அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்!

‘போலோ மேட்சுக்காக ஜெய்ப்பூர் மகாராஜா கல்கத்தா வர்றார். உட்லேண்ட்ஸ் ஹோட்டல்ல இடமில்லை. நம்ம மாளிகைல, உங்க அறையிலதான் தங்கப்போறார். அதனால நீங்க அறையைக் காலி பண்ணிக்கொடுத்துடுங்க. சரியா?’ – கூச்பிகார் மகாராணி இந்திரா சொல்லிவிட்டுப் போனாள். பன்னிரண்டு வயது இளவரசி காயத்ரி தேவிக்கு தன் அறையை விட்டுக் கொடுப்பதில் பூரண சம்மதமில்லை. அம்மா சொல்லிவிட்டாள். வேறு வழியில்லை. போலோ விளையாட்டில் ஜெய் கில்லாடி என்பதை பத்திரிகைச் செய்திகளில் படித்திருந்தாள். பேரழகர் என்றும் கேள்விப்பட்டிருந்தாள். ஆகவே அவரது வருகையை எதிர்நோக்கினாள் (1931).

ஜெய் வந்தார். கூச் பிகார் இளவரசர்களோடு கூடிக் குலாவினார். இளவரசிகளையும் நேர்பார்வையில் நோட்டமிட்டுக் கொண்டார். ‘ஆளு அழகாத்தான் இருக்காருடி’ – இளவரசிகள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். ‘அவருக்குக் கல்யாணமாயிருச்சு தெரியுமா?’

ஜெய்யுடன் காயத்ரி
ஜெய் உடன் காயத்ரி

‘தெரியும்டி. மிக்கின்னு ஒரு பொண்ணும், பபிள்ஸ்னு ஒரு பையனும்கூட இருக்காங்க. ஆனா இவரைப் பார்த்தா அப்படியா தெரியுது?’ பருவத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த காயத்ரிக்கு ஜெய்யின் மீது ஒருவித ஈர்ப்பு வந்திருந்தது. மேட்ச் எல்லாம் முடிந்து ஜெய் கிளம்பிச் சென்றிருந்தார். ஆனாலும் அடிக்கடி வந்துகொண்டிருந்தார், காயத்ரியின் நினைவில்.

அடுத்த ஆண்டும் கல்கத்தாவுக்கு வந்தார், போலாவுக்காக. அப்போதுதான் அவருக்கு இரண்டாம் கல்யாணம் நடந்திருந்தது. ‘அவரோட புது மனைவி போட்டோவை அனுப்பச் சொல்லேன்’ – தனது அம்மாவிடம் நச்சரித்தாள் காயத்ரி. இந்திராவும் ஜெய்யிடம் கேட்டாள். சரியென்று சொல்லிய அவர், அனுப்பவில்லை.

இந்திரா, குடும்பத்தோடு அவ்வப்போது பரோடாவுக்குச் செல்வாள். தாய் வீட்டுக்கு. அந்தமுறை, ‘போகும் வழியில் ஜெய்ப்பூருக்குச் செல்லலாம்’ என்றாள். காயத்ரியின் மனத்துக்குள் இனம்புரியாத சந்தோஷம். ஜெய்ப்பூரின் அரண்மனை அழகை ரசித்தாள், அவளையறியாமலேயே ஜெய்யையும். அந்தப்புரம் சென்று அவரது மனைவிகளைச் சந்தித்தாள். குழந்தைகளோடு விளையாடினாள்.

‘நான் காயத்ரியை வெளியில் அழைத்துக் கொண்டு போகிறேன்’ – ஜெய், திடீரென இப்படிக் கேட்டதும் அவளுக்குள் பரவச ஊற்று. மகாராஜா கேட்டு மறுப்பது நாகரிகமில்லையே. இந்திரா சம்மதித்தாள். ஜெய்யோடு காரில் சென்ற நிமிடங்களில் பறப்பதுபோல உணர்ந்தாள் காயத்ரி.

‘நீ கார் ஓட்டுகிறாயா?’

ஓட்டினாள். ஜெய் உதவி செய்தார். வெட்கமும் புன்னகையும் ஸ்பரிசங்களும் கலந்த நொடிகள். அரண்மனைக்குத் திரும்பினார்கள். ‘உங்க பொண்ணு நல்லாத்தான் ஓட்டுறா. ஆனா வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்க சொல்றதைத்தான் கேக்குறதில்ல’ – ஜெய், இந்திராவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார். இந்திரா, காயத்ரியைப் பார்த்தாள். ‘நான் அவர் சொல்றபடிதான் ஓட்டினேன். ஆனா அவர்தான் ஒரு நிலையில இல்லை.’ காயத்ரி சிரித்தாள்.

ஜெய்ப்பூரிலிருந்து கிளம்பும்போது எதையோ விட்டுச் செல்வதுபோல உணர்ந்தாள் காயத்ரி. இரவிலும் பகலிலும் அவளது கனவுகளில் ஜெய், போலோ விளையாடிக் கொண்டிருந்தார். ஜெய்யைப் பற்றி பத்திரிகைகளில் எந்தச் செய்தி வந்தாலும் அது அவளைக் குதூகலமடைய வைத்தது. அவரது பெயர்மீது விரல்வைத்து ஆசையாக வருடிக் கொடுத்தாள். ஜெய் கழற்றிப்போட்ட ஒரு கையுறையிலிருந்து இரண்டு நூல்களை எடுத்து வைத்திருந்தாள். நூல்களைத் தனது கை பிரெஸ்லெட்டோடு சுற்றிக்கொண்டாள். அழகாகத் தெரிந்தது. ஜெய்யின் முதலிரண்டு மனைவிகள், குழந்தைகள் – எதுவுமே காயத்ரிக்கு உறுத்தவில்லை. ‘நான் ஜெய்யைக் காதலிக்கிறேன்’ – தனிமையில் சொல்லிப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அப்போது அவளுக்கு வயது பதினான்கு.

***

‘காயத்ரி காங்கிரஸில் இணைந்துவிட்டார்’ என்ற கிசுகிசு பலகாலமாகவே வலம் வந்துகொண்டிருந்தது. அழைப்பு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் காயத்ரி காங்கிரஸில் இணையவில்லை. அதற்கு எதிர்க்கட்சியாக, ராஜாஜியின் தலைமையில் உருவான சுதந்தரா கட்சியில் இணைந்தார் (1960). காரணம்? வலுவான எதிர்க்கட்சி ஏதுமின்றி காங்கிரஸ் அதுவரை செலுத்தி வந்த அதிகாரம் பல மட்டங்களில் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. ராஜஸ்தான் காங்கிரஸார், முன்னாள் ராஜ ஆட்சியாளர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் எடுத்திருந்த சில நடவடிக்கைகள் காயத்ரியைக் களமிறங்க வைத்தன.

‘அரசியலில் இறங்கி பதவிக்கு வர நினைக்கிற ராஜகுடும்பத்தினருக்கு மன்னர் மானியத்தொகை கிடையாது’ என்று சட்டசபையில் திருவாய் மலர்ந்தார் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் மோகன்லால் சுகாடியா. ‘அப்படியென்றால் காங்கிரஸில் இருக்கும் மன்னர்களுக்கு?’ என்று எதிர்க்கேள்வி எழ, சுகாடியா வாய்பொத்திக் கொண்டார். தங்களுக்குக் கிடைக்கும் மானியத் தொகைக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்றே பல மகாராஜாக்கள், இளவரசர்கள் காங்கிரஸில் அடைக்கலம் புகுந்திருந்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளில் இருந்த ராஜகுடும்பத்தினருடைய ‘மக்கள் செல்வாக்கை’ காலிபண்ணும் வேலையை காங்கிரஸ் தொடர்ந்தது.

1962 தேர்தல். ஜெய்ப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக காயத்ரியை அறிவித்தார் ராஜாஜி. ‘நான் உங்கள் மகாராஜாவின் மனைவி என்பதால் என்னை ஆதரிக்கிறீர்களா?’ – காயத்ரி மக்களிடம் நேரடியாகவே கேட்டார். பாதிக்கூட்டம் ‘ஆம்’ என்றது. ‘இல்லை, நீங்கள் எங்களுக்கு ஏற்கெனவே நிறைய செய்திருக்கிறீர்கள். இனியும் செய்வீர்கள்’ என்றது மீதிக்கூட்டம். பிரசாரத்தின் இறுதிநாள். ஜெய்ப்பூரில் காங்கிரஸ், ஜனசங்கம், சுதந்தரா – மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டம் போட்டன. ஜெய் பேச்சைக் கேட்க திரண்ட சுமார் இரண்டு லட்சம் ஜனங்களைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு மூச்சடைத்தது.

தேர்தலில் ஜெய்ப்பூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 1,92,909. அதில் காயத்ரி வாங்கிய ஓட்டுகள் 1,57,692. கின்னஸ் புத்தகம் புதிய சாதனையைப் பதிவு செய்துகொண்டது.

*****

மன்னர் மானிய ஒழிப்புக்குப் பின்னும் இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகளிலிருந்த ராஜ பரம்பரையினரை விட்டுவைக்கவில்லை. வருமான வரி சோதனை முதல் பல விஷயங்களில் துன்பத்துக்கு ஆளானார் காயத்ரி. 1975ல் அவசரநிலை பிரகடனம். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்குச் சென்ற காயத்ரிக்கு அதிர்ச்சி. அவையில் காங்கிரஸார் மட்டும் இருந்தார்கள். அன்று மதியமே காயத்ரி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உள்ளே இன்னொரு மகாராணி ‘ஹாய்’ சொன்னார், குவாலியரின் விஜயராஜே சிந்தியா.

கொசுக்கடி, எலித்தொல்லை, இருள் அறை இன்னல்கள். ஆறுமாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த காயத்ரி, தீவிர அரசியலிலிருந்து விலகிக்கொண்டார். இன்றுவரை ஜெய்ப்பூரின் ராஜமாதாவாக மக்கள் அபிமானத்தோடு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

*****

மேலே சொன்ன கடைசி வரி, இந்த ஏப்ரல் மாதத்தில் நான் எழுதியது. (குமுதம் ரிப்போர்ட்டர், அகம் புறம் அந்தப்புரம் தொடருக்காக.) அதை அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே மாற்ற வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்தக்காலத்து ஐஸ்வர்யாராய். மக்களோடு நெருங்கிப் பழகிய மகாராணி. இந்திரா காந்தியின் அரசியல் எதிரி. பெரு வாழ்க்கை வாழ்ந்த நல்ல மனுஷி. அடுத்த சில வருடங்களுக்குள் ஜெய்ப்பூருக்குச் சென்று காயத்ரி தேவியைச் சந்திக்க வேண்டும் ஆசை வைத்திருந்தேன். நேற்று மறைந்துவிட்டார்.

A Princess Remembers – The Memoirs of the Maharani of Jaipur
by Gayatri Devi

மகாராணி காயத்ரி தேவியின் நினைவுகளைச் சொல்லும் புத்தகம். அது மட்டும் இப்போது என்னிடம், பொக்கிஷமாக.

டைம் அட்டையில் ஒரு கஞ்ச மகாபிரபு!

‘எவ்வளவுதான் தரமுடியும்?’

‘முப்பது ரூபாய்’

‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான் என்ற ஏழாம் அஸஃப் ஜா (1886 – 1967).

நிஜாமாகப் பதவிக்கு வந்ததும் (1911) அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம்  மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட சிக்கன நடவடிக்கை அது. சில துணைவிகளை விற்று, பணத்துக்குப் பதிலாக மாங்காய்களாகப் பெற்றுக் கொண்டார் என்றுகூட குறிப்புகள் இருக்கின்றன.

அநாவசியச் செலவுகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்ற சிந்தனையே ஒஸ்மானின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மாறுபட்ட பரிமாணங்களே பல விஷயங்களில் கஞ்சத்தனமாக வெளிப்பட்டன.

‘நிஜாம், உங்கள் சால்வை மிகவும் பழசாகிவிட்டது. புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே?’ என்றார் அமைச்சர் ஒருவர். அதற்கு ஒஸ்மான் அளித்த பதில், ‘எடுக்கலாம். ஆனால் நான் அதுக்கு பதினெட்டு ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறேன். புதிய சால்வை இருபது ரூபாய் ஆகிறதே.’

ஒருமுறை வைஸ்ராய் லின்லித்கோ, ஒஸ்மானைச் சந்தித்தபோது அவரது வாக்கிங் ஸ்டிக்கைக் கவனித்தார். இரண்டாக உடைந்த அது, ஒட்டப்பட்டு நூலால் சுற்றப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டே எந்தவித கூச்சமும் இன்றி வெளியிடங்களுக்குச் சென்று கொண்டிருந்தார் ஒஸ்மான். தன்னுடன் பேச வரும் ஒரு சமஸ்தானத்தின் நிஜாம், இப்படி ஒடிந்த ஸ்டிக்குடன் வருகிறாரே என்று வைஸ்ராய்க்குத்தான் கூச்சமாகப் போய்விட்டது. அடுத்தமுறை ஒஸ்மானைச் சந்தித்தபோது ஒரு புதிய உயர்தரமான வாக்கிங் ஸ்டிக்கைப் பரிசளித்தார். வாய் நிறையப் புன்னகை வழிய, அதனை வாங்கி வைத்துக் கொண்டார் ஒஸ்மான்.

அப்போதைய இந்திய அரசின் முதன்மை ஆலோசகராக வி.பி. மேனன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை ஒஸ்மானைச் சந்திக்கச் சென்றார். பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். ஒஸ்மான் தன் சார்மினார் சிகரெட் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடம் நீட்டினார். அதுதான் அப்போதைய மலிவான சிகரெட். பாக்கெட் பன்னிரண்டு பைசாதான். பத்து சிகரெட் இருக்கும்.

மேனனுடைய பிராண்ட் வேறு. போயும் போயும் சார்மினாரைப் புகைத்து வாய் நாற்றத்துடனா அலைய முடியும் என்று யோசித்த அவர், ‘வேண்டாம்’ என்று மறுத்தார். ஒஸ்மான் வற்புறுத்தவெல்லாம் இல்லை. தம் வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார். மேனனுக்கும் வாய் நமநமத்தது. தன் சட்டைப் பையில் இருந்து விலையுயர்ந்த சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்து உடைத்தார்.

நாகரிகமாக ஒஸ்மானிடம் நீட்டினார். வாயில்தான் புகைந்துகொண்டிருக்கிறதே என்று மறுத்திருக்கலாம். ஆனால் ஒஸ்மான் அதிலிருந்து நான்கைந்தை எடுத்துத் தன் சார்மினார் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். அறையிலிருந்து புகை கலைந்து முடிந்த சில நொடிகளில் அவர்களது சந்திப்பும் முடிந்தது.

சில நாள்களிலேயே இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். பேச்சின் இடையே, ஒஸ்மான் தன் சார்மினார் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடமிருந்து எடுத்த புதிய பிராண்ட் சிகரெட்டுகள் எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருந்தன.

அதிகாரிகளோ விருந்தினர்களோ ஒஸ்மானை சந்திக்கச் சென்றால் அவர் உபசரிக்கும் விதமே தனியானது. வருபவர்களை உட்காரச் சொல்லுவார். அவர்கள் தனக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பார். எது கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்வார். பேசத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள் கழித்து அரண்மனைப் பணியாள் கையில் ஒரு தட்டுடன் வருவார். அதில் முக்கால்வாசி நிரம்பிய நிலையில் இரண்டு கோப்பைகளில் டீ, இரண்டு பிஸ்கட்டுகள் மட்டுமே இருக்கும். ஆளுக்கு ஒரு கோப்பை டீ, ஒரே ஒரு பிஸ்கட். அவ்வளவுதான். பெட்டி பெட்டியாக தங்க பிஸ்கட் வைத்திருந்தால் என்ன, சாப்பிடக்கூடிய பிஸ்கெட்டை வீணாக்கக்கூடாது என்பது ஒஸ்மானின் உயரிய எண்ணம்.

ரத்தத்தோடு கலந்துவிட்ட குணம் அது. வாழ்நாளில் எந்த நிலையிலும் ஒஸ்மான் தனது குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. அப்படிப்பட்ட நிஜாம் ஒஸ்மான் அலிகானைப் பற்றி, டைம் வாரப் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. அட்டையில் ஒஸ்மானின் ஓவியம் கம்பீரமாகக் காட்சியளித்தது. (1937, பிப்ரவரி 22)

கட்டுரை அவரது கஞ்சத்தனத்தைப் பற்றியல்ல.‘உலகின் மாபெரும் பணக்காரர்’ என்பதற்காக. HIS EXALTED HIGHNESS THE NIZAM OF HYDERABAD என்று தலைப்பிட்டிருந்தது.

இன்றைய தேதியில் முகேஷ் அம்பானிக்கு அந்த பாக்கியம் கிடைத்ததோ இல்லையோ, அன்றைய தேதியில் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு அந்தப் பேறு கிடைத்தது. டைம் பத்திரிகை மட்டுமல்ல, உலகில் பல பெரிய பத்திரிகைகள் அப்போது அந்தச் செய்தியை வெளியிட்டு நிஜாமின் சொத்துக் கணக்கை விதவிதமாகக் கூறின.

நிஜாமின் தினப்படி வருமானம் சுமார் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள். அவர் கொத்துக் கொத்தாகச் சேர்த்து வைத்துள்ள நகைகளின் மொத்த மதிப்பு குத்துமதிப்பாக பதினைந்து கோடி அமெரிக்க டாலர்கள். அவர் உப்புப் போட்டு கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்துள்ள தங்கக் கட்டிகளின் மதிப்பு இருபத்தைந்து கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும். அதையும் சேர்த்து நிஜாமின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு தோராயமோ தோராயமாக நூற்று நாற்பது கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என்று வியந்து எழுதியிருந்தது டைம் பத்திரிகை. இந்தக் கணக்கில் ஒஸ்மான் சேர்த்து வைத்திருக்கும் வைர, மரகதக் கற்களின் மதிப்பு சேர்க்கப்பட்டவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது.

சரி, முதலிடம் ஒஸ்மானுக்கு. இரண்டாவது இடம்?

வெற்றிகரமாக கார்களைத் தயாரித்து வந்த ஹென்றி ஃபோர்டுக்கு. ஆனால் என்ன, அவரது மொத்த சொத்து மதிப்பு, ஒஸ்மான் சேர்த்து வைத்திருந்த நகைகளின் மதிப்பில் பாதிகூட இல்லை என்பதே உண்மை.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் தொடரில் இருந்து ஒரு சிறு பகுதி. இன்னும் சில மாதங்களில் அகம் புறம் அந்தப்புரம் குண்டு புத்தகமாக வெளிவர இருக்கிறது.)

எம்.ஜி.ஆரை அடக்கிய தேவர்!

‘அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ?’

‘எம்.ஜி.ஆர்.’

‘நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா?’

‘ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்?’ – கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார். சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. ‘அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க  எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை  நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்.’
தேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத அந்த சக தயாரிப்பாளர், ‘வரேங்க’ என்றபடி காரில் ஏறினார். எம்.ஜி.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் நெருப்பாகப் பரவியிருந்தன. எல்லோருமே குறை கூறினர். தயாரிப்பாளர்களோடு ஒத்துழைப்பது குறைவு. எம்.ஜி.ஆர். தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரால் படங்கள் வெளிவருவது தாமதமாகிறது.

அதற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். ஒழுங்காக பக்தியோடு தொழில் செய்தவர்,  நாத்திகவாதிகளுடன் சேர்ந்து நாசமாகி விட்டார் என்பது போன்ற செய்திகள் எம்.ஜி.ஆரின் இமேஜைப் பாதித்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ‘அல்லா மீது ஆணையாக’ என்ற  வசனத்தைப் பேச மறுத்தார். அதை ‘அம்மா மீது ஆணையாக’ என்று மாற்றித் தரும்படி வசனகர்த்தா  ஏ.எல். நாராயணனை வற்யுறுத்தினார். முதலாளி டி.ஆர்.எஸ், ‘டயலாக் என்ன இருக்கோ, அதையே  பேசு ராமச்சந்திரா’ என்று உத்தரவே போட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். ஷூட்டிங்குக்கு தொடர்ந்து போகவில்லை. அவர் இல்லாமலேயே ஒரு சண்டைக் காட்சியையும் பாட்டு சீனையும் எடுத்து  டி.ஆர்.எஸ். படத்தை முடித்தார்.

எம்.ஜி.ஆர். மீண்டும் சேலம் சென்றார். ‘ராமச்சந்திரா படத்தை ஒரு தடவை பார்த்துட்டுப் போ’  என்று வழியனுப்பினார் டி.ஆர்.எஸ். கரடிமுத்து என்கிற நகைச்சுவை நடிகர், எம்.ஜி.ஆருக்கு  பதிலாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிசயித்தபடி வெளியே வந்தார். அவருக்கே அசலையும் ÷ பாலியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

குற்றச்சாட்டுகள் எதையும் தேவர் பொருட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆரை  நம்பினார். 1956 –  எம்.ஜி.ஆரின் ஆண்டாக இருந்தது. அதனாலேயே தாய்க்குப் பின் தாரம் படத்தையும் மிகுந்த  அக்கறையோடு தயாரித்துக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு  ஷெட்யூல் மட்டுமே பாக்கி. தேவர் உற்சாக நடை போட்டார். மருதமலை முருகன் அருளால் படம்  நல்லபடியாகவே தயாராகி விட்டது. காளைச் சண்டையை காமிராவில் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. எம்.ஜி.ஆரிடம் பேசினார் தேவர்.

‘அண்ணே! உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில செட் தயார். வந்து பார்க்கறீங்களா?  பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பி ச்சாப் பரவாயில்லயா?’

‘காளைக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்தாச்சா?’ – எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா?’

‘பயமா, எனக்கா?’

‘இல்லண்ணே ஒரு பேச்சுக்கு…’
தேவருக்குச் சட்டென்று மனத்துக்குள் சிநேகித நூல் அறுவது போலிருந்தது. எம்.ஜி.ஆரின் உரையாடலும் நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாகத் தெரிகிறதே. ஒழுங்காக முடித்துக்கொடுக்க மாட்டாரா?  எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய  வார்த்தைகள்தானா? என் எம்.ஜி.ஆர். இல்லையா இவர்?
தேவர், எம்.ஜி.ஆரை ஏறிட்டு நோக்கினார். மகிழ்ச்சி போனது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ  என்கிற பிடிவாதமும் மிரட்டலும் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தன.

‘அண்ணே…’

‘என் கால்ஷீட்டை இப்பப் பெரியவருதான் பார்க்குறாரு. நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க’ –  எம்.ஜி.ஆர். சொன்னார்.

‘தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே. நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும்.’ – தேவர்  சூடானார்.

‘புரிஞ்சுக்குங்க அண்ணே. எல்லா முதலாளிகளும் அண்ணன்கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு  சொன்னா ஓகே. ஒரே குடும்பமா வாழறோம். பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல.’

தேவர் அமைதியாக வெளியேறி விட்டார்.

*******

தேவர் பிலிம்ஸின் முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரமே தேவருக்குச் சுளையாக முப்பதாயிரம்  ரூபாயை லாபப் பங்காக அளித்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால் தேவர் பிறந்த  ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது பேனரில் தாய்க்குப் பின்  தாரம் அள்ளிய வசூலை வேறு எந்தப் படமும் பெறவில்லை.
எம்.ஜி.ஆர். தேவரைச் சந்தித்தார். தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார். ‘அடுத்த ரிலீஸ் எப்ப  அண்ணே?’ என்றார் ஜாலியாக.

‘பார்க்கலாம்’ தேவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

‘மனசுல எதையும் வெச்சுக்காதீங்கண்ணே. நீங்களே என்னைப் புரிஞ்சுக்கலண்ணா வேறு யார்  கிட்டப் போய் நிக்குறது?’

எம்.ஜி.ஆர். இறங்கி வந்தார். தேவர் பிடி கொடுக்கவில்லை. தாய்க்குப் பின் தாரம் தெலுங்கும் பேசியது. எம்.ஜி.ஆர்.  வீறுகொண்டு எழுந்தார். ‘யாரைக் கேட்டுப் படத்தை டப் செய்தீர்கள். எனக்கு எப்படி இன்னொரு வன் குரல் கொடுக்கலாம்?’ விளக்கங்கள் கேட்டு வக்கீல் நோட்டீஸ் பறந்தது தேவர் பிலிம்ஸுக்கு.

அலறியடித்துக் கொண்டு வாகினியில் நின்றார் தேவர். அதன் அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி சிநேகமாகச் சிரித்தார். தேவர் வசமிருந்த வழக்கறிஞரின் ஓலையை வாங்கி வாசித்துப் பார்த்தார். நாகிரெட்டி ஓடி வந்தார். அவரும் படித்துப் பார்த்து விட்டு கலகலப்பானார்.

சக்ரபாணி, எம்.ஜி.ஆருக்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார்.
‘காளையை நீங்கள் நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது டூப்தான் மோதி வெற்றி பெற்றார்.  ஆனால் அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில் அக்கறையோடு நீங்களே  மாட்டை வென்றிருந்தால் இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான நஷ்டத்தை  உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்.’

எம்.ஜி.ஆர். அடங்கி விட்டார்.

********

சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, வியந்த, படித்து மகிழ்ந்த (எடிட் செய்த) புத்தகம் இது. சாண்டோ  சின்னப்பா தேவர். சினிமாவையும் சிவமைந்தனையும் வெறித்தனமாக நேசித்த ஒரு மாறுபட்ட  மனிதரின் வாழ்க்கை வரலாறு.

சினிமாவுக்குள் தேவர் எப்படி நுழைந்தார்? ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் நட்பு  எப்படி இருந்தது? ஏன் முறிந்தது? மீண்டும் எப்படித் துளிர்த்தது? எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்  எடுப்பதற்குள்ளாகவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடிந்து போயிருக்கிறார்கள். தேவரால்  மட்டும் எப்படி தொடர்ந்து இத்தனை படங்களைக் கொடுக்க முடிந்தது? ஒரே இனத்தைச் சார்ந்தவர்  என்றாலும் தேவர் ஏன் சிவாஜியை வைத்து படம் எடுக்கவில்லை? எம்.ஜி.ஆரையும் முருகனையும்  மட்டுமே நம்பி படம் எடுத்த தேவர், திடீரென மிருகங்களை நம்ப ஆரம்பித்தது ஏன்? மொழியே  தெரியாமல், பாலிவுட்டிலும் நுழைந்து தேவர் கலக்கியது எப்படி? இவை மட்டுமல்ல, இன்னும்  எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

பூஜை போட்டு மூன்றே அமாவாசையில் படம் முடியவேண்டும். அடுத்த பௌர்ணமியில் படம்  ரிலீஸ் ஆக வேண்டும். இதுதான் தேவரின் கணக்கு. யாருக்காகவும் எதற்காகவும் தொழிலில்  சுணக்கம் வருவதை தேவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை, அது எம்.ஜி.ஆராகவே இருந்தாலு ம்கூட. கோலிவுட்டின் இடிஅமீன் இதுவே அவருக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயர்.

தேவர் பற்றியும் புத்தகம் பற்றியும் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நீ ங்கள் புத்தகத்தை வாசித்து அனுபவிக்கும் சுகத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

தேவரது வாழ்க்கையிலேயே ஏகப்பட்ட சுவாரசியங்கள். புத்தகத்தை எழுதியிருக்கும் நண்பர் பா.  தீனதயாளனின் நடை அதை அதிசுவாரசியமாக்கியிருக்கிறது. புத்தகத்தைப் படிக்கும்போது நமக்கு தேவரது வசவுகளையும் பாசத்தையும் அனுபவித்துக் கொண்டே தேவர் பிலிம்ஸில் வேலை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. தேவரது வாழ்க்கையோடு அரைநூற்றாண்டு கால கோடம்பாக்கத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துக் கொடுத்திருக்கிறார் தீனத யாளன்.

கிழக்கில் வெளியாகியிருக்கும் சினிமா கலைஞர்கள் குறித்த புத்தகங்களிலேயே மிகச் சிறந்ததாக  நான் குறிப்பிடுவது இந்தப் புத்தகத்தைத்தான்.

புத்தகத்தை வாங்க.

தீனதயாளனின் பிற புத்தகங்கள்.

புத்தகம் குறித்த பாராவின் விமர்சனம்.

தேவர் குறித்த முரளிகண்ணனின் சமீபத்திய பதிவு.

ஜெமினி vs சிவாஜி : கணேசன்கள் சண்டைக்கோழிகளா?

சிவாஜி கணேசன் வெற்றியும் புகழும் அடைந்த காலத்தில் நடிப்பில் அவருக்கு இணையாகவும் அவரைக் காட்டிலும் மகத்தான புகழும் வெற்றியும் பெற்று பிரபலமாக திகழ்ந்தவர் ஜெமினி கணேசன் மட்டுமே.

சிவாஜி கணேசன் மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக நடிப்புக்காக புகழ் பெற்ற காலத்தில் நடிக மன்னன் என்று ஜெமினியும் கீர்த்தி பெற்றது அபாரமானது. கணவனே கண் கண்ட தெய்வம், மிஸ்ஸியம்மா போன்ற படங்களின் இந்தி ரீமேக்கிலும் ஜெமினியைப் போல் நடிக்க மும்பையில் ஆள் இல்லாததால்தான் ஜெமினியே நடித்து அகில இந்தியப் புகழ் பெற்றார்.

நிஜத்தில் கால்ஷீட் இல்லாத காரணங்களினாலோ தயாரிப்பாளரின் பணத்தட்டுப்பாடு காரணமாகவோ சிவாஜி கணேசன் நடிக்க இயலாத வேடங்களில் ஜெமினி கணேசனைத் தான் நடிக்க வைத்தார்கள். அப்படி ஜெமினி நடித்தப் படங்கள் அத்தனையும் மிகச் சிறந்த ‘க’ வரிசை வெற்றிப் படங்களாக அமைந்தன. கணவனே கண் கண்ட தெய்வம், கற்பகம், காவியத் தலைவி என்று வெவ்வேறு ஆண்டுகளில் ஒரு வெள்ளிவிழா கால கட்டம் முழுவதும் ஜெமினி கணேசன் சிவாஜி கணேசனின் நடிப்புப் போட்டியாளராக இருந்தார்.

நடிப்பில் சிவாஜிக்கு நேர் எதிர் ஜெமினி. எப்போதும் ஷாட்டுக்கு ஷாட் அரட்டை, லூட்டி செட்டை விட்டு வெளியேறுதல் எல்லாம் உண்டு.

‘சந்தர்ப்ப வசத்தாலே நான் நடிகன் ஆனேன். நீங்க எதிர்பார்க்கிற மாதிரி நடிகன் நான் இல்லை’ என்று சிவாஜியை மனத்தில் வைத்து ஸ்கூல் மாஸ்டர் ஷுட்டிங்கில் பந்துலுவிடம் கூறினார் ஜெமினி.

மிக மென்மையான நடிப்புக்கு ஜெமினியை விட்டால் ஆளில்லை. ஆனால் ஜெமினி கணேசனுக்கு நடிப்பு ஹாபியாகவே இருந்தது. அதனால் அவர் தன் படங்களில் ஏ.வி.எம். ராஜன் போன்ற அடுத்த வரிசை கதாநாயகர்களுக்குத் தன்னை விடவும் வலுவுள்ள, நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் வாய்ப்பு கிடைத்தபோதுகூட அதை வரவேற்றார்.

அவ்வளவு ஏன், பட டைட்டில், போஸ்டர், சம்பளம், அதிக காட்சிகள், டூயட் பாடல்கள் என்று எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்து நடித்தவர் ஜெமினி கணேசன் மட்டுமே! இது தமிழ் சினிமாவில் இன்றுவரை எந்த நடிகரிடமும் காணப்படாத அரிய குணம்.

சிவாஜி கணேசனும் ஜெமினி கணேசனும் சேர்ந்து பதிமூன்று படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள். அவை பெண்ணின் பெருமை, பதிபக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாவமன்னிப்பு, பாசமலர், கப்பலோட்டிய தமிழன், பார்த்தால் பசி தீரும், பந்தபாசம், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், உனக்காக நான், நாம் பிறந்த மண்.

இவற்றில் பெரும்பாலானவை தமிழ் சினிமா சரித்திரத்தில் தலையாய இடம் பிடித்தவை. சமூகம், சரித்திரம், புராணம் என்று ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. அந்தப் படங்களில் சிவாஜியை விட முக்கியத்துவம் குறைந்த கதாபாத்திரமாக இருந்தால்கூட அவருக்குக் கொஞ்சம் கூட சளைக்காமல் நடித்திருந்தார் ஜெமினி கணேசன். ஆனால் அதை சிவாஜி ரசிகர்கள் ஏற்கவில்லை.

ஆதலால் ஜெமினியின் ரசிகர்கள் அவர், சிவாஜி உடன் படங்களில் சேர்ந்து நடிப்பதையே விரும்பவில்லை. அதனால் 1962-க்குப் பிறகு நீண்ட இடைவெளி ஏற்பட்டது.

உனக்காக நான் படத்தில் சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்து படத்தை கெடுத்து விட்டதாக ஜெமினி ரசிகர்கள் கருதினார்கள். மேலும் ஆரம்பத்திலிருந்தே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்த ஜெமினி, சிவாஜியுடன் இணைந்து நடித்ததை ஜெமினி ரசிகர்கள் அறவே வெறுத்து வந்தார்கள்.

ஆனால் ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனோடு நெருஙகிய நட்பு கொண்டு இருந்தார். சிவாஜி, ஜெமினி கணேசன் – சாவித்ரி ஒன்றாக குடும்பம் நடத்தியபோது அவர்கள் வீட்டுக்குச் சாப்பிட செல்வார். சாவித்ரியிடம் தனக்கு வேண்டியதை செய்து தரச் சொல்லி சாப்பிடுவார். சாவித்ரியும் சிவாஜி கணேசன் கேட்டவற்றை செய்து கொடுப்பார். அவர் சாப்பிடும் போது அருகில் இருந்து பரிமாறுவார். அந்த அளவு ‘பாசமலர்’களாக நிஜத்திலும் விளங்கினார்கள்.

பெண்ணின் பெருமை படம்தான் இரண்டு கணேசன்களும் முதன் முதலாக இணைந்து நடித்த படம். அந்தப் படத்தில்தான் சிவாஜியைவிட நல்ல கதாபாத்திரம் ஜெமினி கணேசனுக்குக் கிடைத்தது.

புத்திசுவாதீனமில்லாத மூத்த சகோதரன் வேடமும், அவனைத் துன்புறுத்தும் இளைய சகோதரன் வேடமும் இருந்தன. ‘உங்களுக்கு எந்த வேடம் வேண்டுமோ அதை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்’ என்று ஜெமினியின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார் சிவாஜி.

ஜெமினி புத்தி சுவாதீனமில்லாத அண்ணனாகவும் அவரைத் திருத்துகிற அண்ணியாக சாவித்ரியும் நடித்தார்கள். படத்தில் ஜெமினி கணேசனின் நடிப்பே அற்புதமாக இருந்தது. ஜெமினி பேசப்பட்ட அளவு சிவாஜி பேசப்படவில்லை.

ஜெமினியின் தேர்வும் நடிப்பும் சிறப்பாக இருந்ததை உணர்ந்தார் சிவாஜி. மீண்டும் ஜெமினியுடன் நடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும் அவர். ‘பதிபக்தி முதல் பந்தபாசம் வரையிலான படங்களில் சிவாஜியின் வேடமும் நடிப்புமே பிரதானமாக அமைந்தது.

முதலும் கடைசியுமாக சிவாஜியும் ஜெமினியும் இணைந்து பந்தபாசம் படத்தில் அண்ணன் தம்பியாக நடித்தார்கள். பந்தபாசத்துக்குப் பிறகு சிவாஜி – ஜெமினி வெற்றிக் கூட்டணி பிரிந்து விட்டது. ஏ.பி. நாகராஜனின் சில புராணப் படங்களில் ஜெமினி சிவாஜியுடன் இருந்தார் அவ்வளவே.

நன்றி : காதலன் : ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு (பா. தீனதயாளன்)

இன்று (மார்ச் 22) காதல் மன்னனுக்கு நினைவு நாள்

எம்.ஆர். ராதா கொடுத்த விருது

நான் வாங்கப்போகும் முதல் விருது இது. எம்.ஆர். ராதாயணம் புத்தகத்துக்காக. சென்ற வாரம் தகவல் வந்தது. விருதை வழங்குபவர்கள் – திருப்பூர் கலை இலக்கியப் பேரவை. புத்தகத்துக்கு ‘சிறப்பு விருது’ என்று அறிவித்துள்ளார்கள். மார்ச் இறுதியில் விழா இருக்கலாம்.

பரிசுக்குத் தேர்வாகியுள்ள கிழக்கு பதிப்பகத்தின் பிற நூல்களின் பட்டியல் : http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_17.html

என்னோடு சேர்ந்து தங்களது நூல்களுக்காக விருது பெறவுள்ள ஆர். முத்துக்குமார், என். சொக்கன், ஜெ. ராம்கி, லிவிங் ஸ்மைல் வித்யா, குணசேகரன், ஜோதி நரசிம்மன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.