத்தகங்கள்தாம். எடுத்து, மேசையில் வைத்து, ஆசை ஆசையாகப் புரட்டிப் பார்த்து, தடவி மகிழ்ந்து, சமர்த்தாக மூடிவைத்துவிட்டு வந்துவிடலாம். வாங்க நினைப்பது வெங்காயத்தனம்!

* கடந்த சில தினங்களில் நான் கவனித்த ஒரு விஷயம், அகம் புறம் அந்தப்புரம் வாங்கிச் செல்பவர்களில் பெரும்பாலோனோர் கணவன் – மனைவியாக இருக்கிறார்கள். ஒன்று கணவனோ, அல்லது மனைவியோ, அல்லது இருவருமோ, ரிப்போர்ட்டரில் தொடரை முழுமையாக (அல்லது பகுதி அளவில்) வாசித்தவர்கள். சீனியர் சிட்டிசனாக என்னை நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கண்காட்சியில் சந்திக்கும்போது அதிர்ச்சியடையத்தான் செய்கிறார்கள். இந்தக் கண்காட்சியில் நான் அதிகம் கையெழுத்திட்ட புத்தகம் அ.பு. அந்தப்புரம்தான். வாசகர்களின் அன்புக்கு நன்றி.

* கணவன் – மனைவிக்கு மட்டும் என்று அட்டையிலேயே குறிப்பிடப்பட்ட இரா. த. சக்திவேல் என்பவர் எழுதிய கவிதைப் புத்தகம் கண்ணில்பட்டது. தலைப்பு : ச்சீய்… புரட்டிப் பார்த்தேன். சில வரிகள் ஈர்த்தன. இருந்தாலும் கவிதை எழுதும் பழக்கத்தையும் கவிதைப் புத்தகங்கள் வாங்கும் வழக்கத்தையும் ஐந்தாண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதால் ச்சீயை வைத்துவிட்டேன். தவிர, வாங்கிச் சென்றால் என் மனைவி கோபித்துக் கொள்ளக்கூடும். ஏனென்றால் அவளுக்கு நானே ஒரு கவிதை! ;)))

கழுதைப்பால் கட்டழகி!

மொத்தம் எழுநூறு கழுதைகள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில் அவற்றைப் பராமரிக்கவே தனி ‘தொழுவம்’ இருந்தது. கழுதைப் பால் கறப்பவர்களின் வேலை காலை முதலே ஆரம்பித்துவிடும். தூசு, துரும்பு எதுவும் இல்லாத அக்மார்க் கழுதைப் பால் மதிய நேரத்தில் அந்தப்புரத்துக்குள் கொண்டு செல்லப்படும். குளிக்கும் தொட்டிக்குள் நிரப்பப்படும். மாலை நேரத்தில் தோழிகள் சூழ அங்கு வரும் கிளியோபாட்ரா, குளியல் தொட்டிக்குள் இறங்கி கழுதைப் பாலில் ஊற ஆரம்பிப்பாள்.

காலம் காலமாக கிளியோபட்ரா குறித்து சொல்லப்பட்டு வரும் சம்பவம் இது.  சமீபத்தில் ஹலோ எஃப்.எம்மில் புத்தகக் கண்காட்சி புதுவரவுகள் குறித்து பேட்டி கொடுத்த பாரா, ‘கிளியோபாட்ரா புத்தகம்’ வெளிவருவதாகச் சொன்னார். உடனே ஆர்ஜே (மிஸ்டர்) பாலாஜி கேட்ட கேள்வி, ‘கிளியோபாட்ரா கழுதைப்பால்ல குளிப்பாங்கன்னு சொல்றது நிஜமா?’

கிளியோபாட்ரா என்றாலே பலரது மனத்தில் தோன்றும் அடுத்த வார்த்தை ‘கழுதைப்பால்.’ அப்படி என்னதான் இருக்கிறது கழுதைப்பாலில்?

கிட்டத்தட்ட மனிதனின் தாய்ப்பாலுக்குச் சமமானது கழுதைப்பால். லாக்டோஸ் அதிகமுண்டு, பசும்பாலைவிட கொழுப்பு குறைவு. அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதில் கழுதைப்பாலும் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவத்துக்கும் பல்வேறு விதங்களில் உபயோகிப்படுத்தி இருக்கிறார்கள். அழகுக் குறிப்புகளும் கொடுக்கிறார்கள். கழுதைப்பாலில் குளித்தால் முகச்சுருக்கங்கள் வரவே வராது. தோலில் மினுமினுப்பு அதிகரிக்கும். வெண்மை நிறம் மிளிரும். ஒரு நாளில் ஏழுமுறை கழுதைப் பாலில் முகம் கழுவினால் முகம் என்றென்றைக்கும் புத்துணர்வுடன் இருக்கும்.

கி.பி. 30 முதல் 65 வரை வாழ்ந்த ரோம் அரசி சபினா (பிடில் புகழ் நீரோவின் இரண்டாவது மனைவி), கழுதைப் பாலில் குளித்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அவள் எங்காவது வெளியூர் சென்றாலும் அவளுக்காகக் கையுடனேயே அண்டா அண்டாவாக கழுதைப்பால் கொண்டு செல்வார்களாம் அல்லது நூற்றுக்கணக்கான கழுதைகளையே ஓட்டிக் கொண்டு செல்வார்களாம். நெப்போலியனின் தங்கை பவுலினும் கழுதைப் பாலில் குளித்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. இருக்கட்டும், கிளியோபட்ரா? அந்த விஷயத்துக்கு அப்புறமாக வருவோம்.

எகிப்தியர்களுக்குக் காலை எழுந்தவுடன் குளிக்கும் வழக்கம் இருந்ததில்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு, வெயில் விடைபெறும் வேளையில் மாலைக் குளியல் போட்டிருக்கிறார்கள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனையில் இளவரசியாக சகல வசதிகளுடன் வளர்ந்துவந்த கிளியோபட்ராவும் அந்த வழக்கத்தைத்தான் கடைபிடித்திருக்கிறாள்.

அரண்மனைக்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே குளியல் தொட்டிகள் இருந்தன. வெந்நீர்க் குளியலுக்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கிளியோபாட்ரா ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளித்தாள். உடல் தேய்த்துக் குளிக்க, வளைவான தகடு (Strigil) ஒன்றை உபயோகப்படுத்தினாள். குளியலை முடிக்க குறைந்தது இரு மணி நேரம் பிடிக்கும்.

கிளியோபாட்ரா உபயோகப்படுத்திய இன்னொரு முக்கியமான அழகுப் பொருள் மருதாணி. கூந்தலில், கைவிரல்களில், பாதங்களில் மருதாணி உபயோகப்படுத்தினாள். தவிர முகத்துக்கான இயற்கை கிரீம்கள், கண்ணுக்கான மை, உதட்டுக்கான சாயம், முகப் பொலிவுக்கான பூச்சுகள், வாசனைக்கான திரவியங்கள் – எல்லாமே உபயோகப்படுத்தியிருக்கிறாள்.

படுத்திக் கொள்ளட்டும். அவள் பொன்வண்டு சோப்பு வேண்டுமானாலும் தேய்த்துக் குளித்திருக்கட்டும். அதெல்லாம் விஷயமே இல்லை. கழுதைப்பாலில் குளித்தாளா?

சான்றுகள் எதுவும் இல்லை. எகிப்தில், கிரீஸில், ரோமில் வாழ்ந்த உயர்குடிப் பெண்கள் எல்லோருமே பாலில் குளிக்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார்கள். அந்த விதத்தில் கிளியோபாட்ராவும் பாலிலோ, கழுதைப் பாலிலோ (ஆரோக்யா நாலரை பாலிலோ) குளித்திருக்கலாம். இதில் கவனிக்கப்பட (சந்தோஷப்பட) வேண்டிய விஷயம் எகிப்தியர்களுக்குத் தினமும் குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதுதான்.

கழுதைப்பாலைத் தாண்டியும் கிளியோபாட்ரா பற்றி தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவளது பிறப்பு முதல், அவள் பேரழகியா, நல்லவளா, இனவெறி பிடித்தவளா, தற்கொலை செய்துகொண்டாளா என்பதுவரை ஏகப்பட்ட சர்ச்சைகள் நிறைந்து கிடக்கின்றன. கிளியோபாட்ரா குறித்து ஏற்கெனவே பலவிதமான தகவல்கள் சேகரித்து வைத்திருந்தேன். 2010ல் அவள் வாழ்க்கை குறித்த புத்தகத்தை எழுத முடிவு செய்தேன். எழுதி முடித்தேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்பாகவே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிவிக்கக் ‘கடாமைப்பட்டிருக்கிறேன்.’ (ஆதாரம் : பாரா – http://www.writerpara.com/paper/?p=1786 பத்ரி – http://thoughtsintamil.blogspot.com/2011/01/3.html)

கிளியோபாட்ரா, சென்னை புத்தகக் கண்காட்சி கிழக்கு ஸ்டாலில் (F13, F14, F15) கிடைக்கும். ஆன்லைனில் வாங்க.