குபிலாய் கான் கூரியர் சர்வீஸ்

மாலையில் புக் செய்தால் மறுநாள் காலையில் டெலிவரி. இன்றைக்கு இருக்கும் போக்குவரத்து வசதிகளில் கூரியர் சர்வீஸ் குறித்து அதிகம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசர் குபிலாய் கானின் ராஜ்ஜியத்தில் அதி அற்புதமாக கூரியர் சர்வீஸ் நடந்துள்ளது. அது குறித்து மார்க்கோ போலோ எழுதி வைத்துள்ள குறிப்புகளில் இருந்து…

***

குபிலாய் கானின் ராஜ்ஜியம் முப்பத்தி நான்கு மாகாணங்களைக் கொண்டது. ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரங்களையும் இணைக்கும் வகையில் அற்புதமான சாலைகள் இருந்தன. சுமார் முப்பது மைல்களுக்கு ஒரு சத்திரம் கட்டப்பட்டிருந்தது. பயணிகள், வியாபாரிகள் தங்கும்படியான அருமையான வசதிகள் கொண்ட பெரிய சத்திரங்கள் (மார்க்கோ போலோ அவற்றை ‘யாம்ப்’ என்றழைக்கிறார்). சிற்றரசர்கள் முதல் சில்லறை வியாபாரிகள் வரை தங்கும்படியான  தரத்தில், ரகத்தில் அறைகள் அங்கே இருந்தன.

குபிலாய் கான்

ஒரு சத்திரத்துக்கும் இன்னொரு சத்திரத்துக்கும் இடையில் ஒவ்வொரு மூன்று மைல் தொலைவிலும் ஓர் அஞ்சல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் வேகமாக ஓடக்கூடிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். தவிர ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஓர் எழுத்தர் உண்டு. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செய்தியை வேகமாகக் கொண்டு செல்ல இந்த ஏற்பாடு. செய்தியில் அது எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, எங்கே கொண்டு செல்லப்பட வேண்டும் போன்ற விவரங்கள் தெளிவாக இருக்கும். தூரத்தில் மணியோசை கேட்டாலே, ஓர் அஞ்சல் நிலையத்திலுள்ள ஓட்டக்காரர், தன் இடுப்பில் மணி பெல்டைக் கட்டிக் கொண்டு தயாராகி விடுவார். அவர் வந்த நொடி செய்தியை வாங்கிக் கொண்டு அடுத்தவர் ஓட ஆரம்பிப்பார், ரிலே ரேஸ் போல. ஓடி வரும் நபர் வரும் தேதியை, நேரத்தை எழுத்தர் குறித்துக் கொள்ள வேண்டும். இதனால் செய்தி தவறிப் போனால் எங்கே, யாரால் தவறிப் போனது என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா.

மார்க்கோ போலோ

ஓட்டக்காரர் மூன்று மைல்கள்தான் ஓட வேண்டும் என்பதால் செய்தி வேகமாக அடுத்தடுத்த அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று சேர்ந்தது. பொதுவாக பத்து நாள்கள் பயண தொலைவுள்ள நகரங்களுக்குக் கூட, இரண்டே நாள்களில் செய்தி சென்று சேருமளவுக்கு தபால் சேவையில் செம வேகம். முதல் நாள் காலையில் ப்ரெஷ்ஷாகப் பறிக்கப்பட்ட பழங்கள்கூட, மறுநாள் மாலைக்குள் குபிலாய் கானைச் சென்றடைந்தன. அடுத்தது குதிரைகள் வழி நடந்த கூரியர் சேவை பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு சத்திரங்களிலும் சுமார் இருநூறு குதிரைகள் வரை பராமரிக்கப்பட்டன. குதிரையை வேகமாகச் செலுத்தும் வீரர்களும் ஒவ்வொன்றிலும் இருந்தார்கள். குபிலாய் கான் தன் மாகாணங்களுக்கு அனுப்பும் செய்திகள், குபிலாய் கானுக்கு அனுப்பப்படும் செய்திகள் எல்லாமே குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. ஓரிடத்தில் இருந்து கிளம்பும் குதிரை வீரர், முப்பது மைல் தொலைவிலுள்ள ஒரு சத்திரத்தை அடைவார். வந்த குதிரை களைத்திருக்கும் அல்லவா. ஆகவே அங்கே அடுத்த குதிரை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏறி அடுத்த சத்திரத்துக்குச் செல்வார். வீரர் களைப்படையும் பட்சத்தில், சத்திரத்தில் மாற்றுவீரரும் ரெடியாகவே இருப்பார்.

குதிரை வீரரோ, ஓட்டக்காரரோ, பயண வழியில் ஆறுகள், ஏரிகளைக் கடக்க வேண்டியதிருந்தால் அதற்கென கரையில் எப்போது படகுகளும் தயார் நிலையிலேயே இருந்தன. இடையில் பாலைவனப் பயணம் மேற்கொள்ள வேண்டியதும் இருந்தது. அப்போதெல்லாம் பாலைவன எல்லையில் அவர்களுக்குத் தேவையான நீர், உணவு அளிக்க நிலையங்கள் இருந்தன. அவர்களோடு உதவிக்குச் செல்ல சிறு குழுவினரும் காத்திருந்தார்கள். ஒவ்வொரு குதிரை வீரருக்கும், ஓட்டக்காரருக்கும் வழியில் அடையாளத் தகடுகள் அளிக்கப்பட்டிருந்தன.

ஏதாவது ஒரு மாகாணத்தில் நிலவும் பதற்றம், கலவரம் உள்ளிட்ட அவசரச் செய்திகளைக் கொண்டு செல்ல வேண்டியதிருந்தால், இரண்டு குதிரைகளின் இரண்டு வீரர்கள் சேர்ந்து பயணம் செய்தார்கள். அதுவும் குதிரைகளின் உடலோடு தம் உடலைத் துணியால கட்டிக் கொண்டு அதிவேகமாக. ஒருவருக்கு ஆபத்து என்றாலும் அடுத்தவர் அடுத்த சத்திரம் வரை சென்று சேர்ந்துவிடலாம் என்பதால் இந்த ஏற்பாடு. இம்மாதிரியான அவசரமாகச் செல்லும் வீரர்கள் கையில் அதை உணர்த்தும்விதமாக வல்லூறு பொறிக்கப்பட்ட பட்டயம் இருந்தது. இந்த குதிரை வீரர்களுக்கும், தபால் ஓட்டக்காரர்களுக்கும் நல்ல சம்பளம் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் பணியில் தவறு நேர்ந்தால், கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன.

***

தமிழக அரசியலில் நான் இப்போது எழுதி வரும் புத்தம் புது பூமி வேண்டும் தொடரில் மார்க்கோ போலோவின் பயணங்கள் குறித்த அத்தியாயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.