அரைவேக்காடு!

பொதிகையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்… 

அதிலும் சமையல் குறிப்பு நிகழ்ச்சி Live-ஆக ஒளிபரப்பு…

குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த பெரியம்மா கேமராவுக்கு பழக்கமில்லாதவர் போல. கேமராவின் திசையைத் தவிர மற்ற திசைகளில் எல்லாம் பார்த்து பேசிக் கொண்டிருந்தார். அவ்வப்போது ‘நான் பேசுறது, செய்யறது சரியா?’ என்பது போல எதிரிலிருப்பவர்களிடம் பார்வையால் பேசிக் கொண்டார்.

கைகள் மட்டுமல்ல, பேசப்பேச அவருக்கு குரலும் நடுங்கியது. ஆனால் என்ன, அவர் சொன்ன சமையல் குறிப்புகள் அனைத்துமே புதுமையானவை. விநாயகருக்கு உகந்ததாகக் கருதப்படும் விளாம்பழத்தைக் கொண்டு ஏகப்பட்ட விஷயங்கள் சொன்னார். விளாம்பழ பஞ்சாமிர்தம், விளாம்பழ ரசம், விலாம்பழ துவையல்… இப்படி. பெரியம்மாதான் தடுமாறுகிறார் என்றால், கேமராமேன் அதற்குமேல். பல பழங்கள் கலந்த கூழ்போன்ற பஞ்சாமிர்தத்தில் விளாம்பழம் தனியாகத் தெரியுமளவுக்கு டைட்-குளோஸப்பில் காட்டி படுத்தினார்.

ஒரு கட்டத்தில் பெரியம்மாவுக்கு தொண்டை வற்றி விட்டது. பேச்சு வரவில்லை. அடப்போங்கப்பா என அருகிலிருந்த பாட்டிலை எடுத்து மடக் மடக் என தண்ணீர் குடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்தச் சமயத்தில் கேமராமேன் தட்டுத்தடுமாறி அருகிலிருந்த பிள்ளையார் சிலையின் தொப்பையை நோக்கி கேமராவைத் திருப்பிக் கொண்டார்.

சில நொடிகள் கழித்து பெரியம்மா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ‘கம்பு’ குறித்த சமையல் குறிப்புகளைப் பேச ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே தடுமாற்றம். பேச வந்தது மறந்துவிட்டது. ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்று வரும் என்று ஆசையாகக் காத்திருந்தேன். விளம்பரங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள்.

நாலைந்து விளம்பரங்களுக்குப் பிறகு மீண்டு வந்த பெரியம்மா, கம்பு குறித்த சமையல் குறிப்புகளை வேக வேகமாக ஒப்பிக்க ஆரம்பித்தார். (இருந்தாலும் அவையெல்லாமே மிக அருமையான குறிப்புகள்.) அதன்பின் பிள்ளையாருக்குப் பிரசாதமாக வேறு என்னவெல்லாம் படைக்கலாம் என்று சொல்ல ஆரம்பித்தார்.

ஏகப்பட்ட பதார்த்தங்களை தன் வீட்டிலேயே தயாரித்து, வண்ண வண்ண டப்பர்வேர்களில் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார். Live-விலும் ஏதோ ஒன்று செய்து காட்ட வேண்டுமல்லவா. அதனால் கடைசியாக, தேங்காய்ப்பூ கலந்த அரிசிமாவுக் கொழுக்கட்டை செய்ய ஆரம்பித்தார். மாவை உருண்டையாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து குக்கருக்குள் வேக வைத்தார்.

பெரியம்மா பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை. நிகழ்ச்சியை முடிக்க வேண்டியதுதான். ஆனால் ஏதாவது பேசித்தான் ஆகவேண்டும். ‘கொழுக்கட்ட வேக பத்து நிமிஷம் ஆகும்’ என்றார் கொஞ்சம் டென்ஷனாக. ‘ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்’ என்று எதிர்முனையில் இருந்து சொல்லியிருப்பார்கள் போல.

‘விநாயகரை வழிபட இப்படியெல்லாம் நிறைய செஞ்சு வழிபடணும்னு இல்ல. ரெண்டு பழம், வெல்லம் வைச்சுகூட வழிபடலாம்’ என்றார் அப்பாவியாக. மேற்கொண்டு ஏதேதோ சொல்ல முயற்சி செய்தார்.

‘வணக்கம்’ சொல்லச் சொல்லிவிட்டார்கள் போல. சொல்லி விடைபெற்றார்.

அச்சமயத்தில் கொழுக்கட்டை, அரைவேக்காடாகத்தான் இருந்திருக்கும் – பொதிகை போல.