கதவை மூடு! கடன்காரன் போகட்டும்!

(இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது உங்களுக்கு மைன்டே ரிலாக்ஸ் ப்ளீஸ், டோரைத் திற – காற்று ‘கம்’மட்டும், ALL-க்கும் ஆசைப்படு – போன்றவை ஞாபகத்துக்கு வந்தால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல, அது உங்கள் ஞாபக சக்தியின் கோளாறு!)

மனம் ஒரு மங்காத்தா! உள்ளே வெளியே உள்ளே வெளியே எனத் துள்ளிக்குதிக்கும் புனிதச் சாத்தான்! மனம் ஒரு பத்தி மானாவாரியா பேசலாம்!  இது (கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல்) உங்கள் உள்ளங்களின் உள்ளே வந்து எட்டிப்பார்க்கும் உற்சாகத் தொடர். உங்கள் இதயக் கதவைப் படாரெனத் திறந்து சடாரென (தொறந்த வீட்டில் வாலாட்டிக் கொண்டே) நுழையும் டானிக் தொடர். ஆனால் இது தொடரல்ல!

உங்களை நீங்களே உற்றுப் பார்க்க வேண்டிய தருணம் இது. நன்றாகப் பாருங்கள். ஆழமாகப் பாருங்கள். அழுத்தமாகப் பாருங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். அதற்கு மேலும் உங்களை உங்களாலேயே பார்க்க முடியாது. வெறுப்பு வந்து விடும். செருப்பைக் கழற்றி விடு! அடுப்பை அணைத்து விடு! பழைய சோற்றைத் தின்னுவிட்டு பரலோகத்தை அடைந்துவிடு!

ஒரு குட்டிக்கதை! ஷங்கன் பிள்ளை ரொம்ப நல்லவர். ஆனால் தன்னை அறியாமல் கெட்டவராக வாழ்ந்து வந்தார் நல்லவிதமாக! அவருக்கு ‘அல்வா’ சாப்பிட ஆசை வந்தது. ஒரு கடையில் சென்று அல்வா சாப்பிட்டுவிட்டு வந்தார். ஆனால் காசு கொடுக்கவில்லை. அது தவறில்லை. ஏனென்றால் அது வெற்றிலை பாக்குக் கடை. அங்கு அல்வா கிடைக்காது. யாருக்காகவோ வாங்கி வைக்கப்பட்டிருந்த அல்வாவை ஷங்கன் பிள்ளை எடுத்துச் சாப்பிட்டார். நீதி : இருக்கும் என்று நினைத்துப் போகுமிடத்தில், இல்லாத பொருள் இருக்கும்போது, அதை இல்லாமல் செய்துவிடுதல் தவறில்லை. ஷங்கன் பிள்ளை அதைச் செய்தார். அவர் நல்லவர்தான். கெட்டவராகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளார். அதனால் உங்களை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். அறிந்து கொள்ளுங்கள். அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்ளுங்கள்!

பார். கண்ணால் பார். கண்டதை அகக் கண்ணால் நோக்கு. ‘கண்டதை’யெல்லாம் காணாதே! பசியுள்ளவன் கண்ணுக்கு இடியாப்பம், பாயா தான் தெரியும்; அதை விற்கும் இடுப்பொடிஞ்ச ‘ஆயா’ தெரியாது. தூக்கம் உள்ளவன் கண்ணுக்குப் பாய்தான் தெரியும். பக்கத்துல கிடக்குற நாய் தெரியாது. கண்ணாடி போட்டவன் கண்ணுக்கு முதலில் அந்தக் கண்ணாடிதான் தெரியவேண்டும். ஆனால், கண்ணடிக்கிற ஃபிகர் தெரிஞ்சா அது வயசுக் கோளாறு. தெரியாவிட்டால் வாயுக் கோளாறு! வாஸ்துக் கோளாறு!

ஒரு ‘ஸென்’ கதை! அவருக்கு வாழ்வில் எப்படியாவது தான் விரும்பிய ‘அதை’ வாங்கி விட ஆசை. அதனால் தன்னிடமிருந்த விமானத்தை விற்றார். சொகுசுப் பேருந்துகளை விற்றார். ஆடம்பர பங்களாக்களை விற்றார். எல்லாவற்றையும் செலவழித்துவிட்டு, மீதித் தொகையில் தான் வாங்க விரும்பியதை, அந்த ‘ஸென்’ காரை வாங்கினார். இந்தக் கதை விளக்குவது என்ன?

உன் லட்சியம் என்னவோ அதை நோக்கி ஓடு; முடியவில்லையா, ஆட்டோ வைத்துப் போ. அவ்வளவு காசில்லையா? லட்சியத்தை மாற்றிக் கொள்! ஏனெனில் மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது!
யார் நீ? எங்கிருந்து வந்தாய்? ஏன் வந்தாய்? எப்படி வந்தாய்? எதற்காக வந்தாய்? இப்படி கேள்விகள் நிறைந்தது வாழ்க்கை. பதில் சொல்லிக்கொண்டிருந்தால் பஸ் போய் விடும். பல்லை விளக்கிவிட்டுப் பள்ளிக்கூடம் கிளம்பு. அது தான் வாழ்க்கை என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அதுதான் வாழ்க்கை.

அந்தக் கதையில் ஷங்கன் பிள்ளை என்ன சொன்னார்? என்னென்னமோ சொன்னார். அவர் அங்கு சொன்னதைத்தான் இங்கு நான் மீண்டும் சொல்கிறேன். என்னவென்று கேட்கிறீர்களா? கேட்பது சுலபம். எதைச் சுலபமாக நினைக்கிறீர்களோ அதைச் செய்யாதீர்கள். அது அந்நியருக்கு நம்மை நாமே அடிமைப்படுத்தும் செயல். யார் அந்நியன்? நாம்தான் அந்நியன்! நமக்குள் ஒரு அந்நியன்! உன்னைத் திற. ஒரு எழவும் பொங்காது! பீர் டின்னைத் திற. உற்சாகம் பொங்கும்!

ஒரு சிஷ்யன் என்னைத் தேடி வந்தான். ‘சாமி! முக்தி நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்?’ என்றான். சொன்னேன். விளக்கமாகச் சொன்னேன். ‘முதலில் இரண்டு கைகளையும் நன்றாய் விரி. பற. கைகளைச் சிறகாய்ப் பாவித்து வேகமாக அசை. அசைத்துக்கொண்டே மொட்டை மாடிக்குப் போ. நீ இப்போது உயரத்திலிருப்பாய்! பல படிகள் உயர்ந்திருப்பாய்! கால்களால் ஓட ஆரம்பி. சுற்றிச் சுற்றி ஓடு. கண்களை மூடிக்கொண்டு ஓடு. மோனத்தைத் தேடி ஓடு. கண்ணு மண்ணு தெரியாமல் ஓடு. கட்டாயம் முக்தி நிலை கிடைக்கும். மோட்ச நிலை கிடைக்கும்’ என்றேன். செய்தான். ‘கபால’ மோட்சம் பெற்றான்.

‘பற்று’ என்பது வேண்டும். எப்பொழுதும் வேண்டும். எங்கேயும் வேண்டும். பற்று இல்லாவிட்டால் வாழ்க்கையை வாழ முடியாது. டீக்கடை முதல் மளிகைக் கடை வரை பற்றின்றி வாழுதல் உற்றதல்ல உடம்புக்கு! உனக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் ‘பற்று’ வை. முடியவில்லையா ஓரமா உட்கார்ந்து ஒரு ‘தம்’மை பற்ற வை!

நடப்பதுதான் நடக்கும். நாற்காலி நடக்காது. மலை மீது மழை பொழியும். மழை மீது மலை பொழியுமா? ‘எண்ணு’வதெல்லாம் எண்ணமாகாது. சில்லறையாகக் கூட இருக்கலாம். சம்சாரம் மீது மின்சாரம் பாய்வதற்கும், மின்சாரம் மீதும் சம்சாரம் பாய்வதற்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள் உள்ளதே! லுங்கி கட்டிக்கொண்டு வங்கி போகலாம். வங்கியைக் கட்டியவன் லுங்கி கட்டிக்கொண்டு இருந்திருக்கலாம். இதில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, ஒன்றுமில்லை! ஒன்றுமில்லாததுதான் பூஜ்யம்! ஆனால் பூஜ்யத்திற்கு மதிப்பு உண்டு. அதுதான் மனம்.

மனதைத் திறந்து வை! மூடி வைப்பதற்கு அது முந்திரிப்பருப்பு அல்ல! கதவைத் திறந்தால் காற்று வரலாம். காத்து, கருப்புக் கூட வரலாம்! பன்றிக் காய்ச்சலும் வரலாம்! முதலில் மூடி வை! கடன்காரன் வந்துவிடப்போகிறான்! ஏனெனில் மனம் ஒரு கடன்காரன்!