அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்!

‘போலோ மேட்சுக்காக ஜெய்ப்பூர் மகாராஜா கல்கத்தா வர்றார். உட்லேண்ட்ஸ் ஹோட்டல்ல இடமில்லை. நம்ம மாளிகைல, உங்க அறையிலதான் தங்கப்போறார். அதனால நீங்க அறையைக் காலி பண்ணிக்கொடுத்துடுங்க. சரியா?’ – கூச்பிகார் மகாராணி இந்திரா சொல்லிவிட்டுப் போனாள். பன்னிரண்டு வயது இளவரசி காயத்ரி தேவிக்கு தன் அறையை விட்டுக் கொடுப்பதில் பூரண சம்மதமில்லை. அம்மா சொல்லிவிட்டாள். வேறு வழியில்லை. போலோ விளையாட்டில் ஜெய் கில்லாடி என்பதை பத்திரிகைச் செய்திகளில் படித்திருந்தாள். பேரழகர் என்றும் கேள்விப்பட்டிருந்தாள். ஆகவே அவரது வருகையை எதிர்நோக்கினாள் (1931).

ஜெய் வந்தார். கூச் பிகார் இளவரசர்களோடு கூடிக் குலாவினார். இளவரசிகளையும் நேர்பார்வையில் நோட்டமிட்டுக் கொண்டார். ‘ஆளு அழகாத்தான் இருக்காருடி’ – இளவரசிகள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். ‘அவருக்குக் கல்யாணமாயிருச்சு தெரியுமா?’

ஜெய்யுடன் காயத்ரி
ஜெய் உடன் காயத்ரி

‘தெரியும்டி. மிக்கின்னு ஒரு பொண்ணும், பபிள்ஸ்னு ஒரு பையனும்கூட இருக்காங்க. ஆனா இவரைப் பார்த்தா அப்படியா தெரியுது?’ பருவத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த காயத்ரிக்கு ஜெய்யின் மீது ஒருவித ஈர்ப்பு வந்திருந்தது. மேட்ச் எல்லாம் முடிந்து ஜெய் கிளம்பிச் சென்றிருந்தார். ஆனாலும் அடிக்கடி வந்துகொண்டிருந்தார், காயத்ரியின் நினைவில்.

அடுத்த ஆண்டும் கல்கத்தாவுக்கு வந்தார், போலாவுக்காக. அப்போதுதான் அவருக்கு இரண்டாம் கல்யாணம் நடந்திருந்தது. ‘அவரோட புது மனைவி போட்டோவை அனுப்பச் சொல்லேன்’ – தனது அம்மாவிடம் நச்சரித்தாள் காயத்ரி. இந்திராவும் ஜெய்யிடம் கேட்டாள். சரியென்று சொல்லிய அவர், அனுப்பவில்லை.

இந்திரா, குடும்பத்தோடு அவ்வப்போது பரோடாவுக்குச் செல்வாள். தாய் வீட்டுக்கு. அந்தமுறை, ‘போகும் வழியில் ஜெய்ப்பூருக்குச் செல்லலாம்’ என்றாள். காயத்ரியின் மனத்துக்குள் இனம்புரியாத சந்தோஷம். ஜெய்ப்பூரின் அரண்மனை அழகை ரசித்தாள், அவளையறியாமலேயே ஜெய்யையும். அந்தப்புரம் சென்று அவரது மனைவிகளைச் சந்தித்தாள். குழந்தைகளோடு விளையாடினாள்.

‘நான் காயத்ரியை வெளியில் அழைத்துக் கொண்டு போகிறேன்’ – ஜெய், திடீரென இப்படிக் கேட்டதும் அவளுக்குள் பரவச ஊற்று. மகாராஜா கேட்டு மறுப்பது நாகரிகமில்லையே. இந்திரா சம்மதித்தாள். ஜெய்யோடு காரில் சென்ற நிமிடங்களில் பறப்பதுபோல உணர்ந்தாள் காயத்ரி.

‘நீ கார் ஓட்டுகிறாயா?’

ஓட்டினாள். ஜெய் உதவி செய்தார். வெட்கமும் புன்னகையும் ஸ்பரிசங்களும் கலந்த நொடிகள். அரண்மனைக்குத் திரும்பினார்கள். ‘உங்க பொண்ணு நல்லாத்தான் ஓட்டுறா. ஆனா வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்க சொல்றதைத்தான் கேக்குறதில்ல’ – ஜெய், இந்திராவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார். இந்திரா, காயத்ரியைப் பார்த்தாள். ‘நான் அவர் சொல்றபடிதான் ஓட்டினேன். ஆனா அவர்தான் ஒரு நிலையில இல்லை.’ காயத்ரி சிரித்தாள்.

ஜெய்ப்பூரிலிருந்து கிளம்பும்போது எதையோ விட்டுச் செல்வதுபோல உணர்ந்தாள் காயத்ரி. இரவிலும் பகலிலும் அவளது கனவுகளில் ஜெய், போலோ விளையாடிக் கொண்டிருந்தார். ஜெய்யைப் பற்றி பத்திரிகைகளில் எந்தச் செய்தி வந்தாலும் அது அவளைக் குதூகலமடைய வைத்தது. அவரது பெயர்மீது விரல்வைத்து ஆசையாக வருடிக் கொடுத்தாள். ஜெய் கழற்றிப்போட்ட ஒரு கையுறையிலிருந்து இரண்டு நூல்களை எடுத்து வைத்திருந்தாள். நூல்களைத் தனது கை பிரெஸ்லெட்டோடு சுற்றிக்கொண்டாள். அழகாகத் தெரிந்தது. ஜெய்யின் முதலிரண்டு மனைவிகள், குழந்தைகள் – எதுவுமே காயத்ரிக்கு உறுத்தவில்லை. ‘நான் ஜெய்யைக் காதலிக்கிறேன்’ – தனிமையில் சொல்லிப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அப்போது அவளுக்கு வயது பதினான்கு.

***

‘காயத்ரி காங்கிரஸில் இணைந்துவிட்டார்’ என்ற கிசுகிசு பலகாலமாகவே வலம் வந்துகொண்டிருந்தது. அழைப்பு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் காயத்ரி காங்கிரஸில் இணையவில்லை. அதற்கு எதிர்க்கட்சியாக, ராஜாஜியின் தலைமையில் உருவான சுதந்தரா கட்சியில் இணைந்தார் (1960). காரணம்? வலுவான எதிர்க்கட்சி ஏதுமின்றி காங்கிரஸ் அதுவரை செலுத்தி வந்த அதிகாரம் பல மட்டங்களில் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. ராஜஸ்தான் காங்கிரஸார், முன்னாள் ராஜ ஆட்சியாளர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் எடுத்திருந்த சில நடவடிக்கைகள் காயத்ரியைக் களமிறங்க வைத்தன.

‘அரசியலில் இறங்கி பதவிக்கு வர நினைக்கிற ராஜகுடும்பத்தினருக்கு மன்னர் மானியத்தொகை கிடையாது’ என்று சட்டசபையில் திருவாய் மலர்ந்தார் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் மோகன்லால் சுகாடியா. ‘அப்படியென்றால் காங்கிரஸில் இருக்கும் மன்னர்களுக்கு?’ என்று எதிர்க்கேள்வி எழ, சுகாடியா வாய்பொத்திக் கொண்டார். தங்களுக்குக் கிடைக்கும் மானியத் தொகைக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்றே பல மகாராஜாக்கள், இளவரசர்கள் காங்கிரஸில் அடைக்கலம் புகுந்திருந்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளில் இருந்த ராஜகுடும்பத்தினருடைய ‘மக்கள் செல்வாக்கை’ காலிபண்ணும் வேலையை காங்கிரஸ் தொடர்ந்தது.

1962 தேர்தல். ஜெய்ப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக காயத்ரியை அறிவித்தார் ராஜாஜி. ‘நான் உங்கள் மகாராஜாவின் மனைவி என்பதால் என்னை ஆதரிக்கிறீர்களா?’ – காயத்ரி மக்களிடம் நேரடியாகவே கேட்டார். பாதிக்கூட்டம் ‘ஆம்’ என்றது. ‘இல்லை, நீங்கள் எங்களுக்கு ஏற்கெனவே நிறைய செய்திருக்கிறீர்கள். இனியும் செய்வீர்கள்’ என்றது மீதிக்கூட்டம். பிரசாரத்தின் இறுதிநாள். ஜெய்ப்பூரில் காங்கிரஸ், ஜனசங்கம், சுதந்தரா – மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டம் போட்டன. ஜெய் பேச்சைக் கேட்க திரண்ட சுமார் இரண்டு லட்சம் ஜனங்களைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு மூச்சடைத்தது.

தேர்தலில் ஜெய்ப்பூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 1,92,909. அதில் காயத்ரி வாங்கிய ஓட்டுகள் 1,57,692. கின்னஸ் புத்தகம் புதிய சாதனையைப் பதிவு செய்துகொண்டது.

*****

மன்னர் மானிய ஒழிப்புக்குப் பின்னும் இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகளிலிருந்த ராஜ பரம்பரையினரை விட்டுவைக்கவில்லை. வருமான வரி சோதனை முதல் பல விஷயங்களில் துன்பத்துக்கு ஆளானார் காயத்ரி. 1975ல் அவசரநிலை பிரகடனம். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்குச் சென்ற காயத்ரிக்கு அதிர்ச்சி. அவையில் காங்கிரஸார் மட்டும் இருந்தார்கள். அன்று மதியமே காயத்ரி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உள்ளே இன்னொரு மகாராணி ‘ஹாய்’ சொன்னார், குவாலியரின் விஜயராஜே சிந்தியா.

கொசுக்கடி, எலித்தொல்லை, இருள் அறை இன்னல்கள். ஆறுமாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த காயத்ரி, தீவிர அரசியலிலிருந்து விலகிக்கொண்டார். இன்றுவரை ஜெய்ப்பூரின் ராஜமாதாவாக மக்கள் அபிமானத்தோடு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

*****

மேலே சொன்ன கடைசி வரி, இந்த ஏப்ரல் மாதத்தில் நான் எழுதியது. (குமுதம் ரிப்போர்ட்டர், அகம் புறம் அந்தப்புரம் தொடருக்காக.) அதை அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே மாற்ற வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்தக்காலத்து ஐஸ்வர்யாராய். மக்களோடு நெருங்கிப் பழகிய மகாராணி. இந்திரா காந்தியின் அரசியல் எதிரி. பெரு வாழ்க்கை வாழ்ந்த நல்ல மனுஷி. அடுத்த சில வருடங்களுக்குள் ஜெய்ப்பூருக்குச் சென்று காயத்ரி தேவியைச் சந்திக்க வேண்டும் ஆசை வைத்திருந்தேன். நேற்று மறைந்துவிட்டார்.

A Princess Remembers – The Memoirs of the Maharani of Jaipur
by Gayatri Devi

மகாராணி காயத்ரி தேவியின் நினைவுகளைச் சொல்லும் புத்தகம். அது மட்டும் இப்போது என்னிடம், பொக்கிஷமாக.

சார், வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்…

சார்… வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்கள்ளாம் எறங்கி சாப்பிடலாம் சார்..’

ஏய்… எந்திரிடா வெண்ணை… நைட்டு ரெண்டு மணிக்கு கொட்டுற பனியில ஒருத்தன் கா கா-னு கத்திக்கிட்டிருக்கேன். பஸ்சுல சன்னலோரமா சீட்டு கிடைச்சவுடனே, எதோ பரலோகத்துலயே சீட்டு கிடைச்சாப்புல பவுசா தூங்கிருவீங்களே.. அடச்சீ எந்திரி…

தப்பா நெனைச்சுக்காதீங்க. இந்த சாலையோர ஓட்டலுதான் எனக்கு எல்லாம். இந்த ரூட்டுல ஒரு மணி நேரத்துக்கு அம்பது வண்டி போச்சுதுன்னா, அதுல பத்து, பதினைஞ்சுதான் எங்க மொபசல் ஓட்டலுக்குள்ள வருது. ஏன்னா போட்டிக்கு நிறைய ஓட்டலு பக்கத்துலயே இருக்கு. பஸ்சு டிரைவரு, கண்டக்டரை சரிகட்டி, வண்டியை நம்ம ஓட்டலு பக்கமா நிப்பாட்ட வைக்குறதுக்குள்ள நாங்க படுற பாடு எங்களுக்குத்தான தெரியும். நிக்குற வண்டியில பாதி பேரு, உள்ளே ஒக்காந்து உலக மகா தூக்கம் தூங்கிட்டு இருந்தாங்கன்னா, எங்க பொழைப்பு என்னாவறது?

அதான் தூங்குறவனை எழுப்புறதுல தயவு தாட்சண்யமே பாக்குறது கிடையாது. வண்டி வந்து நின்னாப் போதும். உலக்கையை வைச்சு இடிக்குற மாதிரி என் கையால பஸ்ஸைச் சுத்தித் தடதடனு தட்டிக்கிட்டே ‘டீ… காப்பி… டிப்பன்’னு கத்த ஆரம்பிச்சுருவேன். தட்டுற, தட்டுல அவனவன் அரண்டு, மிரண்டு பதறி அடிச்சுக்கிட்டு முழிப்பான். ஒண்ணுமே புரியாம இறங்கி வந்துருவான்.

ஆனா, சில பேரு இருக்கான் பாருங்க, ஏதோ வாழ்க்கையில அன்னிக்குத்தான் மொத மொதலா தூங்குறாப்புல போஸ் கொடுத்துட்டு இருப்பானுங்க! அது என்னை அவமானப்படுத்துற மாதிரி இருக்கும். விடுவேனா… என்னோட வால்யூமை ஃபுல்லா ஏத்திக்கிட்டு, பஸ் சன்னல்கிட்ட போயி கத்தோ கத்துன்னு கத்துவேன். பஸ்சு மேல முட்டோ முட்டுன்னு முட்டுவேன். அப்புறமென்ன, எவனாயிருந்தாலும் இறங்கித்தான் ஆவணும்.

இந்த மொபசல் ஓட்டல் வளாகத்துல சம்பந்தமேயில்லாத ஆடியோ கேசட் கடை ஒண்ணு துருத்திக்கிட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியுமா! தூங்குறவங்களை எழுப்ப இன்னொரு டெக்னிக். கேசட்டைப் போட்டு, பெருசாக் கத்த விட்டுருவோம்.

‘பார்த்த முத நாளே.. உன் மூஞ்ச
பார்த்த முத நாளே..
டாஸ்மாக் போனேனே – நாந்தான்
டாஸ்மாக் போனேனே!’

இந்த ரேஞ்சுலதான் பாட்டெல்லாம். இதைப் பாடுறதுக்குன்னே கொடூர குரல்களோட ஒரு குரூப் இருக்குது. இதைக் கேட்டா, செத்துப்போனவனே கூட எந்திரிக்க சான்ஸ் இருக்கு. இந்தக் கேசட்டையும் சில ‘நல்ல மனுசங்க’ காசு கொடுத்து வாங்கிட்டுப் போவானுங்க தெரியுமா!

பஸ்சை விட்டு இறங்குன உடனே பாதி பேரு அப்படியே அங்கிட்டும் இங்கிட்டு நோட்டம் விடுவாங்க. அதாவது டாய்லெட்டுக்குப் போகாம, அப்படியே ஓரமா ஒதுங்கிடலாம், ஒரு ரூவாயை மிச்சப்படுத்தலாமுன்னு உலக மகா திட்டம் போடுவாங்க. வா மவனே வா, நீ உற்சாகமா திறந்தவெளி புல்கலைக்கழகத்துல போறதுக்கா, நாங்க காசைப் போட்டு கருமத்தைக் கட்டி வெச்சிருக்கோம்னு மரியாதையாச் சொல்லுவேன். அப்படியும் சில பேரு கேட்க மாட்டான். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போயி இருக்கலாமுன்னு அறிவுபூர்வமா திட்டம் போடுவானுங்க. நான் விடுவேனா.

‘எப்பா.. நீ உள்ள போயி இருக்க வேணாம். எங்கிட்டு வேணும்னாலும் போய் இரு. ஆனா ஒரு ரூவாக் காசைக் கொடுத்துரு’ன்னு கட் அண்டு ரைட்டாச் சொல்லுவேன். அப்புறமென்ன, ஒரு ரூவாயக் கொடுத்துட்டு, மூக்கைப் புடிச்சிக்கிட்டு உள்ளயே போயிருவான்.

பக்கத்துல நாலு மைலு தொலைவுல இருக்குற பசுமரத்துப்பட்டிதான் என் சொந்த ஊரு. நான் இந்த ஓட்டல்ல எட்டு வருசமா இப்படி எடுபுடி வேலைகளைப் பாத்துக்கிட்டிருக்கேன். எல்லா வேலையும் செய்வேன். இப்படி வந்து நிக்குற வண்டிங்க மத்தியிலதான் இந்த டேவிட்டோட வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.

நேத்து வடநாட்டுக்காரன் ஒருத்தன் வந்தான். செம கடுப்பைக் கிளப்பிட்டான். ஆம்னி பஸ்ல இருந்து இறங்குனான். கேவலமா ஒரு கொட்டாவி விட்டுக்கிட்டே படு பங்கரையா சோம்பல் முறிச்சான். இளநி எவ்ளோன்னு இங்கிலீஷ்ல விசாரிச்சான். வாங்கல. அடுத்து கூல்டிரிங்ஸ் எவ்ளோன்னு ஹிந்தியில விசாரிச்சான். வாங்கல. அடுத்து டீ எவ்ளோன்னு சைகையிலேயே விசாரிச்சான். அதையும் குடிக்கல. இப்படி கொலை கேஸை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் மாதிரி எல்லாத்தையும் விசாரிச்சிட்டு ஓரமா போய் ஒக்காந்துட்டான்.

எனக்குள்ள டென்ஷன் தாண்டவமாடிடுச்சு. அவன்கிட்ட போய், ஒரு ரசீதை நீட்டி ‘டென் ரூபிஸ்’னு மிரட்டலா சொன்னேன். ‘கியா?’ன்னு முழிச்சான். ‘டிக்கி பார்க்கிங் சார்ஜ்’னு சொன்னேன். ஒண்ணும் புரியாம பத்து ரூபாயைக் கொடுத்துட்டு பஸ்சுக்குள்ள ஏறிப் பதுங்கிட்டான்.

போன வாரம் இன்னொரு காமெடி நடந்துச்சு. ஒரு கவர்மெண்டு பஸ்சு வந்துச்சு. உள்ளயிருந்து வந்த ஆம்பிளைங்க எல்லாம், படு சோகமா நாலு நாள் தாடியோட இறங்குனாங்க. ஒருத்தர் மட்டும் எங்கிட்ட வந்து, ‘ஏம்ப்பா, இங்க சலூன்லாம் கெடையாதா?’ன்னு கேட்டாரு. ‘இல்லை’ன்னு சொன்னவுடனே, ‘முடிஞ்சா ஒரு சலூனையும் வைச்சிருங்க அப்பு. பாதயாத்திரையா கெளம்பியிருந்தாக் கூட இந்நேரம் ஊரு போய்ச் சேர்ந்திருப்பேன். கட்டையில போறவன்… இந்த பஸ்சுல நான் என்னிக்கு ஏறி ஒக்காந்துன்னு எனக்கே நியாபகத்துல இல்ல. இன்னும் ஊரு போய்ச் சேரல’ன்னு கண்ணீர் மல்க கதறிட்டாரு. அப்ப, அந்த பஸ் கண்டக்டரு வந்து, ‘ஏம்ப்பா, எல்லாரும் வண்டியில ஏறியாச்சா? நேராவுது. காலாகாலத்துல போய்ச் சேர வேணாமா’ன்னாரே பாக்கலாம்.

ஒரு வழியா அந்தக் கட்டை வண்டி கெளம்பிப் போச்சுது. அடுத்த அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஒரு ஆளு ‘குய்யோ முய்யோ’ன்னு கத்திக்கிட்டே ஓடியாந்தாரு. ‘இங்கிட்டுருந்த மஞ்சக் கலரு வண்டியெங்க? அய்யய்யோ.. நான் அதுல போனுமே’ன்னு அழுதாரு. ‘அதான் போயிருச்சே. போனும் போனும்னா என்னாத்த பண்ணுறது’ன்னு கேட்டேன்.

‘அய்யா.. வவுத்தக் கலக்குச்சுன்னு வெளிய போனேன். போயிட்டு வந்தவுடனே, பசிக்குற மாதிரி இருந்துச்சேன்னு போய்ச் சாப்பிட்டேன். மறுபடியும் வவுத்தக் கலக்குச்சுதுன்னு வெளிய போய்ட்டு வந்தேன். மறுபடியும் பசிச்சிருமோன்னு பயந்து இன்னொரு தடவைக் கொஞ்சமா சாப்பிட்டேன். பஸ்ல ஏறினா திரும்ப வவுத்தக் கலக்குமோன்னு பயம் வந்துருச்சு. அதான் மறுபடியும் வெளிய போய்ட்டு வந்து, பார்சல் ஒண்ணு வாங்கிட்டு வந்து பாக்குறேன். பஸ்சைக் காணோமே’ன்னு அழுதாரு.

‘யோவ்.. நீ உன் இஷ்டத்துக்கு ‘உள்ளே-வெளியே’ விளையாண்டுக்கிட்டு இருந்தேன்னா பஸ்சு வெயிட் பண்ணுமா? சரி, அடுத்த வண்டி இந்தா நிக்குது. டிக்கெட் வெச்சிருக்கேல்ல. சொல்லி ஏத்தி உடுறேன். கவலைப்படாத, நீ வந்த வண்டி போற ஸ்பீடுக்கு அங்கப்பிரதட்சணம் பண்ணிக்கிட்டே போனாக்கூட ஓவர்டேக் பண்ணிடலாம்’னு சமாதானப்படுத்தி அடுத்த வண்டியில அனுப்பி விட்டேன்.

ம்.. இப்படியே ‘டீ.. காப்பி.. டிப்பன்’னு கூவிக்கிட்டு, வர்ற வண்டிக்கெல்லாம் கண்ணாடி துடைச்சு விட்டுக்கிட்டே பொழைப்பை எவ்வளவு நாள்தான் ஓட்ட முடியும்? நானும் எனக்குன்னு சில கனவுகளை வெச்சிருக்கேன். எடுபிடியா நான் வேலை பாக்குற இந்த ஓட்டல் வளாகத்துலயே ஒரு சின்னக் கடையைப் போடணும். அப்படியே சினிமாவுல வர்ற மாதிரி மளமளன்னு முன்னேறணும். கடைசியில ஒருநாள் இந்த ஓட்டல் வளாகமே எனக்குச் சொந்தமா இருக்கணும். எப்படி, சூப்பரா இருக்குல்ல!

வருங்காலத்துல நான் நடத்தப்போற ஓட்டல்ல பஸ்சு மட்டும் வந்து நிக்காது. ஸ்பெஷலா டிராக்கு போட்டு டிரெயினெல்லாம் உள்ளாற வந்து டீ சாப்பிட்டு போற மாதிரி வசதி செய்வேன். அவ்வளவு ஏன், ரன் வே-லாம் போட்டு ஏரோ-ப்ளேனே வந்து இறங்கி இட்லி சாப்பிட்டுட்டு போகும்னா பாத்துக்கோங்க! அவ்வளவு ஹை-டெக்! நான் முதலாளியாவே இருந்தாலும், வர்றது ஏரோ-ப்ளேனாவே இருந்தாலும், பழசை மறக்க மாட்டேன். அப்பவும் நான் தட்டி எழுப்புவேன்.

‘சார்… ஏரோப்ளேன் பதினைஞ்சு நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்களெல்லாம் இறங்கி வந்து சாப்பிடலாம் சார்…’

தீபாவளி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

வேற வழியே இல்லை. போற போக்கைப் பார்த்தா அப்படித்தான் நடக்கும்னு தோணுது. பிழைப்புக்காக சென்னைக்கு வந்த பிற பகுதி தமிழகத்து மக்கள் எல்லாம் 2011ல (அதாவது சமக தலைவர் சரத்குமார் முதல்வர் ஆகப்போற வருஷம்) இப்படித்தான் ஊருக்குப் போவாங்கன்னு தோணுது!)

காலங்கார்த்தால அலாரம் வைச்சு எழுந்து, படபடன்னு சிஸ்டம் ஆன் செஞ்சு, நெட் கனெக்‌ஷனை ஆன் பண்ணி, எப்போ ரயில்வே டைம் எட்டு ஆகும்னு செம விழிப்புணர்வோட படு வேகத்துல ரயில்வே டிக்கெட் பதிவு செஞ்சாக்கூட, வெயிட்டிங் லிஸ்டுன்னு நடுமண்டையில ஒரு சுத்தியல் அடி நங்குன்னு விழுகுது. (டிக்கெட் கவுண்டரில் முன்பதிவுக்காக ஏமாந்து நிற்கும் ஆயிரக்கணக்கான சக பயணிகளே எம்போன்ற கிராதகர்களை மன்னிப்பீராக!)

வருங்காலத்தில் ஏராளமான சிறப்பு ரயில்களோ, பேருந்துகளோ விட்டால்கூட கட்டுப்படியாகாது என்றே தோன்றுகிறது. அவரவர் இருக்கும் இடத்திலேயே பண்டிகை கொண்டாடிக் கொள்ள வேண்டியதுதான். அதையும் மீறி சொந்த ஊரில் மாமன் மச்சான்களோடுதான் பண்டிகை கொண்டாடுவோம் என்று மக்கள் அடம்பிடிக்கும் பட்சத்தில் அரசிடம் இருந்து ஓர் அறிவிப்பு வெளிவரும். (தேர்தல் அறிவிப்புபோல.)

‘தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகின்ற அக். 17 அன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அக். 19 அன்று தூத்துக்குடி, ஈரோடு, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கும், அக். 21 அன்று திருநெல்வேலி, பெரம்பலூர், சேலம், கடலூர் மாவட்டங்களுக்கும், அக். 23 அன்று கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் தீபாவளி கொண்டாட தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு ஆரம்பமாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் ஜே.கே. ரித்தீஷ் அறிவித்துள்ளார்.’

இன்னொரு விஷயம் தெரியுமா! தொடர்ந்து உங்களுக்கு ரயில்ல டிக்கெட்டே கிடைக்கலேன்னா உங்க ஜாதகத்துல ஐஆர்சிடிசி தோஷம் இருக்குதுன்னு அர்த்தம். அதுக்கு பரிகாரமா தொடர்ந்து அஞ்சு வாரம் மம்தா பானர்ஜிக்கு மாவிளக்குப் போட்டா எல்லாம் சரியாகிரும். ஓகேவா!

பிரபஞ்சனின் புதிய தொடர்

இரும்பு, பயன்பாட்டுக்கு வந்தபின் ஆற்றங்கரை ஓர மக்கள், காடழித்து விவசாயத்தில் ஈடுபட்டார்கள். நெற்பயிர், பயன்பாட்டுக்கு வந்தபின் மக்கள் வளம் அடையத் தொடங்கினர். வெளிநாட்டு வர்த்தகமும் சேர சொத்து சேரத் தொடங்கியது. வாழ்க்கைக்குத் தேவையான மாடுகளைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர். கொள்ளையில் அதிக வீரம் காட்டி, அதிக மாடுகளைக் கொள்ளையடித்தவன் அரசன் ஆகிறான். அதிகாரம் அவனிடம் குவியத் தொடங்கியது. உபரி செல்வம் அல்லது சொத்துக்குத் தம் பிள்ளைகள் வாரிசாயினர். தம் பிள்ளைகள்தான் என்பதற்கான உத்தரவாதத்தைக் குடும்பமும், படி தாண்டாத மனைவியும் தந்தார்கள். ஆகவே குடும்ப அமைப்பு மகிமைப்படுத்தப்பட்டது.

நிலமற்ற விவசாயி முதன் முதலாக ‘வினைவலன்’ அல்லது வேலையாள் உருவாகிறான். குழுத் தலைவர்கள் அல்லது குறுநில மன்னர்களுடன் நெருங்கிய உறவும் நட்பும் கொண்ட பாணர்கள் என்கிற இசை நடன, நாடகக் கலைஞர்கள் காமத் தரகர்களாக மாறுகிறார்கள். கலைஞர்களாகிய பாணர்களின் மனைவிமார்கள் அல்லது கலைத் தோழர்கள், பல வேளைகளில் பரத்தையர்களாகிறார்கள். பாணர்கள் இருந்த இடங்களில் பார்ப்பனர்கள் மன்னர் அவைகளில் அமர்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தில், தொழில் வழிப் பிரிவுகள், பிறப்பு வழிச் சாதிகளாகின்றன. உழைக்கும் மக்களை இழிசனர்கள், புலையர்கள், துணி வெளுக்கும் பெண்கள் புலத்தியர்கள் ஆகிறார்கள். உழவுப் பெண்கள் ‘கடைசியர்கள்’ ஆகிறார்கள். போரில் தோற்றவர்கள் அடிமைகள் ஆகிறார்கள்.

…..

எல்லையற்ற அதிகாரத்தைக் குவித்துக் கொண்ட மன்னர்களைத் தம் சாதுர்யத்தால் வளைத்துப் போட்ட பார்ப்பனர்கள், தங்கள் ஆரிய வருணாசிரம விஷத்தைத் தமிழர் வாழ்க்கையில் கலந்தார்கள்.

மானுட குலத்துக்குள்ளேயே ஒரு பகுதியினர் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட கொடுமை, சுமார் 1500 ஆண்டுகளாகவே இங்கே நீடிக்கிறது.

இப்படிப் பெரும்பான்மை உழைக்கும் மக்களைப் புறக்கணித்து, சொத்துள்ளவர்களை மட்டுமே பாடிய தமிழ் இலக்கியம் தமிழர் இலக்கியம் ஆகுமா? என்பதே என் கேள்வி. இன்றைய சொல்லாடலில், பிற்பட்ட, மிகப் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் ஆகியோர்களைப் புறக்கணித்து மிச்சம் உள்ள பார்ப்பன மற்றும் ஆதிக்கச் சாதி இந்துக்களை மட்டும் ஒரு மொழியின் இலக்கியம் பதிவு செய்யுமானால், அதை அந்த தேசிய இனத்தின் இலக்கியம் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

0

எழுதப்படாத சரித்திரம் – பிரபஞ்சன் எழுதும் புதிய தொடர். தமிழக அரசியல் இதழில் கடந்த இரு வாரங்களாக விறுவிறுப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

காந்தியையும் அம்பேத்கரையும் வைத்து பிரபஞ்சன் எழுதிய முதல் அத்தியாயமே தொடர் குறித்த முழு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலே கொடுக்கப்பட்டுள்ளது இரண்டாவது அத்தியாயத்திலிருந்து சிறு பகுதி. இதுவரை பதிவு செய்யப்படாத புறக்கணிப்படும் மக்களின் சரித்திரத்தை பிரபஞ்சனின் ஆவேச எழுத்தில் வாசிக்க வாரந்தோறும் காத்திருக்கிறேன்.

இரண்டாவது அத்தியாயத்தை முழுமையாகப் படிக்க இங்கே.

டைம் அட்டையில் ஒரு கஞ்ச மகாபிரபு!

‘எவ்வளவுதான் தரமுடியும்?’

‘முப்பது ரூபாய்’

‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான் என்ற ஏழாம் அஸஃப் ஜா (1886 – 1967).

நிஜாமாகப் பதவிக்கு வந்ததும் (1911) அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம்  மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட சிக்கன நடவடிக்கை அது. சில துணைவிகளை விற்று, பணத்துக்குப் பதிலாக மாங்காய்களாகப் பெற்றுக் கொண்டார் என்றுகூட குறிப்புகள் இருக்கின்றன.

அநாவசியச் செலவுகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்ற சிந்தனையே ஒஸ்மானின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மாறுபட்ட பரிமாணங்களே பல விஷயங்களில் கஞ்சத்தனமாக வெளிப்பட்டன.

‘நிஜாம், உங்கள் சால்வை மிகவும் பழசாகிவிட்டது. புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே?’ என்றார் அமைச்சர் ஒருவர். அதற்கு ஒஸ்மான் அளித்த பதில், ‘எடுக்கலாம். ஆனால் நான் அதுக்கு பதினெட்டு ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறேன். புதிய சால்வை இருபது ரூபாய் ஆகிறதே.’

ஒருமுறை வைஸ்ராய் லின்லித்கோ, ஒஸ்மானைச் சந்தித்தபோது அவரது வாக்கிங் ஸ்டிக்கைக் கவனித்தார். இரண்டாக உடைந்த அது, ஒட்டப்பட்டு நூலால் சுற்றப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டே எந்தவித கூச்சமும் இன்றி வெளியிடங்களுக்குச் சென்று கொண்டிருந்தார் ஒஸ்மான். தன்னுடன் பேச வரும் ஒரு சமஸ்தானத்தின் நிஜாம், இப்படி ஒடிந்த ஸ்டிக்குடன் வருகிறாரே என்று வைஸ்ராய்க்குத்தான் கூச்சமாகப் போய்விட்டது. அடுத்தமுறை ஒஸ்மானைச் சந்தித்தபோது ஒரு புதிய உயர்தரமான வாக்கிங் ஸ்டிக்கைப் பரிசளித்தார். வாய் நிறையப் புன்னகை வழிய, அதனை வாங்கி வைத்துக் கொண்டார் ஒஸ்மான்.

அப்போதைய இந்திய அரசின் முதன்மை ஆலோசகராக வி.பி. மேனன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை ஒஸ்மானைச் சந்திக்கச் சென்றார். பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். ஒஸ்மான் தன் சார்மினார் சிகரெட் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடம் நீட்டினார். அதுதான் அப்போதைய மலிவான சிகரெட். பாக்கெட் பன்னிரண்டு பைசாதான். பத்து சிகரெட் இருக்கும்.

மேனனுடைய பிராண்ட் வேறு. போயும் போயும் சார்மினாரைப் புகைத்து வாய் நாற்றத்துடனா அலைய முடியும் என்று யோசித்த அவர், ‘வேண்டாம்’ என்று மறுத்தார். ஒஸ்மான் வற்புறுத்தவெல்லாம் இல்லை. தம் வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார். மேனனுக்கும் வாய் நமநமத்தது. தன் சட்டைப் பையில் இருந்து விலையுயர்ந்த சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்து உடைத்தார்.

நாகரிகமாக ஒஸ்மானிடம் நீட்டினார். வாயில்தான் புகைந்துகொண்டிருக்கிறதே என்று மறுத்திருக்கலாம். ஆனால் ஒஸ்மான் அதிலிருந்து நான்கைந்தை எடுத்துத் தன் சார்மினார் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். அறையிலிருந்து புகை கலைந்து முடிந்த சில நொடிகளில் அவர்களது சந்திப்பும் முடிந்தது.

சில நாள்களிலேயே இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். பேச்சின் இடையே, ஒஸ்மான் தன் சார்மினார் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடமிருந்து எடுத்த புதிய பிராண்ட் சிகரெட்டுகள் எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருந்தன.

அதிகாரிகளோ விருந்தினர்களோ ஒஸ்மானை சந்திக்கச் சென்றால் அவர் உபசரிக்கும் விதமே தனியானது. வருபவர்களை உட்காரச் சொல்லுவார். அவர்கள் தனக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பார். எது கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்வார். பேசத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள் கழித்து அரண்மனைப் பணியாள் கையில் ஒரு தட்டுடன் வருவார். அதில் முக்கால்வாசி நிரம்பிய நிலையில் இரண்டு கோப்பைகளில் டீ, இரண்டு பிஸ்கட்டுகள் மட்டுமே இருக்கும். ஆளுக்கு ஒரு கோப்பை டீ, ஒரே ஒரு பிஸ்கட். அவ்வளவுதான். பெட்டி பெட்டியாக தங்க பிஸ்கட் வைத்திருந்தால் என்ன, சாப்பிடக்கூடிய பிஸ்கெட்டை வீணாக்கக்கூடாது என்பது ஒஸ்மானின் உயரிய எண்ணம்.

ரத்தத்தோடு கலந்துவிட்ட குணம் அது. வாழ்நாளில் எந்த நிலையிலும் ஒஸ்மான் தனது குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. அப்படிப்பட்ட நிஜாம் ஒஸ்மான் அலிகானைப் பற்றி, டைம் வாரப் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. அட்டையில் ஒஸ்மானின் ஓவியம் கம்பீரமாகக் காட்சியளித்தது. (1937, பிப்ரவரி 22)

கட்டுரை அவரது கஞ்சத்தனத்தைப் பற்றியல்ல.‘உலகின் மாபெரும் பணக்காரர்’ என்பதற்காக. HIS EXALTED HIGHNESS THE NIZAM OF HYDERABAD என்று தலைப்பிட்டிருந்தது.

இன்றைய தேதியில் முகேஷ் அம்பானிக்கு அந்த பாக்கியம் கிடைத்ததோ இல்லையோ, அன்றைய தேதியில் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு அந்தப் பேறு கிடைத்தது. டைம் பத்திரிகை மட்டுமல்ல, உலகில் பல பெரிய பத்திரிகைகள் அப்போது அந்தச் செய்தியை வெளியிட்டு நிஜாமின் சொத்துக் கணக்கை விதவிதமாகக் கூறின.

நிஜாமின் தினப்படி வருமானம் சுமார் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள். அவர் கொத்துக் கொத்தாகச் சேர்த்து வைத்துள்ள நகைகளின் மொத்த மதிப்பு குத்துமதிப்பாக பதினைந்து கோடி அமெரிக்க டாலர்கள். அவர் உப்புப் போட்டு கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்துள்ள தங்கக் கட்டிகளின் மதிப்பு இருபத்தைந்து கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும். அதையும் சேர்த்து நிஜாமின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு தோராயமோ தோராயமாக நூற்று நாற்பது கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என்று வியந்து எழுதியிருந்தது டைம் பத்திரிகை. இந்தக் கணக்கில் ஒஸ்மான் சேர்த்து வைத்திருக்கும் வைர, மரகதக் கற்களின் மதிப்பு சேர்க்கப்பட்டவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது.

சரி, முதலிடம் ஒஸ்மானுக்கு. இரண்டாவது இடம்?

வெற்றிகரமாக கார்களைத் தயாரித்து வந்த ஹென்றி ஃபோர்டுக்கு. ஆனால் என்ன, அவரது மொத்த சொத்து மதிப்பு, ஒஸ்மான் சேர்த்து வைத்திருந்த நகைகளின் மதிப்பில் பாதிகூட இல்லை என்பதே உண்மை.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் தொடரில் இருந்து ஒரு சிறு பகுதி. இன்னும் சில மாதங்களில் அகம் புறம் அந்தப்புரம் குண்டு புத்தகமாக வெளிவர இருக்கிறது.)