ஸ்ரீநிஷா

அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டின் ஜன்னலைத் திறக்கும்போது முகத்தை வருடிச் செல்லும் குளிர்காற்று…

அமைதியான இரவில், கடற்கரையோரம் நிற்கும்போது செவிகளை நிறைக்கும் அலைகளின் ஆர்ப்பரிப்பு…

பதமாக மசாலா கலந்து வைக்கப்பட்ட மாங்காய் ஊறுகாயின் காரம்…

இந்த மூன்றும் ஒரே குரலில் சாத்தியம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநிஷா. விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் 2ல் அல்கா அஜித்தின் பரம ரசிகனாக இருந்த நான், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீநிஷாவின் ரசிகன் ஆகிவிட்டேன் (மாறிவிட்டேன்?).

அல்கா, சந்தேகமே இல்லாமல் நல்ல பாடகியாக வரப்போகிற பெண்தான். தவறுகளே இல்லாமல் 100% சுத்தமாக பாடக்கூடியவள். சித்ரா, ஷ்ரேயா கோஷல்,  சாதனா சர்கம் – வகை மெலடி பாடல்கள் எல்லாம் அல்கா பாடினால் நமக்கு ஜஸ்கீரிம் சாப்பிடும் உணர்வு ஏற்படும். கர்நாடக சங்கீதம் சார்ந்த சினிமா பாடல்களும் அல்காவுக்கு தூசு. அல்கா பைனலுக்கு வருவது உறுதி. சூப்பர் சிங்கர் ஜுனியர் என்ற பட்டத்தை வெல்வதற்குக்கூட அதிக வாய்ப்புகள் அல்காவுக்கு இருக்கிறது. ஆனால் வெஸ்டர்ன் வகை பாடல்கள், பாஸ்ட் பீட் குத்துபாடல்கள் அல்காவின் தேர்வாக எப்போதுமே இருந்ததில்லை. அப்படிப்பட்ட பாடல்கள் அல்கா பாடும்போதுகூட அதில் தவறு இருக்காது, ஆனால் வழக்கமான அழகு  குறைவாகவே இருக்கும்.

ஸ்ரீநிஷாவின் குரலுக்கு இந்த மாதிரியான வரையறைகள் எதுவுமே கிடையாது. எந்த வகையான பாடலுக்கும் வளைந்து கொடுக்கும் அற்புதக் குரல் அது. பாடும்போது சிறு சிறு தவறுகள் இருக்கலாம். பத்து வயது குழந்தைதானே. பயிற்சியில் சரியாகிவிடும். ஆனால் எந்தவிதமான பாடலையும் முழு அர்ப்பணிப்புடன் கற்றுக் கொண்டு, அழகாக, வார்த்தைகளுக்கேற்ப உணர்வுகளைப் பிரதிபலித்துப் பாடும் ஸ்ரீநிஷா மட்டுமே அல்காவுடன் பைனலில் மோதுவதற்குத் தகுதியான பெண்ணாகத் தெரிகிறாள்.

இன்றைய தேதியில் ஐந்து சிறுவர்கள் போட்டியில் இருக்கிறார்கள். யாரும் இவ்விரண்டு பெண் குழந்தைகளுக்கு ஈடுகொடுத்துப் பாடுவதாகத் தோன்றவில்லை. பையன்களில் இருந்து ஒரு போட்டியாளர் பைனலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று (மறைமுக) விதி எதுவும் வைத்திருந்தால் ரோஷன் வர வாய்ப்பிருக்கிறது.

இருப்பதிலேயே குட்டிப்பையன் ஸ்ரீகாந்துக்கு இன்னும் வயதும் வாய்ப்புகளும் இருக்கின்றன. நிகழ்ச்சியின் கவர்ச்சிக்காக ஸ்ரீகாந்தை இன்னமும் ‘எலிமினேட்’ செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஸ்ரீகாந்துக்கு, நிகழ்ச்சி பார்க்கும் தாத்தா, பாட்டிகளின் அமோக ஆதரவு குறையவே இல்லை. நித்யஸ்ரீயை ரசிக்கலாம். நித்யஸ்ரீயைவிட அதிக திறமைகள் கொண்ட (ஆனால் அதிகம் அமைதியாக இருப்பதால் வெளியே தெரியாத) பிரியங்காவை மனமாரப் பாராட்டலாம். ஆனால் பைனலுக்கு யாரெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது?

அதற்கு முன் ஒரு சந்தேகம். பைனலில் இருவர் பாடுவார்களா? மூன்று பேர் பாடுவார்களா?

மூன்று பேர் என்றால் என் தேர்வு ஸ்ரீநிஷா, அல்கா, ரோஷன். பைனலில் இருவர் என்றால்… என்ன சொல்வதென்று புரியவில்லை. (இன்னும் எவ்வளவு மாதம் நிகழ்ச்சியை இழுப்பார்கள் என்று தெரியவில்லை. இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் பரிட்சை இருக்காதா?)

ஸ்ரீநிஷா பற்றி மேலும் ஒரு வரி – பாடி முடித்தபின் நடுவர்கள் பாராட்டும்போது வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே ‘Thank you sir’, ‘Thank you Maam’ சொல்லும் அழகுக்காகவே ஸ்ரீநிஷாவை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

ஸ்ரீநிஷாவின் பல்வேறு பரிமாணங்கள் :

ஆரம்ப கால ஸ்ரீநிஷா

எந்தப் பூவிலும் வாசமுண்டு…

கண்ணோடு காண்பதெல்லாம்…

அல்காவை திணறடித்த ஸ்ரீநிஷா

பொன்வானம் பன்னீர் தூவுது

நாடோடித் தென்றல் படத்திலிருந்து

கே.பி. சுந்தராம்பாள் குரலில்

தம் மரே தம்…

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

மாமா மாமா மாமா – மற்றும் பல

வசீகரா ரீமிக்ஸ்…

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு

(பின் குறிப்பு : எனது அலுவலகத்தில் ஸ்ரீநிஷாவுக்கு தனி ரசிகர் மன்றமே இருக்கிறது.)