றிடிறிஏ விக்டோரியா ஆரம்பப் பாடசாலை, தூத்துக்குடி.

 

1985

வீட்டு வாசல் கதவைப் பிடித்து அடம்பிடித்தபடி கொஞ்சநேரம், செல்லும் வழியெல்லாம் கொஞ்சநேரம், பள்ளிக்கூட கேட் அருகில் கொஞ்சநேரம் – அழுது தீர்ப்பேன். பள்ளிக்கூடம் என்றால் அவ்வளவு பயம். அந்த பயத்துக்கான காரணம் என்னவென்று சிறுகுறிப்பெல்லாம் வரைய முடியாது. பயந்தேன். அவ்வளவுதான்.

நான் படிப்பை ஆரம்பித்தது பிரிகேஜி, எல்கேஜியில் அல்ல; பேபி கிளாஸில். தமிழ் வழிக் கல்வி. எனது (தந்தை வழி) தாத்தா சுப்ரமணியன், தம் பேரப்பிள்ளைகளை தமிழ் வழியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும் என்பதில் கொள்கைப் பிடிப்போடு இருந்துள்ளார்கள். (தாத்தாவுக்கு என் மனபூர்வமான நன்றி.) என் அக்காவைக்கூட ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டு பின், தாத்தாவின் கட்டளையால் ஓரிரு வருடங்களில் தமிழ் மீடியம் பள்ளிக்கு மாற்றிவிட்டனர்.

பெற்றோர், என்னைப் பள்ளியில் கொண்டு சேர்த்த அந்த நிமிடங்கள் எல்லாம் நினைவில் இல்லை. ஆனால் பேபி கிளாஸ் எடுத்த கல்யாணி டீச்சரின் முகம் மட்டுமல்ல, குரல்கூட எனக்கு என்றைக்கும் மறக்காது. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைகள் அனைவருக்குமே எங்கள் குடும்பம் பரிச்சயம். ஆக, என்மேல் அவர்களுக்குத் தனிப் பிரியம். கல்யாணி டீச்சரது மகனான மாரிமுத்துவும் என் க்ளாஸ்மேட்தான். மாரிமுத்துவுக்கு அடுத்தபடியாக டீச்சர், அன்பாகக் கவனித்தது என்னைத்தான் இருக்கும். (நன்றி டீச்சர்!)

பேபி கிளாஸ் - 1985

டீச்சர் அன்போடு இருந்தால் மட்டும் போதுமா? ஹெட்மிஸ்டரஸ் பாசத்தோடு பேசினால் மட்டும் போதுமா? என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ‘அரளக்கா’ (ஆயாவை அப்படித்தான் கூப்பிடுவோம்; அவர்கள் முழுப்பெயர் ’அருளம்மாள்’ என ஞாபகம்.) என்னைப் பள்ளியில் பரிவாகக் கவனித்துக் கொண்டால் மட்டும் போதுமா; எனக்கும் பள்ளிக்கூடம் மீது பிடிப்பு, பிரியம், காதல், கெமிஸ்டரி எல்லாம் வர வேண்டாமா? அதெல்லாம் வருவதற்குப் பல காலம் பிடித்தது. அதிகம் பயந்தால், பள்ளி நடந்து கொண்டிக்கும்போதே அழுதபடியே என் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்பு ‘B’ செக்ஷனுக்குச் செல்வேன். அது என் அக்காவின் வகுப்பு. அவளருகில் உட்கார்ந்து கொள்வேன். அதற்காக அந்த மூன்றாம் வகுப்பு டீச்சர் என்னை ஒருபோதும் அதட்டவில்லை, விரட்டவில்லை. அவ்வகுப்பில் நடத்தப்படும் ‘ஏ ஃபார் ஆப்பிள்… பி ஃபார் பால்’ பாடத்தைக் கவனிப்பேன். (மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் ஒரு சப்ஜெக்ட்டாக எங்களுக்கு அறிமுகமானது.)

மதியம் உணவு இடைவேளையில், அரளக்கா என்னையும் அக்காவையும் (மேலும் சிலரையும்) வீட்டில் கொண்டு போய் விடுவார்கள். வீட்டுக்கும் பள்ளிக்கும் அதிக தூரமெல்லாம் இல்லை. உடல் நோகமால் அங்கப்பிரதட்சணம் செய்யும் தூரம்தான். முதல் வாய் சாப்பிடும்போதே எனக்கு வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும். தயிர் சாதத்துக்குச் செல்லும் முன்பாகவே தலைவலிக்க ஆரம்பித்துவிடும். அரளக்கா மீண்டும் பள்ளிக்கு அழைத்துப் போக வரும்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிப்பேன். என் வீட்டுக் கதவில் இறுகியிருக்கும் எனது உடும்புப் பிடியை விடுவிக்க அம்மா மல்லுக்கட்டுவார்கள்.

பேபி கிளாஸில் பர்ஸ்ட் ரேங்க் எல்லாம் எடுக்க ஆரம்பித்தவுடன், எனது பயம் மறைய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளி செல்வதில் ஆர்வம் வந்தது. இங்கே என்னைப் பற்றிய ஒரு சுயதம்பட்ட குறிப்பு: நான் றிடிறிஏ (TDTA) விக்டோரியா ஆரம்பப் பாடசாலையில் படித்தபோது (பேபி கிளாஸ் முதல் ஐந்தாம் வகுப்பு வரை) முதல் அல்லது இரண்டாம் ரேங்க் மட்டுமே வாங்கியிருக்கிறேன். நான் முதல் ரேங்க் என்றால் இரண்டாவதாக புவனேஸ்வரி இருப்பாள். நான் இரண்டாவது எனில் முதலிடத்தில் அவள் இருப்பாள். ஸ்கூல் டீமில் பெரிய பேட்ஸ்மேனாக இருப்பவன், மாவட்ட அணிக்குச் செல்லும்போது தடுமாறுவதில்லையா. மேற்படிப்புக்குச் செல்லச் செல்ல கட்டெறும்பு தேய்ந்து கால் தூசாக நான் ஆனதெல்லாம் வரலாறு!

காலையில் தினமும் பிரேயர் உண்டு. ஒவ்வொரு நாளும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏசையாவோ, யோவானோ பேசுவார்கள் அல்லது சங்கீதம் ஒலிக்கும். அதற்குப் பின் கிறித்துவப் பாடல் ஒன்றைப் பாட வேண்டும்.

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்…

என்ற பாடல் செவ்வாய்க்கிழமைக்கானது. மற்ற கிழமைக்கான பாடல்கள் நினைவில் இல்லை. அதன் அர்த்தம், யாரைப் போற்றும் பாடல் என்றெல்லாம் தெரியாது. எல்லோருடனும் சேர்ந்து அதிக சத்தம் போடுவது பாடுவதில் அவ்வளவு சந்தோஷம். (மற்ற பாடல்களை நினைவுக்குக் கொண்டு வருவதற்காக எல்லாம் வல்ல பரமபிதா கூகுளைச் சரண்புக வேண்டும்.)

பாட்டு முடிந்ததும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். முதல் பீரியடில், டீச்சரிடம் எழுதி வந்த ஹோம்-வொர்க்கைக் காண்பிக்க வேண்டும். அதற்கெனத் தனி நோட்டெல்லாம் கிடையாது. சிலேட்டுதான். (கல் சிலேட், சுற்றிலும் மரச்சட்டம் – ஞாபகமிருக்கிறதா?) எழுதுவதைவிட, அது அழியாமல் அரும்பாடுபட்டு பள்ளிக்குக் கொண்டுவருவதே ஆகப் பெரிய சவால். சிலேட்டில் இரு பக்கங்களுக்குள் அடங்கும் வகையில்தான் ஹோம்-வொர்க் சுமை இருக்கும் என்பது வசதி. ஹோம்-வொர்க் எழுதாத சமயங்களில் ‘பையில் வைத்திருந்தேன், அழிந்துவிட்டது’, ‘மழையில் அழிந்துவிட்டது’ என்று காரணம் சொல்லலாம். எந்த டீச்சரும் அவ்வளவு சுலபத்தில் ‘அடி ஸ்கேலை’த் தூக்க மாட்டார்கள்.

காலை, மதிய இடைவேளைகளில் கல்யாணி டீச்சர் தம்மிடம் இருக்கும் மிட்டாய் பாக்கெட்டுகளைப் பிரிப்பார்கள். பிரித்து ஒரு பச்சை டப்பாவில் போடுவார்கள். கடலை மிட்டாய், மிளகாய் மிட்டாய், கல்கோனா, பாக்கு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், சூடம் மிட்டாய், தேன் மிட்டாய், சீரக மிட்டாய் – இப்படி பல ரகங்கள். ஐந்து பைசாவுக்கு ஒரு மிட்டாய். எனக்கோ அக்காவுக்கோ வீட்டில் பாக்கெட் மணி கொடுக்க மாட்டார்கள். மிட்டாய் என்பது எங்களுக்குக் கண்களால் சாப்பிடும் சமாசாரம் மட்டுமே.

கொடிநாளுக்காக, பள்ளியில் எல்லோருக்கும் கொடி கொடுத்து 25 பைசா கேட்பார்கள். ஒருமுறை கொடிக்காகக் கொண்டுவந்த 50 பைசாவில் நானும் அக்காவும் ஆசைப்பட்டு மிட்டாய் வாங்கித் தின்றுவிட்டோம். கொடிக்குப் பைசா?

அம்மாவிடம் தயங்கித் தயங்கிச் சொல்ல, அப்புறமென்ன, தாராளமாக அடி கிடைத்தது. மீண்டும் மிட்டாய் வாங்கித் தின்னும் எண்ணம் வராதது போனஸ்.

பெரிய மைதானமெல்லாம் என் பள்ளியில் கிடையாது. ‘L’ போல நீளமாக அமைந்த வகுப்பறைகள். அதில் நடுவே ஹெட் மிஸ்ட்ரஸ் அறையும் பேபி கிளாஸும். அந்த வகுப்புகளுக்கு இருபுறமும் உள்ள இடம்தான் மைதானம். அங்கே மொத்தம் ஏழு மரங்கள் இருந்ததாக நினைவு. வேர்களைத் தரையில் அகலமாகப் பரப்பிய அந்த அரச மரம் மற்ற மரங்களுக்கெல்லாம் அரசனாக கம்பீரமாக நிற்கும். அது தரையில் பரப்பிய அந்த வேர் சிம்மாசனத்தில் உட்கார புதன்கிழமைகளில் போட்டா போட்டி நடக்கும்.

காரணம், புதன்கிழமை மாலையில் ‘பாட்டக்கா’ வருவார்கள். (பாட்டுப் பாடி, கதைகள் சொல்லி, பைபிள் வாசிக்கும் இனிய குரலுடைய அக்கா. கிறித்துவ மதபோதகர்.) பள்ளியின் சிறிய மைதானத்தில் எல்லோரும் குழுமியிருக்க கூட்டம் ஆரம்பமாகும். பாட்டக்கா கையில் என்ன எடுத்து வருகிறார்கள் என்பதில்தான் எங்கள் அனைவருடைய கவனமும் இருக்கும். முதலில் பைபிள் வாசிப்பார்கள். பின் சில பாடல்கள். அடுத்தது கதை. நிற்க வைக்கப்பட்டிருக்கும் கரும்பலகைமேல், வெல்வெட் போன்ற துணி ஒன்றை விரித்து, அதில் விதவிதமான, வண்ணமயமான படங்களை ஒட்டி, கதை சொல்வார்கள். இன்றைய குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனல்போல, எனக்கு அன்றைக்கு பாட்டக்கா சேனல். எல்லா கதைகளிலும் இறுதியில் இயேசுதான் ஜெயிப்பார் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் பாட்டக்கா கதை சொல்லும் அழகுக்காகவே புதன்கிழமை மாலைகளுக்காகக் காத்திருந்திருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பில் நான் படித்தது A செக்‌ஷன். ஹெட்-மிஸ்ட்ரஸ்தான் எனக்கு வகுப்பாசிரியர். பாதி வகுப்புகள் ஹெட்-மிஸ்ட்ரஸ் அறையிலேயே நடக்கும். அறைக்கு வெளியேதான் பள்ளிக்கூட மணி தொங்க விடப்பட்டிருக்கும். ஒரு பெரிய உலோக வட்டு, அதைத் தட்டுவதற்கென பெரிய சைஸ் ஆணி. மாணவர்கள்தான் மணியடிக்க வேண்டும். கிட்டத்தட்ட அது ‘ஸ்கூல் லீடர்’ போன்ற கௌரவத்துக்குரிய பதவி. பலமுறை முதல் ரேங்க் எடுக்கும் மாணவனால் மட்டுமே அப்பதவியை வகிக்க முடியும் என்பதால்…

ஒரு பீரியடுக்கும் இன்னொரு பீரியடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ‘டிங்’ என ஒரே ஒரு முறை தட்ட வேண்டும். இண்டர்வெலில் நான்கைந்து ’டிங்’குகள். மதிய இடைவேளையிலும், சாயங்காலம் பள்ளி முடியும்போதும் இஷ்டம்போல ‘டிங்டிங்’கலாம். மணியடிப்பதற்காகவே கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டு காத்திருப்பதில் அத்தனை சந்தோஷம்!

’மாணவர் சங்கம்’ – என்பது பள்ளியில் நடக்கும் கலைவிழா. ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஏதாவது நிகழ்ச்சி நடத்த வேண்டும். குழுவாக ஆடலாம், சேர்ந்து பாடலாம், கதை சொல்லலாம். நம் இஷ்டம்தான். ஐந்தாம் வகுப்பில் நண்பர்களோடு சேர்ந்து நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்தேன். சபாபதி ரக வேலைக்காரனும் (மையா), அவனால் அல்லல்படும் முதலாளியும்.

முதலாளி : மையா மையா!

வேலைக்காரன் : என்ன ஐயா?

முதலாளி : வீட்டுக்கு விருந்தாளிகள் வர்றாங்க. சோப்புத்தண்ணியால வீட்டைக் கழுவி விட்டுட்டு, எண்ணையில வடை சுட்டு வை.

’சரி’ என்பதாகத் தலையாட்டும் வேலைக்காரன், வீட்டை எண்ணெயால் கழுவி விட்டு, சோப்புத் தண்ணீரில் வடை செய்து வைப்பான். இப்படியாக சில காட்சிகளைக் கற்பனை செய்து அரங்கேற்றினோம். வசனம் மறந்து, ரியாக்‌ஷன்ஸ் மறந்து பல இடங்களில் சொதப்பினாலும் நாடகத்தை சிறிய வகுப்பு மாணவர்கள் கைதட்டி ரசித்ததாக நினைவு.

பொங்கலுக்கு முன்பாக, தீபாவளிக்கு முன்பாக, மேலும் சில விசேஷ நாள்களுக்கு முன்பாக – சத்துணவில் சாயங்கால வேளையில் ‘புளியோதரை’ கொடுப்பார்கள். சத்துணவு சாப்பிடும் நண்பர்கள் சிலர் அதில் எனக்கும் பங்கு கொடுப்பார்கள். அந்தச் சுவை நினைவில் இல்லை. ஆனால் அந்தப் புளியோதரையை நினைத்தால் இனிக்கிறது.

றிடிறிஏ பள்ளி இன்றைக்கும் தூத்துக்குடியில் இருக்கிறது. ஆனால் முற்றிலும் தோற்றத்தில் மாறுபட்டு, அந்த அரச மரத்தையும் பிற மரங்களையும் இழந்து…

2010ல் எனது பள்ளி

இப்போதும் ஊருக்குச் சென்றால் பள்ளிக்கூடத்தைக் கடக்கும்போது மதிய இடைவேளையில் எல்லா மாணவர்களும் கூடி உட்கார்ந்து உரக்கச் சொல்லும் அந்தச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்கிறது.

‘எட்டா எட்டா அறுவத்துநாலு…

ஒம்பித்தெட்டு எழுவத்திரண்டு..

பைத்தெட்டு எண்பது…’

(புகைப்படத்தில் நடுவரிசையில் கல்யாணி டீச்சருக்கு அருகில் நிற்பது நான். என்னருகில் மாரிமுத்து. மேல் வரிசையில் மூன்றாவது ஆண்டாள் கொண்டையுடன் நிற்பவள் புவனேஸ்வரி. அரளக்காவும் இருக்கிறார்கள்.)

ஒரு கேமராமேன் உதயமாகிறான்

கையில் மொபைல் கேமரா இருந்தாலே, அதை வைத்துக் கொண்டு செஃபியா டோனில் வித்தியாசமான கோணத்தில் ஏதாவது புகைப்படம் எடுக்க முடியாதா என்று நேற்றுவரை திரிந்து கொண்டிருந்தேன். பள்ளி, கல்லூரி நாள்களில் கைவசமிருந்த யாஸிகா ஸ்டில் கேமராவிலேயே பிறைநிலவைப் படம் பிடிக்க முடியுமா என்று முயற்சி எல்லாம் செய்து பார்த்திருக்கிறேன். இருந்தாலும் எனது யாஷிகாவைக் குறைசொல்ல முடியாது. அதில் எடுக்கப்பட்ட படங்கள் ஜூவியில் எனது கட்டுரைகளோடு வெளிவந்திருக்கின்றன.

கல்கியில் பணியாற்றிய சமயத்தில் அங்கே அலுவலக டிஜிட்டல் கேமரா ஒன்று இருந்தது. என்ன கம்பெனி, என்ன பிக்சல் என்பதெல்லாம் மறந்துவிட்டது. ச.ந. கண்ணன், ஆர். முத்துக்குமார், மருதன் ஆகிய நண்பர்களுடன் பெரும்பாலும் போட்டோகிராபராக நான் செல்வேன். இளையராஜா, ஜெயகாந்தன், எம்.எஸ். உதயமூர்த்தி, சச்சின், கங்குலி, ஜாஹிர், கமலஹாசன், ஜோதிகா, கோபிகா என பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பலரையும் படம்பிடித்திருக்கிறேன். கேமராவை வைத்து எப்படிப் படம் பிடிக்க வேண்டும், எந்த கோணத்தில் வைக்கக்கூடாது, ஆப்போஸிட் லைட் உள்ளிட்ட எந்தவித அடிப்படை விஷயங்களும் தெரியாது. டிஜிட்டல் காமிராதானே. குத்துமதிப்பாக பத்துப் பதினைந்து க்ளிக்கினால், ஒத்த போட்டோ தேறிவிடும்.

சொட்டிக் கொண்டிருக்கும் பைப், புல்லில் உறங்கிக் கொண்டிருக்கும் பனித்துளி, இளமஞ்சள் பௌர்ணமி, இயல்பான புன்னகை என்று தொழில்முறை போட்டோகிராபர்கள் எடுத்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். நம்மால் இந்த மாதிரியெல்லாம் புகைப்படம் எடுக்க முடியாதா?

அதற்கான அருமையான கேமரா வாய்க்க வேண்டுமே. அதற்கென பட்ஜெட் ஒதுக்க வேண்டுமே. பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த கே.வி. ஆனந்தை, எக்ஸ்ட்ரா டோஸ் தூக்க மாத்திரை கொடுத்து மேலும் தூங்க வைத்தேன்.

இப்போது விழித்துவிட்டேன். நெருங்கிய நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மிகத் தரமான SLR கேமரா ஒன்றை எனக்கு திருமணப் பரிசாக அளித்திருக்கிறார்கள். (எத்தனை பிக்சல், என்ன Configuration(?) என்றெல்லாம் கேட்காதீர்கள். சொல்லத் தெரியாது. இதுதான் கேமரா.)

கேமரா பொட்டி தனி, அதற்கான லென்ஸ்கள் தனி, முன்னும் பின்னும் கையால் திருகி ஃபோகஸ் செய்துதான் படம் எடுக்க முடியும். ப்ரிவியூ எல்லாம் கிடையாது. கண்களால் உற்று நோக்கித்தான் கிளிக் செய்ய வேண்டும். கேமராவை இயக்குவதற்கே ரத்னவேலுவிடம் கோச்சிங் போக வேண்டும்போல.

எப்படியோ தட்டுத்தடுமாறி மேனுவல் புக்கை எழுத்துக்கூட்டி வாசித்து, குத்துமதிப்பாகப் புரிந்துகொண்டு க்ளிக்க ஆரம்பித்துள்ளேன். வரவர யாரையும் எதையும் என்னால் சாதா கண்களால், சாதா கோணத்தில் பார்க்க முடியவில்லை. கேமராவை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு கண் டாக்டரிடம் செல்லவேண்டும்போல!

எனது முயற்சிகள் சில இங்கே.

மன்மத அம்பு

கூடம் முழுக்க ஆண் வாசனை. கமல் வயதை (பதினைந்து) ஒத்தப் பையன்கள் வியர்க்க விறுவிறுக்க ஆடிக் கொண் டிருந்தார்கள். ஒன்றரை டஜன் தேறும். டான்ஸ் ரிகர்ஸல். தமிழ்நாட்டில் கமலை யாரும் சட்டை செய்யவில்லை. மஹாராஷ்டிரா வரவேற்றது. அம்மாவின் கை வளையல்களே முதலீடு. மும்பை தவிர மற்ற இடங்களிளெல்லாம் கமலின் நடனக்குழு பறந்து பறந்து ஆடியது – பாங்க்ரா, கதக், மயில் டான்ஸ். மகாராஷ்டிரா காவல்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
‘கமல் புதுசா ஒரு பொண்ணு உன்னைப் பார்க்கணும்னு வந்ததிருக்கா’ – சத்யப்ரியா கமலிடம் கூறினார். (பின்னாளில் கமலுடன் ஜோடியாக‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ படத்தில் நடித்தவர். இப்போது அம்மா நடிகை.)
கமலுக்கு அப்போது மராத்தியோ, இந்தியோ தெரியாது. அந்தப் புதிய பெண்ணை முதன் முதலில் பார்த்தபோது எதுவுமே பேசத் தோன்றவில்லை. சந்தித்த வேளையிலேயே கமல் தனக்குள் காதல் அரும்பிவிட்டதை உணர்ந்தார்.
பெயரைக்கூட கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அவளை கிருஷ்ணகுமாரி என்று அழைத்தார்கள். அந்த அழகை வருணிக்க வார்த்தைகளைத் தேடுவதிலேயே கமல் நேரத்தை செலவிட்டார். கமலின் நடனக்குழுவில் ஆட விருப்பம் தெரிவித்து வந்திருந்தாள். அவளை மனதார வரவேற்றார்.
‘என்னடா இவன் கிருஷ்ணகுமாரியோடயே சுத்தறான் எப்பவும். மச்சான், மச்சம்டா உனக்கு. இன்னும் முளைச்சு வெளியில வரல மீசை. அதுக்குள்ள லவ்வு!’ – குழுவினர் கமலைக் கலாய்த்தனர்.
உதிர்வதற்காகவே மலரும் பூபோல கமலோடு ஆடத் தொடங்கிய சில வாரங்களிலேயே அகால மரணம் அடைந்தாள் கிருஷ்ணகுமாரி.
கமலின் காதல் சோகத்தைக் கால்கள் பேசின. தன்னையே மறந்து ஆடத் தொடங்கினார். எம்பி எம்பி குதித்து ஆடியதில் பந்து கிண்ண மூட்டு விலகி மேடைக்கு வெளியே விழுந்தார். உயிரைப் பிழியும் வலி. சிவாலயா நடனக் குழு பாதியிலேயே சென்னைக்குத் திரும்பியது.

*

தங்கப்பன் மாஸ்டரிடம் நடன உதவியாளர் வேலை. கமல் சம்பாதிக்க ஆரம்பித்தார். ஒரு பாடலுக்கு இருநூறு, முன்னூறு என்று கம்பெனிக்கு ஏற்றவாறு கிடைத்தது. குட்டி நடிகனாக கமலைக் கொஞ்சிய கலைஞர்கள் அவரை இப்போது நடன உதவியாளராகவேப் பார்த்தார்கள். கமலும் தன் எல்லையில் எட்டி நின்று அவர்களுக்கு ஆடக் கற்றுத் தந்தார்.

கமலின் மூட் இப்போது திசைமாறி இருந்தது. நிறையவே ரகம் ரகமாகப் பெண்கள் அவரைப் பாதித்தார்கள். திரையுலகில் மிக இயல்பாக அமைகிற சுகம் அது.

‘டெம்ப்டேஷன்ஸ் ரொம்ப ஜாஸ்தி இந்த ஃபீல்டுல. ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்வார் தங்கப்பன் மாஸ்டர். ஏதாவது பெண்ணோட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தா ‘டேய் அரட்டை அடிக்காத. வேலையைப் பாரு’ன்னு சொல்வார்.’

*

‘நான் சொல்றதைக் கேளு. ஒரு மந்திரம் கத்துத் தரேன். திரும்பத் திரும்பச் சொல்லு.’
‘அது சான்ஸ் வாங்கித் தருமா?’
கமல் தந்தையிடம் ஆவேசமாகக் கேட்டார். அப்பா அழுத்தம் திருத்தமாக அந்த வாசகத்தைக் கூறினார்.
‘நான் தேய்ந்து அழிவேனேயன்றி துருப்பிடித்து அழிய மாட்டேன். இதைச் சொல்லிண்டே இரு. படம் வரலன்னாலும் பக்குவம் கிடைக்கும். உன் அம்மா கருத்துப்படி எதைச் செய்யறியோ அதைத் திருந்த செய். சிறந்த டான்ஸ் மாஸ்டர்னு பேர் வாங்கு முதல்ல’
‘நான் மைசூர் கிளம்பறேன். நான் அவனில்லை ஷூட்டிங்’.
‘இன்னொரு விஷயம்…’ அப்பா தயங்கினார்.
‘சொல்லுங்க சீக்கிரம்…’
‘பீடி-சிகரெட், பொண்ணு, தண்ணி எதுலயும் ஈடுபட மாட்டேன்னு சத்தியம் செய்.’
‘காந்தி கதையா மறுபடியும்’
‘ஆமாம். வீணா கெட்டுப் போகாதே. இன்னும் ஒழுங்கா நடிக்கவே ஆரம்பிக்கல. உடம்பு முக்கியம்.’
‘நான் ஏன் பிறந்தேன் ஷூட்டிங்லயே எம்.ஜி.ஆர் சொல்லி எக்சர்சைஸ் பண்ணத் தொடங்கினேன். அவர் எனக்கு வாத்தியார் இதுல. நீங்க சொன்னதுல ரெண்டு ஓகே. சிகரெட், தண்ணி ‘கப்பு’ – விட்டுடலாம். மூணாவது முடியும்னு படல. வரட்டுமா.’
‘யூ டோன்ட் நோ’ இது கமலின் பன்ச் டயலாக். ராகத்தோடு பெண்களிடம் சொல்லத்தான் நினைக்கிறேனில் பேசினார். போன் நம்பர் கொடுப்பார். அது கமலின் நிஜமான தொலைபேசி எண் என்று மார்கழி இரவுகளில் எட்டரை மணியிலிருந்து ரசிகைகள் மாறி மாறிப் பேசி அழைத்தனர். அது உதயம் புரொடக்ஷன்ஸ் போன் நம்பர். சில விஐபி விசிறிகளுக்கு கமலின் நிஜமான எண் தெரியும். அவர்களும் உரிமையுடன் கமலிடம் உறவாடினார்கள்.

‘ரசிகைகள் எனக்கே புல்லரிக்க கன்னம் சிவக்க போனிலேயே முத்தமிட்டுப் பேசியது ஆசை மொழிகள்.’

*

கமல் பாலசந்தரின் ஆள் என்ற முத்திரை பலமாகக் குத்தப்பட்டது. அவருக்கு வேலை இருந்தாலும் இல்லையென்றாலும் கலாகேந்திராவுக்குப் போய் வந்தார். கமலுக்கு வாய்த்த மற்ற படங்களில் அவர் மேனி அழகை மட்டுமே காட்ட முயற்சித்தனர்.
‘Girls Hero, Sex Symbolனு என்னைச் சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கலை. பொம்பிளை ஜெயமாலினி மாதிரி ஆம்பிளை ஜெயமாலினியா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்களோன்னுகூட நினைச்சேன். இந்த இமேஜ் அட்டை மாதிரி என்னோட ஒட்டிட்டு இருக்கு. இது போய் நான் ஆக்டர்னு பேர் வாங்கணும்.’

*

வாணியுடனான காதலும் நாளொரு நளினமும் பொழுதொடு பொலிவுமாக வளர்ந்தது.
‘முதல் பரிசு Brute Perfume. அதற்குப் பின் ரெகுலரா கொலோன்கள் சட்டைகள் வாங்கி அனுப்புவேன். வெளி நாடுகளுக்குப் போகும் போதும் நிறைய வாங்கி வந்து தந்திருக்கிறேன். Elite of Madras என்று சொல்லக் கூடிய நண்பர்கள் மூலம். ‘அவருக்கு ஒரு பார்சல் தரணும். எனக்காக ப்ளீஸ் எடுத்துண்டு போறீங்களா’ என்பேன்.
கமல், அவர்கள் வீட்டுக்குப் போய் கிஃப்ட் பார்சல்களை வாங்கிக் கொள்வார்.’
சென்னையில் கிடைக்காத சராஹ் சட்டைகள் மும்பையில் மேல்தட்டு மக்களிடையே பிரபலம். அந்த ஷர்ட் வகைகளில் CD என்று போட்டிருக்கும். கமலுக்கென அவற்றை அனுப்பிக் கொண்டே இருந்தார் வாணி. கமலுக்கும் ‘சராஹ்’ பிடித்துவிட்டது. சதா சர்வ காலம் வாணியின் சராஹ் சட்டைகள் கமலைத் தழுவிய படியே வலம் வந்தன. வாணி சென்னைக்கு வரும்போதெல்லாம் மன்னி கலாட்டா செய்தார்.
‘இதோ பார். உன் ஷர்ட் தொங்குது. இதன் பேர் வாணி ஷர்ட். கவச குண்டலம் மாதிரி இதையே அவன் நாலு நாளாப் போட்டுண்டு இருக்கான். அது கிழியற வரைக்கும் விடமாட்டான் போலிருக்கு.’
இடையில் அவள் ஒரு தொடர்கதையின் வங்காள வடிவத்துக்காக கல்கத்தா போனார். இரண்டு நாள்களில் சென்னையில் பிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சி. கமல் – ஸ்ரீப்ரியா நடிக்க கே. பாலசந்தர் இயக்கும் நாடகம் ஒன்றும் அதில் இடம் பெறவிருந்தது. அதற்கான ஒத்திகை வேறு.

கல்கத்தாவில் மாலா சின்ஹாவுக்கு கமலை விடவே மனசு வரவில்லை. மிக மூத்த நடிகை. ஆனாலும் சவுகார் ஜானகி போல் இளமையாக வாழ நிறைய முயற்சிகள் மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக கமலை Can I kiss you? என்று மாலா சின்ஹா மரியாதை நிமித்தமாகக் கேட்டார்.

மறுக்க மனம் வரவில்லை கமலுக்கு. சரி என்றார். இச் என்ற சத்தத்தோடு அவர் நெற்றியில் மாலாவின் லிப்ஸ்டிக் வளர்பிறையாகி பதிந்தது.

*

‘திருமணம் என்ற பழைய சட்டத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லாதவன் நான். ஒரு பெண்ணின் நட்பும் உறவும் அவசியப்படும்போது மட்டும் கூடுவது நம் சமுதாயத்தைப் பொறுத்தவரை காட்டுமிராண்டித்தனமானது. நான் மணக்கப் போகும் பெண்ணுக்கும் எனக்கும் உள்ள உறவுக்கு அகராதியில் நட்பு, காதல் என்ற இரண்டு விளக்கங்களே காணப்பட்டன.
‘நட்புத் திருமணம்’ என்ற வழக்கமில்லாத வார்த்தையைவிட காதல் என்பது பத்திரிகைகாரர்களுக்கு வசதியாக இருந்தது. ஆகவே அந்தப் பழையப் பெயர் பலகையையே நானும் கழுத்தில் கட்டிக் கொண்டு விட்டேன்.
மொத்தத்தில் இது என் சகஜீவிகளையும் என்னையும் சண்டை இல்லாமல் திருப்திப்படுத்தும் ஏற்பாடு. எனக்குப் பிடித்திருக்கிறது.’
கமலின் வாணியுடனான திருமண அறிவிப்பு கட்டுரை அது.

*

சரிகாவைக் கண்டதும் எஸ்.பி.எம். யூனிட்டில் ஆச்சர்யம் காட்டினார்கள். திடீரென்று ஓர் இளம்நடிகையுடன் கமல் செட்டுக்கு வந்திருக்கிறாரே, நமக்கெல்லாம் அவரை அறிமுகப்படுத்துவாரா என்று ஆர்வம் தலை தூக்கியது. எட்டாவது ஃப்ளோர் எதிர்பார்ப்பில் இருக்க கமல் கிண்டல் அடித்தார்.

‘உங்க யாருக்கும் அவங்கள அறிமுகப்படுத்தமாட்டேன். அவங்க எனக்கு மட்டும் ஃப்ரண்டு.’

*

2002ல் கமலின் இரு படங்களிலும் சிம்ரன் கதாநாயகி. பஞ்ச தந்திரத்தில் நகைச்சுவையாக சிம்ரனுக்கு சக்களத்திப் போர். போட்டிப் பாடல், அதைவிட கமல் – சிம்ரன் ரகசியக் காதலை குழந்தைகளும் உணரும் வகையில் ஒரு டூயட்.
‘என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா?
ஊரெங்கும் வதந்திகாற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா?
வளைக்க முயன்றது யாரு
நீயா நானா?
வளைந்து கொடுத்தது யாரு
நீயா நானா?
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது.’
சிம்ரனோடு தொடர்ந்தது தோழமையா அல்லது காதலா என்பதை கமல் மட்டுமே அறிவார். அது இரண்டும் அற்றதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் பஞ்சதந்திரம் படத்துக்கு விளம்பர பரபரப்பை ஏற்படுத்தியது.

*

‘ஹலோ நான் டைரக்டர் கே.எஸ். ரவிகுமார் பேசறேன். பஞ்ச தந்திரம்னு ஒரு படம் பண்றேன். கமல் சார் நடிக்கிறாரு. சிம்ரன் கதாநாயகி. உங்களுக்கு ஒரு கெஸ்ட் ரோல் இருக்கு. நீங்க செஞ்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம்.’
‘ஸாரி மிஸ்டர் ரவி. கமல் சாரோட ஹீரோயினா நாலு பெமிலியர் மூவில நடிச்சுட்டேன், மறுபடியும் சின்ன வேஷம் பண்ணா சரி வராது. ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ. எனிவே என்னை ஞாபகம் வெச்சிருந்து கூப்பிட்டதுக்கு நன்றி.’

ரவிகுமாருக்கு ஏமாற்றமாகிவிட்டது. கவுதமி வீட்டில் மீண்டும் போன் ஒலித்தது. இந்த முறை கமல் லைனில் இருந்தார்.
‘வை டோன்ட் வீ மீட் அகெயின் கவுதமி?’

மந்திரம்போல் ஒலித்தது. கமலின் குரல். சந்தித்தார்கள். இணைந்தார்கள். வழக்கமான காஸ்ட்யூம் டிஸைனர் போஸ்ட், குடும்பத் தலைவி அந்தஸ்து இரண்டும் காலியாகவே
இருந்தது. கவுதமி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். கவுதமி, கமலின் பெண்களுக்கும் அம்மா ஆனார். சுப்புலட்சுமி கமலை அப்பா என்று அழைத்தார்.

வேட்டையாடு விளையாடு படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. கவுதமியும் கமலுக்காக வழக்கம்போல் மேக்-அப் சாமான்கள் வாங்கினார். கவுதமியுடனான உறவு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கமலுக்கு வழங்கியது.

*

பா. தீனதயாளன் எழுதி சென்ற வருடம் வெளியாகி ஹிட் ஆன கமல் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

படங்கள் நன்றி : எஸ்.வி. ஜெயபாபு.

எம்.ஆர். ராதாவின் ராவணன்

காமவல்லி (சூர்ப்பநகை) : யாரையா நீர்?
ராமன் : நான்.. நான்.. பெரிய வீரன்
கா.வ.: (சிரித்துக்கொண்டே) அதுதான் தெரியுதே நீ வில் பிடித்திருக்கிற லட்சணத்திலிருந்தே! (ராமன் வில்லைச் சரியாகப் பிடித்துக் கொள்கிறான்.)
ராம : நான் பெரிய அரசகுமாரன். எனக்கு இன்னும் (கழுத்தைக் காட்டி) அது… ஆகலே, அதுக்காக…
கா.வ.: ஏய் மரியாதையாகப் பேசு, நான் இந்த மண்டலத்து அரசப் பிரதிநிதி காமவல்லி. இப்பவாவது இந்த இடத்தை விட்டு அகன்றுவிடு. உம்…
ராம : நான் யார் தெரியுமா? ராமன்! தசரத மைந்தன். அயோத்திக்கே அரசனாக வேண்டியவன். நமது விவாகம் முடிந்ததும் பட்டம் சூட்ட வேண்டியதுதான் பாக்கி.
கா.வ.: (திகைத்து) ராமனா? நீ மணமானவன். மரியாதையாகப் போய்விடு. உனது ஆரிய அடாத வழக்கம் தமிழகத்தில் செல்லாது.
ராம : ஆரியர் வழக்கம்தான் ஆசைப்பட்டால் ஐந்து தாரங்களை மணக்கலாமே. அரசீ! அடியேனை உன் அன்பனாக ஏற்றுக்கொள்; அடிமையாக வாழ்கிறேன். கண்ணே உன்னைக் கண்டதுமே காதல்…
கா.வ.: காதல்! காமத்துக்கும் காதலுக்கும் வேறுபாடு தெரியாத கயவனே, என் நாட்டில் புகுந்ததுமல்லாது தகாத வார்த்தைகள் வேறு பேசுகிறாயா?
ராம : பொறுமைக்கும் அளவுண்டு… பொன்மானே!
கா.வ.: நீ எருமை
ராம : நான் ஆண்.. ஆரியன்!
கா.வ.: அசல் கோழை!
ராம : நீ தனிமையில் இருக்கிறாய்.
கா.வ.: நான் தமிழச்சி! தற்காக்கும் திறன் எனக்குண்டு.
ராம : உன்னை அடையாது விடமாட்டேன். (தாவிப் பிடிக்கிறான்)
கா.வ.: உதை வாங்காது போகமாட்டாய் போலிருக்கிறது. (எட்டி உதைக்கிறாள். ராமன் கத்துகிறான்.)
ராம : தம்பி லட்சுமணா ஓடிவாயேன். அந்த அசுரச் சிறுக்கி என்னை அடிச்சுட்டுப் போராளே, அவளை உருக்குலைத்து விடேன்; அவள் செருக்கு குலையட்டுமே; தம்பி.. தம்பி… (லட்சுமணன் ஓடிவந்து காமவல்லியைத் தடுக்கிறான்.)
லட்சுமணன் : ஏய் தடிச்சிறுக்கி! எனது தமையனைத் தள்ளிவிட்டா போகிறாய், நில்லடி…
கா.வ.: மானத்தை விட்டவனே, மரியாதையாகப் பேசு.
(இருவருக்கும் ஏற்பட்ட வாள் சண்டையில் லட்சுமணன் அவளது மூக்கையும் காதையும் வெட்டிவிடுகிறான்.)
கா.வ.: அய்யோ, அண்ணா! போய்விட்டதே தமிழன் பெருமை! ஆரியன் என்னை அவமானப்படுத்தி விட்டானே!
(காமவல்லி அங்கிருந்து அலறி ஓடுகிறாள். தான் சந்திக்கும் கரன், தூஷ்ணனிடம் ராமனும் லட்சுமணும் தனக்கு செய்த அவமானங்களைச் சொல்லிக் கதறுகிறாள்.
கா.வ.: என் அண்ணன் தென்னிலங்கை இறைவனிடம் இதைக் கூறுங்கள், பழிக்குப் பழி வாங்காது விடாதீர்கள். அய்யோ அண்ணா! (சாகிறாள்.)

**
மானைப் பிடிக்கச் சென்றிருக்கிறான் ராமன். சீதைக்குக் காவலிருக்கிறான் லட்சுமணன். ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, லட்சுமணன் அங்கிருந்து வெளியேறுகிறான். அப்போது அங்கு வரும் ராவணனை சீதை வரவேற்கிறாள்.)

ராவணன் : பாழ் வெளியிலே பளிங்கு மண்டபம்.
சீதை : ஆமாம்… எங்கள் பர்ணகசாலை.
ராவ : இல்லை உன் உருவம். பேரழகி, நீ யாரோ?
சீதை : ஆரிய குலம்… ஜானகி என்பது நாமம்.
ராவ : ஜானகி… ராமனின் மனைவி.
சீதை : ஆமாம்.
ராவ : அழகின் அவதாரம்; உன் அங்கங்கள் அவற்றின் அமைப்புக்கே எடுத்துக்காட்டு!
சீதை : பெரியவரே! உங்கள் பிரியமொழிகள் என் செவியில் இன்ப கீதமாய் ஒலிக்கின்றன. உங்கள் மொழிதான் எவ்வளவு இனிமையானது!
ராவ : வேதனையோடு வந்திருக்கிறேன்… வேல்விழி…
சீதை : அதிதிக்கு உபசாரம் செய்ய அடியாள் காத்திருக்கிறேன் ஸ்வாமி; அன்போது உரையாடும் தாங்கள் யாரோ?
ராவ : நான் இலங்கையின் வேந்தன்… ராவணன்.
சீதை : (திடுக்கிட்டு) ராவணன்! ராட்சதன்!
ராவ : என்று மூடர்கள் சொல்லுவார்கள், நான் மனிதன்… மறத்தமிழர் மன்னன்.
சீதை : (நடுங்கிக்கொண்டே) காமவல்லியின் அண்ணன்.
ராவ : ஆமாம்.
சீதை : அய்யோ, மோசம் வந்துவிட்டதே, நாதா! லட்சுமணா! மாபெரும் பழியைத் தேடிக் கொண்டேனே!
ராவ : பிதற்றாதே பெண்ணே! உன்னைச் சேர்ந்தவர்களைப் போன்ற நிர்மூடன் அல்ல நானும் உன் அங்கங்களைச் சிதைக்க.
சீதை : ஏன் இங்கு வந்தாய் நான் தனிமையாக இருக்கும்போது?
ராவ : தகாத வேலை செய்த உன் கணவனுக்கு புத்தி கற்பிக்க.
சீதை : அதற்கு அவரிடம் போ.
ராவ : இல்லை, அவன் வரவேண்டும் என்னிடம்.
சீதை : அதற்காக.
ராவ : உன்னைச் சிறை செய்யப் போகிறேன்.
சீதை : அது அநீதி! (கத்துகிறாள்)
ராவ : இல்லை; அரச மரபு.
சீதை : நான் ஒரு பாவமும் அறியாதவள்.
ராவ : நீ பாவிகளின் மனைவி. என் தங்கையின் அங்கங்கள் சிதைக்கப்படுவது கண்டும்; நீ ஒரு பெண்ணாக இருந்தும் வாளாவிருந்தாய். அந்த ஒரு குற்றத்துக்காகவே உன்னைச் சித்திரவதைகூடச் செய்யலாம். ஆனால், நான் தண்டிக்க விரும்புவது உன்னை அல்ல; உன் கணவனை.
சீதை : அதற்கு?
ராவ : நீ ஒரு கருவி. வா, வந்துவிடு என்னோடு. (நெருங்கிப் பிடிக்கிறான். சீதை அலறுகிறாள்.)
சீதை : வேண்டாம்! என்னை விட்டுவிடு.
ராவ : விட்டுவிடலாம். அதனால் அந்த மட்ட ரகங்களுக்குப் புத்தி வந்துவிடாது. உம் வந்துவிடு.
(அவளது கூந்தலை ஒரு கையிலும் துடைகளை மற்றொரு கையாலும் பிடித்துத் தூக்கித் தன் மடியிலே வைத்துக்கொண்டு தேரிலே ஏறிப்போகிறான்.)

***

தன் படத்தில் ராவணனை நல்லவனாகக் காட்டுகிறார் மணிரத்னம் என்ற பேச்சு பரவலாக இப்போது எழுந்திருக்கிறது. இதற்கு முன்பே ஆர். எஸ். மனோகர் தனது லங்கேஸ்வரன் நாடகத்தில் அசல் ராவணனைக் காட்டியிருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் பெரியார், எம்.ஆர். ராதா. எழுத்தின் மூலம் பெரியார், தமிழர்களுக்கான ஒரிஜினல் ராமாயணத்தை உலகத்துக்குக் கொடுத்திருக்கிறார். எம்.ஆர். ராதா, தனது ராமாயணம் நாடகம் மூலம் செய்த பகுத்தறிவுப் புரட்சி மிரட்டலானது. எம்.ஆர்.ராதா, ராமன் கதாபாத்திரத்தில் நடித்த ராமாயணம் நாடகத்தில் இடம்பெற்ற இரண்டு காட்சிகளுக்கான வசனங்களைத்தான் மேலே கொடுத்துள்ளேன்.

நாடகத்தில் ராமனாக எம்.ஆர். ராதா (குனிந்திருப்பவர்)

நாடகத்தின் முழு வசனமும் என்னிடம் உள்ளது. எம்.ஆர். ராதாயணம் புத்தகத்துக்காக தகவல் திரட்டும்போது பெரியார் திடல் நூலகத்தில் எனக்கு இந்த நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடித்த, எம்.ஆர். ராதாவின் நாடகக்குழுவில் இருந்த சிலரோடு பேசியிருக்கிறேன். அவர்களது அனுபவங்களையும் என் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன். ராதா நடித்து அந்த நாடகத்தைப் பார்க்கும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. ராதாவின் நாடகம் You Tubeல் கிடைத்தால் எப்படி இருக்கும்!

***

நாடகம் குறித்து அண்ணாதுரை

நடிகவேள் இராதா நடத்தும் ‘இராமாயணம்’ நாட்டிலே இன்று ஏற்பட்டிருக்கும் இன எழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. வால்மீகியின் ராமாயணத்தை மெருகளிப்பதாகக் கூறிக்கொண்டு, கம்பன் தமிழகத்தாருக்கு கரைபடிந்த காவியத்தை தந்து சென்றான். அதன் பயனாக இராமாயணம் தேவகதை ஆக்கப்பட்டது. இன்று நடைபெற்று வரும் ‘கலாச்சாரப் போரின்’ விளைவாக, ஆரிய காவியங்களின் உண்மைகளும் தன்மைகளும் விளக்கப்பட்டு வருகின்றன.

குத்தூசி எஸ். குருசாமி

வடநாட்டில் இராவணனைப் போன்ற உருவத்தைச் செய்து தீயிட்டுக் கொழுத்துகின்றனர். அதுபோல தென்னாட்டில் தமிழகத்தில் ஆரிய இராமனைப் போன்ற உருவஞ்செய்து கொழுத்தப்படும் நிலையை உண்டாக்க வேண்டும். தமிழன் வீட்டில் இராமன் படம் இருத்தல் கூடாது. இராமன் தமிழ் இனத்தின் எதிரி என்பதை உணர வேண்டும். இதுவே இந்நாடகத்தின் இலட்சியம்.

பெரியார்

நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இராமாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவாலும் பத்திரிகையாலும் ஆராய்ச்சி நூல் என்பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்தாலும் அவை மக்களிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது. இப்போது இராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச்சிக் கருத்துக்களையே தழுவி நாடக ரூபமாக்கி நடிக்க முன் வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

வி. எஸ். சந்தானம் அய்யங்கார்

நண்பர் இராதா அவர்கள் நடத்தும் இராமாயணத்தைப் பார்க்கா ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தேன். பலர் சாஸ்திரத்துக்கு முரண்பாடாய் இருப்பதாக என் நண்பர்கள் சிலர் சொல்ல கேள்வியுற்றேன். அப்படி நினைப்பவர்கள் சாஸ்திர ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்களென்பது திண்ணம். தற்காலம் இராதா அவர்கள் விபரமாக உண்மையை (இராமாயணம்) எடுத்துக் காட்டுகிறார்கள். இதை எவ்விதத்திலும் முறை தவறுதல் என்று பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் கூற ஞாயமில்லை.