ச்சீய்…

* கலைஞர் தன் பரிவாரங்கள் சூழ கார்களில் வந்து, கிழக்கு பதிப்பக ஸ்டால் வாசலில் பார்க் செய்து, ‘திராவிட இயக்க வரலாறு’ வாங்கிவிட்டுப் போகலாம் என்னுமளவுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 10) புத்தகக் கண்காட்சி காலியாகத்தான் இருந்தது.

* ‘பாரா ஏகத்துக்கும் புகழ்ந்துக்கிட்டிருக்காரே, திசை காட்டிப் பறவை இருக்குதா?’ என்று கேட்டபடியே ஆழி ஸ்டாலுக்குள் நுழைந்தார் வலைப்பதிவர் சுரேகா. பேயோனின் புதுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். பாரா இன்று தான் பார்த்தவர்களிடமெல்லாம் பேயோனுக்குத் திசை காட்டிக் கொண்டிருந்தார். ‘முன்னுரையே அவ்வளவு பிரமாதம். அதுக்கே கொடுத்த காசு சரியாப் போச்சு’ என்றார் (விலை ரூ. 100). பேயோன் பாராவைத் தன் கொ.ப.செ.வாக நியமித்துள்ளாரா, அல்லது பாராதான் பேயோனா, இல்லை பாராவுக்கும் பேயோனுக்கும் என்ன உறவு என்றெல்லாம் என்னிடம் வினவினார் ஒரு வலைப்பதிவர்.

* ‘பேயோன்னா யார்னே எனக்குத் தெரியாது. மூஞ்சி தெரியாத ஒரு எழுத்தாளரோட புக்கை நான் எதுக்கு வாங்கிப் படிக்கணும்’ என்பது ஹரன் பிரசன்னாவின் கமெண்ட். எனில் இட்லிவடையின் முகம் பிரசன்னாவுக்குத் தெரியும். அல்லது பிரசன்னாவுக்குத் தினமும் கண்ணாடியில் முகம் பார்க்கும் பழக்கம் உண்டு என்பது இங்கே நிரூபணமாகிறது. 😉

* நக்கீரனில் எழுத்தாளர் ஜெகாதாவை முதன் முதலில் சந்தித்தேன். (ஜெகாதா என்றால் ஜெயகாந்தனின் தாசன் என்று இன்றுதான் அறிந்துகொண்டேன்.) முப்பது நிமிடங்களுக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தோம். புனைவுகளுக்கான மார்க்கெட் குறைந்துவருவது குறித்து வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தார். ‘ஒரு காலத்தில் கதைகள் தவிர வேறெதையும் எழுத மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்த என்னையே வெவ்வேறு விஷயங்களை எழுத வைத்துவிட்டார்கள். இன்றைக்கு அபுனைவுகள் காலத்தின் தேவையாகிவிட்டது’ என்றார்.

* ஸ்பெக்ட்ரம் புத்தகம் குறித்து ஞாநி, பத்ரியுடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போது, அவர்களுடன் நின்று கொண்டிருந்த நண்பர் பாஸ்கர் சக்தியைச் சந்தித்தேன் (சனி அன்று). குதிரை எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். இன்னும் பத்துநாள் ஷூட்டிங் மிச்சம் இருப்பதாகச் சொன்னார். இந்த மார்ச்சில் அழகர்சாமி குதிரையுடன் தியேட்டர்களில் இறங்கலாம்.

* நக்கீரனில் புதிதாக வந்துள்ள சில புத்தகங்கள் கவர்கின்றன. அதில் ஒன்று ஆதனூர் சோழன் எழுதியுள்ள Mr. மனிதன். கற்காலம் முதல் நவ நாகரிகம் வரையிலான மனித இன வரலாறு என்று அட்டை சொல்லியது. ஆதனூர் சோழன் எழுதிய இன்னொரு புத்தகம் ஜோதிபாசு. இயக்குநர் மகேந்திரனின் புதிய நாவல், ‘அந்தி மழை’யை நக்கீரன் வெளியிட்டுள்ளது. சின்னக்குத்தூசி அவர்களில் வெவ்வேறு சுவை கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு ‘பூக்கூடை.’

* கல்கிக்கு முந்தா நேத்து சன் டீவி வழியே ரஜினி மார்கெட்டிங் செய்துள்ளார். இந்த ‘ரஜினி வாய்ஸ்’ மூலம் பொன்னியின் செல்வன் விற்பனை அதிகரிக்கும் என்றெல்லாம்… அடப்போங்க சார். பொன்னியின் செல்வன் – புத்தகக் கண்காட்சியின் நிரந்தர சூப்பர் ஸ்டார்! நக்கீரனில் இந்தமுறை சிறிய தலையணை சைஸுக்கு கெட்டி அட்டை பொன்னியில் செல்வன் – மலிவு விலை பதிப்பாக ரூ 225க்கு கொண்டு வந்திருக்கிறார்கள். புரட்டிப் பார்த்தேன். வேகமாகத் திருப்பினாலோ, நகம் பட்டாலோ காயமடைந்துவிடும் அளவுக்குக் காகிதத் தரம் இருந்தது. நக்கீரன் ஸ்டால் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கடந்த வார இறுதி விற்பனை அமோகம் என்றார். அந்த பொன்னியின் செல்வன் 500 பிரதிகளாவது விற்றிருக்கும் என்றார். காகிதத் தரம் பற்றி வருத்தத்தையும் சொன்னேன். பரிசளிப்பதற்காகவே நிறைய பேர் வாங்கிச் செல்வதாகச் சொன்னார்.

மெகா சைஸ்.. க்ளிக்கிப் பார்க்கவும்

* கிழக்கு நேர் எதிரே Gift Books என்று ஒரு ஸ்டால் இருக்கிறது. பல பிரம்மாண்டமான புத்தகங்கள் சட்டென கவனம் ஈர்க்கின்றன. பெரும்பாலும் காஃபி டேபிள் புத்தகங்கள்தாம். எடுத்து, மேசையில் வைத்து, ஆசை ஆசையாகப் புரட்டிப் பார்த்து, தடவி மகிழ்ந்து, சமர்த்தாக மூடிவைத்துவிட்டு வந்துவிடலாம். வாங்க நினைப்பது வெங்காயத்தனம்!

* கடந்த சில தினங்களில் நான் கவனித்த ஒரு விஷயம், அகம் புறம் அந்தப்புரம் வாங்கிச் செல்பவர்களில் பெரும்பாலோனோர் கணவன் – மனைவியாக இருக்கிறார்கள். ஒன்று கணவனோ, அல்லது மனைவியோ, அல்லது இருவருமோ, ரிப்போர்ட்டரில் தொடரை முழுமையாக (அல்லது பகுதி அளவில்) வாசித்தவர்கள். சீனியர் சிட்டிசனாக என்னை நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கண்காட்சியில் சந்திக்கும்போது அதிர்ச்சியடையத்தான் செய்கிறார்கள். இந்தக் கண்காட்சியில் நான் அதிகம் கையெழுத்திட்ட புத்தகம் அ.பு. அந்தப்புரம்தான். வாசகர்களின் அன்புக்கு நன்றி.

* கணவன் – மனைவிக்கு மட்டும் என்று அட்டையிலேயே குறிப்பிடப்பட்ட இரா. த. சக்திவேல் என்பவர் எழுதிய கவிதைப் புத்தகம் கண்ணில்பட்டது. தலைப்பு : ச்சீய்… புரட்டிப் பார்த்தேன். சில வரிகள் ஈர்த்தன. இருந்தாலும் கவிதை எழுதும் பழக்கத்தையும் கவிதைப் புத்தகங்கள் வாங்கும் வழக்கத்தையும் ஐந்தாண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதால் ச்சீயை வைத்துவிட்டேன். தவிர, வாங்கிச் சென்றால் என் மனைவி கோபித்துக் கொள்ளக்கூடும். ஏனென்றால் அவளுக்கு நானே ஒரு கவிதை! ;)))