ஜே.கே. ரித்தீஷின் சொத்து மதிப்பு எவ்வளவு?

ரஜினி சாருக்கு எப்படி பாலச்சந்தர் சாரோ, சினிமான்னா எனக்கு குரு சின்னி ஜெயந்த் சார்தான். நடிக்கத் தெரியாத ஒரு நடிகனும் – நாந்தான், டைரக்‌ஷன் தெரியாத ஒரு டைரக்டரும் – என் குருநாதர் சின்னி ஜெயந்த் – சேர்ந்து எடுத்த படம்தான் கானல் நீர்.

– ஜே.கே. ரித்தீஷ் உதிர்த்த அருமையான வார்த்தைகள் இவை. தொடர்ந்து கானல் நீர் பற்றி அவர் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றும் ஹாஹாஹா…

கேள்வி : கானல் நீரை நீங்களாவது முழுசாப் பார்த்தீங்களா?

பதில் : படத்தோட டைட்டிலுக்கு கீழே நானே ஒரு வரி போட்டிருப்பேன். கானல் நீர் – a true punishment.

கேள்வி : கானல் நீர் படத்தை ஏன் கலைஞருக்குப் போட்டுக் காட்டல?

பதில் : அவ்வளோ பெரிய தண்டனையை தலைவருக்குக் கொடுக்க விரும்பல.

கடந்த ஞாயிறு (மார்ச் 28, 2010) விஜய் டீவியில் காலை பத்து மணிக்கு ஒளிபரப்பான வாங்க பேசலாம் நிகழ்ச்சியின் இந்த வார கெஸ்ட் ஜே.கே. ரித்தீஷ்.

டெல்லி கணேஷ், அப்துல்லா (X பெரியார்தாசன்), புஷ்பவனம் குப்புசாமி கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் செம நக்கல். ரித்தீஷும் கொஞ்சம்கூட டென்ஷனே ஆகாமல் நகைச்சுவையுடனேயே சமாளித்தார்.

சில கேள்விகள்

* அய்யா, நீங்க டெல்லிக்குப் போனதால, கோடம்பாக்கமே அப்படியே வெறிச்சோடிப் போயிருச்சாமே? யார் கையிலயும் காசில்லை, ஒண்ணும் நிலைமை சரியில்லையாமே?

* திடீர்னு சுனாமி மாதிரி வந்தீங்க, அரசியல், சினிமான்னு. நீங்க யாரு? எங்க இருந்து வந்தீங்க?

* சினிமால உங்களுக்கு நிறைய க்ளோஸ்-அப், பேனர், பேப்பர்ல எல்லாம் உங்களை அடிக்கடி பார்க்கறோம். பார்லிமெண்ட்லயும் கேமரா இருக்கு. ஆனா ஒரு தடவைகூட அந்த கேமராவுல நீங்க வரலியே?

* யாரைக் கேட்டாலும் நிறைய அள்ளிக் கொடுப்பாரு ரித்திஷுன்னு சொல்றாங்க. சார், எத்தனைக் கோடி உங்க கைவசம் இருக்கும்?

* இங்க சினிமாவுல நல்ல ஃபைட்லாம் பண்றீங்க. பார்லிமெண்ட்லயும் அதுக்கான வாய்ப்பெல்லாம் இருக்குது. எப்படி பண்ணிருக்கீங்களா?

* நீங்க கட்-அவுட் வைச்சா மட்டுமே யாருமே எடுக்கச் சொல்ல மாட்டேங்கறாங்களே, ஏன் சார்?

* நாயகன் செமயா ஃபைட் போட்டீங்க. ஜே.கே. ரித்தீஷ் சார் இருக்குறாரு, தீவிரவாதிகளுக்குச் சவால் விடுறோம். இப்போ வந்து பாருங்கடா பார்லிமெண்டுக்கு…

* இந்த கவுன்சிலரு, வார்டு உறுப்பினரு, எம்.எல்.ஏ.ன்னு படிப்படியா வராம, டைரக்டா எம்.பி.ன்னு முடிவு பண்ணுனீங்களே, எப்படி?

* செட்டிலானா லைஃப்ல ஜே.கே.ரித்தீஷ் மாதிரி செட்டில் ஆவணும்னு பொதுவா பேசிக்கறாங்களே, நீங்க கேள்விப்பட்டீங்களா?

* அண்ணன்னு ஒரு படம், தம்பின்னு ஒரு படம் – ரெண்டு படத்துலயும் நடிக்க ஒரே நேரத்துல கால்ஷீட் கேட்டு வராங்க. நீங்க எதுல நடிப்பீங்க?

நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க : இங்கே.

அதே தினத்தில் வெளியான தினமலர் செய்தி : கேள்வியே கேட்காத ஆறு தமிழக எம்.பி.,க்கள் : பார்லியில் தான் இந்த நிலைமை

அங்காடித் தெரு

அங்காடித் தெரு – விமரிசனங்களால் முன் நிறுத்தப்பட வேண்டிய படம் அல்ல; தியேட்டருக்குச் சென்று உணர்ந்து நெகிழ வேண்டிய படம். இதுவரை வெளிவந்த சிறந்த தமிழ்ப் படங்களில் இது மிக முக்கியமானது. எதனோடும் ஒப்பிட முடியாத தனித்துவமான படம். வசந்தபாலன், இனி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முக்கியமான (தைரியமான) இயக்குநர். அங்காடித் தெரு, உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு மாறுபட்ட அடையாளம் பெற்றுத்தரப் போகிறது. ரங்கநாதன் தெருவில் கூடும் கூட்டத்தில் ஒரு பங்கு அங்காடித் தெரு ஓடும் தியேட்டர்களில் நிறைந்தால், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மேம்பட்டுவிட்டது என்று மகிழலாம்.

படத்தின் உருவாக்கத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள் அல்ல, நன்றி.

ஸ்ரீநிஷா

அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டின் ஜன்னலைத் திறக்கும்போது முகத்தை வருடிச் செல்லும் குளிர்காற்று…

அமைதியான இரவில், கடற்கரையோரம் நிற்கும்போது செவிகளை நிறைக்கும் அலைகளின் ஆர்ப்பரிப்பு…

பதமாக மசாலா கலந்து வைக்கப்பட்ட மாங்காய் ஊறுகாயின் காரம்…

இந்த மூன்றும் ஒரே குரலில் சாத்தியம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநிஷா. விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் 2ல் அல்கா அஜித்தின் பரம ரசிகனாக இருந்த நான், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீநிஷாவின் ரசிகன் ஆகிவிட்டேன் (மாறிவிட்டேன்?).

அல்கா, சந்தேகமே இல்லாமல் நல்ல பாடகியாக வரப்போகிற பெண்தான். தவறுகளே இல்லாமல் 100% சுத்தமாக பாடக்கூடியவள். சித்ரா, ஷ்ரேயா கோஷல்,  சாதனா சர்கம் – வகை மெலடி பாடல்கள் எல்லாம் அல்கா பாடினால் நமக்கு ஜஸ்கீரிம் சாப்பிடும் உணர்வு ஏற்படும். கர்நாடக சங்கீதம் சார்ந்த சினிமா பாடல்களும் அல்காவுக்கு தூசு. அல்கா பைனலுக்கு வருவது உறுதி. சூப்பர் சிங்கர் ஜுனியர் என்ற பட்டத்தை வெல்வதற்குக்கூட அதிக வாய்ப்புகள் அல்காவுக்கு இருக்கிறது. ஆனால் வெஸ்டர்ன் வகை பாடல்கள், பாஸ்ட் பீட் குத்துபாடல்கள் அல்காவின் தேர்வாக எப்போதுமே இருந்ததில்லை. அப்படிப்பட்ட பாடல்கள் அல்கா பாடும்போதுகூட அதில் தவறு இருக்காது, ஆனால் வழக்கமான அழகு  குறைவாகவே இருக்கும்.

ஸ்ரீநிஷாவின் குரலுக்கு இந்த மாதிரியான வரையறைகள் எதுவுமே கிடையாது. எந்த வகையான பாடலுக்கும் வளைந்து கொடுக்கும் அற்புதக் குரல் அது. பாடும்போது சிறு சிறு தவறுகள் இருக்கலாம். பத்து வயது குழந்தைதானே. பயிற்சியில் சரியாகிவிடும். ஆனால் எந்தவிதமான பாடலையும் முழு அர்ப்பணிப்புடன் கற்றுக் கொண்டு, அழகாக, வார்த்தைகளுக்கேற்ப உணர்வுகளைப் பிரதிபலித்துப் பாடும் ஸ்ரீநிஷா மட்டுமே அல்காவுடன் பைனலில் மோதுவதற்குத் தகுதியான பெண்ணாகத் தெரிகிறாள்.

இன்றைய தேதியில் ஐந்து சிறுவர்கள் போட்டியில் இருக்கிறார்கள். யாரும் இவ்விரண்டு பெண் குழந்தைகளுக்கு ஈடுகொடுத்துப் பாடுவதாகத் தோன்றவில்லை. பையன்களில் இருந்து ஒரு போட்டியாளர் பைனலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று (மறைமுக) விதி எதுவும் வைத்திருந்தால் ரோஷன் வர வாய்ப்பிருக்கிறது.

இருப்பதிலேயே குட்டிப்பையன் ஸ்ரீகாந்துக்கு இன்னும் வயதும் வாய்ப்புகளும் இருக்கின்றன. நிகழ்ச்சியின் கவர்ச்சிக்காக ஸ்ரீகாந்தை இன்னமும் ‘எலிமினேட்’ செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஸ்ரீகாந்துக்கு, நிகழ்ச்சி பார்க்கும் தாத்தா, பாட்டிகளின் அமோக ஆதரவு குறையவே இல்லை. நித்யஸ்ரீயை ரசிக்கலாம். நித்யஸ்ரீயைவிட அதிக திறமைகள் கொண்ட (ஆனால் அதிகம் அமைதியாக இருப்பதால் வெளியே தெரியாத) பிரியங்காவை மனமாரப் பாராட்டலாம். ஆனால் பைனலுக்கு யாரெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது?

அதற்கு முன் ஒரு சந்தேகம். பைனலில் இருவர் பாடுவார்களா? மூன்று பேர் பாடுவார்களா?

மூன்று பேர் என்றால் என் தேர்வு ஸ்ரீநிஷா, அல்கா, ரோஷன். பைனலில் இருவர் என்றால்… என்ன சொல்வதென்று புரியவில்லை. (இன்னும் எவ்வளவு மாதம் நிகழ்ச்சியை இழுப்பார்கள் என்று தெரியவில்லை. இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் பரிட்சை இருக்காதா?)

ஸ்ரீநிஷா பற்றி மேலும் ஒரு வரி – பாடி முடித்தபின் நடுவர்கள் பாராட்டும்போது வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே ‘Thank you sir’, ‘Thank you Maam’ சொல்லும் அழகுக்காகவே ஸ்ரீநிஷாவை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

ஸ்ரீநிஷாவின் பல்வேறு பரிமாணங்கள் :

ஆரம்ப கால ஸ்ரீநிஷா

எந்தப் பூவிலும் வாசமுண்டு…

கண்ணோடு காண்பதெல்லாம்…

அல்காவை திணறடித்த ஸ்ரீநிஷா

பொன்வானம் பன்னீர் தூவுது

நாடோடித் தென்றல் படத்திலிருந்து

கே.பி. சுந்தராம்பாள் குரலில்

தம் மரே தம்…

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

மாமா மாமா மாமா – மற்றும் பல

வசீகரா ரீமிக்ஸ்…

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு

(பின் குறிப்பு : எனது அலுவலகத்தில் ஸ்ரீநிஷாவுக்கு தனி ரசிகர் மன்றமே இருக்கிறது.)

‘இதில் என்ன பிரதர் தப்பு?’ – ஜெமினி

ஜெமினி ஸ்டூடியோவில் வெறும் காஸ்டிங் அசிஸ்டெண்ட்டாக இருந்தபோதே, ஜெமினி ஸ்டூடியோவின் படங்களில் கதாநாயகியாகப் புகழ்பெற்றிருந்த புஷ்பவல்லியை தன் காதல் வலையில் சிக்க வைத்தார் ஜெமினி கணேசன்.

புஷ்பவல்லி பார்க்க ரொம்ப அழகாக இருப்பார். தாசி அபரஞ்சி, பால நாகம்மா ஆகிய படங்களில் ரொம்பவும் வசீகரமாக நடித்துப் புகழ் பெற்றிருந்த நடிகை அவர். தென்னக சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே அழகுக்குப் புகழ்பெற்ற கதாநாயகிகளில் ஒருவர் பத்மினி. அவரே வியக்க நோக்கிய புஷ்பவல்லி தான் சினிமா உலகில் ஜெமினி கணேசனுக்குக் கிடைத்த முதல் காதலி.

புஷ்பவல்லி

‘நடிகை சூர்யபிரபா என்னுடன் நடித்துக் கொண்டிருந்தார். அவரது சகோதரியே புஷ்பவல்லி. நான் புஷ்பவல்லியின் காதலில் சிக்கினேன். புஷ்பவல்லி வயிற்றில் என்னால் கருவும் உருவானது. நான் கலங்கி நின்றேன்.

அவள் என் குழந்தையைச் சுமப்பது தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றாள். பிறக்கப்போகும் குழந்தைக்கு முழுமையான அப்பாவாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்தேன். எத்தனையோ எடுத்துச் சொல்லியும் புஷ்பவல்லி ஏற்றுக் கொள்ளவேயில்லை.

1954-ம் வருஷம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி ரேகா என்ற பெண் குழந்தை எனக்கும் புஷ்பவல்லிக்கும் பிறந்தாள். என் மீது தனக்குள்ள உரிமையை உறவை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்தாள் புஷ்பவல்லி. அதற்கு அடுத்த வருஷமே ராதா என்ற பெண் குழந்தையையும் பெற்றுக் கொண்டாள்.

என் பிறந்தநாள் பரிசாக ராதா பிறந்தாள். என்னை அடைவதிலும் ஆட்கொள்வதிலும் இருந்த அவசரம் என்னைப் பிரிவதிலும் அவளுக்கு இருந்தது. நான்கு வருஷ நட்பை என்னைப் புரிந்து கொள்ளாமல் முறித்துக்கொள்ள புஷ்பவல்லி முற்பட்டாள்.’

என்று புஷ்பவல்லி பிரிந்த சமயத்தில் ஜெமினி கணேசன் வருந்திக் கூறினார். ஆனால் சில வருடங்கள் கழித்து ஜெமினி, புஷ்பவல்லி பற்றிப் பேசும்போது அதில் வருத்தம் இம்மியளவு கூட இல்லை.

‘இதில் என்ன பிரதர் தப்பு? ஜெமினியில் நானும் புஷ்பவல்லியும் நடித்துக்கொண்டு இருந்தபோது இருவருக்கும் காதல் பிறந்தது ஒட்டிப் பழகினோம். திருமணத்தைப் பற்றி நாங்கள் எண்ணவே இல்லை.

மனம் விரும்பிப் பழகுபவர்களுக்குத் திருமணம் தடையில்லைதான்!

எங்கள் இருவர் உயிரும் கலந்து மூன்றாவது உயிர் தோன்றியது பானுரேகா பிறந்தாள் காலபோக்கில் இருவரும் வேறு பாதையில் செல்ல வேண்டி இருந்ததால் பிரிந்தோம்.

எங்களுக்குள் திருமணமாகாததால் விவாகரத்து பிரச்னையும் எழவில்லை.’

புஷ்பவல்லி ஜெமினி கணேசனை விட்டு முற்றிலும் விலகிய நேரத்தில், அவரது இடத்தை சாவித்ரி பிடித்துக் கொண்டிருந்தார்.

(நன்றி : பா. தீனதயாளன், புத்தகம் : காதலன் – ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு)