ஈசன் – முருகேசன்

முருகேஷ் என் நெருங்கிய நண்பன். நல்ல படைப்புத்திறன் உள்ளவன். எனக்கும் அவனுக்குமான ரசனை அலைவரிசை ஒன்றே. கல்லூரி நாள்கள் தொடங்கி இன்று வரை எங்களுக்கிடையேயான உரையாடல்களில் சினிமாவே அதிகம் இடம்பெறும். தற்போது அவன் ஹைதரபாத்தில் சாஃப்ட்வேரில் (வேண்டா வெறுப்புடன்) கல்லுடைத்துக் கொண்டிருக்கிறான். அவன் பார்த்த, அவனைக் கவர்ந்த படங்களுக்கான விமரிசனம் எழுதி எனக்கு அனுப்புவான். அவனுடைய நண்பர் வட்டத்துக்கும் அனுப்புவான். அதிலுள்ள பெரும்பாலான கருத்துகளில் எனக்கு உடன்பாடு இருக்கும். இதோ இன்றுதான் ஈசன் விமரிசனம் அனுப்பினான். நானும் ஈசன் பார்த்துவிட்டேன். அதற்கான விமரிசனத்தை நான் எழுதவில்லை. பதிலாக, நண்பன் முருகேஷின் கருத்துகளுடன் என்னுடைய சில கருத்துகளும் இணைந்த ஈசன் விமரிசனம் இதோ.

***

பார்த்துப் பார்த்து பழகிப்போன பாடாவதியான பழிவாங்கும் கதைதான். ஆனா, ‘வைக்கிறவ வச்சா ரசம் கூட திராச்சை ரசம்’ மாதிரியான கைப்பக்குவ மேட்டர்தான் ஈசனை ரசிக்க வைக்கிறது.

முக்கிய மந்திரி ஏ.எல் அழகப்பனின் (திமுகவின் ஒரு முக்கிய அமைச்சரின் மேனரிஸங்களை பிரதிபலிக்கிறார்) மகன் வைபவ் (கதாபாத்திரத்தின் பெயர் ‘செழியன்’). மந்திரிக்கே உரிய எல்லா தந்திரங்கள் கொண்ட தந்தை. மந்திரி பிள்ளைக்கே உரிய எல்லா ‘நல்ல்ல்ல’ பழக்கங்களுடன் பிள்ளை. அந்த தங்கமான புள்ள அங்கமெல்லாம் அடிவாங்கி கொலை செய்யப்படுகிறார். ஏன்? எப்படி? நடந்தது என்ன என்று விளக்குவதுதான் இரண்டாம் பாதி.

இது, அக்மார்க் அரசியல்வாதிக்கும், பொளந்து கட்டுற போலீஸுக்கும் நடக்கப் போற மோதல் கதையா? இல்லை, கோடீஸ்வரன் மகளுக்கும் கேடி மகனுக்கும் நடக்கிற காதல் கதையா? இல்லை, பண பலத்தையும் பதவி பலத்தையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிற வாடிக்கையான கதையா? ஒரு தெளிவே இல்லாமல் போகிறது திரைக்கதை, ஆனால் தெளிவான காட்சிகளுடன். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இலக்கே இல்லாமல் வீசுகிற காற்று மாதிரி, எங்கே போகிறதென்று தெரியவில்லை. இருந்தும், சில்லென்றுதான் இருக்கிறது.

இரண்டாம் பாதியில், ஃப்ளாஸ்பேக் ஓப்பன் பண்ணும்போதே, விக்டிம் யாரு, கல்ப்ரிட் யாரு, இப்போது பழிவாங்குவது யார் என எல்லா விஷயங்களும் ரசிகர்களுக்கு முன்னமே தெளிவாகப் புரிந்துவிடுகிறது. சசிகுமாரும் அதில் பெரிதாக எந்த டிவிஸ்டும் வைக்க விரும்பவில்லை. இப்படித்தான் கதை போகுமெனத் தெரிந்தபின், ரசிகர்களை கட்டிப்போட்டு உட்கார வைப்பது ரொம்ப சிரமம். ஆனால், அந்த வேலையை சுலபமாகச் செய்துள்ளது சசிகுமாரின் மூளை. கேமரா ஆங்கிள், கதையோட பின்னணி, அங்கங்கே பார்க்க புதுசாக ஒரு சில காட்சிகள், நடிகை அபிநயா மேல் ரசிகர்களுக்கு இருக்கிற பிரியம், இப்படி எல்லாம் சேர்ந்து இழுவையான இரண்டாம் பாதிக்கு வலிமை சேர்க்கிறது.

அரசியல்வாதியில் ஆரம்பித்து அல்லக்கை வரைக்கும் அப்படியொரு அட்டகாசமான நடிகர் தேர்வு. ஈசன் கேரக்டர் ‘துஷ்யந்த்’, இந்த படத்துக்காகவே பிறந்த மாதிரி ஒரு அமைப்பு (‘பசங்க’ வாத்தியார் ஜெயபிரகாஷின் இரண்டாவது பையன். முதல் பையனும் இதில் நடித்திருக்கிறார், வைபவின் நண்பன் வினோத் பாத்திரத்தில்.). கொஞ்சம்கூட மீறாத மிரட்டல்.

அபிநயாவின் ஒவ்வொரு உணர்வையும் ரசிகர்களின் முகத்திலே பார்த்துவிடலாம். அவர் சிரிக்கும் போது மகிழ்ச்சியும், அழும்போது துயரமும் நம்மோடு ஒட்டிக்கொள்வதை மறுக்க முடியாது. அதுதான் அவரதும் வெற்றியும் கூட. குடிப்பது காபி இல்லை எனத் தெரிந்ததும், இயல்பாக நடிக்கிறது அவரது முகம்.

ஒரு சில காட்சிகளில் பார்வையாளர்களைக் கையைப் பிடித்து கூட்டி போகிற யுக்தி தெரிகிறது. நல்ல விஷயம்தான் என்றாலும், தேவைக்கும் அதிகமான நீளமாகத் தெரிகிறது. சுப்ரமணியபுரத்தில் சில முக்கியமான விஷயங்களைக்கூட கதாபாத்திரங்கள் பேசும் ஒருவரி டயலாக்கில் சொல்லிக் கொண்டுபோன சசிகுமார்தானா இது என்ற உறுத்தல் ஏற்படுகிறது. பல ஊர்களில் படத்தின் இரண்டாவது பாதியில் சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் கத்தரித்துவிட்டார்களாம். சந்தோஷம்.

ஈசனோட அறிமுகக் காட்சியில் இருக்கும் த்ரில், அமைச்சர் கேரக்டர் வழியாக கிழிக்கப்படும் நிகழ்கால திராவிட அரசியல்வாதிகளின் முகங்கள், அங்கங்கே பட்டாசாகச் சிதறுகிற காமெடி ஒன் லைனர்ஸ், பல இடங்களில் பளிச்சிடும் கூர்மையான வசனங்கள் – இன்னும் நிறைய இருக்கிறது நிறை என்று சொல்ல.
இருந்தாலும், பொழுதுபோக்குக்காக அரங்கினுள் நுழையும் ஜனரஞ்சக சினிமா ரசிகனின் பார்வையில் பார்க்கும்போது, ‘பழைய கதை, பபுள்கம் காட்சிகள், எதிர்பார்த்த ஃபிளாஸ்பாக்’ என்பதெல்லாம் பெரும் குறைகள்தாம்.

‘ராம்’ ஜீவாவுக்கும் ‘ஜித்தன்’ ரமேஷுக்கும் உள்ள சம்மந்தம்தான், ஈசனின் முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும். ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் பார்த்த மாதிரி ஓர் உணர்வு. இருந்தாலும் ஈசன், எந்த உலகப் படத்தையும் நினைவுபடுத்தவில்லை. சசிகுமாரும் தான் ஓர் உலகப் படத்தைப் படைத்துவிட்டதாக சேனல்களில் சொகுசு சோபாக்களில் அமர்ந்து மார்தட்டிக் கொள்லவில்லை. புதிய கதைக் களத்தில் ஒரிஜினலாக ஒரு படம் பார்த்த திருப்தி ஈசனில் கிடைக்கிறது.

படம் பார்க்க வந்திருந்தவர்களில் பெரும்பாலோனோர் சசிகுமாரும் நடித்திருக்கிறார் என்ற நினைப்போடு வந்து ஏமாந்துபோனார்கள். எல்லாம் டிரெய்லர் செய்த வேலை. ஒருவேளை, பாதிக்கப்பட்ட அக்காவுக்காக பழிவாங்கும் தம்பி என்பதற்குப் பதிலாக, பழிவாங்கும் அண்ணனாக சசிகுமார் நடித்திருந்தால் படம் பெரிய ஹிட் ஆகியிருக்கலாம். ஏனென்றால் நட்சத்திர வேல்யூ இல்லாத ஒரு படத்துக்கு இத்தனை பெரிய ஓப்பனிங் கிடைக்கிறதென்றால், அதற்கான ஒரே காரணம் சசிகுமார் மட்டுமே.

ஈசன் – சிற்பி கொத்தியிருக்கும் அம்மி. என் பார்வையில் சிலையாகத்தான் தெரிகிறது.

– முருகேஷ்