புலி வேட்டை

இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.

புலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.

அதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.

மூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.

ஆனால், ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மகாராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.

வேட்டை குறித்த மிரள வைக்கும் புள்ளிவிவரங்கள் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.

(அகம் புறம் அந்தப்புரம் நூலில் இருந்து.)

சென்னை புத்தகக் காட்சி 2015

2015 சென்னை புத்தகக் காட்சி விற்பனை எப்படி?

பொதுவாகக் கிடைக்கும் பதில் : சென்ற வருடம் போல இல்லை. சென்ற வருடத்தைவிடக் குறைவுதான்.

இது வழக்கமான அங்கலாய்ப்பு இல்லை. நான் உணர்ந்த வரையில் நிஜமே. சென்ற வருடத்தைப் போல இந்த வருடமும் கூட்டம் அதிகம் வரத்தான் செய்கிறது. ஆனால், அது புத்தகங்களை வாங்கும் கூட்டமாக இல்லை. குறிப்பாக, காணும் பொங்கல் அன்று விற்பனையாளர்கள் பெருத்த ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறார்கள். அன்று கூட்டம் மிகக்குறைவு. வியாபாரம் வார நாள்களைப் போன்று சாதாரணமாகவே இருந்துள்ளது.

ஏன் விற்பனை குறைந்துள்ளது?

புத்தகங்களின் விலை அதிகம். மக்களைக் கவரக்கூடிய புதிய புத்தகங்கள் எதுவும் பெரிய அளவில் வரவில்லை. இப்படிப் பொத்தாம்பொதுவாக இதற்குக் கருத்து சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டுமென்றால், ‘மோடியின் ஆட்சியில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது’ என்று சொல்லிக் கொள்ளலாம்.

‘ஏற்கெனவே வாங்குனதையே படிக்கல. இந்த வருசம் எதுவும் வாங்கக்கூடாதுன்னு உறுதியா இருக்குறேன்’ என்று பலர் வழக்கமாகச் சொல்வதுண்டு. அந்தப் பலரது  உறுதி எப்போதும் தவிடுபொடியாகிவிடும். இந்த வருடம் அப்படி ஆகவில்லைபோல. அதனால்தான் என்னவோ விற்பனை குறைந்ததாகத் தோன்றுகிறது. ஆனால், கடைசி மூன்று நாள்கள் விற்பனை, இந்தச் சரிவை ஈடுகட்டிவிடும் என்று தோன்றுகிறது. இன்றைக்கு (திங்கள், ஜனவரி 19) வார இறுதிபோல மாபெரும் மக்கள் கூட்டமெல்லாம் இல்லை. ஆனால், வந்த கூட்டம் வாங்கும் கூட்டமாக இருந்தது. விற்பனையாளர்களின் முகத்தில் உற்சாகம் தென்பட்டது. இது அடுத்த இரு தினங்களிலும் நிச்சயம் தொடரும்.

***

இன்றுதான் நான் புத்தகக் காட்சியைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.  ஐந்து மணி நேரம் செலவிட்டு, மூன்று வரிசைகளைக் கூட முழுதாக முடிக்க இயலவில்லை. Ana Books (ஸ்டால் எண் 73,74) என்ற பழைய புத்தகக் கடையில் அதிக நேரம் செலவிட்டேன். ஆங்கில Fiction, NonFiction புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எதை எடுத்தாலும் ரூ. 99. சில புதையல்கள் சிக்கின. மகிழ்ச்சி.

அந்த ஸ்டாலில் நான் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கும்போது ஒரு நீலச்சட்டைக்காரர் ‘Ruskin Bond புத்தகங்கள் ஏதாவது தென்பட்டதா?’ என்று கேட்டார்.  ‘இல்லீங்க. சரியா கவனிக்கலை’ என்றேன். வரலாற்றுப் புத்தகங்களைத் தேடும் நோக்கில் நான் இலக்கியப் புத்தகங்களைச் சரியாகக் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் தேடியதில் Ruskin Bond புத்தகம் ஒன்று தென்பட்டது. எடுத்து அந்த நீலச் சட்டைக்காரரிடம் நீட்டினேன். சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். அதற்குப் பின் அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

அவர்: ‘நீங்க Ruskin Bond படிப்பீங்களா?’

நான்:  ‘இல்லீங்க. படிச்சதில்லை.’

‘என்ன படிப்பீங்க?’

‘ஹிஸ்டரி நிறைய படிப்பேன்.’

(அவரது முகம் அஷ்டகோணலாக மாறியது. அஜீரணக் கோளாறால் வாந்தி எடுப்பதுபோன்ற ஒரு ரியாக்‌ஷனையும் வெளியிட்டார்.)

‘ஹிஸ்டரியா? ஸாரி… எனக்கு சாண்டில்யன் படிச்சா தூக்கம் வரும்ங்க.’

(அவரைப் பொருத்தவரை வரலாற்றுப் புத்தகங்கள் என்றால் சாண்டில்யன்தான் என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டது. என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தார். அது வட துருவம் நோக்கி மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் குறித்த ஒரு வரலாற்றுப் புத்தகம்).

‘இந்த புக் நல்லாருக்குமா?’

‘எனக்கு நல்லாருக்கும். உங்களுக்கு எப்படின்னு தெரியாது.’

‘நீங்க லவ் ஸ்டோரில்லாம் படிக்க மாட்டீங்களா?’

‘தமிழ்ல சிறுகதைகள் படிப்பேன். இங்கிலீஷ்ல இண்ட்ரெஸ்ட் இல்ல…’

‘ஹிஸ்டரிலாம் எப்படித்தான் படிக்கிறீங்களோ… என்னமோ போங்க… ’ என்று சொல்லிவிட்டு பில் போட நகர்ந்தார்.

***

கவிதா பப்ளிகேஷனில் சிவன் என்பவர் எழுதிய ‘நமது சினிமா (1912 -2012)’ என்று சினிமா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். பெரிய புத்தகம்தான். ஆண்டு வாரியாக சினிமா குறித்த புள்ளிவிவரங்களை, தகவல்களை அறிய விரும்புபவர்களுக்கு நல்ல புத்தகமாக இருக்கும். கவிதாவில் வாண்டு மாமா புத்தகங்கள் தொகுப்புகளாக நல்ல தரத்தில் வெளிவந்துள்ளன. தவற விடாதீர்கள்.

***

நண்பர்களுடன், புத்தகக் காட்சியில் மட்டும் வருடந்தோறும் சந்திக்கும் நண்பர்களுடன் உரையாடினேன். முகநூல் மூலமாக அறிமுகமான நண்பர்களை இந்த வருடம் அதிக அளவில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அடுத்த இரு தினங்களிலும் புத்தகக் காட்சியில்தான் இருப்பேன். மற்ற வரிசைகளைப் பார்த்து நூல்களை வாங்குவதில்தான் அதிக நேரம் செலவிட இருக்கிறேன். ஓய்வுக்காக, சிக்ஸ்த்சென்ஸிலும் (411), கிழக்கிலும் (635) கொஞ்ச நேரம் இருப்பேன்.

சொல்ல மறந்துவிட்டேன். (பெயர் வெளியிட விரும்பாத) எழுத்தாளர் + நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் வெளியான அவரது புத்தகம் சரியான வரவேற்பைப் பெறாததில், அவரது புத்தகம் எந்தவித சர்ச்சையிலும் சிக்காகதில் அவருக்கு ஏக வருத்தம். அடுத்த புத்தகக் காட்சிக்குக் கவனம் பெறும் வகையில் பளிச் தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியிடச் சொல்லி யோசனை சொன்னேன்.

அந்தத் தலைப்பு : ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை எரிக்காதீங்க!

 

ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்

ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம் – இது எனது புதிய புத்தகம். சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. 448 பக்கங்கள். 300 ரூபாய். கடைகளில், ஆன்லைன் விற்பனைத் தளங்களில் கிடைக்கிறது.

இந்தப் புத்தகத்துக்காக நான் எழுதிய முன்னுரை இங்கே.

மீண்டும் ஹிட்லர்?
ஹிட்லரைப் பற்றிய புத்தகமா? ஏற்கெனவே சந்தையில் பல புத்தகங்கள் இருக்கிறதே. இன்னொரு புத்தகம் எதற்கு எழுதப்படவேண்டும்?

இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கும்முன் எனக்கான அடிப்படைக் கேள்விகூட இதுதான்.

பேசப் பேசத் தீராத விஷயங்கள் கொண்ட வாழ்க்கை – பல்வேறு பரிமாணங்களில் ஆராய்ந்து எழுதினாலும் வீரியமும் சுவாரசியமும் குறையாத பாத்திரம் – இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து வரப்போகும் தலைமுறையினரையும் ‘இப்படிக்கூட ஒருவன் வாழ்ந்திருக்க முடியுமா?’ என்று நடுநடுங்க வைக்கும் குணாதிசயம் – கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் நம்பிக்கையை விதைக்கும் பிறவி ஹிட்லர். ஆகவே, ஹிட்லரில் மையம் கொண்டேன்.

சாமானியன் ஒருவன், தேச மக்களின் ஆதரவை, நம்பிக்கையைப் பெற்று, நாஜி என்ற மதத்தை வளர்த்து, தன்னைக் கடவுளாக வழிபடும் ஒரு பெருங்கூட்டத்தை உருவாக்கி, ஜெர்மனி என்ற மாபெரும் தேசத்தின் தலைவிதியைத் தன் சுண்டு விரலால் எழுதும் வலிமை கொண்ட சர்வாதிகாரியாக சிம்மாசனத்தில் அமர்வது சாதாரண விஷயமில்லை. எனில், அப்போதைய ஜெர்மனியில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை இருந்திருக்கிறது. சர்வ வல்லமை கொண்ட ஒரு மீட்பர் வரமாட்டாரா என்று ஜெர்மானியர்களுக்கு ஏக்கமும் இருந்திருக்கிறது. அது ஏன்? பின்னணி என்ன? இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது இப்புத்தகம்.

வளமிக்கக் குடும்பத்தில், பலமானவாகப் பிறந்தவன் அல்ல ஹிட்லர். தாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இறைபக்தியுடன் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு வளர்ந்த சாதாரணச் சிறுவன்தான். படிப்பிலும் கெட்டி அல்ல. தலைசிறந்த ஓவியனாக உருவாக வேண்டும் என்ற மென்மையான லட்சியத்துடன் வளர்ந்த இயல்பான இளைஞனே. ஆனால், ஒரு கட்டத்தில் தூரிகையைத் தூக்கிக் கடாசிவிட்டு, துப்பாக்கியை நம்பி, ரத்தம் தொட்டு குரூரங்களைக் காட்சிப்படுத்தும் கொடுங்கோலனாக மாறியிருக்கிறான் எனில் அது எந்த மாதிரியான சூழ்நிலை? என்ன மாதிரியான மனநிலை?

இந்தப் புத்தகத்தில் ஹிட்லருக்குள்ளிருந்தும் பேசியிருக்கிறேன். ஹிட்லருக்கு வெளியிலிருந்தும் பேசியிருக்கிறேன். அறிந்த நிகழ்வுகளின் அறியப்படாத ரகசியங்களைப் விவரித்திருக்கிறேன். சொல்லப்பட்ட சரித்திரத்தின் சொல்லப்படாத பின்புலத்தைத் தந்திருக்கிறேன். பதியப்பட்ட காட்சிகளின் பதியப்படாத கோணங்களைக் காட்டியிருக்கிறேன். மறைக்கப்பட்ட உண்மைகளை, மறுக்கப்பட்ட சர்ச்சைகளைப் பதிந்திருக்கிறேன். அன்பர் ஹிட்லரின் அந்தரங்கத்தையும் அதனளவில் அணுகியிருக்கிறேன்.

தமிழ் வாசகர்களுக்கு ஹிட்லர் குறித்த புதிய தரிசனங்களை இந்தப் புத்தகம் நிச்சயம் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன்…

முகில்
26.07.2014

*

புத்தகத்தை வாங்க :

SixthSense Publication :

10/2(8/2), Police Quarters Road

T.Nagar,Chennai-600017

(Backside of Nathella,South Usman Road)

Phone: 044-24342771, 044-65279654, 7200050073

10 % சலுகையில் வாங்க : chennaishopping.com

http://bit.ly/1sqTSiH

Dial For Books :

+91-94459 01234 | +91-9445 97 97 97

 

 

 

பலே பாண்டியா – மாமா மாப்ளே – பின்னணி

நேற்றிரவு (1.2.14) முதல் பலரும் ‘மாமா… மாப்ளே – பலே பாண்டியா’ பாடல் நினைவாக இருக்கின்றனர். உபயம் : ஏர்டெல் சூப்பர் சிங்கர் திவாகர். சற்று முன்புதான் அந்தக் காட்சியை யூட்யுப் வழியாகக் கண்டேன். மிக அருமையாகப் பாடினார். அந்தப் பாடலின் மூலம் திவாகர் தனக்கான வெற்றியை உறுதி செய்துகொண்டதாகவும் அறிந்தேன். திவாகருக்கு வாழ்த்துகள்.

பலே பாண்டியா – இந்தப் பாடல் உருவான பின்னணி குறித்து எம்.ஆர். ராதா குறித்த எனது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் இங்கே.

‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
மாமா… மாப்ளே…’

பாடலை முதன் முதலில் செட்டில் கேட்டார் ராதா. அவரது குரல் போலவே இருந்தது அது.

‘அட யாருப்பா இது? நான் பாடுன மாதிரியே இருக்குது?’ – ஆச்சரியமாகக் கேட்டார். விவரம் சொன்னார்கள். பாடலைப் பாடிய எம். ராஜூவை உடனே பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டார் ராதா. அவர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவிலிருந்தவர். வரவழைக்கப்பட்டார்.

ஒல்லியாக, சிவப்பாக இருப்பார் அவர். ராதா முன் சென்று நின்றார். ‘என்னப்பா பாடகரை அழைச்சுட்டு வரலையா?’ கேட்டார் ராதா. இவர்தான் என்றார்கள்.

‘பாடுனது நீங்களா?’ – ராதாவுக்கு ஆச்சரியம்.

‘ஆமாண்ணே’ என்றார் ராஜூ. மென்மையான குரல்.

‘எனக்கு அதிசயமா இருக்கு. பேசறப்போ இவ்வளவு மெதுவா பேசறீங்க. என் குரல்லயே பாடியிருக்கீங்க. உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை. நான் உன்னை மறக்கவே மாட்டேன் தம்பி. யாருப்பா அங்க? தம்பிக்கு காப்பி கொடுங்க’ உபசரித்து அனுப்பினார் ராதா.

அந்தப் பாடலில் நடிப்பதற்காக சிவாஜி பலமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். பாடலில் கிட்டத்தட்ட இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு ஆலாபனை வருமே. அதற்காகத்தான் அவ்வளவு பயிற்சி.

‘அண்ணே, நீங்க மாட்டிக்கிட்டீங்க’ என்ற போகிற போக்கில் ராதாவையும் கலாட்டா செய்துவிட்டுப் போனார் சிவாஜி. உண்மையிலேயே அவ்வளவு பெரிய ஆலாபனைக்கு உதடசைப்பதெல்லாம் ராதாவுக்குக் கடினமான காரியமாகத்தான் தோன்றியது.

நேராக டைரக்டரிடம் வந்தார்.

‘இங்க பாரு பந்தலு. கணேசன் மாதிரில்லாம் நம்மளால முடியாது. கேமராவை வைச்சுக்கோ. நான் பாட்டுக்கு ஆக்ட் பண்ணுவேன். எங்க எனக்கு உதடசைக்கிறது கரெக்டா வருதுன்னு தெரியுதோ, அந்த இடத்துல கேமாராவுக்கு முகத்தைக் காட்டுவேன். மத்த இடத்துல குனிஞ்சுகிட்டுதான் இருப்பேன். வேற வழியில்லப்பா. நீ பாட்டுக்கு டைட் குளோஸ் அப்பெல்லாம் வைச்சிடாதே. அப்பப்ப கட் சொல்லிடாதே. சரியா?’

சொல்லிவிட்டு ராதா ஷாட்டுக்குச் சென்றார்.

பாடல் படப்பிடிப்பு ஆரம்பமானது. பாதி பாடல் வரை ஒழுங்காகப் போனது. ஆலாபனைக் காட்சிகள் வரும்போது, ராதா தன் உதடசைவுகளை அட்ஜெஸ்ட் செய்ய உட்கார்ந்திருக்கும் சோபாவிலிருந்து குதியோ குதியென்று குதிக்க ஆரம்பித்தார். ஏகப்பட்ட சேஷ்டைகள் செய்தார். செட்டில் டைரக்டர், கேமராமேன், லைட் பாய் உள்பட எல்லோராலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சில ரீடேக்குகள் ஆகத்தான் செய்தன.

ஒரு கட்டத்தில் ராதா திடீரென பெரிய பாடகர் போல காதருகே தன் இடது கையை வைத்து, வலது கையை நீட்டி பயங்கர ஆக்‌ஷன் கொடுப்பதை பாடலில் காணலாம். ஆனால் அது ஆக்‌ஷன் அல்ல. நடந்த விஷயமே வேறு.

ஏகத்துக்கும் குதித்ததில் ராதாவின் விக் லூஸாகி விட்டிருந்தது. அந்த ஷாட் முடியப் போகும் நேரம் அது. விக் கழண்டு விட்டால், இன்னொரு முறை நடிக்க வேண்டியது வருமே. அந்தச் சமயத்தில்தான் பெரிய பாடகர் போல ஆக்‌ஷன் செய்து, விக்கைக் காப்பாற்றிக் கொண்டார் ராதா.

***
குறிப்பு : சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக வெளியீடான எம்.ஆர். ராதா புத்தகம், நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் சிக்ஸ்த் சென்ஸின் டாப் 10ல் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.