மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்…

முத்துநகர் எக்ஸ்பிரஸ். மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி. நேற்றிரவு சென்னை நோக்கி மனைவி, மகள், மனைவியின் பெற்றோருடன் பயணம். எத்தனையோ வருடங்கள் இதே ரயிலில்தான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். இரண்டாம் வகுப்பில் டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், அடுத்த நாளில் டிக்கெட் கிடைக்குமா என்று மனம் அனிச்சையாக யோசிக்குமே தவிர, மூன்றாம் வகுப்பு ஏசி என்றொரு பிரிவு உண்டு என்றெல்லாம் என்றைக்குமே நினைவில் தோன்றியதில்லை. அதென்னமோ தெரியவில்லை, மகள்கள் வந்து அப்பாக்களின் இயல்பை எல்லாம் இல்லாமல் செய்து விடுகிறார்கள். மகளுக்கு என்றால் மனம் கணக்குப் பார்ப்பதை மறந்துவிட்டு மகளை மட்டுமே பார்க்கிறது.

சரி விஷயம் அதுவல்ல. எங்களோடு வந்த சக பயணிகள் குறித்தது. புதிதாக திருமணம் ஆன இளம்ஜோடி, உடன் அந்தப் பெண்ணின் அண்ணன் என மூவர். வழியனுப்ப வந்த குடும்பத்தினரின் தலையை எண்ண முடியவில்லை. தூத்துக்குடியில் நேற்றிரவு 7.50 அளவில் ரயில் நிலைய நடைமேடையில் மட்டும் 2 மிமீ மழை பதிவாகியிருக்கக் கூடும். புதுப்பெண்ணும் ரயில் பெட்டிக்குள் மழை பொழிந்தாள். அந்த சோக மேகங்கள் எல்லாம் கலைந்து ஜோடி இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. குழந்தை ஒன்று எதிரில் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தால் மனம் எந்தக் கஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் கரையேறி விடுமல்லவா!

இங்கு நான் பேச விரும்பும் குணசித்திரம் அந்தப் பெண்ணின் அண்ணன். தன் தங்கையையும், தனது புதிய பளபளா அத்தானையும் விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பித்தார் அந்த அண்ணன். உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து, அதில் சப்பாத்திக்கான ‘தொட்டுக்க’ வகையறாக்களை ஊற்றோ ஊற்றென்று ஊற்றி, தரம், சுவை, திடம், மணம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்து… ஊட்டித்தான் விடவில்லை. அதற்கும் அவர் தயாராகத்தான் இருந்தார். ‘அப்பா உங்களை கவனிக்கச் சொன்னாங்க…’ – இந்த வார்த்தைகள் அவ்வப்போது அண்ணனிடமிருந்து ஒலித்தன. சப்பாத்திக்குப் பின் ஜாம் பன், அதற்குப் பின் பழம். (இத்தனையையும் நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கே தகவலுக்காக.) ஏவ்வ்வ்… சாப்பிடாமலேயே எனக்கு பசி அடங்கியது.

தன் தங்கையும், தகதகா அத்தானும் அடுத்து உறங்கச் செல்ல வேண்டும் அல்லவா. நாங்கள் எத்தனை மணிக்கு உறங்குவோம், குழந்தை எப்போது தூங்கும், தொட்டில் கட்டுவீர்களா?, எந்த இடத்தில், எந்தக் கோணத்தில், எதைக் கொண்டு கட்டுவீர்கள்?, லைட்டை எப்போது அணைப்பீர்கள்? ஏசி ஓடுவதால் ஃபேன் இரவில் தேவையா? – சீரான இடைவெளியில் இப்படி கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தார். என் தங்கைக்குக் குளிரும், லைட் எரிந்தால் அத்தானுக்குத் தூக்கம் வராது – ஆக அத்தனையும் அணைத்துவிட்டு படுங்கள் போன்ற பாசக் குறிப்புகளுக்கும் குறைவில்லை. ஆயிரம் குறிப்புகள் கொடுத்தாலும் குழந்தை, குழந்தையாகத்தான் இருக்குமென்பது பாவம் அவருக்குப் புரியவில்லை. ஆனால், அந்த இளம்ஜோடி அந்த தெய்வ மச்சானின் பாசப் போராட்டம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சைட் லோயர் பர்த்துக்கு இடம் மாறி, விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு – த்ரிஷாவைப் பிரதிபலிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

தொட்டிலைத் தயார் செய்தேன். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மகளைத் தூங்க வைத்தேன். (’நல்லாப் பாத்துக்கோங்க… நீங்கதான் நம்ம குழந்தையையும் தூங்க வைக்கணும். என்னால பாட்டெல்லாம் பாட முடியாது’ என்று அந்த புதுப்பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டாள் என்பது இங்கே கொசுறு. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்….)

என் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பித்தார்கள். அந்த அண்ணன், தன் தங்கைக்கு, அத்தானுக்கு தொட்டில் கட்ட மனத்தளவில் ஏங்கியிருக்க பிரகாச வாய்ப்புள்ளது. அவர்களுக்கு விரித்துக் கொடுத்து படுக்கச் சொன்னார். அவர்கள் சைட் லோயர் ரொமாண்டிக் கடலை மூடில் இருந்து மாறுவதாக இல்லை. ‘அப்பா உங்களைச் சீக்கிரம் தூங்க வைக்கச் சொன்னார்’ என்றும் சொல்லிப் பார்த்தார் அண்ணன். அவர்கள் அசரவில்லை. அண்ணன் வேறு வழியின்றி தன் அத்தானுக்கான மிடில் பர்த்தில் வந்து படுத்துக் கொண்டார். ‘அவங்க வந்து படுத்ததும் லைட் அணைச்சிடனும். ஃபேன் அணைச்சிடனும்’ என்று எனக்கு மீண்டும் குறிப்பு கொடுத்தார். ஃபேன் இல்லாவிட்டால் குழந்தைக்கு காற்று வராது. விடிவிளக்கு எதுவும் இல்லாததால் ட்யூப் லைட்டை அணைத்தபோது கும்மிருட்டு. மகள் சிணுங்கினாள். லைட்டைப் போட்டுக் கொண்டேன். அந்த அண்ணனது தங்கை பாசம் பெரியதா, அல்லது இந்த அப்பாவின் மகள் பாசம் பெரியதா என்று ஒரு போராட்டம் நள்ளிரவில் வெடிக்கக்கூடும் என்று மனம் எச்சரித்தது.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். அந்த இளம் ஜோடி தத்தம் பெர்த்களில் வந்து அடைக்கலமாகினர். அண்ணன் நான் லைட்டை அணைக்கிறேனா என்று பார்த்துவிட்டு, தனக்கான சைட் லோயருக்கு இடம் பெயர்ந்தார். குழந்தை அசந்து தூங்கிவிட்டதால் லைட் அணைப்பதில் எனக்குச் சங்கடம் இருக்கவில்லை. அந்தத் தங்கையும், தளதளா மச்சானும் படுத்த அடுத்த நொடி அப்படி இப்படி அசையவில்லை. லைட்டோ, ஃபேனோ, காய்கறி விலை உயர்வோ, காங்கிரஸ் அரசின் கணக்கு வழக்கில்லாத ஊழல்களோ எதுவும் அவர்களைத் தொந்தரவு செய்ய வாய்ப்பில்லாத அசல் உறக்கம். எங்கள் பகுதிக்கான திரை போட்டுக் கொண்டேன்.

மகளுடனான பயணங்களில் நான் பெரும்பாலும் உறங்குவதில்லை. என் மகள் நள்ளிரவு ஒன்றிலிருந்து இரண்டுக்குள் தொட்டிலிலிருந்து தனது அம்மாவின் அரவணைப்புக்குத் தாவுவாள். அது நிகழ்ந்தது. அச்சமயம் முதல் லைட் தேவைப்பட்டது. ஃபேனும். அன்பு அண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரைக்குள் தலையை விட்டார். என்ன நடக்கிறதென்று பார்த்தார். குழந்தையின் அழுகை, அருமை அத்தானின் துயிலை, பாச மலரின் கண்ணுறக்கத்தைத் தொந்தரவு செய்துவிடுமோ என்ற பயம் அவருக்கு. ஆனாலும் குழந்தை என்பதால் அவர் தம் கட்டுக்கடங்காத பாசத்தைக் கட்டுப்படுத்தி கக்கத்தில் சொருகிக் கொண்டு என்னைப் பார்த்தார். நானும் பதிலுக்கு வெறும் பார்வை ஒன்றை வீசினேன். தலை மறைந்தது.

அடுத்த மூன்று மணி நேரமும், குழந்தை சிணுங்க, அழ, கத்த – லைட்டை அணைக்க முடியவில்லை. அண்ணனின் தலை திரைக்குள் அடிக்கடி நுழைந்தது. என் பார்வையைச் சந்தித்துக் குரலின்றி வெளியேறியது. ஆனால், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிற ரீதியில்தான் அந்த ஜோடி தூங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை. ஆக எனக்கும் உறுத்தல் இல்லை. ஐந்து மணிக்குமேல் குழந்தை மீண்டும் தொட்டிலுக்கு மாறி, அசந்து தூங்க ஆரம்பிக்க, ரயில் இரைச்சலையும் தாண்டி அண்ணனின் பெருமூச்சு என் செவிகளில் மோதியது, கூடவே அத்தானின் தேன்மதுரக் குறட்டையொலியும்.

விடிந்தது. அண்ணனின் முகத்தில் தூங்காத களைப்பு. இருந்தாலும் தங்கையும் அத்தானும் ஃப்ரெஷ்ஷாக எழுந்ததில் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. ஆன திருப்தி.

அம்மூவரும் சென்னைக்கு வந்து யாரையோ பார்த்துவிட்டு, பின் பெங்களூர் செல்கிறார்கள். ஜோடி இனி வசிக்கப் போவது பெங்களூரில்தான். அண்ணன் குடிவைக்கச் செல்கிறார். இன்னும் சில தினங்களில் பெங்களூரில் ஏதாவது ரயில் நிலையத்தில் மட்டும் மழை பொழியக் கூடும்.

 

சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 21, 2013

இன்று புத்தகக் கண்காட்சி காற்று வாங்கும் என்று எதிர்பார்த்து போன எனக்கு அதிர்ச்சி. மாலை 6 மணிக்குமேல் ஓரளவு நல்ல கூட்டம். கடைகளில் வியாபாரமும் ஓகே. நாளைக்கும் இதே அளவு கூட்டத்தை எதிர்பார்க்கலாம். புதன் – அன்று கடைசி தினம் என்பதால் சொல்லவே தேவை இல்லை.

நாளை மதியம் 2 மணிபோல சென்றுவிட்டால், புத்தகங்களைத் தேடி வாங்க வசதியாக இருக்கும் என்று திட்டமிட்டுள்ளேன்.

திருமகள் நிலையத்துக்கு பாலகுமாரன் வந்திருந்தார். ஏற்கெனவே வாங்க நினைத்திருந்த ‘என்னைச் சுற்றி சில நடனங்கள்’ புத்தகம் வாங்கி, அவரிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டேன். நான் பாலகுமாரனை வார இதழ்களில் வாசித்துள்ளேன். அதிகம் வாசித்ததில்லை. மேற்சொன்ன புத்தகம் அவரது கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் வாங்கினேன். ஒரு வகையில் இது அவரது ஆட்டோபயாகிராபி என்றுகூட சொல்லலாம்.

நண்பர் ஆர். முத்துக்குமார் வித்தியாசமான ஒரு புத்தகத்தை வாங்கியிருந்தார். என்ன பதிப்பகம், ஆசிரியர் பெயர் எல்லாம் நினைவில் நிற்கவில்லை. ஆனால், புத்தகத்தின் பெயர் என்றைக்கும் மறக்காது – ‘பெரிய புடுங்கி’. ஒரு பத்திரிகையாளரின் அனுபவ நூல் இது. (Karunakaran Perumal கவனத்துக்கு.)

பத்ரியைச் சந்தித்தேன். நேற்றைய கிழக்கு ஹிட் லிஸ்ட்டில் வாத்யார் சுஜாதாவும் இணைந்திருந்தார். ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஓஹோ. சாருவின் ஜீரோ டிகிரியும் டாப் டென்னில் வரக்கூடும் என்று சொன்னார்.

பெரிகாம் (ஸ்டால் எண் 585, 586) என்ற கடையில் மூன்று நூல்கள் கவனம் ஈர்த்தன. வாருங்கள் வீடு கட்டலாம், கம்பி வளைப்போர் கையேடு, கொத்தனார் கையேடு. மூன்றையும் எழுதிய ஆசிரியர் டாக்டர் என்.வி. அருணாசலம். யாருக்காவது பயன்படும் என்பதால் இங்கே இந்தத் தகவல்.

புக் வேர்ல்ட் லைப்ரரி என்ற ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் – இந்த முறை இரண்டு வரிசைகள் ஸ்டால்கள் அமைத்துள்ளார்கள். எல்லாம் பிற நாடுகளில் இருந்து கண்டெய்னர்களில் மொத்தமாக வரும் புத்தகங்கள். இங்கே உள்ள புத்தகக் கடைகளில் தேடினாலும் கிடைக்காதவை. பெரும்பாலும் ஹார்ட் பவுண்ட், காஃபி டேபிள் வகையறா புத்தங்கள். பல நல்ல, சுவாரசியமான, அரிய புத்தகங்கள் உள்ளன. ஸ்டால் எண் : 108, 436-437

திருத்தம் : தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகளுக்கு கழிவு இல்லை என்று நேற்று எழுதியிருந்தேன். மன்னிக்கவும். 10 சதவிகிதம் கொடுக்கிறார்கள்.

கேண்டீன் குறிப்பு : எதுவுமில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 20, 2013

இன்று புத்தகக் கண்காட்சியில் உச்சபட்ச கூட்டம். சென்ற மாதம் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிக்குக் குவிந்த ரசிகர்களைவிட, இன்று திரண்ட வாசகர்களின் எண்ணிக்கை அதிகம். காலை முதலே கூட்டம் குவிய ஆரம்பித்துவிட்டது. கண்காட்சி அரங்கில் நடு வரிசையில் உள்ள அரங்குகளுக்குள் நுழைய முடியவில்லை – காற்றில்லாமல் மூச்சு திணறியது. பபாஸியின் அருமையான அரங்கு கட்டமைப்புக்கு வாசகர்களின் சார்பில் கோடானு கோடி நன்றி.

பலரும் நடக்க முடியாமல் ஆங்காங்கே அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. சிறு குழந்தைகளோடு வந்திருந்த தாய்மார்கள் பலர், பாலூட்ட – உணவூட்ட தகுந்த இட வசதியின்றி தவித்ததைக் காண முடிந்தது. 750 அரங்குகளை அமைப்பவர்கள், வயதானவர்கள் – தாய்மார்கள் சற்று ஓய்வெடுக்கத் தகுந்த சிறு அறைகளை அடுத்த முறையாவது அமைத்துக் கொடுத்தால் புண்ணியம்.

இன்று கண்காட்சியில் நண்பர்கள் பலரை நீண்ட நாள்கள் கழித்து சந்தித்தேன். சொக்கனை மிஸ் செய்துவிட்டேன். நாளை சந்திக்க வேண்டும்.

கிழக்கில் ஆர். முத்துக்குமாரின் தமிழக அரசியல் வரலாறு இரண்டு தொகுதிகளும் நன்றாக விற்பனை ஆயின. மருதனின் (சே-யின்) மோட்டார் சைக்கிள் டயரியும் டாப் கியரில் விற்பனை ஆனது.

கிழக்கு ஸ்டாலை கடந்த ஓர் இளைஞன், தன்னுடன் வந்த இளைஞனிடம் அடித்த கமெண்ட் காதில் விழுந்தது. ‘ச்சே… இதையெல்லாம் போய் புக்கா கொண்டு வந்திருக்காங்க பாரு… படமே இப்போ அப்போன்னு இழுத்துக்கிட்டு இருக்குது…’ – அந்த இளைஞன் குறிப்பிட்டுச் சொன்னது இரா. முருகனின் விஸ்வரூபம் நாவலை.

தினத்தந்தியும் வழக்கம்போல வரலாற்றுச் சுவடுகளுக்கென தனி ஸ்டால் அமைத்துள்ளது. அங்கே விற்பனை டல். காரணம் இரண்டு வருடத்துக்கு முன்பு ரூ. 300க்குக் கிடைத்த சுவடுகளின் தற்போதைய விலை ரூ. 500. கழிவு கிடையாது.

வரலாற்றுச் சுவடுகளை மட்டும் சொல்ல முடியாது. காகித விலையேற்றம் முதற்கொண்டு பல காரணங்களால் எல்லா புத்தகங்களுமே கடந்த வருடத்தை விட 20லிருந்து 30 சதவிகிதம் வரை விலையேற்றம் கண்டுள்ளன. உதாரணம், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் சென்ற ஆண்டு ரூ. 500, தற்போது ரூ. 650.

சிக்ஸ்த்சென்ஸில் வெளியாகியிருக்கும் எனது புதிய புத்தகமான வெளிச்சத்தின் நிறம் கருப்பு, நன்றாக விற்பதாக பதிப்பாளர் புகழேந்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். கோபிநாத்தின் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க-வின் ஆங்கிலப் பதிப்பு புத்தகக் கண்காட்சியில் வெளியாகி 2000 பிரதிகளைத் தாண்டிவிட்டதாகத் தகவல் சொன்னார். என் சைஸுக்கு ஒரு கோட் வாங்கி மாட்டிக் கொண்டு ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் தொடர்ந்து முகம் காட்ட வேண்டும் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன். சிக்ஸ்த் சென்ஸில் பலரும் விசாரித்துச் செல்லும் சுபவீயின்  ‘ஈழம் தமிழகம் நான்’ புத்தகம் நாளை மாலை முதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தியா பதிப்பகத்தில் பல முக்கியமான மொழிபெயர்ப்பு (வரலாற்று) நூல்களை இந்த ஆண்டும் கொண்டு வந்துள்ளார்கள். யுவான் சுவாங் (மூன்று தொகுதிகள்) வாங்க வேண்டும்.

இன்று சில புத்தகங்களை மட்டும் வாங்கினேன். வாங்கிய புத்தகங்களை பிறகு மொத்தமாகப் பட்டியலிடுகிறேன்.

கேண்டீன் குறிப்பு :

ஒரு டெல்லி அப்பளம் ரூ. 30, ஒரு கப் சோளத்தின் விலையும் அதே. அதிகம்தான். கேண்டீனில், அரங்கில் கிடைக்கும் காபியின் சுவை சரியில்லை. இரவு ஏழு மணிபோலஅரங்கின் வெளியே ஆறு ரூபாய்க்கு ஓர் இளைஞர் சைக்கிளில் வந்து சுக்கு காபி விற்கிறார். அபார ருசி.

முக்கியக் குறிப்பு:

புத்தகக் கண்காட்சி ஞாயிறே கடைசி என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 23, புதன் வரை கண்காட்சி உண்டு. அடுத்த மூன்று நாள்கள் அவ்வளவாக கூட்டம் இராது. தேடித் தேடி புத்தகம் வாங்குபவர்கள் தாராளமாக வரலாம்.

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 19, 2013

பொங்கல் விடுமுறை முடிந்தும் இன்னமும் புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. இந்த வருடம் புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCAவுக்கு மாற்றப்பட்டிருப்பதுகூட பலர் அறியாத விஷயம். விளம்பரங்கள் போதவே போதாது.

அப்படியே தப்பித் தவறி அறிந்தவர்கள் YMCA மைதானத்தை அடைந்து, பின் உள்ளே ரெண்டு கிலோ மீட்டர் நாக்கு தள்ள நடந்து வந்தால் மட்டுமே, புத்தகக் கண்காட்சிக்கான டிக்கெட் கௌண்டரை அடையலாம். வாகனங்களில் வந்தால் பார்க்கிங் செய்வதற்குள் மூட்-அவுட் ஆகிவிடுகிறது.

டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழையலமா, அல்லது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாமா என்று வயோதிக அன்பர்கள் யோசிப்பது உறுதி. இந்த முறை 750 ஸ்டால்கள். எக்ஸ்ட்ரா வரிசைகள். இத்தனைக் கடைகளைப் பார்த்தே தீர வேண்டுமா என்று மலைப்பு ஏற்படுவதும் நிச்சயம். அதுவும் குறுகலான நடைபாதையில், நெரிசல் மிகுந்த கடைகளுக்குள் புகுந்து புத்தகத்தை வாங்கித்தான் தீர வேண்டுமா என்ற சலிப்பு கண்டிப்பாக ஏற்படும். பாதையில் நடக்கும்போது கவனமாக நடந்தாலே ஓரிரு முறை தடுக்கிவிழும் அதிர்ஷ்ட சம்பவங்களும் நடக்கும். ஆக, இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு துன்பியல் சம்பவமாகத்தான் நிகழ்ந்து வருகிறது.

ஆனால், பபாஸியின் (தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம்) இத்தனைச் சதிகளையும் மீறி, இன்றைக்கு வாசகர்கள் குவிந்துவிட்டார்கள். கடந்த எட்டு நாள்கள் வியாபாரமே இன்றி தவித்த கடைக்காரர்கள் முகத்தில் இன்றைக்கு கொஞ்சூண்டு புன்னகை.

இன்றைக்கு நான் சில கடைகளுக்கு மட்டுமே சென்று பார்த்தேன். புத்தகங்கள் எதுவும் வாங்கவில்லை. கடைசி மூன்று நாள்கள் புத்தகங்கள் வாங்க வேண்டும்.

சில கடைக்காரர்கள், வாசகர்களைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூவிக் கூவி கடைக்குள் அழைத்துக் கொண்டிருந்தார்கள். யாரையும் கூவி அழைக்கக்கூடாது என்பது பபாஸியின் விதி. இந்த முறை அது கிடையாதுபோல.

கடந்த நாள்களில், முதல் மூன்று வரிசைகளில் மட்டுமே கூட்டம் நிறைந்திருந்ததாகவும், மற்ற வரிசைகளுக்கு வர இயலாமல் வாசகர்கள் களைப்படைந்து விட்டதாகவும் பலர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு எல்லா வரிசையிலும் கூட்டம் ஓஹோ. நாளை இதைவிட அதிகமாக கூட்டத்தை எதிர்பார்க்கலாம்.

‘ஃபோர் ஸ்டால் என்ற விஷயத்தைத் தூக்கிவிட்டு, த்ரீ ஸ்டால்கள் அமைத்திருப்பது பெரிய மைனஸ்.  கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு, வாடகை மூலம் அதிக வருமானம் பார்ப்பதே பபாஸியின் ஒரே நோக்கம். அதனால் புத்தக விற்பனை பாதிப்பது குறித்து அவர்களுக்கு கவலையே கிடையாது. கேட்டால், ‘இருக்குற இடத்துல புத்தகம் வித்துக்கிறது அவனவன் திறமை’ என்று பதில் சொல்கிறார்கள்’ என வருத்தப்பட்டார் பதிப்பக நண்பர் ஒருவர்.

விகடனில் – வட்டியும் முதலும், கிழக்கில் – பிரபல கொலை வழக்குகள் ஆகிய புத்தகங்கள் நம்பர் ஒன் ஸ்நானத்தில் இருப்பதாக அறிந்தேன்.

சிக்ஸ்த் சென்ஸில் வெளியாகியுள்ள எனது ‘வெளிச்சத்தின் நிறம் கருப்பு’ புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அப்பதிப்பக நண்பர் பாண்டியன் சொன்னார். அங்கே புதிய பதிப்பாக வெளியாகியுள்ள சந்திரபாபு புத்தகத்தை 40+ வயதுடையவர்கள் விருப்பத்துடன் வாங்கிச் சென்றதைக் கண்டேன். சந்திரபாபு மீண்டும் ஒரு ரவுண்ட் வருகிறார் என்பதில் எனக்கு திருப்தி.

நாளை மதியம் முதல் புத்தகக் கண்காட்சியில் இருப்பேன். நிறைய நண்பர்களைச் சந்திக்கத் திட்டம்.

 

 

பேஸ்புக் ஒழிக!

கொசு விரட்டிகளென ஆயிரத்தெட்டு ப்ராடெக்டுகள் சந்தையில் கிடைக்கின்றன. அதற்கெல்லாம் கொசு அடங்குகிறதா இல்லையா என்பது விடை தெரியா கேள்வி. இந்த தலைமுறை கொசுக்கள், ஒழிப்பான்களை எல்லாம் ஏமாற்றும் வித்தை தெரிந்தவை என்பதே என் எண்ணம்.

இருந்தாலும் கொசு அடிக்கும் பேட் – ரட்சகராகத்தான் தெரிகிறது. அதைக் கொண்டு கொசுவைக் கொல்வதில் ஒரு குரூர திருப்தி கிடைக்கிறது.

ஒரு கொசுவுக்கு ஒரு ரன் என்று கணக்கு வைத்துக் கொண்டால்கூட, நாமெல்லாம் கொசு பேட் மூலம் அடித்த ரன்களை, சச்சின்கூட நெருங்க முடியாதுதான்.

சங்ககாலத்தில் எம் பெண்கள் முறம் கொண்டு புலி விரட்டினர். இக்காலத்தில் நம் பெண்கள் பேட் கொண்டு கொசு அழித்தனர் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட முடிகிறது.

ஒரு நாளைக்கு நாலைந்து கொசுக்கள் பேட்டில் சிக்கினாலே, வீட்டிலுள்ள கொசுவை எல்லாம் அடித்துக் கொன்றுவிட்டோம் என மனம் நிறைவு கொள்கிறது. அந்த நினைப்பிலேயே, சந்தோஷத்திலேயே நன்றாகத் தூங்க முடிகிறது. அச்சமயத்தில் கொசு என்ன, குளவியே கடித்தாலும் தெரிவதில்லை.

****

‘சிகரெட்டை பிடிக்கறதை தயவுசெஞ்சு நிறுத்துங்க’ன்னு தலீவர் மார்கழி மாசத்துல சொல்லிருக்கக்கூடாதோ?! தலீவர் இப்படி சொல்லிட்டாரேங்கிற டென்ஷன்ல எக்ஸ்ட்ராவா தம் அடிக்காம இருந்தா சரி. # மார்கழி சிந்தனை 483.

****

21 டிசம்பர், 2012…

இப்படியே செத்துச் செத்து விளையாடுவதே இந்த பூமிக்கு வேலையாப் போச்சுது. நாளைக்கும் இன்னொரு தபா உலகம் அழியப் போவுதாம். அடப்போங்கப்பு, போய்புள்ளகுட்டிகளை படிக்க வைங்க!

*
அடியேய்… நாளைக்கு ஒலகம் அழியறத சன் டீவில லைவா காட்டுறாகளாம்!

அய்யோ.. அதைப் பாக்கணும்னா இந்த கரண்டு சனியன் இருந்து தொலையாதே!

*

பவர் ஸ்டாரின் பவர்ஃபுல் காமெடியில் உருவாகியுள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைக் காண்பதற்கு முன்பாகவே உலகம் அழிந்துவிடுமோ என்பது மட்டுமே என்னுடைய ஒரே கவலை!

****

நண்பர்கள், வாசகர்கள் கவனத்துக்கு :

இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் இரண்டு முக்கிய மாற்றங்கள்.

ஜனவரி 4 முதல் 16 வரை என்று முதலில் அறிவித்திருந்தார்கள். இப்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

ஜனவரி 11 முதல் ஜனவரி 23 வரை புத்தகக் கண்காட்சி.
நடைபெறும் இடம் : நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம்.

கடந்த ஆறு வருடங்களாக பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்தது. அங்கே மெட்ரோ ரயில் வேலைகள் நடைபெறுவதால் இந்த இடமாற்றம்.

தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிக முக்கியமான பின் குறிப்பு : புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்க அம்மா வரலாம் என்று தகவல். ஆக, முதல்நாள் யாரும் சென்று அவதிப்பட வேண்டாம்.

****

பேஸ்புக் எனக்கெதிராகச் சதி செய்கிறது. வலைத்தளம் பக்கமே என்னை வர விடுவதில்லை. நான் எதை எழுத நினைத்தாலும், அதைத் தன் மீதே எழுத வைத்து விடுகிறது. அதனால்தான் வலைத்தளத்தில் என்னால் எழுத முடியாமல் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட சுயநலத்தோடும் ஆணவத்தோடும் இயங்கிக் கொண்டிருக்கும் பேஸ்புக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என் கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாகத்தான் பேஸ்புக்கில் சமீபத்தில் எழுதிய சில ஸ்டேட்டஸ்களை இங்கே பதிந்திருக்கிறேன்.

பேஸ்புக் அராஜகம் ஒழிக!

😉