ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்

ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம் – இது எனது புதிய புத்தகம். சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. 448 பக்கங்கள். 300 ரூபாய். கடைகளில், ஆன்லைன் விற்பனைத் தளங்களில் கிடைக்கிறது.

இந்தப் புத்தகத்துக்காக நான் எழுதிய முன்னுரை இங்கே.

மீண்டும் ஹிட்லர்?
ஹிட்லரைப் பற்றிய புத்தகமா? ஏற்கெனவே சந்தையில் பல புத்தகங்கள் இருக்கிறதே. இன்னொரு புத்தகம் எதற்கு எழுதப்படவேண்டும்?

இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கும்முன் எனக்கான அடிப்படைக் கேள்விகூட இதுதான்.

பேசப் பேசத் தீராத விஷயங்கள் கொண்ட வாழ்க்கை – பல்வேறு பரிமாணங்களில் ஆராய்ந்து எழுதினாலும் வீரியமும் சுவாரசியமும் குறையாத பாத்திரம் – இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து வரப்போகும் தலைமுறையினரையும் ‘இப்படிக்கூட ஒருவன் வாழ்ந்திருக்க முடியுமா?’ என்று நடுநடுங்க வைக்கும் குணாதிசயம் – கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் நம்பிக்கையை விதைக்கும் பிறவி ஹிட்லர். ஆகவே, ஹிட்லரில் மையம் கொண்டேன்.

சாமானியன் ஒருவன், தேச மக்களின் ஆதரவை, நம்பிக்கையைப் பெற்று, நாஜி என்ற மதத்தை வளர்த்து, தன்னைக் கடவுளாக வழிபடும் ஒரு பெருங்கூட்டத்தை உருவாக்கி, ஜெர்மனி என்ற மாபெரும் தேசத்தின் தலைவிதியைத் தன் சுண்டு விரலால் எழுதும் வலிமை கொண்ட சர்வாதிகாரியாக சிம்மாசனத்தில் அமர்வது சாதாரண விஷயமில்லை. எனில், அப்போதைய ஜெர்மனியில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை இருந்திருக்கிறது. சர்வ வல்லமை கொண்ட ஒரு மீட்பர் வரமாட்டாரா என்று ஜெர்மானியர்களுக்கு ஏக்கமும் இருந்திருக்கிறது. அது ஏன்? பின்னணி என்ன? இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது இப்புத்தகம்.

வளமிக்கக் குடும்பத்தில், பலமானவாகப் பிறந்தவன் அல்ல ஹிட்லர். தாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இறைபக்தியுடன் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு வளர்ந்த சாதாரணச் சிறுவன்தான். படிப்பிலும் கெட்டி அல்ல. தலைசிறந்த ஓவியனாக உருவாக வேண்டும் என்ற மென்மையான லட்சியத்துடன் வளர்ந்த இயல்பான இளைஞனே. ஆனால், ஒரு கட்டத்தில் தூரிகையைத் தூக்கிக் கடாசிவிட்டு, துப்பாக்கியை நம்பி, ரத்தம் தொட்டு குரூரங்களைக் காட்சிப்படுத்தும் கொடுங்கோலனாக மாறியிருக்கிறான் எனில் அது எந்த மாதிரியான சூழ்நிலை? என்ன மாதிரியான மனநிலை?

இந்தப் புத்தகத்தில் ஹிட்லருக்குள்ளிருந்தும் பேசியிருக்கிறேன். ஹிட்லருக்கு வெளியிலிருந்தும் பேசியிருக்கிறேன். அறிந்த நிகழ்வுகளின் அறியப்படாத ரகசியங்களைப் விவரித்திருக்கிறேன். சொல்லப்பட்ட சரித்திரத்தின் சொல்லப்படாத பின்புலத்தைத் தந்திருக்கிறேன். பதியப்பட்ட காட்சிகளின் பதியப்படாத கோணங்களைக் காட்டியிருக்கிறேன். மறைக்கப்பட்ட உண்மைகளை, மறுக்கப்பட்ட சர்ச்சைகளைப் பதிந்திருக்கிறேன். அன்பர் ஹிட்லரின் அந்தரங்கத்தையும் அதனளவில் அணுகியிருக்கிறேன்.

தமிழ் வாசகர்களுக்கு ஹிட்லர் குறித்த புதிய தரிசனங்களை இந்தப் புத்தகம் நிச்சயம் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன்…

முகில்
26.07.2014

*

புத்தகத்தை வாங்க :

SixthSense Publication :

10/2(8/2), Police Quarters Road

T.Nagar,Chennai-600017

(Backside of Nathella,South Usman Road)

Phone: 044-24342771, 044-65279654, 7200050073

10 % சலுகையில் வாங்க : chennaishopping.com

http://bit.ly/1sqTSiH

Dial For Books :

+91-94459 01234 | +91-9445 97 97 97

 

 

 

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்…

முத்துநகர் எக்ஸ்பிரஸ். மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி. நேற்றிரவு சென்னை நோக்கி மனைவி, மகள், மனைவியின் பெற்றோருடன் பயணம். எத்தனையோ வருடங்கள் இதே ரயிலில்தான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். இரண்டாம் வகுப்பில் டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், அடுத்த நாளில் டிக்கெட் கிடைக்குமா என்று மனம் அனிச்சையாக யோசிக்குமே தவிர, மூன்றாம் வகுப்பு ஏசி என்றொரு பிரிவு உண்டு என்றெல்லாம் என்றைக்குமே நினைவில் தோன்றியதில்லை. அதென்னமோ தெரியவில்லை, மகள்கள் வந்து அப்பாக்களின் இயல்பை எல்லாம் இல்லாமல் செய்து விடுகிறார்கள். மகளுக்கு என்றால் மனம் கணக்குப் பார்ப்பதை மறந்துவிட்டு மகளை மட்டுமே பார்க்கிறது.

சரி விஷயம் அதுவல்ல. எங்களோடு வந்த சக பயணிகள் குறித்தது. புதிதாக திருமணம் ஆன இளம்ஜோடி, உடன் அந்தப் பெண்ணின் அண்ணன் என மூவர். வழியனுப்ப வந்த குடும்பத்தினரின் தலையை எண்ண முடியவில்லை. தூத்துக்குடியில் நேற்றிரவு 7.50 அளவில் ரயில் நிலைய நடைமேடையில் மட்டும் 2 மிமீ மழை பதிவாகியிருக்கக் கூடும். புதுப்பெண்ணும் ரயில் பெட்டிக்குள் மழை பொழிந்தாள். அந்த சோக மேகங்கள் எல்லாம் கலைந்து ஜோடி இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. குழந்தை ஒன்று எதிரில் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தால் மனம் எந்தக் கஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் கரையேறி விடுமல்லவா!

இங்கு நான் பேச விரும்பும் குணசித்திரம் அந்தப் பெண்ணின் அண்ணன். தன் தங்கையையும், தனது புதிய பளபளா அத்தானையும் விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பித்தார் அந்த அண்ணன். உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து, அதில் சப்பாத்திக்கான ‘தொட்டுக்க’ வகையறாக்களை ஊற்றோ ஊற்றென்று ஊற்றி, தரம், சுவை, திடம், மணம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்து… ஊட்டித்தான் விடவில்லை. அதற்கும் அவர் தயாராகத்தான் இருந்தார். ‘அப்பா உங்களை கவனிக்கச் சொன்னாங்க…’ – இந்த வார்த்தைகள் அவ்வப்போது அண்ணனிடமிருந்து ஒலித்தன. சப்பாத்திக்குப் பின் ஜாம் பன், அதற்குப் பின் பழம். (இத்தனையையும் நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கே தகவலுக்காக.) ஏவ்வ்வ்… சாப்பிடாமலேயே எனக்கு பசி அடங்கியது.

தன் தங்கையும், தகதகா அத்தானும் அடுத்து உறங்கச் செல்ல வேண்டும் அல்லவா. நாங்கள் எத்தனை மணிக்கு உறங்குவோம், குழந்தை எப்போது தூங்கும், தொட்டில் கட்டுவீர்களா?, எந்த இடத்தில், எந்தக் கோணத்தில், எதைக் கொண்டு கட்டுவீர்கள்?, லைட்டை எப்போது அணைப்பீர்கள்? ஏசி ஓடுவதால் ஃபேன் இரவில் தேவையா? – சீரான இடைவெளியில் இப்படி கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தார். என் தங்கைக்குக் குளிரும், லைட் எரிந்தால் அத்தானுக்குத் தூக்கம் வராது – ஆக அத்தனையும் அணைத்துவிட்டு படுங்கள் போன்ற பாசக் குறிப்புகளுக்கும் குறைவில்லை. ஆயிரம் குறிப்புகள் கொடுத்தாலும் குழந்தை, குழந்தையாகத்தான் இருக்குமென்பது பாவம் அவருக்குப் புரியவில்லை. ஆனால், அந்த இளம்ஜோடி அந்த தெய்வ மச்சானின் பாசப் போராட்டம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சைட் லோயர் பர்த்துக்கு இடம் மாறி, விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு – த்ரிஷாவைப் பிரதிபலிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

தொட்டிலைத் தயார் செய்தேன். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மகளைத் தூங்க வைத்தேன். (’நல்லாப் பாத்துக்கோங்க… நீங்கதான் நம்ம குழந்தையையும் தூங்க வைக்கணும். என்னால பாட்டெல்லாம் பாட முடியாது’ என்று அந்த புதுப்பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டாள் என்பது இங்கே கொசுறு. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்….)

என் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பித்தார்கள். அந்த அண்ணன், தன் தங்கைக்கு, அத்தானுக்கு தொட்டில் கட்ட மனத்தளவில் ஏங்கியிருக்க பிரகாச வாய்ப்புள்ளது. அவர்களுக்கு விரித்துக் கொடுத்து படுக்கச் சொன்னார். அவர்கள் சைட் லோயர் ரொமாண்டிக் கடலை மூடில் இருந்து மாறுவதாக இல்லை. ‘அப்பா உங்களைச் சீக்கிரம் தூங்க வைக்கச் சொன்னார்’ என்றும் சொல்லிப் பார்த்தார் அண்ணன். அவர்கள் அசரவில்லை. அண்ணன் வேறு வழியின்றி தன் அத்தானுக்கான மிடில் பர்த்தில் வந்து படுத்துக் கொண்டார். ‘அவங்க வந்து படுத்ததும் லைட் அணைச்சிடனும். ஃபேன் அணைச்சிடனும்’ என்று எனக்கு மீண்டும் குறிப்பு கொடுத்தார். ஃபேன் இல்லாவிட்டால் குழந்தைக்கு காற்று வராது. விடிவிளக்கு எதுவும் இல்லாததால் ட்யூப் லைட்டை அணைத்தபோது கும்மிருட்டு. மகள் சிணுங்கினாள். லைட்டைப் போட்டுக் கொண்டேன். அந்த அண்ணனது தங்கை பாசம் பெரியதா, அல்லது இந்த அப்பாவின் மகள் பாசம் பெரியதா என்று ஒரு போராட்டம் நள்ளிரவில் வெடிக்கக்கூடும் என்று மனம் எச்சரித்தது.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். அந்த இளம் ஜோடி தத்தம் பெர்த்களில் வந்து அடைக்கலமாகினர். அண்ணன் நான் லைட்டை அணைக்கிறேனா என்று பார்த்துவிட்டு, தனக்கான சைட் லோயருக்கு இடம் பெயர்ந்தார். குழந்தை அசந்து தூங்கிவிட்டதால் லைட் அணைப்பதில் எனக்குச் சங்கடம் இருக்கவில்லை. அந்தத் தங்கையும், தளதளா மச்சானும் படுத்த அடுத்த நொடி அப்படி இப்படி அசையவில்லை. லைட்டோ, ஃபேனோ, காய்கறி விலை உயர்வோ, காங்கிரஸ் அரசின் கணக்கு வழக்கில்லாத ஊழல்களோ எதுவும் அவர்களைத் தொந்தரவு செய்ய வாய்ப்பில்லாத அசல் உறக்கம். எங்கள் பகுதிக்கான திரை போட்டுக் கொண்டேன்.

மகளுடனான பயணங்களில் நான் பெரும்பாலும் உறங்குவதில்லை. என் மகள் நள்ளிரவு ஒன்றிலிருந்து இரண்டுக்குள் தொட்டிலிலிருந்து தனது அம்மாவின் அரவணைப்புக்குத் தாவுவாள். அது நிகழ்ந்தது. அச்சமயம் முதல் லைட் தேவைப்பட்டது. ஃபேனும். அன்பு அண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரைக்குள் தலையை விட்டார். என்ன நடக்கிறதென்று பார்த்தார். குழந்தையின் அழுகை, அருமை அத்தானின் துயிலை, பாச மலரின் கண்ணுறக்கத்தைத் தொந்தரவு செய்துவிடுமோ என்ற பயம் அவருக்கு. ஆனாலும் குழந்தை என்பதால் அவர் தம் கட்டுக்கடங்காத பாசத்தைக் கட்டுப்படுத்தி கக்கத்தில் சொருகிக் கொண்டு என்னைப் பார்த்தார். நானும் பதிலுக்கு வெறும் பார்வை ஒன்றை வீசினேன். தலை மறைந்தது.

அடுத்த மூன்று மணி நேரமும், குழந்தை சிணுங்க, அழ, கத்த – லைட்டை அணைக்க முடியவில்லை. அண்ணனின் தலை திரைக்குள் அடிக்கடி நுழைந்தது. என் பார்வையைச் சந்தித்துக் குரலின்றி வெளியேறியது. ஆனால், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிற ரீதியில்தான் அந்த ஜோடி தூங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை. ஆக எனக்கும் உறுத்தல் இல்லை. ஐந்து மணிக்குமேல் குழந்தை மீண்டும் தொட்டிலுக்கு மாறி, அசந்து தூங்க ஆரம்பிக்க, ரயில் இரைச்சலையும் தாண்டி அண்ணனின் பெருமூச்சு என் செவிகளில் மோதியது, கூடவே அத்தானின் தேன்மதுரக் குறட்டையொலியும்.

விடிந்தது. அண்ணனின் முகத்தில் தூங்காத களைப்பு. இருந்தாலும் தங்கையும் அத்தானும் ஃப்ரெஷ்ஷாக எழுந்ததில் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. ஆன திருப்தி.

அம்மூவரும் சென்னைக்கு வந்து யாரையோ பார்த்துவிட்டு, பின் பெங்களூர் செல்கிறார்கள். ஜோடி இனி வசிக்கப் போவது பெங்களூரில்தான். அண்ணன் குடிவைக்கச் செல்கிறார். இன்னும் சில தினங்களில் பெங்களூரில் ஏதாவது ரயில் நிலையத்தில் மட்டும் மழை பொழியக் கூடும்.

 

சென்னை புத்தகக் கண்காட்சி 2013 : என் புத்தகங்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஜனவரி 11 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்த வருடம் என்னுடைய புதிய புத்தகம் ஒன்று வெளியாகிறது. நான் எடிட் செய்த புத்தகம் ஒன்று புதிதாக வெளியாகிறது. தவிர மறுபதிப்பாகும் சில புத்தகங்கள் குறித்த அறிவிப்புகளையும் இங்கே தருகிறேன்.

அறிவிப்பு 1 : வெளிச்சத்தின் நிறம் கருப்பு

மர்மங்களின் சரித்திரம் குறித்த புத்தகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஆவி, அமானுஷ்யம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகத்தை அடக்கிவிடக் கூடாது. அவற்றையும் தாண்டி, நெஞ்சை நடுங்க வைக்கும், தூக்கத்தை தொலைக்க வைக்கும் சாகாவரம் பெற்ற மர்மங்கள் குறித்து இந்தப் புத்தகம் பேசுகிறது. இது 2012ல் தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் தொடராக வெளிவந்தது.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிஷர்ஸ்
விலை ரூ. 200.


அறிவிப்பு 2 : ரஜினி
ஆறிலிருந்து அறுபத்து மூன்று வரை ரஜினியின் முழு வாழ்க்கையைச் சொல்லும் புத்தகம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் பா. தீனதயாளன் எழுதியுள்ள, ‘ரஜினி’ புத்தகம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது. கடுமையான உழைப்பைக் கொட்டி, நுணுக்கமான தகவல்கள் சேர்த்து, அசரடிக்கும் எழுத்து நடையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எடிட் செய்தவன் என்ற முறையில், சந்தையில் இனி எத்தனை ரஜினி புத்தகங்கள் வந்தாலும் இது தனித்துவமாக நிலைத்து நிற்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு, சாண்டோ சின்னப்பா தேவர் வரிசையில் தீனதயாளனில் மாஸ்டர் பீஸ் – ரஜினி. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் இந்தப் புத்தகம் ஹிட் ஆகும். புத்தகத்தின் பதிப்பாளர் முடிவு செய்து அச்சிட்டுள்ள அட்டைப்படத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.

அரிய புகைப்படங்களுடன் 400+ பக்கங்கள்.
விலை : ரூ. 275
வெளியீடு : மதி நிலையம்

அறிவிப்பு 3 : அகம் புறம் அந்தப்புரம்
மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான எனது மெகா வரலாற்று புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் – மகாராஜாக்களின் வரலாறு. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. விலை குறித்து கவலைப்படாமல் வாசகர்கள் அதிகம் நேசித்த புத்தகமும்கூட. சுமார் 1400 பக்கங்கள் கெட்டி அட்டைப் புத்தகமாக இதைக் கொண்டு வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், கிழக்கு பதிப்பகத்தினர் இதனை அதிக அளவில் பிரிண்ட் செய்யவில்லை. ஆனால், டிமாண்ட் இருந்துகொண்டே இருந்தது. இந்த முறை, அகம் புறம் அந்தப்புரத்தை ‘பேப்பர் பேக்’காக கொண்டு வருகிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ. 995.

அறிவிப்பு 4 : சந்திரபாபு
2006 சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு, பெரும் வரபேற்பைப் பெற்ற எனது புத்தகம், கண்ணீரும் புன்னகையும். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு. இது எனது முதல் புத்தகமும்கூட. கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்தது. பலரும் புத்தகம் மீண்டும் எப்போது வரும் என்று கேட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, ‘சந்திரபாபு’ என்ற தலைப்பில், அரிய புகைப்படங்களுடன் புதிய பதிப்பாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறேன்.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்
பக்கங்கள் : 200
விலை : ரூ. 125


அறிவிப்பு 5 : அண்டார்டிகா
‘ஸ்…’ என்ற தலைப்பில் அண்டார்டிகாவின் வரலாறு, சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு வெளியீடாக வந்தது. தலைப்பு புரியவில்லையா அல்லது என்ன பிரச்னை என்று தெரியவில்லை, என் புத்தகங்களில் இது ‘குசேலன்’ ஆகிப்போனது. தற்போது, ‘அண்டார்டிகா – வரலாறு’ என்ற நேரடித் தலைப்பிலேயே புத்தகம் மறுபதிப்பு காண்கிறது. அண்டார்டிகா என்ற ஆச்சரியம் நிறைந்த கண்டம் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம். உலகின் தென் துருவத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் ஒவ்வொன்றும் உயிரை உலக்குபவை. படித்துப் பார்த்தால் உணருவீர்கள்.

வெளியீடு : மதி நிலையம்.

அறிவிப்பு 6 : சிலுக்கு
சிலுக்கு குறித்த உருப்படியான பயாகிராஃபி. சிலுக்கு லேபிளோடு தற்போது வெளிவந்த / வெளிவரப்போகும் அனைத்து பட இயக்குநர்களுக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும். பா. தீனதயாளனின் எழுத்தில், நான் எடிட் செய்த, சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை, மேம்படுத்தப்பட்டு தற்போது மறுபதிப்பு காண்கிறது.
வெளியீடு : மதி நிலையம்.



அறிவிப்பு 7 : சுப்ரமணியபுரம்
சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் திரைக்கதை, படம் உருவான விதம் – நூலாக வெளிவருகிறது. புத்தகத்தின் எழுத்து வடிவம் என்னுடையது. சில வருடங்களுக்கு முன்பு செய்து கொடுத்தேன். தற்போது புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வருவதாக நண்பர் சசிகுமார் தகவல் சொன்னார்.
மேற்சொன்ன புத்தகங்கள் தவிர, என்னுடைய பிற நூல்களான முகலாயர்கள், யூதர்கள், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான் போன்றவை கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கும்.
கடந்த ஏழு வருடங்களாக கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இருந்தபடி புத்தகக் கண்காட்சிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். இந்த வருடம் எந்த நிறுவனமும் சாராத, சுதந்தர எழுத்தாளனாக புத்தகக் கண்காட்சியைச் சந்திக்கப் போகிறேன்.
ஜனவரி 19 முதல் 23 வரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

றிடிறிஏ விக்டோரியா ஆரம்பப் பாடசாலை, தூத்துக்குடி.

 

1985

வீட்டு வாசல் கதவைப் பிடித்து அடம்பிடித்தபடி கொஞ்சநேரம், செல்லும் வழியெல்லாம் கொஞ்சநேரம், பள்ளிக்கூட கேட் அருகில் கொஞ்சநேரம் – அழுது தீர்ப்பேன். பள்ளிக்கூடம் என்றால் அவ்வளவு பயம். அந்த பயத்துக்கான காரணம் என்னவென்று சிறுகுறிப்பெல்லாம் வரைய முடியாது. பயந்தேன். அவ்வளவுதான்.

நான் படிப்பை ஆரம்பித்தது பிரிகேஜி, எல்கேஜியில் அல்ல; பேபி கிளாஸில். தமிழ் வழிக் கல்வி. எனது (தந்தை வழி) தாத்தா சுப்ரமணியன், தம் பேரப்பிள்ளைகளை தமிழ் வழியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும் என்பதில் கொள்கைப் பிடிப்போடு இருந்துள்ளார்கள். (தாத்தாவுக்கு என் மனபூர்வமான நன்றி.) என் அக்காவைக்கூட ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டு பின், தாத்தாவின் கட்டளையால் ஓரிரு வருடங்களில் தமிழ் மீடியம் பள்ளிக்கு மாற்றிவிட்டனர்.

பெற்றோர், என்னைப் பள்ளியில் கொண்டு சேர்த்த அந்த நிமிடங்கள் எல்லாம் நினைவில் இல்லை. ஆனால் பேபி கிளாஸ் எடுத்த கல்யாணி டீச்சரின் முகம் மட்டுமல்ல, குரல்கூட எனக்கு என்றைக்கும் மறக்காது. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைகள் அனைவருக்குமே எங்கள் குடும்பம் பரிச்சயம். ஆக, என்மேல் அவர்களுக்குத் தனிப் பிரியம். கல்யாணி டீச்சரது மகனான மாரிமுத்துவும் என் க்ளாஸ்மேட்தான். மாரிமுத்துவுக்கு அடுத்தபடியாக டீச்சர், அன்பாகக் கவனித்தது என்னைத்தான் இருக்கும். (நன்றி டீச்சர்!)

பேபி கிளாஸ் - 1985

டீச்சர் அன்போடு இருந்தால் மட்டும் போதுமா? ஹெட்மிஸ்டரஸ் பாசத்தோடு பேசினால் மட்டும் போதுமா? என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ‘அரளக்கா’ (ஆயாவை அப்படித்தான் கூப்பிடுவோம்; அவர்கள் முழுப்பெயர் ’அருளம்மாள்’ என ஞாபகம்.) என்னைப் பள்ளியில் பரிவாகக் கவனித்துக் கொண்டால் மட்டும் போதுமா; எனக்கும் பள்ளிக்கூடம் மீது பிடிப்பு, பிரியம், காதல், கெமிஸ்டரி எல்லாம் வர வேண்டாமா? அதெல்லாம் வருவதற்குப் பல காலம் பிடித்தது. அதிகம் பயந்தால், பள்ளி நடந்து கொண்டிக்கும்போதே அழுதபடியே என் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்பு ‘B’ செக்ஷனுக்குச் செல்வேன். அது என் அக்காவின் வகுப்பு. அவளருகில் உட்கார்ந்து கொள்வேன். அதற்காக அந்த மூன்றாம் வகுப்பு டீச்சர் என்னை ஒருபோதும் அதட்டவில்லை, விரட்டவில்லை. அவ்வகுப்பில் நடத்தப்படும் ‘ஏ ஃபார் ஆப்பிள்… பி ஃபார் பால்’ பாடத்தைக் கவனிப்பேன். (மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் ஒரு சப்ஜெக்ட்டாக எங்களுக்கு அறிமுகமானது.)

மதியம் உணவு இடைவேளையில், அரளக்கா என்னையும் அக்காவையும் (மேலும் சிலரையும்) வீட்டில் கொண்டு போய் விடுவார்கள். வீட்டுக்கும் பள்ளிக்கும் அதிக தூரமெல்லாம் இல்லை. உடல் நோகமால் அங்கப்பிரதட்சணம் செய்யும் தூரம்தான். முதல் வாய் சாப்பிடும்போதே எனக்கு வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும். தயிர் சாதத்துக்குச் செல்லும் முன்பாகவே தலைவலிக்க ஆரம்பித்துவிடும். அரளக்கா மீண்டும் பள்ளிக்கு அழைத்துப் போக வரும்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிப்பேன். என் வீட்டுக் கதவில் இறுகியிருக்கும் எனது உடும்புப் பிடியை விடுவிக்க அம்மா மல்லுக்கட்டுவார்கள்.

பேபி கிளாஸில் பர்ஸ்ட் ரேங்க் எல்லாம் எடுக்க ஆரம்பித்தவுடன், எனது பயம் மறைய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளி செல்வதில் ஆர்வம் வந்தது. இங்கே என்னைப் பற்றிய ஒரு சுயதம்பட்ட குறிப்பு: நான் றிடிறிஏ (TDTA) விக்டோரியா ஆரம்பப் பாடசாலையில் படித்தபோது (பேபி கிளாஸ் முதல் ஐந்தாம் வகுப்பு வரை) முதல் அல்லது இரண்டாம் ரேங்க் மட்டுமே வாங்கியிருக்கிறேன். நான் முதல் ரேங்க் என்றால் இரண்டாவதாக புவனேஸ்வரி இருப்பாள். நான் இரண்டாவது எனில் முதலிடத்தில் அவள் இருப்பாள். ஸ்கூல் டீமில் பெரிய பேட்ஸ்மேனாக இருப்பவன், மாவட்ட அணிக்குச் செல்லும்போது தடுமாறுவதில்லையா. மேற்படிப்புக்குச் செல்லச் செல்ல கட்டெறும்பு தேய்ந்து கால் தூசாக நான் ஆனதெல்லாம் வரலாறு!

காலையில் தினமும் பிரேயர் உண்டு. ஒவ்வொரு நாளும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏசையாவோ, யோவானோ பேசுவார்கள் அல்லது சங்கீதம் ஒலிக்கும். அதற்குப் பின் கிறித்துவப் பாடல் ஒன்றைப் பாட வேண்டும்.

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்…

என்ற பாடல் செவ்வாய்க்கிழமைக்கானது. மற்ற கிழமைக்கான பாடல்கள் நினைவில் இல்லை. அதன் அர்த்தம், யாரைப் போற்றும் பாடல் என்றெல்லாம் தெரியாது. எல்லோருடனும் சேர்ந்து அதிக சத்தம் போடுவது பாடுவதில் அவ்வளவு சந்தோஷம். (மற்ற பாடல்களை நினைவுக்குக் கொண்டு வருவதற்காக எல்லாம் வல்ல பரமபிதா கூகுளைச் சரண்புக வேண்டும்.)

பாட்டு முடிந்ததும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். முதல் பீரியடில், டீச்சரிடம் எழுதி வந்த ஹோம்-வொர்க்கைக் காண்பிக்க வேண்டும். அதற்கெனத் தனி நோட்டெல்லாம் கிடையாது. சிலேட்டுதான். (கல் சிலேட், சுற்றிலும் மரச்சட்டம் – ஞாபகமிருக்கிறதா?) எழுதுவதைவிட, அது அழியாமல் அரும்பாடுபட்டு பள்ளிக்குக் கொண்டுவருவதே ஆகப் பெரிய சவால். சிலேட்டில் இரு பக்கங்களுக்குள் அடங்கும் வகையில்தான் ஹோம்-வொர்க் சுமை இருக்கும் என்பது வசதி. ஹோம்-வொர்க் எழுதாத சமயங்களில் ‘பையில் வைத்திருந்தேன், அழிந்துவிட்டது’, ‘மழையில் அழிந்துவிட்டது’ என்று காரணம் சொல்லலாம். எந்த டீச்சரும் அவ்வளவு சுலபத்தில் ‘அடி ஸ்கேலை’த் தூக்க மாட்டார்கள்.

காலை, மதிய இடைவேளைகளில் கல்யாணி டீச்சர் தம்மிடம் இருக்கும் மிட்டாய் பாக்கெட்டுகளைப் பிரிப்பார்கள். பிரித்து ஒரு பச்சை டப்பாவில் போடுவார்கள். கடலை மிட்டாய், மிளகாய் மிட்டாய், கல்கோனா, பாக்கு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், சூடம் மிட்டாய், தேன் மிட்டாய், சீரக மிட்டாய் – இப்படி பல ரகங்கள். ஐந்து பைசாவுக்கு ஒரு மிட்டாய். எனக்கோ அக்காவுக்கோ வீட்டில் பாக்கெட் மணி கொடுக்க மாட்டார்கள். மிட்டாய் என்பது எங்களுக்குக் கண்களால் சாப்பிடும் சமாசாரம் மட்டுமே.

கொடிநாளுக்காக, பள்ளியில் எல்லோருக்கும் கொடி கொடுத்து 25 பைசா கேட்பார்கள். ஒருமுறை கொடிக்காகக் கொண்டுவந்த 50 பைசாவில் நானும் அக்காவும் ஆசைப்பட்டு மிட்டாய் வாங்கித் தின்றுவிட்டோம். கொடிக்குப் பைசா?

அம்மாவிடம் தயங்கித் தயங்கிச் சொல்ல, அப்புறமென்ன, தாராளமாக அடி கிடைத்தது. மீண்டும் மிட்டாய் வாங்கித் தின்னும் எண்ணம் வராதது போனஸ்.

பெரிய மைதானமெல்லாம் என் பள்ளியில் கிடையாது. ‘L’ போல நீளமாக அமைந்த வகுப்பறைகள். அதில் நடுவே ஹெட் மிஸ்ட்ரஸ் அறையும் பேபி கிளாஸும். அந்த வகுப்புகளுக்கு இருபுறமும் உள்ள இடம்தான் மைதானம். அங்கே மொத்தம் ஏழு மரங்கள் இருந்ததாக நினைவு. வேர்களைத் தரையில் அகலமாகப் பரப்பிய அந்த அரச மரம் மற்ற மரங்களுக்கெல்லாம் அரசனாக கம்பீரமாக நிற்கும். அது தரையில் பரப்பிய அந்த வேர் சிம்மாசனத்தில் உட்கார புதன்கிழமைகளில் போட்டா போட்டி நடக்கும்.

காரணம், புதன்கிழமை மாலையில் ‘பாட்டக்கா’ வருவார்கள். (பாட்டுப் பாடி, கதைகள் சொல்லி, பைபிள் வாசிக்கும் இனிய குரலுடைய அக்கா. கிறித்துவ மதபோதகர்.) பள்ளியின் சிறிய மைதானத்தில் எல்லோரும் குழுமியிருக்க கூட்டம் ஆரம்பமாகும். பாட்டக்கா கையில் என்ன எடுத்து வருகிறார்கள் என்பதில்தான் எங்கள் அனைவருடைய கவனமும் இருக்கும். முதலில் பைபிள் வாசிப்பார்கள். பின் சில பாடல்கள். அடுத்தது கதை. நிற்க வைக்கப்பட்டிருக்கும் கரும்பலகைமேல், வெல்வெட் போன்ற துணி ஒன்றை விரித்து, அதில் விதவிதமான, வண்ணமயமான படங்களை ஒட்டி, கதை சொல்வார்கள். இன்றைய குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனல்போல, எனக்கு அன்றைக்கு பாட்டக்கா சேனல். எல்லா கதைகளிலும் இறுதியில் இயேசுதான் ஜெயிப்பார் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் பாட்டக்கா கதை சொல்லும் அழகுக்காகவே புதன்கிழமை மாலைகளுக்காகக் காத்திருந்திருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பில் நான் படித்தது A செக்‌ஷன். ஹெட்-மிஸ்ட்ரஸ்தான் எனக்கு வகுப்பாசிரியர். பாதி வகுப்புகள் ஹெட்-மிஸ்ட்ரஸ் அறையிலேயே நடக்கும். அறைக்கு வெளியேதான் பள்ளிக்கூட மணி தொங்க விடப்பட்டிருக்கும். ஒரு பெரிய உலோக வட்டு, அதைத் தட்டுவதற்கென பெரிய சைஸ் ஆணி. மாணவர்கள்தான் மணியடிக்க வேண்டும். கிட்டத்தட்ட அது ‘ஸ்கூல் லீடர்’ போன்ற கௌரவத்துக்குரிய பதவி. பலமுறை முதல் ரேங்க் எடுக்கும் மாணவனால் மட்டுமே அப்பதவியை வகிக்க முடியும் என்பதால்…

ஒரு பீரியடுக்கும் இன்னொரு பீரியடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ‘டிங்’ என ஒரே ஒரு முறை தட்ட வேண்டும். இண்டர்வெலில் நான்கைந்து ’டிங்’குகள். மதிய இடைவேளையிலும், சாயங்காலம் பள்ளி முடியும்போதும் இஷ்டம்போல ‘டிங்டிங்’கலாம். மணியடிப்பதற்காகவே கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டு காத்திருப்பதில் அத்தனை சந்தோஷம்!

’மாணவர் சங்கம்’ – என்பது பள்ளியில் நடக்கும் கலைவிழா. ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஏதாவது நிகழ்ச்சி நடத்த வேண்டும். குழுவாக ஆடலாம், சேர்ந்து பாடலாம், கதை சொல்லலாம். நம் இஷ்டம்தான். ஐந்தாம் வகுப்பில் நண்பர்களோடு சேர்ந்து நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்தேன். சபாபதி ரக வேலைக்காரனும் (மையா), அவனால் அல்லல்படும் முதலாளியும்.

முதலாளி : மையா மையா!

வேலைக்காரன் : என்ன ஐயா?

முதலாளி : வீட்டுக்கு விருந்தாளிகள் வர்றாங்க. சோப்புத்தண்ணியால வீட்டைக் கழுவி விட்டுட்டு, எண்ணையில வடை சுட்டு வை.

’சரி’ என்பதாகத் தலையாட்டும் வேலைக்காரன், வீட்டை எண்ணெயால் கழுவி விட்டு, சோப்புத் தண்ணீரில் வடை செய்து வைப்பான். இப்படியாக சில காட்சிகளைக் கற்பனை செய்து அரங்கேற்றினோம். வசனம் மறந்து, ரியாக்‌ஷன்ஸ் மறந்து பல இடங்களில் சொதப்பினாலும் நாடகத்தை சிறிய வகுப்பு மாணவர்கள் கைதட்டி ரசித்ததாக நினைவு.

பொங்கலுக்கு முன்பாக, தீபாவளிக்கு முன்பாக, மேலும் சில விசேஷ நாள்களுக்கு முன்பாக – சத்துணவில் சாயங்கால வேளையில் ‘புளியோதரை’ கொடுப்பார்கள். சத்துணவு சாப்பிடும் நண்பர்கள் சிலர் அதில் எனக்கும் பங்கு கொடுப்பார்கள். அந்தச் சுவை நினைவில் இல்லை. ஆனால் அந்தப் புளியோதரையை நினைத்தால் இனிக்கிறது.

றிடிறிஏ பள்ளி இன்றைக்கும் தூத்துக்குடியில் இருக்கிறது. ஆனால் முற்றிலும் தோற்றத்தில் மாறுபட்டு, அந்த அரச மரத்தையும் பிற மரங்களையும் இழந்து…

2010ல் எனது பள்ளி

இப்போதும் ஊருக்குச் சென்றால் பள்ளிக்கூடத்தைக் கடக்கும்போது மதிய இடைவேளையில் எல்லா மாணவர்களும் கூடி உட்கார்ந்து உரக்கச் சொல்லும் அந்தச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்கிறது.

‘எட்டா எட்டா அறுவத்துநாலு…

ஒம்பித்தெட்டு எழுவத்திரண்டு..

பைத்தெட்டு எண்பது…’

(புகைப்படத்தில் நடுவரிசையில் கல்யாணி டீச்சருக்கு அருகில் நிற்பது நான். என்னருகில் மாரிமுத்து. மேல் வரிசையில் மூன்றாவது ஆண்டாள் கொண்டையுடன் நிற்பவள் புவனேஸ்வரி. அரளக்காவும் இருக்கிறார்கள்.)

ஆஹா – முகலாயர்கள்!

முகலாயர்கள். இந்த வருடத்தில் வெளியாகவிருக்கும் என்னுடைய புத்தகங்களில் ஒன்று.

முகலாயர்களுக்கு முந்தைய டெல்லி சுல்தான்களின் ஆட்சியிலிருந்து இரண்டாம் பகதூர் ஷா ரங்கூனில் இறந்துபோனது வரை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன். மொத்தம் 330 ஆண்டு வரலாறு. வரும் வாரத்தில் புத்தகம் வெளிவந்துவிடும் என்று நினைக்கிறேன். 500 பக்கங்கள் கொண்ட புத்தகம் – விலை ரூ. 250.

முகலாயர்கள் குறித்த நான் பேசிய நிகழ்ச்சி, நாளை ஆஹா 91.9 பண்பலையில் பகல் 12.00 முதல் 1.00 வரை ஒலிபரப்பாகவிருக்கிறது. கேட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.