கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு கொஞ்சம் நான்…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சிக்காக ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்று (31 மார்ச், சனி) ஒளிபரப்பாகவிருக்கும் அல்வாவின் வரலாறு, எனக்கு முதல் எபிசோட்.

நிகழ்ச்சி ஒவ்வொரு சனி இரவும் 8.30க்கு ஒளிபரப்பாகும். ஞாயிறு காலை 8.30க்கு மறு ஒளிபரப்பு.

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

தலைநகரம் ‘100′

ஒரு சதுர மைல் என்றால் 640 ஏக்கர். இருபத்தெட்டு சதுர மைல் என்றால்? பெருக்கினால் கால்குலேட்டர் காட்டும் எண் 17920 ஏக்கர். 1911ல் டெல்லியில் நடக்கவிருந்த தர்பாருக்காக அவ்வளவு பெரிய நிலம் ஒதுக்கப்பட்டது.

எதற்காக என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக, தர்பார் என்றால் என்ன என்று பார்த்துவிடலாம்.

தர்பார் என்பது பெர்சிய மொழிச்சொல். அரசவை என்று சொல்லலாம். தர்பாரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் முகலாயர்கள். மாபெரும் சபைதனில் அரசர் தலைமையில் கூடுவார்கள். பொதுவாக அரசரைப் புகழ்ச்சியால் சொறிந்து விடுவார்கள். விருந்தினரைச் சந்திப்பார்கள். ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வுகள் என்றால் கேளிக்கையாகக் கொண்டாடுவார்கள். வியாபார விஷயங்களைப் பேசுவார்கள். அவ்வப்போது மக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது நிறைவேற்றப்படுவதும் உண்டு.

பிரிட்டிஷார், தங்களை இந்திய மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக, இந்த தர்பார் கலாசாரத்தைத் தாங்களும் பின்பற்ற நினைத்தார்கள். மகிழ்ச்சியான விஷயங்களைக் கொண்டாடுவதற்கு மட்டும் இந்தியாவில் தர்பாரைக் கூட்டலாம் என்று முடிவெடுத்தார்கள். 1877, ஜனவரி 1 அன்று, பிரிட்டிஷாரின் முதல் இந்திய தர்பார் டெல்லியில் கூடியது. இந்தியாவின் பேரரசியாக குயின் விக்டோரியா அறிவிக்கப்பட்டார். தர்பாரில் பல மகாராஜாக்களும், சில ராஜாக்களும் கலந்து கொண்டு அந்த நிகழ்வைக் கொண்டாடினார்கள்.

1903ன் ஆரம்பத்தில் வைஸ்ராய் கர்ஸன், இரண்டாவது தர்பாரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கிங்காக ஏழாம் எட்வர்டும், குயினாக அலெக்ஸாண்ட்ராவும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை டெல்லிக்கு வரவழைத்து இங்கொரு பதவியேற்பு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் கர்ஸன்.

ஆனால், கிங் ஏழாம் எட்வர்டும் தர்பாருக்கு வராமல் அல்வா கொடுக்க, கர்ஸன் நொந்து போனார். எட்வர்ட்டுக்குப் பதிலாக அவரது சகோதரர் இளவரசர் ஆர்தர் வந்தார். தர்பார் ஒப்புக்கு நடந்தது.

1911ல் அடுத்த தர்பாரைக் கூட்டுவதற்கான சூழ்நிலை வந்தது. புதிய கிங்காக ஐந்தாம் ஜார்ஜும், குயினாக மேரியும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை இந்தியாவின் பேரரசராக, பேரரசியாக அறிவிக்க வேண்டுமல்லவா. எவ்வளவு கொண்டாட்டமான விஷயம் அது. யாரங்கே, டெல்லியில் அடுத்த பிரம்மாண்டமான பிரிட்டிஷ் தர்பாரைக் கூட்டுவதற்கு ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

அணிவகுப்பு மரியாதை

அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக ஹார்டிங் (ஏச்ணூஞீடிணஞ்ஞு) இருந்தார். கிங்கின் இந்தியப் பிரதிநிதியாக பொறுப்பில் இருந்த அவர், ஐந்தாம் ஜார்ஜுக்குப் பெரிய அளவில் மரியாதை செய்து தன் ‘ராஜ விசுவாசத்தை’ அரங்கேற்ற நினைத்தார். 1911, டிசம்பரில் தர்பாருக்கான நாள் குறிக்கப்பட்டது. அந்த ஜனவரியிலிருந்தே அதற்கான வேலைகள் ஜரூராக நடக்க ஆரம்பித்தன.

டெல்லியின் வடக்குப் பகுதியில் மாபெரும் நிலம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முதலிலேயே பார்த்தோமே, 17920 ஏக்கர். அப்போதுதான் அங்கு மக்காச்சோள அறுவடை முடிந்திருந்தது. அந்த விளைநிலத்தைச் சமப்படுத்தும் வேலைகள் ஆரம்பமாயின. எங்கெங்கு என்னென்ன எப்படியெப்படி அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த வரைபடமும் தயாரானது.

தேவையான இடங்களில் தற்காலிகப் பாதைகள் அமைக்கப்பட்டன. நாற்பது மைல்களுக்கு தார்ச்சாலை போடப்பட்டது. அடுத்ததாக இருப்புப் பாதைகள் முளைக்க ஆரம்பித்தன. பதினாறு குட்டி ரயில் நிலையங்கள் தோன்றின. தேவையான பொருள்களை ஏற்றிக் கொண்டு ரயில்கள் வர ஆரம்பித்தன.

கிங் ஜார்ஜ் தங்குவதற்காகவும், பதவியேற்பு விழா மேடைக்காகவும் தனியாக மையப்பகுதியில் எண்பத்து மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதைச் சுற்றிலும் 233 இடங்களில் தனித்தனியே முகாம்கள் அமைப்பதற்காகத் திட்டமிட்டிருந்தார்கள். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரிட்டிஷ் விருந்தாளிகளும், இந்தியாவிலுள்ள அனைத்து சமஸ்தான மகாராஜாக்களும் ராஜாக்களும் குட்டி ராஜாக்களும் தங்குவதற்காக அந்த முகாம்கள்.

அதிலும் ஹைதராபாத், மைசூர், பரோடா போன்ற இருபத்தொரு குண்டு மரியாதை கொண்ட பெரிய சமஸ்தான மகாராஜாக்களுக்குரிய முகாம்கள் என்பது சற்றே பெரியதாக, கிங் முகாமுக்கு அருகிலேயே இருப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல தரம் வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான கூலியாள்கள், கூடாரங்கள் அமைப்பதற்காக வெட்டவெளி மொட்டை வெயிலில் உழைத்தார்கள்.

ஒவ்வொரு மகாராஜாவும் தங்களுக்குரிய முகாமில் தேவையான வசதிகளைச் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ‘ஆளுயரக் கண்ணாடியால் கூடாரம் நிறைந்திருக்க வேண்டுமா? அமைச்சுக்கோ. கூடாரத்துக்குள்ளேயே ரோல்ஸ்-ராய்ஸ் வந்து செல்ல வேண்டுமா? ஓட்டிக்கோ. தங்கத்தாலான டாய்லெட்டில் இரண்டுக்குச் சென்று பழக்கமா? போய்க்கோ.’ இவைதவிர மகாராஜாக்கள், தங்கள் சொந்த உபயோகத்திற்காக குதிரைகள், யானைகள், கார்கள் எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

எல்லா இடங்களிலும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் மின் கம்பங்கள். அதுபோக முகாமுக்கு முகாம் தனித்தனியே விளக்குகள், அலங்கார விளக்குகள். தர்பார் நடக்கவிருந்த காலம் குளிர்காலம் என்பதால் கிங்கின் கூடாரத்தில் மட்டும் மின்சார ஹீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மற்றவர்கள் குளிர்காய, மார்பிள்களாலான கணப்பு அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மூலைக்கு மூலை தண்ணீர் வசதி. பைப்பைத் திறந்தால், ஷவரைத் திறந்தால் தண்ணீர் சொய்ங்!

பதவியேற்பு விழாவுக்கான மேடை தனியாக பல ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்தது. நடுவில் ஓர் உயரமான மண்டபம். அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட தங்க நிற டூம். மண்டபத்தைச் சுற்றி ஷாமியானா. பல்வேறு அலங்காரங்கள். அந்த நவம்பரின் மத்தியில் விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்திருந்தன.

நவம்பரின் இறுதி வாரத்தில் இந்தியாவே டெல்லியை நோக்கி நகருவது போலொரு உணர்வு. எல்லா சமஸ்தானங்களிலிருந்தும் மகாராஜாக்களும் ராஜாக்களும் மற்றவர்களும் விழாவில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். மாடு, குதிரை, யானை வண்டிகள் முதல் மோட்டார் வண்டிகள் வரை சக்கரங்கள் கிளப்பிய செம்மண் புழுதியில் டெல்லி சிவந்தது.

கிங்கும் குயினும் படு அமர்க்களமான வரவேற்புடன் இந்தியாவுக்கு வந்திறங்கினார்கள். பம்பாய்க்கும், அப்போதைய தலைநகரமான கல்கத்தாவுக்கெல்லாம் சென்றுவிட்டு, டிசம்பர் 7 அன்று பதவியேற்பு முகாமுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். வைஸ்ராய் ஹார்டிங்கின் ஏற்பாடுகளைக் கண்டு மனம் குளிர்ந்தார்கள்.

அடுத்த இரண்டு நாள்களில் பூமியும் குளிர்ந்தது. பருவம் தப்பி வந்த மழை. மிஸ்டர். வருணன் வந்து விளையாட்டிவிட்டுப் போனார். பல மாதங்கள் பாடுபட்டு செய்த ஏற்பாடுகள் எல்லாம் பாழ். குறிப்பாக போட்டு வைத்திருந்த இருப்புப்பாதையில் பாதி காணாமல் போயிருந்தது. பல கூடாரங்கள் பிய்ந்து தொங்கின. விழா மேடை அலங்காரங்கள் உள்பட அனைத்தும் சர்வ நாசம். விழா நடப்பது சந்தேகம்தான், கிங் கிளம்பிவிடுவார் என்று பேச்சுகள் எழ ஆரம்பித்தன.

வைஸ்ராய் ஹார்டிங், தவிதவித்துப் போனார். விழாவுக்கு மூன்றே நாள்கள்தான் பாக்கியிருந்தன. ஆயிரக்கான கூலி ஆள்களையும், ராணுவ வீரர்களையும் முடுக்கி விட்டார். ‘எல்லாத்தையும் சரி பண்ணுங்க. ஒரு சொட்டுத் தண்ணிகூட உள்ள தேங்கி இருக்கக்கூடாது. எல்லாம் மழைக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ, அதேமாதிரி ஆகிடணும். கமான் குவிக்.’ கிட்டத்தட்ட மிரட்டத்தான் செய்தார். டிசம்பர் 12ல் தர்பார். அதற்கு முந்தைய நாளே எல்லாம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. வருணன் ரீ-என்ட்ரி கொடுத்துவிடுவாரோ என்று பயந்து ஹார்டிங் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார். வானம் பொய்த்துவிட்டது.

இங்கிலாந்து அரச பரம்பரையில் அதுவரை முடிசூட்டு விழா என்பது லண்டனில் மட்டும்தான் நடைபெற்றுவந்தது. ஜார்ஜும் 1911, ஜூன் 22ல் லண்டனில் முடிசூட்டிக் கொண்டார். ஆனால் இந்தியாவின் பேரரசராக இங்கு டெல்லி தர்பாரிலும் தனியாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். அவரது விருப்பத்துக்காக ராஜ பரம்பரை விதிகள் தளர்த்தப்பட்டன. ஜார்ஜுக்காகப் புதிய கீரிடம் ஒன்றைத் தயார் செய்யப்பட்டது.

லண்டனின் பிரபல நகை நிறுவனமான Garrard & Coவினர் தயாரித்த அந்த கீரிடத்தின் மதிப்பு அறுபதாயிரம் பவுண்ட், எடை சுமார் ஒரு கிலோ. 6100 சிறிய வைரக்கற்களோடு, மரகதம், ரத்தினம், நீலக் கற்களும் பதிக்கப்பட்ட அந்தக் கீரிடத்துக்கு வைக்கப்பட்ட பெயர், Imperial Crown of India. டெல்லி தர்பாருக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் ஜார்ஜுக்கு ஒரு விஷயம் உறுத்த ஆரம்பித்தது.

இந்தியா, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிறைந்த நாடு. அங்கு சென்று கிறிஸ்துவ மத முறைப்படி முடிசூட்டிக் கொள்வது முறையல்ல. வேறென்ன, செய்யலாம்?

ஒன்றும் செய்ய முடியாது. முடிசூடும் நாளும் வந்தது. 1911 டிசம்பர் 12, காலை நேரம். எந்தவித சடங்குகளும் இன்றி, கிங் ஐந்தாம் ஜார்ஜ் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார்*. குயின் மேரியோடு தர்பாருக்குக் கிளம்பினார்.

(* அந்தக் கீரிடத்தின் எடை அதிகமாக இருந்தது. ‘தலை வலிக்குதுப்பா’ என்று எரிச்சலடைந்தார் ஜார்ஜ். தர்பார் நிகழ்வுகளுக்குப் பின் ஜார்ஜ், மீண்டும் அந்தக் கீரிடத்தை அணியவில்லை. அவருக்குப் பின்னும் யாரும் அதை அணியவில்லை. Imperial Crown of India – இப்போது லண்டன் டவரில் ஜுவல் ஹவுஸில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.)

நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட, தங்கநிற பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற சாரட் ஒன்று காத்திருந்தது. கூண்டுள்ள வண்டி அது. ஜார்ஜும் மேரியும் ஏறி அமர்ந்தார்கள். குதிரைப்படை வீரர்கள் முன்னே அணிவகுக்க, தர்பார் மண்டபத்தை நோக்கி சாரட் நகர்ந்தது.

மகாராஜாக்கள், ராஜாக்கள், குட்டி ராஜாக்கள், ஐரோப்பிய விருந்தினர்கள், இந்திய பிரிட்டிஷ் அதிகாரிகள் என்று எல்லோருமே தங்களுக்காக ‘தரம் பிரித்து ஒதுக்கப்பட்ட’ இருக்கைகளில் கிங்குக்காகக் காத்திருந்தார்கள். மண்டபத்தின் முன் அரசுப் படை வீரர்கள் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றார்கள். அந்த மைதானத்தில் பல சமஸ்தானங்களைச் சேர்ந்த வீரர்கள் வியர்வை வழிய வழிய வரிசை கட்டி நின்றார்கள். டெல்லி, பஞ்சாப் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ‘வரவழைக்கப்பட்டிருந்தார்கள்’. எனவே கூட்டம் ஓஹோ!

சாரட், தர்பார் மண்டபத்தின் அருகில் வந்து நின்றது. அந்த மாபெரும் மைதானமே எழுந்து நின்றது. தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட கிங்கும் குயினும் இறங்கி மண்டபத்திலுள்ள சிம்மாசனங்களை நோக்கி நடந்தார்கள். சிறுவர்களும் வால்போல. கிங்குக்குரிய மரியாதை பதவியேற்பு மரியாதையாக நூற்றியொரு முறை துப்பாக்கி குண்டுகள் முழங்கின. பிரிட்டிஷ் ராஜ பரம்பரைக் கொடி ஏற்றப்பட்டது. God Save the King – வாழ்த்துகள் ஒலித்தன. முரசொலி முழங்கியது. பிரிட்டிஷாரின் மூன்றாவது டெல்லி தர்பார் இனிதே ஆரம்பமானது.

அடுத்த நிகழ்ச்சி என்ன? ஒவ்வொரு மகாராஜாவாக தர்பார் மண்டபத்துக்கு வந்து கிங்குக்கும் குயினுக்கும் மரியாதை செய்ய வேண்டும். அதாவது சிரம் தாழ்த்தி வணக்கம் வைக்க வேண்டும் என்று முன்பாகவே வைஸ்ராய் ஹார்டிங்கிடமிருந்து எல்லா மகாராஜாக்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் இருபத்தியொரு குண்டு மரியாதை கொண்ட ஹைதராபாத், பரோடா, குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்களுக்கு உடன்பாடு இல்லை.

நாங்களும் மாபெரும் சமஸ்தானத்தின் மகாராஜாக்கள்தான். கிங் போலவே எங்களுக்கும் மரியாதை அதிகம்தான். நாங்கள் ஏன் கிங்குக்கு குனிந்து வணக்கம் வைக்க வேண்டும்? பரோடாவின் மகாராஜா சாயாஜி ராவுக்கு மட்டுமே இப்படி கேட்கும் தைரியம் இருந்தது. ஆனால் நேரடியாகக் கேட்காமல் நாகரிகமாக ஒரு கடிதம் எழுதி வைஸ்ராய்க்கு அனுப்பினார். ‘ஒரு வேண்டுகோள். எல்லா மகாராஜாக்களும் மரியாதை செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக, சிறிய சமஸ்தான மகாராஜாக்கள் மட்டும் கிங்குக்கு வணக்கம் வைக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் மாற்றம் செய்யலாமே.’

பரோடா மகாராஜா

ஆனால் சாயாஜி ராவின் அந்த வேண்டுகோள் கண்டுகொள்ளப்படவில்லை. தர்பாருக்கு வந்த மகாராஜாக்களுக்கு ‘கிங்குக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும்’ என்று வகுப்பு எடுக்கப்பட்டது. ஒத்திகை செய்தும் காண்பிக்கப்பட்டது. அதாவது கிங்குக்கு முன் சென்று நின்று மூன்று முறை குனிந்து வணக்கம் வைக்க வேண்டும். கையோடு எடுத்து சென்றிருக்கும் பரிசுப் பொருள்களைக் கொடுத்து கௌரவிக்க வேண்டும். பின்பு முதுகைக் காட்டாமல் அப்படியே ரிவர்ஸ் கியரில் கொஞ்ச தூரத்துக்கு கீழே விழாமல் வந்தபின்பே திரும்பிச் செல்ல வேண்டும். சாயாஜி ராவின் கவனத்துக்கு இந்த விதிமுறைகள் எல்லாம் வரவில்லை. அவருக்கு ஒத்திகை பற்றியும் எதுவும் தெரியாது.

தர்பாரில் மரியாதை செய்யும் படலம் ஆரம்பமானது. இந்தியாவின் மிகவும் உயரிய, செல்வாக்கு மிகுந்த சமஸ்தானமான ஹைதராபாத்தின் நிஜாமுக்கு முதல் மரியாதை. அதாவது அவர்தான் முதலில் கிங்குக்கு நலுங்கு செய்ய அழைக்கப்பட்டார். அப்போதுதான் ஹைதராபாத்தின் நிஜாமாகப் பதவியேற்றிருந்த கஞ்ச மகாபிரபு ஒஸ்மான் அலிகான், கிங்கை நோக்கி வந்தார். முறைப்படி மூன்று முறை குனிந்து வணக்கம் வைத்தார். அரை மனத்துடன் மரகத நெக்லெஸ் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துவிட்டு ரிவர்ஸ் கியரில் கிளம்பினார்.

அடுத்த மரியாதைக்குரியவர் பரோடா மகாராஜாதான். தர்பாருக்காக வந்திருந்த மகாராஜாக்களெல்லாம் உற்சவர் போல ஏகப்பட்ட நகைகளைச் சாத்திக் கொண்டு வந்திருந்தார்கள். படு ஆரம்பரமான உடை வேறு. எல்லோரும் பலவித கற்கள் பதிக்கப்பட்ட உடைவாள் வைத்திருந்தார்கள். ஆனால் மற்றவர்களைவிட சாயாஜி ராவ் மிக எளிமையாக வந்திருந்தார்.

குஜராத் பாணி வெள்ளை நிற பட்டுடை. தலைப்பாகை. சின்னதாக ஒரு வைரப்பதக்கம். கழுத்தில் ஒரு முத்துமாலை. அதைக்கூட திடீரெனத் தன் மகனுக்கு அணிவித்துவிட்டார். அவர் இடையில் உடை வாள் இல்லை. தங்கக் கைப்பிடி உடைய கைத்தடி ஒன்றை எடுத்துக் கொண்டு கிங்கை நோக்கிச் சென்றார். தனக்கு முன் சென்ற நிஜாம் எப்படி மரியாதை செய்தார் என்றெல்லாம் சாயாஜி ராவ் கவனிக்கவில்லை.

கிங் முன் சென்று நின்றார். ஒருமுறை குனிந்து வணக்கம் வைத்தார். நகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். பின் முதுகைக் காட்டியபடி திரும்பி வந்துவிட்டார். வைஸ்ராய் ஹார்டிங்குக்குக் காதில் புகை. நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சாயாஜி ராவ், கிங்கை அவமானப்படுத்திவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் எதுவும் அறியாதவராக தன் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார் சாயாஜி ராவ்.

அடுத்ததாக குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்கள் மரியாதை செய்தார்கள். அதற்குப் பின் ரேங்க் வாரியாக. அவ்வளவு ஆடம்பரமான உடைகளுடன், நகைகளுடன் மகாராஜாக்கள் கேட் வாக் சென்றதைப் பார்க்கும்போது பேஷன் ஷோ போலத்தான் இருந்தது. பன்னா என்ற சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா, கிங்கின் அரியணை மேல் சொருகி வைத்துக் கொள்ள 12 இன்ச் விட்டமுள்ள, ரத்தினக் குடை ஒன்றைக் கொடுத்தார். இப்படி விதவிதமான பரிசுகள் குவிந்து கொண்டிருந்தன.

கிங்குக்கு மரியாதை

அடுத்ததாக இந்தூர் மகாராஜா திகோஜி ராவ் கிங்கை நோக்கி புயல் வேகத்தில் கிளம்பினார். தங்க, வெள்ளி பட்டைகளுடன் கூடிய பட்டுடை. உடலெங்கும் ஆபரணங்கள். இடையில் வாள். அதுபோக கையில் தங்கத்தலான, மரகதக் கல் கைப்பிடி கொண்ட கைத்தடி வேறு. அவ்வளவு உபரி எடையையும் சுமந்து கொண்டு, அந்தப் பளபளா தரையில் கால் பதித்த திகோஜி ராவ், தத்தக்கா பித்தக்காவெனத் தடுமாறி விழுந்தார். கைத்தடி ரெண்டு துண்டாகிப் போனது. நான்கைந்து பணியாளர்கள் வந்து அவரைத் தூக்கிவிடும்படி ஆகிவிட்டது. அதற்குப் பின் திகோஜி, தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு, வெகு ஜாக்கிரதையாக நடந்து சென்று கிங்குக்கு கும்பிடு போட்டார்.

இப்படி ஒவ்வொருத்தராக வந்து குனிந்து நிமிர்ந்து சென்று கொண்டே இருக்க, நீண்ட நேரத்துக்கு அசுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தது தர்பார். சில சின்ன ராஜாக்கள், கிங்குக்கு கும்புடு போட ஆர்வம் காட்டினார்கள். ஆனால் தகுதியைக் காரணம் காட்டி, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தியாவின் அப்போதைய தலைநகரம் கல்கத்தா. அது இந்தியாவின் கிழக்கு மூலையில் இருந்தது. எனவே இந்தியாவின் மையத்திலுள்ள டெல்லியைத் தலைநகரமாக வைத்துக் கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்திருந்தது. அந்த தர்பாரில் ஐந்தாம் ஜார்ஜ் அந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

‘இனி இந்தியாவின் தலைநகரமாக டெல்லி செயல்படும்.’

இன்றோடு நூறாண்டுகள் கழிந்துவிட்டன.

மயிலாப்பூரில் மார்க்கோ போலோ!

‘தன்னைத் தானே பலி கொடுக்கத் துணிந்த மாவீரன்!’

இந்தக் கோஷம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. அழகாக வடிவமைக்கப்பட்ட தேர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் நடுநாயகமாக ஒருவன் அமர்ந்திருந்தான். பார்த்தால் அரசன் போலவோ, முக்கிய அமைச்சர் போலவோ, வசதிமிகுந்த செல்வந்தன் போலவோ தெரியவில்லை. சாதாரணமான ஆள்தான். அவன் கையில் கத்திகளை ஏந்தியிருந்தான். பலரும் ஒன்றுகூடி அந்தத் தேரை வீதி வீதியாக இழுத்துச் சென்றார்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மார்க்கோ போலோவுக்கு அவர்கள் எழுப்பிய அந்த கோஷத்துக்கான அர்த்தம் விளங்கவில்லை. விசாரித்தார்.

அவன் ஒரு குற்றவாளி. அவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள். இங்கே மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், இஷ்ட தெய்வத்துக்குத் தம்மைப் பலி கொடுக்குமாறு விண்ணப்பம் வைக்கலாம். அதற்கான அனுமதி கிடைத்தால், குற்றவாளியின் சொந்த பந்தங்கள் அவனை இதுபோல தேரில் வைத்து நகரம் முழுவதும் ஊர்வலம் கொண்டு செல்வார்கள். தெய்வத்துக்காக, தன்னைத் தானே பலி கொடுக்க முன்வந்த அவனை வாழ்த்தி கோஷமிடுவார்கள். அவன் கையில் பன்னிரண்டு கூரிய கத்திகள் வழங்கப்பட்டிருக்கும். தேர், பலி பீடத்துக்குச் சென்றதும் குற்றவாளியே முதலில் இரு கத்திகளால் தன் தொடைகள் இரண்டில் குத்திக் கொள்வான். வலிமிகுதியில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அலறுவான். பின் உடலில் பிற பாகங்களில் மற்ற கத்திகளை இறக்க ஆரம்பிப்பான். பேரலறலோடு பன்னிரண்டாவது கத்தியை இதயத்தில் இறக்கி, இறந்து போவான்.

பின் சொந்த பந்தங்களால் அவனது உடல், தகனம் செய்ய எடுத்துச் செல்லப்படும். தகன நெருப்பில் அவனது மனைவியும் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்
(சதி). அப்படி நெருப்பில் இறங்க மறுப்பவளை, எல்லோரும் திட்டுவார்கள். அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளிவிட்டு விடுவார்கள். கணவனுக்காக மனைவி மட்டுமல்ல, அரசன் இறந்தால் அவருக்கு நெருக்கமான சில நூறு வீரர்களும் இதுபோல நெருப்பில் விழுந்து இறக்க வேண்டும். இவ்வாறு நெருப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களுடைய மறுபிறப்பில் அவர்களுடனேயே பிறந்து பணிவிடை செய்வார்கள் என்பது இங்குள்ள நம்பிக்கை.

அன்றைய தமிழகத்தில் நடைமுறையில் இருந்த இதுபோன்ற சில விஷயங்களைக் கண்டு, வெலவெலத்துப் போனார் மார்க்கோ போலோ. அதே சமயம் இன்னொரு விஷயம் அவரை ஆச்சரியப்படுத்தியது. அது தமிழர்களின் சுத்தம். ‘இங்குள்ளவர்கள் தினமும் இருவேளை குளிக்கிறார்கள். குளித்த பின்பே உணவருந்துகிறார்கள். அதுவும் வலக்கையால் மட்டும். இடது கையை உடலின் மறைவு உறுப்புகளைச் சுத்தம் செய்யவும், மற்ற விரும்பத்தகாத வேலைகள் செய்ய மட்டுமே உபயோகிக்கிறார்கள். குவளைகளில் உதடுகளை வைத்து உறிஞ்சி நீரை அருந்துவதில்லை. தலைக்கு மேலே உயர்த்தி வாயினுள் ஊற்றுகிறார்கள். அந்நியர்களுக்குத் தம் குவளைகளில் நீர் கொடுக்க மறுக்கிறார்கள். பதிலாக அவர்களுடைய பாத்திரங்களிலோ, கைகளைக் குவிக்க வைத்தோ நீரை ஊற்றுகிறார்கள்.’

வெத்தலையைப் போட்டேன்டி.. புத்தி கொஞ்சம் மாறுதடி என்பதுபோல ரசித்து ரசித்து ‘தாம்பூலம்’ குறித்து எழுதி வைத்துள்ளார் மார்க்கோ போலோ. பொதுவாக அனைவருமே ஒருவகை பச்சை இலையோடு, வாசனை பொருள்கள், கற்பூரம், நீர்த்த சுண்ணாம்பு சேர்த்து மென்றபடி இருக்கிறார்கள். அது புத்துணர்வு கொடுப்பதோடு உடல் நலத்திற்கும் நன்மை செய்கிறது. அவ்வப்போது அதன் மூலம் சுரக்கும் எச்சிலைத் துப்புகிறார்கள். எதிரியை அவமானத்தப்படுத்த வேண்டுமென்றால், அந்நபரைத் தேடிச் சென்று முகத்திலேயே உமிழ்கிறார்கள். அவமானப்படுத்தப்பட்ட நபர் அரசரிடம் சென்று முறையிடலாம். அரசர், சம்பந்தப்பட்ட இருவரையும் வரவழைத்து கையில் வாள், கேடயத்தை வழங்குவார். மைதானத்தில் இருவரும் போரிட ஆரம்பிப்பார்கள். மக்கள் ஆர்ப்பரிக்க, ‘சபாஷ் சரியான போட்டி’ என்று அரசர் மகிழ, இருவரில் யாராவது ஒருவர் கொல்லப்படும்வரை சண்டை தொடரும்.

தமிழகத்தில் மார்க்கோ போலோ சுற்றிய இடங்களில் முக்கியமானது மயிலாப்பூர். இந்தியா முழுவதும் பரவியுள்ள பிராமணர்களின் பூர்விக இடம் அதுதான் என்கிறார். தோள் வழியே மார்பின் முன்பும் முதுகுக்குப் பின்பும் தொங்கும் பருமனான ஒரு பருத்தி நூலை வைத்து அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கண்டுகொள்ளலாம். அவர்கள் நேர்மையானவர்கள். வெளி வியாபாரிகள், புதியவர்கள் அவர்களை நம்பி பொருள்களை ஒப்படைத்தால் அதை நல்ல முறையில் வியாபாரம் செய்து முறையாக கணக்கை ஒப்படைப்பார்கள். வெளியே கிளம்பும்போது ஏதாவது விஷச் சிலந்தி கண்ணில் தென்பட்டால் அது எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதைப் பார்த்து அதற்கேற்ப வியாபார முடிவுகளை எடுப்பார்கள். அதேபோல வெளியே கிளம்பும் சமயத்தில் யாராவது தும்மிவிட்டால் அவ்வளவுதான். வேலையைக் கைவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று விடுவார்கள்.

மார்க்கோ போலோ மயிலை கபாலீஸ்வரரைத் தரிசித்தாரா, தெப்பக்குளத்தில் முதுகு தேய்த்துக் குளித்தாரா, கற்பகாம்பாள் மெஸ்ஸில் மெதுவடை சாப்பிட்டாரா என்றெல்லாம் தெரியவில்லை. அப்படியே மயிலையிலிருந்து பொடிநடையாக சாந்தோம் புனித தாமஸ் தேவாலயத்துக்குச் சென்றிருக்கிறார் என்பது மட்டும் அவரது குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

தாமஸ், இந்துக்களால் கொல்லப்பட்டார், எதிரிகளால் கொல்லப்பட்டார் என்று ஏகப்பட்ட சர்ச்சைகள் உண்டு. ஆனால் மார்க்கோ போலோ, அதுகுறித்த வேறொரு தகவலை எழுதி வைத்துள்ளார். இயேசுவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவரான தாமஸ், கி.பி. 72 சமயத்தில் சென்னை, சின்ன மலை (Little Mount) பகுதிக்கு வந்துள்ளார். அங்கே மயில்கள் அதிகம். கௌவி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவன், மயிலை வேட்டையாட ஈட்டி ஒன்றை எறிய, அது தாமஸைத் தாக்கியது. அவர் ஆண்டவருக்கு நன்றி சொன்னபடியே இறந்தார். அவரது உடல் மயிலையில்தான் அடக்கம் செய்யப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் அந்த இடத்தில் சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டது.

அந்த ஆலயத்தில் புனித தாமஸின் கல்லறையைத் தரிசித்ததாக மார்க்கோ போலோ குறிப்பிட்டுள்ளார். அது கி.பி. 1292 சமயத்தில் இருந்திருக்கலாம். (பின் பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் அங்கே பெரிய ஆலயத்தை எழுப்பியுள்ளனர். காலப்போக்கில் அது சிதைந்து போனது. தற்போதுள்ள சாந்தோம் தேவாலயம், 1893ல் பிரிட்டிஷாரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது என்பதெல்லாம் உபரி விஷயங்கள்.)

கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும், புனித தாமஸ் கொல்லப்பட்ட தலத்திற்குப் பாதயாத்திரையாக வருவதை மார்க்கோ போலோ கண்டார். செந்நிறமாக அங்கே காணப்படும் மண்ணை பயபக்தியுடன் அள்ளிக் கொண்டு சென்றார்கள். எதற்கு என்று விசாரித்தார். ‘நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இந்த மண்ணை நீரில் கலந்து கொடுத்தால் அவர்களுடைய நோயெல்லாம் குணமாகிவிடும்.’

தமிழகத்திலேயே மர்பிலி என்ற மலைப்பிரதேச மக்களுடைய ‘வைர வேட்டை’ குறித்து மார்க்கோ சொல்லியுள்ள தகவல்கள் விநோதமானவை. செங்குத்தான பாறைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும் கொண்ட இந்தப் பிரதேசத்தில் வைரங்கள் செழித்துக் கிடக்கின்றன. ஆனால் அங்கே மனிதனால் செல்ல முடியாது. விஷப் பாம்புகளும் அதிகம். அவற்றை வேட்டையாடவே கழுகுகளும் பருந்துகளும் நிறைந்துள்ளன. இந்தச் சூழலிலும் அந்தப் பறவைகள் மூலமாகவே வைர வேட்டை நடத்தப்படுகிறது. எப்படி?

வைர வேட்டைக்காரர்கள், உயரமான இடங்களில் நின்று கொண்டு, வைரங்கள் கிடக்கும் பள்ளத்தாக்குகளில் இறைச்சித் துண்டுகளை எறிகிறார்கள். கழுகுகளும் பருந்துகளும் அந்தத் துண்டுகளை எடுத்துக் கொண்டு உயரமான இடங்களுக்கு வருகின்றன. பின் வேட்டைக்காரர்கள் பறவைகளை விரட்டிவிட்டு, அந்த இறைச்சித் துண்டுகளைக் கைப்பற்றுகிறார்கள். அதில் வைரங்கள் ஒட்டியிருக்கும். பறவைகள் இறைச்சித் துண்டுகளைச் சாப்பிட்டுவிடும் பட்சத்தில், அவை எச்சமிடுவதற்காகக் காத்திருக்கிறார்கள். அவை வைரம் நிறைந்த கழிவுகள். நம்பவே முடியாத இந்த ‘வைர வேட்டை’ நிகழ்ந்த இடமான மர்பிலி பிரதேசம் எங்கே இருக்கிறது என்பது குறித்த குழப்பங்கள் இன்றும் உள்ளன.

பழைய காயல். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு ஊர். அங்கே சென்ற மார்க்கோ போலோ, காயல் என்ற பெயரில் அதைக் குறிப்பிட்டுள்ளார். ‘மாபரின் (தமிழகம்) மிக முக்கியமான துறைமுக, வணிக நகரம் இது. ஏடன், அரேபிய நாடுகளிலிருந்து இங்கே வரும் கப்பல்கள் மூலமாக குதிரைகளும் பிற பொருள்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளி தேசங்களிலிருந்து இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் அனைத்துமே காயலுக்கு வராமல் சென்றதில்லை.’

(மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகளில் இருந்து)

 

வெளிச்சத்தின் நிறம் கருப்பு – அத்தியாயம் 01

தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் நான் எழுத ஆரம்பித்துள்ள வெளிச்சத்தின் நிறம் கருப்பு தொடரின் முதல் அத்தியாயம் உங்களுக்காக. (சென்ற ஞாயிறு இதழில் வெளியானது.)

***

பூ ஒன்று செடியிலிருந்து உதிர்ந்த ஒரு சமயத்திலோ, நீர்க்குமிழ் ஒன்றை காற்று மோதி உடைத்த சமயத்திலோ, வண்ணத்துப் பூச்சி ஒன்று தன் சிறகை இழந்த சமயத்திலோ அந்தக் காதல், அவர்கள் உறவு முறிந்திருக்க வேண்டும்.

ஹென்றி ஸீக்லேண்ட் என்ற காதலன், தனது நீண்ட நாள் காதலியை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தான். உறவு முறிய ஓரிரு சுடுசொற்கள்கூட போதுமே. இருவரும் திருமணம் செய்துகொண்டு, ஏழெட்டு குழந்தைகள் பெற்று, பேரன் பேத்தி எடுத்து… ஹென்றியின் காதலிக்கு ஏராளமான கனவுகள். அவை எல்லாம் வெறும் கனவுகள் மட்டுமே என்று அவள் உணர்ந்த நொடியில் விரக்தியை உச்சத்தைத் தொட்டாள். தனது நிகழ்காலத்தை, ‘இறந்த’காலம் ஆக்கினாள்.

அவள் தற்கொலை செய்துகொண்டதுகூட ஹென்றியை எந்த விதத்திலும் பெரிதாகப் பாதிக்கவில்லை. அந்தக் காதலிக்கு ஓர் அண்ணன் இருந்தான். பாசமலர் சிவாஜி வகையறா பிரதர். தங்கையின் கோர முடிவு அவனை ஏராளமாக உலுக்கியிருந்தது. துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஹென்றியைப் பழிவாங்கக் கிளம்பினான்.

ஹென்றி தன் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அங்கே திடீரென உதித்த அண்ணன், சற்று தொலைவிலிருந்து கைகள் நடுநடுங்க, ஹென்றியின் தலைக்குக் குறிபார்த்தான். அண்ணன், அப்போது கெட்ட வார்த்தைகள் கலந்த ஆங்கிலத்தில் ஏதாவது டயலாக் விட்டிருக்கலாம். அவனது துப்பாக்கி தோட்டா ஒன்றை வெளியே விட்டது.

ஹென்றி சுருண்டு விழுந்தான்.

‘அய்யோ… கொலை செய்துவிட்டேனா?’ – சில நொடிகளில் அண்ணனை பயம் கவ்விக் கொண்டது. அந்த பயம், உடனே உருமாற்றமும் அடைந்தது. ‘நினைத்தபடியே பழிவாங்கிவிட்டேன். இனி எனது பாசமலரின் ஆத்மா சாந்தியடையும்.’ அண்ணன், தன் தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து விசையை அழுத்தினான். இன்னொரு தோட்டா அவனது உயிரைக் குடித்தது.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். ஹென்றி மயக்கம் தெளிந்து எழுந்தான். ‘நான் உயிரோடுதான் இருக்கிறேனா!’ – அவனாலேயே நம்ப முடியவில்லை. தோட்டா, அவனது நெற்றியைத்தான் உரசிக் கொண்டு சென்றிருந்தது. உயிருக்குச் சேதாரமில்லை. அவன் அருகிலிருந்த மரத்தைப் பார்த்தான். அதைத் துளைத்திருந்த தோட்டா, உள்ளே பத்திரமாகத் தஞ்சமடைந்திருந்தது. இன்னொருபுறம் அண்ணன் செத்துக் கிடந்தான்.

இந்தச் சம்பவம் நடந்தது 1893ல். நடந்த இடம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஹனி குரோவ் நகரில்.
இந்த இடத்தில் பாஸ்ட் பார்வேர்ட் பட்டனை அழுத்தி, 1913க்கு வந்துவிடலாம்.

ஹென்றி அதே வீட்டில்தான் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் என்ன, தோட்டத்தில் அந்தத் ‘தோட்டா மரம்’ கண்ணில்படும்போதெல்லாம் பழைய காதலியின் நினைவு அநாவசியமாக வந்து தொலைத்தது. இந்த மரத்தை எதற்கு விட்டு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருநாள் வலுப்பெற்றது.

ஹென்றி, கோடாரியுடன் அந்த மரத்தை நோக்கிச் சென்றான். கோடாரி வேலைக்கு ஆகவில்லை. மரம் புஜபலம் காட்ட, ஹென்றிக்கு கோபம் வந்தது. மரத்தைத் தகர்த்தெறிய முடிவு செய்தான். மரத்தில் சில டைனமைட்டுகள் கட்டப்பட்டன. பலத்த சப்தம். மரம் நாலாபக்கமும் சிதறியது. பறவைகள் அலறிக் கொண்டிருந்தன.

ஹென்றி அதை உணரும் நிலையில் இல்லை. இறந்து கிடந்தான். உடலில் வேறெங்கும் காயங்களில்லை, ஆனால் அவன் தலையில் இருந்து மட்டும் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அந்தப் பழைய தோட்டா, அச்சமயம் ஹென்றியின் தலையில் தஞ்சமடைந்திருந்தது.

‘அந்தத் தோட்டாவால்தான் அவன் உயிர்போக வேண்டுமென்பது விதி. அதனால்தான் இருபது வருடங்கள் கழித்து அதே தோட்டாவால் செத்திருக்கிறான்.’ ‘அந்த மரத்தைப் பார்த்திருக்கிறாயா? பேய் மரம். அந்த அண்ணனின் ஆவி அதில்தான் காத்திருந்தது. சமயம் வாய்த்தபோது கொன்றுவிட்டது.’, ‘ஹென்றி ஏமாற்றிய அந்தக் காதலியின் ஆவிதான் தோட்டாவுக்கும் புகுந்து அவனைப் பழி தீர்த்துவிட்டது.’

பலருக்கும் பல கருத்துகள். விதவிதமாகப் பேசிப் பேசி மாய்ந்துபோனார்கள். பழைய தோட்டா தலையில் பாய்ந்துதான் ஹென்றி இறந்துபோனான் என்பதில் மாற்றமில்லை. இருந்தாலும், என்றோ மரத்துள் புதைந்துபோன தோட்டா, மீண்டும் குறிபார்த்துப் பாய்ந்து வந்து உயிரைப் பறித்திருக்கிறது எனில், அதன்பின் உள்ள மர்மம் என்ன?
விடை இல்லை.

1657, மார்ச் 4 அன்று டோக்கியோ என்ற நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்துக்குக் கூட விடை கிடையாது.

இன்றைய டோக்கியோவின் அன்றைய பெயர் இடோ (Edo), ஜப்பானின் மிகப்பெரிய வணிக நகரம். சுமார் மூன்று லட்சம் பேர் வசித்தார்கள். நெருக்கமாக அமைந்த வீடுகள் (மரத்தால், காகிதக் கூழினால் ஆனவை), குறுகலாக அமைந்த தெருக்கள், நீளமான சந்தைகள், நிறைய கோயில்கள், பாலங்கள் கொண்ட நகரம் அது.

கனத்த சாரீரமுடைய ஒருவர் பலமாகத் தும்மினால்கூட ‘நில அதிர்வு’ ஏற்படும் சபிக்கப்பட்ட தேசம்தானே ஜப்பான். 1657, மார்ச் 2 அன்று நண்பகலில் ஏதோ ஓரிடத்தில் சிறிய அளவில் நெருப்பு பரவ ஆரம்பித்தது. எங்கிருந்தோ கிளம்பிவந்த சூறாவளிக் காற்று அந்த நெருப்பின் இருப்பை பல மடங்காக்கியது. அந்தக் காலத்திலேயே இடோ நகரில் தீயணைப்புப் படை இருந்தது. ஆனால் அளவில் மிகச் சிறியது. அவர்கள் நெருப்பிடம் தோற்றுப் போனார்கள். மார்ச் இரண்டாம் தேதி இன்முகத்துடன் தன் சேவையைத் தொடங்கிய தீ, மூன்றாம் தேதி முழுவதும் மும்மரமாக வேலை பார்த்துவிட்டு, நான்காம் தேதி நண்பகலுக்குப் பின்னரே ஓய்வெடுக்கச் சென்றது.

புகைமூட்டத்தினுள் புதைந்திருந்த இடோ நகரில், கால்வைத்த இடமெல்லாம் கருகிய உடல்கள். அந்தப் ‘பேரழிவு நெருப்பு’ பரவக் காரணம் என்ன?

நில அதிர்வாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இன்றைக்கும் ஜப்பானியர்களைக் கேட்டால், இடுங்கிய கண்களில் பயம் பரவ, நடுங்கும் குரலுடன் அந்தச் சம்பவத்தைச் சொல்வார்கள்.

ஜப்பானிய இளம்பெண் ஒருத்தி விலையுயர்ந்த, பகட்டான கிமோனோ (Kimono, ஜப்பானியப் பெண்கள் அணியும் முழுநீள கவுன்) ஒன்றை வாங்கி ஆசையுடன் அணிந்தாள். ஏனோ, அடுத்த சில நாள்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தாள். என்ன நோயென்று பிறர் அறியும் முன்பே செத்துப் போனாள்.

அவள் ஆசையுடன் வாங்கி வைத்திருந்த கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணுக்கு விற்கப்பட்டது. அவளும் அணிந்துகொண்டு அழகு பார்த்தாள். சில நாள்களிலேயே மர்ம நோயொன்று அவளை அணிந்துகொண்டு அழகு பார்த்தது. இரண்டாமவளும் இறந்து போனாள். மூன்றாவதாக கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணிடம் சென்று சேர்ந்தது. அவளுக்கும் அதே கதி. அதோ கதி.

கிமோனோ அணிந்த பெண்

இடோ நகரமெங்கும் விஷயம் பரவியது. ‘அந்த கிமோனோவில் துர்சக்தி ஏதோ புகுந்துள்ளது. அதுதான் மூன்று இளம்பெண்களின் உயிரை எடுத்துள்ளது.’ மதகுரு ஒருவரிடம் அந்த மர்ம கிமோனோ ஒப்படைக்கப்பட்டது. ஊரே கூடி நிற்க, மதகுருவும் அந்த கவுனைப் பரப்பி வைத்து மந்திரமெல்லாம் ஓதி, சடங்குகள் செய்து, எரிகின்ற கட்டை ஒன்றை எடுத்து அந்த கிமோனோவுக்குக் கொள்ளி வைக்க…

அச்சுறுத்தும் ஊளைச் சத்தத்துடன் சூறாவளிக் காற்று ஒன்று எங்கிருந்தோ கிளம்பி வர… உயரமாகக் கிளம்பிய தீ, திகுதிகுவென வேகமாகப் பரவ…

அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட இழப்பு – சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகள். முந்நூறு கோயில்கள். அறுபது பாலங்கள். அநேக கட்டடங்கள். 60 -70 சதவிகித இடோ நகரமே தீக்கிரையாகியிருந்தது. இதுவரை ஜப்பான் சந்தித்தப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று.

*
உலகின் முதல் மனிதனுக்கு சூரியன், சந்திரன், வானம், கடல், மலை உள்பட தன்னைச் சுற்றியிருந்த ஒவ்வொன்றுமே விநோதமாகவும் மர்மமாகவும்தான் இருந்தன. ஒவ்வொன்றையும் கண்டு பயந்தான். இயற்கையில் அவன் பயந்த விஷயங்களை இறைவனாகப் பார்க்க ஆரம்பித்தான்.

எப்போது மனிதன் அறிவு சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் உலகைப் பார்க்க ஆரம்பித்தானோ, அப்போதிருந்தே இயற்கை மீதான வீண்பயம் விலகியது. எவையெல்லாம் விநோதமாகத் தெரிந்தனவோ, பின் அவையே அறிவியலை வளர்க்க உரமாக ஆயின. பகுத்தறிவு வளர மூடநம்பிக்கைகள் பலவும் தகர்ந்தன.

இருந்தாலும் ‘உலகம் மர்மங்களால் ஆனது’ என்று பறைசாற்றும்படியாக, மனித அறிவுக்கும் அறிவியலுக்கும் பிடிபடாத, விடைதெரியாத மர்மங்கள் காலம்தோறும் பெருகிக் கொண்டேதான் செல்கின்றன. மேலே பார்த்தபடி தோட்டாவாக, கிமோனோவாக விநோத விபரீதங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்தத் தொடர் எதைப் பற்றியெல்லாம் பேசப்போகிறது என்று பட்டியலிடுவது கடினம். ஆனால் குண்டலினி வித்தையால் பறக்க வைக்கும் சாமியார், சிவலிங்கத்தைக் கக்கும் ஆன்மிகவாதி, கூனர்களையும் குருடர்களையும் குணமாக்கும் மதகுரு போன்ற டுபாக்கூர்களை நாம் சீண்டப் போவதில்லை. ஸ்பை கேமரா வைக்கப்படாத அறையில் அவர்கள் சுபிட்சமாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். தவிர ஆவி, பேய், பிசாசு, பில்லி, சூனியம், கண்கட்டு வித்தை என்ற மிகக் குறுகிய வட்டத்துக்குள்  மட்டும் நாம் சுற்றி வரப்போவதில்லை.

நமக்கான தளம் மிக மிகப் பெரியது. நாம் ஏற்கப் போகும் பாத்திரங்கள் (தசாவதாரம் கமல்ஹாசனைக் காட்டிலும்) ஏராளம். ஓர் அத்தியாயத்தில் நாம் அறிவியல் ஆராய்ச்சியாளராக மாற வேண்டியதிருக்கும். அடுத்ததில் உளவியல் மருத்துவராக. அதற்கடுத்த அத்தியாயங்களில் தொல்லியல் வல்லுநர், வரலாற்று ஆய்வாளர், வானியல் அறிஞர், துப்பறியும் அதிகாரி, விலங்கியல் நிபுணர், இயற்கை ஆர்வலர், அவசியப்பட்டால் பேய் ஓட்டும் மந்திரவாதியாகவும் மாற வேண்டியது வரலாம்.

பகுத்தறிவைப் பக்கத்துத் தெரு சேட்டிடம் அடகு வைத்துவிட்டு இந்தத் தொடரைப் படிக்கத் தேவையில்லை. உலகில் பலராலும் விடைகாண முடியாத மர்மங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்தத் தொடர். நம் அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட மர்மங்கள், விநோதங்கள், விசித்திரங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே இத்தொடரின் நோக்கம்.

எனில், அந்தத் தீராத புதிர்களுக்கு இதில் விடை கிடைக்குமா என்றால், என் பதில் – அந்த வெளிச்சத்தின் நிறம் கருப்பு!

(வெளிச்சம் பரவும்)