ஸாரி கங்குலி!

நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருப்பவர்கள் மேல் எனக்கு எப்போதுமே ஈர்ப்பு இருந்ததில்லை. உதாரணம் – ரஜினி, விஜய், சச்சின் ஆகியோரை என் மனம் கண்டுகொண்டதில்லை. அவர்களது வெற்றியும் கவர்ந்ததில்லை. ஆனால் நம்பர் ஒன்னுக்குச் சமமான தகுதியில் இருப்போரை என் மனம்  கொண்டாடும். கமல், அஜித், இவர்களோடு கங்குலி. இவர்களது முயற்சிகள் ஜெயிக்க வேண்டும்  என்று மனமார விரும்புவேன். இவர்கள் அடையும் சின்னச் சின்ன வெற்றிக்கும் எல்லையில்லாமல்  சந்தோஷப்படுவேன். (இதுகூட ஏதாவது ஃபோபியாவாக இருக்கலாம். ஹாய் மதனைக் கேட்க  வேண்டும்.)

கிரிக்கெட் புலிக்கு சர்வதேச மைதானத்தில் இன்று இறுதிநாள். கங்குலியின் வெறி, துணிச்சல்,  கோபம் எல்லாம் எனக்குப் பிடிக்கும். அவரது ஆட்ட நேர்த்தியைப் பாரா பாராவாகப் பேசுமளவு க்கு எனக்கு கிரிக்கெட் தெரியாது. நானொரு பாமர கிரிக்கெட் ரசிகன். புறக்கணிப்புகளை எ ல்லாம் தாண்டி வந்து சரிந்து விழுந்த தனது இமேஜை நிமிர்த்தி, சரியான நேரத்தில் ஓய்வை  அறிவித்துவிட்டு கௌரவமாக விலகும் தாதா சவுரவை…

இப்படி எழுதிக்கொண்டே போனால் ஏதோ இரங்கல் கடிதம் போலாகிவிடும். கோல்கட்டாவுக்காக கேப்டன் கங்குலியின் 20-20 ஆட்டத்துக்குக் காத்திருக்கிறேன்.

ஒரு விஷயம். 2005ல் கங்குலி ஃபார்ம் இழந்து கேப்டன் பதவியிழந்து மீடியாக்களால் கேலி  செய்யப்பட்டு வந்தபோது நானும் அவரைக் கேலி (காலி)செய்து ஜாலிக் கட்டுரை (ஒரு புலியின்  கதை) ஒன்றை தினமணிக் கதிரில் எழுதினேன். இன்றுவரை நான் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் நானே வெறுக்கும் கட்டுரை அதுவே. இப்போது அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஸாரி கங்குலி!

இணையத்தில் அந்தக் கட்டுரை கிடைக்கலாம். தேடாதீர்கள் ப்ளீஸ்!