ஒரு எலக்கியவாதியின் எடக்குமடக்கு அனுபவங்கள்!

(இந்தக் கட்டுரை எதற்காக, யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது, எதற்கு இப்படி ஒரு தலைப்பு என்றெல்லாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டாம். யோசித்துத்தான் தீருவீர்கள் என்றால் பின் உங்கள் இஷ்டம்.)

அமானுஷ்ய ஜெயசாமி – தமிழ் எழுத்துலகின் உள்ளீடற்ற படைப்பாளி. இலக்கியத்தின் இருப்பை ஆதாரமாக்கும் வெப்பக் கவிஞர். படைப்புகளின் நகர்வில் ஊர்ந்து செல்லும் தாக மேகம். பின் நவீனத்துவத்தின் நவீன பின்னல். ‘ஓலைத்தகடு’ சிற்றிதழின் பேராசிரியர். யார் அவர் என்று எந்திரத்தின் எஞ்சிய சப்தத்தின் மீட்சியாகக் குரலெழுப்பாதீர். அது நான்தான்.

நான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயர் என்பதுகூட அடையாளங்களைத் தொலைத்த சில எழுத்துக்களின் முகம் தொலைத்த கூட்டணி. தன்னை அறிவித்துக் கொள்ள வெறி கொண்டு அலையும் அகங்காரம் பிடித்தவர்களின் பிடிவாதமே முற்றிய நிலையில் நெறிகட்டி அறிவிக்கப்படுகிறது பெயரென! இப்போது சொல்லுங்கள் மனிதனுக்கு பெயர் தேவையா?!

அப்போது பெயரை எங்கே உபயோகிக்க வேண்டும் என்று கிணற்று நீரின் வறட்சிக் குமிழாகக் கேட்கறீர்களா? உயிரற்ற கேள்வி. விஸ்தாரமான பாறைகளின் இடுக்கில் விதைகளை காகங்கள் ஒளித்து வைத்தாலும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தலை நீட்டும் தாவர சரீரம். இதயத்தின் நிழல் எங்கே விழும்? பிம்பங்களைச் சார்ந்திருத்தலின் வெளிநிலைக்கும் அவதானிப்புகள் வெட்டப்படும் பூரித்த நிலைக்கும் இடைப்பட்ட ஒரு அந்தர நிலையில் ‘பெயர்’ என்பது கட்டாயமாக்கப்படுகிறது.

சிலர் என்னிடம் கேட்பார்கள். இலக்கிய உலகில் என் பங்கு என்ன என்று.

கண்ணிவெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் நான் என் கால்களைத் தேடி நடந்து கொண்டிருக்கிறேன். இரகசியமாக ஊர்ந்து செல்லும் ஓநாய்கள் வாழும் காட்டில், என் ஒற்றைப் பேனா தீராத அபத்த நிலைகளின் ஊடாக குருதி தெளித்து இந்தப் பிரபஞ்சத்தைப் புனிதமாக்கிக் கொண்டுள்ளது. என் எழுத்துக்களின் கற்பிதங்களால் தமிழ் இலக்கியம் வாழ்விக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் மனநிலை பிழன்ற சிலர், என் படைப்புகளை ‘கழிவுகளின் இழிநிலை’ என்று சொத்தைப் பல் கண்ட சொப்பனம் போல் விமர்சிப்பார்கள். அவர்களுக்கு என் விஸ்தாரமான நுனி பதில் இதுதான்.

என்னை விமர்சிப்பவனின் குரல், முகமற்ற ஒரு டிராகுலாவின் குரலற்ற குரல். பிணவறையின் உள் ஒளிந்து கொண்டு தனக்குத் தானே ஒப்பாரி வைக்கும் நிழலற்ற காட்டேரியின் கதறல் அது. என் ஆழ்ந்த புனைவுகளின் சூடு தாங்காமல் மரங்களற்ற காட்டினில் போய் தன்னைத் தானே புதைத்துக் கொண்ட ரத்த அணுக்கள் இல்லாதவனின் பிதற்றல். சடலங்களைப் பற்றி இனி நான் பேசப் போவது இல்லை.

‘பின் நவீனத்துவ’த்தால் வெகுஜன மக்களுக்கு என்ன வாழ்வியல் பயன் என்று நீங்கள் சொல்லின் துணையோடு தூர்வாரிக் கேட்கலாம்.

இதற்கு எனது இந்த கவிதை பொத்தாம் பொதுவாக பதிலளிக்கும்.

குப்பை லாரிகளின்
சப்தமற்ற நகர்விலும்
நாசிகளுக்கு அறிவிக்கப்படும்
பால்வெளி வாசனைகள்…

நெருஞ்சி முள்ளின்
தொப்புள் கொடியில்
உபரியாய் முளைத்த
நீள் எலும்புகள்…

குருதிக்கோட்டின்
முள்ளங்கித் தீட்டில்
குதறிக் கொண்ட
ஒற்றை மயிறு…

அண்மைக்கு அப்பால்
ஈயின் நிழலில் ஓய்வுறும்போது
எதிர்கொள்கிறது
சிகரெட்டின் தித்திப்பு!

புரியவில்லையா? வாழ்வின் இருள்வெளிகள் புரிவதில்லை.

சென்றமாதம்தான் பிரபலம் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் அந்த எழுத்தாளருக்கு ‘சாதித்த அக்காடம்மி’ விருது கொடுத்தது பற்றி என்னிடம் ஒரு நிருபன் நேரே வந்து கருத்து கேட்டான்.

அறிவிலிகள். விருதுகள் வாங்குவதென்பது, மனித வெடிகுண்டை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவதற்குச் சமம். பொதுவாக நான் விருதுகளை வடுக்களின் மேல் வடியும் புரை என நினைக்கிறேன் என்றேன்.

‘கோண பீட’ விருதுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கிளம்பியிருக்கின்றனவே என்றான் எச்சிலின் எச்சக் குரலோடு.

நான் தீர்க்கத்தின் தீர்ப்பாகவே பதிலளித்தேன். எனக்கு விருது வழங்கும் தகுதி இங்கே எவனுக்கும் இல்லை. எனக்கு விருது வழங்க நினைப்பவன் தன்னைத்தானே ஒருமுறை நெருப்பால் எரித்து தன் கற்பின் ஸ்திரத்தை நிரூபிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சமூக ஜீவி நான் மட்டுமே!

உங்களோட ‘ஓலைத்தகடு’ சிற்றிதழ் மொத்தம் எத்தனை பிரதிகளை எட்டியுள்ளது என்றான் அந்த நிருபன் கணக்குப்பிள்ளையின் கடைசிக் கேள்விபோல்.

என் எழுத்துக்களின் வாசிப்பாளர்கள் என் அக்குளில் இருந்து கிளம்பியவர்கள். நான், என் நிழல், என் நிழலின் பிம்பங்கள், அந்த பிம்பங்களின் பிரதி பிம்பங்கள் என சந்தாதாரர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக தாண்டவமாடுகிறது என்றேன் பெருமையின் பித்தமேறி.

என்னைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்றான் அவன் புதைகுழியின் பூரிப்பில் நின்றுகொண்டு.

நான் பொதுவாக உதட்டுச் சாயம் பூச மாட்டேன். என் உதடுகளுக்கு கிளுகிளுப்பாக புன்னகைக்கத் தெரியாது. எனக்கு அகண்ட கவர்ச்சியான உடலமைப்பு கிடையாது. இவற்கெல்லாம் ஒத்துழைக்கும் என் வீட்டு நாய்களை வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கட்டி வைக்கப்பட்டிருந்த என் வீட்டு நான்கு கால் மனிதர்களை அவிழ்த்து விட்டேன்.

அவ்வளவுதான். வந்தேறிகளின் வியர்வை பொழியும் அத்துவானக்காட்டில், வயிறூதிக்கிடக்கும் குள்ளநரியைக் குறிபார்த்து இறகுதிர்க்கும் ஒவ்வாமைக் குருவிகளின் கூட்டை நோக்கி ஓடி விட்டான் அந்த நிருபன்.

எதற்கு இப்படி புழக்கத்தில் இல்லாத புரையேறிய வார்த்தைகளை மட்டுமே பேசியும் எழுதியும் கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா?

ஒரு எலக்கியவாதின்னா இப்படித்தான் இருக்கணும்னு ஆகிப்போச்சு. அதான் இந்த மண்டைக் கர்வத்தோட, வார்த்தைக்கு வார்த்தை வன்முறை கலந்தே பேசிக்கிட்டிருக்கேன். சாயங்காலம் ‘பப்’புக்குப் போகணும். ஐசிஐசிஐ அக்கவுண்ட் நம்பர் தர்றேன். ஒரு டென் தௌஸண்ட் போட்டு விடுறீங்களா?

Leave a Comment