அதே கண்கள்

இதற்காகத்தான் நீண்ட நாள்களாகக் காத்திருந்தோம். இறுதியில் அருமையான, எங்கள் கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று முடிவாகிவிட்டது.

திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் சி.வி. குமார் தயாரிப்பில், நண்பர் ரோஹின் இயக்கத்தில், கலையரசன், ஷிவதா, ஜனனி, பாலசரவணன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அதே கண்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு ரவிவர்மன் நீலமேகம். இசை ஜிப்ரான். எடிட்டிங் லியோ ஜான் பால். ரோஹினும் நானும் இணைந்து கதை, திரைக்கதை உருவாக்கியுள்ளோம். படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறேன். விரைவில் First Look உடன் சந்திக்கிறேன். 🙂

பலே பாண்டியா – மாமா மாப்ளே – பின்னணி

நேற்றிரவு (1.2.14) முதல் பலரும் ‘மாமா… மாப்ளே – பலே பாண்டியா’ பாடல் நினைவாக இருக்கின்றனர். உபயம் : ஏர்டெல் சூப்பர் சிங்கர் திவாகர். சற்று முன்புதான் அந்தக் காட்சியை யூட்யுப் வழியாகக் கண்டேன். மிக அருமையாகப் பாடினார். அந்தப் பாடலின் மூலம் திவாகர் தனக்கான வெற்றியை உறுதி செய்துகொண்டதாகவும் அறிந்தேன். திவாகருக்கு வாழ்த்துகள்.

பலே பாண்டியா – இந்தப் பாடல் உருவான பின்னணி குறித்து எம்.ஆர். ராதா குறித்த எனது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் இங்கே.

‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
மாமா… மாப்ளே…’

பாடலை முதன் முதலில் செட்டில் கேட்டார் ராதா. அவரது குரல் போலவே இருந்தது அது.

‘அட யாருப்பா இது? நான் பாடுன மாதிரியே இருக்குது?’ – ஆச்சரியமாகக் கேட்டார். விவரம் சொன்னார்கள். பாடலைப் பாடிய எம். ராஜூவை உடனே பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டார் ராதா. அவர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவிலிருந்தவர். வரவழைக்கப்பட்டார்.

ஒல்லியாக, சிவப்பாக இருப்பார் அவர். ராதா முன் சென்று நின்றார். ‘என்னப்பா பாடகரை அழைச்சுட்டு வரலையா?’ கேட்டார் ராதா. இவர்தான் என்றார்கள்.

‘பாடுனது நீங்களா?’ – ராதாவுக்கு ஆச்சரியம்.

‘ஆமாண்ணே’ என்றார் ராஜூ. மென்மையான குரல்.

‘எனக்கு அதிசயமா இருக்கு. பேசறப்போ இவ்வளவு மெதுவா பேசறீங்க. என் குரல்லயே பாடியிருக்கீங்க. உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை. நான் உன்னை மறக்கவே மாட்டேன் தம்பி. யாருப்பா அங்க? தம்பிக்கு காப்பி கொடுங்க’ உபசரித்து அனுப்பினார் ராதா.

அந்தப் பாடலில் நடிப்பதற்காக சிவாஜி பலமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். பாடலில் கிட்டத்தட்ட இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு ஆலாபனை வருமே. அதற்காகத்தான் அவ்வளவு பயிற்சி.

‘அண்ணே, நீங்க மாட்டிக்கிட்டீங்க’ என்ற போகிற போக்கில் ராதாவையும் கலாட்டா செய்துவிட்டுப் போனார் சிவாஜி. உண்மையிலேயே அவ்வளவு பெரிய ஆலாபனைக்கு உதடசைப்பதெல்லாம் ராதாவுக்குக் கடினமான காரியமாகத்தான் தோன்றியது.

நேராக டைரக்டரிடம் வந்தார்.

‘இங்க பாரு பந்தலு. கணேசன் மாதிரில்லாம் நம்மளால முடியாது. கேமராவை வைச்சுக்கோ. நான் பாட்டுக்கு ஆக்ட் பண்ணுவேன். எங்க எனக்கு உதடசைக்கிறது கரெக்டா வருதுன்னு தெரியுதோ, அந்த இடத்துல கேமாராவுக்கு முகத்தைக் காட்டுவேன். மத்த இடத்துல குனிஞ்சுகிட்டுதான் இருப்பேன். வேற வழியில்லப்பா. நீ பாட்டுக்கு டைட் குளோஸ் அப்பெல்லாம் வைச்சிடாதே. அப்பப்ப கட் சொல்லிடாதே. சரியா?’

சொல்லிவிட்டு ராதா ஷாட்டுக்குச் சென்றார்.

பாடல் படப்பிடிப்பு ஆரம்பமானது. பாதி பாடல் வரை ஒழுங்காகப் போனது. ஆலாபனைக் காட்சிகள் வரும்போது, ராதா தன் உதடசைவுகளை அட்ஜெஸ்ட் செய்ய உட்கார்ந்திருக்கும் சோபாவிலிருந்து குதியோ குதியென்று குதிக்க ஆரம்பித்தார். ஏகப்பட்ட சேஷ்டைகள் செய்தார். செட்டில் டைரக்டர், கேமராமேன், லைட் பாய் உள்பட எல்லோராலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சில ரீடேக்குகள் ஆகத்தான் செய்தன.

ஒரு கட்டத்தில் ராதா திடீரென பெரிய பாடகர் போல காதருகே தன் இடது கையை வைத்து, வலது கையை நீட்டி பயங்கர ஆக்‌ஷன் கொடுப்பதை பாடலில் காணலாம். ஆனால் அது ஆக்‌ஷன் அல்ல. நடந்த விஷயமே வேறு.

ஏகத்துக்கும் குதித்ததில் ராதாவின் விக் லூஸாகி விட்டிருந்தது. அந்த ஷாட் முடியப் போகும் நேரம் அது. விக் கழண்டு விட்டால், இன்னொரு முறை நடிக்க வேண்டியது வருமே. அந்தச் சமயத்தில்தான் பெரிய பாடகர் போல ஆக்‌ஷன் செய்து, விக்கைக் காப்பாற்றிக் கொண்டார் ராதா.

***
குறிப்பு : சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக வெளியீடான எம்.ஆர். ராதா புத்தகம், நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் சிக்ஸ்த் சென்ஸின் டாப் 10ல் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

தங்க மீன்கள் – சிறு விமரிசனம்

தங்கமீன்கள் பார்க்க வேண்டிய படம்தான். எனக்குப் பிடித்திருந்தது.

நிறைகள் :

* செல்லம்மா என்ற குட்டிப்பெண் சாதனா.

* கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்களின் தேர்வு. கனகச்சிதம். ராமே நடிக்கிறார் என்று முதன்முதலில் அறிந்தபோது, டிரைலர் பார்த்தபோதெல்லாம் எனக்கு ஏதோ உறுத்தலாகத்தான் இருந்தது. ஆனால், படத்தில் ராம் எங்கும் தெரியவில்லை. அவர் ‘அப்பா’வாக மட்டுமே தெரிந்தார்.

* கற்றது தமிழ் அளவுக்கு மிதமிஞ்சிய சோகம், செயற்கைத்தனங்கள் இதில் இல்லை. சொல்ல வந்த விஷயத்தை உணர்வுபூர்வமாக, மனத்தைத் தொடும்படி சொல்லியிருக்கிறார்.

* அர்பிந்து சாராவின் கேமரா. ராமும் ஷெல்லியும் நள்ளிரவில் தண்டவாளத்தின் ஓரத்தில் அமர்ந்து பேசிவிட்டுக் கிளம்பும்போது கடக்கும் ரயிலின் ஹெட்லைட் வெளிச்சத்தில் படமாக்கப்பட்ட காட்சி சிலிர்க்க வைத்தது. தவிர, படத்தில் ஏகப்பட்ட இரவுக் காட்சிகள் உள்ளன. அனைத்திலுமே ஒளிப்பதிவு அற்புதம்.

* யுவன். பாடல்களிலும், பின்னணி இசையிலும்.

* லொக்கேஷன்.

* வசனம்.

குறைகள் :

* மிக மெதுவாக நகரும் இரண்டாம் பாதி.

* வோடஃபோன் நாய்க்குட்டியை மையமாக வைத்து திரைக்கதையை நகர்த்தியிருப்பது மட்டும் இத்தனை உணர்வுபூர்வமான படத்தில் எனக்கு நாடகத்தனமாக தோன்றியது. இதைவிட அருமையான யோசனை கொண்டு ராமால் திரைக்கதை அமைத்திருக்க முடியும்.

* அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் மட்டுமான படம் என்பது போலவே தொடர்ந்து விளம்பரப்படுத்தியது.

*****
வணிக ரீதியான திரைப்படங்களுக்கு மத்தியில் #தங்கமீன்கள் எத்தனை நாள்கள் தாக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

படம் பார்க்க நினைத்தால், நல்ல தியேட்டரில் கூடிய விரைவில் சென்று பார்த்துவிடுங்கள். ஏனெனில் அடுத்தடுத்த வாரங்களில் டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

சமீப காலமாக வெளிவரும் பல மலையாளப் படங்களை ஆஹா ஓஹோவெனப் புகழ்கிறார்கள். அவற்றில் சில படங்களை நானும் பார்த்தேன். ஓகே என்ற அளவில்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. அவற்றோடு ஒப்பிடுகையில் தமிழில் வெளிவந்திருக்கும் #தங்கமீன்கள் ஓஹோ ரகம்.

#தங்கமீன்கள் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வந்தால் நன்றாகப் போகும் என்று தோன்றுகிறது. வந்துவிட்டதா? வரப்போகிறதா?

கலியுகம் பாடல்கள் – சிறு அறிமுகம்

மூன்று இசையமைப்பாளர்கள், ஐந்து பாடல்கள், கலியுகம் திரைப்படத்தின் பாடல்கள் புதனன்று வெளியாகின. விழாவில் மூன்று பாடல்கள், இரண்டு டிரைலர்கள் திரையிடப்பட்டன. பாடல்கள் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பாடல்கள் குறித்த அறிமுகம் இங்கே.

# ஏடாகூடா ஆசை…

குத்துப் பாடல்கள் மட்டுமல்ல, தன்னால் இளமை பொங்கும் பாடல்களையும் எழுத முடியும் என்று நிரூபிக்க, (ஈசன் ஜில்லாவிட்டு புகழ்) மோகன்ராஜனுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு இந்தப் பாடல். இசை சித்தார்த் விபின். துள்ளலான பாடல். பண்பலை வானொலிகள் அடிக்கடி ஒலிபரப்பினால் இளைஞர்களைக் கவரும் வாய்ப்புள்ளது.

# அஜல உஜல

சென்னை மண்ணின் இலக்கியமான ‘கானா’வை இதுவரை சினிமா பயன்படுத்தியிருக்கும் விதம் வேறு. அதாவது சினிமா பாடல்களைத்தான் ‘கானா’ பாடல்களாக மற்ற ஊர்க்காரர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லாமல், ‘மரண கானா விஜி’யின் புகழ்பெற்ற கானா பாடலான ‘அஜல உஜல’வையும், அவரது மற்ற சில கானா பாடல்களையும் கலந்து கானாவின் வடிவம் சிதையாமல் சினிமா ட்யூன் ஆக்கியிருக்கிறார்கள். இசை அருணகிரி. மரண கானா விஜியின் குரலில் இந்தப் பாடல் நிச்சயம் ஒரு ரவுண்ட் வரும் என எதிர்பார்க்கிறேன்.

# சிரபுஞ்சி சாலையிலே…

படத்தில் வரும் ஒரே காதல் பாடல் இதுதான். வரிகள் தாமரை. இசை தாஜ்நூர். குரல் ஹரிச்சரண். ஆந்திராவின் கடப்பாவில் கண்டிக்கோட்டாவில் படமாக்கியிருக்கிறார்கள். கேமராமேன் S.R. கதிர் புகுந்து விளையாடி இருக்கிறார். பாடல் வெளியீட்டு விழாவில் இந்தப் பாடலைத் திரையிட்ட போது ‘விஷுவல்ஸ் பிரமாதம்’ என்று கமெண்ட்டுகள் குவிந்தன. மெலடி பாடலான இது, நிச்சயம் மியுஸிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று நம்புகிறேன்.

# ஏனோ ஏனோ

உன்னைப் போல் ஒருவனில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு பாடல் எழுதியிருந்ததாக செய்தி படித்த ஞாபகம். அதன்பின் கலியுகத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். ‘மனுஷ்யபுத்திரன், தனிமையை அதன் வலியைத் தனது கவிதைகளில் பிரமாதமாக வெளிப்படுத்துவார். இந்தப் பாடலும் அப்படிப்பட்ட வலியை வெளிப்படுத்துவதுதான். அதனால் அவரை எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்’ – இது இயக்குநர் யுவராஜ், இசை வெளியீட்டு விழாவில் சொன்ன தகவல். பாடலைப் பாடியிருப்பவர் ராகுல் நம்பியார். இசை தாஜ்நூர்.

# வெண்ணையில…

படத்தில் இது மிகவும் ஸ்பெஷலான பாடல். இந்த பூமியே ஏங்கி, ரசித்துக் காதலித்த ஒரு பெண்ணின், பேரழகியின், நல்ல மனுஷியின் புகழ்பாடும் விதமாக இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பெண் சில்க் ஸ்மிதா. நாற்பது வயதுக்காரன் ஒருவனுக்கு இன்னமும் சில்க் தன்னுடன் வாழ்ந்து வருவதாகதே நினைப்பு. அவன் தான் ரசிக்கும் சில்க்கை, அவள் அழகை, அவள் வாழ்ந்த வாழ்க்கையைப் பாடும் பாடல் இது. வெளியீட்டு விழாவில் இந்தப் பாடலைத் திரையிட்டு முடித்தபின் ஏகப்பட்ட கைதட்டல். எல்லாம் சில்க்குக்குக் கிடைத்த மரியாதை. அந்த மனுஷிக்கு கலியுகம் டீம் செய்யும் மரியாதை. கடந்த இரு தினங்களில் தொலைபேசியில் பேசிய நண்பர்கள் எல்லாம் இந்தப் பாடலைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இசை சித்தார்த் விபின். பாடியவர் முகேஷ். பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் மோகன்ராஜன்.

பூமியே காதலிச்ச பொம்பளை மேல

நான் ஆசை வெச்சேனே ராமனைப் போல

சாமியே சைட் அடிச்ச கண்களினாலே

நான் தொலைஞ்சு போனேனடா…

இந்தப் பாடலில் சில்க்கின் கிளிப்பிங்ஸை பயன்படுத்தவில்லை. பதிலாக ஓவியர் இளையராஜா வரைந்த சில்க் ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். நிச்சயம் ரசிகர்கள் மனத்தில் நீங்காத பாடலாக இது நிலைத்திருக்கும்.

வழக்கம்போல இணையத்திலும் பாடல்கள் வலம் வர ஆரம்பித்துவிட்டன. பாடல்கள் குறித்த தங்கள் கருத்துகளுக்குக் காத்திருக்கிறேன்.

குறிப்பு : ‘கலியுகம் படத்தில் பாடல் எதுவும் எழுதியிருக்கிறாயா?’ என்று பலரும் விசாரிக்கிறீர்கள். நான் இந்தப் படத்தில் வசனம் மட்டுமே எழுதியிருக்கிறேன். ‘ஏதோ செய்தாய் என்னை’ என்ற படத்தில் மட்டுமே ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். அதன் பிறகு எந்தப் படத்திலும் பாடல் எழுதவில்லை. அடுத்தடுத்து வசனம், திரைக்கதை என கவனம் செலுத்தவே விருப்பம்.

 

கலியுகம்

கலியுகம்

கலியுகம் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படம். புதிய இயக்குநர், புதிய தயாரிப்பாளர், சில புதிய நடிகர்களுடன் நானும் புதிய வசனகர்த்தாவாக இதன் மூலம் அறிமுகம் ஆகிறேன்.

பதின்வயதில் ‘தவறான பாதைகள்’ மேல் ஒருவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை, அதனால் ஏற்படும் தடுமாற்றங்களை, இந்தச் சமூகம் எந்தவிதத்தில்லெல்லாம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை ஆழமாகச் சொல்லும் திரைப்படம். மிக எளிமையான, நேர்த்தியான திரைக்கதை. கதையோடு ஒட்டாத உபரிக் காட்சிகளோ, மிகைப்படுத்தப்பட்ட மசாலாத்தனங்களோ இல்லாத, கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு நகரும் சினிமா இது. அதற்காக, ‘இதுவரை நீங்கள் பார்த்திராத படம்’, ‘முற்றிலும் மாறுபட்ட சினிமா’, ‘உதாரண உலக மூவி’ என்றெல்லாம் ஜிகினா சேர்க்க விரும்பவில்லை.

அறிமுக இயக்குநர் யுவராஜ். திரைக்கதையைச் செதுக்குவதில் எழுத்தாளர்களின் பங்கும் அவசியம் என்று நம்புபவர். உருப்படியான கதைகள் கொண்ட சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர். இந்த சினிமாவில் பங்கெடுத்ததன் மூலம் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர். யுவராஜின் தந்தை வி. அழகப்பனை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’, ‘பூ மழை பொழியுது’ உள்பட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர். நடிகர் ராமராஜனை, ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ திரைப்படம் மூலமாக திரையில் அறிமுகப்படுத்தியவர்.

வசனம் எழுதுவதைத் தாண்டியும், படத்தின் பல்வேறு நிலைகளில், பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுவும் அனுபவம் நிறைந்த முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு அமைந்ததை முக்கியமான விஷயமாகக் கருதுகிறேன். கலியுகத்தின் கேமராமேனான S.R. கதிர், சில முக்கியமான ஆலோசனைகள் சொல்லி எனக்கு உதவினார். ஒளிப்பதிவாளராக தனது அனுபவங்களுடன், படத்தின் தரத்தை மேம்படுத்தியிருப்பதில் கதிருக்கு முக்கியப் பங்குண்டு.

எடிட்டிங் கிஷோர், நடனம் தினேஷ் மாஸ்டர் என படத்துக்கு பலம் சேர்ப்பவர்கள் பட்டியல் நீளும். இசை மூன்று பேர். தாஜ்நூர், சித்தார்த் விபின், அருண். தாமரை, மனுஷ்யபுத்திரன், மோகன்ராஜ் – பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் குறித்து தனியே எழுதுகிறேன்.

படத்தின் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் வினோத், ‘நந்தா’ சிறுவயது சூர்யாவாகவும், ‘நான் மகான் அல்ல’ – நான்கு இளைய வில்லன்களில் ஒருவராகவும் கவனம் ஈர்த்தவர். தவிர அஜய், சங்கர் என இரண்டு இளைஞர்கள் அறிமுகம் ஆகிறார்கள். கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் நீத்தி. தவிர, ‘ஆடுகளம்’ நரேன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘ஆரண்ய காண்டம்’ சோமு, மீனாள் என நடிப்பில் தனித்துவம் பெற்ற கலைஞர்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

A.V. விக்ரம் தயாரித்திருக்கும் கலியுகம் படத்தின் பாடல்கள் வரும் ஜூன் 20 (புதன்கிழமை), சென்னை பிரசாத் லேபில் காலை 10.30 மணி அளவில் வெளியிடப்படவிருக்கின்றன.

கலியுகம் மூலம் நான் சினிமாவுக்குள் இருந்து சினிமாவைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்த நண்பர் வாசுதேவனுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.

படம் குறித்த மேலும் தகவல்களுக்கு http://www.facebook.com/KaliyugamTheMovie