தேர்தல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

மே 13 புதன்கிழமை
உங்கள் முத்திரை டீவி வழங்கும்
தேர்தல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

காலை 6 மணிக்கு
சிங்கள இசை
திடீர்த் தமிழீழ ஆதரவாளர்கள் வழங்கும் ‘கர்நாடக’ இசை விருந்து

காலை 7 மணிக்கு
வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சியில்
சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்
மாண்புமிகு தமிழக புதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்.

கிளிப்பிங்ஸ்:

‘தமிழர்களே.. டாக்டர் கலைஞர் அவர்களின் மகனாக உட்கார்ந்து கேட்கி றேன். உரிமையோடு கேட்கிறேன். உணர்வோடு கேட்கிறேன். உங்களுக்காக கேட்கிறேன். கேட்க வேண்டும் என்பதற்காக கேட்கிறேன். எனது தந்தை அப்பல்லோவிலே முடியாமல் படுத்திருந்தபோது வந்து எட்டிப் பார்க்கத் திராணியில்லாத ராமதாஸ், உண்மையிலேயே டாக்டர்தானா?’

காலை 9 மணிக்கு
காலணியாதிக்கம்

ப. சிதம்பரம் சிறுவயதில் இருந்து தான் சேகரித்து வைத்திருக்கும் காலணிகள் குறித்து கலகலப்பாக தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வித்தியாசமான நிகழ்ச்சி.

காலை 9.30க்கு
உண்ணாவிரத சமையல்

உண்ணாவிரத நாள்களில் என்னென்ன சமைக்கலாம் என்று விசேஷ சமையல் குறிப்புகளை வாரி வழங்குகிறார்கள் திருமதி. தயாளு, திருமதி. ராஜாத்தி

காலை 10 மணிக்கு
தாவுடா ராமா, தாவு!

தேர்தலுக்குத் தேர்தல் வெ.மா.சூ.சொ. இல்லாமல் கூட்டணி விட்டுக் கூட்டணி தாவுவது எப்படி என்று தங்கள் பொது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்றுக்கொடுக்கிறார்கள் அரசியல் ‘கரை’கண்ட பிரபலங்கள்.

காலை 10.30 மணிக்கு
சிறப்பு பட்டிமன்றம்.
கள்ள ஓட்டில் கைதேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியினரே! எதிர்க்கட்சியினரே!

பல களம் கண்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பூத் ஏஜெண்டுகள் தங்கள் திறமையை நிரூபிக்க வாதங்களால் போராடும் அடிதடி ரணகள பட்டிமன்றம்.

காலை 11.30 மணிக்கு
தமிழக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் முதல் முறையாக,
அம்பலத்துக்கு வந்து சில மாதங்களே ஆன
ஜெ. ஜெயலலிதா, பொன்னையன், ஓ. பன்னீர்செல்வம், சசிகலா நடித்த
அதிரடி சூப்பர் ஹிட் தமிழீழத் திரைப்படம்

சின்னத்தில் முத்தமிட்டால்

மாலை 4.00 மணிக்கு
நான் பிரதமர் ஆனால்..

வைகோ, விஜயகாந்த், சரத்குமார், திருமாவளவன் ஆகியோர் தாங்கள் கண்ட பகல் கனவு பற்றி சுவைபடக் கூறுகிறார்கள்.

மாலை 5.00 மணிக்கு
கன்னி ஓட்டு!

வாழ்க்கையில் முதன்முறையாக வாக்களிக்கப் போகும் நடிகை நமீதா, பூத்துக்குச் சென்று வாக்களிக்கும் நிகழ்ச்சி – நேரடி ஒளிபரப்பு!

மாலை 5.30 மணிக்கு
கடுங்காப்பி வித் சோனியா!

தங்கபாலு, இளங்கோவன், ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி நால்வரும் இணைந்து, ஒருத்தரை ஒருத்தர் கனிவாகப் போட்டுத் தள்ளும் பாரம்பரிய நிகழ்ச்சி.

மாலை 6.30 மணிக்கு
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக
தெருவுக்கு வந்து சிலநாள்களே ஆன
படுதோல்வி திரைப்படம்
தேர்தலில் கட்டிய வைப்புத் தொகைக்காக, நாக்குதள்ள போராடும் மூன்று இளைஞர்களின் கண்ணீர்க் கதை
கார்த்திக், டி. ராஜேந்தர், மன்சூர் அலிகான் நடித்த

டெபாசிட்

கலகல டிராஜடி திரைப்படம்

இரவு 10.00 மணிக்கு
மௌன அஞ்சலி!

நடந்துமுடிந்த ஜனநாயகப் படுகொலைக்கான சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி!

தேர்தல் தின சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்கும் ஒரே விளம்பரதாரர்
எளிமை நாயகன் ஜே.கே. ரித்தீஸ்

வாக்காளர்களே!

வரும் தேர்தலைக் கொண்டாடுவோம்!
அடுத்த தேர்தல்வரை திண்டாடுவோம்!

குறளின் 134வது அதிகாரம்!

134. தேர்தல் அதிகாரம்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் குழப்பங்களும்
கூடி இருப்பதே காங்கிரஸ்.

இராமர்என்ப ஓடும் ரதமென்ப இவ்விரண்டும்
யுக்தியென்ப தேர்தலில் அத்வானிக்கு.

திகாரினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வருண்வாயினால் சுட்ட வடு.

வெட்டிய பொழுதில் பெரிதுவக்கும் தன்குருவை
எம்பி எனக்கேட்ட அய்யா.

அம்மா தோழிக்குஆற்றும் நன்றி பின்புலத்தில்
முதன்மையாய் இருப்பச் செயல்

கூட்டணியைக் கவிழ்ப்பாரே ஒருவர் – அவர்நாண
அடுத்த அணியில் சேர்ந்துவிடல்.

தோன்றின் அழகிரியாய் தோன்றுக அஃதிலார்
மதுரையில் தோன்றாமை நன்று.

எல்லா ஓட்டும் ஓட்டல்ல – பலருக்கு
சாதிசன ஓட்டே ஓட்டு.

ஓரணிவிட்டு முற்பகல் விலகில் தனிஅணி
பிற்பகல் தாமே வரும்.

அனுதாப அலை உடைத்தாயின் – தேர்தலில்
பயனும் பதவியும் அது.

கட்சிகளுக்கும் உண்டோ கொள்கைதாழ்? தேர்தலில்
பகைஅணியே இடம் தரும்.

ஆடியது காங்கிரஸ் கூடாரம்!

(தேர்தல் செய்திதான். ஆனால் கொஞ்சம் பழசு.)

சுதந்தரம், சமஸ்தானங்கள் இணைப்பு இவையெல்லாம் நிகழ்ந்த பிறகும் பல மகாராஜாக்களுக்குப் பழைய நினைப்பும் மிதப்பும் குறையவில்லை. சொல்லப்போனால் அதுவரை மன்னர் ஆட்சிக்குப் பழகியிருந்த மக்கள் மனத்தில் மகாராஜாக்களின் மீதான மதிப்பு குறையாமல்தான் இருந்தது.

1952. ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் சட்டசபை, இந்தியாவின் முதல் மக்களவைக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. ‘எவனாவது தேர்தல்ல நின்னீங்க, மானியம் கிடையாது’ என்று நேரு, முன்னாள் மகாராஜாக்களை மிரட்டியதாக ஒரு தகவல் உண்டு.

ஜோத்பூரின் கடைசி மகாராஜா ஹன்வந்த் சிங்கும் தேர்தலைச் சந்திக்கத் தயாரானார். காங்கிரஸோடு கூட்டணி அமைத்து போட்டிபோட நினைத்தார். பாதி தொகுதிகள் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படவில்லை. தனித்து நிற்க முடிவு செய்தார்.

ஹன்வந்த் சிங்

காங்கிரஸார் கைகொட்டிச் சிரித்தார்கள். ‘நான் நிக்கவைச்சா ஒரு கல்லுகூட தேர்தல்ல ஜெயிக்கும்’ என்று சவால்விட்டு களமிறங்கினார் ஹன்வந்த் சிங். தனது ரதோர் பரம்பரையைச் சேர்ந்த பிரமுகர்களையெல்லாம் சேர்த்தார். முப்பந்தைந்து சட்டசபை, நான்கு பாராளுமன்றத் தொகுதிகளில் நிறுத்தினார். அவரு ஜோத்பூர் சட்டசபை, பாராளுமன்றம் இரண்டிலும் வேட்பாளராக நின்றார்.

‘போடுங்கம்மா ஓட்டு! ஒட்டகத்தைப் பார்த்து!’ – ஊர் ஊராகச் சுற்றினார். ‘நீங்கள் என் மக்கள். நீங்களே எனக்கான மானியம்!’ – ஹன்வந்த் சிங்குக்கு செல்லுமிடமெல்லாம் படுவரவேற்பு. காங்கிரஸ் கூடாரம் ஆடித்தான் போயிருந்தது. தேர்தல்கள் முடிந்தன. ஓட்டு எண்ணிக்கைகள் ஆரம்பமாயின (ஜனவரி 26). ஆரம்பத்திலிருந்தே ஒட்டகத்துக்கு நல்ல செய்திதான் வந்துகொண்டிருந்தது.

ஹன்வந்த் சிங்குக்கு குஷி தாங்கவில்லை. தனது மூன்றாவது மனைவியும் நடிகையுமான ஸுபைதாவை அழைத்துக்கொண்டார். இருவர் மட்டும் செல்லும் மினி விமானம் ஒன்றில் ஏறினார். மகிழ்ச்சியாக ஓட்ட ஆரம்பித்தார். விமானம் வானத்தில் சாகசம் செய்துகொண்டிருந்தது.

இரவு. நொறுங்கிக் கிடந்த விமானத்தில் இருந்து ஹன்வந்த் சிங்கின் உடலையும் ஸுபைதாவின் உடலையும் மீட்டெடுத்தார்கள். (ஹன்வந்த் சிங், ஸுபைதாவின் கதை, ‘ஸுபைதா’ என்ற ஹிந்தித் திரைப்படமாக வெளிவந்துள்ளது.) தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகின. ஹன்வந்த் சிங்கின் வேட்பாளர்கள் 31 சட்டசபைத்தொகுதிகளிலும், 4 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தார்கள். அவரும் இரண்டிலும் வெற்றிபெற்றிருந்தார்.

காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளரான ஜெய் நாராயன் வியாஸுக்குப் படுதோல்வி. மகாராஜா இறந்த துக்கம், ஆத்திரம். வியாஸை ஜோத்பூர் மக்கள் நையப்புடைத்திருந்தார்கள். பின்பு இடைத்தேர்தல் ஒன்றில் வெற்றிபெற்றுதான் வியாஸால் முதலமைச்சர் ஆக முடிந்தது.

விடுகதையா பொது வாழ்க்கை? – வைகோ விரக்தி

(வைகோவின் சோகப்பாட்டு)

விடுகதையா பொது வாழ்க்கை?
விடைதருவார் இங்கு யாரோ?

எனது ‘சிஸ்டர்’எனை அடிப்பதுவோ?
மாம்பழம் கொண்டு துரத்துவதோ?
ஏழு என்றிருந்த என் நினைப்பில்,
மூன்றுலாரி மண் விழுகிறதோ?

ஏனென்று கேட்கவும் நாதியில்ல.
ஏழையின் கட்சிக்கு சின்னமுண்டு, சீட்டு இல்லை

பம்பரம் சுற்றுமென்று படம்காட்ட முடியும்
சாட்டையைப் பிடுங்கிட்டால் சகிக்கவா முடியும்?

கட்சியில் மிஞ்சியிருக்கும் கடைசி தொண்டன் கேட்டான்
நான் செய்த பாவம் என்ன?

(மிஸ்டர் பொதுஜனத்தின் எசப்பாட்டு.)

விடுகதைதான் பொது வாழ்க்கை
விடைதருவாய் இங்கு நீயே.

உனது ராஜாங்கம் இதுதானே
கூட்டணி வேண்டாம் நல்லவனே
துண்டுகள்தேடி நீ சென்றால் தொல்லைகள்தான் தூயவனே

காவிரிவேண்டி நீ நடந்தாய்
பின்பு போயஸில் எதைநாடி நீ மறைந்தாய்?
காவியங்கள் உனைபாடக் காத்திருக்கும்போது
காவிக்கட்சி கரம்பிடித்தால் மீண்டும் வரும் தீது
வாழ்வை நீ தேடி அங்குமிங்கும் போனால்
நாங்கள் மறந்திடுவோம்.

‘தேர்தலில் எனது ஆதரவு அர்த்தமற்றது’ – கமலஹாசன் அதிரடி!

‘தேர்தல்ல எந்தக் கட்சியை நான் ஆதரிக்கேனோ அந்தக் கட்சிக்கு டெபாசிட் ‘டப்பா’சிட் ஆயிடுது. ஸோ, அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தத் தேர்தல்ல என்னோட ஆதரவு யாருக்கும் கிடையாது’ன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கம்போல அறிக்கை விடப்போறாரு. அதைக் கேட்டதுக்கு அப்புறம் எல்லாக் கட்சிக்காரங்களும் பெருமூச்சு உட்டு நிம்மதியா இருப்பாங்க. ஆனா பத்திரிகைக்காரங்களுக்கு பரபரன்னு பத்திக்கிறாப்ல நியூஸ் வேணுமே, என்ன செய்யன்னு யோசிச்ச, குறுகுறு நாளிதழின் குறும்புக்கார நிருபர் ஒருவர் சில வி.ஐ.பிக்களைத் தேடி ஓடுனாரு. ‘உங்க ஆதரவு யாருக்கு’ன்னு தோண்டித் துருவிக் கேட்டாரு. ‘இது என்னடா வம்பாப் போச்சு’ன்னு அவங்க திக்கித் திணறி, விக்கி விழுங்கி சொன்ன பதில்தான் இது.



(முதலில் அந்த நிருபர் சென்ற இடம் ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் வீடு.)

நிருபர் : சார் வணக்கம். நீங்க சொல்லிட்டிங்கன்னா தலைப்புச் செய்தியா தட்டி விட்டிரலாம்.
கமல் : ஹாங்.. வெல்.. ‘தலைவன் இருக்கிறான்’ அறிவிப்பு அடுத்த மாசம் வந்துரும். அதை நான் ரெண்டு லாங்குவேஜ்ல.. ஐ மீன் டூ மொழி.
நிருபர் : அதை விடுங்க சார். வர்ற தேர்தல்ல, நீங்க யாரை ஆதரிக்கப்போறீங்க?
கமல் : தேர்தல். யெஸ். ஆதரவுங்கிறது எல்லாத்துக்குமே வேணும். ஒரு குழந்தைகிட்ட போய் அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமான்னு கேட்டா அது சாதுர்யம் இல்லாத குழந்தைன்னா திருதிருன்னு முழிச்சிக்கிட்டு என்ன சொல்லன்னு தெரியாம, அடுத்த நிமிஷமே அதை மறந்து போயிரும். அதே குழந்தை புத்திசாலியா இருந்தா, அம்மா, அப்பா ரெண்டு பேரையுமே பிடிக்கும். ஓடிப் போன சித்தப்பாவைக் கூட எனக்குப் பிடிக்கும்னு சிரிச்சுக்கிட்டே சொல்லும். நான் சாதுர்யம் இல்லாத குழந்தையும் இல்ல. புத்திசாலிக் குழந்தையும் இல்ல. ஏன்னா நான் குழந்தையே இல்ல. அரசியல் கர்ப்பப்பையில் நான் இன்னும் கருத்தரிக்கவே இல்லை. கருத்தரிக்கவும் வாய்ப்பில்லை.  பூமியில ஒரு செடி முளைச்சு, கொடியாப் படரணும்னா அதுக்கு ஒரு குச்சி இருந்தா ஆதரவா இருக்கும். அந்தக் கொடி…
நிருபர் : எந்தக் கொடி சார்?
கமல் : கொடின்னா துணியால ஆனதா இருக்கலாம். ஆனா கொடியில துணியும் காயப்போடலாம். வடிவம் முக்கியம். ஐ மீன் பரிமாணம். பரிணாம வளர்ச்சி அடைய அடைய பரிமாணங்கள் நிறைய மாறுது. மாற்றம்தான் வாழ்க்கை.
நிருபர் : அதனால அரசியல்ல, ஆட்சியில மாற்றம் வரணும்னு சொல்லுறீங்களா?
கமல் : இல்ல. ஐ நெவர் மீன் தட். வார்த்தைகளைவிட அதோட அர்த்தம் ரொம்ப முக்கியம். அர்த்தங்களில்லாத வார்த்தைகள் இருக்கலாம். ஆனா ‘அர்த்தம்’ங்கிறதே ஒரு வார்த்தைதான்.
நிருபர் : அர்த்தம் புரிஞ்சிடுச்சு. ஓ.கே. தாங்க்யூ சார்.

(அடுத்த நாள், அப்பத்திரிகையில் ‘தேர்தலில் எனது ஆதரவு அர்த்தமற்றது’ – கமலஹாசன் அதிரடி!’ – என செய்தி மின்னுகிறது.

நிருபரின் அடுத்த டார்கெட் – கவுண்டமணி.)

நிருபர் : சார், ஒருகாலத்துல நீங்க இல்லாம எந்தப் படமும் இல்ல. ஆனா இப்ப எந்தப் படத்துலயும் நீங்க இல்ல. இனியும் தமிழ்நாட்டுல பல்லு போன பெரிசுங்க டூ பல்லு முளைக்காத பொடிசுங்க வரைக்கும் உங்களை நியாபகம் வைச்சிருக்கணும்னா நீங்க தேர்தல்ல யாரை ஆதரிப்பீங்க?
க.மணி : அடேய்! நானே ஆதரவு இல்லாம இருக்கேன். என்ன நக்கலா? என் வாயைப் புடுங்கி வம்பிழுக்கத்தான் இந்த ஒண்ணரையனா நோட்டையும், ஒழுகுற பேனாவையும் தூக்கிட்டு வந்தியா?
நிருபர் : உங்க ‘அடி’ஆள் செந்திலைப் பத்தி என்ன நெனைக்கிறீங்க?
க.மணி : அவன் என்ன ‘செக்கிழுத்த செம்மலா’? நினைச்சுக்கிட்டே இருக்கறதுக்கு. அடேய் பொறக்கறப்பவே மண்டையில மசுரில்லாம பொறந்த லொள்ளு புடிச்ச பெரிசு சத்யராஜெல்லாம் நமீதாகூட இன்னும் லவ்ஸ் பண்ணிக்கிட்டிருக்காரு. என்னை மாதிரி வளர்ந்து வர்ற நடிகனை அதுக்குள்ள வி.ஆர்.எஸ். கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டீங்களேடா! இது உங்களுக்கே நல்லா இருக்கா?
நிருபர் : உங்க கூடப் பொறக்காத தம்பி கார்த்திக்கைத்தான் நீங்க தேர்தல்ல ஆதரிக்கப்போறதா பேச்சு வந்துதே?
க.மணி : எந்தக் கருமாந்திரம் புடிச்ச நாயோ சொல்லிருக்கு. எனக்கு கூடப் பொறக்காத தம்பி, குறையாப் பொறக்காத தம்பின்னு யாருமே கிடையாது. நானே எனக்குத் தம்பி. நானே எனக்கு அண்ணன். நோ மோர் பிரதர்ஸ். பால் குடிச்சுட்டு வீட்டு பால்கனில ஒக்காந்து நிம்மதியா பறாக்கப் பாத்துக்கிட்டிருக்கிற எனக்கு பாலிடிக்ஸ் தேவையா?
நிருபர் : நீங்க வெளியில இருந்து ஆதரவு கொடுக்கறதுன்னா யாருக்கு கொடுப்பீங்க?
க.மணி : வாங்கடா வாங்க. எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கீங்க? வாய்ப்பு இருக்கறதா எவனையோ ஏத்திவுட்டு வருங்கால முதல்வர்னு சொல்லுவீங்க. வாக்கு வங்கி இருந்தா வாய்ஸ் கொடுக்கச் சொல்லி நோண்டி விடுவீங்க. வக்கத்துக் கிடக்குறவனை ஏண்டா பிச்சுப் பிறாண்டுறீங்க. என்னைக் கொலகாரனாக்காதீங்க..
(கவுண்டமணி ஹை-டெசிபலில் கத்த, நிருபர் காதை பொத்திக் கொண்டே அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். அடுத்த நாள் நாளிதழில் “கார்த்திக்கை நான் ஆதரிக்கவில்லை” – கவுண்டமணி திட்டவட்ட அறிவிப்பு!’ என செய்தி இளிக்கிறது.)