சார், வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்…

சார்… வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்கள்ளாம் எறங்கி சாப்பிடலாம் சார்..’

ஏய்… எந்திரிடா வெண்ணை… நைட்டு ரெண்டு மணிக்கு கொட்டுற பனியில ஒருத்தன் கா கா-னு கத்திக்கிட்டிருக்கேன். பஸ்சுல சன்னலோரமா சீட்டு கிடைச்சவுடனே, எதோ பரலோகத்துலயே சீட்டு கிடைச்சாப்புல பவுசா தூங்கிருவீங்களே.. அடச்சீ எந்திரி…

தப்பா நெனைச்சுக்காதீங்க. இந்த சாலையோர ஓட்டலுதான் எனக்கு எல்லாம். இந்த ரூட்டுல ஒரு மணி நேரத்துக்கு அம்பது வண்டி போச்சுதுன்னா, அதுல பத்து, பதினைஞ்சுதான் எங்க மொபசல் ஓட்டலுக்குள்ள வருது. ஏன்னா போட்டிக்கு நிறைய ஓட்டலு பக்கத்துலயே இருக்கு. பஸ்சு டிரைவரு, கண்டக்டரை சரிகட்டி, வண்டியை நம்ம ஓட்டலு பக்கமா நிப்பாட்ட வைக்குறதுக்குள்ள நாங்க படுற பாடு எங்களுக்குத்தான தெரியும். நிக்குற வண்டியில பாதி பேரு, உள்ளே ஒக்காந்து உலக மகா தூக்கம் தூங்கிட்டு இருந்தாங்கன்னா, எங்க பொழைப்பு என்னாவறது?

அதான் தூங்குறவனை எழுப்புறதுல தயவு தாட்சண்யமே பாக்குறது கிடையாது. வண்டி வந்து நின்னாப் போதும். உலக்கையை வைச்சு இடிக்குற மாதிரி என் கையால பஸ்ஸைச் சுத்தித் தடதடனு தட்டிக்கிட்டே ‘டீ… காப்பி… டிப்பன்’னு கத்த ஆரம்பிச்சுருவேன். தட்டுற, தட்டுல அவனவன் அரண்டு, மிரண்டு பதறி அடிச்சுக்கிட்டு முழிப்பான். ஒண்ணுமே புரியாம இறங்கி வந்துருவான்.

ஆனா, சில பேரு இருக்கான் பாருங்க, ஏதோ வாழ்க்கையில அன்னிக்குத்தான் மொத மொதலா தூங்குறாப்புல போஸ் கொடுத்துட்டு இருப்பானுங்க! அது என்னை அவமானப்படுத்துற மாதிரி இருக்கும். விடுவேனா… என்னோட வால்யூமை ஃபுல்லா ஏத்திக்கிட்டு, பஸ் சன்னல்கிட்ட போயி கத்தோ கத்துன்னு கத்துவேன். பஸ்சு மேல முட்டோ முட்டுன்னு முட்டுவேன். அப்புறமென்ன, எவனாயிருந்தாலும் இறங்கித்தான் ஆவணும்.

இந்த மொபசல் ஓட்டல் வளாகத்துல சம்பந்தமேயில்லாத ஆடியோ கேசட் கடை ஒண்ணு துருத்திக்கிட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியுமா! தூங்குறவங்களை எழுப்ப இன்னொரு டெக்னிக். கேசட்டைப் போட்டு, பெருசாக் கத்த விட்டுருவோம்.

‘பார்த்த முத நாளே.. உன் மூஞ்ச
பார்த்த முத நாளே..
டாஸ்மாக் போனேனே – நாந்தான்
டாஸ்மாக் போனேனே!’

இந்த ரேஞ்சுலதான் பாட்டெல்லாம். இதைப் பாடுறதுக்குன்னே கொடூர குரல்களோட ஒரு குரூப் இருக்குது. இதைக் கேட்டா, செத்துப்போனவனே கூட எந்திரிக்க சான்ஸ் இருக்கு. இந்தக் கேசட்டையும் சில ‘நல்ல மனுசங்க’ காசு கொடுத்து வாங்கிட்டுப் போவானுங்க தெரியுமா!

பஸ்சை விட்டு இறங்குன உடனே பாதி பேரு அப்படியே அங்கிட்டும் இங்கிட்டு நோட்டம் விடுவாங்க. அதாவது டாய்லெட்டுக்குப் போகாம, அப்படியே ஓரமா ஒதுங்கிடலாம், ஒரு ரூவாயை மிச்சப்படுத்தலாமுன்னு உலக மகா திட்டம் போடுவாங்க. வா மவனே வா, நீ உற்சாகமா திறந்தவெளி புல்கலைக்கழகத்துல போறதுக்கா, நாங்க காசைப் போட்டு கருமத்தைக் கட்டி வெச்சிருக்கோம்னு மரியாதையாச் சொல்லுவேன். அப்படியும் சில பேரு கேட்க மாட்டான். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போயி இருக்கலாமுன்னு அறிவுபூர்வமா திட்டம் போடுவானுங்க. நான் விடுவேனா.

‘எப்பா.. நீ உள்ள போயி இருக்க வேணாம். எங்கிட்டு வேணும்னாலும் போய் இரு. ஆனா ஒரு ரூவாக் காசைக் கொடுத்துரு’ன்னு கட் அண்டு ரைட்டாச் சொல்லுவேன். அப்புறமென்ன, ஒரு ரூவாயக் கொடுத்துட்டு, மூக்கைப் புடிச்சிக்கிட்டு உள்ளயே போயிருவான்.

பக்கத்துல நாலு மைலு தொலைவுல இருக்குற பசுமரத்துப்பட்டிதான் என் சொந்த ஊரு. நான் இந்த ஓட்டல்ல எட்டு வருசமா இப்படி எடுபுடி வேலைகளைப் பாத்துக்கிட்டிருக்கேன். எல்லா வேலையும் செய்வேன். இப்படி வந்து நிக்குற வண்டிங்க மத்தியிலதான் இந்த டேவிட்டோட வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.

நேத்து வடநாட்டுக்காரன் ஒருத்தன் வந்தான். செம கடுப்பைக் கிளப்பிட்டான். ஆம்னி பஸ்ல இருந்து இறங்குனான். கேவலமா ஒரு கொட்டாவி விட்டுக்கிட்டே படு பங்கரையா சோம்பல் முறிச்சான். இளநி எவ்ளோன்னு இங்கிலீஷ்ல விசாரிச்சான். வாங்கல. அடுத்து கூல்டிரிங்ஸ் எவ்ளோன்னு ஹிந்தியில விசாரிச்சான். வாங்கல. அடுத்து டீ எவ்ளோன்னு சைகையிலேயே விசாரிச்சான். அதையும் குடிக்கல. இப்படி கொலை கேஸை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் மாதிரி எல்லாத்தையும் விசாரிச்சிட்டு ஓரமா போய் ஒக்காந்துட்டான்.

எனக்குள்ள டென்ஷன் தாண்டவமாடிடுச்சு. அவன்கிட்ட போய், ஒரு ரசீதை நீட்டி ‘டென் ரூபிஸ்’னு மிரட்டலா சொன்னேன். ‘கியா?’ன்னு முழிச்சான். ‘டிக்கி பார்க்கிங் சார்ஜ்’னு சொன்னேன். ஒண்ணும் புரியாம பத்து ரூபாயைக் கொடுத்துட்டு பஸ்சுக்குள்ள ஏறிப் பதுங்கிட்டான்.

போன வாரம் இன்னொரு காமெடி நடந்துச்சு. ஒரு கவர்மெண்டு பஸ்சு வந்துச்சு. உள்ளயிருந்து வந்த ஆம்பிளைங்க எல்லாம், படு சோகமா நாலு நாள் தாடியோட இறங்குனாங்க. ஒருத்தர் மட்டும் எங்கிட்ட வந்து, ‘ஏம்ப்பா, இங்க சலூன்லாம் கெடையாதா?’ன்னு கேட்டாரு. ‘இல்லை’ன்னு சொன்னவுடனே, ‘முடிஞ்சா ஒரு சலூனையும் வைச்சிருங்க அப்பு. பாதயாத்திரையா கெளம்பியிருந்தாக் கூட இந்நேரம் ஊரு போய்ச் சேர்ந்திருப்பேன். கட்டையில போறவன்… இந்த பஸ்சுல நான் என்னிக்கு ஏறி ஒக்காந்துன்னு எனக்கே நியாபகத்துல இல்ல. இன்னும் ஊரு போய்ச் சேரல’ன்னு கண்ணீர் மல்க கதறிட்டாரு. அப்ப, அந்த பஸ் கண்டக்டரு வந்து, ‘ஏம்ப்பா, எல்லாரும் வண்டியில ஏறியாச்சா? நேராவுது. காலாகாலத்துல போய்ச் சேர வேணாமா’ன்னாரே பாக்கலாம்.

ஒரு வழியா அந்தக் கட்டை வண்டி கெளம்பிப் போச்சுது. அடுத்த அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஒரு ஆளு ‘குய்யோ முய்யோ’ன்னு கத்திக்கிட்டே ஓடியாந்தாரு. ‘இங்கிட்டுருந்த மஞ்சக் கலரு வண்டியெங்க? அய்யய்யோ.. நான் அதுல போனுமே’ன்னு அழுதாரு. ‘அதான் போயிருச்சே. போனும் போனும்னா என்னாத்த பண்ணுறது’ன்னு கேட்டேன்.

‘அய்யா.. வவுத்தக் கலக்குச்சுன்னு வெளிய போனேன். போயிட்டு வந்தவுடனே, பசிக்குற மாதிரி இருந்துச்சேன்னு போய்ச் சாப்பிட்டேன். மறுபடியும் வவுத்தக் கலக்குச்சுதுன்னு வெளிய போய்ட்டு வந்தேன். மறுபடியும் பசிச்சிருமோன்னு பயந்து இன்னொரு தடவைக் கொஞ்சமா சாப்பிட்டேன். பஸ்ல ஏறினா திரும்ப வவுத்தக் கலக்குமோன்னு பயம் வந்துருச்சு. அதான் மறுபடியும் வெளிய போய்ட்டு வந்து, பார்சல் ஒண்ணு வாங்கிட்டு வந்து பாக்குறேன். பஸ்சைக் காணோமே’ன்னு அழுதாரு.

‘யோவ்.. நீ உன் இஷ்டத்துக்கு ‘உள்ளே-வெளியே’ விளையாண்டுக்கிட்டு இருந்தேன்னா பஸ்சு வெயிட் பண்ணுமா? சரி, அடுத்த வண்டி இந்தா நிக்குது. டிக்கெட் வெச்சிருக்கேல்ல. சொல்லி ஏத்தி உடுறேன். கவலைப்படாத, நீ வந்த வண்டி போற ஸ்பீடுக்கு அங்கப்பிரதட்சணம் பண்ணிக்கிட்டே போனாக்கூட ஓவர்டேக் பண்ணிடலாம்’னு சமாதானப்படுத்தி அடுத்த வண்டியில அனுப்பி விட்டேன்.

ம்.. இப்படியே ‘டீ.. காப்பி.. டிப்பன்’னு கூவிக்கிட்டு, வர்ற வண்டிக்கெல்லாம் கண்ணாடி துடைச்சு விட்டுக்கிட்டே பொழைப்பை எவ்வளவு நாள்தான் ஓட்ட முடியும்? நானும் எனக்குன்னு சில கனவுகளை வெச்சிருக்கேன். எடுபிடியா நான் வேலை பாக்குற இந்த ஓட்டல் வளாகத்துலயே ஒரு சின்னக் கடையைப் போடணும். அப்படியே சினிமாவுல வர்ற மாதிரி மளமளன்னு முன்னேறணும். கடைசியில ஒருநாள் இந்த ஓட்டல் வளாகமே எனக்குச் சொந்தமா இருக்கணும். எப்படி, சூப்பரா இருக்குல்ல!

வருங்காலத்துல நான் நடத்தப்போற ஓட்டல்ல பஸ்சு மட்டும் வந்து நிக்காது. ஸ்பெஷலா டிராக்கு போட்டு டிரெயினெல்லாம் உள்ளாற வந்து டீ சாப்பிட்டு போற மாதிரி வசதி செய்வேன். அவ்வளவு ஏன், ரன் வே-லாம் போட்டு ஏரோ-ப்ளேனே வந்து இறங்கி இட்லி சாப்பிட்டுட்டு போகும்னா பாத்துக்கோங்க! அவ்வளவு ஹை-டெக்! நான் முதலாளியாவே இருந்தாலும், வர்றது ஏரோ-ப்ளேனாவே இருந்தாலும், பழசை மறக்க மாட்டேன். அப்பவும் நான் தட்டி எழுப்புவேன்.

‘சார்… ஏரோப்ளேன் பதினைஞ்சு நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்களெல்லாம் இறங்கி வந்து சாப்பிடலாம் சார்…’