சுஜாதாவின் கொலைகள்

சென்னை புத்தகக் காட்சி 2011 – கடந்த நான்கு நாள்கள் ஒரு பார்வை.

* ‘வானுயர்ந்த சோலையிலே… நீ நடந்த பாதையெல்லாம்…’ பாடலை பாடிக்கொண்டே செல்வது உத்தமம். நடக்கும் பாதையில் கீழே பொருத்தப்பட்டுள்ள மரப்பலகைகள் எப்போது உடைந்து நம்மை உள்ளிழுக்குமோ என்ற பயம் கண்காட்சிக்குள் நுழைந்து சில அடிகள் எடுத்து வைத்தவுடன் உங்களுக்கு ஏற்படப்போவது சர்வ நிச்சயம். தனுஷுக்குத் தம்பிபோன்ற உடல்வாகுடன் இருக்கும் நானே பயப்படுகிறேன் என்றால், பிரபுவுக்கு அண்ணன்போல இருக்கும் பாரா, ஹரன் பிரசன்னா போன்றோர் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.

* இந்தமுறை வள்ளுவர் பாதை, ஷெல்லி பாதை, கம்பர் பாதை, சேக்ஸ்பியர் பாதை என்ற ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். நல்ல யோசனைதான். ஆனால் ‘ஓளவையார் பாதை’ என்று தவறாக அச்சிட்டு நம் தமிழ் மூதாட்டியை அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். தவிர, பபாஸி வழங்கும் ஸ்டால் வரைபடத்தில் ‘பாரதியார் பாதை’ என்று அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் நிஜத்தில் அங்கே இருப்பது ‘மகாத்மா காந்தி பாதை.’ அதற்குப் பக்கவாட்டில் இருக்கும் நீண்ட வரிசைதான் பாரதியார் பாதை. எனவே வாசகர்கள் வரைபடத்தைப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.

* இங்கே ஒரு கண்டனத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். திராவிட அரசியலில் எவ்வளவோ விஷயங்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்தவரும், இளைஞன் வரை இடையறாது எழுத்துச் சேவை ஆற்ற்ற்ற்ற்றிக் கொண்டிருக்கும் கலைஞரின் பெயரில் பாதை ஏன் வைக்கவில்லை? இந்தவார ஆ.வி.யில் கலைஞருக்காக வரிந்துகட்டிக் கொண்டு ஜிங்ஜக் அடித்திருக்கும் இயக்குநர் இமய்யம் பாரதிராஜா சார்பில் இந்தக் கண்டனத்தை முன் வைக்கிறேன்.

CLOSED

* கடந்த செவ்வாய் முதல் வெள்ளிவரை கண்காட்சியில் கூட்டம் இல்லை, அவ்வளவாக இல்லை, இல்லவே இல்லை. வெளியில் அமைக்கப்பட்டுக்கும் (நான்கோ, ஐந்தோ) டிக்கெட் கௌண்டர்களில் இரண்டு மட்டுமே இயங்கின (சில சமயம் ஒன்று மட்டும்). மற்றவை ‘CLOSED’  என்ற அறிவிப்புடன் காணப்பட்டன. ‘HOUSE FULL’ என்று பலகை மாட்டும் காலமெல்லாம் பு.கண்காட்சிக்கு வருமா என்ன?

* சென்ற வருடம் கிழக்கில் ‘ராஜீவ் கொலை வழக்கு’தான் பெஸ்ட் செல்லர் என்று ஓரிரு நாள்களிலேயே சொல்ல முடிந்தது. இந்தமுறை அப்படி எதுவும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் ஹீரோயிஸம் காட்டுகிறது. சனி, ஞாயிறு கடந்தால்தான் தெரியும். பந்தயத்தில் முன்னணியில் உள்ள கிழக்கு புத்தகங்கள் :  காஷ்மீர், ஸ்பெக்ட்ரம், திராவிட இயக்க வரலாறு, ஆர்எஸ்எஸ், ராஜ ராஜ சோழன், முதல் உலகப் போர்.

சமர்ப்பணம் சொக்கனுக்கு..

* கிழக்கின் சினிமா புத்தகங்களில் இந்த வருடமும் தீனதயாளனின் ‘கமல்’ அதிகம் விற்பனையாகிறது. அதனுடன் போட்டி போடுவது ‘நான் நாகேஷ்.’ (கல்கியில் தொடராக வந்த நாகேஷின் அதிகாரபூர்வ வாழ்க்கை. தொகுப்பு எஸ். சந்திரமௌலி.) கடந்த ஐந்து வருடங்களாக ‘சொல்லிக்கொள்ளும்படியாக’ விற்பனையான சந்திரபாபு இந்தவருடம் விற்பனைக்கு இல்லை. வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

* கடந்த சில வருடங்களாக வரலாற்றுப் புத்தகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி கொடுக்கிறது. மாயவலையையும், அகம் புறம் அந்தப்புரத்தையும் வாசகர்கள் விலையைப் பொருட்படுத்தாமல் வாங்கிச் செல்லும்போது…. ஓர் எழுத்தாளனுக்கு வேறென்ன சந்தோஷம் இருக்கக்கூடும்.

*  நேற்று கிழக்கில் ஓர் அம்மணி ஆர்வமாக நுழைந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் குறித்து கேள்விப்பட்டு வந்திருப்பார்போல. உள்ளே செல்லவில்லை. நேராக பில் கௌண்டருக்கு வந்து நின்றார். தன் கையிலிருந்த சிறு நோட்டைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். ‘கொலையுதிர் காலம், மீண்டும் ஒரு கொலை எடுங்க. மேற்கே ஒரு குற்றம் இருக்கா?’ – இதுபோன்ற ‘கொலை’வெறி வாசகர்கள் இருக்கும்வரை சுஜாதா வாழ்வார்.

* கண்ணதாசனில் ‘வனவாசம்’ அழகான கட்டமைப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘மனவாசம்’ புத்தகமும் அருமையாக அச்சிடப்பட்டுள்ளது. முதல் வாசம் ரூ. நூறுக்கும், இரண்டாவது ரூ. எழுபதுக்கும் கிடைக்கிறது. மேலும் சில கண்ணதாசனின் புத்தகங்களும் புதிய கட்டமைப்புடன் கவரும் விதத்தில் வெளிவந்துள்ளன.

* கடந்த நான்கு நாள்களில் நான்கு புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர் ரேவதியின் ‘அப்பள ராஜா’, ‘இசையைக் கேட்குமா பாம்பு?’ – சிறுகதை நூல்கள். இரண்டுமே நடைபாதைக் கடையில் கிடைத்தன. ஹோவர்ட் ஃபாஸ்டின் ‘ஸ்பார்ட்டகஸ் ’ (தமிழில் ஏ.ஜி. எத்திராஜுலு) – என்.சி.பி.ஹெச்சில் வாங்கினேன். இன்னொரு நூல், அசோகமித்திரன் தொகுத்துள்ள ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ – அதிலிருந்து சா. கந்தசாமியின் ‘ஒரு வருடம் சென்றது’ சிறுகதை நேற்றிரவு படித்தேன். இன்னும் மனத்துக்குள் ஏதோ செய்துகொண்டிருக்கிறது.

அமைதிப் பேச்சாளர் நாஞ்சில்

* நேற்று கண்காட்சியில் நண்பர் தளவாய் சுந்தரம் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் அங்கே நிற்கிறார் என்றால் அருகில் ‘இலக்கிய நிகழ்வு’ ஏதோ நடப்பதாக அர்த்தம். எட்டிப் பார்த்தேன். உயிர் எழுத்து ஸ்டாலில் நாஞ்சில் நாடனின் கவிதைத்தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்கள். மனுஷ்யபுத்திரனின் முன்னிலையில் நாஞ்சில் நாடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன ஓர் அமைதியான குரல். பேசியது நிச்சயமாக அருகில் நின்றவர்களுக்குக்கூட கேட்டிருக்காது. இந்த அடக்கத்துக்காகவே இவருக்கும் வருடந்தோறும் சாகித்ய அகாடமி கொடுக்கலாம்.

* இன்றும் நாளையும் புத்தகக் கண்காட்சியில்தான் இருப்பேன். சந்திக்கலாம்.

கழுதைப்பால் கட்டழகி!

மொத்தம் எழுநூறு கழுதைகள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில் அவற்றைப் பராமரிக்கவே தனி ‘தொழுவம்’ இருந்தது. கழுதைப் பால் கறப்பவர்களின் வேலை காலை முதலே ஆரம்பித்துவிடும். தூசு, துரும்பு எதுவும் இல்லாத அக்மார்க் கழுதைப் பால் மதிய நேரத்தில் அந்தப்புரத்துக்குள் கொண்டு செல்லப்படும். குளிக்கும் தொட்டிக்குள் நிரப்பப்படும். மாலை நேரத்தில் தோழிகள் சூழ அங்கு வரும் கிளியோபாட்ரா, குளியல் தொட்டிக்குள் இறங்கி கழுதைப் பாலில் ஊற ஆரம்பிப்பாள்.

காலம் காலமாக கிளியோபட்ரா குறித்து சொல்லப்பட்டு வரும் சம்பவம் இது.  சமீபத்தில் ஹலோ எஃப்.எம்மில் புத்தகக் கண்காட்சி புதுவரவுகள் குறித்து பேட்டி கொடுத்த பாரா, ‘கிளியோபாட்ரா புத்தகம்’ வெளிவருவதாகச் சொன்னார். உடனே ஆர்ஜே (மிஸ்டர்) பாலாஜி கேட்ட கேள்வி, ‘கிளியோபாட்ரா கழுதைப்பால்ல குளிப்பாங்கன்னு சொல்றது நிஜமா?’

கிளியோபாட்ரா என்றாலே பலரது மனத்தில் தோன்றும் அடுத்த வார்த்தை ‘கழுதைப்பால்.’ அப்படி என்னதான் இருக்கிறது கழுதைப்பாலில்?

கிட்டத்தட்ட மனிதனின் தாய்ப்பாலுக்குச் சமமானது கழுதைப்பால். லாக்டோஸ் அதிகமுண்டு, பசும்பாலைவிட கொழுப்பு குறைவு. அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதில் கழுதைப்பாலும் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவத்துக்கும் பல்வேறு விதங்களில் உபயோகிப்படுத்தி இருக்கிறார்கள். அழகுக் குறிப்புகளும் கொடுக்கிறார்கள். கழுதைப்பாலில் குளித்தால் முகச்சுருக்கங்கள் வரவே வராது. தோலில் மினுமினுப்பு அதிகரிக்கும். வெண்மை நிறம் மிளிரும். ஒரு நாளில் ஏழுமுறை கழுதைப் பாலில் முகம் கழுவினால் முகம் என்றென்றைக்கும் புத்துணர்வுடன் இருக்கும்.

கி.பி. 30 முதல் 65 வரை வாழ்ந்த ரோம் அரசி சபினா (பிடில் புகழ் நீரோவின் இரண்டாவது மனைவி), கழுதைப் பாலில் குளித்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அவள் எங்காவது வெளியூர் சென்றாலும் அவளுக்காகக் கையுடனேயே அண்டா அண்டாவாக கழுதைப்பால் கொண்டு செல்வார்களாம் அல்லது நூற்றுக்கணக்கான கழுதைகளையே ஓட்டிக் கொண்டு செல்வார்களாம். நெப்போலியனின் தங்கை பவுலினும் கழுதைப் பாலில் குளித்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. இருக்கட்டும், கிளியோபட்ரா? அந்த விஷயத்துக்கு அப்புறமாக வருவோம்.

எகிப்தியர்களுக்குக் காலை எழுந்தவுடன் குளிக்கும் வழக்கம் இருந்ததில்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு, வெயில் விடைபெறும் வேளையில் மாலைக் குளியல் போட்டிருக்கிறார்கள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனையில் இளவரசியாக சகல வசதிகளுடன் வளர்ந்துவந்த கிளியோபட்ராவும் அந்த வழக்கத்தைத்தான் கடைபிடித்திருக்கிறாள்.

அரண்மனைக்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே குளியல் தொட்டிகள் இருந்தன. வெந்நீர்க் குளியலுக்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கிளியோபாட்ரா ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளித்தாள். உடல் தேய்த்துக் குளிக்க, வளைவான தகடு (Strigil) ஒன்றை உபயோகப்படுத்தினாள். குளியலை முடிக்க குறைந்தது இரு மணி நேரம் பிடிக்கும்.

கிளியோபாட்ரா உபயோகப்படுத்திய இன்னொரு முக்கியமான அழகுப் பொருள் மருதாணி. கூந்தலில், கைவிரல்களில், பாதங்களில் மருதாணி உபயோகப்படுத்தினாள். தவிர முகத்துக்கான இயற்கை கிரீம்கள், கண்ணுக்கான மை, உதட்டுக்கான சாயம், முகப் பொலிவுக்கான பூச்சுகள், வாசனைக்கான திரவியங்கள் – எல்லாமே உபயோகப்படுத்தியிருக்கிறாள்.

படுத்திக் கொள்ளட்டும். அவள் பொன்வண்டு சோப்பு வேண்டுமானாலும் தேய்த்துக் குளித்திருக்கட்டும். அதெல்லாம் விஷயமே இல்லை. கழுதைப்பாலில் குளித்தாளா?

சான்றுகள் எதுவும் இல்லை. எகிப்தில், கிரீஸில், ரோமில் வாழ்ந்த உயர்குடிப் பெண்கள் எல்லோருமே பாலில் குளிக்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார்கள். அந்த விதத்தில் கிளியோபாட்ராவும் பாலிலோ, கழுதைப் பாலிலோ (ஆரோக்யா நாலரை பாலிலோ) குளித்திருக்கலாம். இதில் கவனிக்கப்பட (சந்தோஷப்பட) வேண்டிய விஷயம் எகிப்தியர்களுக்குத் தினமும் குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதுதான்.

கழுதைப்பாலைத் தாண்டியும் கிளியோபாட்ரா பற்றி தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவளது பிறப்பு முதல், அவள் பேரழகியா, நல்லவளா, இனவெறி பிடித்தவளா, தற்கொலை செய்துகொண்டாளா என்பதுவரை ஏகப்பட்ட சர்ச்சைகள் நிறைந்து கிடக்கின்றன. கிளியோபாட்ரா குறித்து ஏற்கெனவே பலவிதமான தகவல்கள் சேகரித்து வைத்திருந்தேன். 2010ல் அவள் வாழ்க்கை குறித்த புத்தகத்தை எழுத முடிவு செய்தேன். எழுதி முடித்தேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்பாகவே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிவிக்கக் ‘கடாமைப்பட்டிருக்கிறேன்.’ (ஆதாரம் : பாரா – http://www.writerpara.com/paper/?p=1786 பத்ரி – http://thoughtsintamil.blogspot.com/2011/01/3.html)

கிளியோபாட்ரா, சென்னை புத்தகக் கண்காட்சி கிழக்கு ஸ்டாலில் (F13, F14, F15) கிடைக்கும். ஆன்லைனில் வாங்க.

கருணாநிதியிடம் ஒரு கேள்வி; கலைஞரிடம் ஒரு கேள்வி.

என்றோ வாழ்ந்துவிட்டுப் போன அரசர்களின் ஆட்சி, அரசியல் இதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் நேற்று வாழ்ந்துவிட்டுப்போன, இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் அரசியலில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. எனவே தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றிய நிறையறிவு எனக்குக் கிடையாது. தெரிந்துகொள்ள பேராசை உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு புத்தகங்களுக்காகக் (இரண்டு பாகங்கள்) காத்திருக்கிறேன்.

திராவிட இயக்க முக்கிய தலைவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் இருக்கின்றன.

பெரியாரிடம் ஒரு கேள்வி

ஒடுக்கப்பட்டவர்களை ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்பதற்காகக் குரல் கொடுத்ததில் தங்களுடைய முன்னோர் என்றால் அது அயோத்திதாசப் பண்டிதர். அவருடைய வழிமுறைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர் முன்வைத்த தமிழ் பௌத்தத்தை எப்படி அணுகுகிறீர்கள்?

அண்ணாவிடம் ஒரு கேள்வி

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – இது தாங்கள் சொன்னதுதான். கடவுளே கிடையாது என்ற பாரம்பரியத்தில் இருந்துவந்த நீங்கள், இதுபோல விட்டுக் கொடுக்க வேண்டியிருந்த சூழ்நிலைகள் குறித்து வருத்தப்பட்டிருக்கிறீர்களா? கொண்ட லட்சியங்களை நிறைவேற்ற கட்சி அரசியல் துணை போகாது என்று உணர்ந்த தருணம் உண்டா?

கருணாநிதியிடம் ஒரு கேள்வி

எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆரைக் காட்டிலும் அதிகம் புரிந்தவர்கள் நீங்கள். அப்படியிருக்கும்போது யாரை நம்பி (அல்லது எதனால்) எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து விலக்க முடிவுசெய்தீர்கள்? தப்புக்கணக்கு போட்டுவிட்டதாக என்றேனும் நினைத்திருக்கிறீர்களா?

எம்.ஜி.ஆரிடம் ஒரு கேள்வி

கடவுளுக்கு எதிரான சிந்தனைகளைக் கொண்ட திராவிட இயக்கத்துக்குள் இருந்துகொண்டே, மூகாம்பிகையையும் சங்காராச்சாரியையும் தொழுது, ஆட்சியிலும் நீடித்தது உங்களுடைய பலமா? திராவிட இயக்க ஆதரவாளர்களின் பலவீனமா?

வைகோவிடம் ஒரு கேள்வி

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி தாங்கள்தான் என்று காங்கிரஸ், பாமக, தேமுதிக போன்றவை எல்லாம் மார்தட்டிக் கொள்ளும்போது, கட்டமைப்பு ரீதியாக மாநிலம் முழுக்க மதிமுகவைப் பரப்பியிருக்கும் நீங்கள் என்ன நினைத்துக்கொள்வீர்கள்?

கலைஞரிடம் ஒரு கேள்வி

டெல்லியில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள அரசியல் சாதுரியம், பேச்சுத்திறன், ஆங்கிலப்புலமை என்ற மூன்று விஷயங்களும் அத்தியாவசியம். ஈ.வெ.கி. சம்பத், முரசொலி மாறன், வைகோ போன்றவர்கள்தான் திமுகவின் டெல்லி முகங்கள். இருவர் மறைந்துவிட்டார்கள். வைகோ விலகிவிட்டார். இவர்களைப் போல திறமைவாயந்த வேறு எவரும் திமுகவில் இன்று இல்லை அல்லது நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை. ஆக, திமுகவின் டெல்லி அரசியல் இனி எடுபடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

தலைவர்களிடம் இருந்து என் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கப் போவதில்லை. ஆர். முத்துக்குமாரின் புத்தகங்கள், இதற்குரிய விடைகளைக் கொடுக்குமா என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

திராவிட இயக்க வரலாறு முதல் பாகம் (ரூ. 200), இரண்டாம் பாகம் (ரூ. 200)

ரஜினியை மிஞ்சிய கமல்!

அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை.

கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து உடைக்கவும் முடிந்தது. உடைபட்ட ஒவ்வொன்றும் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் கமல் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பின்னால், அவற்றின் வெற்றி, தோல்விகளுக்குப் பின்னால், புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானியின் ஆர்வத்தைக் காணலாம்.

நடிப்பின் இலக்கணத்தை நிர்ணயித்தவர் சிவாஜி என்றால் அதை வெற்றிகரமாக நடைமுறைக்குப் பழக்கியவர் கமல். அதனால்தான், இந்த இருவரையும் பல சமயம் ஒரே நேர் வரிசையில் நிற்க வைத்து பெருமிதம் கொள்கிறது திரையுலகம்.

கமலின் சாதனைகள் அவர் நடிப்பிலோ அவர் பெற்ற விருதுகளிலோ, பாராட்டுகளிலோ அடங்கியிருக்கவில்லை. தமிழ் திரையுலகை அதன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அவர் கொண்டிருக்கும் ஏக்கத்தில், அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் அவர் நெஞ்சுறுதியில் அடங்கியிருக்கிறது.

சிவாஜி, ஜெமினி, சின்னப்பா தேவர் வரிசையில் பா. தீனதயாளனின் அடுத்த விறுவிறுப்பான புத்தகம் இது.

*

நேற்றுதான் புத்தகக் கண்காட்சிக்கு கமல் புத்தகம் வெளிவந்தது. வந்த நிமிடத்திலிருந்தே வாசகர்கள் விரும்பி எடுத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். திரையுலகத்தினர் மட்டுமல்ல, வெகுஜன வாசகர்களும் வாங்கிச் சென்றார்கள். கமல் கிழக்கின் ஹிட் புத்தக வரிசையில முதல் நாளே சேர்ந்துவிட்டது.

எடிட் செய்யும்போதே நினைத்தேன், கமல் புத்தகம் நல்ல கவனத்தைப் பெறும் என்று. ஆனால் நான் எதிர்பார்த்தைவிட, நல்ல வரவேற்பு பெற்றது குறித்து மகிழ்ச்சி. விமரிசனங்களுக்காகக் காத்திருக்கிறேன்.  நான் அறிந்து கிழக்கின் ரஜினி புத்தகம் இந்த அளவுக்கு விறுவிறுப்பான விற்பனையில் இடம்பெறவில்லை. (நண்பர் ராம்கி கோபித்துக் கொள்ளமாட்டார் என்ற உரிமையில் சொல்கிறேன்.)

சரித்திரத்தின் அஞ்சறைப் பெட்டி!

‘மாமா, நீங்க ஏன் சாஃப்ட்வேர்ல வேலை பார்க்கல?’ – சில நாள்களுக்கு முன் எனது அக்காவின் ஏழு வயது மகள் கேட்டாள். ‘கெமிஸ்ட்ரி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜின்னு படிச்சதுக்கு பதிலா, நீ ஹிஸ்டரி எடுத்துப் படிச்சிருக்கலாம்.’ எனக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்வது இது.

சில சமயங்களில் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஏன் எனக்கு வரலாற்றின் மீது ஆர்வம் வந்தது? பள்ளி நாள்களில் வரலாறை விரும்பிப் படித்திருக்கிறேனா?

நிச்சயமாக இல்லை. அதை ஒரு பாடமாக மட்டுமே நினைத்துப் படித்திருக்கிறேன். சொல்லப்போனால் கொட்டாவி விட வைக்கும் அல்லது மனனம் செய்யும் மனநிலைக்குத் தள்ளும் பள்ளி வரலாற்று நூல்கள்மீது என்னையறியாமலேயே எனக்குள் வெறுப்புதான் வளர்ந்து வந்திருக்கிறது.

பிற மொழிகளில் ஏராளமான வரலாற்று புத்தகங்கள் இருக்கின்றன. தமிழில்? அதுவும் ரசிக்கத் தகுந்த நடையில்? மிக மிக மிகக் குறைவே. எல்லோரும் விரும்பி படிக்கும் வகையில் சுவாரசியமான வரலாற்றுப் புத்தகங்களை எழுத வேண்டும் என்ற எனது இன்றைய நோக்கத்துக்கு காரணம், இவைதான்.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் – கதைகள் சிறுவயதில் கேட்டதுண்டு, படித்ததுண்டு. பட்டுடையில், படோடோப நகைகளோடு தலையில் கீரிடம் கவிழ்த்த ராஜாக்களை நாடகங்களில், திரைப்படங்களில் கண்டதுண்டு. ‘மனசுல பெரிய மைசூரு மகாராசான்னு நினைப்பு’ – யாரோ யாரையோ திட்டுவதை ரசித்ததுண்டு. சரி, உண்மையில் நம் மகாராஜாக்கள் எப்படி இருந்தார்கள்? எந்த மாதிரி வாழ்ந்தார்கள்? ‘யாரங்கே?’, ‘மாதம் மும்மாரி பொழிந்ததா?’ என்று நிஜமாகவே வசனம் பேசினார்களா? மாறுவேடமணிந்து இரவில் நகர்வலம் வந்தார்களா? குதிரைகள் பூட்டிய ரதத்தில் ராணிகளோடு டூயட் பாடிக்கொண்டு சென்றார்களா? அவர்கள் வேங்கையை வீழ்த்திய வீரர்களா அல்லது வெத்துவேட்டு கோமாளிகளா?

நிஜத்தை அறிந்துகொள்ள இந்தியாவிலிருந்த சமஸ்தானங்களை ஆண்ட மகாராஜாக்கள் குறித்த விஷயங்களைத் தேட ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பித்தேன். லயித்துப் போனேன். இதைவிட சுவாரசியமான வரலாறு வேறெதுவுமே கிடையாது என்று தோன்றியது. மகாராஜாக்கள் குறித்த புத்தகம் ஒன்றை எழுதிவிட வேண்டுமென்று நினைத்தேன். அதைத் தொடராகவே எழுதும் வாய்ப்பு குமுதம் ரிப்போர்ட்டரில் அமைந்தது.

தொடருக்கு ‘அகம் புறம் அந்தப்புரம்’ என்ற பொருத்தமான தலைப்பை வழங்கிய நண்பர் பாலு சத்யாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது முதல் சரித்திரத் தொடர். எப்படியும் ஐம்பது அத்தியாயங்கள் எழுதிவிட முடியும் என்ற நம்பினேன். ஆரம்பித்த சில வாரங்களிலேயே நூறு அத்தியாயங்கள் தாராளமாக எழுதலாம் என்று தெரிந்தது. வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பு என் நம்பிக்கையை பிரகாசமாக்கியது. எனது தேடல் அதிகமானது. படிக்கப் படிக்கத் தீராத விஷயங்கள். நான் குதித்திருப்பது சமுத்திரத்தில் என்று உணர்ந்துகொண்டேன்.

மகாராஜாக்கள் என மனத்துக்கு நெருக்கமானவர்களாகிப் போனார்கள். இரண்டு வருடங்கள். வாரம் இரண்டு அத்தியாயங்கள். ஒரு தவம் போலத்தான் செய்தேன்.

மகாராஜாக்களிடம் பிரிட்டிஷார் எப்படி நடந்துகொண்டார்கள்? சமஸ்தானங்களின் அரசியல் நடவடிக்கையில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் எவ்வளவு அழுத்தமாக இருந்தது? அன்றைய சமூகத்தில் எப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன? அந்தப்புரத்தின் மயக்கத்தினால் சீரழிந்த மகாராஜாக்கள் யார் யார்? அந்தப்புரத்தில் கவனம் செலுத்தாமல் தன் சமஸ்தான மக்களின் வீட்டில் அடுப்பு எரிகிறதா என்று நிஜமாகவே கவலைப்பட்ட மகாராஜாக்கள் இருந்திருக்கிறார்களா? சமஸ்தானங்களில் வரலாறோடும் மகாராஜாக்களின் வாழ்க்கையோடும் நிறுத்திக் கொள்ளாமல் அப்படியே அவற்றோடு தொடர்புடைய பல விஷயங்களையும் பதிவுசெய்ய ஆரம்பித்தேன்.

மகாராஜாக்களின் வெளிநாட்டுப் பயணங்கள் எப்படி இருந்தன என்று எழுதும்போது அவர்கள் அப்போது சென்ற இடங்கள் குறித்த வரலாற்றையும் சிறிய அளவில் பதிய முடிந்தது. மகாராஜா போலோ, கிரிக்கெட் விளையாடுவாரா? சரி, இந்தியாவுக்குள் போலோவும் கிரிக்கெட்டும் எப்போது, எப்படி வந்தது, எந்த சமஸ்தானங்களிலெல்லாம் போலோ அணி இருந்தது, எந்த மகாராஜாக்களெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் போன்ற விஷயங்களையும் தொகுத்துத் தர முடிந்தது. மகாராஜா, வேட்டையாடுவதற்கென்றே காட்டுக்குள் அரண்மனை கட்டினாரா? சரி, எப்படி வேட்டையானார்கள், எவ்வளவு வேட்டையாடினார்கள், யாராவது வேட்டையாடுவதைத் தடுக்க விரும்பினார்களா – என்பன போன்ற தகவல்களை அளிக்க முடிந்தது. இப்படி எத்தனையோ உப வரலாறுகளைச் சேர்த்து மொத்தமாகப் பார்க்கும்போது, ‘சரித்திரத்தின் அஞ்சறைப் பெட்டி’ ஒன்றை உருவாக்கிக் கொடுத்த திருப்தி.

நிறைவு அத்தியாயம் வெளிவந்ததும், ‘ஏன் அதற்குள் நிறுத்தி விட்டீர்கள்?’ என்று என்னை உரிமையோடு கோபித்துக் கொண்ட வாசகர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இனி இவர்களுக்கு என் நன்றிகள். குமுதம் ரிப்போர்ட்டரில் எனக்காக இடம் ஒதுக்கிக் கொடுத்த ஆசிரியர் இளங்கோவன் அவர்களுக்கு. தொடருக்காக என்னைப் பல்வேறு விதங்களில் ஊக்கப்படுத்திய என் ஆசிரியர் பா. ராகவனுக்கு. பிரம்மாண்டமாக இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்துள்ள பதிப்பாளர் பத்ரிக்கு.

தொடருக்கான அறிவிப்பு விளம்பரம் முதல், இந்தப் புத்தகம் வரை நயத்தோடு வடிவமைத்துக் கொடுத்த நண்பர் குமரனுக்கு. புத்தக ஆக்கத்தில் உற்சாகமாக ஒத்துழைத்த கதிர், முத்துகணேசன், ஆனந்துக்கு. ரிப்போர்ட்டரில் வெளிவருவதற்கு முன்பாகவே என்னிடமிருந்து அத்தியாயங்களை வாங்கிப் படித்து கருத்துகள் சொல்லிய நண்பர்கள் உமா சம்பத், பாலுசத்யா, ஜானகிராமனுக்கு. அடிக்கடி தொலைபேசியில் வாழ்த்திய ஆடிட்டர் ரவிகுமாருக்கு. மற்றும் இந்தத் தொடரை வாசித்த முகமறியாத வாசகர்களுக்கு.

ரிப்போர்ட்டரில் வெளிவந்த அத்தியாயங்களின் சற்றே மேம்படுத்தப்பட்ட வடிவம் இந்த நூல். அடுத்தடுத்த தலைமுறைகளுக்காக, தமிழில் ஒரு முக்கியமான பதிவைக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கும்போது மனநிறைவு. ஆனால் இன்னமும் பதிவு செய்யப்படாத வரலாறுகளை நினைக்கும்போது… காலமும் சூழலும் அமையுமென நம்புகிறேன்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அகம் – புறம் – அந்தப்புரத்தோடு சந்திக்கிறேன்.

பக்கங்கள் : 1392. விலை ரூ. 750.