சுஜாதாவின் கொலைகள்

சென்னை புத்தகக் காட்சி 2011 – கடந்த நான்கு நாள்கள் ஒரு பார்வை.

* ‘வானுயர்ந்த சோலையிலே… நீ நடந்த பாதையெல்லாம்…’ பாடலை பாடிக்கொண்டே செல்வது உத்தமம். நடக்கும் பாதையில் கீழே பொருத்தப்பட்டுள்ள மரப்பலகைகள் எப்போது உடைந்து நம்மை உள்ளிழுக்குமோ என்ற பயம் கண்காட்சிக்குள் நுழைந்து சில அடிகள் எடுத்து வைத்தவுடன் உங்களுக்கு ஏற்படப்போவது சர்வ நிச்சயம். தனுஷுக்குத் தம்பிபோன்ற உடல்வாகுடன் இருக்கும் நானே பயப்படுகிறேன் என்றால், பிரபுவுக்கு அண்ணன்போல இருக்கும் பாரா, ஹரன் பிரசன்னா போன்றோர் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.

* இந்தமுறை வள்ளுவர் பாதை, ஷெல்லி பாதை, கம்பர் பாதை, சேக்ஸ்பியர் பாதை என்ற ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். நல்ல யோசனைதான். ஆனால் ‘ஓளவையார் பாதை’ என்று தவறாக அச்சிட்டு நம் தமிழ் மூதாட்டியை அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். தவிர, பபாஸி வழங்கும் ஸ்டால் வரைபடத்தில் ‘பாரதியார் பாதை’ என்று அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் நிஜத்தில் அங்கே இருப்பது ‘மகாத்மா காந்தி பாதை.’ அதற்குப் பக்கவாட்டில் இருக்கும் நீண்ட வரிசைதான் பாரதியார் பாதை. எனவே வாசகர்கள் வரைபடத்தைப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.

* இங்கே ஒரு கண்டனத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். திராவிட அரசியலில் எவ்வளவோ விஷயங்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்தவரும், இளைஞன் வரை இடையறாது எழுத்துச் சேவை ஆற்ற்ற்ற்ற்றிக் கொண்டிருக்கும் கலைஞரின் பெயரில் பாதை ஏன் வைக்கவில்லை? இந்தவார ஆ.வி.யில் கலைஞருக்காக வரிந்துகட்டிக் கொண்டு ஜிங்ஜக் அடித்திருக்கும் இயக்குநர் இமய்யம் பாரதிராஜா சார்பில் இந்தக் கண்டனத்தை முன் வைக்கிறேன்.

CLOSED

* கடந்த செவ்வாய் முதல் வெள்ளிவரை கண்காட்சியில் கூட்டம் இல்லை, அவ்வளவாக இல்லை, இல்லவே இல்லை. வெளியில் அமைக்கப்பட்டுக்கும் (நான்கோ, ஐந்தோ) டிக்கெட் கௌண்டர்களில் இரண்டு மட்டுமே இயங்கின (சில சமயம் ஒன்று மட்டும்). மற்றவை ‘CLOSED’  என்ற அறிவிப்புடன் காணப்பட்டன. ‘HOUSE FULL’ என்று பலகை மாட்டும் காலமெல்லாம் பு.கண்காட்சிக்கு வருமா என்ன?

* சென்ற வருடம் கிழக்கில் ‘ராஜீவ் கொலை வழக்கு’தான் பெஸ்ட் செல்லர் என்று ஓரிரு நாள்களிலேயே சொல்ல முடிந்தது. இந்தமுறை அப்படி எதுவும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் ஹீரோயிஸம் காட்டுகிறது. சனி, ஞாயிறு கடந்தால்தான் தெரியும். பந்தயத்தில் முன்னணியில் உள்ள கிழக்கு புத்தகங்கள் :  காஷ்மீர், ஸ்பெக்ட்ரம், திராவிட இயக்க வரலாறு, ஆர்எஸ்எஸ், ராஜ ராஜ சோழன், முதல் உலகப் போர்.

சமர்ப்பணம் சொக்கனுக்கு..

* கிழக்கின் சினிமா புத்தகங்களில் இந்த வருடமும் தீனதயாளனின் ‘கமல்’ அதிகம் விற்பனையாகிறது. அதனுடன் போட்டி போடுவது ‘நான் நாகேஷ்.’ (கல்கியில் தொடராக வந்த நாகேஷின் அதிகாரபூர்வ வாழ்க்கை. தொகுப்பு எஸ். சந்திரமௌலி.) கடந்த ஐந்து வருடங்களாக ‘சொல்லிக்கொள்ளும்படியாக’ விற்பனையான சந்திரபாபு இந்தவருடம் விற்பனைக்கு இல்லை. வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

* கடந்த சில வருடங்களாக வரலாற்றுப் புத்தகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி கொடுக்கிறது. மாயவலையையும், அகம் புறம் அந்தப்புரத்தையும் வாசகர்கள் விலையைப் பொருட்படுத்தாமல் வாங்கிச் செல்லும்போது…. ஓர் எழுத்தாளனுக்கு வேறென்ன சந்தோஷம் இருக்கக்கூடும்.

*  நேற்று கிழக்கில் ஓர் அம்மணி ஆர்வமாக நுழைந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் குறித்து கேள்விப்பட்டு வந்திருப்பார்போல. உள்ளே செல்லவில்லை. நேராக பில் கௌண்டருக்கு வந்து நின்றார். தன் கையிலிருந்த சிறு நோட்டைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். ‘கொலையுதிர் காலம், மீண்டும் ஒரு கொலை எடுங்க. மேற்கே ஒரு குற்றம் இருக்கா?’ – இதுபோன்ற ‘கொலை’வெறி வாசகர்கள் இருக்கும்வரை சுஜாதா வாழ்வார்.

* கண்ணதாசனில் ‘வனவாசம்’ அழகான கட்டமைப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘மனவாசம்’ புத்தகமும் அருமையாக அச்சிடப்பட்டுள்ளது. முதல் வாசம் ரூ. நூறுக்கும், இரண்டாவது ரூ. எழுபதுக்கும் கிடைக்கிறது. மேலும் சில கண்ணதாசனின் புத்தகங்களும் புதிய கட்டமைப்புடன் கவரும் விதத்தில் வெளிவந்துள்ளன.

* கடந்த நான்கு நாள்களில் நான்கு புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர் ரேவதியின் ‘அப்பள ராஜா’, ‘இசையைக் கேட்குமா பாம்பு?’ – சிறுகதை நூல்கள். இரண்டுமே நடைபாதைக் கடையில் கிடைத்தன. ஹோவர்ட் ஃபாஸ்டின் ‘ஸ்பார்ட்டகஸ் ’ (தமிழில் ஏ.ஜி. எத்திராஜுலு) – என்.சி.பி.ஹெச்சில் வாங்கினேன். இன்னொரு நூல், அசோகமித்திரன் தொகுத்துள்ள ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ – அதிலிருந்து சா. கந்தசாமியின் ‘ஒரு வருடம் சென்றது’ சிறுகதை நேற்றிரவு படித்தேன். இன்னும் மனத்துக்குள் ஏதோ செய்துகொண்டிருக்கிறது.

அமைதிப் பேச்சாளர் நாஞ்சில்

* நேற்று கண்காட்சியில் நண்பர் தளவாய் சுந்தரம் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் அங்கே நிற்கிறார் என்றால் அருகில் ‘இலக்கிய நிகழ்வு’ ஏதோ நடப்பதாக அர்த்தம். எட்டிப் பார்த்தேன். உயிர் எழுத்து ஸ்டாலில் நாஞ்சில் நாடனின் கவிதைத்தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்கள். மனுஷ்யபுத்திரனின் முன்னிலையில் நாஞ்சில் நாடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன ஓர் அமைதியான குரல். பேசியது நிச்சயமாக அருகில் நின்றவர்களுக்குக்கூட கேட்டிருக்காது. இந்த அடக்கத்துக்காகவே இவருக்கும் வருடந்தோறும் சாகித்ய அகாடமி கொடுக்கலாம்.

* இன்றும் நாளையும் புத்தகக் கண்காட்சியில்தான் இருப்பேன். சந்திக்கலாம்.