கணக்கு பரிட்சையும் சில கெட்ட கனவுகளும்

பத்தாம் வகுப்புவரை நான் கணக்கில் புலியாக இல்லாவிட்டாலும் புள்ளிமானாகவாவது இருந்தேன். அப்போது 92 மார்க் எடுத்ததாக ஞாபகம். பளஸ் ஒண்ணுக்குப் பிறகுதான் எனக்கும் கணக்குக்குமான பிணக்குகள் ஆரம்பித்தன. இண்டக்ரேஷன் எல்லாம் இன்ஜெக்‌ஷனாக வலித்தது. டெட்டர்மினேஷனைப் பார்க்கும்போது அது என்னை டெர்மினேட் பண்ண வந்த அவதாரமாகத் தோன்றியது.

எப்படியாவது என்னை பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டுமென்ற அவாவில் அப்பா, தனியாக கணக்குக்கென்று ட்யூஷன் எல்லாம் ஏற்பாடு செய்தார்கள். அந்த ஆசிரியரின் பெயர் அனந்த நாராயணன். பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டே காலை, மாலை வேளைகளில் பல பேட்ச்களாக ட்யூஷன் எடுப்பார். சனி, ஞாயிறு விடுமுறை என்றால் சிறப்பு வகுப்புகள் உண்டு. என்னோடு பல கணிதப் புலிகள் படித்தார்கள்.

‘பள்ளியிலும் இதே பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறார். ட்யூஷனினும் அதையே எடுக்கிறார். தொடர்ந்து இதையே பல வருடங்கள் செய்துகொண்டிருந்தால்…’ – அவர் கால்குலஸ் போட்டுக் கொண்டிருக்கும்போது என் சிந்தனையில் இப்படி ஏதாவது கால்குலேஷன் ஓடிக் கொண்டிருக்கும்.

என் சக ட்யூஷன் நண்பர்கள் எல்லாம் நேரம், நாள் தவறாது ட்யூஷனுக்குச் சென்று வந்தார்கள். எனக்குத்தான் பிடிக்கவில்லை. அவரையா, கணக்கையா என்று தெரியவில்லை. ஏதாவது காரணம் சொல்லி பெரும்பாலும் மட்டம் போட்டு விடுவேன். அவ்வப்போது சென்று வந்தேன். நான் போனாலே ஒருமாதிரியாக நக்கலாகப் பார்ப்பார். எனக்கு அது பழகிப் போயிருந்தது.

ப்ளஸ் ஒன்னிலும் சரி, ப்ளஸ் டூவிலும் சரி. பள்ளித்தேர்வுகளில் கணக்கில் தட்டுத்தடுமாறி எழுபது எடுத்துவிடுவேன். எப்போதாவது நூறு வரை செல்வதுண்டு. ‘பொறியியல் கல்லூரிக்குச் சேர எல்லாவற்றிலும் அறுபது சதவிகிதம் வேண்டுமாமே. எப்படியாவது எடுத்துவிடு. நான் உன்னைச் சேர்த்துவிடுகிறேன்.’ அப்பா அடிக்கடி சொன்ன வாசகம். என்னால் இயன்ற அளவு முயற்சி செய்தேன்.

அதென்னமோ தெரியவில்லை, கணக்கு பரிட்சைக்கு முந்தைய இரவுகளில்லாம் எனக்கு ஒரு கனவு வரும். அதாவது நான் பரிட்சை எழுத முடியாமல்போவது போலவோ அல்லது நான் ஹாலுக்குள் நுழையும் சமயத்தில் பரிட்சை முடிந்துவிடுவது போலவோ அல்லது நான் வேறு பரிட்சை என்று நினைத்து படித்துக்கொண்டு போனால் கணக்குக்கான வினாத்தாள் வழங்கப்படுவதுபோலவோ. இப்படி கெட்ட கனவுகள் என் தூக்கத்தைக் கெடுக்கும்.

கனவுகளை எல்லாம் கடந்து ப்ளஸ் டூ தேர்வு எழுதி முடித்தேன். கணக்கு நூற்றியிருவது வருமா? வினாத்தாளை வைத்து மார்க் போட்டுப் பார்த்தேன். பாஸ் ஆகிவிடுவேன் என்று தெரிந்தது. அடுத்து நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியில் அப்பா சேர்த்துவிட்டார்கள். அங்கும் கணக்கு பளிப்பு காட்டியது.

நுழைவுத்தேர்வு, அப்புறம் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்தன. மற்ற எல்லாமே 140க்கு மேல். கணக்கில் சதம். பத்தாவது வகுப்பில் எடுக்க நினைத்தது அப்போதுதான் கைகூடியிருந்தது. இருநூறுக்கு நூறு என்றால் எல்லோரும் ‘ஸ்வீட் எடு கொண்டாடு’ என்றா சொல்வார்கள்.

‘பரவால்ல விடு. இப்போதைக்கு காலேஜ்ல சேர்ந்துக்கோ. கணக்குக்கு மட்டும் இம்ப்ரூவ்மெண்ட் டெஸ்ட் எழுது. நூத்தியிருவது எடுத்துரு. அடுத்த வருஷம் இன்ஜினியரிங் போயிடு.’ அப்பா ஊக்கப்படுத்தினார்கள். தலையாட்டினேன். பிஎஸ்ஸி கெமிஸ்டிரியில் சேர்ந்துகொண்டேன். இம்ப்ரூவ்மெண்ட் எழுதினேன். அந்தமுடிவும் வந்தது. ஏற்கெனவே எடுத்ததைவிட குறைவான மார்க் வந்துவிடக்கூடாது என்று மட்டும்தான் எனக்கு பயம்.

அதிகமாகவே வந்தது. 104. இப்படியே நாலு நாலா இம்ப்ரூவ்மெண்ட் ஆனா, இன்ஜினியரிங் போய்ச்சேர பல வருடங்கள் பிடிக்குமெனத் தோன்றியது. வேதியியலையே தொடர்ந்தேன்.

கல்லூரியிலும் துணைப்பாடமாக கணக்கு படுத்தியது. மொத்தம் 4 தாள்கள். கண்டமாகத் தெரிந்தன. முதல் தாளில் தேறிவிட்டேன். இரண்டாவதில், அந்தப் பேறு பெற்றேன். அரியர். பிறகு ஒருவருடம் கழித்து அதை திரும்ப எடுத்துவிட்டேன். ஆனால் அந்த வருடம் எழுதிய நாலாவது கணக்குத் தாளில் சொற்ப மதிப்பெண்களில் கோட்டை விட்டுவிட்டேன். மீண்டும் ஒருமுறை அந்தப் பாடத்தைப் படித்து தேர்வு எழுதும் மனோதிடம், பொறுமை எனக்கில்லை.

‘அஞ்சு மார்க்குதானே குறையுது. ரீவேல்யூஸன் போடு. பாஸ் ஆக்கிருவாங்க’ – நண்பர்கள் யோசனை சொன்னார்கள். செய்தேன். மறுகூட்டலில் தேறினேன்.

பிஎஸ்ஸி முடித்து எம்சிஏ படிப்பதாக ஒரு திட்டம். மூன்று இடங்களில் ஸீட்டும் கிடைத்தன. நல்லவேளை. எம்எஸ்ஸி ஐடி சேர்ந்துவிட்டேன். அதில் கணக்கு கிடையாது. எம்சிஏ சேர்ந்திருந்தால் கணக்குகளை எல்லாம் தாண்டி அதை முடித்திருக்க மாட்டேன் என்றே இப்போதும் தோன்றுகிறது.

பழைய கணக்கு பரிட்சை கனவுகள் இப்போதும் எப்போதாவது வருவதுண்டு. ஆனால் நிஜத்தில் ‘இனிமே வாழ்க்கைல கணக்கு பரிட்சையே கிடையாதுடா!’ என்கிற நினைப்பே சுகமாக இருக்கிறது.

எல்லாக் கேள்விகளுக்கும் அழாமல் விடையளிக்கவும்.

போட்டித் தேர்வு. படபடப்புடன் சென்று அமர்ந்திருக்கிறீர்கள். இஷ்ட தெய்வங்கள் எல்லாம் கண்முன் வந்து செல்கிறார்கள். அந்த நேரத்திலும் பக்கத்து பெஞ்சில் அமர்ந்திருக்கும் பிங்க் நிற சுடிதார் பெண் கவனம் கலைக்கிறாள். தேர்வு அறை கண்காணிப்பாளர் வந்து வினா, விடைத்தாளை நீட்டுகிறார். இப்படி ஒரு வினாத்தாள் கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?

எல்லாக் கேள்விகளுக்கும் அழாமல் விடையளிக்கவும்.
மொத்த மதிப்பெண்கள் : ஏதோ பார்த்துப் போட்டுக் கொடுப்போம்.

1. சன் பிக்சர்ஸ் வழங்கியதிலேயே உன்னதமான காவியம் எது?
அ) தெனாவெட்டு ஆ) படிக்காதவன் இ) எட்டுமணி செய்திகள்

2. நியூட்டனின் மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தவர் யார்?
அ) கொலம்பஸ் ஆ) சயின்ஸ் வாத்தியார் இ) எஸ்.ஜே. சூர்யா

3. இந்தியாவின் கேப்பிடல் (CAPITAL) எது?
அ) InDiA ஆ) india இ) INDIA

4. த.பி.பா (தயவுசெய்து பின்னால் பார்க்கவும்) என்பதன் விரிவாக்கம் என்ன?
அ) தயவுசெய்யாமல் பின்னால் பார்க்கவும் ஆ) தயவுசெய்து பிராண்டிப் பார்க்கவும் இ) பா.பி.த.

5. ‘எதிர்ச்சொல்’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
அ) எதிரெதிர்ச்சொல் ஆ) எதிர்மௌனம் இ) எதிர் இல்லாத சொல்

6. சூரியன் இரவு நேரத்தில் எங்கே போய் தங்குகிறது?
அ) இருட்டான இடத்தில் ஆ) தாஜ் ஹோட்டலில் இ) அறிவாலயத்தில்

7. இந்தக் கேள்வியின் எண் என்ன?

அ) 8 ஆ) 10 இ) 15

8. அ-வும் ஆ-வும் அக்கா தங்கச்சி. ஆ-வும் இ-யும் ஒண்ணுவிட்ட தங்கச்சி. இ-யும் ஈ-யும் உறவுமுறை. ஈ-க்கு அ அத்தை. உ-க்கு ஈ சகலை. இ-க்கு உ சம்பந்தி முறை. ஆ-வை, ஈ கல்யாணம் பண்ணினா ஆ-வுக்கு ஈ என்ன வேணும்?
அ) தூரத்துச் சொந்தம் ஆ) பக்கத்து வீட்டுக்காரன் இ) பங்காளி

9. ஒரு வேலையை 12 பேர் 8 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 16 பேர் 6 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 20 பேர் 4 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். அப்படின்னா, அந்த வேலையை யாருமே செய்யலைன்னா அந்த வேலை எப்ப முடியும்?
அ) நேத்திக்கி ஆ) நாளைக்கி இ) அமாவாசை அன்னிக்கி

10. பதவிப்பிரமாணத்தின் போது ஒபாமா சொல்ல மறந்த அந்த வார்த்தை என்ன?
அ) எவனாயிருந்தாலும் வெட்டுவேன். ஆ) ஆசை, தோசை, அப்பளம், வடை  இ) பத்து ரூபாய்க்கு ‘சேஞ்ச்’ இருக்கா?

11. ஐஸ் கட்டி தயாரிக்க என்ன மூலப்பொருள் தேவை?
அ) பெரிய ஐஸ் கட்டி ஆ) மூளை இ) அடுப்பு

12. காற்றுக் குமிழுக்குள் என்ன நிறைந்திருக்கும்?
அ) கொட்டாவி  ஆ) பஞ்சு முட்டாய்  இ) உள்ளீடற்ற வெற்றிடம்.

13. ‘எக்ஸ்’ என்பது ஒரு இரட்டை எண். அதை ‘ஒய்’ ஆல் பெருக்கினால் 12 வரும். 3320 என்பது ‘எக்ஸின்’ ஐந்தரை மடங்கு. ‘ஒய்’ மற்றும் ‘இஸட்’டின் இரு மடங்குக் கூட்டுத்தொகை ‘எக்ஸின்’ மூன்று மடங்கு பெருக்குத்தொகையின் நாலில் ஒரு பங்கு. ‘எக்ஸ், ஒய், இஸட்’ – இவற்றின் மதிப்புகளைக் கண்டறிந்து, இரண்டால் பெருக்கி, 7-ஐக் கழித்தால் இறுதியில் என்ன வரும்?
அ) எரிச்சல் ஆ) தலைவலி இ) மனநோய்

14. கீழ்க்கண்டவற்றில் ‘உயிர்’ எழுத்துகள் எவை?
அ) கடசதபற ஆ) ஞஙணநமன இ) உயிர்

15) இருட்டான அறையொன்றில் நேராக நிற்கும்போது நமது நிழல் எங்கே விழும்?
அ) பக்கத்து வீட்டில் ஆ) உண்டியலில் இ) மொட்டை மாடியில்

16) 9841111111 என்ற எண்ணை டயல் செய்கிறீர்கள். லைன் கிடைக்கவில்லை. உடனே ரீடயல் செய்தால் என்ன எண் டயல் ஆகும்?
அ) 100 ஆ) 9841111112 இ) 98411111119841111111

17) நீங்கள் இறுதிக் கேள்வியை அடைந்துவிட்டீர்களா?
அ) தெரியவில்லை ஆ) புரியவில்லை இ) %#@%@(*^&