சினிமாவின் எதிர்காலம் – நம் கையில்!

இன்று பாடல் பதிவுடன் இனிதே ஆரம்பிக்கிறோம் – அடிக்கடி புதிய சுவரொட்டிகள்  கண்களில் தென்படும். வெகு சில போஸ்டர்களைப் பார்க்கும்போது மட்டும் ‘இந்தப் படம் வர்றப்போ கண்டிப்பா தியேட்டர்ல போய்ப் பார்க்கணும்’ என்று மனத்துக்குள் பச்சை விளக்கு எரியும். வெண்ணிலா கபடி குழுவின் படபூஜை போஸ்டரும் எனக்குள்  பச்சை ஒளி பரப்பியது. சென்ற வாரம் ஏவிஎம் ராஜேஸ்வரியில் குடும்பத்துடன் சென்று  பார்த்தேன்.

வெள்ளந்தி மனிதர்களின் வெகு இயல்பான வாழ்க்கை. ஆரம்ப காட்சிகளிலிருந்தே சின்னச் சின்னதாக நிசர்சனக் கவிதைகள். பார்த்துப் பழகிய பக்கத்து கிராம மனிதர்களின் மண்வாசனைப் பேச்சு.

பஸ் ஓட்டும் டிரைவர் அண்ணாச்சி. பஸ்ஸின் வேகத்துக்கு இணையாக ஒற்றையடிப் பாதையில் சைக்கிள் மிதிக்கும் கதாநாயகன். ஹார்ன், சைக்கிள் பெல்லால் சத்தம் எழுப்பி அவர்கள் பேசிக்கொள்ளும் அழகு. திருவிழாவுக்கு வரும் மதுரைப் பெண்ணின் வெட்கம். காதலுக்குரிய முதல் சலனத்தை உண்டாக்கும் தெருநாய். கதாநாயகன்  எதிரே வந்து சடாரென முகத்தில் மஞ்சளைப் பூசிவிட்டு ஓட, அதிர்ந்து, அடுத்தநொடி  வெட்கப்படும் கதாநாயகியின் நளினம். கதாநாயகியின் கொலுசின் ஓசையைக் காதில்  வாங்கியபடியே சரியாக நகர்ந்து வந்து உரியடிக்கும் கண்கள் கட்டப்பட்ட கதாநாயகன். இப்படி படம் நெடுகிலும் குட்டிக் குட்டியாக ரசிக்க நிறைய விஷயங்கள்.

படத்தில் கிட்டத்தட்ட எல்லாக் கதாபாத்திரங்களும் வந்து அவர்களது இயல்புக்கேற்ப  இருந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். யாருமே கேமராவை நேரடியாகப் பார்த்து சொடுக்குப் போட்டு தொண்டை கிழியக் கத்தவில்லை.

காட்சிகளோடு காட்சிகளாக நகைச்சுவையும் சென்டிமெண்டும் இரண்டறக் கலந்தி ருக்கின்றன. கிராமத்தில் மக்கள் சூழ்ந்துநிற்க கபடி விளையாடியே பழகியவர்கள், கேலரியில் ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து இருக்கும் கபடி மைதானத்துக்குள் நுழையும்போது அவர்களது கண்களில் இருக்கும் மிரட்சி. ‘நம்மளையெல்லாம் இதுக்குள்ள விளையாட விடுவாய்ங்களா..’ என்று கேட்கும் யதார்த்தம். ஒரு போட்டியில் வெற்றி  பெற்றதும், மக்கள் எழுந்து நின்று ஆரவாரம் எழுப்ப, ‘இதெல்லாம் நமக்குதானாடா?’  என்று சந்தேகம் வழிய அழுதபடியே கேட்கும் அப்பாவித்தனம். இன்னும் நிறைய சொல்லலாம்.

இந்தப் படத்திலும் சில சினிமாத்தனங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் என்னைப்  பொருத்தவரையில் எல்லாமே ஜீரணிக்கக்கூடியவை. முதல்பாதி சற்றே நீளம்தான். இரண்டாவது பாதியில் கேலரியில் உட்கார்ந்து விளையாட்டைப் பார்க்கும் உணர்வைக் கொண்டுவந்துவிடுகிறார்கள். சற்றே நாடகத்தனம் பூசப்பட்ட க்ளைமேக்ஸ் என்றாலும் ஒரு சோகக்கவிதை படித்துமுடித்துவிட்டு, சற்றுநேரம் அமைதியாக இருப்போமே – அந்த மனநிலை வாய்க்கிறது.

உலகின் ஒட்டுமொத்த அபத்தங்களையெல்லாம் அள்ளிச் செதுக்கிய காட்சிகளால் மட்டுமே ஆன சினிமாக்கள்தானே  அதிகம் வருகின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது.. சேச்சே, தப்பு தப்பு. அந்த அபத்தங்களை இந்தக் குழுவோடு ஒப்பிடவே கூடாது.

இந்த மாதிரியான அழகான, எளிமையான, யதார்த்தமான படங்களை, தியேட்டருக்குச் சென்று, மனமார ரசிப்பது ஆதரிப்பதே, வருங்காலத்தில் நல்ல தமிழ் சினிமாக்களும் முளைப்பதற்கு நாம் விதைக்கும் விதை. இல்லையென்றால் வில்லு, சிலம்பாட்டம், பெருமாள், திருவண்ணாமலை ரக விஷச் செடிகள் மட்டுமே நமக்குக் கிடைக்கும் அபாயம் நிச்சயம்.

இன்னொரு ஹாலிவுட் விருது!

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குளோப், பாப்தா. அடுத்து ஆஸ்கர் கிடைப்பதற்கான வாய்ப்புகள்  அதிகம் இருக்கின்றன. சந்தோஷம். ஜாஹிர் ஹுசைனுக்கு கிராமி விருது. மகிழ்ச்சி.  அயல்தேச உயரிய விருதுகள் எல்லாம் இந்த ஆண்டில் இந்தியர்களுக்குக் கிடைக்க  ஆரம்பித்திருப்பது குறித்து திருப்தி.

ஒரு வருத்தம். சென்ற ஆண்டின் இறுதியிலேயே தமிழர் ஒருவர், இசைத்துறையில்  அயல்தேச விருதை அள்ளி வந்துள்ளார். விஷயம் மீடியாவில் பெரிதாகப் பேசப்படவில்லை. தி ஹிந்து உள்பட ஓரிரு ஆங்கில நாளிதழ்களில் செய்தி வந்தது. தமிழ் மீடியாவில்?  ம்ஹும்.

போகட்டும். அந்த விஷயத்தை இந்த சமயத்தில் பகிர்ந்துகொள்வதில் எனக்குச் சந்தோஷம்.

கணேஷ் குமார். இசையமைப்பாளர். கவிதாலயாவின் துள்ளித் திரிந்த காலம் படம் மூலம்  கோலிவுட்டுக்கு அறிமுகமானவர். கே. பாலச்சந்தரின் அநேக தொலைக்காட்சி சீரியல்களில் இசைப் பங்களிப்பு அளித்திருக்கிறார். மற்றபடி, கோலிவுட் குத்தாட்ட பாடல்களில் விருப்பம் இல்லாதவர். அவரது இசைப்பணிகள் பெரும்பாலும் இங்கே திரைப்படம்  தவிர்த்ததாகவும், அயல்தேச இசைக்கலைஞர்கள் சார்ந்ததாகவுமே தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பாலாஜி கே. குமார். தமிழர்தான். ஹாலிவுட்டில் அவர் எடுத்த முதல் படம் 9 Lives of  Mara. கணேஷின் சில இசைக்குறிப்புகளைக் கேட்ட பாலாஜி, லாஸ் ஏஞ்சல்ஸில்  இருந்து தொடர்பு கொண்டிருக்கிறார். படத்தின் theme சொல்லியிருக்கிறார். மாரா படத்தின் தீம் மியூஸிக்கை அமைக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். மூன்று வாரங்களில் கணேஷும் இசையமைத்து அனுப்பினார். உலக அளவில் மொத்தம் 18 இசையமைப்பாளர்கள் தங்களது தீம் மியூஸிக்கை அனுப்பியிருந்தார்கள். கணேஷுக்குத்தான் வெற்றி.

நன்றி : Tabloid Witch

‘கணேஷ், எப்ப லாஸ் ஏஞ்சல்ஸ் வர்றீங்க?’ – படக்குழுவினரின் கேள்வி இது.

‘நான் சென்னையிலிருந்தே செஞ்சு கொடுக்கிறேன்.’ – கணேஷின் பதில் இது.

‘ஆர் யூ ஜோக்கிங்?’ – என்று கேட்ட அவர்கள், ஓப்பன் டிக்கெட் ஒன்றையும் அனுப்பி வைத்தார்கள்.

‘இங்கிருந்தே செய்கிறேன். எந்தக் குறையும் வராது’ என்று கணேஷ் அவர்களைச் சம்மதிக்க வைத்தார். படத்தின் Sound Track மேற்கு மாம்பலத்தில் லேக் வியூ  ஸ்டூடியோஸில் தயாரானது. ஒரு நாளைக்கு இரண்டு நிமிடத்துக்கான இசையை அமைத்த கணேஷ், மூன்று மாதங்களில் வேலையை முடித்தார்.

‘ஓகே கணேஷ். மிக்ஸிங்குக்கு இங்க வந்துருங்க’ – மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து  அழைப்பு. கணேஷ், மிக்ஸிங் செய்த மாதிரியை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பினார். அவர்களுக்கு அதில் பரம திருப்தி. பதில் வந்தது ‘Go ahead!’

ஃபைனல் மிக்ஸிங் டிவிடியை கணேஷ், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பினார். எல்லா வேலைகளும் முடிவடைந்து படம் ரிலீஸுக்குத் தயார் என்ற நிலையில் 2008க்கான  TABLOID WITCH AWARDS அறிவிப்பு வந்தது. அதாவது சிறந்த திகில் படங்களுக் கான வருடாந்திர ஹாலிவுட் விருது இது. திகிலிலேயே பல தினுசுகள் உண்டு. அதில் 9  Lives of Maraவுக்கு 5 விருதுகள். சிறந்த சவுண்ட் டிராக் விருது கணேஷ் குமாருக்கு.

படத்துக்கான வேலைகளை எல்லாம் இங்கேயே தனது ஸ்டூடியோவிலேயே செம்மையாகச் செய்துமுடித்த கணேஷ், விருது வாங்குவதற்காகத்தான் யுஎஸ் சென்றுவந்தார்.

விருதுப் பட்டியலைத் தெரிந்துகொள்ள

இது குறித்த தி ஹிந்து செய்தி

கணேஷ் குமாரை வாழ்த்த : <ganeshaestheticmusic@yahoo.com>

கணேஷ் எனது மரியாதைக்குரிய நண்பர். அவரோடு இணைந்து சில பணிகள்  செய்துள்ளேன். அந்த சுவாரசியமான நிமிடங்களைப் பிறிதொரு சமயம் பகிர்ந்துகொள்கிறேன்.

நான் கடவுளும் மெண்டோஸ் குரங்கும்!

உதயம் தியேட்டரில் டிக்கெட் புக்கிங் ஆரம்பமான உடனேயே நான்கு டிக்கெட் வாங்கியாயிற்று. குடும்பத்தினரோடு அல்ல, நண்பர்களோடு பார்ப்பதாகத் திட்டம். சனிக்கிழமை  (பிப்ரவரி 7) மாலைக்காட்சிக்கு உரிய நேரத்தில் சென்றாயிற்று.

சொர்க்க வாசலைத் திறந்து பக்தர்களை உள்ளே அனுமதிக்க ஆரம்பித்தார்கள். எனக்குமுன் வரிசையில் சென்ற ஒருவர் கையில் பெரிய ஊதுபத்தி பாக்கெட். ‘ஓம் நமசி வாயம்’ என்று அதில் இருந்தது. அந்த நபரோடு ஒட்டி நின்றிருந்த பிறர் கையில் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தேன். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி… நல்லவேளை. எதுவுமில்லை.

படம் ஆரம்பிப்பதற்கு முன் நிறைய விளம்பரங்கள். குரங்கு, கழுதை. மெண்டோஸ் மிட்டாய் சாப்பிட்ட குரங்கு, ஆதி மனிதனாக பரிணாம வளர்ச்சிபெற்று, கழுதையை அடிமையாக்கும் கான்செப்ட். எனக்கென்னவோ அந்த விளம்பரமே ஆர்யா நடித்ததுபோல  இருந்தது.

பின் வரிசையில் குடும்பத்தோடு ஒருவர் வந்திருந்தார். ஆறு வயது மதிப்புமிக்க பெண்  குழந்தை ஒன்றும் வந்திருந்தது. அதன் கையில் டெடி பியர். கிஷ்கிந்தாவுக்கு பிக்னிக்  போவதுபோல நினைத்து அழைத்து வந்துவிட்டார்போல. ‘தேவனே! இந்த வாதைகளிலிருந்து அவர்களை ரட்சியும்!’

தேசிய விருதை வாங்கப்போகும் ஆர்யாவே! நடிப்பு உலகில் லவம் வரும் நம்பிக்கை நட்சத்திரமே! (வலம் அல்ல, லவம்தான்.) இப்படியெல்லாம் வெளியே ரசிகக் கண்மணிகள்  ஃப்ளக்ஸ் பேத்தல்கள். படத்தில் டைட்டில் கார்டு போடும்போது ‘ஆர்யா’ என்று மட்டும்  போட்டார்கள். நிறைவாக இருந்தது.

எல்லோரும் படத்தோடு ஒன்றிப் போயிருந்தார்கள். பிச்சைக்காரர்களை வைத்து அதிர வைக்கும் ஒரு காட்சி. என் பக்கத்து சீட் நண்பர் தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.  பின் வரிசையைத் திரும்பிப் பார்த்தேன். தந்தையும் தாயும் தலையைக் குனிந்துகொண்டிருக்க, ஆறுவயது குழந்தை மட்டுமே ‘தேமே’வெனப் பார்த்துக் கொண்டிருந்தது.

இடைவேளை. தியேட்டரின் விராண்டாவில் நிற்க முடியாத அளவுக்கு சிகரெட் புகை யாகம். ஓம் சிவோஹம். அங்கே நிற்பதற்குப் பதில் ஆர்யாவிடமிருந்து கஞ்சா பைப்பை  வாங்கி ஒரு இழு இழுத்துவிடலாம் என்றே தோன்றியது.

ஆர்யா வரும் காட்சிகளே குறைவு. அதிலும் அவர் பேசும் வசனங்கள் மிகக்குறைவு.  அதிலும் தமிழ் வார்த்தைகள் மிகச் சொற்பமே. சமஸ்கிருதமே மிகுதி. ஹரன் பிரசன்னா வோடு சேர்ந்து இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் நினைத்துக் கொண்டேன்.

க்ளைமாக்ஸில் பூஜாவின் நடிப்புக்கு கைதட்டு. ‘சூடா ஒரு தேசிய விருது பார்சல்!’ எ  பிலிம் பை பாலா என்று திரையில் வரும்போது கைதட்டு. அடுத்த பாலா படம் வருவதற்குள் 2011ல் முதல்வர் யார் என்று தெரிந்துவிடும்.

வெளியே வந்தேன். பக்கவாட்டில் நடந்துவந்த ஒருவர் என்னென்னமோ சொல்லிக்கொண்டு வந்தார். திடீரென என் முகத்தைப் பார்த்து, ‘ஓ ஸாரி. என் ஃப்ரெண்டு நினைச்சு  பேசிக்கிட்டு வந்தேன்’ என விலகினார். தவறு அவர் மீதில்லை. எல்லாப் புகழும் பாலாவுக்கே.

அடுத்த காட்சிக்காக மக்கள் தயாராகியிருந்தார்கள். பக்கத்து தியேட்டரில் செம தில்லாக வில்லு விட்டுக்கொண்டிருந்தார் விஜய். மந்தையிலிருந்து விலகிய ஆடாக பாலா தெரிந்தார். ஆட்டுமந்தைக் கூட்டத்தில் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை.

வில்லு லொள்ளு!

வில்லு இன்று ரிலீஸ். பொதுவாக எனக்கு விஜய்-ன் சமீபகால மசாலா படங்களில் விருப்பமில்லை. ஆதி என்றொரு படத்தை கல்கியில் விமரிசனம் எழுதுவதற்காக பார்த்தேன். அதற்குபின் விஜய் படங்களோடு உறவை முறித்துக்கொண்டேன். கெட்-அப் மாற்றக்கூட தயங்கும் விஜய், மாறாத ஒரே கமர்ஷியல் ஃபார்முலா, காது ஜவ்வைக் கிழிக்கும் தமிழ்க்கொலை பாடல்கள் – இளைய தளபதி என்னைப் பொருத்தவரையில் என்றும் தளபதியாக மட்டும்தான் இருப்பார்போல.

சரி. இனி கற்பனை. (நிஜமாகக்கூட நடந்திருக்கலாம்.) விஜய் படம் ஒன்றின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு எப்படி ஸீன் டிஸ்கஷன் நடந்திருக்கும்? பார்க்கலாமா.

(‘மது, புகை வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு’ என்ற வாசகத்தை தேவைப்படும் இடங்களில் உபயோகித்துக் கொள்ளவும்.)

கொத்துப் பரோட்டா டைரக்டர் பிரபுதேவா (அ) பேரரசு, அக்மார்க் மசாலா ஹீரோ விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பங்காரு, தயாரிப்பாளர் சேட் லாலாஜி – இவங்க எல்லாம் சேர்ந்து.. என்ன சமூக சேவையாப் பண்ணப் போறாங்க. ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் போட்டு உட்காந்து ‘ஸ்டண்ட் ஸீன்’ டிஸ்கஷன் பண்ணுறாங்க. தெலுங்குப் படத்தோட தமிழ் ரீமேக். படத்தோட பேரு (பெத்த பேரு) ‘காரியாப்பட்டி’ (தெலுங்குல ‘பிரேம கொடுக்கு’). நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீந்துவதுவேன்னு சகல ஜீவராசிகளும் ஆந்திராக் காரத்தோட, மசாலா பூசிக்கிட்டு படுத்துக்கிடக்க, ஆல்கஹால், நிக்கோடின் ‘கப்’போட ஸ்டண்ட டிஸ்கஷன்ல பரபரன்னு பொறி பறக்குது. அப்படியே அந்த ‘மூடு’க்கு வந்துட்டீங்களா.. போலாம் ரை ரைட்!

இயக்குநர் : இது க்ளைமாக்ஸ் பைட்டு.
ஸ்டண்ட் : ஆங்.. அது எப்ப வரும்?
இயக்குநர் : இண்டர்வெல் முடிஞ்சதும் ஆரம்பிக்குது. க்ளைமாக்ஸ் வரைக்கும் விடாம உதைக்கிறோம். ஸ்கீரின்ல அப்படியே ரத்தவாடை அடிக்கணும். படம் முடிஞ்சு வெளிய போற ஒவ்வொருத்தணும் உடம்புல மாவுக்கட்டோடத்தான் வீட்டுக்கே போகணும்.
ஸ்டண்ட் : அத்த நம்ம கைல வுடு கண்ணு. புச்சா நெறைய மேட்டர் திங்க் பண்ணி வச்சிக்கீறேன். ஒவ்வொன்னத்தயும் எட்த்து வுட்டேன் வெச்சுக்கோ, ரசிகனுங்க பீஸ் பீஸ் ஆயிடுவானுங்க. நம்ம ஹீரோக்கு மாஸ் மாஸ் பிச்சுக்கும். ஆஹ்ஹாங்!
விஜய் : இல்லீங்ணா, என்னோட மார்க்கெட் போன படத்துல குத்தாட்டம் போட்டு குப்புறப்படுத்துக்கிச்சு. என்னோட ஆக்ஷன் பருப்பு சுத்தமா வேகல. இந்தப் படத்துலயும் பல்லிளிச்சிது வெச்சுக்கோங்க, நானும் ‘குடிச்சுக்கோ முழிச்சுக்கோ’னு காபித்தூள் வெளம்பரத்துக்கு மூஞ்சைக் காட்ட போக வேண்டியதுதான்.
லாலாஜி : ஹீரோ ஸாப், கவலயை வுடுறான். நிம்பள் இந்த பட்துக்கு துட்டை தண்ணியா இறைக்கிறான். டைரக்டர் ஸாப், பட்த்துல பைட்டை பகோத் அச்சா பண்ணுறான்.
இயக்குநர் : ஸீனைச் சொல்லுறேன் கேளுங்க. ஹீரோயினைக் கடத்திட்டு வில்லன் நூறு அடியாட்களோட  பத்து கார்கள்ல 120 கிலோமீட்டர் ஸ்பீடுல போறான்.
ஸ்டண்ட் : இன்னாபா நீ ஸீன் சொல்ற. நான் சொல்றேன் கேட்டுக்கோ. ஹீரோயினை வலிச்சிக்கினு வில்லங்காரன், ஒரு ஆயிரம் அடியாட்களோட, நூறு குவாலிஸ், சுமோவுல, 200 கிலோ மீட்டர் வேகத்துல போறான்.
விஜய் : அப்படிப் போடுங்ணா அருவாளை! இங்க நான் என்ன பண்ணனும்? பரபரன்னு ஆக்ஷன் துள்ளுற மாதிரி அள்ளிவிடுங்கண்ணா.
இயக்குநர் : இதைக் கேள்விப்பட்ட நீங்க, சரசரன்னு உங்க அக்காப் பொண்ணு நடை பழகுற வண்டியில ஏறி வேகமாத் தொரத்த ஆரம்பிக்கிறீங்க.
விஜய் : நடை பழகுற வண்டில்லாம், ரொம்ப லோ பட்ஜெட்டா இருக்கே?
லாலாஜி  : நீங்க கவலே படாதீங்கஜி. நாமே படா காஸ்ட்லியா மூணு சக்ர சைகிள் வெச்சுக்கலாம்.
ஸ்டண்ட் : சூப்பரப்பு. அப்டியே நீங்க மூணு சக்கர சைக்கிள்ல ஏறி ஒக்காந்துக்கினு, 300 கி.மீ. ஸ்பீடுல வில்லன் குரூப்பை சேஸ் பண்ணுறீங்க.
விஜய் : மூணு சக்கர சைக்கிள்ல ஸேஸிங். ஐடியா நியூவா, ப்ரெஷ்ஷா இருக்கு. மேல பில்ட் அப் பண்ணுங்ண்ணா.
இயக்குநர் : ஸேஸ் பண்ணிட்டுப் போறப்பவே, சைட்ல வில்லன் குரூப் ஆஃப் கம்பெனி கார்களையெல்லாம், அப்படியே காலால லேசா எட்டி உதைக்கிறீங்க. ஒவ்வொரு காரும் உயர உயரப் பறந்து நானூறு அடி தள்ளிப் போய் தள்ளாடி விழுது.
ஸ்டண்ட் : பின்னலா இருக்கு. இதுலயும் இன்னும் கொஞ்சம் பில்ட் அப் பண்ணி, சைக்கிள்ல வேகமாப் போற நீங்க, வில்லனோட கார் முன்னால போய் ஸ்டைலா பதினெட்டு போட்டு நிறுத்துறீங்க. வில்லன் கார் டிரைவர் வேகமா சடன் பிரேக் போட, பின்னால வர்ற அத்தனை வண்டியும் ஒண்ணுக்கு மேல் ஒண்ணு முட்டி ஏறி எல்.ஐ.சி. பில்டிங் ஹைட்டுக்கு நட்டுக்கிட்டு நிக்குது.
லாலாஜி : (‘ஜெர்க்’காகி மனத்துக்குள்) என்னாது, எல்.ஐ.சி. ஹைட்க்கு பில்ட் அப் பண்றான். நம்மள் துட்டை கிட்நாப் பண்ணப் பாக்குறான். அரே பாப்ரே!
விஜய் : இந்த இடத்துல என்னைப் பாத்து நடுநடுங்கி வில்லன் கோஷ்டியே பின்னங்கால் உச்சந்தலையில உரச உரச ஓடணும்ணா. அப்படியொரு டுவிஸ்ட்டைச் சொல்லுங்க.
இயக்குநர் : அவ்ளோதானே. இந்தா வைச்சுக்கோங்க. பக்கத்துல இருக்குற பனை மரத்தைப் புடுங்கி 360 டிகிரிக்கு சுழட்டோ சுழட்டுன்னு சுழட்டுறீங்க. அந்து நொந்து போற வில்லன் ஹீரோயினை இழுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற வயக்காட்டுல இறங்கி ஓட ஆரம்பிக்கிறான். விடாம நீங்களும் மூணு சக்கர சைக்கிள்லயே மானாவாரியாத் துரத்துறீங்க.
ஸ்டண்ட் : அப்பாலிக்கா நடக்குறதை நாஞ் சொல்லுறேன் கேட்டுக்கோ சார். அப்டிக்கா ஓடி பக்கத்துல இருக்குற ரயில்வே ஸ்டேஷன்ல பூந்துடுறான். அப்போ டிரெயின் கரீக்டா வருது. இன்ஜின் டிரைவரை க்ளோஸ் பண்ணிக்கினு, வில்லன் தன் கூட்டாளிங்களோடயும் ஹீரோயினோடயும் டிரெயினை ஓட்ட ஆரம்பிக்கிறான்.
இயக்குநர் : அப்ப நீங்க சைக்கிளை உதறிட்டு, டிரெயினைத் துரத்த ஆரம்பிக்கிறீங்க. வேகமா ஒத்தைத் தண்டவாளம் மேல ஸ்லிப் ஆகாம உங்க ஷூவால ஸ்கேட்டிங் போற மாதிரி சறுக்கிட்டே போறீங்க.
விஜய் : நம்மளோட போன படத்துல வில்லன் ஆட்கள் துப்பாக்கியால சுடறப்போ, எங் கையால குண்டுகளைக் கேட்ச் பிடிக்கற மாதிரி பண்ணுனேன். இந்தப் படத்துல அந்த ஸீனை தூக்கிச் சாப்பிடுற மாதிரி ஏதாவது சொல்லுங்ண்ணா.
ஸ்டண்ட் : ஓடுற டிரெயின்ல இர்ந்து வில்லன் ஆள்கள் டுமீல் டுமீல்னு சுடுறாங்க. நீங்க அசால்ட்டா துப்பாக்கி குண்டுகளை கேட்ச் புடிக்கிறீங்க. அதை அப்படியே உங்க உள்ளங்கையில வெச்சு வில்லன் ஆட்களைப் பாத்து ஊதி விடுறீங்க. அது துப்பாக்கில இருந்து வெளிய போறதோட படா ஸ்பீடாப் போயி அவங்களைத் தாக்கி அழிக்குது. எப்படி?
விஜய் : அரிக்குதுங்ண்ணா! இத நம்ம ரசிகனுங்க தியேட்டர்ல பாக்குறப்போ அப்படியே ஆனந்தக் கண்ணீர் வுட்டு கதறுவாங்கண்ணா.
லாலாஜி : (மனதுக்குள் நொந்தபடி) நிம்பள் வட்டி மேலே வட்டி போட்டு குட்டி போட்ட துட்டை, இவங்கோ குண்டு போட்டே அழிச்சுடுவாங்கோ. ஹே பஹ்வான்!
விஜய் : இதுக்கு மேலே மசாலாத்தனமா ஒண்ணும் பண்ண முடியாதுங்கண்ணா. உச்சத்துக்குப் போயிட்டீங்க.
இயக்குநர் : யாரு சொன்னா? இப்பத்தான் மசாலா அரைக்கவே ஆரம்பிச்சிருக்கோம். இன்னும் இருக்கு பாருங்க.
விஜய் : அசத்துறீங்கண்ணா. மேல மீட்டரைப் போடுங்க.
இயக்குநர் : இதே நேரத்துல இன்னொரு வில்லன் பக்கத்து ஊருல இருந்து உங்க அம்மாவையும் தங்கச்சியையும் கடத்திட்டு வாரான். அவனும் அந்த ஊரு ரயில்வே ஸ்டேஷனுக்கு வர்ற இன்னொரு டிரெயினைக் கடத்திட்டு உங்களுக்கு எதிர்த்தாப்ல வேகமா வர்றான்.
ஸ்டண்ட் : ஸேஸிங் ‘செம ஸீனா’ப் போவுது நைனா. இப்பவே என் கையி காலெல்லாம் ச்சும்மா ஜிவ்வுங்குது. ஸ்பாட்டுக்கு எப்ப போலாம்னு மண்டைக்குள்ள பட்சி படபடக்குது.
விஜய் : மேல என்ன ஆவும்? டாப் கியர்ல சொல்லுங்கண்ணா!
லாலாஜி : (டென்ஷனில் வியர்வை வழிய வழிய மனதுக்குள்) இதுக்கு மேலே என்னே ஆவும். ஒண்ணுக்கு ரெண்டு டிரெயினா செலவு பண்ணி, நம்பள் கஜானா காலி ஆவும்.
இயக்குநர் : விஜய் சார், நீங்க உங்க லவ்வர் இருக்குற டிரெயினை நிறுத்த முயற்சி பண்ணுறீங்க. அதுக்கு டிரெயின் பின்னாலயே ஸ்கேட்டிங் போற நீங்க, உங்ககிட்ட இருக்குற பம்பரம் விடுற கயிறை யூஸ் பண்ணுறீங்க.
விஜய் : அது எப்டிங்கண்ணா?
ஸ்டண்ட் : வில்லுக்கு ஃபுல்லும் ஆயுதம்!
இயக்குநர் : அதான் மேட்டரு. பம்பரம் விடுற கயிறை யூஸ் பண்ணி டிரெயினை இழுத்துப் பிடிச்சுக் கட்டி நிறுத்துறீங்க.
விஜய் : சூப்பருங்கோ!
லாலாஜி : (கிட்டத்தட்ட அழுதபடி மௌனமாக) நம்பள் மோசம் போயிட்டான், நம்பள் மோசம் போயிட்டான்.
இயக்குநர் : அதே நேரத்துல இன்னொரு வில்லன் டிரெயின், அதான் உங்க அம்மா, தங்கச்சி வர்ற டிரெயின் கொஞ்சம் தள்ளி வேகமா இதே தண்டவாளத்துல தடக்கு தடக்குன்னு வருது. உடனே நீங்க வேகமா அந்த டிரெயினை நோக்கி ஓடுறீங்க. தடக் தடக் தடக் தடக்.. படக் படக் படக் படக்.. படம் பாக்குறவன் எல்லாவனுக்கு பிபி எகிறணும். வேகமா வர்ற டிரெயின் ஓட்டுற வில்லன், பிரேக் பிடிக்கத் தெரியாம தொபீர்னு குதிச்சுடுறான். உங்க அம்மாவுக்கும் பிரேக் போடத் தெரியாது. ரெண்டு டிரெயினும் மோதப் போற அந்த மில்லி செகண்ட். நீங்க ரெண்டு டிரெயின்களுக்கும்  இடையில போயி ரெண்டையும் மோத விடாம உங்க கைகளால தடுத்து நிறுத்துறீங்க.
ஸ்டண்ட் : டாப்போ டாப்பு! ஆக்ஷன் ஆப்பு!
விஜய் : இந்த ஒரு ஸீனுக்கே படம் இருநூறு நாள் ஓடுங்ணா!
லாலாஜி : (வியர்த்து விறுவிறுத்து) ஹே… ராம்ம்ம்! (மயக்கமாகிறார்.)

Making of Silk Smitha

சிலுக்கு.

இந்த ஒரு வார்த்தையை முன் வைத்தால் போதும். ஒவ்வொருவருக்கும் நினைவுகள் எங்கெங்கோ அலைமோதித் தள்ளாடும். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவைக் கட்டி ஆண்ட பேரரசி. நிஜ வாழ்வில்?

சிலுக்கின் வாழ்க்கையை புத்தகமாகக் கொண்டுவர முடிவெடுத்தபோது, பாரா அதை எழுதும் பொறுப்பை நண்பர் பா. தீனதயாளனிடம் ஒப்படைத்தார். தீனதயாளன் என்ற நாற்பது வயது இளைஞரைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் ‘கடந்த ஐம்பது கால தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா.’

சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை என்ற புத்தகத்தை உருவாக்கும்போது தனக்குக் கிடைத்த அனுபவங்களை தீனதயாளனே தனது வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்.
000
ஒரு பத்திரிகையாளனாக, சிலுக்கை பேட்டி எடுக்கக் கூட முயற்சி செய்திராத  எனக்கு, சிலுக்கின் வாழ்க்கை குறித்த புத்தகம் எழுதும் பணி வந்து சேரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சிலுக்கின் மரணம் குறித்த காரசாரமான கட்டுரை பிரசுரமாகியிருந்த தினமணிகதிரின் பழைய இதழ் ஒன்று மிக நீண்ட நாள்களாக என்னிடம் இருந்தது. அதுதான் ஆரம்பம். சிலுக்கை அவரது மரணத்திலிருந்துதான் பின்னோக்கிப் பின் தொடர ஆரம்பித்தேன்.

சிலுக்கின் ‘தூக்குக் கயிறு’ விஷயம் கிடைத்து விட்டது. ‘தொப்புள் கொடி’ விஷயத்தை எங்கே தேடுவது? யார், யாரைச் சந்திக்கலாம் என்றொரு பட்டியலைத் தயார் செய்தேன்.

சிலுக்கின் காலத்தில் பிரபல கதாநாயகியாக இருந்த நளினியை முதலில் சந்தித்தேன்.
‘ஹலோ அளவில்தான் எங்கள் பழக்கம்’ என்று முடித்துக் கொண்டார். ஏமாற்றம். நளினியின் மேக்-அப் மேன் சிலுக்கின் மேக்-அப் மேன் பற்றிய தகவலைக் கூறினார். சிலுக்கு கண்ணன் என்றழைக்கப்படும் அவரைத் தேடிப் போனேன்.

சினிமாவும் பத்திரிகைகளும் அறிமுகப்படுத்திய சிலுக்கைவிட, கண்ணன் எனக்கு அறிமுகப்படுத்திய சிலுக்கு, ஒரு தேவதை போல் இருந்தார். ‘நீங்கள் சிலுக்கு பற்றித்தானே சொல்லுகிறீர்கள், சிவாஜி பற்றி இல்லையே?’ என்று பலமுறை ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறேன்.

வினு சக்கரவர்த்தி சொன்ன விஷயங்கள் சிலுக்கு என்ற ‘மனுஷி’யைக் கண்முன் நிறுத்தியது. ஒளிப்பதிவாளர் என்.கே. விஸ்வநாதன் கூறிய பல தகவல்கள் சிலுக்கின் மறுபக்கத்தை விளங்க வைத்தது.

சிலுக்கு நல்லவரா, கெட்டவரா? தேவதையா, பிசாசா? – என்கிற கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான். அவரை மனுஷியாகப் பார்த்த அத்தனை பேருக்கும் அவர் நல்லவராகவே இருந்திருக்கிறார். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம்தான். சந்தேகமே இல்லை. நடித்துக் கொண்டிருந்த காலம் முழுவதும் திரையுலகில் அவர் யாராலும் நெருங்கமுடியாத ஒரு நெருப்புப் பந்தாகத்தான் இருந்திருக்கிறார். அது, அவர் வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்ட இமேஜ் என்பது தெரியவந்தபோதுதான், அப்படியொரு இமேஜை உருவாக்கிக்கொள்ள நேர்ந்த அவசியம் என்ன என்று அறியும் ஆவல் ஏற்பட்டது.

அவருடன் பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் தேடித்தேடிச் சந்திக்கத் தொடங்கினேன்.

‘என்னிடம் சிவாஜி பற்றிக் கேளுங்கள், கலைஞர் பற்றிக் கேளுங்கள், காமராஜர் பற்றிக் கேளுங்கள். சிலுக்கைப் பற்றிக் கேட்கலாமா?’ என்று தொலைபேசியிலேயே ஒதுங்கிக் கொண்டார் முக்தா சீனிவாசன்.

நாசரைச் சந்தித்தேன். ‘சிவாஜிக்கு அப்புறம் சிலுக்கு பற்றியா எழுதப் போகிறீர்கள்? என்ன வரிசை உங்களுடையது? சிலுக்கு பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்? அவரை உங்கள் புத்தகத்தில் எப்படிக் காட்டப் போகிறீர்கள்? நம் நாட்டில் எந்த சுயசரிதையும் வாழ்க்கை வரலாறும் நிஜமான விஷயங்களை அப்பட்டமாகச் சொல்வதில்லை’ என்று விசனப்பட்டார்.

வில்லனாக இருந்து ஹீரோவாகி, இன்று தன் மகன் காலத்திலும் தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வரும் ஒரு நடிகரிடம் பேசினேன். உடனே வரச் சொன்னவர், அடுத்த ஓரிரு நொடிகளில், ‘சிலுக்கு தற்கொலை செய்து கொண்டு இறந்த நடிகை. எனவே பேட்டி வேண்டாம்’ என்று தொலைபேசியை வைத்து விட்டார்.

‘சிலுக்கு ஒரு கவர்ச்சி நடிகை. அவரைப் பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்? வேண்டாமே அந்தப் பாவம்’ என்றார் ஒரு சீனியர் நடிகர்.

பல சினிமா ஆண்கள் இப்படி ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் பல சினிமா பெண்கள் மனம் திறந்து பேசினர்.

‘சிலுக்கு பற்றி என் கருத்துகள் இல்லாமல் இந்தப் புத்தகம் வரக்கூடாது’ என்று கண்ணீருடன் பல விஷயங்களைப் பேசினார் மனோரமா. புலியூர் சரோஜா, வடிவுக்கரசி, சிலுக்கின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹேமமாலினி ஆகியோரும் மறுக்காமல் பல தகவல்களைப் பகிர்ந்து உதவினர்.

இந்தப் புத்தகத்துக்காக தகவல்கள் தந்து உதவிய எஸ்.பி. முத்துராமன், கங்கை அமரன், பாண்டியராஜன், ஒளிப்பதிவாளர் பாபு, ஒளிப்பதிவாளர் அசோக்குமார் ஆகியோருக்கு என் நன்றி.

சிலுக்கோடு சமகாலத்தில் போட்டி போட்ட நடிகை அனுராதா வீட்டுக்குப் போனேன். நான் அங்கே அனுராதாவைக் காணவில்லை. ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் கணவர் ஜெமினிக்குப் பணிவிடை செய்யும் அஞ்சலி தேவியையைப் போல் தன் கணவருக்குப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு அன்பான மனைவியைக் கண்டேன். பல ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி இன்னும் முழுமையாகக் குணம் அடையாத தன் கணவர் சதீஷுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார் அனுராதா. இன்று தெலுங்கு சினிமாக்களில் கவர்ச்சி நடனம் ஆடும் அவர்களது மகள் அபிநயஸ்ரீ, உள்ளிருந்து வந்து தன் அப்பாவின் காலருகே அமர்ந்து கொண்டார். அனுராதா சிலுக்கின் கடைசி நாள்கள் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

சமூகத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே பதிவாகியிருக்கும் ஒருவரைப் பற்றிய எண்ணங்கள் பெரும்பாலும் நிஜமானதாக இருப்பதில்லை.

சிலுக்கின் விஷயத்திலும் அப்படித்தான். என்னால் முடிந்தவரை ‘நிஜமான சிலுக்கை’ இந்தப் புத்தகத்தில் வரைந்துகாட்ட முயற்சி செய்திருக்கிறேன். இம்முயற்சிக்கு உதவிய அத்தனை பேருக்கும் என் நன்றி.

பா. தீனதயாளன்
16-02-2007.

000

சிலுக்கு ஒரு பெண்ணின் கதை : புத்தகத்தை வாங்க