கடந்த சில வருடங்களில் அவசியமேற்பட்டால் கிழக்கு அலுவலகத்திலேயே இரவு தங்கிவிடுவது வழக்கமாக இருந்தது. ச.ந. கண்ணன், முத்துக்குமார், மருதன் மற்றும் நான். எப்போதாவது நால்வரும். பல சமயங்களில் யாராவது இருவர் கூட்டணி அமைத்து. காலையில் எழுந்து வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவோம் அல்லது அலுவலகத்திலேயே ‘கடன்களை’ முடித்துவிட்டு பணிக்குத் தயாராகிவிடுவோம். காலை டிபன் ஆழ்வார்பேட்டை சூர்யாஸில்.
பொங்கல், பூரி, சாம்பார் இட்லி, மசால் தோசை – சமயங்களில் வெறுப்பாகத்தான் இருக்கும். வேறு வழியில்லாததால் சாப்பிட்டோம். ஒருநாள் நானும் கண்ணனும் சாப்பிட்டுவிட்டு வரும்போது சி.பி. ஆர்ட் கேலரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு ப ¡ட்டி இளநீர் விற்பதைப் பார்த்தோம். (பல வருடங்களாக விற்றுக் கொண்டிருந்திருக்கலாம். நாங்கள் கவனித்தது அப்போதுதான்.) ‘இளநீர் சாப்பிடலாம்’ என்றேன் கண்ணனிடம். சாப்பிட்டோம்.
அடுத்த சில நாள்களிலும் காலை உணவுக்குப் பின் இளநீர் சாப்பிட்டோம். கண்ணன் சகஜமாக பாட்டியிடம் பேச்சு கொடுத்தார். ‘இளநிக்குள்ள தண்ணி நிறைய இருக்குதா, இல்லையான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க?’
‘ஆங், அதெப்படி சொல்லுவேன். எங்கப்பாகிட்ட நான் அடி வாங்கிக் கத்துக்கிட்ட ரகசியம். சொல்ல மாட்டேன்.’
இம்மாதிரியான உரையாடலுக்குப் பிறகு கண்ணன் பாட்டியின் மனத்துக்கு நெருக்கமா கிவிட்டார்போல. ஒருநாள் பாட்டி இளநீர் ஒன்றை வெட்டி கண்ணனிடம் கொடுத்தது. அவர் என்னிடம் கொடுத்தார். அடுத்த இளநீரை வெட்டிக் கொண்டிருந்த பாட்டி வெடுக்கென்று ஒரு வசனத்தை விட்டது. ‘ஏம்ப்பா, நிறைய தண்ணி இருக்கும்னு நான் உன்கிட்ட கொடுத்தா, நீ அவன்கிட்ட தூக்கிக் கொடுத்துட்டியே!’
பதறிப்போய் அந்த ‘பாச’இளநீரை கண்ணனிடமே கொடுத்துவிட்டேன். கண்ணனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. பாட்டி எனக்கு ஒதுக்கிய இளநீரை மரியாதையாக வாங்கிக் குடித்தேன். வாழ்க கண்ணன்! வளர்க பாட்டியின் பாசம்!
இருந்தாலும் எனக்குள் உறுத்தல். பாட்டி ஏன் அப்படிச் சொன்னது அல்லது பாட்டியின் மனத்தில் இடம்பிடிப்பது எப்படி? வாரத்திற்கு இரண்டு இளநீராவது குடிப்பது என் வழக்கம். அலுவலகத்துக்கு வரும் வழியில் பேருந்தை விட்டு இறங்கி, பாட்டியிடே இளநீர் வாங்கிக் குடிக்க ஆரம்பித்தேன். கண்ணன் இல்லாமல். தனியாக.
வாடிக்கையாளர் ஆனபின் பாட்டி என்னிடமும் பாசம் காட்ட ஆரம்பித்தது. ‘இந்தா, உனக்குன்னே இந்த காயை எடுத்து வைச்சுருக்கேன். நிறைய தண்ணி. தித்திப்பா இருக்குதா?’ – நிறைய தண்ணீரோ, தித்திப்போ இல்லாவிட்டாலும் பாட்டியின் பாசம் இனித்தது. கண்ணனிடம் பெருமையாகச் சொன்னேன், ‘நானும் பாட்டிக்கு தோஸ்த் ஆகிட்டேன் தெ ரியுமா!’
நாளடைவில் ஒரு தர்மசங்கடம் ஆரம்பித்தது. அந்தப் பேருந்து நிறுத்தத்தைக் கடக்கும் போதெல்லாம் பாட்டி என்னைப் பார்ப்பதும் நான் அதைப் பார்த்தும் பார்க்காமல் போவதும். எல்லா நேரமும் இளநீர் குடிக்க முடியாதே. ‘அப்புறமா வர்றேன் பாட்டி’ என்று சொல்லிவிட்டுச் செல்வேன்.
தொடர்ந்து சில நாள்கள் நான் வராவிட்டால் பாட்டி உரிமையோடு கோபித்துக் கொள்ளும். ‘நீ இப்பல்லாம் வர்றதே இல்லை. இனிமே உனக்கு இளநி தரமாட்டேன்.’ வாய் தான் சொல்லிக்கொண்டிருக்குமே தவிர பாட்டியின் கையில் அரிவாள் இளநீரைச் சீவிக் கொண்டிருக்கும்.
ஒருமுறை பாட்டியை நீண்ட நாள்கள் காணவில்லை. பேருந்து நிறுத்தத்தில் இளநீர் அடுக்கப்பட்டிருக்கும் காற்றில்லாத டயர்களை உடைய துருப்பிடித்த டிரைசைக்கிள் மட்டும் நின்று கொண்டிருந்தது. சுற்றிலும் பிளாஸ்டிக் சாக்கினால் கட்டப்பட்ட நிலையில். பத்துநாள்களுக்குப் பின் பாட்டியை மீண்டும் கண்டேன். ‘என்னைத் தேடுனியா? அதையேன் கேக்குறப்பா. காய்ச்சல் படுத்துட்டேன். ஆஸ்பத்திரில. குளிரு தூக்கித்தூக்கிப் போட்டுச்சு. சர்ச்சுக்குக்கூட போகமுடியல. இன்னிக்குத்தான் வந்தேன்.’
அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் வர ஆரம்பித்தேன். அந்தச் சமயங்களில் வாக னத்தை நிறுத்தி இளநீர் குடிப்பதுவும், தேவைப்படாத நேரத்தில் சர்ரென்று பாட்டிக்குத் தெரியாமல் கடந்து செல்வதும் எளிதாக இருந்தது. தர்மசங்கடம் இல்லை.
2008ன் மழைக்காலம் ஆரம்பித்தது. பாட்டிக்கு வியாபாரம் இல்லை. பாட்டியும் இல்லை. அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மாதகாலம் இடைவெளி விழுந்துவிட்டது. பா ட்டி இருந்தும் நான் ஏனோ இளநீர் சாப்பிடவில்லை. மனத்துக்குள் உறுத்தல். கடந்த ஜனவரியில் ஒருநாள் பாட்டியிடம் சென்றேன். ‘எவ்ளோ நாளாச்சு? நீ ஆபிஸ் மாறிப்போயிட்டியோன்னு நினைச்சேன்.’
‘இல்ல பாட்டி, ஊருக்குப் போயிருந்தேன்’ – சமாளித்தேன்.
சென்றவாரம். இளநீர் சாப்பிடுவதற்காக பேருந்து நிறுத்தத்தைப் பார்த்தேன். பாட்டி இல்லை. டிரை சைக்கிளைத் தேடினேன். அதுவும் இல்லை. என்ன ஆகியிருக்கும்? பாட்டி வியாபாரத்தை இடம்மாற்றிவிட்டதா? இல்லை, வேறு ஏதாவது… பாட்டியின் பெயர், எங்கிருந்து வருகிறது என்பதுகூடத் தெரியாதே.
இன்று காலையில்கூட பேருந்து நிறுத்தத்தில் பார்த்தேன். ஏகப்பட்ட கூட்டம் நின்றி ருந்தாலும் அந்த இடம் வெறுமையாகத்தான் இருந்தது. ஒரு தாத்தா தள்ளுவண்டியில் பப்பாளி விற்றுக்கொண்டிருந்தார்.
:-((
பாட்டி விற்ற இளநீர்தான் இப்போது ’ரிலையன்ஸ் ஃப்ரெஷ்’ஷில் கிடைக்கும் சமாசாரமாகிவிட்டதே! பப்பாளித் தாத்தாவாவது பிழைத்தால் சரி.
அந்த ‘ரகசிய’த்தை எப்படியாவது தெரிஞ்சு சொல்லிடுவீங்கன்னு நினைச்சேன், கவுத்துட்டீங்களே 😉
ஒரு சிறுகதை படித்த திருப்தி. நெகிழ்ந்துவிட்டேன் அண்ணாச்சி
We are searching the books to understand our life. These kind of thatha, paati make us to understand life.
அந்தப் பப்பாளித் தாத்தா ஒரு காலத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவர். ராமராஜன் படங்களில் எல்லாம் டீக்கடை முதலாளி, பஞ்சாயத்து பொதுஜனம், மளிகைக்கடைக்காரர் என்று பல வேடங்களில் நடித்தவர். பிறகு வி. சேகர் படங்களில் ஆபீஸ் பியூனாக வந்து போவார். இப்போது பப்பாளித்தாத்தா அவதாரம்.
Interesting post Mugil.. u have clearly got the picture of ‘possesiveness’ that arises naturally in a human…indeed that gets us good friends sometimes…
எஸ்.ராமகிருஷ்ணன் போல் அனுபவத்தை எழுதிருக்கிறீர்கள். நன்றாக இருந்தது.