மயிலாப்பூரில் மார்க்கோ போலோ!

‘தன்னைத் தானே பலி கொடுக்கத் துணிந்த மாவீரன்!’

இந்தக் கோஷம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. அழகாக வடிவமைக்கப்பட்ட தேர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் நடுநாயகமாக ஒருவன் அமர்ந்திருந்தான். பார்த்தால் அரசன் போலவோ, முக்கிய அமைச்சர் போலவோ, வசதிமிகுந்த செல்வந்தன் போலவோ தெரியவில்லை. சாதாரணமான ஆள்தான். அவன் கையில் கத்திகளை ஏந்தியிருந்தான். பலரும் ஒன்றுகூடி அந்தத் தேரை வீதி வீதியாக இழுத்துச் சென்றார்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மார்க்கோ போலோவுக்கு அவர்கள் எழுப்பிய அந்த கோஷத்துக்கான அர்த்தம் விளங்கவில்லை. விசாரித்தார்.

அவன் ஒரு குற்றவாளி. அவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள். இங்கே மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், இஷ்ட தெய்வத்துக்குத் தம்மைப் பலி கொடுக்குமாறு விண்ணப்பம் வைக்கலாம். அதற்கான அனுமதி கிடைத்தால், குற்றவாளியின் சொந்த பந்தங்கள் அவனை இதுபோல தேரில் வைத்து நகரம் முழுவதும் ஊர்வலம் கொண்டு செல்வார்கள். தெய்வத்துக்காக, தன்னைத் தானே பலி கொடுக்க முன்வந்த அவனை வாழ்த்தி கோஷமிடுவார்கள். அவன் கையில் பன்னிரண்டு கூரிய கத்திகள் வழங்கப்பட்டிருக்கும். தேர், பலி பீடத்துக்குச் சென்றதும் குற்றவாளியே முதலில் இரு கத்திகளால் தன் தொடைகள் இரண்டில் குத்திக் கொள்வான். வலிமிகுதியில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அலறுவான். பின் உடலில் பிற பாகங்களில் மற்ற கத்திகளை இறக்க ஆரம்பிப்பான். பேரலறலோடு பன்னிரண்டாவது கத்தியை இதயத்தில் இறக்கி, இறந்து போவான்.

பின் சொந்த பந்தங்களால் அவனது உடல், தகனம் செய்ய எடுத்துச் செல்லப்படும். தகன நெருப்பில் அவனது மனைவியும் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்
(சதி). அப்படி நெருப்பில் இறங்க மறுப்பவளை, எல்லோரும் திட்டுவார்கள். அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளிவிட்டு விடுவார்கள். கணவனுக்காக மனைவி மட்டுமல்ல, அரசன் இறந்தால் அவருக்கு நெருக்கமான சில நூறு வீரர்களும் இதுபோல நெருப்பில் விழுந்து இறக்க வேண்டும். இவ்வாறு நெருப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களுடைய மறுபிறப்பில் அவர்களுடனேயே பிறந்து பணிவிடை செய்வார்கள் என்பது இங்குள்ள நம்பிக்கை.

அன்றைய தமிழகத்தில் நடைமுறையில் இருந்த இதுபோன்ற சில விஷயங்களைக் கண்டு, வெலவெலத்துப் போனார் மார்க்கோ போலோ. அதே சமயம் இன்னொரு விஷயம் அவரை ஆச்சரியப்படுத்தியது. அது தமிழர்களின் சுத்தம். ‘இங்குள்ளவர்கள் தினமும் இருவேளை குளிக்கிறார்கள். குளித்த பின்பே உணவருந்துகிறார்கள். அதுவும் வலக்கையால் மட்டும். இடது கையை உடலின் மறைவு உறுப்புகளைச் சுத்தம் செய்யவும், மற்ற விரும்பத்தகாத வேலைகள் செய்ய மட்டுமே உபயோகிக்கிறார்கள். குவளைகளில் உதடுகளை வைத்து உறிஞ்சி நீரை அருந்துவதில்லை. தலைக்கு மேலே உயர்த்தி வாயினுள் ஊற்றுகிறார்கள். அந்நியர்களுக்குத் தம் குவளைகளில் நீர் கொடுக்க மறுக்கிறார்கள். பதிலாக அவர்களுடைய பாத்திரங்களிலோ, கைகளைக் குவிக்க வைத்தோ நீரை ஊற்றுகிறார்கள்.’

வெத்தலையைப் போட்டேன்டி.. புத்தி கொஞ்சம் மாறுதடி என்பதுபோல ரசித்து ரசித்து ‘தாம்பூலம்’ குறித்து எழுதி வைத்துள்ளார் மார்க்கோ போலோ. பொதுவாக அனைவருமே ஒருவகை பச்சை இலையோடு, வாசனை பொருள்கள், கற்பூரம், நீர்த்த சுண்ணாம்பு சேர்த்து மென்றபடி இருக்கிறார்கள். அது புத்துணர்வு கொடுப்பதோடு உடல் நலத்திற்கும் நன்மை செய்கிறது. அவ்வப்போது அதன் மூலம் சுரக்கும் எச்சிலைத் துப்புகிறார்கள். எதிரியை அவமானத்தப்படுத்த வேண்டுமென்றால், அந்நபரைத் தேடிச் சென்று முகத்திலேயே உமிழ்கிறார்கள். அவமானப்படுத்தப்பட்ட நபர் அரசரிடம் சென்று முறையிடலாம். அரசர், சம்பந்தப்பட்ட இருவரையும் வரவழைத்து கையில் வாள், கேடயத்தை வழங்குவார். மைதானத்தில் இருவரும் போரிட ஆரம்பிப்பார்கள். மக்கள் ஆர்ப்பரிக்க, ‘சபாஷ் சரியான போட்டி’ என்று அரசர் மகிழ, இருவரில் யாராவது ஒருவர் கொல்லப்படும்வரை சண்டை தொடரும்.

தமிழகத்தில் மார்க்கோ போலோ சுற்றிய இடங்களில் முக்கியமானது மயிலாப்பூர். இந்தியா முழுவதும் பரவியுள்ள பிராமணர்களின் பூர்விக இடம் அதுதான் என்கிறார். தோள் வழியே மார்பின் முன்பும் முதுகுக்குப் பின்பும் தொங்கும் பருமனான ஒரு பருத்தி நூலை வைத்து அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கண்டுகொள்ளலாம். அவர்கள் நேர்மையானவர்கள். வெளி வியாபாரிகள், புதியவர்கள் அவர்களை நம்பி பொருள்களை ஒப்படைத்தால் அதை நல்ல முறையில் வியாபாரம் செய்து முறையாக கணக்கை ஒப்படைப்பார்கள். வெளியே கிளம்பும்போது ஏதாவது விஷச் சிலந்தி கண்ணில் தென்பட்டால் அது எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதைப் பார்த்து அதற்கேற்ப வியாபார முடிவுகளை எடுப்பார்கள். அதேபோல வெளியே கிளம்பும் சமயத்தில் யாராவது தும்மிவிட்டால் அவ்வளவுதான். வேலையைக் கைவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று விடுவார்கள்.

மார்க்கோ போலோ மயிலை கபாலீஸ்வரரைத் தரிசித்தாரா, தெப்பக்குளத்தில் முதுகு தேய்த்துக் குளித்தாரா, கற்பகாம்பாள் மெஸ்ஸில் மெதுவடை சாப்பிட்டாரா என்றெல்லாம் தெரியவில்லை. அப்படியே மயிலையிலிருந்து பொடிநடையாக சாந்தோம் புனித தாமஸ் தேவாலயத்துக்குச் சென்றிருக்கிறார் என்பது மட்டும் அவரது குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

தாமஸ், இந்துக்களால் கொல்லப்பட்டார், எதிரிகளால் கொல்லப்பட்டார் என்று ஏகப்பட்ட சர்ச்சைகள் உண்டு. ஆனால் மார்க்கோ போலோ, அதுகுறித்த வேறொரு தகவலை எழுதி வைத்துள்ளார். இயேசுவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவரான தாமஸ், கி.பி. 72 சமயத்தில் சென்னை, சின்ன மலை (Little Mount) பகுதிக்கு வந்துள்ளார். அங்கே மயில்கள் அதிகம். கௌவி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவன், மயிலை வேட்டையாட ஈட்டி ஒன்றை எறிய, அது தாமஸைத் தாக்கியது. அவர் ஆண்டவருக்கு நன்றி சொன்னபடியே இறந்தார். அவரது உடல் மயிலையில்தான் அடக்கம் செய்யப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் அந்த இடத்தில் சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டது.

அந்த ஆலயத்தில் புனித தாமஸின் கல்லறையைத் தரிசித்ததாக மார்க்கோ போலோ குறிப்பிட்டுள்ளார். அது கி.பி. 1292 சமயத்தில் இருந்திருக்கலாம். (பின் பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் அங்கே பெரிய ஆலயத்தை எழுப்பியுள்ளனர். காலப்போக்கில் அது சிதைந்து போனது. தற்போதுள்ள சாந்தோம் தேவாலயம், 1893ல் பிரிட்டிஷாரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது என்பதெல்லாம் உபரி விஷயங்கள்.)

கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும், புனித தாமஸ் கொல்லப்பட்ட தலத்திற்குப் பாதயாத்திரையாக வருவதை மார்க்கோ போலோ கண்டார். செந்நிறமாக அங்கே காணப்படும் மண்ணை பயபக்தியுடன் அள்ளிக் கொண்டு சென்றார்கள். எதற்கு என்று விசாரித்தார். ‘நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இந்த மண்ணை நீரில் கலந்து கொடுத்தால் அவர்களுடைய நோயெல்லாம் குணமாகிவிடும்.’

தமிழகத்திலேயே மர்பிலி என்ற மலைப்பிரதேச மக்களுடைய ‘வைர வேட்டை’ குறித்து மார்க்கோ சொல்லியுள்ள தகவல்கள் விநோதமானவை. செங்குத்தான பாறைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும் கொண்ட இந்தப் பிரதேசத்தில் வைரங்கள் செழித்துக் கிடக்கின்றன. ஆனால் அங்கே மனிதனால் செல்ல முடியாது. விஷப் பாம்புகளும் அதிகம். அவற்றை வேட்டையாடவே கழுகுகளும் பருந்துகளும் நிறைந்துள்ளன. இந்தச் சூழலிலும் அந்தப் பறவைகள் மூலமாகவே வைர வேட்டை நடத்தப்படுகிறது. எப்படி?

வைர வேட்டைக்காரர்கள், உயரமான இடங்களில் நின்று கொண்டு, வைரங்கள் கிடக்கும் பள்ளத்தாக்குகளில் இறைச்சித் துண்டுகளை எறிகிறார்கள். கழுகுகளும் பருந்துகளும் அந்தத் துண்டுகளை எடுத்துக் கொண்டு உயரமான இடங்களுக்கு வருகின்றன. பின் வேட்டைக்காரர்கள் பறவைகளை விரட்டிவிட்டு, அந்த இறைச்சித் துண்டுகளைக் கைப்பற்றுகிறார்கள். அதில் வைரங்கள் ஒட்டியிருக்கும். பறவைகள் இறைச்சித் துண்டுகளைச் சாப்பிட்டுவிடும் பட்சத்தில், அவை எச்சமிடுவதற்காகக் காத்திருக்கிறார்கள். அவை வைரம் நிறைந்த கழிவுகள். நம்பவே முடியாத இந்த ‘வைர வேட்டை’ நிகழ்ந்த இடமான மர்பிலி பிரதேசம் எங்கே இருக்கிறது என்பது குறித்த குழப்பங்கள் இன்றும் உள்ளன.

பழைய காயல். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு ஊர். அங்கே சென்ற மார்க்கோ போலோ, காயல் என்ற பெயரில் அதைக் குறிப்பிட்டுள்ளார். ‘மாபரின் (தமிழகம்) மிக முக்கியமான துறைமுக, வணிக நகரம் இது. ஏடன், அரேபிய நாடுகளிலிருந்து இங்கே வரும் கப்பல்கள் மூலமாக குதிரைகளும் பிற பொருள்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளி தேசங்களிலிருந்து இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் அனைத்துமே காயலுக்கு வராமல் சென்றதில்லை.’

(மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகளில் இருந்து)

 

குபிலாய் கான் கூரியர் சர்வீஸ்

மாலையில் புக் செய்தால் மறுநாள் காலையில் டெலிவரி. இன்றைக்கு இருக்கும் போக்குவரத்து வசதிகளில் கூரியர் சர்வீஸ் குறித்து அதிகம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசர் குபிலாய் கானின் ராஜ்ஜியத்தில் அதி அற்புதமாக கூரியர் சர்வீஸ் நடந்துள்ளது. அது குறித்து மார்க்கோ போலோ எழுதி வைத்துள்ள குறிப்புகளில் இருந்து…

***

குபிலாய் கானின் ராஜ்ஜியம் முப்பத்தி நான்கு மாகாணங்களைக் கொண்டது. ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரங்களையும் இணைக்கும் வகையில் அற்புதமான சாலைகள் இருந்தன. சுமார் முப்பது மைல்களுக்கு ஒரு சத்திரம் கட்டப்பட்டிருந்தது. பயணிகள், வியாபாரிகள் தங்கும்படியான அருமையான வசதிகள் கொண்ட பெரிய சத்திரங்கள் (மார்க்கோ போலோ அவற்றை ‘யாம்ப்’ என்றழைக்கிறார்). சிற்றரசர்கள் முதல் சில்லறை வியாபாரிகள் வரை தங்கும்படியான  தரத்தில், ரகத்தில் அறைகள் அங்கே இருந்தன.

குபிலாய் கான்

ஒரு சத்திரத்துக்கும் இன்னொரு சத்திரத்துக்கும் இடையில் ஒவ்வொரு மூன்று மைல் தொலைவிலும் ஓர் அஞ்சல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் வேகமாக ஓடக்கூடிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். தவிர ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஓர் எழுத்தர் உண்டு. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செய்தியை வேகமாகக் கொண்டு செல்ல இந்த ஏற்பாடு. செய்தியில் அது எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, எங்கே கொண்டு செல்லப்பட வேண்டும் போன்ற விவரங்கள் தெளிவாக இருக்கும். தூரத்தில் மணியோசை கேட்டாலே, ஓர் அஞ்சல் நிலையத்திலுள்ள ஓட்டக்காரர், தன் இடுப்பில் மணி பெல்டைக் கட்டிக் கொண்டு தயாராகி விடுவார். அவர் வந்த நொடி செய்தியை வாங்கிக் கொண்டு அடுத்தவர் ஓட ஆரம்பிப்பார், ரிலே ரேஸ் போல. ஓடி வரும் நபர் வரும் தேதியை, நேரத்தை எழுத்தர் குறித்துக் கொள்ள வேண்டும். இதனால் செய்தி தவறிப் போனால் எங்கே, யாரால் தவறிப் போனது என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா.

மார்க்கோ போலோ

ஓட்டக்காரர் மூன்று மைல்கள்தான் ஓட வேண்டும் என்பதால் செய்தி வேகமாக அடுத்தடுத்த அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று சேர்ந்தது. பொதுவாக பத்து நாள்கள் பயண தொலைவுள்ள நகரங்களுக்குக் கூட, இரண்டே நாள்களில் செய்தி சென்று சேருமளவுக்கு தபால் சேவையில் செம வேகம். முதல் நாள் காலையில் ப்ரெஷ்ஷாகப் பறிக்கப்பட்ட பழங்கள்கூட, மறுநாள் மாலைக்குள் குபிலாய் கானைச் சென்றடைந்தன. அடுத்தது குதிரைகள் வழி நடந்த கூரியர் சேவை பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு சத்திரங்களிலும் சுமார் இருநூறு குதிரைகள் வரை பராமரிக்கப்பட்டன. குதிரையை வேகமாகச் செலுத்தும் வீரர்களும் ஒவ்வொன்றிலும் இருந்தார்கள். குபிலாய் கான் தன் மாகாணங்களுக்கு அனுப்பும் செய்திகள், குபிலாய் கானுக்கு அனுப்பப்படும் செய்திகள் எல்லாமே குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. ஓரிடத்தில் இருந்து கிளம்பும் குதிரை வீரர், முப்பது மைல் தொலைவிலுள்ள ஒரு சத்திரத்தை அடைவார். வந்த குதிரை களைத்திருக்கும் அல்லவா. ஆகவே அங்கே அடுத்த குதிரை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏறி அடுத்த சத்திரத்துக்குச் செல்வார். வீரர் களைப்படையும் பட்சத்தில், சத்திரத்தில் மாற்றுவீரரும் ரெடியாகவே இருப்பார்.

குதிரை வீரரோ, ஓட்டக்காரரோ, பயண வழியில் ஆறுகள், ஏரிகளைக் கடக்க வேண்டியதிருந்தால் அதற்கென கரையில் எப்போது படகுகளும் தயார் நிலையிலேயே இருந்தன. இடையில் பாலைவனப் பயணம் மேற்கொள்ள வேண்டியதும் இருந்தது. அப்போதெல்லாம் பாலைவன எல்லையில் அவர்களுக்குத் தேவையான நீர், உணவு அளிக்க நிலையங்கள் இருந்தன. அவர்களோடு உதவிக்குச் செல்ல சிறு குழுவினரும் காத்திருந்தார்கள். ஒவ்வொரு குதிரை வீரருக்கும், ஓட்டக்காரருக்கும் வழியில் அடையாளத் தகடுகள் அளிக்கப்பட்டிருந்தன.

ஏதாவது ஒரு மாகாணத்தில் நிலவும் பதற்றம், கலவரம் உள்ளிட்ட அவசரச் செய்திகளைக் கொண்டு செல்ல வேண்டியதிருந்தால், இரண்டு குதிரைகளின் இரண்டு வீரர்கள் சேர்ந்து பயணம் செய்தார்கள். அதுவும் குதிரைகளின் உடலோடு தம் உடலைத் துணியால கட்டிக் கொண்டு அதிவேகமாக. ஒருவருக்கு ஆபத்து என்றாலும் அடுத்தவர் அடுத்த சத்திரம் வரை சென்று சேர்ந்துவிடலாம் என்பதால் இந்த ஏற்பாடு. இம்மாதிரியான அவசரமாகச் செல்லும் வீரர்கள் கையில் அதை உணர்த்தும்விதமாக வல்லூறு பொறிக்கப்பட்ட பட்டயம் இருந்தது. இந்த குதிரை வீரர்களுக்கும், தபால் ஓட்டக்காரர்களுக்கும் நல்ல சம்பளம் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் பணியில் தவறு நேர்ந்தால், கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன.

***

தமிழக அரசியலில் நான் இப்போது எழுதி வரும் புத்தம் புது பூமி வேண்டும் தொடரில் மார்க்கோ போலோவின் பயணங்கள் குறித்த அத்தியாயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆயிரம் தீவுகள்

தமிழக அரசியல் இதழில் எழுதிவரும் புத்தம் புது பூமி வேண்டும் தொடரிலிருந்து ஓர் அத்தியாயம்.

ப்போது வானமும் பூமியும் ஒன்றாக ஒட்டித்தான் கிடந்தன. ரூ என்ற கடவுள்தான் வானத்தைத் தூக்கி உயரே நிறுத்தி வைத்தார். பின்பு ரூ, புதிதாக படகு ஒன்றைக் கட்டினார். எதற்கு? பூமி முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக. அது, ரூவின் அழகான சகோதரி ஹினாவின் ஆசை.

இந்த பூமி எவ்வளவு பெரியது? எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது? எங்கெல்லாம் புதிதாக நிலங்கள் இருக்கின்றன? இப்படி அனைத்தையும் தெரிந்து கொள்வதற்காக இந்தப் பயணம். படகு கிளம்பியது. ஹினா, புதிய நிலப்பகுதிகளைக் கண்டு சொல்வதற்காக படகின் முன்புறம் இருந்துகொண்டாள். ரூ, படகின் பின்புறம் இருந்தபடி துடுப்பு போட்டார். ‘உலவும் கடல் காற்றினிலே’ என்று பகலில் பாடல்களோடு பயணம். இரவில் ரூ உறங்கினார்.

எட்டுத்திசைகளிலும் சுற்றி வந்தார்கள். புதிதாக பல தீவுகளைக் கண்டுபிடித்தார்கள். பயணம் நீண்டுகொண்டே சென்றது. ஒருநாள். சூரியன் மறையும் வேளை. எதிர்த்திசையில் கடலிலிருந்து நிலா பாதி வெளிப்பட்டு தெரிந்தது. அதன் ரம்மியத்தைக் கண்டு மயங்கி நின்ற ஹினாவுக்கு நிலவுக்குச் செல்ல ஆசை பிறந்தது. படகு நிலவை நோக்கி நகர்ந்தது.

அத்தனை அழகான நிலவில் சென்று இறங்கிய ஹினா, திரும்பிவர மனமின்றி அங்கேயே தங்கிவிட்டாள். ரூவின் பயணங்கள் தொடர்ந்தன. நிலவிலிருந்தபடியே தன் சகோதரனுக்கு வழிகாட்ட ஆரம்பித்தாள் ஹினா.

இது பல நூற்றாண்டுகளாக பாலிநேசியர்கள் சொல்லி வரும் புராணக் கதை. யார் அவர்கள்?

பாலிநேசியர்களின் பயணம்

பாலிநேசியர்கள், ஆதி உலகின் ஆகச் சிறந்த கடல் பயணிகள். தீவுகளில் வசித்தவர்கள். படகு கட்டுவதில் கில்லாடிகள். மீன்பிடித்தல் முக்கியத் தொழில். மீன் பிடிக்க கடலில் புது பகுதிகளைத் தேடி முன்னேறும்போது புதிய தீவுகள் தென்பட்டன. ‘நான் மீனைப் பிடிக்கப் போனேன். ஒரு தீவைப் பிடித்து வந்தேன்’ என்று சந்தோஷமாக பெண்டாட்டி, பிள்ளைகளோடு தீவு விட்டு தீவு தாவி குடியேற்றத்தைப் பரப்பினார்கள்.

அவர்களது படகுகள் மரம், கல், எலும்பு, தேங்காய் நாரால் திரிக்கப்பட்ட கயிறு ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டவை. நீண்ட தூரப் பயணங்களுக்கென இரண்டு படகுகளுக்குக் குறுக்கே சில கட்டைகள் வைத்து இணைத்துக் கட்டினார்கள். இந்த இரட்டைப் படகுகளில் ஒன்று மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு. இன்னொன்று உணவுப் பொருள்களுக்கு. குளிர், மழை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு திறந்த படகில் பல நூறு மைல்கள் பயணம்.

சரி, பாதையை எப்படி நினைவில் வைத்துக் கொண்டார்கள்? இயற்கையே துணை. வானமே வழிகாட்டி. சூரியன், நிலவு, குறிப்பிட்ட இடத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து பாதைகளை யூகித்துக் கொண்டார்கள். கடல் நீரோட்டம், மேகங்கள் நகரும் திசை, பறவைகள் உள்பட இன்னும் சில விஷயங்கள் அவர்களை வழி நடத்தின. வானம் தெளிவாக இருக்கும்வரை எல்லாம் சரி. புயல் மழை நாள்களில்? பிழைத்துக் கிடந்தால் பயணம் தொடரும். இல்லையேல், ஜல சமாதி.

அருகில் தீவு ஏதாவது தென்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பாலிநேசியர்கள் கடைபிடித்த உத்தி சுவாரசியமானது. பயணத்தில் ஃப்ரிகேட் என்ற கடல் பறவைகளையும் தங்களோடு கொண்டு சென்றார்கள். அவை நீண்ட தூரம் கடலில் பறக்கும் திறன் இல்லாதவை. நீரில் இறக்கைகள் நனைந்துவிட்டால் அவற்றால் பறக்க இயலாது. அருகில் நிலப்பரப்பு இருந்தால் மட்டுமே அவை நீர்மேல் பறக்கும். பாலிநேசியர்கள் தம் படகிலிருந்து ஃப்ரிகேட் பறவைகளைப் பறக்க விடுவார்கள். அவை வெகு சீக்கிரத்தில் படகுக்குத் திரும்பிவந்துவிட்டால் அருகில் நிலப்பரப்பு இல்லை என்று பொருள். அவை திரும்பவேயில்லை எனில், தீவை நெருங்கி விட்டதாக அர்த்தம். உணவு தேடி கூட்டமாகப் பறந்து செல்லும் பிற பறவைகளை வைத்தும் புதிய தீவுகளைக் கண்டடைந்தார்கள்.

இப்படி பாலிநேசியர்கள் கண்டடைந்த தீவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயிரத்துச் சொச்சம் இருக்கலாம். பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின், பசிபிக் கடலில் ஐரோப்பியர்களின் நெடும் பயணங்கள் ஆரம்பமாயின. அப்போது பாலிநேசியர்களின் தீவுகளைச் சென்றடைந்த ஐரோப்பியர்களுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி, எக்கச்சக்க ஆச்சரியம்.

எத்தனை தீவுகள். அத்தனையிலும் மக்கள். ஆனால் இன்னும் கற்கால மனிதர்கள் போலவே இருக்கிறார்களே. எந்தவிதமான உலோகத்தையும் இவர்கள் பயன்படுத்துவதாகத் தெரியவில்லையே. பல மைல்கள் கடந்து ஒரு தீவை விட்டு இன்னொரு தீவுக்கு எப்படி இடம் பெயர்ந்திருப்பார்கள்? அடடா, எவ்வளவு பெரிய படகுகள்? எப்படி வடிவமைத்திருப்பார்கள்?

அட, கரும்பு, தென்னை, மூங்கில், வாழை, மலை ஆப்பிள் – இத்தனை விதமான பயிர்களை விளைவிக்கிறார்களே. எல்லா தீவுகளிலும் இந்தப் பயிர்கள் இருக்கின்றனவே, எப்படி? சர்க்கரை வள்ளிக் கிழங்கும் இருக்கிறதா? அது தென் அமெரிக்காவுக்கு சொந்தமானதல்லவா? அது எப்படி இங்கு வந்தது?

இன்னும் சொல்லப்போனால் அநேக பாலிநேசிய தீவுகளில் மக்கள் பேசும் மொழியும் ஏறக்குறைய ஒரேபோலத்தான் இருந்தது. அவர்களது கலாசாரம், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் – இப்படி பல விஷயங்கள் பொதுவாக இருந்தன. தங்கள் தீவைச் சுற்றியிருந்த பல தீவுகளோடு அவர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள். எந்தெந்த தீவுகள் எவ்வளவு தொலைவில் எந்தெந்த திசைகளில் அமைந்திருக்கின்றன என்று தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார்கள்.

கடல் பயணம் குறித்த பாலிநேசியர்களின் அறிவைக் கண்டு ஐரோப்பியர்களுக்குத் தலை கிறுகிறுத்தது. மெகல்லன், வாஸ்கோ ட காமா, கொலம்பஸ் இவர்களுக்கெல்லாம் தாத்தன்கள் இங்கே இருக்கிறார்களே என்று வாய்பிளந்து நின்றார்கள். ஐரோப்பியர்கள் அந்தத் தீவுகளில் கால்பதித்த பின்னரே பாலிநேசியர்களின் சிறப்பை உலகின் மற்ற பகுதியினர் அறிய ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகே பாலிநேசியர்களின் பயணங்கள் குறித்த ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன.

வரைபடத்தில் பாலிநேசியாவின் அமைவிடம் எது?

ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கில்  மீன்களுக்கு அள்ளிப்போட்ட பொரிபோல, ஆயிரத்துச் சொச்ச தீவுகள் உள்ளன. ஆரம்ப கதையில் வந்த அண்ணனும் தங்கையும் பயணம் செய்ததாகச் சொல்லப்படுவது இங்குதான். இந்தப் பகுதிகளில் கி.மு.வில் ஆரம்பித்த குடியேற்றங்கள், மெள்ள மெள்ள கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருக்கின்றன. எந்த எல்லைவரை? ஆஸ்திரேலியாவுக்கு நேர்கிழக்கில் ஈஸ்டர் தீவுகள் வரை. தென்கிழக்கில் நியு ஸிலாந்து வரை. வடகிழக்கில் ஹவாய் (Hawai) தீவுகள் வரை.

இந்த மூன்றையும் வரைபடத்தில் கோடுகளால் இணைத்துப் பார்த்தால் குடும்பக் கட்டுப்பாட்டுச் சின்னம் தெரியும். அந்த முக்கோணத்துக்குள் அடங்கிய தீவுகள் சேர்ந்த பகுதிதான் பாலிநேசியா (Polynesia, கிரேக்க மொழியில் ‘பல தீவுகள் சேர்ந்த பகுதி’ என்று பொருள்). அங்கே குடியேற்றத்தை ஏற்படுத்தியவர்களே பாலிநேசியர்கள் (Polynesians).

சரி, பாலிநேசியர்களின் முன்னோர்கள் எந்தப் பகுதியிலிருந்து வந்திருக்கக் கூடும்?

உலகின் முதல் கடல் கடந்த குடியேற்றம் பிலிப்பைன்ஸில் நடந்திருக்கலாம்.  கி.மு. 50000 சமயத்தில் இந்தோனேஷியாவின் தெற்குப் பகுதிகளில் காணப்படும் குட்டிக் குட்டித் தீவுகளுக்கு மனிதன் இடம் பெயர்ந்திருக்கலாம். அப்போது அந்தக் குட்டித் தீவுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான கடல் மட்டம் இப்போது இருப்பதைவிட சுமார் நூறு மீட்டர் வரை குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் என்ன, பாலம் கட்டிக் கொடுக்க இதிகாச ராமருக்கு அனுமன் அமைந்ததுபோல, அந்த மக்களுக்கு யாரும் கிடைக்கவில்லை. ஆக, படகுகள் மூலம்தான் அவர்கள் ஆஸ்திரேலியாவிலும் நியு கினியாவிலும் குடியேறியிருக்க வேண்டும். பின் அங்கிருந்து அருகிலுள்ள தீவுகளுக்கு குடியேற்றங்கள் பரவியிருக்க வேண்டும்.

கிறித்துவுக்கு முன்னரே ஹவாய் தீவுகளை பாலிநேசியர்கள் அடைந்திருக்க வேண்டும். கி.பி. 440ல் ஈஸ்டர் தீவில் குடியேறியிருக்க வேண்டும். கி.பி. 1150ல்தான் நியு ஸிலாந்தில் கால் பதித்திருக்க வேண்டும். இவை எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் தகவல்கள்.

ஆனால் வரலாறு பாலிநேசியர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்ன பெயருடைய பாலிநேசியர், இந்த ஆண்டில், இன்ன தேதியில் இந்தத் தீவைக் கண்டடைந்து தம் ரைட் லெக்கைப் பதித்தார் என்று எழுதப்பட்ட ஆதாரங்கள் எதுவுமே கிடையாது. பாலிநேசியர்கள் குறித்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எல்லாமே கடந்த நான்கு நூற்றாண்டுகளாக நடக்கும் ஆராய்ச்சிகள் வழி கிடைப்பவையே.

நிலவில் பெண் உருவமாகத் தெரியும் ஹினா (நமக்கு வடை சுடும் பாட்டி), பாலிநேசியர்கள் செய்யும் கடல் பயணங்களுக்கெல்லாம் ரூட் மேப் போட்டுக் கொடுக்கிறாள் என்பது பாலிநேசியர்கள் நம்பிக்கை. இம்மாதிரியான புராண கதைகளும், நாடோடிக் கதைகளும் பதிவு செய்யப்படாத பாலிநேசியர்களின் சாகசப் பயணங்களை இன்றுவரை உயிரோடு வைத்திருக்கின்றன.

புத்தம் புது பூமி வேண்டும்!

ஓர் இயக்குநர். முதல் படம் ஹிட். அடுத்த படம் ரிலீஸ் ஆகப்போவதற்கு முந்தைய நாள். அந்த இயக்குநரின் மனநிலை எப்படி இருக்கும்? வரப்போகும் வெள்ளிக்கிழமையை (ஏப்ரல் 16, 2010) எதிர்நோக்கி நான் அதே மனநிலையோடுதான் காத்திருக்கிறேன்.

அகம் புறம் அந்தப்புரம் முதல் அத்தியாயம் – குமுதம் ரிப்போர்ட்டரில் 2007 ஜூலை 22 இதழில் வெளியானது. அது எனது முதல் வரலாற்றுத் தொடர். அப்போது பரவசம் அதிகம் இருந்தது. சென்னை சாலைகளில் என் பெயர் ஏந்திய போஸ்டர்களைப் பார்க்கும்போது சந்தோஷம். 50 அத்தியாயங்கள் எழுதிவிடலாம் என்று ஆரம்பித்து, நூறாக வளர்ந்து, 185 அத்தியாயங்களாக நிறைந்த தொடர் அது. அந்த இரு வருடங்களில் என் வாழ்க்கையில் தினசரி வேலைகளில் அகம் புறம் அந்தப்புரத்துக்காக உழைப்பதுவும் சேர்ந்துகொண்டது. அது புத்தகமாக வெளிவந்தபின்பு, அதன் கனம், விலை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கு நன்றி.

க்டந்த ஏழெட்டு மாதங்களாகவே அடுத்த தொடருக்கான விஷய சேகரிப்புகளில் ஈடுபட்டிருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக அதற்கான முழு தயாரிப்பில் இறங்கியிருந்தேன். இதோ நாளை வெளிவரப்போகிறது – புத்தம் புது பூமி வேண்டும்.

இந்த முறை  தமிழக அரசியல் இதழில் எழுதுகிறேன். அண்டார்டிகா குறித்த புத்தகம் எழுதும்போதே சாகசப் பயணிகள் குறித்து இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமானது. அடுத்து உலகைப் பாதி சுற்றி வந்த மெகல்லன் குறித்து ஒரு புத்தகம் எழுதினேன். உலக வரைபடத்தை முழுமையாக்கிய ஒவ்வொரு பயணியின் பயணத்தை வைத்தும் தொடர் எழுத வேண்டும் என்று ஆசை. தமிழக அரசியலில் அதற்கான இடம் கிடைத்திருக்கிறது.

ஆரம்பித்துவிட்டேன்.

புத்தம் புது பூமி வேண்டும் என்று தொடருக்காக அழகான தலைப்பை வைத்த பாராவுக்கு நன்றி. அகம் புறம் அந்தப்புரத்தைவிட, சவாலான களம் இது. கிமுவில் தொடங்கி சென்ற நூற்றாண்டு வரை சரித்திரத்தை மாற்றியமைத்த சாகசப் பயணங்களை மீண்டும் நான் செய்து பார்க்க வேண்டும். என்னோடு நீங்களும்.

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

பின் குறிப்பு : சினிமாவின் ரிசல்ட் – முதல் காட்சியிலேயே தெரிந்துவிடும். பத்திரிகைத் தொடருக்கு அப்படியல்ல.