இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை!

எம்.ஆர். ராதா நடத்திய நாடகங்களுள் ஒன்று லஷ்மி காந்தன். சமூக அவலங்களை, கலைஞர்கள் அடித்த கூத்துகளை வெட்ட வெளிச்சம்போட்டுக் காண்பிக்க நினைத்த லஷ்மி காந்தனின் கதை. நாடகத்தில் காட்சிக்கு காட்சி குபீர் சிரிப்புதான். ராதாதான் லஷ்மி காந்தனாக வேடமேற்று நடித்தார்.

லஷ்மி காந்தன் தன் பத்திரிகையில் தோலுரித்துக் காட்டிய விஷயங்களைவிட, ராதா தன் நாடகத்தில் வைத்திருந்த காட்சிகளும் வசனங்களும் வீரியம் மிக்கவையாக இருந்தன.

லஷ்மி காந்தன் தன் உதவியாளருடன் பேசுவது போல ஒரு காட்சி.

‘கோவிந்தா, என்னடா இன்னிக்கு மேட்டரெல்லாம் வந்துருச்சா?’

‘வந்துருச்சுங்க.’

‘சரி, நான் கோர்ட்டுக்குப் போய்ட்டு வந்துடுறேன்.’

‘கோர்ட்டா?’

‘ஆமா கேஸு. இந்த ரமணி பாய் இருக்காளே, அவ என்மேல கேஸ் போட்டிருக்கா.’

‘என்ன கேஸு?’

‘ஏதோ மானம் போயிருச்சாம்.’

‘ஏதாவது வக்கீலை வைச்சுக்க வேண்டியதுதானே?’

‘ஏய். இதுக்குப் போய் வக்கீலா? இது நானே பேசி முடிச்சிட்டு வந்துருவேன்.’

‘எப்படி? புரியலையே…’

‘ஆமாடா. இப்ப அவ என்ன கேஸ் போட்டிருக்கா? மானம் போயிருச்சுன்னு. இப்ப என்னோட வாட்ச் போயிருச்சுன்னு சொல்லுறேன். அப்போ இதுக்கு முன்னாடி நான் வாட்ச் கட்டியிருந்தேன்னு நிரூபிக்கணும்ல. அப்போதானே போயிருச்சுன்னு சொல்ல முடியும். அவ என்ன கொடுத்திருக்கா? இதுக்கு முன்னே அவளுக்கு மானம் இருந்துச்சா? இருந்துச்சுன்னா எப்படிப் போச்சு? எந்தப் பக்கமா போச்சு?’

Alt + Ctrl + Del ஆகாஷ்!

(இந்தக் கட்டுரைகளில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், உரையாடல்கள் யாவும் கற்பனை அல்ல. உங்களைக் குறிப்பிடுவதாகக் கூட இருக்கலாம். ஹிஹிஹி… )
1998

‘சுளையா… சுளை சுளையா செமஸ்டருக்கு செமஸ்டர் முப்பதாயிரம் ரூவா கட்டிருக்குலே… எப்படியாவது அரியர்ஸையெல்லாம் க்ளியர் பண்ணிருலே’ன்னு உள்மனசு கிடந்து குய்யோ முய்யோன்னு கதறுது! இப்பத்தான் பிஎஸ்சி மேத்ஸ் முடிச்சு, எம்சிஏ சேர்ந்தாப்புல இருக்குது. ஆனா வெட்டியா விமலாகிட்ட கடலை போட்டதுலயே ரெண்டரை வருசம் ஓடிப்போச்சு.

மவனே இதுவரைக்கும் அஞ்சு அரியர்ஸ் வைச்சிருக்க. இந்த அஞ்சாவது செமஸ்டர்லயும் எண்ணிக்கையைக் கூட்டிடாத, நெஞ்சு தாங்காது. நாளைக்கு ஆரக்கிள் பேப்பர் இருக்குடா, படிடா மவனே… படிடா… அய்யோ இன்னிக்குன்னு பார்த்து கிரிக்கெட் மேட்ச் நடக்குதே. ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு டீவியைப் போடலாமா..?

1999

என்னடா இவங்க நமக்கு மேல ஃப்ராடா இருக்கானுங்க. இது எனக்கு பைனல் செமஸ்டர். ஏதாவது ப்ராஜெக்ட் தேடலாம்னு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். பெரிய கம்பெனிக்காரங்க எல்லாம் ‘நோ என்ட்ரி’ன்னு தொரத்துனான். சரி, எதாவது சின்ன கம்பெனியாப் பாத்து பட்டறையைப் போடலாமுன்னு ‘ப்ராஜெக்ட்ஸ் அவைலபிள்’ பேப்பர் வெளம்பரம் பார்த்து இந்த இடத்துக்கு வந்தேன். இனிக்க இனிக்கப் பேசி பத்தாயிரம் குடுன்னு பதவிசா கேட்டான். சரி, இப்பவாவது ஏதாவது கத்துக்கலாமேன்னு சொல்லி நானும் கொடுத்தேன். வீக்லி டென் ஹவர்ஸ். அதுல டூ ஹவர்ஸ் சிஸ்டம் யூஸ் பண்ணலாமுன்னு சொன்னாங்க. ஆனா அவங்க கொடுத்த சிஸ்டத்துல வீபி, ஆரக்கிள்னு ஒரு எலவும் இன்ஸ்ட்டாலே பண்ணலை. வெறுமன கம்ப்யூட்டர்ல சீட்டு விளையாண்டுகிட்டு இருந்தேன்.

ரெண்டு மாசம் முடிஞ்சே போச்சு. இன்னிக்கு மூஞ்சிக்கு முன்னாடி, ‘ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்’, ‘லைப்ரரி மேனேஜ்மென்ட்’, ‘பில்லிங் மேனேஜ்மென்ட்’னு மூணு சர்ட்டிபிகேட்டைத் தூக்கிப் போட்டு, ‘உன் ப்ராஜெக்ட் முடிஞ்சுது. இதுதான் சர்ட்டிபிகேட். எது வேணுமோ எடுத்துக்கோ’ன்னு சொல்லுறான். அடங்கொக்கமக்கா… ப்ராஜெக்ட் வைவா-ல எப்படிச் சமாளிக்கப் போறேன்னு தெரியலயே?

2000

வேலை தேடப் போறேன்னு சென்னைக்கு வந்து செங்கல்லை நட்டியாச்சு. மூணு மாசமாச்சு. வீட்டுல இருந்து வர்ற பணத்துல, பக்கத்துல இருக்கு மெஸ் புண்ணியத்துல வாழ்க்கை சுமுகமா ஓடிக்கிட்டிருக்கு. திநகரு, ஸ்பென்ஸர் ப்ளாசா, பெசண்ட் நகர் பீச்சுன்னு எதோ ஃபிகரும் பீருமா டைம் பாஸாகுது.

ஆனா எதாவது கம்பெனில இன்டர்வியூக்குன்னு போனா, முத ரவுண்டுலயே நம்ம முகமூடி டார்டாரா டர்ராயிடுது. வீபி, ஆரக்கிள், சி++… இதெல்லாம் படிச்சிருக்கேன்னு சொல்லி வெளிய தலைகாட்ட முடியல. எவனாவது ஒருத்தன் வீபி கத்துக்குறதுக்குன்னு சம்பளம் இல்லாம வேலை கொடுத்தாக் கூட சேர்ந்துரலாம். அவனவன் கேக்குற கேள்வியைப் பார்த்தா, ஜப்பான்காரன் பாஷை மாதிரி புரியவே மாட்டிங்குது.

இப்படியே போய்க்கிட்டிருந்தா சென்னைல நீ கிழிச்சது போதும், ஊரு பக்கமா வந்து நம்ம கடையிலேயே உக்காந்து வியாபாரத்தைப் பாருன்னு உத்தரவு போட்டுருவாரு எங்கய்யா. இப்போதைக்கு பிஎஸ்சின்னு குவாலிபிகேஷனைக் காட்டி, ஏதாவது டேட்டா என்ட்ரி வேலைக்குப் போகலாம். மாசம் ரெண்டாயிரம் ரூவா கிடைக்கும்.

2001

அரியர்ஸ் கணக்கை அப்படி இப்படி பார்டர்ல பைசல் பண்ணியாச்சு. ஆகாஷ் எம்சிஏன்னு வருங்காலத்துல என் கல்யாணப் பத்திரிகைல வக்கணையாப் போட்டுக்கலாம். கூடிய சிக்கீரம் இந்த எழவு டேட்டா என்ட்ரியை விட்டு வெளிய வரணும். விட்டா, இதுலயே சிக்கிச் சீரழிஞ்சு முன்னேறிறுவேனோன்னு பயமா இருக்கு.

பீல்டு மாறணும். ஆங்.. அது என்ன.. ஆரக்கிள்… ஆரக்கிள்… அதுல அட்வான்ஸ் கோர்ஸ் ஏதாவது சேர்ந்து, அதையாவது ஒழுங்காப் படிச்சு, நல்ல வேலைக்குப் போகணும். கூட படிச்சவனெல்லாம் பத்தாயிரம், பதினைஞ்சாயிரம் சம்பாதிக்கிறேன்னு மெயில் அனுப்பி வயிறெரிய வைக்குறானுங்க. விமலாக்கு வேற கல்யாணம் ஆயிருச்சு. அடுத்த வாரம் புருஷனோட யுஎஸ் போறாளாம். டேய் ஆகாஷு, உன் வாழ்க்கை என்னடா இன்னும் boot ஆகாத சிஸ்டமாவே இருக்கு?

2002

‘டேட்டாவேர்ல்ட் கம்பெனில சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டரா ஒரு வருஷம், ஜே&ஜே பிரைவேட் லிமிடெட்ல ப்ரோகிராமரா ஒன்றரை வருஷம், அப்புறம் அது என்ன, ஆங் ஸ்வஸ்திக் சாஃப்ட்வேர்ஸ்ல ஆரக்கிள் ப்ரோகிராமரா கடந்த ரெண்டு வருசமா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். இப்போ நான் வாங்குற சம்பளம் எட்டாயிரம்’ – இந்த டயலாக்கை நியாபகப்படுத்தி சொல்லிப் பார்த்துக்குவேன். ஏன்னா அப்படித்தான் என்னோட ரெஸ்யூம்ல போட்டிருக்கேன்.

ஆமாங்க… Fake-தான். 100% சுத்தமான பொய்களால் நிரப்பப்பட்ட ரெஸ்யூம்தான். ‘Fake போட்டு வாழ்வாரே வாழ்வார் –  மற்றோரெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்’-னு வள்ளுவரே சொல்லியிருக்காரே! ஆரக்கிள்ல அட்வான்ஸ்  கோர்ஸ் ஒண்ணு படிச்சிட்டு நானும் கடந்த ஆறு மாசமா, இதே Fake ரெஸ்யூமோட கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கிட்டிருக்கேன். எதாவது கன்டிஷனைச் சொல்லி, query எழுதச் சொல்லுறான். worry ஆகிப் போகுது. எப்படி ஒரு டேட்டாபேஸை backup எடுப்பேன்னு கேக்குறான். அதுல நான் pack-up ஆயிடுறேன். பிள்ளையாரே, எனக்கு மட்டும் ஒரு வேலை கிடைச்சுட்டா, 1008 ஆரக்கிள் query எழுதி உனக்கு மாலையாப் போடுறேன்.

2003

டேய் ஆகாஷு… உன்னையும் நல்லவன்னு நம்பி ஒருத்தன் வேலை கொடுத்துட்டான்டா! சம்பளம் வேற 15000-னு சொல்லிட்டான். ஜாய்ன் பண்ணி ஒரு வாரமாச்சு. எந்த ப்ராஜெக்ட்ல போடப் போறாங்கன்னு தெரியல. ஏதோ சமாளிக்கிற அளவுக்கு ஆரக்கிள் தெரியும், எடக்குமடக்கா ஏதாவது வேலை கொடுத்து, கோக்குமாக்க நான் முழிச்சி, இவன் Fake-தான் கண்டுபிடிச்சிருவாங்களோன்னு அடிவயிறு ரிமைண்டர் வைச்சு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கலங்கிக்கிட்டே இருக்கு.

இவ்வளவு நாள், மாசம் ரெண்டாயிரத்தை வைச்சே இன்பமா வாழ்ந்துட்டேன். இனிமே மாசம் 15000 ரூபா வரப் போகுதே.. அவ்வளவு பணத்தை எப்படிச் செலவழிக்க? பீட்ஸா, பீட்டர் இங்கிலான்ட், கிரெடிட் கார்டு, டிஸ்கோதேன்னு உன் வாழ்க்கையே மாறப் போகுதுடா மச்சான்!

2004

ங்கொய்யால… பதினைஞ்சாயிரம் சம்பளம் கொடுத்துட்டு, முப்பதாயிரத்துக்கு வேலை வாங்குறானுங்க. கடைசியா என்னிக்கு வீட்டுக்குப் போனேன்னு மறந்து போச்சு. தீவாளிக்கு லீவு தர மாட்டேனுட்டானுங்க. கேட்டா, யுஎஸ் க்ளையண்ட். தீவாளி அன்னிக்கி முக்கியமான call வரும். இருந்தே ஆகணுங்கிறாரு என்னோட ப்ராஜெக்ட் மேனேஜர். நான் எப்படியோ போராடி ஒருநாள் லீவு வாங்கி, ஊருக்குக் கிளம்பிட்டேன்.

பஸ், டிரெயினு எதுலயும் டிக்கெட் இல்லாம கஷ்டப்பட்டு, ஒரு டப்பா ப்ரைவேட் பஸ் புடிச்சு ஊர் பக்கத்துல போறேன். கம்பெனில இருந்து போன் வருது. ‘ஆகாஷ், உடனே கிளம்பி வாங்க. கோடிங்ல நிறைய bugs இருக்கு’ன்னு ப்ராஜெக்ட் மேனேஜர் மிரட்டுறாரு. ‘சார் இப்பத்தான் ஊருக்குள்ளேயே போகப் போறேன்’னு பரிதாபமா சொல்லுறேன். ‘நோ ப்ராப்ளம். அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு வந்திருங்க’ன்னு கூலா சொல்லுறாரு. ம்ஹூம்… இனிமே தாங்காது. கம்பெனி மாறிட வேண்டியதுதான்.

2005

இந்த வருசத்துலேயே ரெண்டாவது கம்பெனி மாறப்போறேன். வருசத்துக்கு நாலு லட்சம் தர்றேன்னு சொல்லிருக்கான். லாப்டாப் தர்றதாவும் சொல்லிருக்கான். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி 50 கிலோ இருந்த நான், இப்ப 80-ஐத் தொடப் போறேன். தொப்பையைக் குறைக்கணும். ஜிம் போகணும். ஏன்னா வீட்டுல பொண்ணு பாக்குறாங்க.

2006

நான் இப்போ பிஎம் ஆகிட்டேன். அதான் ப்ராஜெக்ட் மேனேஜர். இப்ப கொஞ்ச பேரை இண்டர்வியூ எடுத்துக்கிட்டிருக்கேன்.

‘பேரு என்ன, சுபாஷா? ஓகே… SQL-ல உங்க ஸ்டிரென்த் என்ன? இப்ப எங்க வொர்க் பண்ணுறீங்க? ஆரக்கிள் ப்ரொகிராமரா எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்? ஓகே வீ வில் கால் யூ லேட்டர்’

அந்தப் பையன் போயிட்டான். நான் அவனை செலக்ட் பண்ணப் போறதில்லை. முசப் புடிக்குற நாயை மூஞ்சப் பார்த்தா தெரியாதா! ரெஸ்யூம் சுத்த Fake. அதை வெச்சிக்கிட்டு என்கிட்டயே டகால்டி வேலை காட்டுறான். இன்டர்வியூல எப்படியெல்லாம் நடிக்கணும்னு அவன் இன்னும் பழகல. போகப் போக கத்துக்குவான். நாங்கள்ளாம் எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியும்ல?

# கிழக்கு வெளியீடு : லொள் காப்பியம்

மனமாற்றம்!

எல்லா டீவிக்களுக்கும் ரிமோட் உண்டு. எல்லா வானொலிகளுக்கும் கிடையாது. இருந்தாலும் ஆல் டைம் பாடல்களை வழங்கும் ஒரு எஃப்.எம். சேனலில் அளவுக்கு அதிகமாக விளம்பரம் வந்தால்கூட சட்டென .1லிருந்து .9க்குத் தாவி விடுவோம்.

ஆனால் பாடல்களே இல்லாமல் எஃப். எம்மில் ஒரு மணி நேரத்துக்கு நிகழ்ச்சி செய்ய முடியுமா? ஏதாவது ஒரு துறை குறித்தோ, பிரச்னை குறித்தோ இரண்டு அல்லது மூன்று நபர்கள் ஒரு மணி நேரம் கலந்துரையாடுவார்கள். கிழக்கு பாட்காஸ்ட்டின் இந்த கான்செப்டுடன் சில எஃப்.எம். சேனல்களை அணுகியபோது, ‘ரிஸ்க்கு மாமூ’ என்று அவர்கள் முகம் திருப்பிக் கொண்டார்களாம். ‘செஞ்சு பார்க்கலாம்’ என்று வாசலைத் திறந்துவிட்டது குமுதம் ஆஹா 91.9 எஃப்.எம்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்வது முதல் நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்வது, பின்பு அதை எடிட் செய்து ஒலிபரப்புக்காக தயார் செய்வது வரையிலான பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டன. ஆரம்பத் தடுமாற்றங்கள் நிறையவே இருந்தன. பேச எடுத்துக் கொள்ளும் பொருள், பேசும் நபரைப் பொருத்து நிகழ்ச்சியின் சுவாரசியம் அமைந்தது. கருத்துகள், விமரிசனங்கள் நிறையவே வந்தன.

‘பலர் ஒரே சமயத்துல பேசுறதுங்கிறது ஆல் இந்தியா ரேடியோவோட பழைய கான்செப்ட். அதை உடைக்கிறதுக்காகத்தான் எஃப்.எம்.லாம் வந்துச்சு. இரண்டு பேர் எப்பவாவது பேசுலாம். ஒருத்தரே கம்மியா பேசனாத்தான் நிகழ்ச்சி எடுபடும். இதான் இப்ப டிரெண்ட். நீங்க திரும்பவும் பழைய கான்செப்டுக்கே போறீங்க. பாடல்களும் இல்லை. சரி, செஞ்சு பாருங்க. எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்’ – ஆஹாவிலேயே ஒரு நண்பர் சொன்ன கருத்து இது.

பலவிதமான விமர்சனங்களைக் கடந்து கிழக்கு பாட்காஸ்ட் கடந்த ஆறு வாரங்களாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பத்ரியின் எண்ணங்கள் வழியாக மறுஒலிபரப்பும் நடக்கிறது. இன்னும் பல வாரங்கள் நிகழ்ச்சியைத் தொடர திட்டமிட்டிருக்கிறோம். நிகழ்ச்சியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம், சுவாரசியப்படுத்தலாம் என்று ஒவ்வொரு வாரமும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

‘ஒன் ஹவர் இப்படி ரெண்டு மூணு பேரு ஏதோ ஒரு டாபிக்ல மொக்கையப் போட்டா எவனும் கேக்க மாட்டான்’ – நிகழ்ச்சியை முழுவதுமாகக் கேட்கப் பொறுமையில்லாத என் நண்பர்களே அடித்த கமெண்ட் இது. ஊக்கப்படுத்தும் கமெண்ட்களும் எனக்கு நேரடியாகக் கிடைத்திருக்கின்றன. என் வீட்டின் அருகில் ஒரு பலசரக்குக் கடையில் வேலை பார்க்கும் குமார் என்பவர் சொன்ன கமெண்ட் முக்கியமானது.

‘நான் வித்யா நிகழ்ச்சி கேட்டேன். அவங்க பட்ட கஷ்டத்தையெல்லாம் கேக்குறப்போதான் அவங்கள புரிஞ்சுக்க முடிஞ்சது. திருநங்கைன்னு ஒரு வார்த்தை இருக்குதுன்னே உங்க ப்ரோகிராம்ல இருந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். இவ்ளோ நாளா அவங்கள அலின்னும் அந்த நம்பரைச் சொல்லியும்தான் கூப்டுக்கிட்டிருந்தேன். இனிமே கண்டிப்பா அவங்களை அப்படிக் கூப்பிடமாட்டேன், அந்த நம்பரைச் சொல்லமாட்டேன்.’

சின்னதாக ஒரு மனமாற்றத்தைக் கொண்டு வந்தாலே அது நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றிதானே!

லிவிங் ஸ்மைல் வித்யா பங்குபெற்ற கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி இங்கே ஒலிவடிவில்.

டைம் அட்டையில் ஒரு கஞ்ச மகாபிரபு!

‘எவ்வளவுதான் தரமுடியும்?’

‘முப்பது ரூபாய்’

‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான் என்ற ஏழாம் அஸஃப் ஜா (1886 – 1967).

நிஜாமாகப் பதவிக்கு வந்ததும் (1911) அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம்  மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட சிக்கன நடவடிக்கை அது. சில துணைவிகளை விற்று, பணத்துக்குப் பதிலாக மாங்காய்களாகப் பெற்றுக் கொண்டார் என்றுகூட குறிப்புகள் இருக்கின்றன.

அநாவசியச் செலவுகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்ற சிந்தனையே ஒஸ்மானின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மாறுபட்ட பரிமாணங்களே பல விஷயங்களில் கஞ்சத்தனமாக வெளிப்பட்டன.

‘நிஜாம், உங்கள் சால்வை மிகவும் பழசாகிவிட்டது. புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே?’ என்றார் அமைச்சர் ஒருவர். அதற்கு ஒஸ்மான் அளித்த பதில், ‘எடுக்கலாம். ஆனால் நான் அதுக்கு பதினெட்டு ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறேன். புதிய சால்வை இருபது ரூபாய் ஆகிறதே.’

ஒருமுறை வைஸ்ராய் லின்லித்கோ, ஒஸ்மானைச் சந்தித்தபோது அவரது வாக்கிங் ஸ்டிக்கைக் கவனித்தார். இரண்டாக உடைந்த அது, ஒட்டப்பட்டு நூலால் சுற்றப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டே எந்தவித கூச்சமும் இன்றி வெளியிடங்களுக்குச் சென்று கொண்டிருந்தார் ஒஸ்மான். தன்னுடன் பேச வரும் ஒரு சமஸ்தானத்தின் நிஜாம், இப்படி ஒடிந்த ஸ்டிக்குடன் வருகிறாரே என்று வைஸ்ராய்க்குத்தான் கூச்சமாகப் போய்விட்டது. அடுத்தமுறை ஒஸ்மானைச் சந்தித்தபோது ஒரு புதிய உயர்தரமான வாக்கிங் ஸ்டிக்கைப் பரிசளித்தார். வாய் நிறையப் புன்னகை வழிய, அதனை வாங்கி வைத்துக் கொண்டார் ஒஸ்மான்.

அப்போதைய இந்திய அரசின் முதன்மை ஆலோசகராக வி.பி. மேனன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை ஒஸ்மானைச் சந்திக்கச் சென்றார். பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். ஒஸ்மான் தன் சார்மினார் சிகரெட் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடம் நீட்டினார். அதுதான் அப்போதைய மலிவான சிகரெட். பாக்கெட் பன்னிரண்டு பைசாதான். பத்து சிகரெட் இருக்கும்.

மேனனுடைய பிராண்ட் வேறு. போயும் போயும் சார்மினாரைப் புகைத்து வாய் நாற்றத்துடனா அலைய முடியும் என்று யோசித்த அவர், ‘வேண்டாம்’ என்று மறுத்தார். ஒஸ்மான் வற்புறுத்தவெல்லாம் இல்லை. தம் வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார். மேனனுக்கும் வாய் நமநமத்தது. தன் சட்டைப் பையில் இருந்து விலையுயர்ந்த சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்து உடைத்தார்.

நாகரிகமாக ஒஸ்மானிடம் நீட்டினார். வாயில்தான் புகைந்துகொண்டிருக்கிறதே என்று மறுத்திருக்கலாம். ஆனால் ஒஸ்மான் அதிலிருந்து நான்கைந்தை எடுத்துத் தன் சார்மினார் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். அறையிலிருந்து புகை கலைந்து முடிந்த சில நொடிகளில் அவர்களது சந்திப்பும் முடிந்தது.

சில நாள்களிலேயே இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். பேச்சின் இடையே, ஒஸ்மான் தன் சார்மினார் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடமிருந்து எடுத்த புதிய பிராண்ட் சிகரெட்டுகள் எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருந்தன.

அதிகாரிகளோ விருந்தினர்களோ ஒஸ்மானை சந்திக்கச் சென்றால் அவர் உபசரிக்கும் விதமே தனியானது. வருபவர்களை உட்காரச் சொல்லுவார். அவர்கள் தனக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பார். எது கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்வார். பேசத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள் கழித்து அரண்மனைப் பணியாள் கையில் ஒரு தட்டுடன் வருவார். அதில் முக்கால்வாசி நிரம்பிய நிலையில் இரண்டு கோப்பைகளில் டீ, இரண்டு பிஸ்கட்டுகள் மட்டுமே இருக்கும். ஆளுக்கு ஒரு கோப்பை டீ, ஒரே ஒரு பிஸ்கட். அவ்வளவுதான். பெட்டி பெட்டியாக தங்க பிஸ்கட் வைத்திருந்தால் என்ன, சாப்பிடக்கூடிய பிஸ்கெட்டை வீணாக்கக்கூடாது என்பது ஒஸ்மானின் உயரிய எண்ணம்.

ரத்தத்தோடு கலந்துவிட்ட குணம் அது. வாழ்நாளில் எந்த நிலையிலும் ஒஸ்மான் தனது குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. அப்படிப்பட்ட நிஜாம் ஒஸ்மான் அலிகானைப் பற்றி, டைம் வாரப் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. அட்டையில் ஒஸ்மானின் ஓவியம் கம்பீரமாகக் காட்சியளித்தது. (1937, பிப்ரவரி 22)

கட்டுரை அவரது கஞ்சத்தனத்தைப் பற்றியல்ல.‘உலகின் மாபெரும் பணக்காரர்’ என்பதற்காக. HIS EXALTED HIGHNESS THE NIZAM OF HYDERABAD என்று தலைப்பிட்டிருந்தது.

இன்றைய தேதியில் முகேஷ் அம்பானிக்கு அந்த பாக்கியம் கிடைத்ததோ இல்லையோ, அன்றைய தேதியில் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு அந்தப் பேறு கிடைத்தது. டைம் பத்திரிகை மட்டுமல்ல, உலகில் பல பெரிய பத்திரிகைகள் அப்போது அந்தச் செய்தியை வெளியிட்டு நிஜாமின் சொத்துக் கணக்கை விதவிதமாகக் கூறின.

நிஜாமின் தினப்படி வருமானம் சுமார் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள். அவர் கொத்துக் கொத்தாகச் சேர்த்து வைத்துள்ள நகைகளின் மொத்த மதிப்பு குத்துமதிப்பாக பதினைந்து கோடி அமெரிக்க டாலர்கள். அவர் உப்புப் போட்டு கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்துள்ள தங்கக் கட்டிகளின் மதிப்பு இருபத்தைந்து கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும். அதையும் சேர்த்து நிஜாமின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு தோராயமோ தோராயமாக நூற்று நாற்பது கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என்று வியந்து எழுதியிருந்தது டைம் பத்திரிகை. இந்தக் கணக்கில் ஒஸ்மான் சேர்த்து வைத்திருக்கும் வைர, மரகதக் கற்களின் மதிப்பு சேர்க்கப்பட்டவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது.

சரி, முதலிடம் ஒஸ்மானுக்கு. இரண்டாவது இடம்?

வெற்றிகரமாக கார்களைத் தயாரித்து வந்த ஹென்றி ஃபோர்டுக்கு. ஆனால் என்ன, அவரது மொத்த சொத்து மதிப்பு, ஒஸ்மான் சேர்த்து வைத்திருந்த நகைகளின் மதிப்பில் பாதிகூட இல்லை என்பதே உண்மை.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் தொடரில் இருந்து ஒரு சிறு பகுதி. இன்னும் சில மாதங்களில் அகம் புறம் அந்தப்புரம் குண்டு புத்தகமாக வெளிவர இருக்கிறது.)

கணக்கு பரிட்சையும் சில கெட்ட கனவுகளும்

பத்தாம் வகுப்புவரை நான் கணக்கில் புலியாக இல்லாவிட்டாலும் புள்ளிமானாகவாவது இருந்தேன். அப்போது 92 மார்க் எடுத்ததாக ஞாபகம். பளஸ் ஒண்ணுக்குப் பிறகுதான் எனக்கும் கணக்குக்குமான பிணக்குகள் ஆரம்பித்தன. இண்டக்ரேஷன் எல்லாம் இன்ஜெக்‌ஷனாக வலித்தது. டெட்டர்மினேஷனைப் பார்க்கும்போது அது என்னை டெர்மினேட் பண்ண வந்த அவதாரமாகத் தோன்றியது.

எப்படியாவது என்னை பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டுமென்ற அவாவில் அப்பா, தனியாக கணக்குக்கென்று ட்யூஷன் எல்லாம் ஏற்பாடு செய்தார்கள். அந்த ஆசிரியரின் பெயர் அனந்த நாராயணன். பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டே காலை, மாலை வேளைகளில் பல பேட்ச்களாக ட்யூஷன் எடுப்பார். சனி, ஞாயிறு விடுமுறை என்றால் சிறப்பு வகுப்புகள் உண்டு. என்னோடு பல கணிதப் புலிகள் படித்தார்கள்.

‘பள்ளியிலும் இதே பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறார். ட்யூஷனினும் அதையே எடுக்கிறார். தொடர்ந்து இதையே பல வருடங்கள் செய்துகொண்டிருந்தால்…’ – அவர் கால்குலஸ் போட்டுக் கொண்டிருக்கும்போது என் சிந்தனையில் இப்படி ஏதாவது கால்குலேஷன் ஓடிக் கொண்டிருக்கும்.

என் சக ட்யூஷன் நண்பர்கள் எல்லாம் நேரம், நாள் தவறாது ட்யூஷனுக்குச் சென்று வந்தார்கள். எனக்குத்தான் பிடிக்கவில்லை. அவரையா, கணக்கையா என்று தெரியவில்லை. ஏதாவது காரணம் சொல்லி பெரும்பாலும் மட்டம் போட்டு விடுவேன். அவ்வப்போது சென்று வந்தேன். நான் போனாலே ஒருமாதிரியாக நக்கலாகப் பார்ப்பார். எனக்கு அது பழகிப் போயிருந்தது.

ப்ளஸ் ஒன்னிலும் சரி, ப்ளஸ் டூவிலும் சரி. பள்ளித்தேர்வுகளில் கணக்கில் தட்டுத்தடுமாறி எழுபது எடுத்துவிடுவேன். எப்போதாவது நூறு வரை செல்வதுண்டு. ‘பொறியியல் கல்லூரிக்குச் சேர எல்லாவற்றிலும் அறுபது சதவிகிதம் வேண்டுமாமே. எப்படியாவது எடுத்துவிடு. நான் உன்னைச் சேர்த்துவிடுகிறேன்.’ அப்பா அடிக்கடி சொன்ன வாசகம். என்னால் இயன்ற அளவு முயற்சி செய்தேன்.

அதென்னமோ தெரியவில்லை, கணக்கு பரிட்சைக்கு முந்தைய இரவுகளில்லாம் எனக்கு ஒரு கனவு வரும். அதாவது நான் பரிட்சை எழுத முடியாமல்போவது போலவோ அல்லது நான் ஹாலுக்குள் நுழையும் சமயத்தில் பரிட்சை முடிந்துவிடுவது போலவோ அல்லது நான் வேறு பரிட்சை என்று நினைத்து படித்துக்கொண்டு போனால் கணக்குக்கான வினாத்தாள் வழங்கப்படுவதுபோலவோ. இப்படி கெட்ட கனவுகள் என் தூக்கத்தைக் கெடுக்கும்.

கனவுகளை எல்லாம் கடந்து ப்ளஸ் டூ தேர்வு எழுதி முடித்தேன். கணக்கு நூற்றியிருவது வருமா? வினாத்தாளை வைத்து மார்க் போட்டுப் பார்த்தேன். பாஸ் ஆகிவிடுவேன் என்று தெரிந்தது. அடுத்து நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியில் அப்பா சேர்த்துவிட்டார்கள். அங்கும் கணக்கு பளிப்பு காட்டியது.

நுழைவுத்தேர்வு, அப்புறம் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்தன. மற்ற எல்லாமே 140க்கு மேல். கணக்கில் சதம். பத்தாவது வகுப்பில் எடுக்க நினைத்தது அப்போதுதான் கைகூடியிருந்தது. இருநூறுக்கு நூறு என்றால் எல்லோரும் ‘ஸ்வீட் எடு கொண்டாடு’ என்றா சொல்வார்கள்.

‘பரவால்ல விடு. இப்போதைக்கு காலேஜ்ல சேர்ந்துக்கோ. கணக்குக்கு மட்டும் இம்ப்ரூவ்மெண்ட் டெஸ்ட் எழுது. நூத்தியிருவது எடுத்துரு. அடுத்த வருஷம் இன்ஜினியரிங் போயிடு.’ அப்பா ஊக்கப்படுத்தினார்கள். தலையாட்டினேன். பிஎஸ்ஸி கெமிஸ்டிரியில் சேர்ந்துகொண்டேன். இம்ப்ரூவ்மெண்ட் எழுதினேன். அந்தமுடிவும் வந்தது. ஏற்கெனவே எடுத்ததைவிட குறைவான மார்க் வந்துவிடக்கூடாது என்று மட்டும்தான் எனக்கு பயம்.

அதிகமாகவே வந்தது. 104. இப்படியே நாலு நாலா இம்ப்ரூவ்மெண்ட் ஆனா, இன்ஜினியரிங் போய்ச்சேர பல வருடங்கள் பிடிக்குமெனத் தோன்றியது. வேதியியலையே தொடர்ந்தேன்.

கல்லூரியிலும் துணைப்பாடமாக கணக்கு படுத்தியது. மொத்தம் 4 தாள்கள். கண்டமாகத் தெரிந்தன. முதல் தாளில் தேறிவிட்டேன். இரண்டாவதில், அந்தப் பேறு பெற்றேன். அரியர். பிறகு ஒருவருடம் கழித்து அதை திரும்ப எடுத்துவிட்டேன். ஆனால் அந்த வருடம் எழுதிய நாலாவது கணக்குத் தாளில் சொற்ப மதிப்பெண்களில் கோட்டை விட்டுவிட்டேன். மீண்டும் ஒருமுறை அந்தப் பாடத்தைப் படித்து தேர்வு எழுதும் மனோதிடம், பொறுமை எனக்கில்லை.

‘அஞ்சு மார்க்குதானே குறையுது. ரீவேல்யூஸன் போடு. பாஸ் ஆக்கிருவாங்க’ – நண்பர்கள் யோசனை சொன்னார்கள். செய்தேன். மறுகூட்டலில் தேறினேன்.

பிஎஸ்ஸி முடித்து எம்சிஏ படிப்பதாக ஒரு திட்டம். மூன்று இடங்களில் ஸீட்டும் கிடைத்தன. நல்லவேளை. எம்எஸ்ஸி ஐடி சேர்ந்துவிட்டேன். அதில் கணக்கு கிடையாது. எம்சிஏ சேர்ந்திருந்தால் கணக்குகளை எல்லாம் தாண்டி அதை முடித்திருக்க மாட்டேன் என்றே இப்போதும் தோன்றுகிறது.

பழைய கணக்கு பரிட்சை கனவுகள் இப்போதும் எப்போதாவது வருவதுண்டு. ஆனால் நிஜத்தில் ‘இனிமே வாழ்க்கைல கணக்கு பரிட்சையே கிடையாதுடா!’ என்கிற நினைப்பே சுகமாக இருக்கிறது.