‘யுவராஜ், சிக்ஸர் அடிக்காதே!’

ஆல் இந்தியா ரேடியோ…

பாட்டியாலாவின் மோதிபாக் அரண்மனைப் படுக்கையறையில் வானொலி ஒலித்தது. படுத்தபடியே கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் மகாராஜா பூபிந்தர் சிங். சுற்றிலும் மருத்துவர்கள், நர்ஸ்கள், கூடவே சில முக்கிய அமைச்சர்களும். பம்பாய் பார்போர்ன் மைதானத்தில் அன்று முதல்தர கிரிக்கெட் மேட்ச், இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும். நமது அணியில் இளவரசர் யத்விந்த்ர சிங்கும் இருந்தார்.

‘இந்தப் பாழாய்ப்போன இந்திய கிரிக்கெட்டுக்கு எவ்வளவோ செய்தும் எனக்குப் பலன் கிடைக்கவில்லை. சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை. போகட்டும். என் மகனுக்காவது அந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இளவரசர் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்துவிளையாட வேண்டும், அதுவும் கேப்டனாக. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்’ – இதுதான் பூபிந்தர் சிங்கின் ஆசையாக இருந்தது.

வானொலியில் வர்ணனை தொடர்ந்தது.

‘பாட்டியாலாவின் யுவராஜ் (இளவரசர்) இதோ மட்டை பிடிக்க வருகிறார்’ என்று வானொலி வர்ணனையாளர் சொன்னதுமே சட்டென எழுந்து உட்கார்ந்தார் பூபிந்தர். ‘மகாராஜா பதட்டமடைய வேண்டாம். எல்லாம் நம் ஏற்பாட்டின்படியே சரியாக நடக்கும்’ – ஊக்கமளித்தார் மருத்துவர் நரன்ஜின் சிங்.

‘பந்து வீச்சாளர் ஓடி வருகிறார். தாழ்வாக வீசப்பட்ட பந்து, அருமையாகத் தூக்கியடித்தார் யுவராஜ்… சிக்ஸர்!’

படுக்கையிலேயே துள்ளினார் மகாராஜா. சுற்றியிருப்பவர்கள் கைதட்டினார்கள். அரங்கில் பார்வையாளர்களின் ஆரவாரம் வானொலி வழியே இரைந்தது. ‘இதோ அடுத்த பந்தை வீச ஓடி வருகிறார். அளவு குறைந்து வந்த பந்து. மிட்-ஆன் திசையில் அழகாகத் தூக்கியடித்தார் யுவராஜ். இன்னுமொரு சிக்ஸர்!’

பூபிந்தரின் துள்ளல், மைதானத்தில் ஆரவாரம். அடுத்த பந்திலும் ‘…இறங்கி வந்து லாகவமாக அடித்தார் யுவராஜ். மீண்டும் ஆறு ரன்கள்!’ – இந்தமுறை மைதானத்தில் ஆரவாரம் குறைந்திருந்தது. பூபிந்தர் சிங்கின் முகத்திலும் உற்சாகம் மறைந்து கொஞ்சம் டென்ஷன் ஏறியிருந்தது. அடுத்து வீசப்பட்ட பந்திலும் யுவராஜ் சளைக்காமல் சிக்ஸர் அடிக்க, வாய்விட்டுப் புலம்ப ஆரம்பித்தார் மகாராஜா. ‘யுவி, இதுக்கு மேலே சிக்ஸர் அடிக்காதே!’

மைதானத்திலிருந்த ரசிகர்கள் அதற்குமேல் யுவராஜைக் கேலிசெய்து கூச்சல்போட ஆரம்பித்தார்கள். எல்லாம் நாடகம் என்று புரிந்துபோனது எல்லோருக்கும். பந்தை நன்றாகப் போட்டுக் கொடுங்கள். யுவராஜ் முடிந்த மட்டும் அடித்துவிட்டுப் போகட்டும்! அப்போதுதான் அடுத்து இங்கிலாந்துக்கு வரவிருக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக யத்விந்த்ர சிங் தேர்வாக முடியும். தனது செல்வாக்கைக் கொண்டு இங்கிலாந்து அணியோடு ரகசிய உடன்படிக்கை போட்டிருந்தார் மகாராஜா. ஆனால் மைதானத்தில் யுவராஜ் அதீத ஆர்வக்கோளாறோடு இறங்கி விளாச, திட்டம் பல்லிளித்தது.

பூபிந்தர் சிங்குக்கு ரத்த அழுத்தம் அதிகமாவதை அறிந்த மருத்துவர்கள், அவரைப் படாதபாடுபட்டு படுக்க வைத்தார்கள். யுவராஜ், 60 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மதிய நேரத்துக்குப் பிறகு யுவராஜின் முகம் மைதானத்தில் தென்பட்டபோது ரசிகர்களில் கேலி, கிண்டல், நக்கல் ஒலிகள், பேச்சுகள். யுவராஜால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அந்த நேரத்தில் யுவராஜின் காதுகளுக்கு செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. ‘மகாராஜா உங்களை மைதானத்தில் இருக்க வேண்டாம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.’

யுவராஜ், தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு மைதானத்திலிருந்து வெளியேறினார். அத்தோடு கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்தும். எது எதையோ சாதித்த பூபிந்தர் சிங்காலும் தனது மகன் விஷயத்தில் சாதித்துக்காட்ட முடியவில்லை.

இந்த இடத்தில் ஒரு புள்ளிவிவரம். யத்விந்தர சிங், 52 முதல் தர போட்டிகளில் 83 இன்னிங்ஸ் விளையாடி எடுத்த மொத்த ரன்கள் 1629. அதில் ஏழு அரைசதங்கள், இரண்டு சதங்கள். பவுலிங்கில் எடுத்த விக்கெட்டுகள் 50. விளையாடிய ஒரே ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் மட்டை பிடித்து எடுத்த ரன்கள் 84.

குதிக்குற குதிக்குற குதிரைக்குட்டி…

அழகர்சாமியின் குதிரை பாடல்கள் குறித்து இணையத்தில் முதலில் வந்து விழுந்த விமரிசனங்கள் எல்லாமே எதிர்மறையாக மட்டுமே இருந்தன. ‘எந்தப்பாடலுமே இளையராஜா தரத்தில் இல்லை’, ‘இளையராஜா ஏமாற்றிவிட்டார்’ – இப்படி. அதனால் பாடல்கள் கேட்கும் ஆர்வம் எனக்கு உடனே ஏற்படவில்லை. வார இறுதியில்தான் பாடல்களைக் கேட்டேன். ஏமாந்துபோனதை உணர்ந்தேன். பாடல்களால் அல்ல, பாடல்கள் குறித்த விமரிசனங்களால்.

நந்தலாலாவுக்குப் பிறகு இளையராஜாவின் மிக முக்கியமான ஆல்பம்.

அடியே இவளே ஊருக்குள்ள திருவிழாவாம்…

மிக மிக வித்தியாசமான பாடல். இந்தப் பாடலின் கட்டமைப்பை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. எத்தனை விதமான குரல்கள். எத்தனை விதமான இசைக்கருவிகள். எல்லாம் கிராமிய இசைக்கருவிகள். தமிழர் பண்பாட்டு இசைக்கருவிகள் குறித்து குங்குமத்தில் தொடர் எழுதிவரும் நண்பர் நீலகண்டன், இந்தப் பாடல் குறித்து ஏதாவது கட்டுரை எழுதுவார் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடல் உருவான விதம் குறித்து வீடியோ எதுவும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது நிஜமாகவே கலைப் பொக்கிஷம். ஈசன் – ஜில்லாவிட்டு பாடல் புகழ் தஞ்சை செல்விக்கு அமைந்துள்ள மற்றுமொரு அழகான பாடல்.

பூவைக்கேளு காத்தைக்கேளு…

அசல் இளையராஜா பிராண்ட் மெலடி. மீண்டும் கார்த்திக், ஷ்ரேயா கோஷல். புதிதாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் கேட்கச் சலிக்காத மென்பாடல். பண்பலை வானொலிகளால் சற்றே கவனிக்கப்படும் பாடல் இதுதான். இரவு நேரத் தூக்கத்துக்கு முன் கேட்கும் பாடல் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொண்டுவிட்டேன்.

குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி…

இந்த ஆல்பத்தின் ஸ்டார் பாடல் இதுவே. குதிக்கிற குதிக்கிற என இளையராஜா அசட்டுக் குரலில் பாடும்போது எனக்குள் இனம்புரியாத துள்ளலை உணர்ந்தேன். எத்தனைவிதமான மாடுலேஷன். பாடலைக் கேட்கும்போது அந்தக் குரலில் படத்தில் கதாநாயகனான அப்புகுட்டியின் முகம் என் கண்முன் விரிந்தது. ரசித்துக் கொண்டே இருக்கலாம், காலத்துக்கும். இந்தப் பாடலுக்கான விஷுவல்ஸ் அவ்வளவு அருமையாக வந்திருக்கிறதென சினிமா துறை நண்பர் ஒருவர் சொன்னார். வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

நண்பர் பாஸ்கர் சக்திக்கு என் வாழ்த்துகள்.

படம் குறித்து இளையராஜா, குமுதத்தில் (23.03.2011) பகிர்ந்துகொண்ட கருத்து இது.

ஃபாரின் படங்களைப் பார்த்துட்டு அதுமாதிரி புதுசா சிந்தனை பண்ணி படம் எடுக்க ஆளில்லை. அந்தப் படத்தையே அப்படியே எடுக்க வேண்டியிருக்கு. சமீபத்துல அப்படி ஒரு படத்தை மீடியாக்கள் பாராட்டின அளவுக்கு மக்கள் ரசிக்கலையே. இந்த பாதிப்பு இனி வர்ற நல்ல படங்களுக்கு வந்திடக்கூடாதுங்கற அக்கறையாலதான் இப்ப நான் பேசுறேன். நான் இசையமைக்குற படம் என்பதால சொல்லலை. நான் வேலை செய்யாத நல்ல படங்களும் தோல்வி அடைஞ்சிருக்கு. இது வருத்தமா இருக்கு. உலகத் தரத்தில் படம் எடுக்க நம்ம ஊர்லயும் ஆள் இருக்காங்க என்பது மாதிரி ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தை எடுத்திருக்காங்க. இதுக்கு ஜனங்க சரியான முறையில் ஆதரவு கொடுத்தால்தான் சினிமாவில் ஆரோக்கியமான சூழல் ஏற்படும்.

ஒரு கேமராமேன் உதயமாகிறான்

கையில் மொபைல் கேமரா இருந்தாலே, அதை வைத்துக் கொண்டு செஃபியா டோனில் வித்தியாசமான கோணத்தில் ஏதாவது புகைப்படம் எடுக்க முடியாதா என்று நேற்றுவரை திரிந்து கொண்டிருந்தேன். பள்ளி, கல்லூரி நாள்களில் கைவசமிருந்த யாஸிகா ஸ்டில் கேமராவிலேயே பிறைநிலவைப் படம் பிடிக்க முடியுமா என்று முயற்சி எல்லாம் செய்து பார்த்திருக்கிறேன். இருந்தாலும் எனது யாஷிகாவைக் குறைசொல்ல முடியாது. அதில் எடுக்கப்பட்ட படங்கள் ஜூவியில் எனது கட்டுரைகளோடு வெளிவந்திருக்கின்றன.

கல்கியில் பணியாற்றிய சமயத்தில் அங்கே அலுவலக டிஜிட்டல் கேமரா ஒன்று இருந்தது. என்ன கம்பெனி, என்ன பிக்சல் என்பதெல்லாம் மறந்துவிட்டது. ச.ந. கண்ணன், ஆர். முத்துக்குமார், மருதன் ஆகிய நண்பர்களுடன் பெரும்பாலும் போட்டோகிராபராக நான் செல்வேன். இளையராஜா, ஜெயகாந்தன், எம்.எஸ். உதயமூர்த்தி, சச்சின், கங்குலி, ஜாஹிர், கமலஹாசன், ஜோதிகா, கோபிகா என பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பலரையும் படம்பிடித்திருக்கிறேன். கேமராவை வைத்து எப்படிப் படம் பிடிக்க வேண்டும், எந்த கோணத்தில் வைக்கக்கூடாது, ஆப்போஸிட் லைட் உள்ளிட்ட எந்தவித அடிப்படை விஷயங்களும் தெரியாது. டிஜிட்டல் காமிராதானே. குத்துமதிப்பாக பத்துப் பதினைந்து க்ளிக்கினால், ஒத்த போட்டோ தேறிவிடும்.

சொட்டிக் கொண்டிருக்கும் பைப், புல்லில் உறங்கிக் கொண்டிருக்கும் பனித்துளி, இளமஞ்சள் பௌர்ணமி, இயல்பான புன்னகை என்று தொழில்முறை போட்டோகிராபர்கள் எடுத்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். நம்மால் இந்த மாதிரியெல்லாம் புகைப்படம் எடுக்க முடியாதா?

அதற்கான அருமையான கேமரா வாய்க்க வேண்டுமே. அதற்கென பட்ஜெட் ஒதுக்க வேண்டுமே. பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த கே.வி. ஆனந்தை, எக்ஸ்ட்ரா டோஸ் தூக்க மாத்திரை கொடுத்து மேலும் தூங்க வைத்தேன்.

இப்போது விழித்துவிட்டேன். நெருங்கிய நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மிகத் தரமான SLR கேமரா ஒன்றை எனக்கு திருமணப் பரிசாக அளித்திருக்கிறார்கள். (எத்தனை பிக்சல், என்ன Configuration(?) என்றெல்லாம் கேட்காதீர்கள். சொல்லத் தெரியாது. இதுதான் கேமரா.)

கேமரா பொட்டி தனி, அதற்கான லென்ஸ்கள் தனி, முன்னும் பின்னும் கையால் திருகி ஃபோகஸ் செய்துதான் படம் எடுக்க முடியும். ப்ரிவியூ எல்லாம் கிடையாது. கண்களால் உற்று நோக்கித்தான் கிளிக் செய்ய வேண்டும். கேமராவை இயக்குவதற்கே ரத்னவேலுவிடம் கோச்சிங் போக வேண்டும்போல.

எப்படியோ தட்டுத்தடுமாறி மேனுவல் புக்கை எழுத்துக்கூட்டி வாசித்து, குத்துமதிப்பாகப் புரிந்துகொண்டு க்ளிக்க ஆரம்பித்துள்ளேன். வரவர யாரையும் எதையும் என்னால் சாதா கண்களால், சாதா கோணத்தில் பார்க்க முடியவில்லை. கேமராவை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு கண் டாக்டரிடம் செல்லவேண்டும்போல!

எனது முயற்சிகள் சில இங்கே.