உணவு சரித்திரம்

(உணவு சரித்திரம் புத்தகத்துக்கான எனது முன்னுரை)

ருசிக்கும் முன்…
எமக்குத் தொழில் இனி எழுத்து மட்டுமே என்று முடிவெடுத்து முழு நேர எழுத்தாளன் ஆன பிறகு, வரலாற்று நூல்கள் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பிற மொழிகளில் எத்தனையோ வரலாற்று நூல்கள் செழித்துக் கிடக்கின்றன. தமிழில் சரித்திர நாவல்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், வரலாற்று நூல்கள் அவ்வளவாக இல்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அதுவும் ஒரு காரணமே. பயணம் மனத்திருப்தியுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எவை குறித்த வரலாறுகளை வருங்காலத்தில் எழுத வேண்டும் என்று மனத்தினுள் விதைத்திருக்கும் திட்டங்கள் நிறைய. அதில் ஒன்றுதான் உணவின் சரித்திரம் குறித்து விரிவான புத்தகம் எழுதுவது. ஓர் எழுத்தாளனுக்கு, எந்த ஒரு விஷயம் குறித்தும் தொடர்ந்து எழுத, மிகச் சரியான களம் அமைதல் அவசியம். எனக்கு அப்படி அமைந்த களம் – புதிய தலைமுறை குழும சேனல்கள். அவற்றில் ஒளிபரப்பாகி வரும் ‘கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு’ என்ற உணவின் வரலாறும் சமையலும் கலந்த நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சிக்கான ஆய்வு – எழுத்துப் பணியை நான்காவது வருடமாகச் செய்து கொண்டிருக்கிறேன். என் எழுத்தின் மேல் பரிபூரண நம்பிக்கை வைத்து அதற்கான வாய்ப்பு வழங்கிய அமரர். திரு. பாலகைலாசத்துக்கு என் மானசீக நன்றி. நண்பர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி.
எனில், இந்தப் புத்தகம் அந்நிகழ்ச்சியின் எழுத்து வடிவமா? ‘இல்லை’. அந்நிகழ்ச்சிக்காக செய்த ஆய்வு, இந்த நூலை எழுதுவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு உணவினது சரித்திரம் குறித்தும் இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசியிருக்கிறேன். இது ‘முதல் பாகம்’ மட்டுமே. இன்னும் பேசப்பட வேண்டிய வரலாறு ஏராளம். அவை அடுத்தடுத்த பாகங்களில் தொடரும்.
மற்றுமொரு விளக்கத்தையும் வாசகர்கள் முன் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் விறுவிறுப்பும் சுவாரசியமும் எங்கும் குறையாதபடி எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்துவேன். ஆனால், இந்தப் புத்தகம் அந்த வகையில் சேராது. மனத்துக்குப் பிடித்த நபருடன், அற்புதமான சூழலில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மென்மையான இசையோடு, நாவிற்குப் பிடித்தமான உணவு வகைகளை, ரசித்து ருசித்து நிதானமாகச் சாப்பிடும் சுகம் எப்படிப்பட்டதோ, இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனுபவமும் அப்படிப்பட்டதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உணவு சரித்திரம் – அடுத்த பாகத்தில் சந்திப்போம்.
அன்புடன்,
முகில்