நானும் சினிமாவும்

சினிமா குறித்த தொடர் கேள்வி-பதில் குறித்து என்னுடைய பதிவு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயதெல்லாம் நினைவில் இல்லை. ஒரு பாக்யராஜ் படம். அது முருங்கைக்காய் புகழ் முந்தானை முடிச்சா அல்லது கல்பனா புகழ் சின்னவீடா என்று தெரியவில்லை. படத்தை  தூத்துக்குடி சார்லஸ் தியேட்டரில் பார்த்ததாக அரைகுறை ஞாபகம். சிறுவயதில் தியேட்டர்களைக் கண்டால் எனக்கு ஒரு வெறுப்பு. காரணம்? தெரியவில்லை. ‘சின்னப்புள்ளைத்தனமா’ ஏதாவது இருந்திருக்கலாம். வீட்டில் யாராவது சினிமாவுக்குக்  கிளம்பிச் சென்றால் கையைப் பிடித்து இழுத்து, காலைக்கட்டிக் கொண்டு போகவிடாமல் நிறைய அழுது அடம்பிடித்திருக்கிறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா. சென்னை-28 அளவுக்கு கவரவில்லை.

3கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஜெயம் கொண்டான். படத்தில் கதை இருந்ததால் பிடித்திருந்தது. வினய் வளருவார். லேகா வாஷிங்டனுக்கும் கால்ஷீட் டைரி நிரம்பித் தளும்ப  வாய்ப்பிருக்கிறது. எல்லோரையும்விட இப்போது என் கண்களில், மனத்தில் அலைபாயும் முகம் சரண்யா மோகனுடையது. வெண்ணிலா கபடி குழுவுக்காகக் காத்திருக்கிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

பிடித்த படங்கள் அன்பே சிவம், லவ்டுடே. பாதித்த படம் மகாநதி. அந்தப் படத்தை இன்னொருமுறை பார்க்கும் மனோதிடம் எ னக்கில்லை.

5. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

பொதுப்பிரச்னைகளுக்காக ரஜினிகாந்த் ஏறி உளறும் ஒவ்வொரு மேடைச் சம்பவத்தையும் வெறுக்கிறேன். அவரை ஆரம்பத்திலிருந்தே நம்பிக் கொண்டிருக்கும் நிஜ ரசிகர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய. குறிப்பாக பழைய பொம்மை, பேசும் படம், பிலிமாலாயா இதழ்கள் மேல் தனிப்  பிரியம் உண்டு.

7.தமிழ் சினிமா இசை?

என் மனத்துக்குப் பிடித்தமான எல்லா பாடல்களையும் ரசிப்பேன். இசையமைப்பாளர், பாடல் எங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய  படங்கள்?

உண்டு. சமீபத்தில்தான் அதிகம் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். என் பட்டியலிலுள்ள  ஐந்து நட்சத்திரப் படங்கள் : தாரே ஸமீன் பர், முன்னா பாய் பார்ட் ஒன், ஜுராஸிக்  பார்க், சில்ட்ரன் ஆஃப் ஹெவன், தி சினிமா பராடைஸோ, இன்னொஸன்ஸ், தி ரோட்  ஹோம்.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா?  அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பை உருவாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். சில அனுபவங்கள் குறித்து பின்னர் விரிவாக எழுதுகிறேன். மற்றபடி தமிழ் சினிமாவில் அழியாப் புகழ்பெற்ற இரண்டு மேதைகளுடைய (ஜே.பி. சந்திரபாபு, எம்.ஆர். ராதா) வாழ்க்கை வரலாறு எழுதியதில் பூரண திருப்தி.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வியாபாரத்தில் ஏற்றம் இறக்கம் எப்போதும் உண்டு.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? த மிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அடிமட்ட சினிமா தொழிலாளர்களுக்காக அரசு கஞ்சித் தொட்டி திறக்கும்நிலை வரலாம். மற்றபடி தமிழர்களின் குடி முழுகிப் போகாது. புத்தக வாசிப்புப் பழக்கம் அதிகமாகும்.