விஜய் – விமர்சனம்

நானும் வேண்டாம், கூடாது, பேசவே கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்கு ஓடினாலும் துரத்தித் துரத்தி பயமுறுத்துவதால் ‘சுறா’வைப் பற்றி பேச வேண்டிய நிர்பந்தம்.

இன்று காலையில் சென்னை ஹலோ எஃப்.எம். சுசித்ரா நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயம் : தொடர்ந்து பல படங்களாக ஒரே ஃபார்முலாவில் நடித்துக் கொண்டிக்கும் விஜய் அதை மாற்றிக் கொள்ள வேண்டுமா?

போனில் பேசியவர்கள் எல்லோருமே ‘கண்டிப்பாக மாற்றியே தீர வேண்டும்’ என்று கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய சிலரது கருத்துகள் :

ஒரு பெண் : விஜய்க்கு டான்ஸ் மட்டும்தான் ஆடத் தெரியும். அதுலயும் வித்தியாசமா, கஷ்டப்பட்டு பண்றதா நினைச்சு தரையில படுத்து தவழ ஆரம்பிச்சுடுறாரு. பாவமா இருக்கு.

***

ஒரு குடும்பத் தலைவி : இந்த படமாவது நல்லாயிருக்கும்னு மனசைத் தேத்திக்கிட்டு ஒவ்வொரு விஜய் படமும் தியேட்டர்ல போய் பார்க்கத்தான் செய்யுறேன். ஆனா ஒவ்வொரு தடவையும் ஏமாற்றமா இருக்குது. வெறுப்பா இருக்குது. இன்னிக்கு நைட்கூட சுறா போகலாம்னு இருக்கேன். விஜய் வேற மாதிரி நடிச்சா நல்லாயிருக்கும்.

***

ஒரு குடும்பத் தலைவர் : நாங்க விஜய்கிட்ட இருந்து கமல் அளவுக்கெல்லாம் எதிர்பார்க்கல். ஒரே படத்துல பத்து ரோல் பண்ணச் சொல்லல. பத்து படமா தொடர்ந்து ஒரே ரோல் பண்ண வேண்டாம்னுதான் சொல்றோம்.

***

ஒருவர் : விஜய் தன்னைக் கண்டிப்பா மாத்திக்கணுங்க. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள மாதிரி கேரக்டர் பண்ணனுங்க.

சுசித்ரா : அந்த ரிஸ்க் எடுக்கணுங்கிறீங்களா? அவரால முடியுமா?

ஒருவர் : ஏங்க, ஐம்பது படம் நடிச்சுட்டாரு. இன்னும் இந்த ரிஸ்க் கூட எடுக்கலேன்னா எப்படி?

***

நேயர் : விஜய் ஒரு தேசிய விருதாவது வாங்கணும். அப்படி ஒரு படத்துல நடிக்கணும்.

சுசித்ரா : அவர் உங்ககிட்ட தேசிய விருது வேணும்னு கேட்டாரா?

நேயர் : இல்லீங்க. நெம்பர் ஒன் இடத்துல இருக்கிறதா சொல்லிக்கிறாங்க. ஒரு விருதாவது வாங்கி அந்த இடத்துக்கு நியாயம் சேர்க்க வேண்டமா?

***

நிகழ்ச்சியில் பேசிய எல்லோரும் விஜயின் படங்களில் மாற்றத்தை எதிர்பார்த்தே பேசினார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும் டப்பா படங்களுக்குக் கூட எஃப்.எம்.களில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளே அரங்கேறிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சி விஜயைக் கேலி செய்ய வலுவான களம் அமைத்துக் கொடுத்ததுபோல அமைந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு சுசித்ரா கடைசியில் சொன்ன வழிசல் வார்த்தைகள்.. ஹிஹி!

விஜய் எனக்கு நல்ல ப்ரெண்ட். அவரோட டான்ஸ் சான்ஸே இல்ல. அவர் சொன்ன தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். அடுத்து அவர் நடிக்கிற த்ரீ இடியட்ஸ்ல ஒரு ஸீன்கூட மாத்தக்கூடாதுன்னு சொல்லிருக்காராம்.

சுசித்ராவுக்கு ஒரு கமெண்ட் : உங்கள் நிகழ்ச்சியில் நீங்கள் பாடிய பாடல்களை மட்டும் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேல் ஒலிப்பரப்பு செய்வது ரொம்ப ஓவர்.

***

விஜய் கதைத் தேர்வில் இம்மியளவுகூட ரிஸ்க் எடுப்பதில்லை. மக்கள்தான் அவருடைய படத்தைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு முறையும் ரிஸ்க் எடுக்க வேண்டியதிருக்கிறது. எனவே விஜய் நடித்த படங்கள் பார்ப்பதை விட்டு பட வருடங்களாகிவிட்டன.

பழைய விஜய் படங்களில் எனக்குப் பிடித்தவை – 1. குஷி 2. காதலுக்கு மரியாதை 3. லவ் டுடே.

கடைசியாக தியேட்டருக்குச் சென்று (அதாவது நண்பர்களால் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதால்) பார்த்த விஜய் படம் : சிவகாசி.

சுறா பார்க்கும் துர்பாக்கியமான சூழல் என் வாழ்க்கையில் அமைந்துவிடாது என்று எல்லாம் வல்ல கோடம்பாக்கீஸ்வரரை வேண்டிக் கொள்கிறேன்.

அது சரி. விஜய் மாற வேண்டியது பற்றி என் கருத்து…?

தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்துன்னு பாட நான் என்ன விஜயா? அட போங்கப்பு… நாட்டுல மாத்த வேண்டியது எவ்வளவோ இருக்கு. அதை விட்டுப்புட்டு…

நன்றி

அன்பு நண்பர்களுக்கு,

முதலில் மனமார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

முத்துராமனுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பண உதவி கேட்டு சென்ற வாரம் எழுதியிருந்தேன். நண்பர்கள் பலரும் தங்கள் வலைப் பக்கங்களில் உதவி கேட்டு எழுதியிருந்தீர்கள். பலர் அதனை மெயிலில் அனுப்பியும் உதவி கேட்டீர்கள். உலகின் பல மூலைகளிலிருந்து உதவிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

தெரிந்த நண்பர்கள், நண்பர்களுடைய நண்பர்கள், முகமறியா நண்பர்கள் என்று பலரும் உதவி செய்து கொண்டிருக்கிறீர்கள். கிழக்கு அலுவலகத்துக்கு வந்த காசோலை, வரைவோலைகளை, பணத்தை, தமிழ் புத்தாண்டு அன்று முத்துராமனிடம் ஒப்படைத்தேன். முத்துராமனுடைய எஸ்.பி.ஐ. கணக்கிலும் நேரடியாகப் பலரும் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். பணம் கிடைத்த விவரத்தை தெரிந்த நண்பர்களுக்கு போனிலோ, மெயிலிலோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

நேரடியாக Cash Deposit செய்யும் நண்பர்கள் குறித்த விவரங்கள் மட்டும் தெரியவில்லை. அவர்களுக்கு இதன் மூலம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்துராமனுக்கு தாங்கள் அனுப்பிய உதவி, கிடைத்த விவரம் தெரிந்துகொள்ள விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். (mugil.siva@gmail.com99400 84450)

அறுவை சிகிச்சைக்கான தேதி விரைவில் தெரிந்துவிடும். தொடரும் உங்கள் உதவிகளால், பிரார்த்தனைகளால் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடைபெறும் என்று நம்புகிறேன்.

முகப்பு பக்கத்தில் முத்துராமன் குறித்த விவரங்களை வெளியிட்டு, பெரும் உதவி செய்த தமிழ் மணத்துக்கு நன்றிகள். Tamilcinema.comல் செய்தியை வெளியிட்டு உதவி செய்த அந்தணன் அவர்களுக்கும் நன்றி.

புத்தம் புது பூமி வேண்டும்!

ஓர் இயக்குநர். முதல் படம் ஹிட். அடுத்த படம் ரிலீஸ் ஆகப்போவதற்கு முந்தைய நாள். அந்த இயக்குநரின் மனநிலை எப்படி இருக்கும்? வரப்போகும் வெள்ளிக்கிழமையை (ஏப்ரல் 16, 2010) எதிர்நோக்கி நான் அதே மனநிலையோடுதான் காத்திருக்கிறேன்.

அகம் புறம் அந்தப்புரம் முதல் அத்தியாயம் – குமுதம் ரிப்போர்ட்டரில் 2007 ஜூலை 22 இதழில் வெளியானது. அது எனது முதல் வரலாற்றுத் தொடர். அப்போது பரவசம் அதிகம் இருந்தது. சென்னை சாலைகளில் என் பெயர் ஏந்திய போஸ்டர்களைப் பார்க்கும்போது சந்தோஷம். 50 அத்தியாயங்கள் எழுதிவிடலாம் என்று ஆரம்பித்து, நூறாக வளர்ந்து, 185 அத்தியாயங்களாக நிறைந்த தொடர் அது. அந்த இரு வருடங்களில் என் வாழ்க்கையில் தினசரி வேலைகளில் அகம் புறம் அந்தப்புரத்துக்காக உழைப்பதுவும் சேர்ந்துகொண்டது. அது புத்தகமாக வெளிவந்தபின்பு, அதன் கனம், விலை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கு நன்றி.

க்டந்த ஏழெட்டு மாதங்களாகவே அடுத்த தொடருக்கான விஷய சேகரிப்புகளில் ஈடுபட்டிருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக அதற்கான முழு தயாரிப்பில் இறங்கியிருந்தேன். இதோ நாளை வெளிவரப்போகிறது – புத்தம் புது பூமி வேண்டும்.

இந்த முறை  தமிழக அரசியல் இதழில் எழுதுகிறேன். அண்டார்டிகா குறித்த புத்தகம் எழுதும்போதே சாகசப் பயணிகள் குறித்து இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமானது. அடுத்து உலகைப் பாதி சுற்றி வந்த மெகல்லன் குறித்து ஒரு புத்தகம் எழுதினேன். உலக வரைபடத்தை முழுமையாக்கிய ஒவ்வொரு பயணியின் பயணத்தை வைத்தும் தொடர் எழுத வேண்டும் என்று ஆசை. தமிழக அரசியலில் அதற்கான இடம் கிடைத்திருக்கிறது.

ஆரம்பித்துவிட்டேன்.

புத்தம் புது பூமி வேண்டும் என்று தொடருக்காக அழகான தலைப்பை வைத்த பாராவுக்கு நன்றி. அகம் புறம் அந்தப்புரத்தைவிட, சவாலான களம் இது. கிமுவில் தொடங்கி சென்ற நூற்றாண்டு வரை சரித்திரத்தை மாற்றியமைத்த சாகசப் பயணங்களை மீண்டும் நான் செய்து பார்க்க வேண்டும். என்னோடு நீங்களும்.

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

பின் குறிப்பு : சினிமாவின் ரிசல்ட் – முதல் காட்சியிலேயே தெரிந்துவிடும். பத்திரிகைத் தொடருக்கு அப்படியல்ல.

உதவி தேவை

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார்  நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com 9841489907
பாலபாரதி – kuilbala@gmail.com 99402 03132
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code :  5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.

ramkij@gmail.com