தேர்தல் 2009 – சிறப்பு பாடல்!

(தேர்தல் பிரசாரத்தில் எந்தக் கட்சியினரும் இந்தப் பாடலை இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம்.)

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே என் மக்களே!
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!
தேர்தல் என்னும்
பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய
ஓட்டு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

அன்னையும் அம்மாவும் தந்ததா
இல்லை ஜாதியின் வல்லமை சூழ்ந்ததா
கூட்டணி நான் அறியாததா
புது டெல்லியில் எம்நிலை எம்.பி.யாய் உயர்ந்திட
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

அத்தனை ஓட்டுகள் உம் இடத்தில்
யாம் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்
வெறும் சின்னம்தான் உள்ளது எம் இடத்தில்
அதை அழுத்திடும் விரலோ உம்மிடத்தில்
ஒரு முறையா இரு முறையா
பலமுறை தேர்தலில் ஜெயிக்க வைத்தாய்
பல பதவி பல லகரம்
ருசி கண்ட நாக்கினை அரிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
அரசியல் வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள்
என்று அரிக்கின்ற மனம் கரம் கூப்புதே!
வாக்குறுதி தருகிறேன்
வாழ்வளிக்க வருகிறேன்
உன் ஒருவிரல் பெரும் வரமளித்து ஜெயம் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே என் மக்களே!
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!
தேர்தல் என்னும்
பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய
ஓட்டு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

– கவிஞர் ஓட்டாண்டி

9 thoughts on “தேர்தல் 2009 – சிறப்பு பாடல்!”

 1. டக்கர்ம்மா – ஹ்யூமர்மட்டுமில்லை, ட்யூனுக்கும் பொருந்தது – வைரமுத்து, வாலி வகையறாக்களுக்குப் போட்டியாகிடுவீங்க போலிருக்கு 😉

 2. அட்றா அட்றா அட்றா 🙂

  குத்து பாட்டை உல்டா பண்றதுதான் சுலபம்னு நெனச்சேன்.
  உதா:
  ராமா ராமா ராமா ராமன்கிட்ட கோயில் கேட்டேன்.
  அம்மா அம்மா அம்மா அம்மா கிட்ட ஆசி கேட்டேன்..
  முக முக முக முக கிட்ட டிவி கேட்டேன்..
  ராகுல் ராகுல் ராகுல் ராகுல் கிட்ட நாட்டை கேட்டேன்..

  உங்க கிட்ட ஓட்டை கேட்டேன்.. உங்ககிட்டே ஓட்டை கேட்டேன்..

  ஆனா செண்டி சாங்கையும் நல்லா மிக்ஸியிருக்கீங்க 🙂

 3. சரணத்தில்

  வெறும் சின்னம்தான் உள்ளது எம் இடத்தில்
  அதை அழுத்திடும் விரலோ உம்மிடத்தில்
  ஒரு முறையா இரு முறையா
  பலமுறை தேர்தலில் ஜெயிக்க வைத்தாய்

  போன்ற அனைத்து வரிகளும் நறுக்… நறுக்… நறுக்..

 4. கவிஞர் ஓட்டாண்டிக்கு எனது வாழ்த்துக்கள். கொஞ்சம் கஷ்டந்தான் ……மக்களுக்கு என்ன பண்றது அவங்க கொடுத்து வைச்சது அம்முட்டு தான்!

 5. அடுத்த அரசியல் தலைவரே நீங்கள் தான்

Leave a Comment