‘இதில் என்ன பிரதர் தப்பு?’ – ஜெமினி

ஜெமினி ஸ்டூடியோவில் வெறும் காஸ்டிங் அசிஸ்டெண்ட்டாக இருந்தபோதே, ஜெமினி ஸ்டூடியோவின் படங்களில் கதாநாயகியாகப் புகழ்பெற்றிருந்த புஷ்பவல்லியை தன் காதல் வலையில் சிக்க வைத்தார் ஜெமினி கணேசன்.

புஷ்பவல்லி பார்க்க ரொம்ப அழகாக இருப்பார். தாசி அபரஞ்சி, பால நாகம்மா ஆகிய படங்களில் ரொம்பவும் வசீகரமாக நடித்துப் புகழ் பெற்றிருந்த நடிகை அவர். தென்னக சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே அழகுக்குப் புகழ்பெற்ற கதாநாயகிகளில் ஒருவர் பத்மினி. அவரே வியக்க நோக்கிய புஷ்பவல்லி தான் சினிமா உலகில் ஜெமினி கணேசனுக்குக் கிடைத்த முதல் காதலி.

புஷ்பவல்லி

‘நடிகை சூர்யபிரபா என்னுடன் நடித்துக் கொண்டிருந்தார். அவரது சகோதரியே புஷ்பவல்லி. நான் புஷ்பவல்லியின் காதலில் சிக்கினேன். புஷ்பவல்லி வயிற்றில் என்னால் கருவும் உருவானது. நான் கலங்கி நின்றேன்.

அவள் என் குழந்தையைச் சுமப்பது தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றாள். பிறக்கப்போகும் குழந்தைக்கு முழுமையான அப்பாவாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்தேன். எத்தனையோ எடுத்துச் சொல்லியும் புஷ்பவல்லி ஏற்றுக் கொள்ளவேயில்லை.

1954-ம் வருஷம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி ரேகா என்ற பெண் குழந்தை எனக்கும் புஷ்பவல்லிக்கும் பிறந்தாள். என் மீது தனக்குள்ள உரிமையை உறவை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்தாள் புஷ்பவல்லி. அதற்கு அடுத்த வருஷமே ராதா என்ற பெண் குழந்தையையும் பெற்றுக் கொண்டாள்.

என் பிறந்தநாள் பரிசாக ராதா பிறந்தாள். என்னை அடைவதிலும் ஆட்கொள்வதிலும் இருந்த அவசரம் என்னைப் பிரிவதிலும் அவளுக்கு இருந்தது. நான்கு வருஷ நட்பை என்னைப் புரிந்து கொள்ளாமல் முறித்துக்கொள்ள புஷ்பவல்லி முற்பட்டாள்.’

என்று புஷ்பவல்லி பிரிந்த சமயத்தில் ஜெமினி கணேசன் வருந்திக் கூறினார். ஆனால் சில வருடங்கள் கழித்து ஜெமினி, புஷ்பவல்லி பற்றிப் பேசும்போது அதில் வருத்தம் இம்மியளவு கூட இல்லை.

‘இதில் என்ன பிரதர் தப்பு? ஜெமினியில் நானும் புஷ்பவல்லியும் நடித்துக்கொண்டு இருந்தபோது இருவருக்கும் காதல் பிறந்தது ஒட்டிப் பழகினோம். திருமணத்தைப் பற்றி நாங்கள் எண்ணவே இல்லை.

மனம் விரும்பிப் பழகுபவர்களுக்குத் திருமணம் தடையில்லைதான்!

எங்கள் இருவர் உயிரும் கலந்து மூன்றாவது உயிர் தோன்றியது பானுரேகா பிறந்தாள் காலபோக்கில் இருவரும் வேறு பாதையில் செல்ல வேண்டி இருந்ததால் பிரிந்தோம்.

எங்களுக்குள் திருமணமாகாததால் விவாகரத்து பிரச்னையும் எழவில்லை.’

புஷ்பவல்லி ஜெமினி கணேசனை விட்டு முற்றிலும் விலகிய நேரத்தில், அவரது இடத்தை சாவித்ரி பிடித்துக் கொண்டிருந்தார்.

(நன்றி : பா. தீனதயாளன், புத்தகம் : காதலன் – ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு)

Leave a Comment