‘இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா?’

காலையிலேயே சேகர் என்ற நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவர் ஜே.பி. சந்திரபாபுவின் குரலில் பாடும் மேடைப் பாடகர். எனது கண்ணீரும் புன்னகையும் புத்தகத்தின் ரசிகர். அவ்வப்போது அழைத்து சந்திரபாபு குறித்து பேசுவார். அவர் பேசி முடித்ததிலிருந்து எனக்குள் சந்திரபாபுவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

*

‘நான் குடிகாரன் என்பது ஊரறிந்த உலகறிந்த ஒரு விஷயம். ஒவ்வொரு மனிதனையும் அழைத்து அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துப் பாருங்கள். அவன் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை ஒளிவு மறைவின்றி கூறிவிடுவான். அழுது விடுவான். மதுவை நான் அளவோடு தினமும் குடிப்பேன். ஆனால் என்று ‘மாடி வீட்டு ஏழை’ படமெடுக்கத் துணிந்தேனோ அன்று முதல் ‘மொடாக்குடி’ என்று கூறுவீர்களே, அப்படிக் குடிக்க ஆரம்பித்தேன். அந்த மயக்கமும் போதாமல்தான் ‘பெத்தடினுக்கு’ வந்தேன். நடிகனுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்போது, ஊதியமும் சேர்ந்து உயரத்தான் செய்யும்.

மனிதன் எதற்காக உழைக்கிறான்? ஊதியத்திற்காகத்தானே? அது கிடைக்காதபோது ஷூட்டிங்குக்கு போகாமலிருக்கிறேன். பணம் தராத படத் தயாரிப்பாளர்களின் படங்களில் சில சமயங்களில் நடிக்கப் போகாமலிருந்ததுண்டு. பிறகு நானே வருத்தப்பட்டு போகிறது பாவம் கஷ்டப்படுகிறார் என்றுணர்ந்து நடிக்கச் சென்று விடுவேன். உண்மையான ஒரு கலைஞன் ஷூட்டின் இருக்கிறது என்றறிந்த பிறகும் போகாமல் இருக்கமாட்டான்.

அவரது ஊதியத்தை பேசியபடி கொடுக்காத தயாரிப்பாளர்களுண்டா?
நல்ல கறவை மாடு என்றறிந்தால்தான் மிஸ்டர் எம்.ஜி.ஆர். நடிக்கவே ஒப்புக் கொள்வார். இதுதான் உண்மை. நான் எந்தத் தயாரிப்பாளரையும் சரி செட் போடுங்கள் என லட்ச ரூபாய்க்கு செட் போடச் சொல்லிவிட்டு, பிறகு செட்டைப் போய்ப் பார்த்து, இது நன்றாக இல்லை கலைந்து விடுங்கள் என்று சொன்னதில்லை.

உடன் நடிக்கும் நடிகையைக் கூப்பிட்டு நாளை நான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். நீ இல்லாமல் படமெடுக்க முடியாது. உன்னை அழைக்க வந்தால், மாத விலக்கு என்று கூறிவிடு என சொல்லிவிட்டு நான் தப்பித்துக் கொண்டதில்லை.

ஷூட்டிங் இருக்கும் நாளில் கண்வலி என்று சொல்லி கன்னியருடன் விளையாடிக்கொண்டிருந்ததில்லை. முக்கியமாக எடிட்டிங் அறைக்குப் போனதே இல்லை. போனாலும் என் காட்சிகள் தவிர மற்றவர் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டு, எடிட்டர் மீது பழி போட்டதே இல்லை. தொழிலில் நான் அன்றும் சரி, இன்றும் சரி, மிகவும் நாணயமாக நடந்து கொள்ள முயற்சித்து வருகிறேன்.

நான் ரசிகர்களை மதிக்கிறேன். நீங்கள் எனக்களித்த ஏகோபித்த வரவேற்பால்தான் சாதாரண மீனவக் குடிமகனான நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன். வாழ்ந்தேன். இன்றும் உங்களால் தான் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா?

கட்சிக்காரர்கள், ரசிகர்கள் தொல்லை தருகிறார்கள். அதனால்தான் அயல்நாடுகளில், பிற மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துகிறேன் என்றல்லவா கூறியிருக்கிறார். நான் என்றும் அப்படி கூறியதில்லை. அவுட்டோர் ஷூட்டிங் என்றால் எனக்கு ஒரே ‘குஷி’யாக இருக்கும். நமது திறமையை மக்களுக்கு நேரில் காட்டுவோம் என்றெண்ணி உற்சாகமாக உழைப்பேன்.

என்னிடமும் சில குறைபாடுகள் உண்டு. ஆனால் அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காது.
ஆனால் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம் உள்ள குறைபாடுகள், என்னைப் போன்ற ஏமாளிகளைத் தெருவில் நிறுத்தி விடும்.

சமீபத்தில் எனது நண்பரான ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரின் திருமணத்திற்காக நான் சென்றிருந்தேன். முன் வரிசையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டது. பலர் என்னையே பார்த்தார்கள். என்ன விஷயம் என்று தெரியாமல் நான் திகைக்க, முன் வரிசைக்கருகே மிஸ்டர். எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.

கை கூப்பி வணங்க கையைத் தூக்கியவர் என்னைக் கண்டதும் எதையோ பார்த்தவர் போலானார். விருட்டென்று அருகிருந்த கதவுப் பக்கம் ஓட்டமும் நடையுமாக ஓடி கதவைத் தட்டினார். அது திறக்கப்படவில்லை.

பின் வேகமாக என் பாதை வழியாக முகத்தை திருப்பியபடி சென்று மறைந்தார்.
என்னைக் கண்டு ஏன் இப்படி ஓடி மறைய வேண்டும்? நானென்ன பேயா.. பூதமா.. நான் உண்மையை எழுதுகிறேன் என்ற ஆத்திரமா.. பணத்தையும் கொடுத்து விட்டு, பரிதாபத்திற்குரிய காட்சிப் பொருளாக ஆனவன் நானல்லவா! ஆத்திரப் படவேண்டிய நான் அமைதி அடைந்து விட்டேன். தர்மத்தை கண்டு பொறுக்காமல் அதர்மம் ஆத்திரப்படுகிறது. இப்படித்தான் நான் அன்று எண்ணிக் கொண்டேன்.’

ஜெயலலிதாவின் அங்கிள்! எம்.ஜி.ஆரின் கோபம்

‘குலேபகாவலி’யில் நடித்த போது எம்.ஜி.ஆருடன் நண்பரானார் சந்திரபாபு. ஆனால் அது சுலபமாக நடந்துவிடவில்லை. நட்பு எப்படி மலர்ந்து என்பதைச் சந்திரபாபுவே விவரித்திருக்கிறார்.

‘…செட்டில் ரொம்ப வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்போம். எங்கள் குழுவில் இல்லாத ஒரே நபர் மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான். தனிமையில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். அன்றும் அப்படித்தான் அவர் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். நான், டைரக்டர் ராமண்ணா, நடிகர் தங்கவேலு, மற்றும் பலர் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். ராமண்ணா மிஸ்டர் எம்.ஜி.ஆரை அழைத்து அவர் அருகே அமரச் சொன்னார். உடனே நான் ஒரு ஜோக் அடித்தேன். எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் மிஸ்டர். எம்.ஜி.ஆர். மட்டும் சிரிக்கவில்லை.

‘என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர்! சிரிச்சா முத்தா உதிர்ந்து போகும்? இப்படி உம்முன்னு இருக்கீங்களே’ என்றேன்.

‘உங்க ஜோக்குக்கு சிரிப்பா வரும்? கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்’ என்றார் பட்டென்று.

எல்லோரும் என்னேயே பார்த்தார்கள் எனக்கு அவமானமாகப் போய் விட்டது. பிறகுதான் எனக்கு மிஸ்டர் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொன்னார்கள். ‘அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்குமிடம் தேடித்தான் போக வேண்டும். உங்க ஜோக்குக்கு அவர் சிரிக்காததற்குக் காரணமே இதுதான். அவர் சிரிச்சுட்டார்னா, அந்தக் கூட்டத்தில நீங்க உயர்ந்திடுவீங்க இல்லையா, அதனாலதான் அப்படிச் சொன்னார் அவர்’ என்றார்கள்.

நான் வியந்தேன்.

ஒரு சாதாரண விஷயத்தில்கூட இந்த மனிதர் இப்படி நடந்து கொள்கிறாரே என்று நினைத்தேன். அன்று ஒரு சிறிய குழுவில் கூட தான் மட்டும்தான் பெரியவன் என்று காட்டிக் கொள்ள ஆசைப்பட்டார். அன்றிலிருந்து அவர் வளர்த்துக் கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காணுகிறேன். அந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன். ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போதும் சிரிப்பார். பதிலுக்கு நானும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்பேன்.

டைரக்டர் ராமண்ணா படப்பிடிப்பன்று ‘இன்று நான் புலிச் சண்டையைப் படமாக்கப் போகிறேன். நீங்கள் அதற்குத் தக்கவாறு பழகிக் கொள்ளூங்கள்’ என்றார் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம்.

புலிச் சண்டைக்கான கூண்டுகள் போடப்பட்டன. எல்லோரும் மிஸ்டர் எம்.ஜி.ஆரின் வருகைக்காகக் காத்திருந்தோம். அவர் வரவில்லை. ஒரு மணி நேரமாயிற்று. இரண்டு மணி நேரமாயிற்று. பிறகு வந்தார்.
ஸ்டண்ட மாஸ்டரிடம் ‘ஒன்றும் ஆபத்தில்லையே’ என்றார்.

‘இல்லை சார். மயக்க மருந்து கொடுக்கிறோம்’ என்றார் மாஸ்டர்.

மிஸ்டர். எம்.ஜி.ஆர். புலிக் கூண்டிற்குள் நுழைந்தார்.  இரு பக்கங்களில் இரு காமிராக்கள் சுழலத் தொடங்கின. புலி படுத்து பாய்வதற்குத் தயாரானது.

நாங்கள் பயத்துடன் மிஸ்டர். எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். புலி மீது வைத்த கண்ணை அவர் எடுக்கவில்லை.
குபீரென அது பாய்ந்தது. எம்.ஜி.ஆர். லாகவமாக கீழே குனிந்து பதுங்கிக் கொண்டார். புலி தொப்பென்று விழுந்தது.

‘கட்’ என்றார் ராமண்ணா.

சமயோசிதமாக எம்.ஜி.ஆர். குனிந்ததை எல்லோரும் பாராட்டினார்கள். அவருக்கும் முகத்தில் ஒரு மகிழ்ச்சி. உடம்பெல்லாம் வேர்க்க விறுவிறுக்க வந்து அமர்ந்தார். அவரை நான் பாராட்டினேன். என் கையைப் பிடித்து அருகில் அமரச் சொன்னார். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராமண்ணா பல கோணங்களில் புலிச் சண்டையைப்படமாக்கினார். அதை நான் விவரிக்கக்கூடாது. அது தொழில் ரகசியம். என் அருகிலேயே எம்.ஜி.ஆர். இருந்தார். ஆனால் புலிச் சண்டை மட்டும் படமாகிக் கொண்டிருந்தது.

அன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். ‘பாபு இன்று முதல் நீங்கள் என் குடும்பத்தில் ஒருவர்” என்றார் எம்.ஜி.ஆர். நானும் ஏற்றுக் கொண்டேன்…’

0

பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.

கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.

ப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று  சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க  வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான்  கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.

‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.

‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.

‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’ என்றார் சந்திரபாபு.

நீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.

‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.

0

எம்.ஜி.ஆரும் சந்திரபாபுவும் ‘அடிமைப் பெண்'(1969) படத்தில் நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த இறுதிப் படம் இதுதான்.

சுமார் நாலடி உள்ள ஒரு சுவர் மீது ஏறி, ஓடி சந்திரபாபுவும் ஜெயலலிதாவும் தப்பிப்பது போல் காட்சி. ஷாட்டின் போது, சுவர் மிகவும் சேதப்பட்டிருந்ததால், முன்னால் ஓடிய சந்திரபாபு நிலை தடுமாறி கீழே விழப் போக தாங்கிப் பிடித்தார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பில் பிரேக் விடப்பட்டது.

உணவு இடைவேளையில் சந்திரபாபு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திரபாபுவுக்கு வரவேண்டிய உணவு வரவே இல்லை.

“என்ன சாப்பிடலையா?” என்றார் எம்.ஜி.ஆர் சந்திரபாபுவிடம்.

“சாப்பாடு இன்னும் வரலை!”

“அது வரட்டும். நீங்க என்னோட சாப்பாட்டை சாப்பிடுங்கள்” என தன் சாப்பாட்டை சந்திரபாபுவுக்கு பரிமாறச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“எத்தனையோ தடவை உங்க வீட்டுல விருந்து சாப்பிட்டிருக்கேன். ஆனா இன்னிக்கு சாப்பாடு ரொம்ப சுவையா இருந்தது” என்றார் உண்டு முடித்த சந்திரபாபு.

அதன்பிறகு எம்.ஜி.ஆர். சாப்பிடவில்லை. பசியில்லை என்று கூறிவிட்டார். முகத்தை ஒரு மாதிரியே வைத்திருந்தார். படப்பிடிப்பும் துவங்கவில்லை.

சந்திரபாபு ஜெயலலிதாவிடம் என்ன விஷயம் என தனியாக விசாரித்தார். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியானார் சந்திரபாபு.

படப்பிடிப்பில் தடுமாறி விழப் போன சந்திரபாபுவை ஜெயலலிதா தாங்கிப் பிடித்ததை எம்.ஜி.ஆர். விரும்பவில்லையாம். அதுதான் அவர் மூட்-அவுட் ஆகக் காரணமென தெரிந்து கொண்ட சந்திரபாபுவும் சங்கடத்துக்குள்ளானார். காரணம் ஜெயலலிதாவின் தாயாரின் சகோதரியான வித்யாவதி, சந்திரபாபு எல்லோரும் குடும்ப நண்பர்கள். அவர்களின் வீட்டுக்கு சந்திரபாபு செல்லும் போது, ‘அங்கிள்’ என அழைத்தபடி ஓடி வந்து சந்திரபாபுவுடன் பேசுவார், சிறு குழந்தையாக இருந்த ஜெயலலிதா. இதைப் புரிந்து கொள்ளாமல் எம்.ஜி.ஆர். தவறாக நினைத்துக் கொண்டாரே என வருந்தினார் சந்திரபாபு.

0

சந்திரபாபு பற்றி புத்தகம் எழுதுகிறேன் என்றதும் எல்லோரின் புருவமும் அனிச்சையாக உயர்ந்தது. தகவல் திரட்டச் சென்றபோது ஒரு சிலர் மட்டும் சண்டை போட்டனர். சிலர் ஒதுங்கிப் போயினர். சிலர் அலைய வைத்தனர். ‘என்ன மிஸ்டர் பாபு, இப்படி படுத்துறீங்க’ன்னு நான் கோபமான நேரத்துல ‘அட பொதுவாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா. நான் படாத கஷ்டத்தையா நீ பட்டிருக்கப் போற’ன்னு சந்திரபாபுவே என் மனசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினாரு. அதுக்கப்புறம் என் செல்போன் ரிங் டோன்கூட ‘குங்குமப் பூவே’ன்னு கூவ ஆரம்பிச்சிடுச்சு!

2006 ஜனவரியில் வெளியான கண்ணீரும் புன்னகையும் புத்தகத்துக்கு இன்றுவரை வரவேற்பு குறையவில்லை. சந்திரபாபு குறிஞ்சிப்பூ.