விஜய் – விமர்சனம்

நானும் வேண்டாம், கூடாது, பேசவே கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்கு ஓடினாலும் துரத்தித் துரத்தி பயமுறுத்துவதால் ‘சுறா’வைப் பற்றி பேச வேண்டிய நிர்பந்தம்.

இன்று காலையில் சென்னை ஹலோ எஃப்.எம். சுசித்ரா நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயம் : தொடர்ந்து பல படங்களாக ஒரே ஃபார்முலாவில் நடித்துக் கொண்டிக்கும் விஜய் அதை மாற்றிக் கொள்ள வேண்டுமா?

போனில் பேசியவர்கள் எல்லோருமே ‘கண்டிப்பாக மாற்றியே தீர வேண்டும்’ என்று கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய சிலரது கருத்துகள் :

ஒரு பெண் : விஜய்க்கு டான்ஸ் மட்டும்தான் ஆடத் தெரியும். அதுலயும் வித்தியாசமா, கஷ்டப்பட்டு பண்றதா நினைச்சு தரையில படுத்து தவழ ஆரம்பிச்சுடுறாரு. பாவமா இருக்கு.

***

ஒரு குடும்பத் தலைவி : இந்த படமாவது நல்லாயிருக்கும்னு மனசைத் தேத்திக்கிட்டு ஒவ்வொரு விஜய் படமும் தியேட்டர்ல போய் பார்க்கத்தான் செய்யுறேன். ஆனா ஒவ்வொரு தடவையும் ஏமாற்றமா இருக்குது. வெறுப்பா இருக்குது. இன்னிக்கு நைட்கூட சுறா போகலாம்னு இருக்கேன். விஜய் வேற மாதிரி நடிச்சா நல்லாயிருக்கும்.

***

ஒரு குடும்பத் தலைவர் : நாங்க விஜய்கிட்ட இருந்து கமல் அளவுக்கெல்லாம் எதிர்பார்க்கல். ஒரே படத்துல பத்து ரோல் பண்ணச் சொல்லல. பத்து படமா தொடர்ந்து ஒரே ரோல் பண்ண வேண்டாம்னுதான் சொல்றோம்.

***

ஒருவர் : விஜய் தன்னைக் கண்டிப்பா மாத்திக்கணுங்க. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள மாதிரி கேரக்டர் பண்ணனுங்க.

சுசித்ரா : அந்த ரிஸ்க் எடுக்கணுங்கிறீங்களா? அவரால முடியுமா?

ஒருவர் : ஏங்க, ஐம்பது படம் நடிச்சுட்டாரு. இன்னும் இந்த ரிஸ்க் கூட எடுக்கலேன்னா எப்படி?

***

நேயர் : விஜய் ஒரு தேசிய விருதாவது வாங்கணும். அப்படி ஒரு படத்துல நடிக்கணும்.

சுசித்ரா : அவர் உங்ககிட்ட தேசிய விருது வேணும்னு கேட்டாரா?

நேயர் : இல்லீங்க. நெம்பர் ஒன் இடத்துல இருக்கிறதா சொல்லிக்கிறாங்க. ஒரு விருதாவது வாங்கி அந்த இடத்துக்கு நியாயம் சேர்க்க வேண்டமா?

***

நிகழ்ச்சியில் பேசிய எல்லோரும் விஜயின் படங்களில் மாற்றத்தை எதிர்பார்த்தே பேசினார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும் டப்பா படங்களுக்குக் கூட எஃப்.எம்.களில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளே அரங்கேறிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சி விஜயைக் கேலி செய்ய வலுவான களம் அமைத்துக் கொடுத்ததுபோல அமைந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு சுசித்ரா கடைசியில் சொன்ன வழிசல் வார்த்தைகள்.. ஹிஹி!

விஜய் எனக்கு நல்ல ப்ரெண்ட். அவரோட டான்ஸ் சான்ஸே இல்ல. அவர் சொன்ன தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். அடுத்து அவர் நடிக்கிற த்ரீ இடியட்ஸ்ல ஒரு ஸீன்கூட மாத்தக்கூடாதுன்னு சொல்லிருக்காராம்.

சுசித்ராவுக்கு ஒரு கமெண்ட் : உங்கள் நிகழ்ச்சியில் நீங்கள் பாடிய பாடல்களை மட்டும் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேல் ஒலிப்பரப்பு செய்வது ரொம்ப ஓவர்.

***

விஜய் கதைத் தேர்வில் இம்மியளவுகூட ரிஸ்க் எடுப்பதில்லை. மக்கள்தான் அவருடைய படத்தைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு முறையும் ரிஸ்க் எடுக்க வேண்டியதிருக்கிறது. எனவே விஜய் நடித்த படங்கள் பார்ப்பதை விட்டு பட வருடங்களாகிவிட்டன.

பழைய விஜய் படங்களில் எனக்குப் பிடித்தவை – 1. குஷி 2. காதலுக்கு மரியாதை 3. லவ் டுடே.

கடைசியாக தியேட்டருக்குச் சென்று (அதாவது நண்பர்களால் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதால்) பார்த்த விஜய் படம் : சிவகாசி.

சுறா பார்க்கும் துர்பாக்கியமான சூழல் என் வாழ்க்கையில் அமைந்துவிடாது என்று எல்லாம் வல்ல கோடம்பாக்கீஸ்வரரை வேண்டிக் கொள்கிறேன்.

அது சரி. விஜய் மாற வேண்டியது பற்றி என் கருத்து…?

தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்துன்னு பாட நான் என்ன விஜயா? அட போங்கப்பு… நாட்டுல மாத்த வேண்டியது எவ்வளவோ இருக்கு. அதை விட்டுப்புட்டு…

‘கல போல வருமா!’

க்ளவுட் செவன் அண்ட் ஆப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் வாய்க்கொழுப்பு நடிகர் என்று பரம்பரை பரம்பரையாக வாரமலர் நடுப்பக்கச் செய்திகளில் பாசமாக கொஞ்சப்படும் அஜித் நடிக்க இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.

யாருமே அறியாத பல செய்திகள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எங்கே, எப்படி என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மேற்கொண்டு தொடரவும் (கிசுகிசுன்னா ஆராயக்கூடாது, அனுபவிக்கணும்).

தும்பைப் பூ என்றும் ‘மாஸ்’அற்ற மலர் என்றும் அஜித்தை கலைஞர் பாசமாகச் சுட்டிக் காட்டி அறிக்கை விட்டதன் பின்னணியில் ஏகப்பட்ட உள்’கும்மாங்’குத்து வேலைகள் இருப்பதாக நியூஸ் பேப்பர் ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைஞரின் வசனத்தில் விரைவில் வெளியாக இருக்கும் பெண் சிங்கம் படத்தில் ஒரு குத்து பாடலுக்கு அஜித் நடனமாட(?) இருக்கிறாராம். ‘வாய் உள்ள பிள்ளை குலைக்கும்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை கலைஞரே எழுதவிருக்கிறாராம்.

தவிர, க்ளவுட் செவன் அண்ட் ஆஃப் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த அஜித் படத்துக்கும் கலைஞரே வசனம் எழுதலாம் என்று மதுரை இட்லி கடைகளில் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் படம் முழுவதும் அஜித் வரும் பெரும்பாலான காட்சிகளின் பின்னணியில் ‘கல போல வருமா…’ (கலைஞர் என்பதன் சுருக்கம் கலை, செல்லமாக ‘கல’) என்று அஜித்தே சொந்தக் குரலில் பாடுவது போல பயன்படுத்த இருக்கிறார்களாம்.

அஜித் பேசும்போது எழுந்து நின்று கைதட்டி ‘ஊக்குவித்த’ ரஜினிக்கு கலைஞர் செல்லும் பாராட்டு விழாக்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கு அருகிலேயே நாற்காலி போட ‘ஏற்பாடு’ செய்துள்ளார்களாம். இதனால் எந்திரன் படம் மேலும் சில வருடங்களுக்கு தள்ளிப் போகலாம் ஷங்கர் வட்டாரத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவைவிட்டே அஜித் விலகப் போகிறார் என்று பத்திரிகைகள் செய்தி பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் ரேஸில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். கார் ரேஸ் மட்டுமன்றி, ரேக்ளா ரேஸ் முதல் ஸ்லோ சைக்கிள் ரேஸ் வரை எதையும் விட்டுவைக்காமல் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறாராம்.

ரேஸில் தல பின்தங்கிய இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது சுறாவை வேகமாக முடித்து களமிறக்க இருக்கிறாராம் பழைய இளைய தளபதி. இதற்கிடையில் ‘3 இடியட்ஸ் தமிழ் மேக்கிங்கில் விஜய் நடிக்கப் போகிறார்’ என்றொரு சோக செய்தி வந்து விஜய் ரசிகர்களைத் தாக்கவும், ‘சேச்சே, நான் என்ன லூஸா?’ என்று அதற்கு பதில் சொல்லி தன் ரசிகர்களின் வாயிலும் வயிற்றிலும் ‘பாலை’ ஊற்றியிருக்கிறார் விஜய்.