சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 20, 2013

இன்று புத்தகக் கண்காட்சியில் உச்சபட்ச கூட்டம். சென்ற மாதம் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிக்குக் குவிந்த ரசிகர்களைவிட, இன்று திரண்ட வாசகர்களின் எண்ணிக்கை அதிகம். காலை முதலே கூட்டம் குவிய ஆரம்பித்துவிட்டது. கண்காட்சி அரங்கில் நடு வரிசையில் உள்ள அரங்குகளுக்குள் நுழைய முடியவில்லை – காற்றில்லாமல் மூச்சு திணறியது. பபாஸியின் அருமையான அரங்கு கட்டமைப்புக்கு வாசகர்களின் சார்பில் கோடானு கோடி நன்றி.

பலரும் நடக்க முடியாமல் ஆங்காங்கே அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. சிறு குழந்தைகளோடு வந்திருந்த தாய்மார்கள் பலர், பாலூட்ட – உணவூட்ட தகுந்த இட வசதியின்றி தவித்ததைக் காண முடிந்தது. 750 அரங்குகளை அமைப்பவர்கள், வயதானவர்கள் – தாய்மார்கள் சற்று ஓய்வெடுக்கத் தகுந்த சிறு அறைகளை அடுத்த முறையாவது அமைத்துக் கொடுத்தால் புண்ணியம்.

இன்று கண்காட்சியில் நண்பர்கள் பலரை நீண்ட நாள்கள் கழித்து சந்தித்தேன். சொக்கனை மிஸ் செய்துவிட்டேன். நாளை சந்திக்க வேண்டும்.

கிழக்கில் ஆர். முத்துக்குமாரின் தமிழக அரசியல் வரலாறு இரண்டு தொகுதிகளும் நன்றாக விற்பனை ஆயின. மருதனின் (சே-யின்) மோட்டார் சைக்கிள் டயரியும் டாப் கியரில் விற்பனை ஆனது.

கிழக்கு ஸ்டாலை கடந்த ஓர் இளைஞன், தன்னுடன் வந்த இளைஞனிடம் அடித்த கமெண்ட் காதில் விழுந்தது. ‘ச்சே… இதையெல்லாம் போய் புக்கா கொண்டு வந்திருக்காங்க பாரு… படமே இப்போ அப்போன்னு இழுத்துக்கிட்டு இருக்குது…’ – அந்த இளைஞன் குறிப்பிட்டுச் சொன்னது இரா. முருகனின் விஸ்வரூபம் நாவலை.

தினத்தந்தியும் வழக்கம்போல வரலாற்றுச் சுவடுகளுக்கென தனி ஸ்டால் அமைத்துள்ளது. அங்கே விற்பனை டல். காரணம் இரண்டு வருடத்துக்கு முன்பு ரூ. 300க்குக் கிடைத்த சுவடுகளின் தற்போதைய விலை ரூ. 500. கழிவு கிடையாது.

வரலாற்றுச் சுவடுகளை மட்டும் சொல்ல முடியாது. காகித விலையேற்றம் முதற்கொண்டு பல காரணங்களால் எல்லா புத்தகங்களுமே கடந்த வருடத்தை விட 20லிருந்து 30 சதவிகிதம் வரை விலையேற்றம் கண்டுள்ளன. உதாரணம், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் சென்ற ஆண்டு ரூ. 500, தற்போது ரூ. 650.

சிக்ஸ்த்சென்ஸில் வெளியாகியிருக்கும் எனது புதிய புத்தகமான வெளிச்சத்தின் நிறம் கருப்பு, நன்றாக விற்பதாக பதிப்பாளர் புகழேந்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். கோபிநாத்தின் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க-வின் ஆங்கிலப் பதிப்பு புத்தகக் கண்காட்சியில் வெளியாகி 2000 பிரதிகளைத் தாண்டிவிட்டதாகத் தகவல் சொன்னார். என் சைஸுக்கு ஒரு கோட் வாங்கி மாட்டிக் கொண்டு ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் தொடர்ந்து முகம் காட்ட வேண்டும் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன். சிக்ஸ்த் சென்ஸில் பலரும் விசாரித்துச் செல்லும் சுபவீயின்  ‘ஈழம் தமிழகம் நான்’ புத்தகம் நாளை மாலை முதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தியா பதிப்பகத்தில் பல முக்கியமான மொழிபெயர்ப்பு (வரலாற்று) நூல்களை இந்த ஆண்டும் கொண்டு வந்துள்ளார்கள். யுவான் சுவாங் (மூன்று தொகுதிகள்) வாங்க வேண்டும்.

இன்று சில புத்தகங்களை மட்டும் வாங்கினேன். வாங்கிய புத்தகங்களை பிறகு மொத்தமாகப் பட்டியலிடுகிறேன்.

கேண்டீன் குறிப்பு :

ஒரு டெல்லி அப்பளம் ரூ. 30, ஒரு கப் சோளத்தின் விலையும் அதே. அதிகம்தான். கேண்டீனில், அரங்கில் கிடைக்கும் காபியின் சுவை சரியில்லை. இரவு ஏழு மணிபோலஅரங்கின் வெளியே ஆறு ரூபாய்க்கு ஓர் இளைஞர் சைக்கிளில் வந்து சுக்கு காபி விற்கிறார். அபார ருசி.

முக்கியக் குறிப்பு:

புத்தகக் கண்காட்சி ஞாயிறே கடைசி என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 23, புதன் வரை கண்காட்சி உண்டு. அடுத்த மூன்று நாள்கள் அவ்வளவாக கூட்டம் இராது. தேடித் தேடி புத்தகம் வாங்குபவர்கள் தாராளமாக வரலாம்.

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 19, 2013

பொங்கல் விடுமுறை முடிந்தும் இன்னமும் புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. இந்த வருடம் புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCAவுக்கு மாற்றப்பட்டிருப்பதுகூட பலர் அறியாத விஷயம். விளம்பரங்கள் போதவே போதாது.

அப்படியே தப்பித் தவறி அறிந்தவர்கள் YMCA மைதானத்தை அடைந்து, பின் உள்ளே ரெண்டு கிலோ மீட்டர் நாக்கு தள்ள நடந்து வந்தால் மட்டுமே, புத்தகக் கண்காட்சிக்கான டிக்கெட் கௌண்டரை அடையலாம். வாகனங்களில் வந்தால் பார்க்கிங் செய்வதற்குள் மூட்-அவுட் ஆகிவிடுகிறது.

டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழையலமா, அல்லது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாமா என்று வயோதிக அன்பர்கள் யோசிப்பது உறுதி. இந்த முறை 750 ஸ்டால்கள். எக்ஸ்ட்ரா வரிசைகள். இத்தனைக் கடைகளைப் பார்த்தே தீர வேண்டுமா என்று மலைப்பு ஏற்படுவதும் நிச்சயம். அதுவும் குறுகலான நடைபாதையில், நெரிசல் மிகுந்த கடைகளுக்குள் புகுந்து புத்தகத்தை வாங்கித்தான் தீர வேண்டுமா என்ற சலிப்பு கண்டிப்பாக ஏற்படும். பாதையில் நடக்கும்போது கவனமாக நடந்தாலே ஓரிரு முறை தடுக்கிவிழும் அதிர்ஷ்ட சம்பவங்களும் நடக்கும். ஆக, இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு துன்பியல் சம்பவமாகத்தான் நிகழ்ந்து வருகிறது.

ஆனால், பபாஸியின் (தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம்) இத்தனைச் சதிகளையும் மீறி, இன்றைக்கு வாசகர்கள் குவிந்துவிட்டார்கள். கடந்த எட்டு நாள்கள் வியாபாரமே இன்றி தவித்த கடைக்காரர்கள் முகத்தில் இன்றைக்கு கொஞ்சூண்டு புன்னகை.

இன்றைக்கு நான் சில கடைகளுக்கு மட்டுமே சென்று பார்த்தேன். புத்தகங்கள் எதுவும் வாங்கவில்லை. கடைசி மூன்று நாள்கள் புத்தகங்கள் வாங்க வேண்டும்.

சில கடைக்காரர்கள், வாசகர்களைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூவிக் கூவி கடைக்குள் அழைத்துக் கொண்டிருந்தார்கள். யாரையும் கூவி அழைக்கக்கூடாது என்பது பபாஸியின் விதி. இந்த முறை அது கிடையாதுபோல.

கடந்த நாள்களில், முதல் மூன்று வரிசைகளில் மட்டுமே கூட்டம் நிறைந்திருந்ததாகவும், மற்ற வரிசைகளுக்கு வர இயலாமல் வாசகர்கள் களைப்படைந்து விட்டதாகவும் பலர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு எல்லா வரிசையிலும் கூட்டம் ஓஹோ. நாளை இதைவிட அதிகமாக கூட்டத்தை எதிர்பார்க்கலாம்.

‘ஃபோர் ஸ்டால் என்ற விஷயத்தைத் தூக்கிவிட்டு, த்ரீ ஸ்டால்கள் அமைத்திருப்பது பெரிய மைனஸ்.  கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு, வாடகை மூலம் அதிக வருமானம் பார்ப்பதே பபாஸியின் ஒரே நோக்கம். அதனால் புத்தக விற்பனை பாதிப்பது குறித்து அவர்களுக்கு கவலையே கிடையாது. கேட்டால், ‘இருக்குற இடத்துல புத்தகம் வித்துக்கிறது அவனவன் திறமை’ என்று பதில் சொல்கிறார்கள்’ என வருத்தப்பட்டார் பதிப்பக நண்பர் ஒருவர்.

விகடனில் – வட்டியும் முதலும், கிழக்கில் – பிரபல கொலை வழக்குகள் ஆகிய புத்தகங்கள் நம்பர் ஒன் ஸ்நானத்தில் இருப்பதாக அறிந்தேன்.

சிக்ஸ்த் சென்ஸில் வெளியாகியுள்ள எனது ‘வெளிச்சத்தின் நிறம் கருப்பு’ புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அப்பதிப்பக நண்பர் பாண்டியன் சொன்னார். அங்கே புதிய பதிப்பாக வெளியாகியுள்ள சந்திரபாபு புத்தகத்தை 40+ வயதுடையவர்கள் விருப்பத்துடன் வாங்கிச் சென்றதைக் கண்டேன். சந்திரபாபு மீண்டும் ஒரு ரவுண்ட் வருகிறார் என்பதில் எனக்கு திருப்தி.

நாளை மதியம் முதல் புத்தகக் கண்காட்சியில் இருப்பேன். நிறைய நண்பர்களைச் சந்திக்கத் திட்டம்.