தோனியின் 10 கட்டளைகள்

விகடனில் நான் எழுதிவரும் நம்பர் ஒன் தொடர் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாரந்தோறும் படித்து தங்கள் அன்பை, கருத்துகளை, விமரிசனங்களைத் தெரிவிக்கும் வாசகர்களுக்கு, நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும்.

குறிப்பாக பாக்ஸர் மேவெதர் கட்டுரைக்கு பெரும் வரவேற்பு. அதுவும் மே 2ல் மேவெதர் தனது 48வது வெற்றியைப் பதிவு செய்ய, தமிழ் ஊடகங்கள் பலவற்றிலும் (முதன்முறையாக) மேவெதர் பற்றிய செய்திகள். சிஎஸ்கேவால் தோனியும் எப்போதோ தமிழராகிவிட்டார். இந்த இதழில் நம்பர் ஒன் – தோனி குறித்த கட்டுரைக்கு ஏகோபித்த வரவேற்பு. குறிப்பாக தோனியின் வாழ்க்கையில், அவர் கடைபிடிக்கும் உத்திகளில் இருந்து எடுத்தளித்த ‘களத்தில் வெற்றிக்கு கேப்டன் தோனியின் 10 கட்டளைகள்’ இப்போது பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல தளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கின்றன.

அவை இதோ.

களத்தில் வெற்றிக்கு, கேப்டன் தோனியின் 10 கட்டளைகள் **

ஆனந்த விகடன் – நம்பர் 1 மகேந்திர சிங் தோனி கட்டுரையில் இருந்து..

* கூட்டத்துக்காக விளையாடாதே… உனக்காகவும் விளையாடாதே. அணிக்காக மட்டும் விளையாடு!

* போட்டிக்கு முன் நல்ல ஓய்வு, மன அமைதி அவசியம். களத்துக்கு வெளியே கிரிக்கெட் பேசாதே!

* பிறர் மீதான கோபத்தை, களத்தில் காட்டாதே. அதற்கு டிரெஸ்ஸிங் ரூம் இருக்கிறது!

* எதிர் அணியினரை எப்போதும் குறைவாக எடைபோடாதே!

* எந்த நெருக்கடியிலும் நிதானம் இழக்காதே. தலைவனின் பதற்றம், அணியையும் தொற்றிக்கொள்ளும். எதையும் எளிமையாக எதிர்கொள்!

* எந்தப் பந்திலும் ஆட்டத்தின் தலை விதி மாறலாம். ஒவ்வொரு பந்துக்கும் வியூகம் அமை!

* வெற்றி மீது ஆசை வை. எப்போதும் 100 சதவிகிதத்துக்கும் மேலான உழைப்பை களத்தில் காட்டு. போட்டியின் முடிவுகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாதே!

* வேகமாக முடிவெடு. எடுத்த முடிவில் நம்பிக்கை வை!

* தவறுகளைத் தைரியமாக ஒப்புக்கொள்!

* தோல்விக்கு நீ மட்டும் பொறுப்பு ஏற்றுக்கொள்; வெற்றிக்கு அணியினரைக் கைகாட்டு!

 

 

உணவு சரித்திரம்

(உணவு சரித்திரம் புத்தகத்துக்கான எனது முன்னுரை)

ருசிக்கும் முன்…
எமக்குத் தொழில் இனி எழுத்து மட்டுமே என்று முடிவெடுத்து முழு நேர எழுத்தாளன் ஆன பிறகு, வரலாற்று நூல்கள் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பிற மொழிகளில் எத்தனையோ வரலாற்று நூல்கள் செழித்துக் கிடக்கின்றன. தமிழில் சரித்திர நாவல்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், வரலாற்று நூல்கள் அவ்வளவாக இல்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அதுவும் ஒரு காரணமே. பயணம் மனத்திருப்தியுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எவை குறித்த வரலாறுகளை வருங்காலத்தில் எழுத வேண்டும் என்று மனத்தினுள் விதைத்திருக்கும் திட்டங்கள் நிறைய. அதில் ஒன்றுதான் உணவின் சரித்திரம் குறித்து விரிவான புத்தகம் எழுதுவது. ஓர் எழுத்தாளனுக்கு, எந்த ஒரு விஷயம் குறித்தும் தொடர்ந்து எழுத, மிகச் சரியான களம் அமைதல் அவசியம். எனக்கு அப்படி அமைந்த களம் – புதிய தலைமுறை குழும சேனல்கள். அவற்றில் ஒளிபரப்பாகி வரும் ‘கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு’ என்ற உணவின் வரலாறும் சமையலும் கலந்த நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சிக்கான ஆய்வு – எழுத்துப் பணியை நான்காவது வருடமாகச் செய்து கொண்டிருக்கிறேன். என் எழுத்தின் மேல் பரிபூரண நம்பிக்கை வைத்து அதற்கான வாய்ப்பு வழங்கிய அமரர். திரு. பாலகைலாசத்துக்கு என் மானசீக நன்றி. நண்பர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி.
எனில், இந்தப் புத்தகம் அந்நிகழ்ச்சியின் எழுத்து வடிவமா? ‘இல்லை’. அந்நிகழ்ச்சிக்காக செய்த ஆய்வு, இந்த நூலை எழுதுவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு உணவினது சரித்திரம் குறித்தும் இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசியிருக்கிறேன். இது ‘முதல் பாகம்’ மட்டுமே. இன்னும் பேசப்பட வேண்டிய வரலாறு ஏராளம். அவை அடுத்தடுத்த பாகங்களில் தொடரும்.
மற்றுமொரு விளக்கத்தையும் வாசகர்கள் முன் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் விறுவிறுப்பும் சுவாரசியமும் எங்கும் குறையாதபடி எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்துவேன். ஆனால், இந்தப் புத்தகம் அந்த வகையில் சேராது. மனத்துக்குப் பிடித்த நபருடன், அற்புதமான சூழலில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மென்மையான இசையோடு, நாவிற்குப் பிடித்தமான உணவு வகைகளை, ரசித்து ருசித்து நிதானமாகச் சாப்பிடும் சுகம் எப்படிப்பட்டதோ, இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனுபவமும் அப்படிப்பட்டதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உணவு சரித்திரம் – அடுத்த பாகத்தில் சந்திப்போம்.
அன்புடன்,
முகில்

புலி வேட்டை

இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.

புலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.

அதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.

மூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.

ஆனால், ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மகாராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.

வேட்டை குறித்த மிரள வைக்கும் புள்ளிவிவரங்கள் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.

(அகம் புறம் அந்தப்புரம் நூலில் இருந்து.)

சென்னை புத்தகக் காட்சி 2015

2015 சென்னை புத்தகக் காட்சி விற்பனை எப்படி?

பொதுவாகக் கிடைக்கும் பதில் : சென்ற வருடம் போல இல்லை. சென்ற வருடத்தைவிடக் குறைவுதான்.

இது வழக்கமான அங்கலாய்ப்பு இல்லை. நான் உணர்ந்த வரையில் நிஜமே. சென்ற வருடத்தைப் போல இந்த வருடமும் கூட்டம் அதிகம் வரத்தான் செய்கிறது. ஆனால், அது புத்தகங்களை வாங்கும் கூட்டமாக இல்லை. குறிப்பாக, காணும் பொங்கல் அன்று விற்பனையாளர்கள் பெருத்த ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறார்கள். அன்று கூட்டம் மிகக்குறைவு. வியாபாரம் வார நாள்களைப் போன்று சாதாரணமாகவே இருந்துள்ளது.

ஏன் விற்பனை குறைந்துள்ளது?

புத்தகங்களின் விலை அதிகம். மக்களைக் கவரக்கூடிய புதிய புத்தகங்கள் எதுவும் பெரிய அளவில் வரவில்லை. இப்படிப் பொத்தாம்பொதுவாக இதற்குக் கருத்து சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டுமென்றால், ‘மோடியின் ஆட்சியில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது’ என்று சொல்லிக் கொள்ளலாம்.

‘ஏற்கெனவே வாங்குனதையே படிக்கல. இந்த வருசம் எதுவும் வாங்கக்கூடாதுன்னு உறுதியா இருக்குறேன்’ என்று பலர் வழக்கமாகச் சொல்வதுண்டு. அந்தப் பலரது  உறுதி எப்போதும் தவிடுபொடியாகிவிடும். இந்த வருடம் அப்படி ஆகவில்லைபோல. அதனால்தான் என்னவோ விற்பனை குறைந்ததாகத் தோன்றுகிறது. ஆனால், கடைசி மூன்று நாள்கள் விற்பனை, இந்தச் சரிவை ஈடுகட்டிவிடும் என்று தோன்றுகிறது. இன்றைக்கு (திங்கள், ஜனவரி 19) வார இறுதிபோல மாபெரும் மக்கள் கூட்டமெல்லாம் இல்லை. ஆனால், வந்த கூட்டம் வாங்கும் கூட்டமாக இருந்தது. விற்பனையாளர்களின் முகத்தில் உற்சாகம் தென்பட்டது. இது அடுத்த இரு தினங்களிலும் நிச்சயம் தொடரும்.

***

இன்றுதான் நான் புத்தகக் காட்சியைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.  ஐந்து மணி நேரம் செலவிட்டு, மூன்று வரிசைகளைக் கூட முழுதாக முடிக்க இயலவில்லை. Ana Books (ஸ்டால் எண் 73,74) என்ற பழைய புத்தகக் கடையில் அதிக நேரம் செலவிட்டேன். ஆங்கில Fiction, NonFiction புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எதை எடுத்தாலும் ரூ. 99. சில புதையல்கள் சிக்கின. மகிழ்ச்சி.

அந்த ஸ்டாலில் நான் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கும்போது ஒரு நீலச்சட்டைக்காரர் ‘Ruskin Bond புத்தகங்கள் ஏதாவது தென்பட்டதா?’ என்று கேட்டார்.  ‘இல்லீங்க. சரியா கவனிக்கலை’ என்றேன். வரலாற்றுப் புத்தகங்களைத் தேடும் நோக்கில் நான் இலக்கியப் புத்தகங்களைச் சரியாகக் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் தேடியதில் Ruskin Bond புத்தகம் ஒன்று தென்பட்டது. எடுத்து அந்த நீலச் சட்டைக்காரரிடம் நீட்டினேன். சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். அதற்குப் பின் அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

அவர்: ‘நீங்க Ruskin Bond படிப்பீங்களா?’

நான்:  ‘இல்லீங்க. படிச்சதில்லை.’

‘என்ன படிப்பீங்க?’

‘ஹிஸ்டரி நிறைய படிப்பேன்.’

(அவரது முகம் அஷ்டகோணலாக மாறியது. அஜீரணக் கோளாறால் வாந்தி எடுப்பதுபோன்ற ஒரு ரியாக்‌ஷனையும் வெளியிட்டார்.)

‘ஹிஸ்டரியா? ஸாரி… எனக்கு சாண்டில்யன் படிச்சா தூக்கம் வரும்ங்க.’

(அவரைப் பொருத்தவரை வரலாற்றுப் புத்தகங்கள் என்றால் சாண்டில்யன்தான் என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டது. என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தார். அது வட துருவம் நோக்கி மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் குறித்த ஒரு வரலாற்றுப் புத்தகம்).

‘இந்த புக் நல்லாருக்குமா?’

‘எனக்கு நல்லாருக்கும். உங்களுக்கு எப்படின்னு தெரியாது.’

‘நீங்க லவ் ஸ்டோரில்லாம் படிக்க மாட்டீங்களா?’

‘தமிழ்ல சிறுகதைகள் படிப்பேன். இங்கிலீஷ்ல இண்ட்ரெஸ்ட் இல்ல…’

‘ஹிஸ்டரிலாம் எப்படித்தான் படிக்கிறீங்களோ… என்னமோ போங்க… ’ என்று சொல்லிவிட்டு பில் போட நகர்ந்தார்.

***

கவிதா பப்ளிகேஷனில் சிவன் என்பவர் எழுதிய ‘நமது சினிமா (1912 -2012)’ என்று சினிமா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். பெரிய புத்தகம்தான். ஆண்டு வாரியாக சினிமா குறித்த புள்ளிவிவரங்களை, தகவல்களை அறிய விரும்புபவர்களுக்கு நல்ல புத்தகமாக இருக்கும். கவிதாவில் வாண்டு மாமா புத்தகங்கள் தொகுப்புகளாக நல்ல தரத்தில் வெளிவந்துள்ளன. தவற விடாதீர்கள்.

***

நண்பர்களுடன், புத்தகக் காட்சியில் மட்டும் வருடந்தோறும் சந்திக்கும் நண்பர்களுடன் உரையாடினேன். முகநூல் மூலமாக அறிமுகமான நண்பர்களை இந்த வருடம் அதிக அளவில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அடுத்த இரு தினங்களிலும் புத்தகக் காட்சியில்தான் இருப்பேன். மற்ற வரிசைகளைப் பார்த்து நூல்களை வாங்குவதில்தான் அதிக நேரம் செலவிட இருக்கிறேன். ஓய்வுக்காக, சிக்ஸ்த்சென்ஸிலும் (411), கிழக்கிலும் (635) கொஞ்ச நேரம் இருப்பேன்.

சொல்ல மறந்துவிட்டேன். (பெயர் வெளியிட விரும்பாத) எழுத்தாளர் + நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் வெளியான அவரது புத்தகம் சரியான வரவேற்பைப் பெறாததில், அவரது புத்தகம் எந்தவித சர்ச்சையிலும் சிக்காகதில் அவருக்கு ஏக வருத்தம். அடுத்த புத்தகக் காட்சிக்குக் கவனம் பெறும் வகையில் பளிச் தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியிடச் சொல்லி யோசனை சொன்னேன்.

அந்தத் தலைப்பு : ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை எரிக்காதீங்க!