நாயகன் எம்.என். நம்பியார்

நம்பியார் : நட்பைக் கெடுத்துக் கொள்ளாதே, யோசித்துச் சொல்.
எம்.ஜி.ஆர் : யோசிக்க வேண்டியவன் நானல்ல, அவளை யாசிப்பதை விடுங்கள்.
நம்பியார் : உயிர்மீது உனக்கு ஆசையில்லையா?
எம்.ஜி.ஆர் : இதே கேள்வியை நானும் கேட்கலாமா?
நம்பியார் : மோதுவதுதான் உன் முடிவா?
எம்.ஜி.ஆர் : உங்களுக்கு அதைத்தவிர வேறு வழியில்லை என்றால் நான் தயார்.
நம்பியார் : அவளை அடைந்தே தீருவேன்.
எம்.ஜி.ஆர் : அதுதான் நடக்காது.


நம்பியார் : ஆ.. என்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டாய். மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர் : சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்.
நம்பியார் : தோல்வியையே அறியாதவன் நான்.
எம்.ஜி.ஆர் : தோல்வியை எதிரிக்குப் பரிசளித்தே பழகியவன் நான்.
நம்பியார் : நாவை அடக்கு. நான் உன் தலைவன்.
எம்.ஜி.ஆர் : உங்கள் நடத்தை அப்படி இல்லையே.
நம்பியார் : ஆ…

***

தமிழகத்தின் தியேட்டர்களில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என். நம்பியாராகத்தான் இருக்கமுடியும். ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் எம்.ஜி.ஆரை அவர்  அடிக்கும்போது கதறியவர்கள், அந்த நேரத்தில் நம்பியார் கையில் கிடைத்தால் குதறி யிருப்பார்கள். ‘நான் ஆணையிட்டால்’ என்று வாத்தியார் கிளம்பி நம்பியாரை அடிக்கும் போது ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று. பழி உணர்வைத் தீர்த்துக் கொண்ட திருப்தி.

திரையில் நம்பியாரின் அருமையான வில்லத்தனத்தாலே, நிஜத்தில் தனது ஹீரோயிஸத்தை வளர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

***

கருப்பு வெள்ளைக் காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. எப்போதுமே எம்.ஜி.ஆர். – நம்பியாரின் கூட்டணி என்றால் வசூல்மழைதான். எம்.ஜி.ஆரோடு  ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, சிவாஜியோடு ‘உத்தமபுத்திரன்’ – மறக்க முடியாதவை.

‘திகம்பர சாமியார்’ – நம்பியார் கதாநாயகனாகப் பதினொரு வேடங்கள் அணிந்து நடித்த படம். அந்த மர்மக்கதை சினிமா பெரும் வெற்றியும் பெற்றது. மக்களைப் பெற்ற  மகராசியில் ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’ என்று எம்.என். ராஜத்தோடு நம்பியார் பாடும்  டூயட், என்றும் இனியது.

பக்தி படங்களில் வைணவம் சார்ந்த கதைகள் ஓடாது என்று தமிழ் சினிமாவில் ஒரு  செண்டிமெண்ட் உண்டு. அதை முறியடித்துக் காட்டுகிறோம் என்று ‘சுப்ரபாதம்’ என்றொரு படம் எடுத்தார்கள். இந்தியா முழுவதும் உள்ள பல வைணவத்தலங்களில் கதை நகரும். நம்பியார் இதில் பக்தராக நடித்தார். அந்தப் படம் ஓடவில்லை.

***

அகில இந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு ஐயப்ப பக்தரான நம்பியார்தான் குருசாமி.  அமிதாப் பச்சன் உள்பட பல நட்சத்திரங்கள் அவரோடு சபரிமலைக்குச் சென்றிருக்கிறார்கள்.

சுத்த சைவத்தைக் கடைபிடித்து வந்த நம்பியார் பசும்பால்கூட சாப்பிட மாட்டாராம்.  பொதுவாக அந்தக்கால பத்திரிகைகளில்கூட நம்பியார் பற்றி அவ்வளவு விஷயங்கள்  வந்ததில்லை. தன்னைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு அவர் இடம் கொடுத்ததில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்பதைக் கொள்கையாக கடைபிடித்த நம்பியார், பத்திரிகையாளர்களையும் பெரும்பாலும் தவிர்த்தே வந்தார்.

1000 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நம்பியாரைக் கௌரவப்படுத்தும்விதமாக யாரும்  எந்தவிருதும் அளித்ததில்லை.

***

சந்திரபாபு, எம்.ஆர். ராதா – வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளேன். நம்பியாரைப் பதிவு  செய்யும் வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தப்படுகிறேன். முன்பு கல்கியில் நம்பியார்  குறித்த ஒரு தொடர் வந்துள்ளது.

# இந்தக் கட்டுரைக்காக குறிப்புகள் தந்து உதவிய நண்பர் பா. தீனதயாளனுக்கு நன்றி.