ஸ்ரீநிஷா – The Winner

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2-ல் விஜய் டீவி சேட்டன்கள், சேச்சிகள் அடிக்கும் கூத்துகளை பார்க்க சகிக்கவில்லை. மக்கள் மனத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ப்ராடிஜியாக நிலைபெற்றுவிட்ட ஸ்ரீநிஷாவை அவர்களது ‘இன உணர்வு’ ஜட்ஜ்மெண்ட் ஏதும் செய்ய இயலாது.

இப்போது பைனல்ஸ் நடக்கிறதுபோல. நான் பார்ப்பதில்லை. என் மனநிலையில்தான் ஆயிரக்கணக்கான (லட்சக்கணக்கான என்றே சொல்லலாம்) ஸ்ரீநிஷா ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று உணரும்போது சற்றே மகிழ்ச்சியாக இருக்கிறது.

நிகழ்ச்சியில் நடுவர்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களது எந்தத் தீர்ப்பும் அந்தக் குழந்தையை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது. ஏனென்றால் ஸ்ரீநிஷா தன் திறமை மேல் மட்டும் நம்பிக்கை கொண்ட குழந்தை.

வருங்காலம் அவளைக் கொண்டாடும். 25 லட்சம் மதிப்புள்ள வில்லாவை யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளட்டும். எத்தனையோ லட்சம் பேர் இதயத்தில் ஸ்ரீநிஷாவுக்கு நிரந்தர இடம் உண்டு.

ஜூன் 17ல் அல்காவோ, ஷ்ரவனோ அல்லது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட வேறு ஒருவருக்கோ பட்டம் அளிக்கப்படலாம். அந்தப் போட்டியாளருக்கு வாழ்த்துகள்!

பைனல்ஸ் வரை தேவதை ஸ்ரீநிஷாவையும், திறமையுள்ள இன்னொரு போட்டியாளர் பிரியாங்காவையும் கொண்டுவந்து கொடுமைப்படுத்தாத (மேலும் புண்படுத்தாத) விஜய் டீவிக்கு அன்பு கலந்த நன்றிகள்! இனிமேலும் நீங்கள் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று விளம்பரப்படுத்தினால் அது செல்லுபடியாகாது.

ஸ்ரீநிஷாவுக்கான ஃபோரம்

ஸ்ரீநிஷா பற்றி அண்ணாச்சி

ஸ்ரீநிஷாவின் அற்புதமான பழம் நீ அப்பா பாடல்! டௌன்லோட் செய்ய.

சிங்கம் – சிங்கர் – ராவணன் – ராமர்

ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் பிரியர்களைத் தானாக தியேட்டருக்குள் இழுக்கும் டிரைலர். கௌபாய்களின் மேலோட்டமான வரலாறோடு இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் ஆரம்பிக்கிறது. காமிக்ஸ் டைப் கதைதான்.

அருமையான செட்டுகள், அழகான, கச்சிதமான உடைகள் (கோயில் பட்டருக்குக்கூட கௌபாய் தொப்பி), ஆங்காங்கே காணப்படும் அறிவிப்பு, பெயர் பலகைகளில் எல்லாம் சிம்புதேவனின் கார்ட்டூன் டச் (தூக்குமேடையில் ‘இங்கே குரல்வளை நெறிக்கப்பட்டும்’), அமெரிக்கா, இலங்கை, இந்தியா, தமிழ்நாடு – அரசியல் குறித்து சிம்புதேவன் பிராண்ட் நக்கல் வசனங்கள், ரசிக்கும்படியான சில கதாபாத்திரங்கள், தன் நிழலைவிட வேகமாகச் சுடும் ஹீரோயிஸ நக்கல் – எல்லாம் தூள்.

திரைக்கதை? படத்தின் வேகம்? ஒட்டுமொத்த சுவாரசியம்? ???? ???????????????????????????????????????

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் என்று டைட்டில் போடும்போதே அதிலிருக்கும் சிங்கம் ‘மியாவ்’ என்கிறது. படத்தின் திரைக்கதையும் அப்படித்தான் இருக்கிறது, சோப்ளாங்கி போல.

படத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் நச். இடைவேளைக்கு பிறகு புதையல் தேடிப் போகும் அரைமணி நேரம் சூப்பர். மற்றபடி சோம்பல் முறிக்க வைக்கிறது.

இம்சை அரசனோடு ஒப்பிட்டால் அதில் பாதிதான் இரும்புக் கோட்டை. அறை எண்ணை 305ல் கடவுளைவிட சுவாரசியமான படம் கொடுத்ததற்காக சிம்புதேவன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஜி.வி. பிரகாஷ் பாடல்களில் கைகொடுத்திருந்தால், கௌபாயாக வேறு யாராவது மாஸ் ஹீரோ நடித்திருந்தால் அல்லது வடிவேலுவே கௌபாய் ஆகியிருந்தால்  – படம் பெரிய ஹிட் ஆகியிருக்கலாம்.

சதம் அடித்திருக்கலாம், அரைசதத்திலேயே (இரும்புக்) கோட்டை விட்டுவிட்டார்கள்.

ஏதாவது படம் போய்த்தான் ஆகவேண்டும் என்றால், தாராளமாக குழந்தைகளோடு இரும்புக் கோட்டைக்குச் செல்லலாம்.

கொசுறு  : நேற்றிரவு காட்சிக்கு உதயத்தில் சுறா டிக்கெட் சுலபமாகக் கிடைத்தது.

***

விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் சறுக்கல் படு கேவலமாகத் தெரிகிறது. பைனலில் யாரை சூப்பர் சிங்கர் ஜுனியர் ஆக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஸ்கிரிப்ட்படி இப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

பைனலுக்கு வருவதற்கு திறமை தேவையில்லை. சில காரணிகள் போதும் என்று வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்த வாரத்தில் ‘எலிமினேட்’ செய்யப்பட்ட ஸ்ரீநிஷாவுக்கு வேண்டுமென்றே குறைவான மதிப்பெண்கள் கொடுத்து வெளியேற்றினார்கள். ஆனால் ஸ்ரீநிஷா அழுது அலட்டிக் கொள்ளவில்லை. நிஜமாகவே திறமையுள்ள குழந்தை. ‘என்னை ஜட்ஜ் பண்றதுக்கு நீங்க யாரு?’ என்பதுபோல சிரித்துக் கொண்டே வெளியேறியது.

அடுத்து வைல்ட் கார்ட் ரவுண்ட் என்று இன்னொரு நாடகம் நடத்துவார்கள். அதிலும் ஸ்ரீநிஷா பாடுவாள். இருந்தாலும் ஸ்ரீநிஷா இல்லாத எபிசோடுகளைப் பார்ப்பதாக உத்தேசம் இல்லை.

***

ராவணன் பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். கேட்கக் கேட்க உள்ளுக்குள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன. கார்த்திக் பாடும் ‘உசிரே போகுதே’ பாடல் நிச்சயம் ஹிட். அடுத்த இடம் ‘கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு.’

அனுராதா ஸ்ரீராமின் குரல் கொஞ்சம் உறுத்துவதால் ‘காட்டுச் சிறுக்கி’ பாடலில் முழுமையாக லயிக்க முடியவில்லை. ஆனால் இதே பாடலின் ஹிந்தி வெர்ஸன் அசத்தல். கள்வரே என்ற பாடல், ஷ்ரேயா கோஷல் பாடியது. வழக்கம்போல குரல் தேன். வரிகள் ஹிந்தி மெட்டுக்கேற்ப ஆங்காங்கே துருத்தி கொண்டிருக்கின்றன. வைரமுத்துவின் வார்த்தைகள் வளைந்துகொடுக்கவில்லை.

மணிரத்னம் படங்களில் ஹிந்தி – தமிழ் என இரண்டு மொழிகளிலும் சேர்ந்து பொருந்திப் போகும்படியாக, ரசிக்கும்படியாக ‘உயிரே’ பாடல்கள் இருந்தன. அடுத்ததாக ‘பம்பாய்’ சொல்லலாம். குரு சொதப்பல். அந்த விதத்தில் ராவணன் பாடல்களும் தடுமாறவே செய்கின்றன.

படத்தில் மலை ஜாதி மக்கள் தலைவன் விக்ரம் (ராவணன்), அவரது தங்கை ப்ரியா மணி (சூர்ப்பநகை), போலிஸ் ஆபிஸர் பிரித்விராஜ் (ராமன்), அவரது காதல் மனைவி ஜஸ்வர்யா ராய் (சீதை).

கதை? புரிந்திருக்குமே. படத்தின் ஸ்டில்களும் நம் நினைப்பை உறுதிப்படுத்துகின்றன.

சில பாடல் வரிகள் கவனிக்கப்பட வேண்டியவை.

என் பொறப்பு நீ கண்டா

என் பாதை நீ கடந்தா

என் யுத்தம் நீ செஞ்சா

நீ ராமந்தேன் ராவணந்தேன்..

ரெண்டும்தேன்…

– வீரா என்ற பாடலில் விக்ரமின் கேரக்டரை விளக்குவதாக வரும் வரிகள் இவை.

விக்ரம் தன் இனத்தவர்களுடன் ஆடிப்பாடும் ஒரு பாடல் இப்படி ஆரம்பமாகிறது.

கெடா கெடாக்கறி அடுப்புல கெடக்கு

மொடா மொடா கள்ளு ஊத்து

….

இவ கண்ணால பாத்தா சானகி அம்சம்

கட்டில்மேல பாத்தா சூப்பநகை வம்சம்…

– ராவணன் மது, மாமிசம் சாப்பிடுபவரா? சூர்ப்பநகை வரிகள் என்ன சொல்ல வருகின்றன?

ஐஸ்வர்யா ராயைக் கடத்தி காட்டில் வைத்திருக்கும் விக்ரம் மன சஞ்சலத்தோடு பாடும் ‘உசிரே போகுதே’ பாடலில் சில வரிகள்.

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்கேன் ஆகல…

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேக்கல

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்திக் கெடக்குதே

***

வழக்கம்போல படம் வெளிவருவதற்கு முன்பாகவே அதைப் பற்றி பேச வைக்கும் வித்தையில் வெற்றி கண்டிருக்கிறார் மணிரத்னம். ஆனால் பாடல் வரிகள் ராவணனை நல்லவிதமாகச் சொல்வதாகத் தோன்றவில்லை.

காத்திருப்போம். மணிரத்னத்தின் ராவணன், நல்லவனா அல்லது கெட்டவனா என்று தெரிந்துகொள்ள.

***

எப்போது ஆரம்பித்தார்கள், யார் எடுக்கிறார்கள், யார் நடிக்கிறார்கள், என்ன கதையாக இருக்கும் என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் படத்தின் தலைப்பை மட்டும் வைத்து கவனம் ஈர்த்து விட்டார்கள்.

ராமர்.

ராவணன் வரும் நேரத்தில் இந்தப் படமும் நன்றாகவே விளம்பரப்படுத்தப்படுகிறது. சூப்பர் ஹிட் பாடல்கள் என்று தினமும் விளம்பரம் வருகிறதே என்று அதையும் கேட்டுப் பார்த்தேன்.

புது இசையமைப்பாளர் போல. சார்லஸ் மெல்வின். பென்னி தயாள், ஹரிசரன் என்று தற்போதைய முன்னணி பாடகர்கள் என்று எல்லோரும் பாடியிருக்கிறார்கள். பாடல்கள் ‘அட புதுசா இருக்குதே’ என்று புருவம் உயர்த்த வைக்கவில்லை என்றாலும் சிலமுறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன.

திராவக வெண்ணிலா – என்றெல்லாம் தமிழுக்கு புது வருணிப்புகளை அருளியிருக்கிறார் இளைய கம்பன்.

படம் வரட்டும். விமர்சனம் யாராவது எழுதினால் படிக்கலாம்.

***

இந்தக் கட்டுரைக்கு வந்த தம்பி ஒருவர் எழுதிய கமெண்ட்:

ராவணன் படத்தில் இன்னும் ஒருபாடல் இருக்குங்கண்ணா.

‘கோடு போட்ட கொன்னுபோடு ..வேலி போட்டா…’

இந்த்த பாடலை மட்டும் ஏன் நீங்க கேட்கலைய அல்லது புரியலையா? இத மட்டும் தவிர்த்து ஏன்?கொஞ்சம் உண்மைகள் கலந்திருப்பதாலா?

கோடு போட்டா கொன்னுபோடு. வேலிபோட்ட வெட்டிப்போடு. நேத்துவரைக்கும் உங்கசட்டம். இன்னைக்கு இருந்து என்கசட்டம். சோத்துல பங்கு கேட்டா எலய போடு எலய

சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலய

ஊரா வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது….

பாட்டன் பூட்டன் சொத்த யாரும் பட்டா போடகூடாது

பழங்குடி இனமக்களின் போராட்டத்தை நல்லாச்சொன்ன இந்த பாட்டைமட்டும் விமர்சனம் பண்ணாதது இதிலிருக்கும் உண்மையினாலா?
-தம்பி

பதிலை எதிர்பார்க்கிறேன்.

அனகா Vs அல்கா

மலர்களே மலர்களே பாடலை வேறு யார் பாடினாலும் கேட்கப் பிடிக்கவில்லை. எல்லாம் அனகா குரல் கொடுத்த மயக்கம். நடந்து கொண்டிருக்கும் விஜய்டீவி சூப்பர் சிங்கர் ஜூனியரில் பலராலும் அதிகம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அல்கா இந்த வாரம் ‘பூ’ சம்பந்தமான சுற்றில் பாடிய பாடல் மலர்களே மலர்களே!

பெருத்த ஏமாற்றம். குழந்தைகளுக்குள் ஒப்பீடு கூடாதுதான். இருந்தாலும் அனகாவின் பக்கம்கூட அல்காவால் வர இயலவில்லை. அனகா பாடியபோது பின்னணி இசை அபாரமாக இருந்ததும் பெரிய ப்ளஸ். விஜய் டீவி இசை பெரும்பாலும் சொதப்பலாகவே தெரிகிறது.

ஏழு வயது முதலே புகழ் வெளிச்சம் பெற ஆரம்பித்த அல்காவிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன். குட்டி சூப்பர் ஸ்டார் ஸ்ரீகாந்த் தேர்ந்தெடுத்த பாடல் – ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ – சொதப்பல்.

இந்த வாரம் ஸ்ரீநிஷா என்ற குட்டிப் பெண் பாடியதை ரசித்தேன். மற்றபடி இந்த நிகழ்ச்சியில் வாரா வாரம் சுவாரசியம் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.

அல்கா – குட்டி சித்ரா!

நடந்து கொண்டிருக்கும் விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 – தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் பாடுவதால் ரசிப்பதற்குரிய அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. பயம், வெட்கம் ஏதுமின்றி அசால்ட்டாக வந்து பாடிவிட்டுப் போகும் சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்க்கும்போது, ‘நாமெல்லாம் சிறுவயதில் எவ்வளவு தத்தியாக இருந்திருக்கிறோம்’ என்று நினைத்து ஏங்குவதை ஏனோ தடுக்க முடியவில்லை.

ஆனாலும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பொண்ணு எல்லாம் எப்படி தைரியமா பாடுது.. நீயும் இருக்கியே? எப்பப்பார்த்தாலும் கேம்ஸ் மட்டும்தானா? பாட்டுக் கத்துக்கச் சொன்னா கத்துக்கறியா?’ என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தாமல் இருந்தால் சரி.

இந்த ஸீஸனில் என்னைக் கவர்ந்த குழந்தைகள் மூவர். மூன்றாவது குழந்தை நித்யஸ்ரீ. தைரியமாகப் பாடும் குணமே இந்தக் குழந்தையின் பெரிய ப்ளஸ். குத்துப் பாட்டு ரகங்களுக்குப் பொருத்தமான கணீர்க் குரல். துறுதுறுவென ஆடிக் கொண்டே பாடுவது தனி அழகு. மேலும் சில சுற்றுகள் வரை நித்யஸ்ரீ தாக்குப் பிடிக்கும் என்பது என் கணிப்பு.

நித்யஸ்ரீயை ரசிக்க.

இரண்டாவது – ஒரு சிறுவன். ஸ்ரீகாந்த். இந்த ஸீஸனில் எல்லாருக்குமே செல்லம் இந்தச் சிறுவன்தான். போட்டியாளர்களிலேயே ஜூனியர். கடினமான பாடல்களையும் அசால்ட்டாகப் பாடும் ஸ்ரீகாந்தை சலிக்காமல் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவன் பாடும்போது பிசிறுகள் தெரிந்தால்கூட அது கேட்பவர்களுக்கு உறுத்துவதில்லை. தங்கள் மகன் பாடும்போதும் சுட்டியாகப் பேசும்போது அந்தப் பெற்றோர்கள் பெருமிதத்தில் வெளிப்படுத்தும் முக பாவனைகள் அழகு. இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுவரை மிகவும் ஜூனியரான ஸ்ரீகாந்த் வருவான் என்று சொல்ல முடியாது. ஆனால் வருங்காலத்தில் ஸ்ரீகாந்த் நிச்சயமாக ஒரு நட்சத்திரம்தான். (ஸ்ரீகாந்த் பாடிய பாடல் ஒன்று)

இந்த ஸீஸனில் நான் அதிகம் ரசிக்கும் பெண் குழந்தை அல்கா அஜீத். இன்னொரு அனகா என்றுதான் சொல்வேன். வாராவாரம் அல்கா எப்போது பாடுவாள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். எனது மொபைலை இப்போது அல்கா பாடிய வீடியோ க்ளிப்பிங்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. கண்டிப்பாக இறுதிச் சுற்றுவரை வரக்கூடிய திறமை கொண்ட பெண். மேற்கொண்டு நான் சொல்வதைவிட, அல்கா பாடுவதை நீங்களே கேளுங்கள்.

பாடல் 1

பாடல் 2

மேலும் இரண்டு வீடியோ – டௌன்லோட் செய்ய.

நிகழ்ச்சியின் நடுவர்கள் மனோ, சித்ரா, மால்குடி சுபா. குழந்தைகளை முதலில் பாராட்டிவிட்டு, அவர்களைக் காயப்படுத்தாதபடி விமரிசனங்களை முன் வைக்கிறார்கள். குறைகள் சொல்லுவதைவிட, குழந்தைகள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக யோசனைகள் சொல்கிறார்கள். குறிப்பாக மனோ, நிகழ்ச்சியைக் கலகலப்பாக கொண்டு செல்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதுவரை வந்தவர்களிலேயே சூப்பர் ஜட்ஜ் மனோதான்.