தங்கமீன்கள் பார்க்க வேண்டிய படம்தான். எனக்குப் பிடித்திருந்தது.
நிறைகள் :
* செல்லம்மா என்ற குட்டிப்பெண் சாதனா.
* கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்களின் தேர்வு. கனகச்சிதம். ராமே நடிக்கிறார் என்று முதன்முதலில் அறிந்தபோது, டிரைலர் பார்த்தபோதெல்லாம் எனக்கு ஏதோ உறுத்தலாகத்தான் இருந்தது. ஆனால், படத்தில் ராம் எங்கும் தெரியவில்லை. அவர் ‘அப்பா’வாக மட்டுமே தெரிந்தார்.
* கற்றது தமிழ் அளவுக்கு மிதமிஞ்சிய சோகம், செயற்கைத்தனங்கள் இதில் இல்லை. சொல்ல வந்த விஷயத்தை உணர்வுபூர்வமாக, மனத்தைத் தொடும்படி சொல்லியிருக்கிறார்.
* அர்பிந்து சாராவின் கேமரா. ராமும் ஷெல்லியும் நள்ளிரவில் தண்டவாளத்தின் ஓரத்தில் அமர்ந்து பேசிவிட்டுக் கிளம்பும்போது கடக்கும் ரயிலின் ஹெட்லைட் வெளிச்சத்தில் படமாக்கப்பட்ட காட்சி சிலிர்க்க வைத்தது. தவிர, படத்தில் ஏகப்பட்ட இரவுக் காட்சிகள் உள்ளன. அனைத்திலுமே ஒளிப்பதிவு அற்புதம்.
* யுவன். பாடல்களிலும், பின்னணி இசையிலும்.
* லொக்கேஷன்.
* வசனம்.
குறைகள் :
* மிக மெதுவாக நகரும் இரண்டாம் பாதி.
* வோடஃபோன் நாய்க்குட்டியை மையமாக வைத்து திரைக்கதையை நகர்த்தியிருப்பது மட்டும் இத்தனை உணர்வுபூர்வமான படத்தில் எனக்கு நாடகத்தனமாக தோன்றியது. இதைவிட அருமையான யோசனை கொண்டு ராமால் திரைக்கதை அமைத்திருக்க முடியும்.
* அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் மட்டுமான படம் என்பது போலவே தொடர்ந்து விளம்பரப்படுத்தியது.
*****
வணிக ரீதியான திரைப்படங்களுக்கு மத்தியில் #தங்கமீன்கள் எத்தனை நாள்கள் தாக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
படம் பார்க்க நினைத்தால், நல்ல தியேட்டரில் கூடிய விரைவில் சென்று பார்த்துவிடுங்கள். ஏனெனில் அடுத்தடுத்த வாரங்களில் டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.
சமீப காலமாக வெளிவரும் பல மலையாளப் படங்களை ஆஹா ஓஹோவெனப் புகழ்கிறார்கள். அவற்றில் சில படங்களை நானும் பார்த்தேன். ஓகே என்ற அளவில்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. அவற்றோடு ஒப்பிடுகையில் தமிழில் வெளிவந்திருக்கும் #தங்கமீன்கள் ஓஹோ ரகம்.
#தங்கமீன்கள் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வந்தால் நன்றாகப் போகும் என்று தோன்றுகிறது. வந்துவிட்டதா? வரப்போகிறதா?
2012ன் பெரும்பான்மையான பொழுதுகளை இருளில் கழித்த, வருகின்ற ஆண்டிலும் இருளில் வாழப் போகிற தமிழக மக்களாகிய நமக்கு இந்த விருதை நாமே சமர்ப்பித்துக் கொள்வோம்.
மக்கள் விரோதப் போக்குடன் நடந்துகொள்வதே மத்திய அரசின் தலையாய கடமையாகி விட்டது. இதே போன்ற அற்புதமான பொருளாதார நிலை தொடர்ந்தால், வருங்காலம் ஓஹோ! ஆக, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியக் குடிமக்களாகிய நமக்கு கீழ்கண்ட விருது சமர்ப்பணம்!
செங்கலோடு செங்கலாக சூளையில் வெந்து கொண்டிருக்கும் பாவப்பட்ட மக்களின் அறிவுக் கண்களை, கல்விக் கண்களைத் திறக்கப் போராடும் ஓர் இளைஞனின் கதையை செஃபியா டோனில் செதுக்கியிருக்கும் அற்புதப் படைப்பு.
கிராமத்துக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை வைத்து ‘சர்க்கார்’ வேலை வாங்கிவிடலாம் என்ற நிர்பந்தத்தால் ‘கண்டெடுத்தான்காடு’ கிராமத்துக்குள் வாத்தியாராக நுழைகிறார் விமல். அந்த அப்பாவி மக்கள், சூளை முதலாளியிடம் (பொன்வண்ணன்) வாங்கிய கடனுக்காக அடிமைப்பட்டு, அவரைக் கடவுளாக நினைத்துக்கொண்டு காலமெல்லாம் பிள்ளை குட்டிகளோடு கல் அறுத்துக் கொண்டிருக்கும் அவலத்தைப் பார்க்கிறார். அவர்கள் ஏமாற்றப்படுவதை ப் பெரும்பாடுபட்டு உணர வைக்கிறார். குழந்தைகளைக் கல்வியின் பக்கம் இழுக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளும் திருப்பங்களும், அந்த மக்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை உருவாக்குவதுதான் கதை.
கண்டெடுத்தான்காடு சூளையின் சூட்டை, ஏசி தியேட்டரின் ரசிகனும் உணருமளவுக்கு இயல்பான திரைப்படத்தைத் தந்த இயக்குநர் சற்குணத்தை காலத்துக்கும் பாராட்டலாம். களவாணியில் கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இரண்டாவது படத்தில் கமர்ஷியலாக இறங்காமல், குழந்தைத் தொழிலாளர்கள் மேல் அக்கறை கொண்டு படம் எடுத்ததற்காக அவருக்கு ஓராயிரம் பூங்கொத்து. பாரதிராஜாவைப் போல, கிராமத்துக் காவியங்களைப் படைக்க கோலிவுட்டுக்கு இன்னொரு இயக்குநர் கிடைத்துவிட்டார்.
‘விவரங்கெட்டவர்’ என வெள்ளந்தி மக்களிடமே பெயரெடுக்கும் அச்சுபிச்சு வாத்தியார் கதாபாத்திரத்தில் பிசகின்றிப் பொருந்துகிறார் விமல். தன்னிடம் குறும்பு செய்யும் சிறுவர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது, ஆடு துரத்த பயந்து ஓடுவது, கதாநாயகியிடம் சாப்பாட்டுக்கு காசு கொடுத்துவிட்டு ஏமாந்து தவிப்பது என எந்தவித ஹூரோயிஸமும் இல்லாத கேரக்டர். உடல்மொழியில் ஜெமினியை நினைவுபடுத்துகிறார். டயலாக் டெலிவரியிலும் வெரைட்டி காட்டினால் அடுத்தடுத்த உயரங்களுக்குச் செல்லலாம்.
அழகைக் குறைக்கும் ஒப்பனையிலும் அழகழகான பாவனைகளால் அம்சமாகக் கண்களில் நிறைகிறார் அறிமுக நாயகி இனியா. சோறு கொடுக்காமல் விமலைச் சுற்ற விட்டு, பின் காதல்கொண்டு விமலையே சுற்றிச் சுற்றி வரும் கிராமத்துக் குறும்புப்பெண் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். விருதுகள் நிச்சயம்.
கதாநாயகனின் அப்பாவாக வெகுசில காட்சிகளில் வந்து போனாலும் பாக்யராஜுக்கு நினைவில் நிற்கும் பாத்திரம். குருவிக்காரர், டூநாலெட்டு, வைத்தியர் என சின்னச் சின்ன கேரக்டர்களிலும் அத்தனை இயல்பு. இவர்கள் எல்லோருக்கும் மேலே போட்டியே இன்றி முதலிடம் பெறுபவர்கள் படத்தில் வாழ்ந்துள்ள சிறுவர்கள்தாம்.
1966ன் கிராமம் அச்சு அசலாகத் திரையில் விரிகிறது. களிமண் காடு, பனையேறும் மீன், அழுக்கு மக்கள், அகண்ட ஆகாயம், மின்சாரமறியாத இரவு, பாடல் காட்சிகள் என கேமராமேன் ஓம்பிரகாஷ் ரசித்து ரசித்துப் படமாக்கியிருக்கிறார். ரேடியோ, ஷேவிங் கத்தி, பவுடர் டப்பா, பாத்திர பண்டங்கள், தூண்டில், டப்பா பஸ் என ஒவ்வொரு விஷயத்தையும் உருவாக்கிய கலை இயக்குநர் சீனுவுக்கு இது முதல் படமாம். அசத்தல்.
‘செங்கசூளைக்காரா…’ என்ற ஆரம்பப் பாடலிலேயே தனித்துத் தெரிகிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான். எந்தப் பாடலும் சோடைபோகவில்லை. ‘போறானே’, ‘சாரக்காத்து’ பாடல்கள் எல்லாம் ‘என்றும் இனியவை’ பட்டியலில் இடம்பிடிக்கின்றன.
ப்ளாக் அண்ட் ஒயிட் பழைய பாடல்களை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தியிருப்பது ரசனை. ‘நான் பேச நினைப்பதெல்லாம்…’ – காதல் தூதுப் பாடலாகியிருப்பது கவிதை. சுட்டுவைக்கப்பட்டிருக்கும் செங்கல்களுக்கிடையில் ஒரே ஒரு செங்கலில் மட்டும் ‘அ’ எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது சிலிர்ப்பு. எந்தக் காட்சிகளும் ‘க்ளிஷே’வாக இல்லாமலிருப்பது பெரிய ப்ளஸ். ஆனால் சற்றே வேகம் குறைவான திரைக்கதையின் போக்கு மட்டும் மைனஸ். குழந்தைகளின் படிப்பறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘பளீர்’ காட்சிகள் இல்லையென்பது ஏமாற்றம்.
இருந்தாலும் ஆயிரம் கருப்பு வெள்ளை சினிமாக்கள் செய்யாத தமிழர்களின் கலாசாரப் பதிவை இந்த ஒற்றைப் படம் அருமையாகச் செய்திருக்கிறது. சென்ற நூற்றாண்டில் தமிழ் கிராமங்கள் இப்படித்தான் இருந்தன என்று காட்சிப்படுத்தும் செல்லுலாய்ட் ஆவணம் இனி இதுவே. கமர்ஷியலாக ‘வாகை சூடா விட்டாலும்’, நல்ல திரைப்படம் என்ற வகையில் ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.
அவனப் பத்தி நான் பாடப் போறேன் – இவன பத்தி நான் பாடப் போறேன் – அவனும் சரியில்ல இவனுந்தான் சரியில்ல… யாரைத்தான் நான் இப்போ பாடப்போறேன்…
தெரிஞ்சேதான் யுவன், இப்படி ஒரு பாட்டை போட்டுக் குடுத்துருக்காருபோல! அதையும்புரிஞ்சுதான் பாலா, அந்தப் பாட்டை படத்துல உபயோகிக்கவும் இல்ல.
ஹி..ஹி...
படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசத்துல ‘டியா டியா டோலே’வென விஷால் குத்தாட்டம் போட ஆரம்பிச்சாரு. அடுத்து ஆர்யா தன் பங்குக்கு காதில் ஹெட்ஃபோனோடு. அப்புறமா ஆர்யாவும் அவரு அம்மாவும் நாக்கை மடிச்சு ரொம்ப நேரத்துக்கு குத்தாட்டம் போட்டாங்க. ஆட ஆட நமக்குத்தான் மூச்சு வாங்குது. இந்தக் குத்தாட்டங்கள் க்ளைமாக்ஸ் வரை தொடர்ந்து வந்துகிட்டே இருக்குது (ஓ, இதுதான் கண்டினியூட்டியா!). இதனால் அறியப்படும் நீதியென்னென்னா, விளிம்புநிலை மனிதர்கள் தம் சோகத்தில், சந்தோஷத்தில், பசித்தால், தூக்கம் வந்தால், வயிறு கடமுடாவென்றால், வாந்தி வந்தால்கூட குத்தாட்டம் போடுவார்கள்.
அம்பிகா – பீடி வலிக்குறப்போ தியேட்டரில் கைதட்டல், ஆர்யா – பூட்டைத் திறக்குறப்போ கைதட்டல், விஷால் – மேடையில நவரச ஆக்டிங் கொடுக்குறப்போ, மரமேறிகிட்டே அழுறப்போ கைதட்டல் – இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட இடங்கள்ல கைதட்டல். நான்கூட டைட்டில் கார்டுல டைரக்ஷன் பாலான்னு போட்டதுல இருந்து, கிளைமாக்ஸ்ல எ ஃபிலிம் பை பாலான்னு வர்ற வரைக்கும் விடாம கைதட்டிக்கிட்டே இருந்தேன், இண்டர்வெல்லகூட! ஏன்னா இது பாலா படமாச்சே!
படத்துல திடீர்னு சூர்யா நடிச்ச அவரோட வெளம்பரம் ஒண்ணு பத்து நிமிஷத்துக்கு வந்துச்சு. அது அவரோட அகரம் பவுண்டேஷன் வெளம்பரம். அதுக்கடுத்ததா சரவணா ஸ்டோர்ஸ் வெளம்பரம், நவரத்னா தைல கூல்கூல் வெளம்பரம், ஜோதிகாகூட காப்பி குடிக்கிற வெளம்பரமெல்லாம் தொடர்ந்து வரும்னு நினைச்சு ஏமாந்துட்டேன். அந்த பத்து நிமிஷ அகரம் வெளம்பரம்கூட படத்தோட கதைய எந்த விதத்துலயும் பாதிக்கக்கூடாதுன்னுதான், பாலா படத்துல கதைன்னு ஒண்ணை கமிட் பண்ணிக்கவே இல்ல.
தலைகீழா நின்னு ஆர்யா, நான் கடவுள்ல அவார்டு பெர்பார்மென்ஸ் பண்ணிட்டாரு. ‘மச்சி எனக்கொரு பெர்பார்மன்ஸ் சொல்லேன்’னு விஷாலு அவருகிட்ட கேட்க… அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு. இந்தப் படத்துல எதுக்காக விஷால் மாறுகண்ணோட நடிச்சாருன்னு நாமெல்லாம் அதே கண்ணோட்டத்துடன் படம் பார்த்தா ஒருவேளை புரியலாம். அதுல அவரோட உடல்மொழி, குரல்ல எல்லாம் பெண்மைத் தன்மைவேற! பின்நவீனத்துவமா இருக்குமோ? என்ன எழவுக்குன்னு யாமறியோம்; யாமம் அறியலாம்.
அடிமாடைக் கடத்துறாங்க. அதைவைச்சு அடிவயித்தைப் பிசையுற மாதிரி எதாவது சொல்லுவாங்களோன்னு நினைச்சேன். அந்த நேரத்துலதான் செம ட்விஸ்ட் ஒண்ணு வந்தது. ப்ளூ கிராஸ்காரங்க வந்து மாடுங்களையெல்லாம் அவுத்து உட்டுட்டாங்க. மாடுங்க எல்லாம் பட்டிக்குள்ள இருந்து கூட்டமா வெளியேறுன சமயத்துல, ரசிகர்களும் அதேமாதிரி வெளியேறி இருக்கணும். அஞ்சறிவு ஜீவனுங்களுக்கு இருந்த அறிவு, ஆறறிவு ரசிகர்களுக்கு இல்ல. ஏன்னா இது பாலா படமாச்சே!
விஷாலோட நடிப்பு? அதையெல்லாம் பாராட்டலாம். ஆனா இங்க என்ன ‘தனிநடிப்பு போட்டியா’ நடக்குது. அவரு ஸ்டேஜ் ஏறி ஸோலோவா திறமையைக் காட்டுறதுக்கு. கதையே இல்லாத படத்துல அவரு கதறிக் கதறி நடிச்சாலும் எதுவுமே ஒட்டலியே. ஆர்யா வேற தன் பங்குக்கு பாறைமேல நின்னு பத்து நிமிஷத்துக்கு திறமை காட்டுறாரு. அந்த பெரிய மனுஷன் ஹைனஸும் (பேரென்ன, ஆங்.. எம்.ஜே. குமாரு!) ஒட்டுத்துணியில்லாம வாழ்க்கையோட எல்லைக்கே ஓடி பொணாமாகுறாரு. அப்பதானே ரசிகர்களை ரணகளமாக்குற க்ளைமாக்ஸ் வைக்க முடியும். எல்லாம் எதுக்கு? ரெண்டு தேசிய விருது பார்சேல்ல்ல்ல்ல்ல்!!! (அட, போங்கப்பு. அது பாலா படத்துக்குத்தான் கொடுப்பாங்க. பாலா பேரு போடுற படத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க!)
பலகோடி மதிப்புள்ள மரம் உள்ள லாரியை எடுத்துக்கிட்டு விஷால் போனாரே, அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்காதீங்க. நான் கடவுள்ல ஆர்யா, வில்லனை புதர் மறைவுல எடுத்துட்டுப் போயி என்ன பண்ணுனாரோ, அதையேத்தான் இதுல விஷாலும் பண்ணிருக்காருன்னு புரிஞ்சுக்கணும். ஆர்கே எதுக்கு, ஹைனஸோட ப்ளாஷ்பேக் என்ன, காதலிகளோட தேவை என்ன – இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே போகலாம். ஆனா பாலா பட கதாநாயகப் பாத்திரம் யாராவது வந்து என் குரல்வளையைக் கடிச்சுத் துப்பிருவாங்களோன்னு பயப்படுறதால…
தியேட்டரை விட்டு வெளியேவரும்போது, என்னோட சக ரசிகர்கள் எல்லாரோட முகத்தையும் பார்த்தேன். வெள்ளைத்துணியால தாடையோட சேர்த்து தலைல ஒரு கட்டு போட்டுருந்துச்சு. நெத்தியில ஒத்த ரூபாயும் தெரிஞ்சுது. நான் என் கட்டை அவுத்துட்டு, என் நெத்தியில இருந்த ஒத்த ரூபாய எடுத்து பாக்கெட்ல போட்டுட்டு வீட்டுக்கு நடந்தேன்.
ஒல்லியாகவே இருந்தாலும் பாலா ஒரு யானை. யானைக்கும்…
(பின்குறிப்பு : இதுவரை பாலாவின் படங்களை நான் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவையாகத்தான் பார்த்திருக்கிறேன். அவன் இவன் தந்த ஏமாற்றத்தின் விளைவே இந்த விமரிசனம்.)