மனமாற்றம்!

எல்லா டீவிக்களுக்கும் ரிமோட் உண்டு. எல்லா வானொலிகளுக்கும் கிடையாது. இருந்தாலும் ஆல் டைம் பாடல்களை வழங்கும் ஒரு எஃப்.எம். சேனலில் அளவுக்கு அதிகமாக விளம்பரம் வந்தால்கூட சட்டென .1லிருந்து .9க்குத் தாவி விடுவோம்.

ஆனால் பாடல்களே இல்லாமல் எஃப். எம்மில் ஒரு மணி நேரத்துக்கு நிகழ்ச்சி செய்ய முடியுமா? ஏதாவது ஒரு துறை குறித்தோ, பிரச்னை குறித்தோ இரண்டு அல்லது மூன்று நபர்கள் ஒரு மணி நேரம் கலந்துரையாடுவார்கள். கிழக்கு பாட்காஸ்ட்டின் இந்த கான்செப்டுடன் சில எஃப்.எம். சேனல்களை அணுகியபோது, ‘ரிஸ்க்கு மாமூ’ என்று அவர்கள் முகம் திருப்பிக் கொண்டார்களாம். ‘செஞ்சு பார்க்கலாம்’ என்று வாசலைத் திறந்துவிட்டது குமுதம் ஆஹா 91.9 எஃப்.எம்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்வது முதல் நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்வது, பின்பு அதை எடிட் செய்து ஒலிபரப்புக்காக தயார் செய்வது வரையிலான பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டன. ஆரம்பத் தடுமாற்றங்கள் நிறையவே இருந்தன. பேச எடுத்துக் கொள்ளும் பொருள், பேசும் நபரைப் பொருத்து நிகழ்ச்சியின் சுவாரசியம் அமைந்தது. கருத்துகள், விமரிசனங்கள் நிறையவே வந்தன.

‘பலர் ஒரே சமயத்துல பேசுறதுங்கிறது ஆல் இந்தியா ரேடியோவோட பழைய கான்செப்ட். அதை உடைக்கிறதுக்காகத்தான் எஃப்.எம்.லாம் வந்துச்சு. இரண்டு பேர் எப்பவாவது பேசுலாம். ஒருத்தரே கம்மியா பேசனாத்தான் நிகழ்ச்சி எடுபடும். இதான் இப்ப டிரெண்ட். நீங்க திரும்பவும் பழைய கான்செப்டுக்கே போறீங்க. பாடல்களும் இல்லை. சரி, செஞ்சு பாருங்க. எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்’ – ஆஹாவிலேயே ஒரு நண்பர் சொன்ன கருத்து இது.

பலவிதமான விமர்சனங்களைக் கடந்து கிழக்கு பாட்காஸ்ட் கடந்த ஆறு வாரங்களாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பத்ரியின் எண்ணங்கள் வழியாக மறுஒலிபரப்பும் நடக்கிறது. இன்னும் பல வாரங்கள் நிகழ்ச்சியைத் தொடர திட்டமிட்டிருக்கிறோம். நிகழ்ச்சியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம், சுவாரசியப்படுத்தலாம் என்று ஒவ்வொரு வாரமும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

‘ஒன் ஹவர் இப்படி ரெண்டு மூணு பேரு ஏதோ ஒரு டாபிக்ல மொக்கையப் போட்டா எவனும் கேக்க மாட்டான்’ – நிகழ்ச்சியை முழுவதுமாகக் கேட்கப் பொறுமையில்லாத என் நண்பர்களே அடித்த கமெண்ட் இது. ஊக்கப்படுத்தும் கமெண்ட்களும் எனக்கு நேரடியாகக் கிடைத்திருக்கின்றன. என் வீட்டின் அருகில் ஒரு பலசரக்குக் கடையில் வேலை பார்க்கும் குமார் என்பவர் சொன்ன கமெண்ட் முக்கியமானது.

‘நான் வித்யா நிகழ்ச்சி கேட்டேன். அவங்க பட்ட கஷ்டத்தையெல்லாம் கேக்குறப்போதான் அவங்கள புரிஞ்சுக்க முடிஞ்சது. திருநங்கைன்னு ஒரு வார்த்தை இருக்குதுன்னே உங்க ப்ரோகிராம்ல இருந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். இவ்ளோ நாளா அவங்கள அலின்னும் அந்த நம்பரைச் சொல்லியும்தான் கூப்டுக்கிட்டிருந்தேன். இனிமே கண்டிப்பா அவங்களை அப்படிக் கூப்பிடமாட்டேன், அந்த நம்பரைச் சொல்லமாட்டேன்.’

சின்னதாக ஒரு மனமாற்றத்தைக் கொண்டு வந்தாலே அது நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றிதானே!

லிவிங் ஸ்மைல் வித்யா பங்குபெற்ற கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி இங்கே ஒலிவடிவில்.

4 Comments

 1. பாட்காஸ்ட் பிஸியில பதிவே போடறதில்ல என்ற சிறிய வருத்தம் தான்.

  முகில், நல்லவை கொஞ்சம் லேட்டாதான் புரியும். நீங்க கலக்குங்க… வாழ்த்துகள்..

 2. ila says:

  ஒரு மனசை மாத்தினா, உலகத்தையே மாத்தினா மாதிரி

 3. Mugil says:

  thanks ila.

  சூர்யாஜி,

  பதிவுகள் குறைந்துபோனதற்கு பாட்காஸ்ட் பிஸி மட்டும் காரணமல்ல. இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் கண்டிப்பாக அவை குறித்து எழுதுகிறேன்.

 4. Karthikeyan says:

  Dear Mr.Mugil,
  I too regular listner of kizhakku podcost.Pls continue the program as long as possible.Its really informative and interesting program.Always good things take time to reach people.So never mind about the negative comment in this regard.

Leave a Reply