சரித்திரத்தின் அஞ்சறைப் பெட்டி!

‘மாமா, நீங்க ஏன் சாஃப்ட்வேர்ல வேலை பார்க்கல?’ – சில நாள்களுக்கு முன் எனது அக்காவின் ஏழு வயது மகள் கேட்டாள். ‘கெமிஸ்ட்ரி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜின்னு படிச்சதுக்கு பதிலா, நீ ஹிஸ்டரி எடுத்துப் படிச்சிருக்கலாம்.’ எனக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்வது இது.

சில சமயங்களில் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஏன் எனக்கு வரலாற்றின் மீது ஆர்வம் வந்தது? பள்ளி நாள்களில் வரலாறை விரும்பிப் படித்திருக்கிறேனா?

நிச்சயமாக இல்லை. அதை ஒரு பாடமாக மட்டுமே நினைத்துப் படித்திருக்கிறேன். சொல்லப்போனால் கொட்டாவி விட வைக்கும் அல்லது மனனம் செய்யும் மனநிலைக்குத் தள்ளும் பள்ளி வரலாற்று நூல்கள்மீது என்னையறியாமலேயே எனக்குள் வெறுப்புதான் வளர்ந்து வந்திருக்கிறது.

பிற மொழிகளில் ஏராளமான வரலாற்று புத்தகங்கள் இருக்கின்றன. தமிழில்? அதுவும் ரசிக்கத் தகுந்த நடையில்? மிக மிக மிகக் குறைவே. எல்லோரும் விரும்பி படிக்கும் வகையில் சுவாரசியமான வரலாற்றுப் புத்தகங்களை எழுத வேண்டும் என்ற எனது இன்றைய நோக்கத்துக்கு காரணம், இவைதான்.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் – கதைகள் சிறுவயதில் கேட்டதுண்டு, படித்ததுண்டு. பட்டுடையில், படோடோப நகைகளோடு தலையில் கீரிடம் கவிழ்த்த ராஜாக்களை நாடகங்களில், திரைப்படங்களில் கண்டதுண்டு. ‘மனசுல பெரிய மைசூரு மகாராசான்னு நினைப்பு’ – யாரோ யாரையோ திட்டுவதை ரசித்ததுண்டு. சரி, உண்மையில் நம் மகாராஜாக்கள் எப்படி இருந்தார்கள்? எந்த மாதிரி வாழ்ந்தார்கள்? ‘யாரங்கே?’, ‘மாதம் மும்மாரி பொழிந்ததா?’ என்று நிஜமாகவே வசனம் பேசினார்களா? மாறுவேடமணிந்து இரவில் நகர்வலம் வந்தார்களா? குதிரைகள் பூட்டிய ரதத்தில் ராணிகளோடு டூயட் பாடிக்கொண்டு சென்றார்களா? அவர்கள் வேங்கையை வீழ்த்திய வீரர்களா அல்லது வெத்துவேட்டு கோமாளிகளா?

நிஜத்தை அறிந்துகொள்ள இந்தியாவிலிருந்த சமஸ்தானங்களை ஆண்ட மகாராஜாக்கள் குறித்த விஷயங்களைத் தேட ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பித்தேன். லயித்துப் போனேன். இதைவிட சுவாரசியமான வரலாறு வேறெதுவுமே கிடையாது என்று தோன்றியது. மகாராஜாக்கள் குறித்த புத்தகம் ஒன்றை எழுதிவிட வேண்டுமென்று நினைத்தேன். அதைத் தொடராகவே எழுதும் வாய்ப்பு குமுதம் ரிப்போர்ட்டரில் அமைந்தது.

தொடருக்கு ‘அகம் புறம் அந்தப்புரம்’ என்ற பொருத்தமான தலைப்பை வழங்கிய நண்பர் பாலு சத்யாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது முதல் சரித்திரத் தொடர். எப்படியும் ஐம்பது அத்தியாயங்கள் எழுதிவிட முடியும் என்ற நம்பினேன். ஆரம்பித்த சில வாரங்களிலேயே நூறு அத்தியாயங்கள் தாராளமாக எழுதலாம் என்று தெரிந்தது. வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பு என் நம்பிக்கையை பிரகாசமாக்கியது. எனது தேடல் அதிகமானது. படிக்கப் படிக்கத் தீராத விஷயங்கள். நான் குதித்திருப்பது சமுத்திரத்தில் என்று உணர்ந்துகொண்டேன்.

மகாராஜாக்கள் என மனத்துக்கு நெருக்கமானவர்களாகிப் போனார்கள். இரண்டு வருடங்கள். வாரம் இரண்டு அத்தியாயங்கள். ஒரு தவம் போலத்தான் செய்தேன்.

மகாராஜாக்களிடம் பிரிட்டிஷார் எப்படி நடந்துகொண்டார்கள்? சமஸ்தானங்களின் அரசியல் நடவடிக்கையில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் எவ்வளவு அழுத்தமாக இருந்தது? அன்றைய சமூகத்தில் எப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன? அந்தப்புரத்தின் மயக்கத்தினால் சீரழிந்த மகாராஜாக்கள் யார் யார்? அந்தப்புரத்தில் கவனம் செலுத்தாமல் தன் சமஸ்தான மக்களின் வீட்டில் அடுப்பு எரிகிறதா என்று நிஜமாகவே கவலைப்பட்ட மகாராஜாக்கள் இருந்திருக்கிறார்களா? சமஸ்தானங்களில் வரலாறோடும் மகாராஜாக்களின் வாழ்க்கையோடும் நிறுத்திக் கொள்ளாமல் அப்படியே அவற்றோடு தொடர்புடைய பல விஷயங்களையும் பதிவுசெய்ய ஆரம்பித்தேன்.

மகாராஜாக்களின் வெளிநாட்டுப் பயணங்கள் எப்படி இருந்தன என்று எழுதும்போது அவர்கள் அப்போது சென்ற இடங்கள் குறித்த வரலாற்றையும் சிறிய அளவில் பதிய முடிந்தது. மகாராஜா போலோ, கிரிக்கெட் விளையாடுவாரா? சரி, இந்தியாவுக்குள் போலோவும் கிரிக்கெட்டும் எப்போது, எப்படி வந்தது, எந்த சமஸ்தானங்களிலெல்லாம் போலோ அணி இருந்தது, எந்த மகாராஜாக்களெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் போன்ற விஷயங்களையும் தொகுத்துத் தர முடிந்தது. மகாராஜா, வேட்டையாடுவதற்கென்றே காட்டுக்குள் அரண்மனை கட்டினாரா? சரி, எப்படி வேட்டையானார்கள், எவ்வளவு வேட்டையாடினார்கள், யாராவது வேட்டையாடுவதைத் தடுக்க விரும்பினார்களா – என்பன போன்ற தகவல்களை அளிக்க முடிந்தது. இப்படி எத்தனையோ உப வரலாறுகளைச் சேர்த்து மொத்தமாகப் பார்க்கும்போது, ‘சரித்திரத்தின் அஞ்சறைப் பெட்டி’ ஒன்றை உருவாக்கிக் கொடுத்த திருப்தி.

நிறைவு அத்தியாயம் வெளிவந்ததும், ‘ஏன் அதற்குள் நிறுத்தி விட்டீர்கள்?’ என்று என்னை உரிமையோடு கோபித்துக் கொண்ட வாசகர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இனி இவர்களுக்கு என் நன்றிகள். குமுதம் ரிப்போர்ட்டரில் எனக்காக இடம் ஒதுக்கிக் கொடுத்த ஆசிரியர் இளங்கோவன் அவர்களுக்கு. தொடருக்காக என்னைப் பல்வேறு விதங்களில் ஊக்கப்படுத்திய என் ஆசிரியர் பா. ராகவனுக்கு. பிரம்மாண்டமாக இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்துள்ள பதிப்பாளர் பத்ரிக்கு.

தொடருக்கான அறிவிப்பு விளம்பரம் முதல், இந்தப் புத்தகம் வரை நயத்தோடு வடிவமைத்துக் கொடுத்த நண்பர் குமரனுக்கு. புத்தக ஆக்கத்தில் உற்சாகமாக ஒத்துழைத்த கதிர், முத்துகணேசன், ஆனந்துக்கு. ரிப்போர்ட்டரில் வெளிவருவதற்கு முன்பாகவே என்னிடமிருந்து அத்தியாயங்களை வாங்கிப் படித்து கருத்துகள் சொல்லிய நண்பர்கள் உமா சம்பத், பாலுசத்யா, ஜானகிராமனுக்கு. அடிக்கடி தொலைபேசியில் வாழ்த்திய ஆடிட்டர் ரவிகுமாருக்கு. மற்றும் இந்தத் தொடரை வாசித்த முகமறியாத வாசகர்களுக்கு.

ரிப்போர்ட்டரில் வெளிவந்த அத்தியாயங்களின் சற்றே மேம்படுத்தப்பட்ட வடிவம் இந்த நூல். அடுத்தடுத்த தலைமுறைகளுக்காக, தமிழில் ஒரு முக்கியமான பதிவைக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கும்போது மனநிறைவு. ஆனால் இன்னமும் பதிவு செய்யப்படாத வரலாறுகளை நினைக்கும்போது… காலமும் சூழலும் அமையுமென நம்புகிறேன்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அகம் – புறம் – அந்தப்புரத்தோடு சந்திக்கிறேன்.

பக்கங்கள் : 1392. விலை ரூ. 750.

17 Comments

 1. Are you touching upon various castes, how British combined these small kings, who were ruled under Badshah…

  Most of the historical books ( written by foreign authors ) on India, that I have read, have missed out on the typical social life, medication, culture ( group, castes ) the trade etc.

  In fact, only certain south Indian states have some stone sculptures listing about 4 famous kings.

 2. வாழ்த்துகள் முகில்!

  இந்தப் புத்தகத்தையும் முகலாயர்களையும் ஒன்றாகச் சேர்த்துப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்கிறேன் :)

  - என். சொக்கன்,
  பெங்களூரு.

 3. ஆயில்யன் says:

  வாழ்த்துக்கள் !

 4. முகில், படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்…

  லோன் எடுத்தாவது இந்த புத்தகத்தை வாங்கி படிக்கிறேன்… :-)

 5. வாழ்த்துக்கள் முகில்

 6. //முகலாயர்களையும் //

  ???

 7. புருனோ,

  //முகலாயர்களையும் ???//

  அது முகிலின் இன்னொரு மெகா புத்தகம் – கண்காட்சி ஸ்பெஷல் வெளியீடு :)

  - என். சொக்கன்,
  பெங்களூரு.

 8. Mugil says:

  நன்றி சொக்கன், ஆயில்யன், புருனோ, சரவணகுமரன்.

  சரவணகுமரன் சொல்வதுபோல புத்தகத்தின் அளவு மிரட்சியைத் தருவது என்பது உண்மைதான். பத்ரிகூட புத்தகத்தைப் பார்த்துவிட்டு அடித்த கமெண்ட், ‘Its frightening.’ தராசில் ஒரு பக்கம் புத்தகத்தை வைத்து மறுபக்கம் நான் உட்கார்ந்தால்கூட புத்தகத்தட்டுதான் கீழேபோகும் என்று நினைக்கிறேன். ;)

  வெள்ளிமுதல் கண்காட்சியில் புத்தகம் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால் முதல் நாளிலிருந்தே ஸ்டாலில் எந்தவித விளம்பரமும் இல்லாத நிலையிலும், ‘அகம் புறம் அந்தப்புரம் இருக்கிறதா?’ என்று வாசகர்கள் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ;)

  - முகில் -

 9. Mugil says:

  ///Are you touching upon various castes, how British combined these small kings, who were ruled under Badshah…

  Most of the historical books ( written by foreign authors ) on India, that I have read, have missed out on the typical social life, medication, culture ( group, castes ) the trade etc.///

  விஜயசங்கர், பல்வேறு சமஸ்தானங்களையும் அதை ஆண்ட மகாராஜாக்களின் வாழ்க்கையும் அவர்களது பின்னணியையும் இதில் கொடுத்துள்ளேன். அரசியல், கலாசாரம், சமூக வாழ்க்கை இதில் உண்டு.

  முக்கியமான சமஸ்தானங்களின் வரலாறு இதில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்த எல்லா சமஸ்தானங்களின் வரலாறையும் (கைக்குட்டை அளவு சமஸ்தானங்கள் வரை) ஒன்றுவிடாமல் எழுத வேண்டுமென்றால், இன்னும் இதைப்போல ஏழெட்டு ‘வால்யூம்’கள் தேவைப்படலாம். ;)

 10. Thanks Mugil. I am waiting for the NHM discount online.

 11. [...] சில்லாயிரம் பக்கங்கள் கொண்ட அந்தப்புர நூல் சனியன்றுதான் அரங்குக்கு வருகிறதாம். [...]

 12. surya says:

  முகில், முகலாயர்கள் படிக்க ஆரம்பித்து விட்டேன். மீண்டும் அடுத்த வாரம் வருகிறேன். இதுவும் வாங்கி படிக்க ஆவல்.

 13. Mugil says:

  நன்றி சூர்யா!

 14. surya says:

  புத்தக கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்…
  http://mynandavanam.blogspot.com/2009/12/blog-post_31.html

 15. MSK says:

  ‘அகம் புறம் அந்தபுரம்’ வாங்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பட்ஜெட் தான் இடிக்கிறது. மூன்று அல்லது நான்கு தொகுதிகளாக (சமஸ்தானங்கள் வாரியாக) வெளியிட்டால் எங்களை போன்று பட்ஜெட் ஆசாமிகளும் வாங்கி படிக்க ஏதுவாக இருக்குமே !!

 16. சீனு says:

  //‘அகம் புறம் அந்தபுரம்’ வாங்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பட்ஜெட் தான் இடிக்கிறது. மூன்று அல்லது நான்கு தொகுதிகளாக (சமஸ்தானங்கள் வாரியாக) வெளியிட்டால் எங்களை போன்று பட்ஜெட் ஆசாமிகளும் வாங்கி படிக்க ஏதுவாக இருக்குமே !!//

  அதே அதே…நான் வாங்காத காரணம் இதுவும், இந்த புத்தகத்தை பயணங்களின் போது எடுத்து செல்ல முடியாது என்பது தான்.

 17. Mugil says:

  நண்பர்களே,

  நிச்சயமாக இது பட்ஜெட் புத்தகம் அல்ல. பயணங்களின்போது எடுத்துச் செல்ல இயலாதுதான். ஆனால் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளாக வெளியிடும்பட்சத்தில் இந்த புத்தகத்துக்கான ‘மதிப்பு’, ‘பிரம்மாண்டம்’ காணாமல் போய்விடும் என்பது என் கருத்து. பாராவின் கருத்தும் இதுவே. எங்கள் ஆசிரியர் குழுவில் பலருடைய கருத்தும் இதுவே.

  எனவே விலையை, அளவைப் பொறுத்தருள்க!

Leave a Reply