தொண்ணூறு டிகிரி (பகுதி 2)

(தொண்ணூறு டிகிரி பகுதி 1 படிக்க.)

‘திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போற ரோட்டுல அந்த சென்டர் இருக்குது’ என்றான் பாலாஜி.

‘அதோட பேரு என்ன தெரியுமா?’ – நான் கேட்டேன்.

‘ஏதோ ஜியோமேக்னடிக் சென்டர்னு வரும்.’

‘நீ சொல்றபடி உண்மையிலேயே அங்க அப்படிப்பட்ட ஆள்கள் இருக்காங்களா?’

‘எம்எஸ்சி பிஸிக்ஸ் நான் படிக்கிறப்போ என்னோட பிரெண்ட்ஸ் அங்க ப்ராஜெக்ட் பண்ணிருக்காங்க. அவங்க சொல்லிருக்காங்க.’

பாலாஜி என் நண்பனின் சகோதரன், எனக்கும்தான். திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மையத்தில் உள்ள ஆய்வாளர்கள், அடிக்கடி அண்டார்டிகாவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசினால், அண்டார்டிகா குறித்த பல தகவல்கள், அனுபவங்கள் கிடைக்கும் என்று பாலாஜி தகவல் கொடுத்தான்.

கூகுள், அந்த திருநெல்வேலி மையத்தின் தொடர்பு எண்ணை எனக்குக் கொடுத்தது. பேசினேன். விஷயத்தைச் சொன்னேன். நேரில் வாருங்கள், பேசலாம் என்றார்கள். பாராவிடம் சொல்லிவிட்டு சென்னையிலிருந்து கிளம்பினேன்.

அது Indian Institute of Geomagnetism – திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் இயங்கிவரும் பூமத்திய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம். ஊரைவிட்டு வெளியே பாளையங்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரம் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள மையம் அது. பேருந்து நிறுத்தப்படும் இடத்திலிருந்து சில கி.மீ. நடந்துதான் செல்ல வேண்டும். மினி நெய்வேலி டவுன்ஷிப் போல, அலுவலர் குடியிருப்புடன் அந்த மையம் அமைந்திருந்தது.

அதன் தலைவர் குருபரன் அவர்களைச் சந்தித்தேன். ‘எந்த மாதிரியான விவரங்கள் வேண்டும் என்று கேளுங்கள். இங்கே உள்ள தொழில்நுட்ப அலுவலர்கள் பலரும் அண்டார்டிகாவுக்கு சென்று வருபவர்கள்தாம். அநேக பேர் ஷார்ட் டிரிப்  சென்று வருபவர்கள். ஜீவா என்று ஒருவர் இருக்கிறார். அண்டார்டிகாவுக்கு சிலமுறை லாங் டிரிப் சென்றிருக்கிறார் அவர். நீங்கள் அவரிடம் பேசினால் சரியாக இருக்கும்’ என்று எனக்கு வழிகாட்டினார் குருபரன்.

ஜீவா, மென்மையான மனிதர். பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய குணம் கொண்டவர். அண்டார்டிகா குறித்து ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருந்தது. எனக்கு உதவுவதற்கு ஒப்புக்கொண்டார். ஓரிரு சந்திப்புகளிலேயே நண்பரும் ஆனார்.

சொந்த ஊரான தூத்துக்குடியில் தங்கிக் கொண்டேன். தினமும் கிருஷ்ணாபுரத்துக்குச் சென்றுவர ஆரம்பித்தேன். பேச வேண்டிய விஷயத்தை, கேள்விகளை முன்னதாகவே தயார் செய்துகொள்வேன். ஜீவா, தன் பணிகளுக்கிடையில் கிடைக்கும் நேரங்களில் என்னுடன் பேசினார். மற்ற நேரங்களில் மையத்தில் உள்ள அண்டார்டிகா அனுபவம் கொண்ட பிற நபர்களிடம் பேசி தகவல்களைச் சேகரித்தேன்.

நண்பர் ஜீவா என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அண்டார்டிகாவுக்குச் சென்று வந்ததைப் போன்ற உணர்வைத் தந்தன. அண்டார்டிகாவின் வானிலை, காலநிலை எப்படிப்பட்டது, எந்த மாதிரியான ஆராய்ச்சிகளை இந்தியர்கள் அங்கே மேற்கொள்கிறார்கள், அங்குள்ள மைத்ரி இந்திய ஆராய்ச்சி மையத்தில் தின வாழ்க்கையின் நிகழ்வுகள் என்னென்ன, குளிர்காலம் எப்படிப்பட்டது, அங்கே விளைபவை என்று எதுவும் கிடையாதே, மாதக்கணக்கில் தங்கியிருப்பவர்கள் உணவுக்கு என்ன செய்கிறார்கள், காலையில் எழுந்ததும் சுடச்சுட டிகிரி காபி சாத்தியம்தானா என்பது முதற்கொண்டு யாரெல்லாம் அண்டார்டிகாவுக்குச் சென்று தங்க முடியும் என்பது வரையிலான பல்வேறு விஷயங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன். சென்னைக்குத் திரும்பினேன்.

அண்டார்டிகாவின் இந்திய ஆராய்ச்சி நிலையம் ‘மைத்ரி'

தொண்ணூறு டிகிரி தென் துருவத்தை முதன் முதலில் தொட வேண்டும் என்ற வெறியில், பயணம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஸ்காட், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுன்ட்சென், இன்னொரு முக்கிய பனிப்போராளியான அயர்லாந்தைச் சேர்ந்த ஷாகெல்டன் ஆகியோரது பயணங்கள் குறித்த புத்தகங்களைப் படித்தேன். அவை குறித்து கிடைக்கும் ஆவணப் படங்களைப் பார்த்தேன். அண்டார்டிகாவின் புவியியல், அறிவியல் விஷயங்கள், அதன் வரலாறு, தென் துருவத்தை அடைவதற்காக நடந்த பந்தயங்கள் என பிரித்துக் கொண்டு புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன். தயாரிப்புகளுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன. எழுதுவதற்கு இரண்டு மாதங்கள். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் நண்பர் ஜீவாவைச் சென்று சந்தித்து, சில விஷயங்கள் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.

ஒரு மாலை. புத்தகம் எழுதி முடித்து ஸ்கிரிப்டை பாராவுக்கு அனுப்பினேன். மாலை வீட்டுக்குக் கிளம்புவதாக இருந்தவர், ஸ்கிரிப்ட் வந்ததும் அன்று இரவு கிழக்கிலேயே தங்குவதாக முடிவு செய்தார், எடிட் செய்வதற்காக. முத்துக்குமார், ச.ந. கண்ணன், முத்துராமன், மருதன் உடன் நானும் அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கினேன்.

பாரா, மாலை ஆறு மணிபோல ஸ்கிரிப்டை வாசிக்க ஆரம்பித்தார். இரவு ஏழரை மணி இருக்கும். இரவு சாப்பாட்டுக்கு என்ன டிபன் வேண்டும் என்று கேட்பதற்காக அவரது அறைக்குள் நுழைந்தேன். மடிக் கணிணிக்குள் மூழ்கியிருந்தார். முகம் சாதாரணமாக இல்லை. இரண்டு முறை அழைத்தேன். பதிலில்லை. அருகில் சென்று தோளைத் தொட்டு அழைத்தேன். சட்டென நிமிர்ந்தார். முகத்தில் ஒருவிதமான மிரட்சி. முன் நிற்பது நான்தான் என்று அவர் உணர்வதற்குக்கூட சில நொடிகள் பிடித்தன.

‘சார் டிபன் வாங்கணுமா?’

‘அப்புறம் சொல்றேன்…’

அறையிலிருந்து வெளியில் வந்துவிட்டேன். வருவதற்கு முன் அவர் லேப்டாப்பின் திரையில் பார்த்தேன். ஸ்காட்டும் அமுண்ட்சென்னும் தென் துருவத்தைத் தொட போராடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒருமணி நேரத்தில் புத்தகத்தை எடிட் செய்துமுடித்துவிட்டு பாரா அறையிலிருந்து வெளியே வந்தார்.

‘ஸ்காட், அமுண்ட்சென் – ரெண்டு பேருமே என்னை மிரட்டிட்டாங்க. உன்னோட பெஸ்ட் புக் இது. இனி நீ என்ன எழுதுனாலும் இதுக்கு நிகரா வராது.’

(பாரா பரிந்துரைக்கும் Top 100 புத்தகங்களில் எனது அண்டார்டிகாவுக்கும், கண்ணீரும் புன்னகைக்கும் எப்போதும் இடம் உண்டு என்பதில் மகிழ்ச்சி )

அண்டார்டிகா புத்தகம், கடும்குளிரை வெளிப்படுத்தும் வார்த்தையான  ‘ஸ்…’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 2007 சென்னை புத்தகக் கண்காட்சியில் ஓரளவு விற்பனையானது.

அதற்குப் பின்?

நான் எழுதி வெளியான புத்தகங்களிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனையான புத்தகம் அண்டார்டிகாதான். கிழக்கின் சேல்ஸ் டிபார்ட்மெண்டில் கேட்டால் ‘Failure’ புத்தக வரிசையில் சொல்வார்கள். யூதர்கள், செங்கிஸ்கான போன்ற ஹிட் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அகம் புறம் அந்தப்புரம், முகலாயர்கள் போன்ற மெகா சைஸ் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், என் மனத்துக்கு அதிக சந்தோஷம் கொடுக்கும் புத்தகம் ‘அண்டார்டிகா’தான். எழுதும்போதே என் மனத்தை அதிகம் பாதித்த புத்தகமும் இதுதான். இன்று வரையில், என் எழுத்தை புதிதாக வாசிக்கப் போகிறவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைக்கும் புத்தகம் அண்டார்டிகாதான். இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர்களும் அநேகம்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே ‘ஸ்…’, சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் இலக்கியப் புத்தக ஸ்டாலில் இடம்பெற்றிருந்தது. (ஏன் என்று புரியவிலலை. ஒருவேளை இலக்கியம் படைத்துவிட்டேனோ?) இந்தமுறையும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ‘ஸ்..’ என்ற பழைய தலைப்பில் கிடைக்குமா, அல்லது ‘அண்டார்டிகா’ என்று தலைப்பும் அட்டையும் மாற்றப்பட்ட புதிய பதிப்பாகக் கிடைக்குமா என்று என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. விருப்பப்பட்டால் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் விமரிசனங்களை முன் வையுங்கள்.

நண்பர் ஜீவாவும் எனது அண்டார்டிகா புத்தகத்தை மிகவும் ரசித்தார். தற்போதுகூட அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நிமித்தமாக தங்கியிருக்கும் (இந்த முறை குழுவுக்குத் தலைமையேற்று சென்றிருக்கும்) நண்பர் ஜீவாவுக்கு அவர் செய்த உதவிகளுக்காக என் நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்ணூறு டிகிரி மூன்றாம் பாகத்தில் பனிப்போராளிகளான ஸ்காட், அமுன்ட்சென், ஷாகெல்டன் ஆகியோரோடு சந்திக்கிறேன்.

Leave a Comment