சென்னை புத்தகக் காட்சி 2015

2015 சென்னை புத்தகக் காட்சி விற்பனை எப்படி?

பொதுவாகக் கிடைக்கும் பதில் : சென்ற வருடம் போல இல்லை. சென்ற வருடத்தைவிடக் குறைவுதான்.

இது வழக்கமான அங்கலாய்ப்பு இல்லை. நான் உணர்ந்த வரையில் நிஜமே. சென்ற வருடத்தைப் போல இந்த வருடமும் கூட்டம் அதிகம் வரத்தான் செய்கிறது. ஆனால், அது புத்தகங்களை வாங்கும் கூட்டமாக இல்லை. குறிப்பாக, காணும் பொங்கல் அன்று விற்பனையாளர்கள் பெருத்த ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறார்கள். அன்று கூட்டம் மிகக்குறைவு. வியாபாரம் வார நாள்களைப் போன்று சாதாரணமாகவே இருந்துள்ளது.

ஏன் விற்பனை குறைந்துள்ளது?

புத்தகங்களின் விலை அதிகம். மக்களைக் கவரக்கூடிய புதிய புத்தகங்கள் எதுவும் பெரிய அளவில் வரவில்லை. இப்படிப் பொத்தாம்பொதுவாக இதற்குக் கருத்து சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டுமென்றால், ‘மோடியின் ஆட்சியில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது’ என்று சொல்லிக் கொள்ளலாம்.

‘ஏற்கெனவே வாங்குனதையே படிக்கல. இந்த வருசம் எதுவும் வாங்கக்கூடாதுன்னு உறுதியா இருக்குறேன்’ என்று பலர் வழக்கமாகச் சொல்வதுண்டு. அந்தப் பலரது  உறுதி எப்போதும் தவிடுபொடியாகிவிடும். இந்த வருடம் அப்படி ஆகவில்லைபோல. அதனால்தான் என்னவோ விற்பனை குறைந்ததாகத் தோன்றுகிறது. ஆனால், கடைசி மூன்று நாள்கள் விற்பனை, இந்தச் சரிவை ஈடுகட்டிவிடும் என்று தோன்றுகிறது. இன்றைக்கு (திங்கள், ஜனவரி 19) வார இறுதிபோல மாபெரும் மக்கள் கூட்டமெல்லாம் இல்லை. ஆனால், வந்த கூட்டம் வாங்கும் கூட்டமாக இருந்தது. விற்பனையாளர்களின் முகத்தில் உற்சாகம் தென்பட்டது. இது அடுத்த இரு தினங்களிலும் நிச்சயம் தொடரும்.

***

இன்றுதான் நான் புத்தகக் காட்சியைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.  ஐந்து மணி நேரம் செலவிட்டு, மூன்று வரிசைகளைக் கூட முழுதாக முடிக்க இயலவில்லை. Ana Books (ஸ்டால் எண் 73,74) என்ற பழைய புத்தகக் கடையில் அதிக நேரம் செலவிட்டேன். ஆங்கில Fiction, NonFiction புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எதை எடுத்தாலும் ரூ. 99. சில புதையல்கள் சிக்கின. மகிழ்ச்சி.

அந்த ஸ்டாலில் நான் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கும்போது ஒரு நீலச்சட்டைக்காரர் ‘Ruskin Bond புத்தகங்கள் ஏதாவது தென்பட்டதா?’ என்று கேட்டார்.  ‘இல்லீங்க. சரியா கவனிக்கலை’ என்றேன். வரலாற்றுப் புத்தகங்களைத் தேடும் நோக்கில் நான் இலக்கியப் புத்தகங்களைச் சரியாகக் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் தேடியதில் Ruskin Bond புத்தகம் ஒன்று தென்பட்டது. எடுத்து அந்த நீலச் சட்டைக்காரரிடம் நீட்டினேன். சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். அதற்குப் பின் அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

அவர்: ‘நீங்க Ruskin Bond படிப்பீங்களா?’

நான்:  ‘இல்லீங்க. படிச்சதில்லை.’

‘என்ன படிப்பீங்க?’

‘ஹிஸ்டரி நிறைய படிப்பேன்.’

(அவரது முகம் அஷ்டகோணலாக மாறியது. அஜீரணக் கோளாறால் வாந்தி எடுப்பதுபோன்ற ஒரு ரியாக்‌ஷனையும் வெளியிட்டார்.)

‘ஹிஸ்டரியா? ஸாரி… எனக்கு சாண்டில்யன் படிச்சா தூக்கம் வரும்ங்க.’

(அவரைப் பொருத்தவரை வரலாற்றுப் புத்தகங்கள் என்றால் சாண்டில்யன்தான் என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டது. என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தார். அது வட துருவம் நோக்கி மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் குறித்த ஒரு வரலாற்றுப் புத்தகம்).

‘இந்த புக் நல்லாருக்குமா?’

‘எனக்கு நல்லாருக்கும். உங்களுக்கு எப்படின்னு தெரியாது.’

‘நீங்க லவ் ஸ்டோரில்லாம் படிக்க மாட்டீங்களா?’

‘தமிழ்ல சிறுகதைகள் படிப்பேன். இங்கிலீஷ்ல இண்ட்ரெஸ்ட் இல்ல…’

‘ஹிஸ்டரிலாம் எப்படித்தான் படிக்கிறீங்களோ… என்னமோ போங்க… ’ என்று சொல்லிவிட்டு பில் போட நகர்ந்தார்.

***

கவிதா பப்ளிகேஷனில் சிவன் என்பவர் எழுதிய ‘நமது சினிமா (1912 -2012)’ என்று சினிமா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். பெரிய புத்தகம்தான். ஆண்டு வாரியாக சினிமா குறித்த புள்ளிவிவரங்களை, தகவல்களை அறிய விரும்புபவர்களுக்கு நல்ல புத்தகமாக இருக்கும். கவிதாவில் வாண்டு மாமா புத்தகங்கள் தொகுப்புகளாக நல்ல தரத்தில் வெளிவந்துள்ளன. தவற விடாதீர்கள்.

***

நண்பர்களுடன், புத்தகக் காட்சியில் மட்டும் வருடந்தோறும் சந்திக்கும் நண்பர்களுடன் உரையாடினேன். முகநூல் மூலமாக அறிமுகமான நண்பர்களை இந்த வருடம் அதிக அளவில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அடுத்த இரு தினங்களிலும் புத்தகக் காட்சியில்தான் இருப்பேன். மற்ற வரிசைகளைப் பார்த்து நூல்களை வாங்குவதில்தான் அதிக நேரம் செலவிட இருக்கிறேன். ஓய்வுக்காக, சிக்ஸ்த்சென்ஸிலும் (411), கிழக்கிலும் (635) கொஞ்ச நேரம் இருப்பேன்.

சொல்ல மறந்துவிட்டேன். (பெயர் வெளியிட விரும்பாத) எழுத்தாளர் + நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் வெளியான அவரது புத்தகம் சரியான வரவேற்பைப் பெறாததில், அவரது புத்தகம் எந்தவித சர்ச்சையிலும் சிக்காகதில் அவருக்கு ஏக வருத்தம். அடுத்த புத்தகக் காட்சிக்குக் கவனம் பெறும் வகையில் பளிச் தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியிடச் சொல்லி யோசனை சொன்னேன்.

அந்தத் தலைப்பு : ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை எரிக்காதீங்க!

 

சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள்

ஜனவரி 06, 2012 வெள்ளிக்கிழமை

* தானே புயலால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத புத்தகக் கண்காட்சி நேற்று (ஜன. 5, வியாழன்) இனிதே ஆரம்பித்தது. ஆரம்பித்து வைத்த சபாநாயகர் ஜெயக்குமார், சட்டசபையைவிட, நேற்றைய கூட்டத்தில் அதிக வார்த்தைகள் பேசியிருக்கிறார் என்பதை பத்திரிகைகள் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.

* வழக்கம்போல புத்தகக் காட்சிக்கு வெளிப் பக்கம் தரை சமதளமில்லை. பார்த்துத்தான் நடக்க வேண்டும். காட்சி அரங்கினுள் இந்தமுறை ஓரளவு கச்சிதமாக தரைவிரிப்புகள் அமைந்துள்ளன. கட்டுமானப் பணிகள் எல்லாம் நாளை வரை நடக்கும்போல. தற்போது வரை திறந்தவெளி புல்வெளிக் கழகம்தான்.

* கிழக்கு F7, F20 என்ற இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. உடையும் இந்தியா, கிழக்கு இந்திய கம்பெனி, பஞ்சம் பட்டினி படுகொலை கம்யூனிஸம், நல்ல கட்டமைப்புடன் கூடிய பொன்னியின் செல்வன், வலைவிரிக்கும் இந்துத்துவம், எக்ஸைல், ஓப்பன் சோர்ஸ், அறியப்படாத அண்ணா ஹசாரே என வேறு விதமான புத்தகங்களுடன் கிழக்கு களமிறங்கியுள்ளது. இவற்றில் சில புத்தகங்களில் இன்னும் ஓரிரு நாள்களில் விற்பனைக்கு வந்துவிடும்.

* சட்டென என்னைக் கவர்ந்தது – சில்ட்ரன் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள கெட்டி அட்டை ஆங்கிலக் கதைப் புத்தகங்கள். ரூ 50 லிருந்து ரூ. 150க்குள் நல்ல காகிதம், அழகான பைண்டிங்குடன் கதைப் புத்தகங்கள் பல தலைப்புகளில் கிடைக்கின்றன.

* விகடனில் இந்தமுறை பல புதிய தலைப்புகள் வெளிவந்துள்ளன. கலைஞரின் அரிய புகைப்படங்கள், ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள் அடங்கிய தனித்தனி புத்தகங்கள் வரவிருக்கின்றன. விலை ரூ. 150 இருக்கலாம். ஆர்ட் பேப்பரா என்று தெரியவில்லை. மருத்துவ நூல்கள் அதிகம் விற்பனையாவதாகச் சொன்னார்கள். எல்லாவற்றையும் தாண்டி, விகடனில் இந்த வருட டாப் புத்தகமாக கல்கியும் மணியமும் மீண்டும் கைகோர்த்துள்ள கெட்டி அட்டை பொன்னியின் செல்வன்தான் இருக்கப் போகிறது.

* ஸ்டால் எண் F10ல் ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் அமைந்துள்ளது. சென்ற வருட கண்காட்சியிலேயே செகண்ட் ஹேண்ட் ஆங்கிலப் புத்தகங்கள் மூலம் கலக்கியவர்கள் இவர்கள். ஐநூற்றுச் சொச்ச விலையில் காபி டேபிள் புத்தகங்கள் சிலவும், குண்டு என்சைக்ளோபீடியாக்கள் சிலவும் தற்போது விற்பனைக்கு இருக்கின்றன. முந்துங்கள்.

* மதி நிலையத்தில் குற்றியலுலகமாக பாரா தன் சைஸுக்குப் பொருந்தாத புத்தகத்துடன் ப்ளக்ஸில் சிரித்தார். கைக்கடக்கமான ட்விட்டர் தொகுப்பு. அதை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு வயதானவர் அதே புத்தகத்துடன் என்னருகில் வந்து ஒரு சந்தேகம் கேட்டார். ‘இதுல டைனோன்னு இருக்குதே. அப்படின்னா?’ – ‘டைனோன்னா ஒருத்தரோட பெயர்.’ – ‘ஓ… நான் டைனோஸரோன்னு குழம்பிட்டேன்’ – ‘சேச்சே, டைனோ ரொம்ப சாது. இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறவர்தான் ட்விட்டர்ல டைனோஸர்’ என்றேன் சிரித்தபடி. அவருக்கு என்ன புரிந்ததோ, என்னிடமிருந்து நகர்ந்து விட்டார்.

* இந்த முறை கேண்டீன் வழக்கத்தை விட பளபளப்பாக, தோட்டாதரணி செட்டுடன் இருக்கும்போதே மனத்தில் ஏதோ உறுத்தியது. நண்பர்கள் மருதனும் முத்துக்குமாரும் வேண்டாம் என்று சொன்னபோதும் கேட்காமல், அவர்களை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டேன். மெனு போர்டைப் பார்த்து மினி சமோசா என்றேன். 50 ரூபாய் கேட்டார்கள். ஒரு பிளேட் போதும் என்றேன். அதுதான் 50 ரூபாய் என்றார்கள். கொடுத்தேன். அதற்கான இடத்துக்குத் தேடிப் போய் கூப்பனை நீட்டினேன். பத்து மினி சமோசாவது தருவார்கள் என்பது என் எதிர்பார்ப்பு. எள்ளுருண்டை சைசில் நான்கே நான்கு மைக்ரோ சமோசாக்கள். கொஞ்சூண்டு சாஸ். அதுதான் ஐம்பது ரூபாயாம். சமோசாவுக்குள் பெருங்காயம் பேரரசு நடத்திக் கொண்டிருந்தது. சகிக்கவில்லை. காபி இருபது ரூபாயாம். தோசை எல்லாம் ரூபாய் ஐம்பதுக்கும் மேல்… ஏதோ சரஸ்வதி கேட்டரிங் சர்வீஸாம்… ஹரஹர சங்கர – ஜெய ஜெய சங்கர என பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. என் பர்ஸுக்குள்ளிருந்து ‘அரோகரா அரோகரா’வென சத்தம் கேட்டது. தண்ணீர் மட்டும் இலவசமாகத் தருகிறார்கள் (இன்றைக்குத் தந்தார்கள்). கொடுத்த ஐம்பது ரூபாய்க்காக தினமும் அங்கே சென்று தண்ணீர் குடிக்கலாம் என்றிருக்கிறேன்.

பட்டியல் 2010

தி.நகர் சோஷியல் கிளப் என்பது அன்று அதன் காண்டீனுக்குப் பிரசித்தமானது. அங்கு தஞ்சாவூர் டிகிரி காபி கிடைக்கும். நான்கணா. அதாவது இருபத்தைந்து காசுக்குக் கள்ளிச் சொட்டுப் போல ஒரு தம்ளர் காபி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் பாண்டி பஜாரில் சாந்தா பவன் என்ற சிற்றுண்டிச் சாலை அதன் தக்காளிச் சட்னிக்காகப் பெரும் புகழ் பெற்றது. நாகர்கோயில் சுந்தர ராமசாமி வரை அதன் மணம் வீசியிருந்தது. இப்போது சரவண பவன் எல்லா பேட்டைகளின் எல்லா  சிற்றுண்டிச் சாலைகளையும் பின்தள்ளி விட்டது. ஒரே மாதிரி சாம்பார், ஒரே மாதிரி சாம்பார் வடை, ஒரே மாதிரி குளோரின் மணமுள்ள குடிதண்ணீர். குறை கூற முடியாது.’

– அசோகமித்திரனின் ஒரு பார்வையில் சென்னை நகரம் புத்தகத்தில் தி.நகர் பற்றிய கட்டுரையிலிருந்து. தற்போது நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் இது. முடிக்கப் போகிறேன். அடுத்து என் சரித்திரம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். இரண்டையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அங்கே நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. சில ஆங்கில புத்தகங்கள் மட்டும் நடைபாதைக் கடையில் வாங்கியவை.

என் சரித்திரம் – உ.வே.சா.
ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்
மார்க்கோ போலோ பயணக் குறிப்புகள் – தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன்
வரலாறும் வக்கிரங்களும் – டாக்டர். ரொமீலா தாப்பர், தமிழில் : நா. வானமாமலை
மைடியர் ஜவாஹர்லால் – மகாத்மா காந்தி – நேருவுக்கு காந்தி எழுதிய கடிதங்கள்
பகுத்தறிவு ஏன்? எதற்காக? – பெரியார்
ஆர்.எஸ்.எஸ். பற்றி – கி. வீரமணி
தியாகராய நகர் அன்றும் இன்றும் – நல்லி குப்புசாமி செட்டியார்
சினிமா? (1950களில் இருந்த தமிழ் சினிமா சூழலைச் சித்தரிக்கும் நூல்) – பி.எஸ். ராமையா
கொங்கு நாடும் கிழக்கிந்திய கம்பெனியும் (1792-1858) – தமிழ்நாடன்
முத்துக் குளித்துறையில் போர்ச்சுக்கீசியர் – ச. டெக்லா
சிவகாமியின் சபதம் – கல்கி
பார்த்திபன் கனவு – கல்கி
வணக்கம் – வலம்புரிஜான்
வெளிச்சம் தனிமையானது – சுகுமாரன்
தலைவாழை – மூத்த தலைமுறைச் சிறுகதைகள் – தொகுப்பாசிரியர் இ.எஸ்.டி.
இந்திய அரசியல் சாசனம் – ஏ.எஸ். நடராஜன்
பொதுமக்களுக்குத் தேவையான சட்டங்கள் – ஏ.எஸ். நடராஜன்
கோபுரத்தில் கொள்ளை – லயன் காமிக்ஸ்
மஞ்சளாய் ஒரு அசுரன் – லயன் காமிக்ஸ்
இரத்தக் கோட்டை – கேப்டன் டைகர் சாகசம் – முத்து காமிக்ஸ்

Reminiscences – The French in India

Pillars and Pearls – Margery Green, Macmillan and Co. Ltd.

Ancient Citites of the Indus – Edited by Gregory L Possehl

For a United India – Speeches of Sardar Patel 1947 – 1950, Publication Division

Indian Exploreres of the 19th Century, Indra Singh Rawat, Publication Division

The Kon-Tiki Expedition – Thor Heyerdahl

Politics, Society and Leadership Through the ages – Series Editor Dr. John Haywood

‘என் புத்தகத்தை வாங்காதீங்க!’

கிழக்கு பதிப்பகம் நீயா நானா கோபிநாத்துடையதாக மாறிய கதை தெரியுமா? இருங்கள், அதை அப்புறம் சொல்கிறேன்.

வாசகர்கள் – பதிப்பாளர்கள் திருவிழா இனிதே முடிந்துவிட்டது. சென்ற வியாழன் தவிர மற்ற எல்லா நாள்களும் புத்தகக் கண்காட்சியில் இருந்தேன். பல்வேறு புதிய (வலைப்பதிவு) நண்பர்களை, வாசகர்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

நிறைய வாங்கினேன். கண்காட்சியில், பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்களை பொங்கல் விடுமுறைக்குப் பின் சாவகாசமாகப் பட்டியலிடுகிறேன். ஆனால் கிழக்கு ஸ்டாலுக்கு வந்து போனவர்களெல்லாம் ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தை வாங்கிச் சென்றார்கள். சந்தேகமில்லாமல் இந்த புத்தகக் கண்காட்சியின் சூப்பர் ஹிட் புத்தகம் அதுவே.

தனிப்பட்ட முறையில் இந்தப் புத்தகக் கண்காட்சி எனக்கு மிகவும் மனநிறைவைக் கொடுத்தது. முகலாயர்கள் 500 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் (ரூ. 250), அகம் புறம் அந்தப்புரம் என்ற 1392 பக்கங்கங்கள் கொண்ட மெகா புத்தகம் (ரூ. 750) இரண்டையும் வாசகர்கள் ஆசையுடன் எடுத்துப் பார்த்து (விலை குறித்து சிறிதும் யோசிக்காமல்) ஆவலோடு வாங்கிச் சென்றார்கள். அதுவும் அகம் புறம் அந்தப்புரம் பிரதிகள் நேற்று விற்பனைக்கு இல்லை. தீர்ந்து விட்டன. (மொத்தம் எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன என்பது குறித்து பின்னர் விசாரித்துச் சொல்கிறேன்.)

பாராவின் மாவோயிஸ்ட், முத்துக்குமாரின் வாத்யார், மருதனின் இரண்டாம் உலகப்போர், கண்ணனின் இடி அமீன், குஹாவின் இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு, முத்தையாவின் சென்னை மறுகண்டுபிடிப்பு, தீனதயாளனின் கமல், மதனின் கிமு – கிபி, பல்லவியின் சீனா போன்றவை என் பார்வையில் அதிகம் விற்ற புத்தகங்கள்.

‘உங்களை யாரு இப்போ கண்காட்சி வைக்கச் சொன்னது? பொங்கல் லீவுலதானே வைக்கணும்? யாரைக் கேட்டு மாத்துனீங்க? வழக்கம்போல வைச்சிருந்தா நாங்க சாவகாசமா வந்து பாத்துருப்போம். இப்போ பாருங்க, அரக்க பரக்க வர வேண்டியதாப் போச்சுது.’

ஓர் அம்மணி என்னிடம் உரிமையோடு கோபித்துக் கொண்டார். என் மனக்கண்ணில் சங்கமம் புகழ் கனிமொழியின் முகம் தெரிந்தது. சென்னை சங்கமம் வெற்றிகரமாக நடக்க வாசகர்களின் வயிறு குளிர்ந்த வாழ்த்துகள்!

என். சொக்கன் இரண்டு நாள்கள் வந்துபோனார். ஆஹா எஃப்.எம்மிலும் புத்தகக் கண்காட்சியிலும் எங்கள் பொழுது கழிந்தது.

‘கிறுக்கல்’ குரு மணிகண்டன் – கண்காட்சியில் எனக்கு நண்பரானார். மூன்று முறை சந்தித்தோம். ஒருநாள் Nikon காமரா கொண்டு வந்திருந்தார். அதில் 110 டாலர் மதிப்புள்ள சிறப்பு Portrait லென்ஸ் பொருத்தி, பாராவை, என்னை, சொக்கனை, மருதனை புகைப்படங்கள் எடுத்தார். அன்று இரவே மெயிலில் அனுப்பியும் வைத்தார். ‘அட! நானா இது’ என்று ஆச்சரியப்பட்டு போனேன். 81 KBயில் அவ்வளவு தெளிவான புகைப்படம். நன்றி குரு.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் நான் விரும்பாத விஷயம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ். ஒவ்வொன்றும் எக்கச்சக்க விலை. வாடிக்கையாளர்கள் கைகழுவுவதற்குக்கூட சரியாக வசதி செய்து கொடுக்காத அவர்களது மெத்தனப் போக்கு. வளரட்டும் அவர்கள் சேவை.

‘ஏ இங்க, வெறும் ஏ.ஆர். ரஹ்மான் புக்குதான் போட்டிருக்காங்க, வாங்கடா’ – ஒருவன் கமெண்ட் அடித்தபடியே தன் நண்பர்களோடு வேகமாகக் கடந்து சென்றான். ‘கடோபநிஷத்னா என்னன்னு தெரியுமாடி உனக்கு? இங்க இருக்கறது ஒண்ணுமே புரியல. வாடி போகலாம்’ – ஒருத்தி தன் தோழிகளை கிழக்கிலிருந்து வெளியேற்றினாள். புத்தகத்தின் மீது ஆர்வம் இல்லாத நபர்களோடு வந்திருந்த நண்பர்கள் படும்பாட்டை பல இடங்களில் பார்க்க முடிந்தது.

‘நாங்கள்ளாம் கம்பராமாயணத்தையே கரைச்சு குடிச்சவங்க.’ ஒரு பையன் வெட்டி பந்தா செய்தான்.

‘இவரு யாருன்னு சொல்லு’ – அவனுடன் வந்த நண்பன் கையிலிருந்த புத்தகத்தின் அட்டையைச் சுட்டிக் காட்டி கேட்டான்.

‘இவரு தெரியாதா? தாடி வைச்சிருக்காரு. சாக்ரடீஸு’

அந்தப் புத்தகத்தின் அட்டையிலிருந்த கார்ல் மார்க்ஸ் தன் தலையிலடித்துக் கொண்டதுபோல இருந்தது.

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க என்ற தலைப்பின் மூலம் ஏராளமான வாசகர்களைச் சுண்டியிழுத்த கோபிநாத்தின் புத்தகத்தை பலர் வாங்கிச் சென்றார்கள். அவர் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த தினத்தில் ஆட்டோகிராஃப் வாங்க ஏகக்கூட்டம்.

நேற்று ஒரு நபர், தன் பட்டாளத்தோடு கிழக்கை கடந்துசெல்லும்போது உதிர்த்த வார்த்தைகளுக்கான அர்த்தம் இதுவரை பிடிபடவில்லை.’

‘என் புத்தகத்தை வாங்காதீங்கன்னு புக்கு எழுதிருக்காரே கோபிநாத், விஜய் டீவில  வருவாரே, அவரோட கடைதான் இது!’

செ.பு.கா.நா.வா.பு.

எந்தப் புண்ணியவான் என்ன காரணத்துக்காக ஆரம்பித்து வைத்தானோ தெரியவில்லை. பலரும்  செய்கிறார்கள். ஆகவே நீண்ட யோசனைக்குப் பிறகு நானும் அதைச் செய்வதாக முடிவெடுத்து  துணிந்து இறங்கிவிட்டேன். என்ன நோக்கத்தில் அவர்கள் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.  ஆனால் உள்நோக்கம் ஏதுமின்றி நானும் செய்கிறேன். இந்தச் செயலும் கொட்டாவி போலத்தான். பரவுகிறது. யாராவது ஒருவர் திடீரென சும்மா மேலே பார்த்தால்கூட மற்றவர்களுக்கும் மேலே பார்க்கத் தோன்றுமே அப்படிப்பட்டதுதான். ஆகவே நானும்…

நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியின் உள்ளேயும் வெளியேயும் நான் (காசு கொடுத்து)  வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.

* அங்க இப்ப என்ன நேரம் – அ. முத்துலிங்கம் – தமிழினி
* சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன் – விஜயா பதிப்பகம்
* Istanbul – Memories of a city – Orhan Pamuk – faber and faber
* ஸ்ரீதர் ஜோக்ஸ் – விகடன்
* மதன் ஜோக்ஸ் பாகம் 3 – விகடன்
* தமிழ் இலக்கிய வரலாறு – மு.வரதராசன் – சாகித்திய அகாதெமி
* களம் பல கண்ட ஹைதர் அலி – ஜெகாதா
* ஜூலியஸ் சீஸர், அந்தோணியும் கிளியோபட்ராவும், ரோமியோவும் ஜூலியட்டும் – ஏ.ஜி.எஸ்.  மணி – புத்தக உலகம் (மூன்றும் குறுவெளியீடுகள்)
* செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி – பழநியப்பா சுப்பிரமணியன் – தமிழினி
* நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி – அ.கா. பெருமாள் – யுனைடெட் ரைட்டர்ஸ்
* நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதி – கவிஞர் ப. முருகையா – அமுதா பதிப்பகம்
* கடலோடி – நரசய்யா – அலர்மேல்மங்கை
* Private life of the mughals of india – R. Nath
* Malgudi days – RK Narayan
* மாணவச் செல்வங்களுக்கு போப்பாண்டவர் – கவியழகன் – சோமு புத்தக நிலையம்
* India since independence – Publication Division
* விடுதலைப்புலி திப்புசுல்தான் – டாக்டர் வெ. ஜீவானந்தம் – பாரதி புத்தகாலயம்
* புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் – ஓர் அறிமுகம் – பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் – பாரதி  புத்தகாலயம்
* என்ன செய்கிறேன் கண்டுபிடி – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* என்ன மிருகம் சொல் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* உலகம் மாற்றிய புதுப் புனைவுகள் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* குழந்தை மொழியும் ஆசிரியரும் – ஒரு கையேடு – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* நமது பூமி – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* விடுதலைப் போராட்டகாலப் பாடல்கள் – தொகுப்பு : அறந்தை நாராயணன் – நேஷனல் புக்  டிரஸ்ட், இந்தியா

(பின்குறிப்பு : சென்னை புத்தகக் காட்சியில் முகிலுக்கு நான் வாங்கிக் கொடுத்த புத்தகங்கள்  என்று யாராவது பட்டியலிட்டால் நம்பாதீர்கள். அது பொய்.)