லொள்ளு அவார்ட்ஸ் 2008

2008ன் லொள்ளு அவார்ட்களுக்காக, பல்வேறு பிரிவுகளின்கீழ் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டவர்கள்.

சிறந்த குடும்பச் சித்திரம்

சிறந்த உண்மை விளம்பி

சிறந்த சுய விளம்பரதாரர்

சிறந்த ஆக்‌ஷன் காட்சி

சிறந்த உலகம் சுற்றும் வாலிபி & புடைவைக் கடை மாடல்

சிறந்த உலக சினிமா

சிறந்த ரங்க ராட்டினம்

சிறந்த காதல் காட்சி

சிறந்த ட்யூப் லைட்

வாழ்நாள் சாதனையாளர் விருது

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! (இவ்விடம் புத்தாண்டுப் பரிசுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.)

டாப் 10 புத்தகங்கள் – 2008

இந்த ஆண்டில் வெளியான புத்தகங்களில் எந்தக் கடையிலுமே எப்போதுமே கிடைக்காத அளவுக்கு விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் சிறந்த 10 புத்தகங்களின் தரவரிசைப் பட்டியல்.

10
மனம் is a மனம்
ஆசிரியர் : சுவாமி சுனாமியானந்தா
மனம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். மனதை அடக்கி ஆள்வது என்பது லாரிக்கு பின் நின்று கூட்டத்தில் முட்டி மோதி ஓட்டைக்குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்குச் சமம். மனிதர்களின் மனம் என்பது கார்ப்பரேஷன்காரன் தோண்டிப்போட்ட குழி போன்றது! பெரிய மனிதர்களின் மனம் என்பது குப்பை வண்டிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒற்றைக் குப்பைத்தொட்டி போன்றது! – இது போன்ற சுவாமிஜியின் ஆழ்ந்த அனுபவ உரைகள் புத்தகம் முழுவதும் உப்பிக் கிடக்கிறது. ‘சத்சங்க அகாதெமி’ விருதுக்காக இந்தப் புத்தகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(இது ஓர் உள்ளீடு வெளியீடு, கீழ்ப்பாக்கம். பக்கம் : 238ல் ஆரம்பித்து 11ல் முடிகிறது. விலை : 17$.)

9
30 நாட்களில் தூய தமிழ் பேசுவது சுலபம்!
ஆசிரியர் : இங்கிலீஷ்காரன்
‘ஆக்சுவலி திஸ் புக் டெஸ்கிரைப் அபௌட் ஹௌ டூ ஸ்பீக் இன் ப்யூர் டமில். திஸ் புக் இஸ் டீப்லி டெஸ்கிரைப் ஆல் டமில் வேர்ட்ஸ் வித் மீனிங் அன்ட் புரௌனன்ஷேசன்’ – இப்படி அட்டை டூ அட்டை தமிழ் கற்றுக் கொடுப்பதாக ஆங்கிலத்திலேயே ஜல்லியடித்திருக்கிறார்கள். அட்டையில் தலைப்பைத் தவிர வேறேங்கும் தமிழ் தேடினாலும் கிடையாது.
(வெளியீடு : ராமதாஸ் பதிப்பகம், சென்னை. பக்கம்: 420. விலை : ஏதாவது பாத்துப் போட்டுக் கொடுங்க.)

8
சாம்பார் வைப்பது எப்படி?
ஆசிரியர் : முருங்கைப்ரியா
சாம்பார் வைப்பது எப்படி என ர்ர்ரொம்ம்ப்ப விரிவாக விளக்கும் நூல். சாம்பாருக்கு தேவையான பருப்பை, மிளகாய் வற்றலை, காய்கறிகளை எப்படி பயிர்செய்ய வேண்டும் என ஆ’ரம்ப’த்திலிருந்தே ஆரம்பித்து, அணு அணுவாக விளக்குகிறது. சாம்பார் வைக்கும் சட்டியின் விட்டம், உயரம், கரண்டியின் நீளம் எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டுமென தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது இதில்! இந்த நூலைப்படித்துப் பொறுமையாக உங்கள் ஆயுசு முடிவதற்குள் ஒரு முறையாவது சாம்பார் வைத்து விடலாம். ஆனால் கடைசியில் சாம்பாருக்கு உப்பு போட மறந்துவிட்டார்கள்.
(வெளியீடு : பருப்பு பதிப்பகம், காரைக்குடி. பக்கம் : 222 விலை : ரூ.100)

7
பிரேக்கூ கவிதைகள்
ஆசிரியர் : ஜுஜுபி
ஒரு புதிய வகை கவிதை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். பிரேக்கே இல்லாமல் இஷ்டத்துக்கு வார்த்தைகளை வாரித் தெளிப்பதுதான் ‘பிரேக்கூ’ என்கிறார் கவிஞர்.
‘துப்பாக்கியின் கொட்டாவியில்
சுளுக்கெடுக்கும் பட்டாம்பூச்சியின்
சட்டைப் பொத்தானுக்கு’
என ஆரம்பிக்கும் ஒரு கவிதை பிரேக்கே இல்லாமல் 22 பக்கங்கள் கழித்து ‘வாலில்லா வாசலில்
வந்து நிற்கும் டவுன்பஸ்!’ என்று முடிவதாக நம்பப்படுகிறது!
(வெளியீடு : எடக் மடக் பதிப்பகம், சென்னை. பக்கம் : 534, விலை : ரூ.94.15)

6

உடம்பை வளர்க்க உபயோகமான வழிகள்
ஆசிரியர் : தொப்பையப்பன்
இது மனிதர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட புத்தகமல்ல. நீங்கள் யானை வளர்த்தால் அதனை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என விளக்கும் நூல். யானைக்கு எப்படி பல் தேய்ப்பது, யானையின் தொப்பையை எப்படிக் குறைப்பது என புகைப்படங்களுடன் அருமையாக விளக்கப்பட்டுள்ளது.
(வெளியீடு : யாரென்று போடவில்லை. பக்கம் : 120, யானை விலை.)

5
வாஸ்து உங்கள் தோஸ்து!
ஆசிரியர் : வாஸ்தவா
வாஸ்து சாஸ்திரப்படி இந்தப் புத்தகத்திற்கு அட்டை கிடையாது. வீட்டின் ஈசான மூலையில் படுத்துத்தூங்கினால் ‘பீஸான’ மூளையும் இயங்க ஆரம்பிக்கும், வடதென்மேல்கிழக்குத் திசையில் பச்சை நிற கிழிந்த பாயின்மேல் 35டிகிரி சாய்வாக டீ.வி.யை தலைகீழாக வைத்துப் பார்த்தால் செல்வம் பெருகும் என்பது போன்ற பல பயனுள்ள வாஸ்துக் குறிப்புகள் புத்தகம் முழுவதும் வாஸ்துப்படி தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளது. நம் வீட்டுக்குள் ஆமை புகுந்தால் ஆமையின் வீட்டுக்குள் நாம் புகுந்துவிட வேண்டும் என பல அரிய யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
(வெளியீடு : செங்கல் பதிப்பகம், கலவையூர். பக்கம் : 84 1/2 பக்கம் விலை : ஒரு லோடு மணலின் விலை.)

4
குருதிக் கோட்டுக் குருவிகள்!
ஆசிரியர் : ரௌத்ரப்பித்தன்
இந்நூல் பின் நவீனத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 222 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது 25 பக்கங்கள். எந்தக் கட்டுரையிலும் தான் சொல்லவருவது எந்த ஒரு வாசகனுக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டிருக்கிறார் ஆசிரியர். ‘நான் சொல்ல வருவது புரிதலையும் தாண்டிய புனிதம். நான் எழுதிய சில விஷயங்கள் எனக்கே புரியவில்லை’ என்ற ஆசிரியரின் முன்னுரையைப் படிக்கும்போது மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.
(வெளியீடு : பிச்சைப்பாத்திரம், தர்மபுரி. பக்கம் : எண்ண முடியவில்லை. விலை : ரூ.800)

3
108 வகைக் கோலங்கள்
ஆசிரியர் : புள்ளிராணி
விதமிதமான புள்ளிக் கோலங்களை போடக் கற்றுக் கொடுப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கமே. நூலாசிரியர் காதல் வயப்பட்டிருப்பதால் ‘புள்ளி வைச்சுக் கோலம் போட மறந்து’ விட்டார். அதனால் கோலப் புத்தகம் அலங்கோலப்புத்தகமாகிவிட்டது.
(வெளியீடு, பக்கம், விலை : ரொம்ப முக்கியம்!)

2
எலக்கன பிலையின்ரி எலுதுவது எப்டி?
ஆசிரியர் : தமிழ்க்கோடாரி
‘இலக்கணப் பிழையின்றி எழுதுவது எப்படி?’ என வந்திருக்க வேண்டிய புத்தகம், பக்கத்திற்குப் பக்கம் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இப்படி வந்திருக்கிறது. நூலாசிரியருக்கு தமிழில் பெரிய ‘ழ’ என்னுமொரு எழுத்து இருப்பதே தெரியாது போல! ‘ஆ’ என்பதை ‘அ¡’ எனவும், ‘ஈ’ என்பதை ‘இ¡’ எனவும், மேலும் ‘உ¡’, ‘எ¡’, ‘ஒ¡’ என பல புதிய எழுத்துக்களை கண்டுபிடித்து தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றியிருக்கிறது இந்நூல்.
(வெளியீடு : நியூ பதிப்பகம், செம்மொழியூர். பக்கம் : 120 (எழுத்துப் பிழையின்றி ஒரே ஒரு வெற்றுப்பக்கம்.) விலை : ரூ. 33)

1
காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு!
ஆசிரியர் : சதக் செல்லப்பா
இது ஒரு நாவல் (என்று நம்பப்படுகிறது.) கதையின் முதல்பக்கத்தில் திடீரென காணாமல் போய்விடும் அப்புசாமியைத் தேடிப்போகும் சுப்புசாமி காணாமல் போய்விடுகிறான். சுப்புசாமியைத் தேடிப்போகும் ராமசாமியும் காணாமல் போய்விட, ராமசாமியைத் தேடிப் போகும் கோயிந்தசாமியும் காணாமல் போய்விட, கோயிந்தசாமியைத் தேடிப்போகும் அப்புசாமியும் (சுப்புசாமி தேடிப்போகும் ஆள்தான்) காணாமல் போய்விடுகிறான் என கடைசிப் பக்கத்தில் கூறுகின்றார் ஆசிரியர். ‘மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து கதையைத் தொடர்ந்து படிக்கவும்’ என ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தகத்தை படித்தே முடிக்கவே முடியாமல் வாசகர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.
(வெளியீடு : காற்புள்ளி பதிப்பகம், நாவலூர். பக்கம் : 171. விலை : போடவில்லை.)

கண்ணம்மாபேட்டையில் ஔவையார்!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்ற பாடல்  அது நாக்க முக்க. காதலில் விழுந்தேன் மூலம் நிச்சயமாக திரைத் துறையில் எழுந்துள்ளார் அவர்.

நல்லது. வாழ்த்துகள்.

ஏற்கெனவே அவர் அளித்த ‘டைலாமோ’ வகைப் பாடல்களுக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது.  அதனால் ஏற்பட்டுள்ள தெம்பில் கொஞ்சம் தவறாக யோசித்துவிட்டார் போலும். தான் எதைச்  செய்தாலும் ரசிக்க ரசிகர்கள் தயார் என்று.

சமீபத்தில் தநா07அல 4777 படத்தின் பாடல்கள் குறித்து சில பத்திரிகைகளில் படித்தேன். குறிப்பாக ஔவையார் அருளிய ஆத்திச்சூடியை இந்தத் தலைமுறைக்கும் சேர்க்கும்படியாக என் ஸ்டைலில்  கொடுத்துள்ளேன் என்று ஆண்டனி தெரிவித்திருந்தார்.

அந்தப் பாடலைக் கேட்டேன். மீண்டும் ஒருமுறை கேட்கத் தோன்றவில்லை. வருத்தம் மேலிட இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

ஆத்திச்சூடி சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல். சிறுவர், சிறுமியர் சொல்லிச்  சொல்லி மனத்தில் பதியவைத்துக்கொள்ளும் வகையில் சின்னச் சின்ன வரிகளால் எளிமையாக  அமைக்கப்பட்டது. ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அன்று வழக்கத்திலிருந்த  திண்ணைப்பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப்படுகிற மெக்காலே கல்வி முறை வரை  பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக தமிழ் கற்கும்போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லி த்தருகின்ற பொருட்டு அவ்வையின் ஆத்திச்சூடியைக் கொண்டு கற்பிப்பதை தமிழாசிரியர்கள்  கடைபிடித்து வருகின்றார்கள்.

ஆத்திச்சூடியின் அருமை, தொன்மை என்னவென்று விஜய் ஆண்டனிக்குத் தெரிந்திருக்கலாம்.

என்ன சூழ்நிலையோ அல்லது யார் ஆசைப்பட்டார்களோ அல்லது அவருக்கே தோன்றியதா  என்னவென்று தெரியவில்லை. நியூ ஏஜ் ஆத்திச்சூடி என்ற பெயரில் ஔவையாரைக் கண்ணம்மா பேட்டையில் நிறுத்திவிட்டார் விஜய் ஆண்டனி. அதுவும் ராப் குத்து என்ற பெயரில்  ஆத்திச்சூடியின் அகர வரிசையை கன்னாபின்னாவென்று கலைத்துப் போட்டுள்ளார்.

அதுவும் ஆத்திச்சூடி என்ற வார்த்தை இடையிடையே மலச்சிக்கலுடையவனின் குரலில் வெளிவருகிறது. பாடலில் தமிழ் வார்த்தைகளை விட ஆங்கிலம் அதிகம். தான் புரியாத வார்த்தைப்  பாடல்களை உருவாக்குவதன் காரணத்தையும் சொல்லியுள்ளார். ‘கேளு மவனே கேளு, நீ வாயை  மூடிட்டு கேளு.’

பாடலின் இடையே தமிழ்த்தாயின் (அவலக்)குரல் ஒலிக்கிறது. ‘அய்யய்யோ இது என்னயா பாட்டா  படிக்கிறாங்க.. கொலை வெறி புடிச்சு அலையறாங்க…’ – அந்தக் குரலுக்குச் சொல்லப்படும் பதில்  ‘போடி!’ சகிக்கவே முடியாதபடி பாடலில் இறுதியில் சாவுக்குத்து.

ஆக, ஒரு கலைஞராக தான் செய்வதை அந்தப் பாடலிலேயே நியாயப்படுத்திவிட்டார் விஜய் ஆண்டனி. ரசிகர்கள் இந்தப் பாடலையும் ரசிக்கலாம். இருந்தாலும் சராசரி திரை இசை ரசிகனாக  நான் விஜய் ஆண்டனிக்குச் சொல்ல விரும்புவது இதுதான்.

‘சார், சர்க்கரைப் பொங்கலுக்குத் தொட்டுக்கொள்ள கோழிக் குழம்பு சரிப்படாது.’

****

இந்தப்பாடலின் ரிஷிமூலம் நதிமூலம் குறித்து நிமல் அவர்கள் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள். அதன்படி இரண்டு சுட்டிகளை மட்டும் கொடுத்துள்ளேன்.

திரைப்படத்திலுள்ள ஆத்திச்சூடி பாடல் :

http://tinyurl.com/a9cu7s

நிமல் குறிப்பிடும் தினேஷ் கனகரத்தினம் பாடலைக் கேட்க – சுராங்கனி எம்பி3 பாடல்.