நானும் கடத்தல்காரர்களும்!

நான் அந்தக் காரியத்தில் இறங்கியதை ஆர்வம் என்று சொன்னால் மகா அபத்தம். ஆர்வக்கோளாறு என்று சொல்வதே உத்தமம். விகடனில் நான் மாணவ நிருபராகச் சேர்ந்திருந்த சமயம். ஆரம்ப மாதங்களில் ‘எத்தை அனுப்பினால் பப்ளிஷ் ஆகும்’ என்ற வித்தை பிடிபடாமல், ‘கண்டதை’யும் அனுப்பிக் கொண்டிருந்தேன். சில மட்டும் ஏரியா நியூஸாக பிட்டு பிட்டாக வந்து கொண்டிருந்தன.

இரண்டு மாதங்களாக ஜூனியர் விகடன் பெரிய கட்டுரை எதுவும் வரவில்லையே என்ற கவலை. எனக்குமுன் எங்கள் ஊரில் மாணவர் நிருபராக இருந்த கோமதி சங்கர், உதவிக்கு வந்தார். இரண்டு பேருமே சேர்ந்து விஷயங்கள் பிடிக்கலாம் என்றார்.

‘நீ ஸ்ரீவைகுண்டம் போ. மணல் கடத்தல் மேட்டர். அங்கிருந்து தாமிரபரணி ஆத்தங்கரைக்குப் போய், கொள்ளை நடக்குற இடத்துல போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்துடு. மத்த விஷயங்களை நான் பார்த்துக்கிறேன். அங்கே பஸ்-ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே  தினமலர் நிருபர் ஆபிஸ் போட்டிருக்கிறார். அவரைப் பார். உதவி பண்ணுவார்.’

ஆர்வமாகத் தலையாட்டினேன். ‘போற இடத்துல பார்த்துப் பேசு. பத்திரிக்கைக்காரன்னு சொல்லாதே. ரிஸ்க்கு. வேற ஏதாவது சொல்லி ஸ்பாட்டுக்குப் போய் போட்டோ எடுத்துரு’ – இப்படி அவர் சொன்னதும்தான் எனக்குள் கொஞ்சம் பயம் முளைக்க ஆரம்பித்தது.

நான் ஒன்றும் திரண்ட தோள்கள் கொண்ட பலசாலி அல்ல. ஒரு நாற்பத்து நான்கு கி லோ இருந்திருப்பேன். பேச்சு சாதுர்யம்கூட அப்போது கிடையாது. என் கையில் இருந்தது ஸூம் இன், வைட் ஆங்கிள் வசதிகளெல்லாம் இல்லாத சாதாரண யாஸிகா ஸ்டில்-கேமராதான். ஏதோ ஒரு குருட்டு தைரியம். தூத்துக்குடியிலிருந்து ஸ்ரீவைக்கு மதிய நேரத்தில் பேருந்து ஏறினேன். எனக்குத் தோள்கொடுக்க, பொழுதுபோகாமல் வீட்டிலிருந்த நண்பன் சொக்கலிங்கமும் உடன் வந்தான். அவனும் பலசாலி அல்ல. பேச்சுத் திறமை அவனுக்கும் ம்ஹூம்.

மாலையில் ஸ்ரீவையை அடைந்தோம். தினமலர் நண்பரைப் பார்த்தோம். ‘ஸ்பாட்டுப் போக  ஆட்டோ பிடிச்சுக்கோங்க. பத்திரிகைன்னு சொல்லாதீங்க. வேற ஏதாவது சொல்லிக்கோங்க’ – அவர் வழிகாட்டினார். ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தோம்.

‘அண்ணாச்சி, ஆட்டோ வருமா? இங்க ஆத்தங்கரையில அரிய மூலிகைச் செடியெல்லாம் இருக்குதாமே. பார்க்கணும். போக வர எவ்வளவு ஆகும்?’

ஆட்டோ ஏறினோம். ஆட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுத்தபடியே சென்றோம். ‘நாங்க  திருநெல்வேலி யூனிவர்சிட்டிலதான் படிக்கிறோம் அண்ணாச்சி. பாட்டனி. இந்த மூலிகைச் செடியை எல்லாம் தேடிக் கண்டுபிடிச்சு, பறிச்சு, காயவைச்சு நோட்டுல ஒட்ட ணும். அது ஒரு ப்ராஜெக்டு.’

இப்படியெல்லாம் சரளமாகப் பொய் பேச முடிந்தது. எனக்கே ஆச்சரியம்தான். போகும்  வழியிலேயே மணல் டிராக்டர்கள் வருவதும் போவதுமாக இருந்தன. ‘இதெல்லாம் எங்க  போகுது அண்ணாச்சி?’ – அப்பாவிபோலக் கேட்டேன்.

‘எல்லாம் ஆத்துல மண் அள்ளுற வண்டிங்க.’

‘எங்க கொண்டு போவாங்க?’

‘என்னப்பா, இது தெரியாதா? விக்குறதுக்குதான்.’

அந்த டிராக்டர்களை ஆட்டோவிலிருந்தே போட்டோ எடுக்க ‘என் ஆர்வக்கோளாறு’  துடித்தது. ‘வேண்டாமடா, ஸ்பாட்டுல போட்டோ எடுக்குறதுதான் முக்கியம்’ என்று என் ஆறாவது அறிவு அடக்கியது. ஆற்றங்கரையை அடைந்தோம். ‘இன்னும் நிறைய  செடியெல்லாம் இருக்குற இடத்துக்குப் போங்க, அண்ணாச்சி’

சிறிது தொலைவில் சிலர் மணல் அள்ளி டிராக்டர்களில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ஆட்டோவை நிறுத்தச் சொன்னேன். இறங்கி புதர்களை எல்லாம் பார்த்து இது என்ன,  அது என்ன என்று கேட்க ஆரம்பித்தேன். சொக்கலிங்கத்திடம் கண்ணைக் காண்பித்தேன். அவன் ஆட்டோக்கார அண்ணாச்சியை சற்றே தள்ளி அழைத்துச் சென்றான். தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தைப் பார்த்து ‘அது என்ன மரம் அண்ணாச்சி?’ என்றான்.  அங்கே ஒரு வேப்பமரம் நின்று கொண்டிருந்தது.

அப்படியே அங்குள்ள செடிகளைப் புகைப்படம் எடுப்பதுபோல, மணல் அள்ளுபவர்களைப்  படம் எடுப்பதே என் திட்டம். இருள் கவிய ஆரம்பித்திருந்தது. ஃப்ளாஷ் இல்லாமல் போட்டோ எடுக்க முடியாது. ஃப்ளாஷ் போட்டு எடுத்தால்.. அய்யய்யோ!

வேறு வழியில்லை. அப்போது புகைப்படம் ஏதும் எடுக்க முடியவில்லை. ஸ்ரீவைக்குத் திரும்பினோம். ஆட்டோவைக் கட் செய்துவிட்டு காவல் நிலையத்துக்குச் சென்றேன். அங்கே முந்தைய இரவு பிடிபட்ட மண்லாரி நின்று கொண்டிருந்தது. போட்டோ எடுத்துவிட்டு, சப்-இன்ஸ்பெக்டரிடம் சில தகவல்களைத் திரட்டினேன். ஊர் திரும்பினோம்.

மறுநாள். சொக்கலிங்கமும் வந்தான். அதே ஸ்ரீவை. அதே ஆட்டோக்கார அண்ணாச்சி. அதே பொய்களே போதுமானதாக இருந்தது. அதே இடம். மண் எடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். 24 மணி நேர சேவைபோல! சில புதர்களைப் போட்டோ எடுத்துவிட்டு, அதேபோக்கில் டிராக்டரையும்  எடுத்துவிட்டேன்.

கொள்ளையர்கள் பார்த்துவிட, நானும் சொக்கலிங்கமும் கேமராவும் கையுமாக மணல்வெளியில் உயிர்பயத்தில் தலைதெறிக்க ஓட, டிராக்டர்களும் லாரிகளும் எங்களைத் துரத்த… இந்தக்  கற்பனைக் காட்சிகள் எதுவும் நிகழவில்லை.

ஊர் திரும்பி, போட்டோவைக் கழுவக் கொடுத்தேன். மோசமில்லை. நான் திரட்டிய விஷயங்களை கோமதி சங்கரிடம் சொன்னேன். அப்போது மணல் கடத்தலுக்கு எதிராக கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த ஸ்ரீவை தாசில்தாரிடம் கோமதி சங்கர் பேசினார். கட்டுரையை அனுப்பினோம். வெளிவந்தது. ஜூவியில் ஒன்றரைப் பக்கம். நான் எடுத்த புகைப்படம். கீழே மாணவ நிருபர் ஐகானோடு என் பெயர்.

என் தலைக்குப் பின்னால் ஓர் ஒளிவட்டம் தோன்றியதுபோல இருந்தது. அன்று கடத்தல்காரர்களிடம் சிக்கியிருந்தால் தலை இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

(அந்தக் கட்டுரை கைவசம் இல்லை. அதன் ஸ்கேன் பிரதியை நாளை தருகிறேன்.)