எம்.ஆர். ராதா என்ன சொல்வார்?

கடந்த ஞாயிறு (ஆக.2, 2015) காலையிலிருந்து இன்று (ஆக.8, 2015) காலை வரை, குறைந்தபட்சம் 300 அறிமுகமில்லாத நபர்களிடமாவது போன் வழியாகப் பேசியிருப்பேன். எல்லாம் எம்.ஆர்.ராதா செய்த மாயம்.

கடந்த 25 வாரங்களாக எனது எம்.ஆர்.ராதா – கலகக்காரனின் கதை – நூல், தொடர் வடிவில் வாரமலரில் வெளியானது. சென்ற ஞாயிறன்று நிறைவடைந்தது. அதன் விளைவாக இத்தனை அழைப்புகள். பெரும்பான்மையானவை சந்தோஷ அழைப்புகள். விதவிதமான மனிதர்களிடம் பேசும் வாய்ப்பு. நல்ல அனுபவம்.

செங்கல்பட்டிலிருந்து ஒரு பள்ளியின் முதல்வர் பேசினார். அவர்களது மாணவர்கள் மத்தியில் வந்து வாசிப்பார்வத்தைத் தூண்டும்படி உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிச்சயம் செய்வதாகச் சொல்லியிருக்கிறேன். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரும், அவரது மனைவியும் அத்தனை அன்பைக் கொட்டி பேசினார்கள். நெகிழ்வு. பணி நேரத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் வயர்லெஸ் இரைய பேசி, என் புத்தகங்கள் எங்கு வாங்க முடியும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அதேசமயம், ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஒருவர், ‘என் அட்ரஸ் நோட் பண்ணிக்கோங்க. எங்க குடும்பம் டீஸண்டான குடும்பம். உங்க புத்தகத்தை எல்லாம் அனுப்பி வையுங்க’ என்று குழைந்தார். பாவம், ஓஸிக்கே பழகிவிட்டார்போல. அவருக்கு என் பரிதாபங்கள்.

அந்தக் கால நாடக நடிகர்கள் சிலர் பேசினார்கள். எம்.ஆர். ராதாவைச் சந்தித்த, அவரது நாடகங்களைக் கண்டுகளித்த நினைவுகளைச் சந்தோஷமாகப் பகிர்ந்து கொண்டார்கள். குடும்பத்தலைவிகள் பலரும் பேசினார்கள். ‘எம்.ஆர்.ராதா படிச்சதுல இருந்து டீவில எம்.ஆர்.ராதா நடிச்ச படம் வந்தாலே விரும்பி பார்க்குறோம்’ என்று மகிழ்ந்தார்கள். வாரமலரில் தொடர்ந்து எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டார்கள். பேசியவர்களில் பெரும்பான்மையானோர் 50+ கடந்தவர்களே. பலரும் எழுப்பிய கேள்வி, ‘நீங்கள் ஏன், எம்.ஜி.ஆரைச் சுட்ட விஷயத்தைப் பற்றி மிக விரிவாகப் பேசவில்லை?’

அதற்கு என்னுடைய பதில் இதுவே. எம்.ஜி.ஆரைச் சுட்டதென்பதும் ராதாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். ஆனால், அது மட்டுமே ராதாவின் அடையாளமாக முன்னிறுத்தப்படுவது, மக்களின் மனங்களில் பதிந்திருப்பது வருத்தத்திற்குரிய விஷயம். ராதாவின் பன்முக ஆளுமையை அழுத்தமாகப் பதிவு செய்வதே என் ஒரே நோக்கம். ராதாவின் அடையாளங்களாகப் பேச அவரது தனித்துவமான நடிப்பு, நாடகத் துறையில் அவரது அர்ப்பணிப்பு, பெரியாரின் சீடராக அவர் செய்த பகுத்தறிவுப் பிரசாரம், திராவிட அரசியலில் அவரது பங்கு, மனிதநேயம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆக, எம்.ஜி.ஆரைச் சுட்டதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதனளவில் அதைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அவ்வளவே.

பேசியவர்களில் பலரும் பொதுவாகச் சொன்ன விஷயம், ‘நாங்க தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர்கள். எம்.ஆர்.ராதான்னாலே பிடிக்காது. அவரு எம்.ஜி.ஆரைச் சுட்டவரு. வில்லன். ஆனா, இந்தத் தொடரைப் படிச்சதுக்கு அப்புறம்தான் எம்.ஆர்.ராதா எவ்வளவு பெரிய ஆளு, எவ்வளவு உயர்ந்த மனிதர், நல்லவர்னு புரிஞ்சுக்கிட்டோம்.’

கலைத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஆர். ராதாவின் பங்களிப்பு மிகப்பெரியது. எம்.ஆர். ராதா நூற்றாண்டு நிகழும் இந்தச் சமயத்தில் என் எழுத்து மூலம் அவரது வாழ்க்கையும், அவரது உயரிய பண்புகளும் மனித நேயமும் பலரையும் சென்றடைந்ததில் பெருமகிழ்ச்சி. கூடவே மனத்தில் அதீத கற்பனை ஒன்றும் தோன்றுகிறது. டைம் மிஷின் ஒன்று கிடைத்தால், அதில் ஏறி ராதா வாழ்ந்த காலத்துக்குச் சென்று அவரிடம் கலகக்காரனின் கதை புத்தகத்தைக் கொடுக்க வேண்டும் என்று. அப்படி நிகழ்ந்தால் ராதா என்ன சொல்லுவார்?

‘நாட்லே எவ்வளவோ பெரிய பெரிய மனுஷங்க, மேதைகள், அறிஞர்கள், மகான்கள் எல்லாம் வாழ்ந்துட்டுப் போயிருக்காங்க. நீ அவங்களை பத்தி எழுதாம, என்னைப் பத்தி எழுதி உன் டைம் வேஸ்ட் பண்ணிருக்க. பரவாயில்ல மேன். இனிமேலாவது நல்ல விஷயங்களை எழுத முயற்சி பண்ணு.’

 

சென்னை புத்தகக் காட்சி 2015

2015 சென்னை புத்தகக் காட்சி விற்பனை எப்படி?

பொதுவாகக் கிடைக்கும் பதில் : சென்ற வருடம் போல இல்லை. சென்ற வருடத்தைவிடக் குறைவுதான்.

இது வழக்கமான அங்கலாய்ப்பு இல்லை. நான் உணர்ந்த வரையில் நிஜமே. சென்ற வருடத்தைப் போல இந்த வருடமும் கூட்டம் அதிகம் வரத்தான் செய்கிறது. ஆனால், அது புத்தகங்களை வாங்கும் கூட்டமாக இல்லை. குறிப்பாக, காணும் பொங்கல் அன்று விற்பனையாளர்கள் பெருத்த ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறார்கள். அன்று கூட்டம் மிகக்குறைவு. வியாபாரம் வார நாள்களைப் போன்று சாதாரணமாகவே இருந்துள்ளது.

ஏன் விற்பனை குறைந்துள்ளது?

புத்தகங்களின் விலை அதிகம். மக்களைக் கவரக்கூடிய புதிய புத்தகங்கள் எதுவும் பெரிய அளவில் வரவில்லை. இப்படிப் பொத்தாம்பொதுவாக இதற்குக் கருத்து சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டுமென்றால், ‘மோடியின் ஆட்சியில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது’ என்று சொல்லிக் கொள்ளலாம்.

‘ஏற்கெனவே வாங்குனதையே படிக்கல. இந்த வருசம் எதுவும் வாங்கக்கூடாதுன்னு உறுதியா இருக்குறேன்’ என்று பலர் வழக்கமாகச் சொல்வதுண்டு. அந்தப் பலரது  உறுதி எப்போதும் தவிடுபொடியாகிவிடும். இந்த வருடம் அப்படி ஆகவில்லைபோல. அதனால்தான் என்னவோ விற்பனை குறைந்ததாகத் தோன்றுகிறது. ஆனால், கடைசி மூன்று நாள்கள் விற்பனை, இந்தச் சரிவை ஈடுகட்டிவிடும் என்று தோன்றுகிறது. இன்றைக்கு (திங்கள், ஜனவரி 19) வார இறுதிபோல மாபெரும் மக்கள் கூட்டமெல்லாம் இல்லை. ஆனால், வந்த கூட்டம் வாங்கும் கூட்டமாக இருந்தது. விற்பனையாளர்களின் முகத்தில் உற்சாகம் தென்பட்டது. இது அடுத்த இரு தினங்களிலும் நிச்சயம் தொடரும்.

***

இன்றுதான் நான் புத்தகக் காட்சியைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.  ஐந்து மணி நேரம் செலவிட்டு, மூன்று வரிசைகளைக் கூட முழுதாக முடிக்க இயலவில்லை. Ana Books (ஸ்டால் எண் 73,74) என்ற பழைய புத்தகக் கடையில் அதிக நேரம் செலவிட்டேன். ஆங்கில Fiction, NonFiction புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எதை எடுத்தாலும் ரூ. 99. சில புதையல்கள் சிக்கின. மகிழ்ச்சி.

அந்த ஸ்டாலில் நான் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கும்போது ஒரு நீலச்சட்டைக்காரர் ‘Ruskin Bond புத்தகங்கள் ஏதாவது தென்பட்டதா?’ என்று கேட்டார்.  ‘இல்லீங்க. சரியா கவனிக்கலை’ என்றேன். வரலாற்றுப் புத்தகங்களைத் தேடும் நோக்கில் நான் இலக்கியப் புத்தகங்களைச் சரியாகக் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் தேடியதில் Ruskin Bond புத்தகம் ஒன்று தென்பட்டது. எடுத்து அந்த நீலச் சட்டைக்காரரிடம் நீட்டினேன். சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். அதற்குப் பின் அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

அவர்: ‘நீங்க Ruskin Bond படிப்பீங்களா?’

நான்:  ‘இல்லீங்க. படிச்சதில்லை.’

‘என்ன படிப்பீங்க?’

‘ஹிஸ்டரி நிறைய படிப்பேன்.’

(அவரது முகம் அஷ்டகோணலாக மாறியது. அஜீரணக் கோளாறால் வாந்தி எடுப்பதுபோன்ற ஒரு ரியாக்‌ஷனையும் வெளியிட்டார்.)

‘ஹிஸ்டரியா? ஸாரி… எனக்கு சாண்டில்யன் படிச்சா தூக்கம் வரும்ங்க.’

(அவரைப் பொருத்தவரை வரலாற்றுப் புத்தகங்கள் என்றால் சாண்டில்யன்தான் என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டது. என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தார். அது வட துருவம் நோக்கி மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் குறித்த ஒரு வரலாற்றுப் புத்தகம்).

‘இந்த புக் நல்லாருக்குமா?’

‘எனக்கு நல்லாருக்கும். உங்களுக்கு எப்படின்னு தெரியாது.’

‘நீங்க லவ் ஸ்டோரில்லாம் படிக்க மாட்டீங்களா?’

‘தமிழ்ல சிறுகதைகள் படிப்பேன். இங்கிலீஷ்ல இண்ட்ரெஸ்ட் இல்ல…’

‘ஹிஸ்டரிலாம் எப்படித்தான் படிக்கிறீங்களோ… என்னமோ போங்க… ’ என்று சொல்லிவிட்டு பில் போட நகர்ந்தார்.

***

கவிதா பப்ளிகேஷனில் சிவன் என்பவர் எழுதிய ‘நமது சினிமா (1912 -2012)’ என்று சினிமா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். பெரிய புத்தகம்தான். ஆண்டு வாரியாக சினிமா குறித்த புள்ளிவிவரங்களை, தகவல்களை அறிய விரும்புபவர்களுக்கு நல்ல புத்தகமாக இருக்கும். கவிதாவில் வாண்டு மாமா புத்தகங்கள் தொகுப்புகளாக நல்ல தரத்தில் வெளிவந்துள்ளன. தவற விடாதீர்கள்.

***

நண்பர்களுடன், புத்தகக் காட்சியில் மட்டும் வருடந்தோறும் சந்திக்கும் நண்பர்களுடன் உரையாடினேன். முகநூல் மூலமாக அறிமுகமான நண்பர்களை இந்த வருடம் அதிக அளவில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அடுத்த இரு தினங்களிலும் புத்தகக் காட்சியில்தான் இருப்பேன். மற்ற வரிசைகளைப் பார்த்து நூல்களை வாங்குவதில்தான் அதிக நேரம் செலவிட இருக்கிறேன். ஓய்வுக்காக, சிக்ஸ்த்சென்ஸிலும் (411), கிழக்கிலும் (635) கொஞ்ச நேரம் இருப்பேன்.

சொல்ல மறந்துவிட்டேன். (பெயர் வெளியிட விரும்பாத) எழுத்தாளர் + நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் வெளியான அவரது புத்தகம் சரியான வரவேற்பைப் பெறாததில், அவரது புத்தகம் எந்தவித சர்ச்சையிலும் சிக்காகதில் அவருக்கு ஏக வருத்தம். அடுத்த புத்தகக் காட்சிக்குக் கவனம் பெறும் வகையில் பளிச் தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியிடச் சொல்லி யோசனை சொன்னேன்.

அந்தத் தலைப்பு : ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை எரிக்காதீங்க!

 

சென்னை புத்தகக் கண்காட்சி 16.01.2014

விற்க அதற்குத் தக!

பொதுவாக காணும் பொங்கல் அன்று சென்னை புத்தகக் கண்காட்சி களைகட்டும். மாலை ஆறு மணிக்கு மேல் உள்ளே நுழையும்போதே மூச்சு முட்டும். ஆனால், இன்று?

புத்தகக் கண்காட்சி அரங்கினுள்ளே ஒரு புட்ஃபால் கோல் போஸ்ட்டையும் உள்ளடக்கி கடைக்கள் அமைத்துள்ளார்கள். அந்த கோல் போஸ்ட்டைக் குறிவைத்து சில கடைக்காரர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். (வயிற்றெரிச்சலை வேறு எப்படிச் சொல்ல?)

‘வருடந்தோறும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது’ என்பது பொதுவாகச் சொல்லப்படும் ஸ்டேட்மெண்ட். ‘அது பொய்’ என்று சொல்கிறது நிகழ்காலம்.

‘சுத்தமா விளம்பரமே இல்லை. வழக்கத்தைவிட விளம்பரம் ரொம்பக் குறைவு. மக்களுக்கு புக்ஃபேர் நடக்குறதே தெரியலை’ என்பது ஒரு பதிப்பகத்தாரின் கருத்து. ‘பொருளாதார மந்தம். புக் விலையெல்லாம் அதிகமாயிட்டே போகுது. அதான் மக்கள் வாங்குறதைக் குறைச்சுக்கிட்டாங்க’ என்பது ஒரு கடைக்காரரின் ஸ்டேட்மெண்ட். ‘பொங்கலுக்கு வெளியூருக்குச் சென்றிருக்கும் தமிழ்நாட்டின் பிற மாவட்ட சென்னைவாசிகளெல்லாம் நாளைக்குள் ஊர் திரும்பிவிடுவார்கள். சனி, ஞாயிறு தினங்களில் கூட்டம் சந்தோஷப்பட வைக்கும்’ என்பது என் எண்ணம்.

இன்று, இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கினேன். எம்.ஜி.ஆர். பேட்டிகள் தொகுப்பு. கிருபாகரன் என்பவர் தொகுத்துள்ள இந்தப் புத்தகத்துக்காக பல பேட்டிகளைக் கொடுத்து உதவியவர், எனது நீண்ட நாளைய நண்பரான ஜெயபாபு. இவர் பழைய பத்திரிகைகள், புகைப்படங்கள் சேகரிப்பாளர். புத்தகம் பல இடங்களில் கிடைக்கிறது.

வாங்கிய இரண்டாவது புத்தகம், அடைபட்ட கதவுகளின் முன்னால். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் அனுபவங்களைச் சொல்லும் புத்தகம். அந்தத் தாயார் ஸ்டாலில் இருந்தார்கள். பில் போட்டுக் கொடுத்தார்கள். (திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றிய பதிப்பகம் ஸ்டால் எண் 273 – 94430 58565.)

டிஸ்கவரி புக் பேலஸில் சட்டென ஒரு புத்தகத்தின் தலைப்பு கவர்ந்திழுத்தது. ‘விற்க அதற்குத் தக!’ – விற்பனையாளர்களுக்கான கையேடு. ஆனால், அட்டை வடிவமைப்பும், புத்தக வடிவமைப்பும் ஆக மோசம். விற்பனை குறித்த அந்தப் புத்தகம் தன்னைத் தானே விற்றுக்கொள்ளும் தரத்தில் இல்லாதது சோகமே.

டிஸ்கவரி புக் பேலஸில் கண்ட இன்னொரு விஷயம், பொன்னியின் செல்வன் ஆடியோ சிடி. எம்பி3 வடிவில். ஆறு சிடிக்கள் என்று நினைக்கிறேன். சுமார் 78 மணி நேரம் ஓடக்கூடியது. நல்ல முயற்சி. (ஸ்டால் எண் 700)

என்னுடைய புத்தகங்களில் சென்ற வருட வெளியீடான வெளிச்சத்தின் நிறம் கருப்பு – இந்த வருடமும் நல்ல வேகத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இன்று அதை வாங்கிய ஒரு தம்பதி என்னிடம் பேசினார்கள். ‘உங்க புக்ல கிளியோபாட்ராதான் முதல்ல படிச்சோம். கீழ வைக்கவே முடியாம படிச்சு முடிச்சுட்டுதான் எழுந்தோம். வரலாறை இவ்வளவு சுவாரசியமா சொல்றது ஆச்சரியமான விஷயம்’ என்று தங்கள் கருத்தைச் சொன்னார்கள். இது போன்ற வாசகர்கள்தான் அடுத்த ஒரு வருடத்துக்கு இயங்கத் தேவையான சக்தியை, உற்சாகத்தைக் கொடுக்கிறார்கள். எதற்கு உழைக்கிறோம், யாருக்காக உழைக்கிறோம் என்பதற்கு ஓர் அர்த்தம் வேண்டுமே.

 

 

சென்னை புத்தகக் கண்காட்சி 11.1.14

கோபிநாத் எழுதிய கிமு-கிபி!

இன்று மதியத்துக்கு மேல் புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தேன். பார்க்கிங்கில் வரிசை கட்டிய பைக்குகளே ‘நல்ல கூட்டம்’ என்று சொன்னது. கடைகளுக்குள் நெரிசல் உள்ள அளவு கூட்டம் இல்லையென்றாலும், இன்று வந்த மக்கள் ‘வாங்கும் கூட்டமாக’ இருந்ததில் மகிழ்ச்சி.

இந்த முறை ஸ்டால்கள் அமைப்பில் சிறு மாற்றம். வரிசைகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, நீளத்தை அதிகமாக்கி விட்டார்கள். வழக்கம்போல தரை அமைப்பு மட்டும் ஆங்காங்கே ‘மரண பயத்தைக்’ காட்டத் தவறவில்லை.

என் புத்தகங்கள் வழியாக எனக்கு அறிமுகமான வாசக நண்பர்கள் சிலரைச் சந்திப்பதற்காகத்தான் இன்று கண்காட்சிக்குச் சென்றேன். ஆகவே இரண்டோ, மூன்றோ வரிசைகள் மட்டும் நடந்தேன். மேலோட்டமாக மட்டும் புத்தகங்களைப் பார்த்தேன். இன்னும் உள்ளே குதிக்கவில்லை.

கிழக்கில் ஹரன் பிரசன்னாவைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். இந்த வருடம் அவர்கள் திட்டமிட்ட புத்தகங்கள் அனைத்தும் விற்பனைக்கு வந்துவிட்டன. மருதனின், குஜராத் இந்துத்துவம் மோடி – அட்டை கவரும் விதத்தில் இருந்தது. ஆர்எஸ்எஸ் புத்தகத்தின் அட்டை கம்பீரமாக இருந்தது. அரவிந்தன் நீலகண்டனின் மோடி புத்தகத்தை ‘இலவச இணைப்பு’ சைஸில் கண்டதில் ஏமாற்றமே.

கிழக்கில் பிரசன்னாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு பெண்மணி வந்து கேட்ட ஒரு கேள்வி தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கப்பட வேண்டியது – கோபிநாத் எழுதிய கிமு-கிபி புக் இருக்குதா?

சிக்ஸ்த் சென்ஸில் சிறிது நேரம் இருந்தேன். எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய ஜூலியஸ் சீஸரை வாசகர்கள் விருப்பத்துடன் வாங்கிச் சென்றார்கள். அங்கே ‘ஹிட்’ ஆகக்கூடிய வேகத்தில் விற்ற இன்னொரு புத்தகம் ‘போதி தர்மர்.’

அரும்பு ஸ்டாலில் ஒரு மேஜையை ‘பழைய புத்தகக் கடை’ ஆக்கியிருந்தார்கள். 50 சதவிகிதம் கழிவு. அங்கே எனக்கு ஒரு புதையல் கிடைத்தது. Uncle Tom’s Cabin-ன் மொழிபெயர்ப்பான கறுப்பு அடிமைகளின் கதை. அலைகள் வெளியீடு. ரூ. 100க்கு வாங்கினேன்.

மற்றபடி இந்த முறையும் லிச்சி ஜூஸ் ஸ்டால் இருக்கிறது. லிச்சி ஜூஸ்தான் பழைய சுவையில் இல்லை. அடுத்த முறை சுவைத்துப் பார்த்துவிட்டு ஒரு முடிவெடுக்க வேண்டும். உள்ளே காபி – டீயும் கிடைக்கிறது. டீயின் விலை பத்து ரூபாய். அதன் சுவை, மணம், திடத்துக்கு எழுபத்தைஞ்சு பைசா கொடுக்கலாம்.

அடுத்து பொங்கலன்று புத்தகக் கண்காட்சியில் இருப்பேன். அன்று முதல் சிக்ஸ்த் சென்ஸ் வெளியிடும் மேம்படுத்தப்பட்ட ‘அகம் புறம் அந்தப்புரம்’ விற்பனைக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சந்திப்போம்.

 

பாப்பா பாட்டு!

அழுது கொண்டிருந்த என் மகளைச் சமாதானப்படுத்தும் விதமாக நானே ஒரு பாடலை பாட ஆரம்பித்தேன். குழந்தை சமாதானமாவதுபோலத் தோன்றியது. எனக்குள் உற்சாகம். பாடல் வளர்ந்தது. இடையிடேயே பாடல் வரிகளுக்கேற்ப உடல்மொழியை மாற்றிக் கொண்டேன். குரலையும் மாற்றிக் கொண்டேன். என் மகளுக்கு பாடல் மிகவும் பிடித்துப் போனது. பல நேரங்களில் அவளைக் குஷிப்படுத்த, தூங்க வைக்க இந்தப் பாடலைத்தான் பாடுவேன். இதே பாடலை என் மனைவி பாடினால், மகள் தடுத்து நிறுத்தி விடுவாள். இது அவளுக்கு ‘அப்பா பாட்டு.’ அப்பா மட்டுமே பாட வேண்டும். சுமார் ஒரு வருடமாக இந்தப் பாடலை என் மகளுக்காக, மெருகேற்றி, நீட்டித்து பாடிக் கொண்டே இருக்கிறேன்.

இந்தப் பாடல் உங்களுக்குக் கூட உதவலாம். மெட்டு பற்றி கவலைப்பட வேண்டாம். குழுந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் பாடினால் போதும். விலங்குகளின் ஓசை, பறவைகளின் ஓசையைத் தேவைக்கேற்ப கலந்துகொண்டால், அப்படியே சின்னதாக நடனமாடினால், குழந்தைகள் குதூகலிப்பார்கள்.

பாடல் இதோ:

குயிலு என்ன பண்ணுச்சாம்?

குயிலு என்ன பண்ணுச்சாம்?

குக்கூ குக்கூ கூவிச்சாம்!

குக்கூ குக்கூ கூவிச்சாம்!

மயிலு என்ன பண்ணுச்சாம்?

மயிலு என்ன பண்ணுச்சாம்?

தைத்தை தைத்தை ஆடிச்சாம்!

தைத்தை தைத்தை ஆடிச்சாம்!

மான் என்ன பண்ணுச்சாம்?

மான் என்ன பண்ணுச்சாம்?

துள்ளித் துள்ளி ஓடிச்சாம்!

துள்ளித் துள்ளி ஓடிச்சாம்!

குரங்கு என்ன பண்ணுச்சாம்?

குரங்கு என்ன பண்ணுச்சாம்?

வாழைப்பழம் கேட்டுச்சாம்!

வாழைப்பழம் கேட்டுச்சாம்!

காக்கா என்ன பண்ணுச்சாம்?

காக்கா என்ன பண்ணுச்சாம்?

வடை வேணும் கேட்டுச்சாம்!

வடை வேணும் கேட்டுச்சாம்!

குருவி என்ன பண்ணுச்சாம்?

குருவி என்ன பண்ணுச்சாம்?

அரிசி கொத்தித் தின்னுச்சாம்!

அரிசி கொத்தித் தின்னுச்சாம்!

கரடி என்ன பண்ணுச்சாம்?

கரடி என்ன பண்ணுச்சாம்?

தேன் வேணும் கேட்டுச்சாம்!

தேன் வேணும் கேட்டுச்சாம்!

ஆமை என்ன பண்ணுச்சாம்?

ஆமை என்ன பண்ணுச்சாம்?

மெதுமெதுவா நகர்ந்துச்சாம்!

மெதுமெதுவா நகர்ந்துச்சாம்!

தவளை என்ன பண்ணுச்சாம்?

தவளை என்ன பண்ணுச்சாம்?

தாவித் தாவி குதிச்சுச்சாம்!

தாவித் தாவி குதிச்சுச்சாம்!

சிங்கம் என்ன பண்ணுச்சாம்?

சிங்கம் என்ன பண்ணுச்சாம்?

(சிங்கம்போல கர்ஜித்து) கத்திச்சாம்!

(சிங்கம்போல கர்ஜித்து) கத்திச்சாம்!

யானை என்ன பண்ணுச்சாம்?

யானை என்ன பண்ணுச்சாம்?

(யானைபோல பிளிறி) கத்துச்சாம்!

(யானைபோல பிளிறி) கத்துச்சாம்!

முயல் என்ன பண்ணுச்சாம்?

முயல் என்ன பண்ணுச்சாம்?

கேரட் வேணும் கேட்டுச்சாம்!

கேரட் வேணும் கேட்டுச்சாம்!

வாத்து என்ன பண்ணிச்சாம்?

வாத்து என்ன பண்ணிச்சாம்?

குவாக் குவாக் கத்துச்சாம்!

குவாக் குவாக் கத்துச்சாம்!

***

பாடல் இத்துடன் முடிவதில்லை. கொக்கு, கோழி, நரி, புலி, எறும்பு, அணில், சிறுத்தை, பூனை, நாய் – என சேர்த்து பாடிக் கொண்டே போகலாம்.

ஏதாவது புத்தகங்களில் பறவைகள், விலங்குகளைப் பார்க்கும்போதோ, டிஸ்கவரி, அனிமல் பிளானெட் வகையறா சேனல்களைப் பார்க்கும்போதோ, அதில் வரும் உயிரினங்களுக்கான பாடல் வரியை நான் பாட, என் மகள் அதைப் பொருத்திப் பார்த்து புரிந்துகொள்கிறாள்.

ஏட்டுக் கல்வியைவிட, பாட்டுக் கல்வி என்றைக்குமே சிறந்ததுதானே!