காட்சிப் பேழை

கையில் மொபைல் கேமரா இருந்தாலே, அதை வைத்துக் கொண்டு செஃபியா டோனில் வித்தியாசமான கோணத்தில் ஏதாவது புகைப்படம் எடுக்க முடியாதா என்று நேற்றுவரை திரிந்து கொண்டிருந்தேன். பள்ளி, கல்லூரி நாள்களில் கைவசமிருந்த யாஸிகா ஸ்டில் கேமராவிலேயே பிறைநிலவைப் படம் பிடிக்க முடியுமா என்று முயற்சி எல்லாம் செய்து பார்த்திருக்கிறேன். இருந்தாலும் எனது யாஷிகாவைக் குறைசொல்ல முடியாது. அதில் எடுக்கப்பட்ட படங்கள் ஜூவியில் எனது கட்டுரைகளோடு வெளிவந்திருக்கின்றன.

கல்கியில் பணியாற்றிய சமயத்தில் அங்கே அலுவலக டிஜிட்டல் கேமரா ஒன்று இருந்தது. என்ன கம்பெனி, என்ன பிக்சல் என்பதெல்லாம் மறந்துவிட்டது. ச.ந. கண்ணன், ஆர். முத்துக்குமார், மருதன் ஆகிய நண்பர்களுடன் பெரும்பாலும் போட்டோகிராபராக நான் செல்வேன். இளையராஜா, ஜெயகாந்தன், எம்.எஸ். உதயமூர்த்தி, சச்சின், கங்குலி, ஜாஹிர், கமலஹாசன், ஜோதிகா, கோபிகா என பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பலரையும் படம்பிடித்திருக்கிறேன். கேமராவை வைத்து எப்படிப் படம் பிடிக்க வேண்டும், எந்த கோணத்தில் வைக்கக்கூடாது, ஆப்போஸிட் லைட் உள்ளிட்ட எந்தவித அடிப்படை விஷயங்களும் தெரியாது. டிஜிட்டல் காமிராதானே. குத்துமதிப்பாக பத்துப் பதினைந்து க்ளிக்கினால், ஒத்த போட்டோ தேறிவிடும்.

சொட்டிக் கொண்டிருக்கும் பைப், புல்லில் உறங்கிக் கொண்டிருக்கும் பனித்துளி, இளமஞ்சள் பௌர்ணமி, இயல்பான புன்னகை என்று தொழில்முறை போட்டோகிராபர்கள் எடுத்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். நம்மால் இந்த மாதிரியெல்லாம் புகைப்படம் எடுக்க முடியாதா?

அதற்கான அருமையான கேமரா வாய்க்க வேண்டுமே. அதற்கென பட்ஜெட் ஒதுக்க வேண்டுமே. பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த கே.வி. ஆனந்தை, எக்ஸ்ட்ரா டோஸ் தூக்க மாத்திரை கொடுத்து மேலும் தூங்க வைத்தேன்.

இப்போது விழித்துவிட்டேன். நெருங்கிய நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மிகத் தரமான SLR கேமரா ஒன்றை எனக்கு திருமணப் பரிசாக அளித்திருக்கிறார்கள். (எத்தனை பிக்சல், என்ன Configuration(?) என்றெல்லாம் கேட்காதீர்கள். சொல்லத் தெரியாது. இதுதான் கேமரா.)

கேமரா பொட்டி தனி, அதற்கான லென்ஸ்கள் தனி, முன்னும் பின்னும் கையால் திருகி ஃபோகஸ் செய்துதான் படம் எடுக்க முடியும். ப்ரிவியூ எல்லாம் கிடையாது. கண்களால் உற்று நோக்கித்தான் கிளிக் செய்ய வேண்டும். கேமராவை இயக்குவதற்கே ரத்னவேலுவிடம் கோச்சிங் போக வேண்டும்போல.

எப்படியோ தட்டுத்தடுமாறி மேனுவல் புக்கை எழுத்துக்கூட்டி வாசித்து, குத்துமதிப்பாகப் புரிந்துகொண்டு க்ளிக்க ஆரம்பித்துள்ளேன். வரவர யாரையும் எதையும் என்னால் சாதா கண்களால், சாதா கோணத்தில் பார்க்க முடியவில்லை. கேமராவை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு கண் டாக்டரிடம் செல்லவேண்டும்போல!

எனது முயற்சிகள் சில.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

7 thoughts on “காட்சிப் பேழை”

 1. வாழ்த்துகள். யாருப்பா அது…. ஸ்மைல் ப்ளீஸ்….

 2. புதுக்கேமெரா வாங்குனவங்க என்னென்ன கிளிக்குவாங்களோ அவ்வளவையும் கிளிக்கிட்டீங்க..

  நல்லதா ஒரு நாலு படம் எடுத்துப்போடுங்க..

  அப்படியே எனக்கும் இப்படி யாராச்சும் அன்பளிக்கனும்னு கடவுள்ட்ட வேண்டிக்குங்க.. நானும் இந்த மாதிரி கேமெரா வாங்கனும்னு ( யார்ட்டையிருந்தாவது) தவமிருக்கேன்

  🙂

  ஜெயக்குமார்

 3. பலே, நன்கு கற்றுக்கொண்டபின் என்னை அழகாக ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொடுங்கள் 😉

  சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்ன்னு பழமொழி சொல்லப்டாது!

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 4. எட்டிப்பார்க்கும் குட்டிபாப்பா நன்றாக இருக்கின்றது ;ஆண்டென்னா இன்னமும் இருக்கின்றதா ?புகைப்படங்கள் நன்றாக வந்து இருக்கின்றன.முயற்சி தொடர வாழ்த்துகள்

 5. உங்கள் படங்களை பார்க்கும்போது ரத்னவேலுவிடம் பயிற்சி தேவையில்லை என்றே நினைக்கிறேன்..!! 😉

 6. அருமையான புகைப்படங்கள், தொடரட்டும் .. தொடரட்டும் ..

  ஆ.சண்முகநாதன்

Leave a Comment