அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்!

‘போலோ மேட்சுக்காக ஜெய்ப்பூர் மகாராஜா கல்கத்தா வர்றார். உட்லேண்ட்ஸ் ஹோட்டல்ல இடமில்லை. நம்ம மாளிகைல, உங்க அறையிலதான் தங்கப்போறார். அதனால நீங்க அறையைக் காலி பண்ணிக்கொடுத்துடுங்க. சரியா?’ – கூச்பிகார் மகாராணி இந்திரா சொல்லிவிட்டுப் போனாள். பன்னிரண்டு வயது இளவரசி காயத்ரி தேவிக்கு தன் அறையை விட்டுக் கொடுப்பதில் பூரண சம்மதமில்லை. அம்மா சொல்லிவிட்டாள். வேறு வழியில்லை. போலோ விளையாட்டில் ஜெய் கில்லாடி என்பதை பத்திரிகைச் செய்திகளில் படித்திருந்தாள். பேரழகர் என்றும் கேள்விப்பட்டிருந்தாள். ஆகவே அவரது வருகையை எதிர்நோக்கினாள் (1931).

ஜெய் வந்தார். கூச் பிகார் இளவரசர்களோடு கூடிக் குலாவினார். இளவரசிகளையும் நேர்பார்வையில் நோட்டமிட்டுக் கொண்டார். ‘ஆளு அழகாத்தான் இருக்காருடி’ – இளவரசிகள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். ‘அவருக்குக் கல்யாணமாயிருச்சு தெரியுமா?’

ஜெய்யுடன் காயத்ரி
ஜெய் உடன் காயத்ரி

‘தெரியும்டி. மிக்கின்னு ஒரு பொண்ணும், பபிள்ஸ்னு ஒரு பையனும்கூட இருக்காங்க. ஆனா இவரைப் பார்த்தா அப்படியா தெரியுது?’ பருவத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த காயத்ரிக்கு ஜெய்யின் மீது ஒருவித ஈர்ப்பு வந்திருந்தது. மேட்ச் எல்லாம் முடிந்து ஜெய் கிளம்பிச் சென்றிருந்தார். ஆனாலும் அடிக்கடி வந்துகொண்டிருந்தார், காயத்ரியின் நினைவில்.

அடுத்த ஆண்டும் கல்கத்தாவுக்கு வந்தார், போலாவுக்காக. அப்போதுதான் அவருக்கு இரண்டாம் கல்யாணம் நடந்திருந்தது. ‘அவரோட புது மனைவி போட்டோவை அனுப்பச் சொல்லேன்’ – தனது அம்மாவிடம் நச்சரித்தாள் காயத்ரி. இந்திராவும் ஜெய்யிடம் கேட்டாள். சரியென்று சொல்லிய அவர், அனுப்பவில்லை.

இந்திரா, குடும்பத்தோடு அவ்வப்போது பரோடாவுக்குச் செல்வாள். தாய் வீட்டுக்கு. அந்தமுறை, ‘போகும் வழியில் ஜெய்ப்பூருக்குச் செல்லலாம்’ என்றாள். காயத்ரியின் மனத்துக்குள் இனம்புரியாத சந்தோஷம். ஜெய்ப்பூரின் அரண்மனை அழகை ரசித்தாள், அவளையறியாமலேயே ஜெய்யையும். அந்தப்புரம் சென்று அவரது மனைவிகளைச் சந்தித்தாள். குழந்தைகளோடு விளையாடினாள்.

‘நான் காயத்ரியை வெளியில் அழைத்துக் கொண்டு போகிறேன்’ – ஜெய், திடீரென இப்படிக் கேட்டதும் அவளுக்குள் பரவச ஊற்று. மகாராஜா கேட்டு மறுப்பது நாகரிகமில்லையே. இந்திரா சம்மதித்தாள். ஜெய்யோடு காரில் சென்ற நிமிடங்களில் பறப்பதுபோல உணர்ந்தாள் காயத்ரி.

‘நீ கார் ஓட்டுகிறாயா?’

ஓட்டினாள். ஜெய் உதவி செய்தார். வெட்கமும் புன்னகையும் ஸ்பரிசங்களும் கலந்த நொடிகள். அரண்மனைக்குத் திரும்பினார்கள். ‘உங்க பொண்ணு நல்லாத்தான் ஓட்டுறா. ஆனா வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்க சொல்றதைத்தான் கேக்குறதில்ல’ – ஜெய், இந்திராவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார். இந்திரா, காயத்ரியைப் பார்த்தாள். ‘நான் அவர் சொல்றபடிதான் ஓட்டினேன். ஆனா அவர்தான் ஒரு நிலையில இல்லை.’ காயத்ரி சிரித்தாள்.

ஜெய்ப்பூரிலிருந்து கிளம்பும்போது எதையோ விட்டுச் செல்வதுபோல உணர்ந்தாள் காயத்ரி. இரவிலும் பகலிலும் அவளது கனவுகளில் ஜெய், போலோ விளையாடிக் கொண்டிருந்தார். ஜெய்யைப் பற்றி பத்திரிகைகளில் எந்தச் செய்தி வந்தாலும் அது அவளைக் குதூகலமடைய வைத்தது. அவரது பெயர்மீது விரல்வைத்து ஆசையாக வருடிக் கொடுத்தாள். ஜெய் கழற்றிப்போட்ட ஒரு கையுறையிலிருந்து இரண்டு நூல்களை எடுத்து வைத்திருந்தாள். நூல்களைத் தனது கை பிரெஸ்லெட்டோடு சுற்றிக்கொண்டாள். அழகாகத் தெரிந்தது. ஜெய்யின் முதலிரண்டு மனைவிகள், குழந்தைகள் – எதுவுமே காயத்ரிக்கு உறுத்தவில்லை. ‘நான் ஜெய்யைக் காதலிக்கிறேன்’ – தனிமையில் சொல்லிப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அப்போது அவளுக்கு வயது பதினான்கு.

***

‘காயத்ரி காங்கிரஸில் இணைந்துவிட்டார்’ என்ற கிசுகிசு பலகாலமாகவே வலம் வந்துகொண்டிருந்தது. அழைப்பு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் காயத்ரி காங்கிரஸில் இணையவில்லை. அதற்கு எதிர்க்கட்சியாக, ராஜாஜியின் தலைமையில் உருவான சுதந்தரா கட்சியில் இணைந்தார் (1960). காரணம்? வலுவான எதிர்க்கட்சி ஏதுமின்றி காங்கிரஸ் அதுவரை செலுத்தி வந்த அதிகாரம் பல மட்டங்களில் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. ராஜஸ்தான் காங்கிரஸார், முன்னாள் ராஜ ஆட்சியாளர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் எடுத்திருந்த சில நடவடிக்கைகள் காயத்ரியைக் களமிறங்க வைத்தன.

‘அரசியலில் இறங்கி பதவிக்கு வர நினைக்கிற ராஜகுடும்பத்தினருக்கு மன்னர் மானியத்தொகை கிடையாது’ என்று சட்டசபையில் திருவாய் மலர்ந்தார் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் மோகன்லால் சுகாடியா. ‘அப்படியென்றால் காங்கிரஸில் இருக்கும் மன்னர்களுக்கு?’ என்று எதிர்க்கேள்வி எழ, சுகாடியா வாய்பொத்திக் கொண்டார். தங்களுக்குக் கிடைக்கும் மானியத் தொகைக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்றே பல மகாராஜாக்கள், இளவரசர்கள் காங்கிரஸில் அடைக்கலம் புகுந்திருந்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளில் இருந்த ராஜகுடும்பத்தினருடைய ‘மக்கள் செல்வாக்கை’ காலிபண்ணும் வேலையை காங்கிரஸ் தொடர்ந்தது.

1962 தேர்தல். ஜெய்ப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக காயத்ரியை அறிவித்தார் ராஜாஜி. ‘நான் உங்கள் மகாராஜாவின் மனைவி என்பதால் என்னை ஆதரிக்கிறீர்களா?’ – காயத்ரி மக்களிடம் நேரடியாகவே கேட்டார். பாதிக்கூட்டம் ‘ஆம்’ என்றது. ‘இல்லை, நீங்கள் எங்களுக்கு ஏற்கெனவே நிறைய செய்திருக்கிறீர்கள். இனியும் செய்வீர்கள்’ என்றது மீதிக்கூட்டம். பிரசாரத்தின் இறுதிநாள். ஜெய்ப்பூரில் காங்கிரஸ், ஜனசங்கம், சுதந்தரா – மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டம் போட்டன. ஜெய் பேச்சைக் கேட்க திரண்ட சுமார் இரண்டு லட்சம் ஜனங்களைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு மூச்சடைத்தது.

தேர்தலில் ஜெய்ப்பூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 1,92,909. அதில் காயத்ரி வாங்கிய ஓட்டுகள் 1,57,692. கின்னஸ் புத்தகம் புதிய சாதனையைப் பதிவு செய்துகொண்டது.

*****

மன்னர் மானிய ஒழிப்புக்குப் பின்னும் இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகளிலிருந்த ராஜ பரம்பரையினரை விட்டுவைக்கவில்லை. வருமான வரி சோதனை முதல் பல விஷயங்களில் துன்பத்துக்கு ஆளானார் காயத்ரி. 1975ல் அவசரநிலை பிரகடனம். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்குச் சென்ற காயத்ரிக்கு அதிர்ச்சி. அவையில் காங்கிரஸார் மட்டும் இருந்தார்கள். அன்று மதியமே காயத்ரி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உள்ளே இன்னொரு மகாராணி ‘ஹாய்’ சொன்னார், குவாலியரின் விஜயராஜே சிந்தியா.

கொசுக்கடி, எலித்தொல்லை, இருள் அறை இன்னல்கள். ஆறுமாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த காயத்ரி, தீவிர அரசியலிலிருந்து விலகிக்கொண்டார். இன்றுவரை ஜெய்ப்பூரின் ராஜமாதாவாக மக்கள் அபிமானத்தோடு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

*****

மேலே சொன்ன கடைசி வரி, இந்த ஏப்ரல் மாதத்தில் நான் எழுதியது. (குமுதம் ரிப்போர்ட்டர், அகம் புறம் அந்தப்புரம் தொடருக்காக.) அதை அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே மாற்ற வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்தக்காலத்து ஐஸ்வர்யாராய். மக்களோடு நெருங்கிப் பழகிய மகாராணி. இந்திரா காந்தியின் அரசியல் எதிரி. பெரு வாழ்க்கை வாழ்ந்த நல்ல மனுஷி. அடுத்த சில வருடங்களுக்குள் ஜெய்ப்பூருக்குச் சென்று காயத்ரி தேவியைச் சந்திக்க வேண்டும் ஆசை வைத்திருந்தேன். நேற்று மறைந்துவிட்டார்.

A Princess Remembers – The Memoirs of the Maharani of Jaipur
by Gayatri Devi

மகாராணி காயத்ரி தேவியின் நினைவுகளைச் சொல்லும் புத்தகம். அது மட்டும் இப்போது என்னிடம், பொக்கிஷமாக.

புலி புராணம்!

தேசிய விலங்கு என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்த மிருகக் காட்சியில் எப்போது புலி குட்டி போடும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. வண்டலூரில் வெள்ளைப்புலி அனு, மூன்று குட்டிகள் போட்டதாக செய்தி. கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.

சரி, நம் முன்னோர்கள் புலிகளை எப்படியெல்லாம் அழித்தார்கள்? வேட்டை என்று சொல்லிக்கொண்டு மகாராஜாக்களும் பிரிட்டிஷாரும் செய்த அழிச்சாட்டியங்கள் என்னென்ன?

***

வேட்டையாடுதல் என்பது இந்திய மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்று. அதை ஒரு கௌரவமாகக் கருதினார்கள். ‘போன வருசம் மட்டும் நான் பதினேழு காட்டுப்பன்றி, ஒன்பது சிறுத்தை, நாலு புலி கொன்னுருக்கேன்’ என்று சக சமஸ்தான மகாராஜாக்களிடம் பட்டியலிட்டுப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அத்தோடு தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை பாடம் செய்துவைத்து ஓர் அறை முழுவதையும் நிரப்பியிருப்பார்கள்.

குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா
குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா

சமஸ்தானத்தில் வனப்பகுதி இருந்தால் போதும். அதற்குள் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஒரு வேட்டை அரண்மனையை கட்டி வைத்திருப்பார்கள். அவ்வப்போது அங்கு சென்று குடும்பத்தோடு தங்கி, டுமீல்.. டுமீல்! இன்றும் குவாலியரில் மாதவ் தேசியப் பூங்காவில், சிவ்புரி என்ற வேட்டை அரண்மனை அப்படியே இருக்கிறது. அது மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா கட்டியது.

பொதுவாக வைஸ்ராய், ஒரு சமஸ்தானத்துக்கு வருடத்துக்கு ஒருமுறைதான் செல்லுவார். செல்லும் நேரத்தில் பலே விருந்து உண்டு. அது காட்டை ஒட்டிய சமஸ்தானமாக இருந்தால் வேட்டையும் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேட்டை பிரசித்தம். உதய்பூர், ஜோத்பூர், குவாலியர், பஞ்சாப் பகுதிகளுக்குச் சென்றால் புலிகளை, புளியங்காய் அடிப்பது போல அடிக்கலாம். தோல்பூர், பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால் விதவிதமான பறவைகளையும் கொத்துக் கொத்தாக வாத்துகளையும் அள்ளலாம். குஜராத் வனப்பகுதிகளில் சிறுத்தைகளுக்குக் குறிபார்க்கலாம். இந்தியா முழுவதிலுமே மான்களுக்குப் பஞ்சமிருந்ததில்லை. தெற்கே கேரள வனப்பகுதிகளுக்கு வந்தால் யானை வேட்டை சாத்தியம். இவைபோக கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை, காண்டாமிருக வேட்டைகளும் நடந்தன.

பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.

கர்ஸன், லேடி கர்ஸன், புலி
கர்ஸன், லேடி கர்ஸன், புலி

புலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.

அதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.

மூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.

ஆனால் ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மகாராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.

மிரள வைக்கும் வேட்டை புள்ளி விவரங்களில் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி வரும் அகம் புறம் அந்தப்புரம் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி.)