உறப்பு ஹார்லிக்ஸ்!

எந்த ஒரு விஷயம் குழந்தைகளிடம் முதலில் சென்றடைகிறதோ, அது நிச்சயம் வெற்றியடையும் என்பது உலகமறிந்த விஷயம். (விஜய் ஆண்டனி கதறடிக்கும் பாடல்களும், விஜய் ஆடும் பாடல்களும் அதிவேகமாக, அநாவசியமாகச் சென்றடைவது நான் வெறுக்கும் விஷயம்.)

பொருள்களுக்கான விளம்பரங்களும் அப்படித்தான். இன்றைய தேதியில் குழந்தைகளைச் சட்டென சென்றடைந்துள்ள ஒரு ப்ராடெக்ட் ‘Foodles’. ஹார்லிக்ஸ் நிறுவனம் Maggiக்குப் போட்டியாக களமிறக்கியுள்ள புதிய நூடுல்ஸ். தனது 25வது வருடத்தைக் கொண்டாடும் மாகிக்கு Foodles நிச்சயமாக கடுமையான சவாலைக் கொடுக்க இருப்பது உறுதி.

‘எனக்கு இனிமே நூடுல்ஸ் வேண்டாம். ஃபுடுல்ஸ்தான் வேணும். இன்னைக்கே வாங்கிட்டு வா’ -‘தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து எனது அக்கா குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அருகிலிருந்த சூப்பர் மார்க்கெட் சென்றேன். விற்பனைக்கு வந்திருக்குமா என்ற சந்தேகத்துடன்தான் உள்ளே நுழைந்தேன். அழகாக, பிரத்யேகமாக மூன்று சுவைகளில் Foodles (பத்து ரூபாய்) பாக்கெட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பொருள்கள் வாங்க வந்திருந்த அநேக பேர், Foodlesஐ எடுக்கத் தவறவில்லை.

நான் ஜாக்கிரதையாக Foodles, Maggi இரண்டுமே வாங்கி வந்தேன். ஒருவேளை Foodles சுவை குட்டீஸ்க்குப் பிடிக்கவில்லை என்றால்?

அக்கா இரண்டையுமே செய்து கொடுத்தாள். குட்டீஸ், சந்தோஷமாகச் சாப்பிட ஆரம்பித்தார்கள். ‘எனக்கு ஃப்டுல்ஸ் மட்டுமே போதும். இனிமே நூடுல்ஸ் வேண்டாம்.’ மாகி பரிதாபமாக ஒதுக்கப்பட்டது. குழந்தை சொன்ன இன்னொரு கமெண்ட் ரொம்ப முக்கியமானது. ‘இது உறப்பு ஹார்லிக்ஸ் சாப்பிடுற மாதிரியே இருக்குது.’

Foodles – என்ற பெயரே அழகானது. பாதி வெற்றி அதில் கிட்டிவிட்டது. ஹார்லிக்ஸ் அறியாத குழந்தைகள் இல்லை. அதிலிருந்து குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு ப்ராடெக்ட். அதுவும் குழந்தைகள் கொண்டாடுவதுபோல ஒரு விளம்பரம். Foodles – குழந்தைகளிடையே 100% வெற்றி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

***

மார்கெட்டிங் மாயாஜாலம் எழுதிய சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் அடுத்த அருமையான புத்தக ‘விளம்பர மாயாஜாலம்.’ ஒரு பொருளை எப்படி விளம்பரப்படுத்தினால் வெற்றி கிட்டும் என்று சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளமால், எப்படியெல்லாம் விளம்பரம் செய்யக்கூடாது என்று சுட்டிக் காட்டுகிறது. வர்த்தகர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் பயனளிக்கக்கூடிய புத்தகம். சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

மார்கெட்டிங் குறித்த சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சி இங்கே.

மார்கெட்டிங் – 91.9

நாளை (ஆகஸ்ட் 30), கிழக்கு பாட்காஸ்ட், ஆஹா 91.9ல் ஒலிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘மார்கெட்டிங் துறை’ குறித்தது.

கிழக்கில் ‘மார்கெட்டிங் மாயாஜாலம்’ என்ற புத்தகத்தை எழுதிய சதீஷ் கிருஷ்ணமூர்த்தி பேசவிருக்கிறார். மார்கெட்டிங் என்றால் என்ன என்பது முதல், மார்கெட்டிங்கின் அவசியம், பல நிறுவனங்களின் மார்கெட்டிங் நுட்பங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. கேட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

சதீஷ் குறித்து ஓர் அறிமுகம் : அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா டெம்பிள் யுனிவர்சிடியில் எம்.பி.ஏ. படித்தவர். மெக்கான் எரிக்சன், முத்ரா போன்ற விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியவர். கவின் கேர், கிரிக்கின்ஃபோ போன்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் மேலாளராகப் பணி புரிந்தவர். தற்போது பல தமிழக நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராகப் பணிபுரிகிறார். அத்துடன் IIPM – சென்னை, ITM – சென்னை, அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் – கோவை ஆகிய நிர்வாகவியல் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் துறையில் பாடங்கள் நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியப்படும் நீதி யாதெனில், வன் ஒருவனுக்குத் தன்னைத் தானே மார்கெட்டிங் செய்யத் தெரிந்திருக்கிறதோ அவனே வெற்றியாளனாகிறான்.